மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 2

விக்டோரியா பப்ளிக் ஹால்  

ன்னை புத்தகங்கள் கவர்ந்த அளவு அழகிய கட்டிடங்களும் எப்போதும் மெய் மறக்க வைத்து விடுகின்றன, மெட்ராஸில் இன்றைய கட்டிடங்கள் பல 50 அடுக்குகளைத் தாண்டிப் போகிறது என்றாலும், அதன் பிரமாண்ட நவீனங்களை விடவும், எப்போதும் நம்மை மலைக்க வைக்கும் நகரின் 200 ஆண்டுக் கால செந்நிற பேரழகு கட்டிடங்களை  இனி எப்போதும் நம்மால் உருவாக்க முடியாது என்ற வகையில், மெட்ராஸின் கடந்த கால அடையாளங்களை இன்னமும் சுமந்து நிற்கும் கட்டிடங்கள் 2467. அவற்றில் பெரும்பான்மை கட்டிடங்கள்  100 ஆண்டுகளையும், சில 200 ஆண்டுகளையும் கடந்தவை. அவற்றின் வடிவமைப்பு  தனித்துவமான சிற்பப் பதுமைகளைப் போல என்னோடு, உங்களோடு உரையாடக் கூடியவை. அது மட்டுமல்ல, குறிப்பிட்ட காலத்தின் வரலாற்றை, அவை தன்னில் புதைத்து வைத்திருக்கின்றன. இந்த கட்டிடங்களைப் பார்க்கும் போது, உலகில் இதைப் போன்று வேறொன்று இல்லையென்பது மாதிரியான, ஒரு சிற்பத்தைப் போல, ஒரு கட்டிடத்தின் செங்கற்களைக் கூட விதவிதமான வடிவங்களில் திட்டமிட வேண்டியிருந்தது. நுழை வாயில்கள், கல் தூண்கள், வளைவுகள், மாடங்கள், மாடங்களின் அடிப்பகுதி, மேல்  பகுதி, அதைத் தாங்கி நிற்கும் சிற்பங்கள், என ஒவ்வொன்றும் திட்டமிடப் பட்ட கலை நயத்துடன்……

நகரில் உள்ள செந்நிற கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதில்  இப்போது நாம் பார்க்கப் போகும் விக்டோரியா ப்ப்ளிக் ஹால் தனி ரகம். பல வேளைகளில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். கட்டிடத்தின் தெற்குப் புறமும், கிழக்குப் புறமும் நின்று வேடிக்கை பார்க்க, சிறப்பான அனுபவத்தைத் தரும்

ஜார்ஜ் டவுனில் உள்ள பச்சையப்பன் ஹாலில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துக்கொண்ட  நகரின் மிக முக்கியமான மனிதர்களால், நகருக்கு மிக அவசியமான, லண்டனில் இருப்பது போன்ற ஒரு டவுன் ஹால் மெட்ராஸ் பட்டணத்துக்குத் தேவையென்ற ஆலோசனையின் பேரில் இந்த பேரழகு கட்டிடத்தைக் கட்ட முடிவெடுத்தார்கள்…. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 30 பணம் படைத்தவர்கள் தந்த 16,425 ரூபாயில் கட்ட திட்டம் உருவானது. (இன்றைய நாளில் 25 கோடிகள் செலவழித்தாலும் சாத்தியமில்லை. அதை விட, இவ்வளவு அர்ப்பணிப்போடு , கலை நயத்தோடு , உறுதியாக , உலகத் தரத்துக்குக் கட்டுவார்களா என்பது கேள்விக்குறி….மனித வியாபார யோக்கியத்தின் அடையாளமும் இந்த கட்டிடங்களில் இருக்கிறது.) இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற 12 பேர் கொண்ட குழுவும் அமைக்கப் பெற்றது.

பீப்பிள்ஸ் பார்க், அதாவது மைலேடிஸ் பூங்காவிற்குச் சொந்தமான தெற்குப் புற நிலத்திலிருந்து, முனிசிபல் கார்ப்பரேசன் சார்பாக 57 கிரவுண்டு நிலத்தில் 3 ஏக்கர் பரப்பளவு கட்டிடத்துக்குத் திட்டமிடப்பட்டது. விக்டோரியா மகாராணியாரின் பொன் விழா ஆண்டு நினைவாக அவருக்கு எதாவது பரிசாகத் தர நினைத்தவர்களால், அவர் பெயரிலேயே அறக்கட்டளை ஏற்படுத்தப் பட்டது

விக்டோரியா பப்ளிக் ஹால் அறக்கட்டளைக்கு நிலத்தை ஒரு கிரவுண்டு எட்டணா குத்தகை பணம் என 57 கிரவுண்டுக்கு மொத்தம் 28 ரூபாய்க்கு அடுத்த 99 ஆண்டுகளுக்கு, என்கிற ஏற்பாட்டின் படி ஒப்புதல் வழங்கப்பட்டது

அன்றைய விஜய நகர மன்னர் சர்.பசுபதி ஆனந்த கஜபதி ராஜு,  1883 டிசம்பர் 17-ல் அடிக்கல் நாட்டினார். அன்று ஆரம்பித்து, 1890-ல் முடிக்கப்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்ட. 25,883 சதுர அடி பரப்பளவில் அழகிய கட்டடம். அழகிய செந்நிற தேவதை…. அந்த கட்டிடத்தில் உட்கார்ந்து அதன் சாளரங்கள் வழியே நகரைப் பார்த்தபடி ஒரு புதினம் எழுதக் கனவு காண்கிறேன். அதன் கிழக்குப் புற மாடத்தில் நின்று ஒரு ஜோடி காதல் புறாக்களை வானில் பறக்க விட ஆசை கொள்கிறேன்.

அதன் மரத் தளங்களில் என் தோழர்களுடன் இலக்கியம் பேசித் திளைக்க விரும்புகிறேன். அத்தகைய இன்ப மூட்டும் கனவுகளைத் தரும் கம்பீர கட்டிடம்.

அன்றைய நாட்களில் இந்தோ சராசெனிக் பாணியில் கட்டிட  வடிவமைப்பு செய்து புகழ்பெற்றவர் ராபர்ட் பெல்லாஸ் சிஷோம் ( 1840-1915).  இவரே  சென்ட்ரல் இரயில் நிலையத்தையும் , எழும்பூர் ரயில் நிலைய கட்டிடத்தையும் வடிவமைத்தவர். மேல் பூச்சற்ற உறுதியான செங்கற்களும் , வளைவுகளை, மாடங்களை, கருங்கற்களும் கொண்டு வடிவமைக்கப்பட்டது.. இதற்கான தேக்கு மரங்கள் கவனமாக பர்மியக் காடுகளிலிருந்து கொண்டு வரப் பட்டிருந்தன. அவற்றையே அரங்கின் தரைப் பகுதி மேடையென பர்மியத் தேக்கால் இழைத்து இழைத்துச் செதுக்கினார்கள்

இந்த கட்டிடத்தைக் கட்டியவர் நம் பெருமாள். இவரே அன்றைய நாட்களில் பல கட்டிடங்களைக் கட்டிய கட்டிட ஒப்பந்தக்காரர்.. இவரது வரலாறும் மிக ஆர்வமூட்டக்கூடியது தான். அதை வேறொரு பகுதியில் பார்ப்போம்.

இந்த கட்டிடத்தைத் தூரத்திலிருந்து பார்க்கும் போது இதற்கு எந்த பக்கம் தலைவாசல் இருக்குமென என்று ஊகிக்க முடியாது

  வெள்ளையர்களால் பொது மக்களின் பயன்பாட்டுக்காக 3 ஏக்கரில் கட்டப்பட்ட  இந்தியாவிலேயே பெரிய கட்டிடமும் இதுவே., இதன் கம்பீரத்தின் அழகை வர்ணிக்க எனக்கு போதிய சக்தியில்லைபனிப் பொழிவு உள்ள நிலத்தில் கட்டப்பட வேண்டிய நுட்பங்களுடன் வெப்ப பூமியில் கட்டப்பெற்றது

கட்டிடச் செலவுகளுக்குப் பணம் தர நன்கொடையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது. இந்த பட்டியலில் திருவாங்கூர்  மகாராசா 8000 ரூபாய், மைசூர் மகாராசா, புதுக்கோட்டை மகாராசா, மெட்ராஸ் உயர்நீதி மன்ற நீதிபதி முத்துசாமிஎல்லோருமே தலா 1000 ரூபாய் தந்திருக்கிறார்கள். மெட்ராஸின் பிரபலமான  பி. ஆர் & சன்ஸ் கடிகார கம்பெனி  1400 ரூபாய் தந்திருக்கிறார்கள்.  (கலைஞரால் சட்டமன்றமாகக்  கட்டப்பட்டு தற்போது பல் நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாறியுள்ள கட்டிடத்திற்கு எதிரே இன்னமும் அந்த பழமையான கடிகார விற்பனையகம் இருக்கிறது.)  பாஸ்கர சேதுபதி, எட்டயபுரம் ஜமீன்தார், ஹாஜி அப்துல் பாட்சா சாஹிப் ஆகியோரும் பங்களிக்க, 5 ஆண்டுகளில் விக்டோரியா மகாராணியின் பொன்விழா ஆண்டு நினைவாகக் கட்டிடம் 5 ஆண்டுகளில் எழுந்து நின்றது.

பிரிட்டிஷ் கட்டிடக் கலையின் உதாரணங்களில் ஒன்று இந்த கட்டிடம் என்பார்கள். ஆனால் இதில் முகலாய கலை மற்றும் கேரள திருவாங்கூர் பாணி கூரை வடிவத்துடன், இத்தாலியக் கட்டிடப் பாணி கோபுரம் எனக் கலவையான பாணியில் கட்டப்பெற்றாலும், இந்தோ சாரசெனிக் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக இக்கட்டிடம்., 600 பேர் நிகழ்ச்சிகளைக் காணும்படியான இரண்டு பெரிய அரங்குகள், தரை தளத்திலும் முதல் மாடியிலும், முழுக்க மரத்தாலான அரங்கு, ஒலி எதிரொலிப்பு முறையில் வடிவமைக்கப்பட்டது. மேடையில் உச்சரிக்கும் மென்மையான வார்த்தையைக் கூடக் கடைசி இருக்கைக்கும் கடத்தக்கூடிய அரங்கமைப்பு….விக்டோரியா பப்ளிக் ஹாலின் கிழக்குப் பக்க நுழை வாயிலில் அழகிய நீரூற்று ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

1887 ஆம் ஆண்டு லார்ட் கன்னிமாராவால் திறக்கப்பட்டது. இவர் பெயராலே தான் கன்னிமாரா நூலகம் இருக்கிறது.

கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்த சில காலங்களிலேயே இந்த மண்டபம் நகரின் மிக முக்கியமான பொதுச் சமூக நிகழ்வுகள் நடக்கும் இடமாக மாறியது. மின் வசதியோ, ஒலி பெருக்கியோ இல்லாத நாட்களில் சாதாரணக் குரலில் பேசினாலும் மண்டபத்தின் கடைசி வரிசையிலிருப்பவருக்கும் கேட்கும் வகையில், அரங்கின் அலங்காரங்கள் முழுமையாக ஐரோப்பியப் பாணியினால் ஆனது. வளைவுகள் மாடங்கள், பால்கனி, சாளரங்கள் என அனைத்தும்  இப்போதும் சிதைந்த நிலையில் இருந்தாலும் புதுப்பிக்கத் தகுந்தளவு வலுவாகவும், வடிவாகவும் இருக்கிறது

உள்  பகுதியைக் காணும் போது, இந்த கட்டிடத்தை வடித்தவன் மகா கலைஞன் என்று முணுமுணுக்க முடிகிறது. அடிப்படையில்  ராபர்ட் பெல்லாஸ் சிஷோம் கட்டிடக் கலை வல்லுநர் தான். நாம் பார்க்கப் போகிற பல கட்டிடங்களை அவர் தான் வடிவமைத்துள்ளார்.

இந்தியாவில் அன்று பிரபலமாக இருந்தவர்கள் எல்லோரும் அந்த கட்டிட அரங்கில் பேசியிருக்கிறார்கள். 1920 அக்டோபர் 20-ல் விவேகானந்தர், நேரு, 1915-ல் காந்தியடிகள் கஸ்தூரி பாய் அம்மையாருடன், கோகலே, வல்லபபாய் படேல், இன்னும் பலர். அன்று நகரின் மிக முக்கியமான, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடி வந்த மாவீரன் இரட்டைமலை சீனிவாசனார் அவர்கள், இந்த மண்டபத்தில் 1895 அக்டோபர் 7-ல் தங்களது சமூக இருப்பைப் பிரகடனப்படுத்தும் செயலாக நிகழ்ச்சியொன்றை நடத்தியுள்ளார்கள், நிகழ்வன்று நான்கு குதிரை பூட்டிய சாரட்டில், பாண்டு வாத்தியம் முழங்க, வெள்ளை கொடியேந்தி அவரை அழைத்து வந்தார்களாம். மகாகவி பாரதியின் சொற்பொழிவு, கவிதையுடன் இங்கு நடந்திருக்கிறது

காங்கிரஸில் தீவிரப் போக்கை கொண்டிருந்த விபின் சந்திர பாலருடைய கொள்கையை ஆதரித்து பாரதியும், அவரது சகாக்களும் இங்கே கூட்டம் நடத்தியுள்ளனர். அதே நேரம், மிதவாதிகளான, வெள்ளையருக்கு இணங்கிப் போகிற பீ.ஆர் சுந்தரம், வி.கிருஷ்ணசாமி போன்றோர் தீவிரப் போக்குடையவர்களை நாடு கடத்த வேண்டுமென (அன்றே வெள்ளையருக்கு எதிராகப் பேசுகிறவர்களைத் தேச விரோதிகள் என்று சொன்ன சனாதன கும்பல்) தமிழில் பேச மறுத்து ஆங்கிலத்தில் பேசிய போது, மண்டபத்திலிருந்த பார்வையாளர்கள் தமிழில் பேசுங்கள் என்று அவர்களை வலியுறுத்தியதுடன், ஆங்கிலத்தில் பேசவிடாமல் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்இதை அன்றைய நாளேடுகள் பாராட்டியுள்ளன.

அரங்கின் தரம் மிக உயர்வாக இருந்ததால், அன்று புகழ்பெற்ற நாடக கம்பெனிகளான சங்கர தாஸ் சுவாமிகள், பம்மல் சம்மந்தம் ஆகியோர் இந்த அரங்கில் நாடகங்களை நடத்தியுள்ளனர், சுகுணா விலாஸ் சபா தனது மாலை நேர நாடகங்களைப் பல காலம் நடத்தியிருக்கிறது, மாலையில் பக்கத்தில் இருக்கும் கடற்கரையில் உலாவி இன்பம் துதூய்த்த செல்வந்தர்கள் மாலை இந்த அரங்கில் ஆறு மணிக்கு ஆரம்பித்துமணிக்கு முடியும் நாடகத்தைக் கண்டு களித்துச் செல்வார்களாம், (இன்றைய மாலைக் காட்சியின் முன் மாதிரி) சேக்ஸ்பியரின் அனைத்து நாடகங்களும் இங்கே தமிழ்ப் படுத்தப்பட்ட வடிவில் அரங்கேறியிருக்கின்றன. அவரது நாடக நூல்கள் அனைத்தும் மண்டப நூலகத்தில் சேமிக்கப்பட்டிருந்தனநகரத்தில் முதன் முதலாக சினிமாவை திரையிட்ட அரங்கம், அதுவும் பிரான்ஸின் லூமியர் சகோதர்கள் 1895-ல் தயாரித்த, உலகின் முதல் திரைப் படத்தை, அது வெளியான இரண்டு ஆண்டுகளில் இந்த அரங்கு தான் மக்களுக்கு அறிமுகம் செய்தது. ரயிலொன்று மக்களை நோக்கி வருகிறது….அடேங்கப்பா! என்று அன்றைய சென்னை கலா ரசிகர்கள் வியந்து விட்டார்களாம்சிலர் இது ஏதோ சித்து வேலை  என்பதாகப் புரிந்துகொண்டார்களாம். ஆலையை விட்டு வெளியேறும் தொழிலாளிகளின் காட்சி கொண்ட இன்னொரு திரைப்படத்தையும் இங்கே தான் முதலில் திரையிட்டிருக்கிறார்கள். அன்றையப் புகழ்பெற்ற புகைப்படக் கடையின் உரிமையாளர்  டி. ஸ்டீவன்சன் தனது 10 குறும்படங்களை இங்கே திரையிட்டார்.  பிறகு தான் நகரில் திரையரங்குகள் தோன்றின.

இவ்வளவு வரலாற்றை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் இந்தப் பேரழகு கட்டிடத்தைப் பற்றி, அதன் 130 ஆண்டு கால வரலாறு குறித்த மேலதிகமான தகவல்கள் நம்மிடம் இல்லை என்பது போலவே, இன்றைய ஆட்சியாளர்களின் அலட்சியத்தால்  இக்கட்டிடம் நலிவடைந்து கிடக்கிறது. இந்த நிலையிலும் அதன் வெளி உள் அமைப்புகள் நம்மை வியக்க வைக்கிறது…  கடந்த 35 ஆண்டுகளாக இந்தக் கட்டிடத்தை நான் வேடிக்கை பார்த்து வருகிறேன். மூர் மார்கெட் கட்டிட வாயிலிலிருந்து அதைப் பார்க்கும் போது, அதன் பின்னணியில் மறையும் மாலை நேர சூரியனை நான் கண்டிருக்கிறேன். இனி அந்த வாய்ப்பு உங்களுக்கு  இல்லவேயில்லை.

கிராமத்திலிருந்து வந்த உறவினர் ஒருவரை மூர் மார்கெட் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்குப் பெற்றோர் தர, அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும் உறவினர்களுடன் என் ஆறு வயது தம்பியும் வந்திருந்தான். உறவினர் எனக்கும், என் தம்பிக்கும் பொம்மை வாங்கப் பேரம் பேசுவதில் வியாபாரியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது, நான் விக்டோரியா பப்ளிக் ஹாலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கஎன் தம்பி அங்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த குரங்காட்டியின் பின்னே போய்விட்டான். நானோ அந்த செந்நிற கட்டிடத்தின் அழகில் மயங்கி பராக்குப் பார்த்துக் கொண்டிருக்க, தம்பி காணாமல் போன கூச்சலும்,  ,கலவரமுமாய் அரை மணி நேரத்துக்குப் பிறகு  அல்லிக்குளத்தின் மேற்குக் கரையோரம் தம்பியைக் கண்டுபிடித்து வீடு போய்ச் சேர்ந்தோம். ஆனாலும் உறவினர் கடமை உணர்ச்சியோடு வத்தி வைத்ததால் பராக்கு பாப்பியாபராக்கு பாப்பியா என்று கேட்டு அன்று என்னைப் பிரம்பால் பின்னியெடுத்து விட்டார்கள். அன்று பராக்குப் பார்த்ததால் இன்று இந்த அழகு கட்டிடத்தை  எழுதுகிற வாய்ப்புக் கிடைத்திருக்கிறது

கடந்த 30 வருடங்களுக்கு மேலாகவே கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல் போனாலும், பராமரிப்பற்றுப் பரிதாபகரமான தோற்றம் கொண்டிருந்தாலும், அதன் மேனியெழில் குலையவேயில்லை. இப்போது அதைப் பழுது நீக்கி செப்பனிட்டுப் பொலிவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது எவ்வளவு தூரம் சரியாக நடக்குமோ தெரியாது. பல காலமாக கோர்ட், கேஸ் என்று பல சிக்கல்களைச் சந்தித்து, கட்டிடத்தைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்பாளர்களை விரட்டிய பின்பு இங்கே  பராமரிப்பு வேலைகள் நடந்தபடி இருக்கிறது. அது எப்போது முடியுமோ  யாருக்குத் தெரியும் …!. நம் ஆட்சியாளர்களுக்கு இந்த அழகுக் கட்டிடங்களின் மேல் பெரிய அக்கறை எதுவும் இல்லை என்பது எனக்கு மட்டுமா உங்களுக்கும் தெரியும் தானே?  

அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வரான காலகட்டமான 1967-ல் ஒரு முறை அதைச் செப்பனிட்டிருக்கிறார்கள். பிறகு அது பராமரிப்பின்றி, பாழடைந்த கட்டிடங்களில் சல்லாபிக்கும் ஆட்களுக்கும், குடிகார சீமான்களுக்குமான, கமுக்க விடுதியாக இருந்திருக்கிறது…. நானே நிறைய காலி மது புட்டிகளை அங்கே பார்த்திருக்கிறேன். இவ்வளவுக்குப் பின்னும் ஆறுதலாக உள்ள விடயம் அதைப் பழுது நீக்கி பொலிவுறச் செய்ய 3.9 கோடிகள் ஒதுக்கி இப்போது ஆமை வேகத்தில் பணிகள் நடக்கிறது. அண்ணா பல்கலைக் கழகக் கட்டிட கலைத்துறை மேற்பார்வையில்  சிமிட்டியைப் பயன்படுத்தாமல் சுண்ணாம்பு, மணல் கலவையுடன், வெல்லம், கடுக்காய் சேர்த்த கலவையைப் பயன்படுத்தி வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. கட்டிடத்தில் இன்னமும் தன்மை மாறாமல் பழைய விடயம் ஒன்று இருக்கிறது என்றால், அது 130 ஆண்டுகளைக் கடந்த விக்டோரியா மகாராணியின் ஓவியம் தான். இன்னமும் மெருகு குலையாத தன் ஓவியம் வழியே அரங்கின் மேடை முகப்பிலிருந்தபடி துயரம் தோய்ந்த பார்வையால் விக்டோரியா மகாராணி மாற்றங்களைப் பார்த்தபடி இருக்கிறார்.

130 ஆண்டுக் கால அந்த பராம்பரியக் கட்டடத்தின் அழகை. வெ. ரா சாலையில் நீங்கள் பயணிக்கும் போதுரிப்பன் கட்டிடத்துக்கும்சென்ட்ரல் ரயில் நிலைய கட்டிடத்துக்கும் இடையில் அந்த செந்நிற அழகியை உங்களால் பார்க்க முடியும். பழுது நீக்கி முழுமை பெற்றால், உலகப் போட்டிக்குத் தயாராகும் சிவப்பு நிற பேரழகை அங்கே காண உங்களைப் போலவே எனக்கும் ஆசையாக இருக்கிறது. சீரமைக்கப்பட்ட கட்டிடத்தைப் பூட்டி வைத்து விடுவார்களோ அல்லது மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைப்பார்களோ தெரியாது! மீண்டும் அந்த கட்டிடம் பொதுமக்களுடன் உறவாட வேண்டும். வெறுமனே காட்சிக் கூடமாக மட்டும் இருக்கக் கூடாது. அத்துடன் சில விசமிகள் இது போன்ற கட்டிடங்களில் பேய்கள் உலவுவதாகக் கதைகள் கட்டிவிடுகிறார்கள். வரலாற்றை அழித்துவிட்டு, பொய்களை நட்டு வளர்க்க விரும்பும் பூச்சாண்டிகள் நிரம்பிய நாட்டில், கற்பனைகளை வரலாறாக்கி, வரலாற்றை அழித்தொழித்துவிடும் மனோபாவம் ஒரு நோய் போல. மண்ணில் வரலாற்றை மீட்கும் விதமாக  130 ஆண்டுக்கால பேரழகு, கம்பீரமான கட்டிடம் மக்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் வரப்போகிறதுவரவேண்டும். அதன் சாளரங்கள் வழியே உலகைக் கண்டபடி ஒரு புதினமெழுத வேண்டும்….!


-கரன் கார்க்கி

Previous articleநூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -3
Next articleஇராவணத் தீவு – பயணத் தொடர் 2

5 COMMENTS

  1. சென்னைவாசிகளுக்கு பெருமிதத்தையும் மற்றவர்களுக்கு ஏக்கத்தையும் வரவழைக்கும் வகையில் மிக அழகான வர்ணனையும் நுட்பமான வரலாற்றுத் தகவல்களுமாய் பதிவு சிறப்பாக உள்ளது. சென்னையில் பல காலம் வாழ்ந்திருந்தும் இதுபோன்ற அழகுகளை ரசிக்கத் தவறிவிட்டோமே என்று மனம் ஏங்குகிறது. நிச்சயம் ஆவணப்படுத்த வேண்டிய தொடர். பாராட்டுகள்.

  2. சிவப்புக் கட்டிடத்தின் சாளரங்கள் வழியே எங்களை நோக்கியவாறு நீங்கள் எழுதப் போகும் புதினத்திற்காகக் காத்திருக்கிறோம். பழைய நினைவுகளை மலரச் செய்து மணம் பரப்பியது உங்கள் கட்டுரை. மிக அழகான பின்னோக்கிய பயணம் ! அருமை! நன்றி !

  3. சிவப்புகளின் கதைகளை வெளுத்துக்கட்டுங்கள்! காத்திருக்கிறோம். நன்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.