இராவணத் தீவு – பயணத் தொடர் 2

புத்தன் கோவில் 

இந்த தீவுக்கு வருகின்ற யாரும் கண்டி நகரிற்கு வராமல், அவர்கள் பயணங்கள் முடிவடைவதில்லை. அந்த நகரத்தின் வசீகரிக்கக்கூடிய அழகு அத்தகையது. கண்டியில் அமைந்துள்ள புனித தந்ததாது கோவிலைப்பற்றி சொல்வதற்கு முன்னர், இந்த அழகிய நகர் பற்றி சிறிது சொல்லியாக வேண்டும். கண்டியென்பது இலங்கையின் மாபெரும் பழமைவாய்ந்த இராச்சியத்தின் தலைநகர். எந்தவொரு இயற்கை சார்ந்த இடங்களையும், பழமையான இடங்களையும் பார்வையிட காலையும் மாலையும் சிறந்த பொழுதாக இருக்கும்.  கண்டி நகர்கூட அப்படித்தான்.

மாலை ஐந்து மணியளவில் எல்லாம்  வெறும் ஆயிரக் கணக்கான பறவைகளின் ஒலியின் கீச்சிடலுடன் அந்த நகர் இயங்கத்தொடங்கும்.  பருவ காலத்திற்கு வருகின்ற அயல்தேச பறவைகள் தெப்பக் குளத்து வளாகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். புத்தன் கோவிலை நோக்கி காவி உடை தரித்த  துறவிகளும், வெண்ணிற உடையணிந்த பௌத்த மத யாத்ரீகர்களும் விரைந்து கொண்டிருப்பார்கள். எப்போதும் ஆர்ப்பாட்டமில்லாத வெளிநாட்டு பயணிகள் இந்த நகர் முழுவதும் நடமாடிக்கொண்டு இருப்பார்கள். இப்படித்தான் அந்த நகர் இருக்கும். ஒவ்வொரு நகருக்கும் ஒவ்வொரு சாயல் கண்டிக்கு பசுமை நிறைந்த சாயல்.

ஒரு நகரத்திற்கு உயிர் இருக்கின்றது என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? ஏனோ எனக்கு அப்படியெல்லாம் சொல்ல தோன்றுகிறது. உயிர்ப்பான ஒரு நகரம் நீங்கள் நடக்கும்போது ஒரு பயணத்தோழன் போல கூடவே வரும். நின்று இளைப்பாறுகின்ற இடங்களில் எல்லாம் உள்ள கட்டிடங்கள் உங்களுடன் பேசக்கூடும். பிறந்ததும் ஓடியலைந்ததும் எங்கெங்கோ என்று இருந்தாலும் , கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் நான் கண்டி நகரத்தில் வாழ்கிறேன் என்பது இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியை தருகிறது. ஒரு நகரத்தை நேசிக்க தொடங்கிவிட்டால், அங்கு உங்களுக்கு தெரிந்த தெரியாத என்ற எந்த மனிதரும் தேவையில்லை. உங்களுக்கென யாருமே இல்லாத போதுக்கூட அந்த நகரம் எப்போதும் உங்களை வரவேற்க காத்திருக்கும்.

இனம்புரியாத அமைதியும், அழகும் நிறைந்த புனித தந்ததாது கோவிலுக்கு நீங்கள் ஒரு தடவையேனும் வரவேண்டும் என விரும்புகின்றேன். பௌத்தம் ஒரு மதம் என்பதை தாண்டி அது உண்மையில் ஒரு மெய்யியல். வாழ்வின் நிலையாமையை ஏற்று எஞ்சியிருக்கிற நாட்களை எப்படி வாழ்வது என்பது பற்றியதாக நான் நினைத்துக்கொள்கிறேன். தலதா மாளிகையின் வாயில் பாதைகள் நெடுக அல்லி,  தாமரை,  நீலோற்பவர் , பவளமல்லிகை, மல்லிகை, நித்திய கல்யாணி, அரலி மலர் என புத்தபகவானுக்கு பௌத்தர்கள் விரும்பி எடுத்து செல்கிற பூக்கடைகள் நிறைந்த தெருக்கள் அது. புதிதாக பூக்கடைகளிற்கு கொண்டுவரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பூக்களில் தேன்களை குடிக்க சுற்றிகொண்டிருக்கும் தேனீக்கள், விளக்கு ஊதுவத்தி கடைகள், என அந்த பகுதி நிறைந்திருக்கும்.

புத்தமத மடாலயங்களில் கேளிக்கைகள், களியாட்டங்களில்லை.  ஊதுபத்தி, மண்சிட்டியில் ஊற்றப்பட்டு எரிந்துகொண்டிருக்கின்ற விளக்கினதும், புத்தபகவானின் பிரதிமைகளுக்கு முன் பரப்பிவைக்கப்பட்டு இருந்த மலர்களின் மென்மையான ஆரோமா காற்றில் கலந்து  நாசியை வந்தடைகிறபோது ஏதோவொரு சொல்லமுடியாத ஒரு அமைதி, நிம்மதி கிடைத்துவிடுவதான உணர்வு . எல்லாமே நம் நினைத்துக்கொள்கிற மனநிலைதானே, அதை கடந்து வேறென்ன? பௌத்த மடாலயத்தில் வழிப்பாடு, பூஜை என்பவற்றை தாண்டி கொஞ்சம் அமைதியாக அமர்ந்து நமக்குள் மூழ்குவதற்கான ஒரு வெளியிருக்கும்.

உண்மையில் நமது மனம் உயர்ந்தோ, தாழ்ந்தோ இருக்கின்ற நேரத்தில் நம்மை வைத்துக்கொள்கிற வெளிதான் நமக்கு தேவையானதாக இருக்கின்றது. தலதாமாளிகை வளாகம் என்பது மனதிற்கு நிம்மதியை தரக்கூடிய ஒரு வெளி. பூரணை தினத்தில் வானில் நிறைந்திருக்கின்ற முழுநிலவின் ஒளியுடன், கூட்டம் கூட்டமாக அமர்ந்து பிரார்த்தனை,  தியானம் அல்லது மதபோதனை கேட்டுக்கொண்டு இருக்கின்ற  பௌத்தர்கள் நிறைந்த மடாலய வளாகங்கள் அழகாக இருக்கும். யாரும் யாரையும் அங்கு பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். விலையுயர்ந்த ஆடையாபரணங்களிற்கோ, பூஜைகளிற்கோ பௌத்தர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவதில்லை.

ஆனால் பழமையான பௌத்த மடாலயங்களில் நீங்கள் கவனிப்பதற்கு, பார்ப்பதற்கு என்று பழமையான குகை ஓவியங்கள், புத்தபகவானின் பழமையான சிலைகள், சில புராதன மடாலயங்கள், அருங்காட்சியகங்கள், என்று இருக்கும். தலதா மாளிகையின் வளாகமும் அப்படியானதே. அதனால் கூட்டம் நிறைந்த பூரணை தினங்களில் உங்களால் அமைதியாக அவற்றையெல்லாம் பார்வையிட முடியாது.

எனவே பௌத்தர்களின் விசேட தினங்களான பூரணை, புத்த பூர்ணிமா போன்ற நாட்களை தவிர்த்துவிட்டு சனநெரிசலற்ற ஏனைய நாட்களில் செல்வது பார்வையிட சிறந்ததாக இருக்கும். நான் முன்னமே சொன்னதுபோல இது களியாட்டத்திற்கான இடம் இல்லை. ஒரே நாளில் முழுவதும் அவசர அவசரமாக பார்த்து முடிக்க முடியாது. பழமைவாய்ந்த மடாலய கட்டிடங்கள் முதல் மாளிகைப்பகுதி, கண்டி காலத்து ஓவியங்கள், அருங்காட்சியக பகுதிகள், நவீன அருங்காட்சியகம், தலதா மாளிகையின் ராஜா யானையை பதப்படுத்தி வைத்திருக்கும் அருங்காட்சியகம், இந்து கோவில்கள், இளவரசி மாளிகை என பார்ப்பதற்கு எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன. மடாலய உள்பகுதி மண்டபங்கள் , வளாகம் குளிர்மையாகவே இருப்பதனால் , இவற்றையெல்லாம் பார்ப்பதற்கு வெயில் ஒரு இடைஞ்சலாக இருப்பதில்லை. வெடிஹிட்டி மாளிகை, அலுத்மாளிகை போன்றவற்றில் கண்டி கால ஓவியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. புத்தபெருமானின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ஜாதக கதைகள், தாமரை, மலர் அலங்காரங்கள், லியவெல , அன்னம், ஜீவன விருட்சம், நவநாரி குஞ்சரய ( யானை வடிவில் ஒன்பது பெண்கள்) போன்ற கண்டி காலத்துக்கு என்றே தனித்துவமான கலையலங்கார ஓவியங்கள் நிறைந்ததாக மாளிகை வளாகம் இருக்கிறது.

தலதாமாளிகையின் ராஜா யானையைப்பற்றி சுவாரஸ்யமான தகவல்களை சர்மிளா செய்யத்தின்  பனிக்கர் பேத்தி நாவலை வாசித்திருப்பீர்களானால் உங்களால் அறிய முடியும். அதில் உள்ள சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களுக்கு தரலாம் என்று நினைக்கின்றேன்.

” நான்கு அடி ஐந்து அங்குலம் உயரமான கொம்பன் யானைக்கு தலதா மாளிகையிலிருந்து வந்த அதிஷ்டம் இவரை கொஞ்சம் கலங்கடிக்கவே செய்தது. தலதாமாளிகைக்கு கொண்டு போகப்பட்ட அந்த யானை ஒரு வருடம், ரெண்டு வருடமில்லை. ஐம்பது வருசம் சேவை செஞ்சிதாம். அதுக்கு ராஜா என்று பெயர் வச்சிருந்தாங்கலாம். 1984 இல் அப்ப ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜயவர்தன ராஜாவை தேசிய பொக்கிசமாக பிரகடனப்படுத்தியதாக சொல்றாங்க…………கண்டி தலதா மாளிகையை 1950 இல் நடந்த எசெல பெரஹரவில் பௌத்த புனிதப்பொருட்களை சுமந்ததில் இருந்து இறக்குகிற வரைக்கும் எந்தவொரு தொந்தரவுமே ராஜா செஞ்சதில்லையாம். மிகுந்த கட்டுப்பாடும் கண்ணியமுமாக கடமையைச் செய்து , எல்லா யானைகளுக்கும் முன்மாதிரியாக இருந்திச்சு.”

இப்படி ராஜா யானை தலதாமாளிகை வரலாற்றில் மறக்க முடியாதவொன்றாக மாறிவிட்டது.

யானைகளும் , யானைப்பாகன்களும் , தலதாமாளிகை மற்றும் அதனை சுற்றியுள்ள இராஜா காலத்து கட்டிடங்கள், தெப்பக்குளம் , சுற்றிவர இயற்கை சூழ்ந்த மலைகள் எல்லாம் பார்க்கும்போது கேரளாவைப்போன்ற பிரம்மையை உங்களுக்கு ஏற்படுத்தலாம்.

நான் இங்குள்ள வெடிஹிட்டி மாளிகைக்கு விரும்பி செல்வேன். வெடிஹிட்டி மாளிகையின் வாயிலில் இருக்கின்ற சயனநிலை புத்தரின் சிலை, அது அமைந்துள்ள பகுதி அனேக நாட்கள் ஆளரவமற்று அமைதியாக இருக்கும். அருகில் விஷ்ணு , துர்கைக்கு கோவில்கள் காணப்படுகின்றன. இலங்கையில் கதிர்காமத்தில் பூஜை செய்வது போல பிரமணர் அல்லாத சிங்களவர்களே இங்கு பூஜகர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு மடாலயங்களும், கோவில்களும் அருகருகே இல்லாமல் சிறுதொலைவில் ஒவ்வொன்றும் அமைந்திருக்கின்றன. அந்த மணல் பரப்பில் நடந்து செல்வது என்பது இயல்பாகவே ஏதோவொரு மனதிற்கு இலகுவான மனநிலையை அந்த சூழல் ஏற்படுத்தித்தரும். வெடிஹிட்டிய மாளிகையில் சிறுதொலைவின் உச்சியில் இருந்த விஷ்ணு கோவில் வளாகம் , கூடவே அதன் அருகில் அமைந்திருந்த அரசமரம் அமைந்திருக்கிற பகுதி தனித்த அழகை அதற்கு தந்திருந்தது. புதிய மாளிகையின் சிறுதொலைவில் இருந்ததாலோ என்னவோ அனேகமாக ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி அது. சிறு நீர்ப்பாத்திரத்தில் நிரப்புகின்ற நீரை கொண்டு அரச மரத்திற்கு சில பௌத்தமத ஸ்லோகங்களை சொல்லியவாறு சுற்றிவந்து ஊற்றுவார்கள். புறாக்களும், சிறுபறவைகளும் , மலைகளும், அரலி, தாமரை பூக்களின் மணம் நிறைந்த அந்த இடத்தில் கொஞ்சம் அமர்ந்து இருக்கலாம்.

இதைத்தாண்டி தலதாவில் அலுத்மாளிகை வளாகத்தில் புத்தரின் புனிதப்பல் வழிப்படப்படுகின்ற இடம் இருக்கின்றது. அதற்கு மேலே தலதா நூதனசாலை ஒன்று இருக்கின்றது. தலதாவிற்கு போகின்ற அனைவரும் விலைமதிப்பற்ற அந்த நூதனசாலையை நிட்சயம் பார்வையிட வேண்டும் என்று விரும்புகிறேன்.  பழம்பெரும் புராதனமான பொருட்களை தாங்கிய நூதனசாலைகள் உண்மையில் காலத்தை கடந்துகாட்டும் டைம் ட்ராவலர் மெசின்போன்று தொழிற்படுகிறது. இங்கு கண்டிய மன்னர்களான கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனினால் வழங்கப்பட்ட வெள்ளி நீர்க்குடம், ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் வழங்கிய வெள்ளை தொங்கும் விளக்கு , தாய்லாந்து மன்னன் வழங்கிய புத்தரின் பாதசுவடுகள், கண்டியரசர்கள், மகாநாயக்க தேரர்களின் உருவப்படங்கள், கலைப்பொருட்கள், நகைகள், நாணயங்கள், சிலைகள், அழகு சாதன பொருட்கள், கண்டி இராச்சிய பாவனைப்பொருட்கள் என்பவற்றை பார்வையிட முடியும். முக்கியமாக இங்கு கண்டிய மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் பயன்படுத்திய தலைப்பாகை, பருத்தி மேலாடை, மார்பு பகுதியில் அணிகிற ஆடை, சாவாலே எனும் காற்சட்டை, கரவனிய எனும் காற்சட்டை, பருத்தி ஆடை, கைக்குட்டை, இராஜாவின்  ஆசனம், என்பன காணப்படுகின்றன.

கண்டியை ஆண்ட நாயக்கர் வம்ச கடைசி மன்னனான ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் பௌத்தமத பிரதானிகளின் சூழ்ச்சிக்கும் கபடத்திற்கும் இலக்காகி இருந்தார். இலங்கையின் அரசியல் பௌத்தமதவாதிகளால் எப்படியெல்லாம் சீரழிக்கபட்டது என்பதை தலதாவின் கட்டிடங்கள் சொல்லும். பௌத்தம் என்பது கௌதம புத்தர் போதித்த அழகிய ஒரு மெய்யியல். அதிலிருந்த சமத்துவமும் , பகுத்தறிவும் , மானிடநேசமுமே , அது அனைவரையும் வேகமாக சென்றடைய காரணமாக இருந்தது. ஆனால், இன்று இலங்கை போன்ற நாட்டில் பௌத்த மத பயங்கரவாதிகள் நாட்டின் இனக்குழுக்களுக்கு இடையே வன்மத்தையும் , உள்நாட்டு கலவரங்களையும் தூண்டிவிடும் குழுவாக செயற்படுகிறார்கள்.

கௌத்தம புத்தர் போதித்த மதம்  எல்லோருக்குமானது. சாதி, சமயம், பால்நிலை, இன ரீதியான வேற்றுமைகளை கடந்தது. அதனாலேயே டாக்டர் அம்பேத்கர் ” நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன் என சொல்லி சமத்துவ சமயமான பௌத்தத்தை தழுவினார். மேலும் 15. 8. 1936 இல் அவர் இப்படி கூறியிருந்ததாக அவருடைய ” நான் இந்துவாக சாகமாட்டேன்”  எனும் நூல் குறிப்பிடுகின்றது.

“இந்து மதத்தை விட்டு வெளியேறவில்லையெனில் பறையராக பிறந்த நீங்கள் பறையராகவே இறப்பீர்கள் என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தற்போதைய இலங்கையின் இன நல்லிணக்கத்தின் முட்டுக்கட்டையாக இருப்பதே பெரும்பாலான பௌத்த துறவிகள்தான். அவர்கள் தமிழர்களை, சிறுபான்மை இனங்களை பறதெமழோ, நீங்கள் இந்த நாட்டுக்கு உரித்துடைவர்கள் இல்லை என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இப்படியான கருத்துக்கள் கௌத்தம புத்தர் சொன்ன பௌத்த சமயத்திற்கு எதிரானவை. கடவுள் அவதாரக்கொள்கையை கௌதம புத்தர் ஏற்கவும் இல்லை. போதிக்கவும் இல்லை. ஆனால் இலங்கை முழுவதும் அவர் விஷ்ணுவின் அவதாரம் எனச்சொல்லி பௌத்த மடாலயங்களுடன்  கோவில்களும் அமைத்து வழிப்பாடு நிகழ்த்தப்படுகிறது. உண்மையான பௌத்தம் சொல்கிற மெய்யியலை பின்பற்றுவோர் மிகவும் சொற்பமாகவே தோன்றுகிறது. சமாதானத்தை கையிலேந்த பௌத்த மதத்தைவிட ஒரு சிறந்த மதம் இல்லை. ஆனால் இலங்கையின் எல்லா அரசியல் துயர்களிலும் பௌத்த அடிப்படைவாதிகளது பங்கு நீக்கமுடியாத குறையாக வரலாற்றுடன் கலந்துவிட்டது.

ஆனால் மிகவும் நல்ல உள்ளம்படைத்த பௌத்தமத துறவிகள் இல்லாமல் இல்லை. அப்படிப்பட்ட அற்புதமான மனிதர்களை நான் கண்டிருக்கின்றேன். சிதம்பரபுர அகதி முகாமில் இருந்த நாட்களில் உணவுக்குகூட கஷ்டப்பட்ட நாட்கள் இருந்தது. முகாமிற்கு அருகில் உள்ள ஒரு சிங்கள ஊரில் உள்ள பன்சலைக்கு அம்மா எங்களை அழைத்துபோவார். அதற்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் அம்மா வேலை செய்துகொண்டிருந்தார். அந்த நாட்களில் அருகில் இருந்த மடாலயத்திற்கு நான் அடிக்கடி செல்வேன். அங்குள்ள சாது ஒருவர் எனக்கு மடாலயத்திற்கு வருகிற உணவுகளை தந்திருக்கின்றார். எப்போதும் ஏதாவது பழங்கள், இனிப்புகள் என வைத்திருந்து தருகிற  தோற்சுருங்கிய, உடல் தளர்ந்த காவியுடை தரித்த அந்த துறவியின் அந்த சாந்தமான முகம் இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது.

கல்கத்தாவில் இருந்தபோது ஒரு தடவை டார்ஜலிங்கில் உள்ள Dali Monastery க்கு சென்றிருந்தேன். சுற்றிவர உயரமான மலைகளுக்கு நடுவே கடும் குளிரில், திபெத்திய பாணியிலமைந்த மடாலயத்தில் நான் பார்த்திருந்த துறவிகள் போல இதுவரை நான் பார்த்ததே இல்லை. வழிப்பாட்டு முறையில் இருந்து அவர்கள் நடந்துகொள்ளும் விதம் எல்லாமே வேறுப்பட்டு இருந்தது. ” ohm mani peme hum” என்று சொல்லியப்படி முன்னால் இருந்த பெரிய மணிபோன்ற ஒன்றை கயிற்றால் இழுத்து ஒரு மணி சத்தம் போல ஓசையேற்படுத்திய வகையில் அந்த மந்திரங்களை சொன்னார்கள். அந்த மடாலயத்தில் அதிகளவான வயதுமுதிர்ந்த  பௌத்ததுறவிகளும், சிறிய குழந்தை லாமாக்களையும்,  நிறைய  நாய்களையும் , புறாக்களையும்  அங்கு கண்டேன். அவர்கள் அந்த குழந்தை லாமாக்களை அன்புடன் நடத்துவதோடு முன்பின் அறிமுகமற்ற எங்களிடமும் அன்புடன் நடந்தார்கள். இப்படியும் அன்பான பிக்குகள் இருக்கிறார்கள்.

அடுத்ததாக நீங்கள் முக்கியமாக பார்வையிடவேண்டியது தலதாவில் அமைந்திருக்கின்ற சர்வதேச பௌத்த நூதனசாலை. 2600 வது வருட புத்த ஜெயந்தியை முன்னிட்டு சர்வதேச பௌத்த நூதனசாலை திறந்துவைக்கப்பட்டிருந்தது. இங்கு நுழைவாயிலில் உள்ள 16 அடி உயரம் வாய்ந்த புத்தர்சிலையானது தனித்துவமானது.  இந்தியாவினால் பரிசளிக்கப்பட்ட இந்த புத்தர்சிலை 5 ஆம் நூற்றாண்டில் குப்தர் ஆட்சியில் சாரணாத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையை ஒத்தது. இங்கு இந்தியா, கம்போடியா , தாய்லாந்து, ஜப்பான், வியட்நாம் ,சீனா, மியன்மார், நாடுகளில் உள்ள பௌத்த சின்னங்கள், கபிலவஸ்த்துவை சேர்ந்த புத்தபகவானின் நினைவுச்சின்னங்கள் என்பன காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு இலங்கையின் தனித்துவமான கலாச்சார அடையாளமான தலதாமாளிகை , இலங்கை வருகிற ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய முக்கியத்துவமான இடம் என்று நான் நினைக்கின்றேன்.

தொடரும்…


-நர்மி

9 COMMENTS

  1. நர்மி, அழகான வரிகள் வாசிக்கும் போதே காட்சிகள் கண்முன் வந்து போகின்றன. மேலும் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  2. அருமை! மேலும் தொடர்வீர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.