வாழ்வின் பெருமகிழ்வு

ஃபிரான்சின்’ தென்கிழக்குப் பகுதியின் ஓரம், ‘காட் த’அஸுர்’ எனப்படும் ‘ஃப்ரெஞ்சு ரிவியராவில்’, ‘நீஸ்’ நகரின் பகுதிகளான ‘வில்லினவ்’ மற்றும் ‘லூபே’ என்ற இரண்டு கிராமங்கள் ஒருங்கிணைந்து அமைந்த ‘வில்லினவ் லூபே’ பகுதியில், ஒரு மலைக் குன்றின் மீது, இருபத்து மூன்றாயிரம் சதுர அடியில் அமைந்த எங்கள் அலுவலகத்தின் வெளியே, ஒரு பெரிய தேவதாரு மர நிழலின் அடியில் உள்ள, திறந்தவெளி ஓய்வுப் பிரதேசத்தில், ஒரு நீண்ட மர நாற்காலியில் அமர்ந்தபடி, கோப்பைகளில் இருந்த கருப்புக் ‘காஃபியை’ அருந்தியபடியே பேசியபடி, நானும் ‘லியோனல் மோரீஸும்’, எங்கள் பார்வைக்குத் தெரிந்த ‘மெடிட்டரேனியன்’ கடலின் மீது, ஒரு தங்கப் புன்னகை போல மிதந்து கொண்டிருந்த, வெள்ளி மதிய இரண்டரை மணி சூரிய ஒளியால் மெருகேறிய, அந்தச் சூழலைத் தரிசித்துக் கொண்டிருந்தோம்.

“இந்தக்  கடற்கரையின் ஃப்ரெஞ்சுப் பெயருக்கு என்ன அர்த்தம் என முதல் முறை நீ இங்கே வந்த போது நான் சொன்னேன் அது உன் நினைவில் உள்ளதா”, என லியோனல் கேட்டான்.

பயணம் சார்ந்த கணினி மென்பொருட்கள் தயாரிக்கும் ஒரு முன்னணித் தொழில்நுட்ப நிறுவனம் எங்களுடையது. இருபது மில்லியன் யூரோக்கள் செலவு செய்து இந்த இருபது ஹெக்டேர் மலை நிலத்தை எங்கள் அலுவலகம் வாங்கியிருந்தது. அது போக இந்த இடத்தை மறுஉருவாக்கம் செய்வதற்கான செலவு மேலும் பத்து மில்லியன் யூரோக்கள் ஆனதாம். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த இடத்தில் எங்கள் அலுவலகம் தன் செயல்பாட்டைத் துவக்கி இருந்தது. அலுவலகம் என்றால் இப்படி ஒரு இயற்கை எழில் சூழலில் தான் இருக்க வேண்டும் எனத் தோன்றும்படி அதன் கட்டுமானங்கள் இருக்கும். எப்படியும் ஆண்டுக்கு ஒரு முறை எங்களின் இந்தத் தலைமை அலுவலகத்திற்கு நான் வர வேண்டி வரும். வந்தால் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வரை தங்குவேன். குறைந்தபட்சம் ஒரு வாரமாவது தங்க வேண்டி வரும். இங்கே நான் வருவது இது மூன்றாம் முறை. சென்ற ஆண்டே இரண்டு முறை வர நேர்ந்தது. முதல் முறை இங்கே வந்த போதே எங்கள் குழுவின் ‘அஜைல்’ பயிற்சியாளனாக இருந்த லியோனல் எனக்கு நண்பனாகி விட்டான். எங்களிடையே இருந்த சில பொதுவான கெட்ட பழக்கங்கள் காரணமாகத் தான் அந்த நட்பு மிகச் சுலபமாகச் சாத்தியமானது என நாங்கள் இருவருமே ஒப்புக் கொண்டோம்.

“‘காட் த’அஸுர்’ என்ற சொற்றொடரில்  வரும் ‘அஸுர்’ என்ற சொல்லுக்கு ‘நீலம்’ என்று பொருள். ‘காட்’ என்ற சொல்லுக்கு ‘ரிவியரா’, அதாவது, ‘கடற்கரை’ என்று பொருள்”, என பதில் சொன்னேன்.

லியோனல் தான் எனக்கு இந்த ஃப்ரெஞ்சு நிலப் பகுதியின் உள்ளூர் வழிகாட்டி. மேலும் அவன், அவ்வப்போது எனக்குச் சில ஃப்ரெஞ்சு மொழிச் சொற்களின் சரியான உச்சரிப்பு மற்றும் அர்த்தத்தைச் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரும் கூட.

அவன் முன்பு சொன்ன இன்னும் ஒரு தகவலும் என் நினைவிற்கு வந்தது – ‘மெடிட்டரேனியன்’ கடல் என்பது ஈரோப், ஏஷியா மற்றும் ஆஃப்ரிக்கா ஆகிய மூன்று கண்டங்களின் நிலப்பரப்புகளுக்கு நடுவே இருக்கும் கடல். அதையும் சொன்னேன்.

“ஹ்ம், நன்று”, என்றபடியே தன் சட்டைப் பையிலிருந்து ஒரு ‘மார்ல்பரோ லைட்ஸ்  சிகரெட்’ கட்டை எடுத்து அதிலிருந்த ஒரு சிகரெட்டை தன் வாயில் வைத்துக் கொண்டு, கட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உயர்த்தி என்னிடம் நீட்டினான்.

“லியோனல், நான் இதை நிறுத்தி விட்டேன் என்று உனக்கு எத்தனை முறை சொல்வது”, எரிச்சலாகக் கேட்டேன்.

“ஹ்ம், சரி, ‘பேஸ்டிஸ்’ ஃப்ரெஞ்சு மதுவினை  மட்டும் நல்லவேளை நீ நிறுத்தவில்லை; இல்லையெனில் நமது அலுவலகம் தாண்டிய நட்பில் விரிசில் விழுந்திருக்கும் இல்லையா.”

புன்னகைத்தேன்.

“சரி அதை விடு, உன் இந்த வார இறுதித் திட்டம் என்ன.”

“இங்கே வந்த முதல் முறை, எனக்குக் கிடைத்த ஏறக்குறைய மூன்று வார இறுதிகள், தினமும் கிடைத்த மாலைகள், விடுமுறை நாட்கள் ஆகியவற்றையெல்லாம் பயன்படுத்தி அருகில் இருக்கும் எல்லா இடங்களையும் பார்த்து விட்டேன். சற்று தொலைவில் இருக்கும் ‘பேரிஸ்’ கூடப் போய் வந்துவிட்டேன். இரண்டாம் முறை வந்து ஒரு வாரம் மட்டுமே தங்கிய போதும் கூட, மாலை வேளைகளில் ‘நீஸில்’ பார்க்காமல் விட்ட சில இடங்களையும் மிச்சம் வைக்காமல் பார்த்தேன்.”

“இந்த வார இறுதித் திட்டம் என்ன சுமன்”.

“அதைத் தான் சொல்ல வருகிறேன். அந்த ஜப்பேன் விமான நிறுவனத்தின் புதிய மென்பொருள் செயல்திட்டப் பணி சம்பந்தமாக ஒரு அறிக்கையைத் திங்கள் அன்று சமர்ப்பிக்க வேண்டுமே, அந்த வேலையை இந்த வார இறுதியில் செய்யலாம் என்றிருக்கிறேன். எனக்குத் தான் அதற்குப் பிறகும் இங்கே இன்னும் இரண்டு வார இறுதிகள் இருக்கின்றனவே.”

“அது திங்கட்கிழமையே சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை அல்ல. அதற்குப் புதன்கிழமை வரை நேரம் இருக்கிறது. உள் காலக்கெடுவையும் வெளிக் காலக்கெடுவையும் குழப்பிக் கொள்வதை நீ நிறுத்தப் பயில வேண்டும்.  இந்த மென்பொருள் திட்டப்பணிக்கு நம் நிறுவனம் தேர்ந்தெடுத்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி மேம்பாடுகள் மற்றும் செயல்முறைகள் மூலம் அவர்களுக்குக் கிடைக்கப் போகும் நன்மைகள் குறித்தது தானே அந்த அறிக்கை. இதில் உள் காலக்கெடு என்பது தான் திங்கட்கிழமை விழுகிறது, அதாவது நம் இயக்குநரிடம் காட்ட வேண்டியது. புதன்கிழமை தான் வெளிக் காலக்கெடு, வாடிக்கையாளருக்குக் காட்ட வேண்டியது. தவிர அதில் வரவேண்டிய அஜைல் பகுதியை எப்படி வடிவமைக்க வேண்டும் என நான் ஏற்கனவே என் மனதளவில் காட்சிப்படுத்தி விட்டேன். எனவே அது பற்றி நீ பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. நாமிருவரும் சேர்ந்து திங்கட்கிழமை காலை அமர்ந்தால் அதை அன்று மதியத்திற்குள் முடித்து விடலாம். சாயங்காலம் தான் இயக்குநருடனான சந்திப்பு. நான் உனக்கு உதவுகிறேன். எப்படியும் நான் உனக்கு உதவத் தான் வேண்டும். அரை நாள் வேலை அது. அதற்கு உன் வார இறுதியின் இரண்டு நாட்களை ஒரு அயல் மண்ணில் வந்து பயணம் செல்வதை மறுத்துப் பலி கொடுக்காதே.”

“சரியாகச் சொன்னாய். ஆனால் இனி நான் திட்டம் போட்டு, நீஸை விட்டு வேறு எங்கும் செல்லும் சாத்தியமில்லை. நீஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை, ஏற்கனவே பார்த்து விட்டேன். ஆமாம், நீ இந்த வார இறுதிக்கு என்ன திட்டம் வகுத்து வைத்திருக்கிறாய்.”

“உனக்கு நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே, என் வார இறுதிகள் என் குடும்பத்திற்கானவை”, புன்னகைத்தபடியே தான் சொன்னான்.

உண்மை தான். சில வெள்ளி இரவுகள் என்னுடன் ‘பேஸ்டிஸ்’ அருந்திக் கொண்டாடினாலும், எனக்கு ‘இங்கே செல், இதைப் பார்’ எனச் சொல்லியிருக்கிறானே தவிர, ஒரு முறை கூட சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களை என்னுடன் அவன் செலவிட்டதில்லை. ஒரு முறை அவன் வீட்டில் யாரும் இல்லாத போது என்னை அழைத்துச் சென்று ‘பேஸ்டிஸ்’ அருந்திக் கொண்டாடியிருக்கிறான். அதுவும் ஒரு வார நாளில், அவன் குடும்பம் அவன் மாமியார் வீட்டிலிருந்தபோது.

“சுமன், இங்கே உள்ள ஓவியக் கலை அருங்காட்சியகங்களை நீ  பார்த்துவிட்டாயா. உனக்குத் தான் கலை, இலக்கியம், ஓவியம், ஒளிப்படம் என்றால் மிகுந்த ஆர்வம் ஆயிற்றே.”

“இல்லை, ஒரு சமயம் இது பற்றி யோசித்திருக்கிறேனே தவிர அதைச் செயல்படுத்தியதில்லை. இங்கே பார்த்தே ஆக வேண்டிய இடங்களின் முதன்மைப் பட்டியலில் நிறைய இடங்கள் இருந்ததால், அது விடுபட்டு விட்டது. எங்கு செல்ல வேண்டும், எதைப் பார்க்க வேண்டும், உனக்குத் தெரியுமா, தெரிந்தால் சொல்.”

“இந்த சுற்றுவட்டாரத்தில் பார்க்க நிறைய அருங்காட்சியகங்கள்  இருக்கின்றன. ஆனால் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் பயணத்தில் சில முக்கிய ஓவியக் கலை அருங்காட்சியகங்களை மட்டுமே நீ பார்க்க முடியுமென்பதால் உனக்கு ஒன்பது அருங்காட்சியகங்களைச் சிபாரிசு செய்வேன். அவை என் தேர்வு அல்ல, என் பள்ளித் தோழி ‘ஆல்டியா ருஸ்ஸோ’ கொடுத்த பட்டியல் அது. அவள் ஒரு ஓவிய ஆசிரியை.. இங்கே சில காலம் இருந்தாள், இப்போது ‘ஏம்ஸ்டர்டேம்’  சென்று விட்டாள்.”

“ஹ்ம். அந்த அருங்காட்சியகங்களை  நீ பார்த்திருக்கிறாயா.”

“ஒரு இடம் குறித்த தகவல்களை அறிந்து வைத்துக் கொண்டு வியப்பதிலும், சில சமயம் அவற்றைப் பார்ப்பதிலும், பல சமயம் அதைப் பிறருக்குப் பகிர்ந்து கொண்டு அவர்களின் பயணத்திற்கு வழிகாட்டுவதிலும் நான் ஆர்வமுள்ளவன் என உனக்குத் தெரியும் தானே.”

“ஹ்ம். சரி தான். ஆனால் என் கேள்விக்கு இன்னும் நீ நேரடியாக ஒரு பதிலைச் சொல்லவில்லையே..”

லியோனல் சிரித்தான்.

“இது தான் உன் பதிலா.”

“சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். சரி, பட்டியலைச் சொல்கிறேன் கேள். ‘ம்யூஸே மெட்டிஸ்’, ‘ம்யூஸே மார்க் ஷெகால்’, ‘ம்யூஸே மெஸென்னா’, ‘ம்யூஸே ரெனுவா’, ‘ம்யூஸே த’ஆர்ட் மாடேர்ன எட் த’கான்டம்போரன்’, ‘ம்யூஸே டிபார்ட்மென்டல் தெ ஆர்ட்ஸ் ஏஷியாட்டிக்’ மற்றும் ‘ம்யூஸே பிக்காசோ’.”

“இரண்டு நாள் அவகாசத்திற்குக் கூட இது பெரிய பட்டியல் தான் பார்க்க.”

“‘ம்யூஸே’ என்ற ஃப்ரெஞ்சு சொல்லுக்கு ‘ம்யூசியம்’, அதாவது ‘அருங்காட்சியகம்’ என அர்த்தம் என்பதைப் புரிந்து கொள்வதில் உனக்கு எந்தச் சிக்கலும் இருக்காது. நான் சொன்ன பட்டியலில் உள்ள ஓவியர்கள் குறித்தும் நீ ஓரளவு அறிந்து வைத்திருப்பாய்.”

ஆமோதித்துத் தலையசைத்தேன்.

“இவற்றில் ஒரு அருங்காட்சியகம் பற்றி மட்டும் ஒரு ஸ்வாரஸ்யமான மேலதிகத் தகவல் இருக்கிறது”, லியோனல் தன் காலிக் கோப்பையை எங்கள் முன் இருந்த நீண்ட மேஜை மீது வைத்தபடி சொன்னான்.

நான் ஆர்வமானேன்.

“‘ம்யூஸே பிக்காசோ’ குறித்த, அதிகம் அறியப்படாத, ஒரு சிறு தகவல் அது. ஆல்டியா தான் முதலில் அதைக் கண்டு கொண்டு என்னிடம் சொன்னாள். ஆனால் அதைச் சொல்லும் முன் உனக்கு அந்த அருங்காட்சியகத்தின், சரித்திரத்தையும், சில பொதுத் தகவல்களையும் சொல்லி விடுகிறேன். இணையத்தில் தேடிப் படிக்கும் நேரம் உனக்கு மிச்சமாகும்.”

எனக்கு ஆர்வம் மேலும் கூடியது.

“ஆஹா, சொல்.”

“இந்த பிக்காசோ ம்யூசியம், இதே ஃபிரஞ்சு கடற்கரைப் பகுதியில் உள்ள ‘ஆன்டீப்’ என்ற நகரத்தில் இருக்கிறது. நாம் ஒரு முறை, அங்கே ஒரு கடற்கரையோர விடுதியில், ஒரு நாள் நம் குழுவுடன், இரவு உணவு அருந்தச் சென்றிருக்கிறோம். அப்போது அங்கே ஓரமாக நின்றிருந்த ஆடம்பரமான ‘யாட்’ வகைப் படகுகளைப் பார்த்தபடியே, கோப்பை கோப்பையாக ‘பேஸ்டிஸ்’ அருந்தி, கடைசியில் நீயும் நானும் இன்னும் ஒரு கடைசி கோப்பை பேஸ்டிஸ் மது கேட்டபோது அந்த விடுதியின் உரிமையாளர் பெண்மணி வந்து ‘ஒரு சொட்டு கூட மிச்சம் இல்லாமல் எல்லா ‘பேஸ்டிஸ்’ மதுவும் நீங்களே குடித்துத் தீர்த்துவிட்டீர்கள். புதிய மது பாட்டில்களை நாளை தான் வரவழைக்க முடியும். எனவே நாளையும், மீண்டும் தங்கள் நல்வரவை எங்களுக்கு நல்கவும்’ எனச் சொன்னாரே,  நினைவிருக்கிறதா.”

நான் சிரித்தேன். “நினைவிருக்கிறது. ஆன்டீப் எனக்குச் சற்று பழக்கமான இடம் தான். நான் இரண்டு முறை மாலை நேரத்தில் அங்கே சென்று அதன் பழைய நகரத்தைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். அங்கே ஒரு பிக்காசோ ம்யூசியம் இருக்கிறது என்பதும் அது ‘ஷேடூ க்ரிமல்டி’ எனப்படும் கோட்டையில் இருக்கிறது என்பதும் தெரியும். நான் மாலை வேளைகளில் அங்கே சென்றதால் அருங்காட்சியகம் மூடியிருந்தது. எனவே அதை இன்னும் பார்த்ததில்லை. இதைத் தவிர அந்த அருங்காட்சியகம் குறித்து வேறு எதுவும் எனக்குத் தெரியாது.”

“ஆன்டீப் நகரம், நீஸ் நகரத்திற்கும், ‘கான்’ நகரத்திற்கும் இடையே உள்ளது. இது முதலில் ஒரு கிரேக்கக் ‘காலனியாக’ இருந்தது. அப்போது ‘ஆன்டிபோலிஸ்’ என்றழைக்கப்பட்டது. ‘ஆன்டி’ என்றால் ‘எதிர்’, ‘போலிஸ்’ என்றால் நகரம். அதாவது இது நீஸ் நகரத்திற்கு எதிரில் இருப்பதால் அந்தப் பெயர். பிறகு இதன் பெயர், ‘ஆன்டீப்’ எனத் திரிந்தது.”

வந்து வெகு நேரமாகிவிட்டதா என அறிய நாங்கள் இருவருமே கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் எங்கள் செல்பேசிகளைப் பார்த்தோம். பதினைந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை. வழக்கமாகத் தினமும் மதிய உணவிற்குப் பின் இப்படி வந்து அமர்ந்து ஏதாவது உரையாடிக் கொண்டிருந்துவிட்டுப் பின் ஒரு சாவகாச நடை செல்வோம். அதற்குத் தோராயமாக முப்பது நிமிடங்கள் செலவாகும். ஆனால் வெள்ளி என்றால் வார இறுதி மனநிலைக்குத் தாவி ஒரு மணி நேரம் கூடச் செலவிட்டு விடுவோம். அதற்கும் சேர்த்து நிறுவனத்திற்கு உழைப்பை ஈடு கட்டுவது எல்லாம் அவரவர் வேலைப் பளு பொறுத்தது. லியோனல் தொடர்ந்து பேசலானான், “கிரேக்கர்களின் காலத்திலேயே கட்டப்பட்ட இந்த க்ரிமல்டி கோட்டை, 442இல் இருந்து 1385ஆம் ஆண்டு வரை கிருஸ்துவ பாதிரியார்களின் குடியிருப்பாக இருந்தது. 1385இல் ‘மோனேக்கோ’ என்ற சிறிய நாட்டைச் சேர்ந்த க்ரிமல்டி குடும்பத்திற்கு இக்கோட்டை சொந்தமாகி பிறகு அந்தக் குடும்பத்தின் பெயராலேயே அழைக்கப்பட்டது. 1608 வரை இது க்ரிமல்டி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 1925இல், ‘ரொமேல்ட் டோர் டே லெ சூஷேர்’ என்ற ஆராய்ச்சியாளரின் முயற்சியால், ஆன்டீப் நகரத்தின் வரலாறு மற்றும் தொல்லியல் பெருமைகள் பேசும் ஒரு அருங்காட்சியகமாக இக்கோட்டை மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. சூஷேர் அவர்களே இதன் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.”

எங்கள் தலைக்கு மேலிருந்து தேவதாரு மரத்திலிருந்து சில இலைகளும் சில கொட்டைகளும் விழுந்தன. அதில் ஒரு கொட்டை என் கையில் இருந்த காஃபிக் கோப்பைக்குள் விழுந்து, கோப்பையில் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருந்த காஃபியில் ஒரு துளியை வெளியே சிந்தச் செய்தது. நான் மேலே பார்த்தேன். விருட்டென்று ஒரு சிறு பறவை மரத்தின் கிளையிலிருந்து கிளம்பிப் பறந்து போனது.

“அட, அந்தப் பறவையின் பெயர் ‘யூரேஷியன் ட்ரீக்ரீப்பர்’”, என்றேன் நான்.

“அப்படியா, சரி, ஒரு நடை சென்று வரலாம் வா. கோப்பைகளைத் திரும்பி வரும் போது எடுத்துக் கொள்ளலாம்”, என்றபடியே எழுந்து, நடந்தபடியே லியோனல் மேலும் பேசலானான், “பிக்காசோ என்ற அந்த மாபெரும் கலைஞனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் அருங்காட்சியகம் இது தான். இங்கே தங்கியிருந்த காலத்தில் பிக்காசோ உருவாக்கிய படைப்புகள் இந்த ஆன்டீப் என்ற கடலோர நகரத்தின்  உள்ளொளி, புராணம், பாரம்பரியம் ஆகியவற்றுடன் அந்த ஓவியனுடைய ஆன்மாவின் புத்துயிர்ப்பையும் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் அவரது ஓவியங்களின் கருப்பொருள் சுதந்திரத்தின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, குறிப்பாக, நீண்ட காலம் நிகழ்ந்து பின் முடிந்த இரண்டாம் உலகப் போரின் அதிர்ச்சியிலிருந்து மீளும் வண்ணம் அமைந்திருக்கின்றன.”

ஆர்வம் தவழ அவன் பேசுவதைக் கவனித்தபடியே நடந்தேன்.

“அது இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த தருணம். 1946ஆம் ஆண்டின் கோடை. அறுபத்து ஐந்து வயதான பிக்காசோ, ஃப்ரெஞ்சு ரிவியராவின் ஆன்டீப் நகரத்திற்கு, தனது முதல் மனைவியான ‘ஓல்கா கோக்லோவா’ மற்றும் அவரது பிற காதலிகளையும் பேரிசில் விட்டு விட்டுத் தன் புதிய காதலியும், ஓவியக் கலை மாணவியுமான ‘ஃபிரான்சுவாஸ் ஜிலோ’ என்ற, இருபத்து ஐந்து வயதான இளம்பெண்ணுடன் வந்து தங்கியிருந்தார். பிக்காசோ, அவருக்கு ஏற்பட்டிருந்த மனச்சோர்வால் எதிலும் நிலை கொள்ள முடியாமல், எந்த வேலையும் செய்ய முடியாமல் அப்போது தத்தளித்துக் கொண்டிருந்தார். போரின் அழிவு மற்றும் அதன் பயனற்ற தன்மை அவரது எண்ணங்களை விட்டு இன்னும் விலகியிருக்கவில்லை. மேலும் அவருக்கு இருந்த பெண் உறவுகளிலிருந்த சிக்கல்களும் அவரை வருத்திக் கொண்டிருந்தன. தவிர, படைப்புத் தளத்தில், ஓவியக் கலைஞர்களுக்கான பொருட்களுக்கான நெருக்கடி, குறிப்பாக, வரைதிரைகளின் பற்றாக்குறையால் மிகவும் துன்புற்றிருந்தார் அவர்.”

“பிக்காசோ இங்கே தங்கியிருந்தது, ‘கோல்ஃப்-ஜுவான்’ எனும் கடற்கரை உல்லாச விடுதியில். ஒரு மாலைவேளை கடற்கரைச் சாலை நடையின் போது, போலந்து நாட்டைச் சேர்ந்த சிற்பியும், ஒளிப்படக் கலைஞரும், தன் நண்பருமான ‘மிஷெல் சீமா’ என்பவரைப் பிக்காசோ அங்கே சந்தித்தார்.  சீமா, பிக்காசோவிடம், க்ரிமல்டி கோட்டை பற்றியும் அதன் பராமரிப்பாளர் சூஷேர் பற்றியும் சொன்னார். அடுத்த சில நாட்களிலேயே, பிக்காசோ சூஷரை அதே கடற்கரையில் வைத்துச் சந்திக்க ஏற்பாடானது. அப்போது சூஷேர், க்ரிமல்டி கோட்டையின் பரந்துபட்ட காலி இடங்களை நிரப்பப் போராடிக் கொண்டிருந்தார். எனவே அவர், கோட்டையின் இரண்டாவது மாடியிலிருந்த பெரிய கூடத்தை, பிக்காசோவுக்கு, அவரது ஓவிய அறையாக மாற்றி அர்ப்பணிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். மேலும் சூஷேர், பிக்காசோவுக்குத் தேவையான ஓவியப் பொருட்களைத் தானே தருவித்துத் தருவதாகவும், அது கடினமெனினும், வாக்களித்தார்.”

“பிக்கோசோ சூஷரிடம், அவரின் இந்தச் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக், கோட்டையின் சுவர்களை, தான் அலங்கரித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தார். ஆனால் உண்மையில் அந்தச் சுவர்கள் மிகவும் பழுதுபட்டிருந்ததால், இறுதியில், பிக்காசோவால் தன் சத்தியத்தை நிறைவேற்ற முடியாமல் போனது. எனினும் ஒரே ஒரு கரி ஓவியத்தை மட்டும் ஒரு சுவரின் ஒரு பகுதியில் வரைந்து அலங்கரித்துக் கொடுத்தார். சுவரிலேயே ஒரு ஓவியச் சட்டகம் போலச் சதுரமாகச் செதுக்கி அதில் அந்த ஓவியத்தை அவர் வரைந்தார். மிக எளிய ஆனால் ஆழ்ந்த பொருள் கொண்ட ஓவியம் அது. ‘ஆன்டீபின் சாவிகள்’ எனும் தலைப்பில், பக்கவாட்டு வரிசையில் மூன்று சிறு ஓவியங்கள்;  ஒரு சாய்சதுர வடிவத்திற்குள் ஒரு திருகுச்சுருள்; ஒரு வட்டத்திற்குள் இருக்கும் ஒரு சாய் சதுரம், அதற்குள் ஒரு நீள் வடிவச் சிரிப்பான் முக உணர்வுக் குறியீடு; ஒரு வட்டத்திற்குள் இருக்கும் ஒரு சதுரம், அதற்குள் ஒரு நீள் வடிவச் சிரிப்பான் முக உணர்வுக் குறியீடு. ஒரு குழந்தை, கரிக்கோலில் கிறுக்கியது போல ஆனால் அவ்வளவு அழகாக அந்த ஓவியம் இருக்கும்.”

“‘ரஃபேயல்’ போல ஓவியம் தீட்டக் கற்றுக் கொள்ள எனக்கு நான்கு ஆண்டுகள் பிடித்தன, ஆனால் ஒரு குழந்தையைப் போல ஓவியம் தீட்டக் கற்றுக் கொள்ள நான் என் வாழ்நாள் முழுவதும் செலவழித்தேன்’, என பிக்காசோ ஒரு முறை சொன்னார்”, என்றேன்.

“அப்படியா, அருமை.” சற்று இடைவெளிவிட்டு லியோனல் தொடர்ந்தான், “கோட்டையின் சுவர்களை அலங்கரிக்க முடியவில்லை என்பதால் அதற்குப் பதிலாக, அவர் அந்தக் கோட்டையில் வைத்துத் தான் வரைந்த ஓவியங்களை அந்த அருங்காட்சியகத்திற்கே நன்கொடையாக அளித்தார். அந்த ஓவியங்கள் அங்கே மட்டுமே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று ஒரு கட்டளையை விதித்தார். ‘இந்த ஓவியங்களை எவர்  பார்க்க விரும்பினாலும் அவர் ஆன்டீப் நகரத்திற்குத் தான் வர வேண்டும்,’ என அறிவித்தார்.”

“கோல்ஃப்-ஜுவானில் ஜிலோவை விட்டு விட்டு, கோட்டையில், பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் பிக்காசோ பணியாற்றினார். பிக்காசோ இங்கே 1946 செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து அதே வருடம் நவம்பர் நடுப்பகுதி வரை தங்கியிருந்தார். இடையில், மிஷெல் சீமா, பிக்காசோவின் அழைப்பின் பேரில், பிக்காசோவை, அவரது  இந்த ஓவிய அறையில் வைத்துப் பல தினங்கள் ஒளிப்படங்கள் எடுத்தார். பிக்காசோ ஓவியம் வரையும் காட்சிகள், பிக்காசோ தன் ஓவியங்களுடன் காட்சி தரும் காட்சிகள் என இந்த ஒளிப்படங்கள் ஒரு ஓவியனின் படைப்புலகைக் காட்சிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. பிக்காசோவின் படைப்புகளுடன், ‘சீமாவின் பிக்காசோ’ ஒளிப்படங்களையும் இந்த அருங்காட்சியகம் இன்று காட்சிப்படுத்துகிறது. சீமா, பிக்காசோவின் கலைப் படைப்புப் பணியைப் பிரதி எடுத்த ஒளிப்படங்களுள் பிரபலமான ஒன்று, பிக்காசோ, ஒரு சிறிய ஆந்தையைத், தன் இரு கைகளிலும், அடை காப்பது போல, வலது புறம் தூக்கி, நீட்டி, ஏந்தி நிற்பதைச் சித்தரிக்கிறது. தன் கையில் தன் வளர்ப்பு ஆந்தையை ஏந்தியபடி, பின்னணியில் தான் வரைந்த ஒரு ஆந்தை ஓவியத்துடன் பிக்காசோ காட்சி தரும் அந்த ஒளிப்படத்தில், அந்த ஆந்தைகளிடமும் அவரிடமும், ஒரு தீவிரம் தெரியும். ஒரு சிறிய ஆந்தை, அடிபட்டு, கோட்டையில் தஞ்சம் புகுந்ததைக் கண்ட பிக்காசோ, அதைக் காப்பாற்றித் தன் செல்லப் பிராணியாக ஒரு கூண்டில் வைத்து வளர்த்து வந்தார். இந்த ஆந்தை, பிக்காசோ இங்கே உருவாக்கிய பல ஓவியங்களிலும், கல் மற்றும் பீங்கான் மற்றும் மண்பாண்டச் சிற்பங்களிலும் ஒரு கதாபாத்திரமாகவே உலவுவதைக் காணலாம்.”

“இந்தத் தகவல்களே என்னைச் சொக்க வைக்கின்றன.”

“ஆனால் இந்த அருங்காட்சியகத்தின் பிக்காசோ தளத்தில் மட்டும் ஒளிப்படங்கள் எடுக்கத் தடை உள்ளது. பிக்காசோ இங்கு உருவாக்கிய படைப்புகளில் கிரேக்கத்தைத் தனது பிரத்தியேக ஓவிய மொழியில் சித்தரித்தார். இதற்கு ஒரு மிக முக்கிய உதாரணமாக இங்கே அவர் உருவாக்கிய ‘லா ஜா ட வீவ்’ –  ‘வாழ்வின் பெருமகிழ்வு’, என்ற ஓவியத்தைச் சொல்லலாம். இந்த ஓவியத்தின் புதுமைக்கு முதல் காரணமாக அமைந்தது அவர் பயன்படுத்திய பொருட்கள் தான். கலைப் பொருட்களின் பற்றாக்குறையால் அங்கே உள்ளூரில் என்ன கிடைத்ததோ அதைப் பயன்படுத்தி ஓவியம் தீட்டினார். இந்த ஓவியத்தின் வரைதிரைப் பலகையாகக் கல்நார் சீமைக் காரைக் கலவையை உபயோகித்தார்; மேலும் வண்ணங்களுக்குப் படகுச் சாயம், தூரிகைகளுக்கு வீடுகளுக்குச் சாயம் பூசப் பயன்படும் தூரிகைகள் எனக் கிடைத்ததைப் பயன்படுத்தினார். இங்கே பிக்காசோ குறைகளை எல்லாம் நிறைகளாக மாற்றும் வித்தையை நிகழ்த்தினார். விருப்பம், வழிவகுக்கும், என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மேலும் இந்த ஓவியம் ஆன்டிபோலிஸ் நகரத்தின் கதையையே ஒரு சந்தோஷக் கோணத்தில் சொல்வதாக இருக்கிறது. கூடவே இது, ‘மெடிட்டரேனியன்’ கடலின், இந்தத் துறைமுகத்தின், ஆன்டீபின் கிரேக்க-ரோமானிய பாரம்பரியத்தின், பிரதிபலிப்பாக மட்டுமல்லாமல், பிக்காசோவின் அந்தக் காலகட்டத்து மனநிலையையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது.”

“மெடிட்டரேனியன் கடற்கரையில் நிகழ்வதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்த ஓவியத்தின் கடலில், இடதுபுறம் ஒரு மஞ்சள் வர்ணப் பாய்மரப் படகு மிதக்க, முக்கியக் கதாபாத்திரமாக, மையத்தில், கடற்கரையில், ஒரு பெண் உருவம், ஒரு அலையைப் போல் மேல் நோக்கி உயர்ந்து உருக் கொண்டு நடனமிடுவதைக் காணலாம். அந்தப் பெண்ணின் அருகில், இரண்டு துள்ளிக் குதிக்கும் ஆடுகளுடன், இடதுபுறத்தில் புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு ‘சென்டோர்’ மற்றும் வதுபுறத்தில் ரெட்டைப்  புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு ‘ஃபான்’ ஆகியவை இணைந்து, ஒரு ‘பாலே’ நடனத்தை அரங்கேற்றுவதைப் போலிருக்கும்.”

“எனக்கு உடனே அந்த ஓவியத்தைக் காண வேண்டும் போல இருக்கிறது. இரு என் செல்பேசியில் தேடிப் பார்த்துவிடுகிறேன்.”

“பொறு, ஒத்திவைக்கப்படும் மனநிறைவு என்பது சில சமயம் பெருமகிழ்வு தரும். அதைப் பார்ப்பதாக இருந்தால் முதலில் நேரில் சென்று பார். சென்டோர் மற்றும் ஃபான் என்றால் என்ன என உனக்குத் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்; இல்லாவிட்டால் கேட்டிருப்பாயே.”

“சென்டோர் என்பது மேல்பாகம் மனித உடல் மற்றும் கீழ்பாகம் குதிரை உடல் என இருக்கும் ஒரு கிரேக்கப் புராணப் பாத்திரம்; ஃபான் என்பது மேற்பாகம் மனித உடல் மற்றும் கீழ்ப்பாகம் ஆட்டின் உடல் என இருக்கும் ஒரு கிரேக்கப் புராணப் பாத்திரம்.”

“சரி தான். ‘சேட்டிர்’ எனும், கானகத்தில் வசிக்கும், ஆடு மற்றும் மனிதனின் உடல் உருவங்களின் கலவையாக உருவான, காமமும் மது போதையும் கொண்ட, ஒரு  கிரேக்க புராண கதாபாத்திரத்தையும் சென்டோர் மற்றும் ஃபான் கதாபாத்திரங்களுடன் கோர்த்து, சில ஓவியங்களை பிக்காசோ இங்கே வரைந்தார்.”

“ஹ்ம். எனக்கு சேட்டிர்களுக்கும் ஃபான்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்போதுமே கடினமாக இருக்கும்.”

“ஆமாம். என்ன தான் ஆடு மற்றும் மனித உடல் கூறுகள் கொண்டிருக்கும் ஒற்றுமையை இரண்டுமே கொண்டிருந்தாலும், அவை வேறு வேறு புராணக் கதாபாத்திரங்கள் தான். கிரெக்க புராணமும் ரோம புராணமும் எப்படி வேறுபடுகின்றனவோ அப்படி; எப்படி ஒன்றுகின்றனவோ அப்படி. ஆன்டீப் நகரத்தின் சர்வ வல்லமை பொருந்திய ஒரு அம்சமான மெடிட்டரேனியன் கடலையும் அது சார்ந்த நிலத்தையும் அதன் உயிர்களையும் அவற்றின் களிப்பையும் மிக அழகாகக் கூறும் ஒரு படைப்பு இந்த ஓவியம். இது, ‘ஹென்றி மெட்டிஸ்’ என்ற ஓவியர், 1906ஆம் ஆண்டு வெளியிட்ட, அவரின் புகழ்பெற்ற படைப்பான, ‘லெ போன்ஹர் டி வீவ்ர’ – இதற்கும் ‘வாழ்வின் பெருமகிழ்வு’ என்று தான் பொருள், என்ற நவீன ஓவியத்திற்குப் பிக்காசோ செலுத்திய மரியாதையா அல்லது ஒரு அதிர்ச்சி மதிப்பு வரவழைக்கும் பகடிப் படைப்பா என்பது விவாதத்திற்குரியது.  மெட்டிஸின் படைப்பு பெரும்பாலும் அமைதியின் சொரூபமாகப் பார்க்கப்படுகிறது. மெட்டிஸின் ஓவியம் ஒரு பாடலைப் போன்றது. பிக்காசோவின் ஓவியம் மிகுந்த புராணத்தன்மை கொண்டது எனினும் அவர், மெட்டிஸின் ஓவியத்தின் பாடலை, சுழலும் கோடுகளால் தீட்டப்பட்ட உருவங்கள் மூலம் பிரதியெடுத்து விடுகிறார்.”

“ஓவியத்தில் உள்ள அந்தப் பெண் உருவம் வேறு யாருமல்ல, அது ஃபிரான்சுவாஸ் ஜிலோ தான், பிக்காசோவின் அந்த காலத்துக் காவிய தேவதை அவர் தானே. இதை பிக்காசோ வரைந்து முடித்த சிறிது காலத்திலேயே, பிரான்சுவா தான் கருவுற்றிருப்பதை அறிந்தார். பிரான்சுவா, பிக்காசோவின் இந்தக் காலகட்டத்தின் பல படைப்புகளில் ஒரு பாத்திரமாகவே பல ரூபங்களில் உலவுகிறார் – பெண்ணாக, தேவதையாக, அணங்காக, பூவாக, பூனையாக, மீனாக, ஒரு ‘நிம்ஃப்’ ஆக.”

“நிம்ஃப் என்பவர் புராதன கிரேக்க நாட்டுப்புறவியலின் இயற்கையைக் காக்கும் பெண் சிறு தெய்வம் தானே.”

“ஆமாம். ஜிலோ பின்னர் பிக்காசோவிற்கு, ‘கிளாட்’ எனும் மகனையும், ‘பாலோமா’ எனும் மகளையும் ஈன்று கொடுத்தார். ‘பிக்காசோவுடனான வாழ்வு’ எனும் புத்தகத்தையும் பிற்காலத்தில் எழுதினார்.”

லியோனல் இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடியே, சிகரெட் கட்டை என்னிடம் நீட்டினான். அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என முகர்ந்து பார்த்துப் புகையிலையின் புளிப்புச் சுவையை மட்டும் சற்றே அனுபவித்து விட்டு மீண்டும் அதை அதன் கட்டுக்குள் அடக்கி அவனிடம் அதைத் திருப்பிக் கொடுத்தேன். புன்னகையுடன் அதை வாங்கித் தன் பாக்கெட்டில் மீண்டும் நுழைத்துக் கொண்டே அவன் சொன்னான், “இதே பொருளில், தலைப்பில், மேலும் ஆறு ஓவியங்களும் இரண்டு சிற்பங்களும் பிற ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களால் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டுப் புகழ்பெற்றுள்ளன. 1888இல் ‘வின்சன்ட் வான் கோ’ வரைந்த ‘ஒலியேன்டர்கள்’, எனும், மேஜை மேலிருக்கும் ஜாடியில் வைக்கப்பட்ட ‘அரளிப் பூக்கள்’ ஓவியத்தில், அதே மேஜை மேல், ‘எமீல் ஜ்சோலா’ எனும், ‘இயற்கைவாதம்’ என்ற இலக்கிய இயக்கத்தை ஆதரித்த, புகழ்பெற்ற ஃப்ரெஞ்சு நாவலாசிரியரின், 1883இல் வெளியாகிப் புகழ்பெற்ற ஒரு நாவலான ‘லா ஜா ட வீவ்’ எனும் புத்தகத்தின் பிரதி, இருப்பது, ஒரு மறைபொருள் ஸ்வாரஸ்யமாகக் கருதப்படுகிறது.”

“1946ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தின் குளிர் அப்போது க்ரிமல்டி கோட்டைக்கு உள்ளேயே வந்து தன் கடுமையைக் காட்டியது. அந்தக் குளிரில் இதற்கு மேல் ஒரு படைப்பை உருவாக்குவது கடினம் என நினைத்த பிக்காசோ, பேரிஸ் நகரத்திற்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்தார். அவர் ஆன்டீப் நகரத்தின் க்ரிமல்டி கோட்டையை விட்டு விலகியபோது தான் வரைந்த 23 ஓவியங்களையும், 44 கோட்டுச் சித்திரங்களையும் அந்தக் கோட்டைக்கே அர்ப்பணித்து விட்டுச் சென்றார்.”

“அருமை. லியோனல், ‘சேன் இச்சிக்கா கோபயாஸி’ உடனான நம் சந்திப்பிற்கு இன்னும் பத்து நிமிடங்கள் தான் இருக்கிறது.”

“ஆம். இன்று மாலை நான் உன்னை உன் விடுதியில் சென்று விடுகிறேன். அப்போது மிச்சக் கதையைப் பேசலாம்.”

“நீ இருப்பது ‘மார்சேய்’ நகரத்தில். நான் இருப்பது இங்கே நீஸ் நகரத்தில். இரண்டும் எதிர் திசை. வேண்டாம். நானே என் இருப்பிடத்திற்குச் சென்று கொள்கிறேன்.”

“காரை ஓட்டப் போவது நான். தவிர உன் இருப்பிடம் சென்றுவிட்டு என் இருப்பிடம் செல்ல எனக்குப் பத்து கிலோமீட்டர் மற்றும் அதிகபட்சம் நாற்பது நிமிடங்கள் தான் கூடும். மேலும், சில தகவல்களை உன்னிடம் நான் இன்னும் சொல்லவில்லை. குறிப்பாக, சீமாவின் ‘பிக்காசோவின் ஆந்தை’ ஒளிப்படத்திலும், பிக்காசோவின் ‘வாழ்வின் பெருமகிழ்வு’ ஓவியத்திலும், இருக்கும் சிறப்பம்சம் மற்றும் அவற்றிற்கிடையே இருக்கும் நுண் தொடர்பு குறித்தும் நான் எதுவும் சொல்லவில்லை”, லியோனல் தன் புன்னகையில் கொண்டு வந்த புதிர் எனக்கு ஸ்வாரஸ்யத்தை மேலும் கூட்டியது.

நாங்கள் திரும்பி நடக்கத் தொடங்கிய போதும் லியோனல் பேசிக் கொண்டே தான் வந்தான். “பிக்காசோவின் வழக்கமான பாணியான க்யூபிசம் மற்றும் பரிசோதனை பாணியிலான வடிவியல் சார்ந்த  ஓவியங்களும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. இவை போக இங்கே பிக்காசோவின் வண்ணமயமான சிற்பங்கள், விகடகவித்துவத்துடன் அலங்கரிக்கப்பட்ட பாத்திரங்கள், சுவர் மற்றும் தரையின் ஓட்டு ஓவியங்கள் ஆகியவையும் உள்ளன. மேலும் இங்கே அவர் உருவாக்கிய முக்கியமான பீங்கான் படைப்புகளும் உள்ளன. அந்தப் பீங்கான் ஓவியச் சிற்பங்களை அவர் உருவாக்கியது, ‘வெலூரி’ எனும் இடத்திலிருந்த ‘மடூரா’ எனும் பட்டறையில். வெலூரி என்பது ஆன்டீபில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள ஒரு நகராட்சி. பீங்கான் தயாரிப்பிற்கு ரோமானியர்களின் காலத்திலிருந்தே புகழ் பெற்ற இடம் அது.”

“எனக்கு இப்போதே கிளம்பி அங்கே போய் அந்தப் படைப்புகளையெல்லாம் பார்க்க வேண்டும் போல இருக்கிறது.”

“1946இல், கோல்ஃப்-ஜுவானில், தனது நண்பர் ‘லூயி ஃபோர்ட்’ என்பவருடன் வெலூரியில் உள்ள மட்பாண்ட கண்காட்சியைப் பார்வையிடச் சென்றார் பிக்காசோ. அங்கே, ‘மடூரா’ என்ற விற்பனையகத்தால் கவரப்பட்டு அதன் உரிமையாளர்களான ‘சுசேன்’ மற்றும் ‘ஜார்ஜ் ராமியே’ தம்பதியரைத் தனக்கு அறிமுகப்படுத்தும்படிக் கேட்டார். அந்தத் தம்பதியர், பிக்காசோவை வெலூரியில் உள்ளத் தங்களின் மட்பாண்டப் பட்டறைக்கு அழைத்தனர். அங்கு பிக்காசோ சில பீங்கான் மற்றும் மட்பாண்டப் படைப்புகளை உருவாக்கிப் பார்த்தார். அந்தப் படைப்புகள் அவருக்கே திருப்தி அளிக்க, தான் அங்கேயே தங்கியிருந்து படைப்புகளை உருவாக்க அவர்களிடம் அனுமதி கோரினார். அவர்கள் அந்த விண்ணப்பத்தை ஒரு பாக்கியமாகக் கருதி ஒப்புக் கொண்டு, அவருக்கு ஒரு பட்டறையையே உருவாக்கிக் கொடுத்தனர். ‘சுசேன்’, மட்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பாத்திரங்களின் உருவாக்கத்தின் தொழிற் சூத்திரங்களைப் பிக்காசோவிற்குக் கற்பித்தார். பிக்காசோ அந்தத் தொழில் ரகசியங்களையெல்லாம் கலையின் உன்னதங்களாக்கிப் படைப்புகளாக வெளிப்படுத்தினார். காளைப் போர், ஆடுகள், ஆந்தைகள், மீன்கள் எனப் பலவாறு அந்தப் படைப்புகள் உருவாக்கம் கொண்டன.”

“ஆன்டீபில் பிக்காசோ உருவாக்கிய படைப்புகள் போக, பரிசுகள் மற்றும் நன்கொடைகள் மூலம் அருங்காட்சியகத்தின் சேகரிப்பு மேலும் வளர்ந்தது. இப்போது அங்கே பிக்காசோவின் 245 படைப்புகள் காட்சிக்கு இருக்கின்றன. டிசம்பர் 27, 1966 அன்று, பிக்காசோ என்ற அந்த மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செலுத்துவதற்காக, கிரிமல்டி கோட்டை, பிக்காசோ அருங்காட்சியகமாக உருமாறியது.”

விட்டுச் சென்ற எங்கள் காஃபிக் கோப்பைகளை எடுத்துக் கொண்டு போய் கழுவி எங்கள் அலமாரிகளில் வைத்து விட்டு ‘சேன் இச்சிக்காவின்’ சந்திப்பிற்கு எங்கள் ‘சிஸ்கோ வெப்பெக்ஸ்’ செயலியைத் திறந்தோம். சந்திப்பு முடிந்து மற்ற வேலைகளும் முடிந்து கிளம்பி அலுவலகத்தின் வாசலில் அடையாள அட்டையைக் காட்டி வெளியேற மாலை ஆறு மணி ஆகிவிட்டது.

“நீ இங்கேயே நில். நான் என் காரை எடுத்துக் கொண்டு வருகிறேன்.”, என்றான் லியோனல்.

“எங்கே கீழே ‘எம்.எல்.பி.-இல்’ வைத்திருக்கிறாயா …”

“ஆமாம், தினமுக் காலை ஏழு மணிக்குள் அலுவவலகத்திற்கு வராவிட்டால், மேலே, வாகன நிறுத்துமிடம் கிடைக்காது.”

“இரு. நானும் வருகிறேன்.”

இருவரும் அவரவர் மடிக்கணினிப் பைகளை முதுகில் போட்டுக் கொண்டு நடந்தோம்.

“இந்த அருங்காட்சியகத்தை நாள் முழுக்கப் பார்த்தாலும் போதாது போல.”

“ஆமாம், ஆனால் தேர்ந்தெடுத்துப் பார்த்தால் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.”

“அந்த ஓவியமும், அந்த ஒளிப்படமும் குறித்துத் தானே பேசுகிறாய்.”

“ஆமாம் என்னைப் பொறுத்த வரை அவை தான் அங்கே உச்சபட்ச சிறப்பம்சங்கள்.”

“என்ன சிறப்பு, சொல்.”

“பொறு, சொல்கிறேன். நீ ‘அப்சந்த்’ மது அருந்தியிருக்கிறாயா.”

“’அப்சந்த்’ என்று ஒரு மது இருக்கிறதா? நீ எனக்குச் சொல்லவேயில்லையே. பேஸ்டிஸ் மட்டும் தானே நீ அறிமுகப்படுத்தினாய்.”

“பேஸ்டிஸ் போலவே அப்சந்த் மதுவும் சோம்புச் சுவை கூடிய ஒரு மதுவகை தான். ஆனால் சோம்பு பச்சை நிறமாக இருக்கும் போதே இதில் பயன்படுத்துவதால் பேஸ்டிஸ் போல இது தங்க நிறத்தில் இல்லாமல் பச்சை நிறத்தில் இருக்கும். மேலும் அப்சந்தில் சாராயத்தின் விகிதம் மிக அதிகம் – 75% வரை செல்லும் – எனவே கண்டிப்பாகத் தண்ணீர் கலந்து தான் அதை அருந்த வேண்டும்”.

“ம்ஹ்ம்”.

“மிகுந்த போதை தரக் கூடிய மது என்பதால் இது கலைஞர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. இதைக் கொஞ்ச காலம் தடை கூடச் செய்திருந்தார்கள். அப்புறம் எல்லா மதுவகையும் பெரும்பாலும் ஒரே பாதிப்புகளையே தரும் என உணர்ந்து, தடையை நீக்கிவிட்டார்கள்.”

லியோனல் ஒரு தகவல் களஞ்சியம். எது குறித்தும் அவனிடம் பேச முடியும். அவன் ஞாபக சக்தி வேறு மிக அபாரமானது.

“பிக்காசோ அப்சந்த் மதுவை தன் ரெண்டு ஓவியங்களிலும் ஒரு சிற்பத்திலும் முதன்மைப் படுத்தியிருக்கிறார்.”

“அவை இந்த அருங்காட்சியகத்தில் காணக் கிடைக்குமா.”

“இல்லை. இதைச் சும்மா ஒரு தகவலுக்குச் சொன்னேன். மேலும் வின்சன்ட் வான் கோ அப்சந்த் மதுவை மிக அதிகமாக அருந்திவிட்டு வரைவார். அவர் தன் காதை வெட்டிக் கொண்ட போது அப்சந்த் அளவு மீறி அருந்தியிருந்ததாகச் சொல்வார்கள்.”

“ஓஹ்”.

“மாயத் தோற்றங்களை எளிதில் உருவாக்கிவிடும் மது என இதைச் சொல்வார்கள்.”

“நீ அருந்தியிருக்கிறாயா. விலை அதிகமா.”

“ஒரு பாட்டில் நல்ல பேஸ்டிஸ் முப்பது ஈரோக்களுக்குக் கிடைக்கும் என்றால் அபசந்த ஐம்பது ஈரோக்களுக்குக் கிடைக்கும். நான் நான்கைந்து முறை அருந்தியிருக்கிறேன்.”.

“மாயத் தோற்றங்கள் உனக்கு வந்தனவா?”.

“ஆமாம். இந்த உலகிலேயே என் மனைவி தான் மிக அன்பான பெண் என எனக்குத் திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டே இருந்தது. அவளுக்குப் பச்சை வண்ணச் சிறகுகள் முளைத்து, ஒரு புனித தேவதை ரூபம் கொண்டு, ஒரு கொசு, அல்லது ஈ போல என் மீது மொய்த்துக் கொண்டே இருந்தாள்.”.

இதற்கு என்ன மாதிரி எதிர்வினையாற்றுவது எனப் புரியாமல் நான், “மெடிட்டரேனியன் கடல் எப்போது எங்கே வைத்து எப்படி ஒரு மனநிலையில் பார்த்தாலும் அழகாத் தான் இருக்கும் போல, அங்கே பாரேன்”, என்றேன்.

லியோனல் நான் சொன்ன திசையில் பார்த்து “ஹ்ம்”, என்றான்.

தன் ‘ப்பூஜோ’ காரைப் பின்னோக்கி நகர்த்திக் கொண்டே லியோனல் சொன்னான், “இந்த அருங்காட்சியகத்தில் ஒரு புத்தகக் கடையும், ஒரு கலைப் பொருட்கள் விற்பனை அங்காடியும், ஒரு காஃபிக் கடையும் கூட உள்ளன. மேலும் இதன் மேல் தளத்தின் மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் மெடிட்டரேனியன் கடலின் பரந்த விரிந்த காட்சிகள் நம்மை விழுங்கிவிடும் வசீகர ஆழத்துடன் தென்படும்.”

அதற்குப் பிறகு நாங்கள் கார் நிறுத்தத்தை விட்டு வெளியே வந்து ஒரு தளம் மேலேறி எங்கள் அலுவலக வாசல் தாண்டும் வரை எதுவும் பேசவில்லை.

வாசலைத் தாண்டியதுமே லியோனல் ஆரம்பித்தான், “ஆன்டீபில் ஒரு அப்சந்த் மதுக்கூடம் இருக்கிறது. ஒரு அப்சந்த் அருங்காட்சியகம் கூட இருக்கிறது. விரும்பினால், நேரம் இருந்தால், நீ அங்கே செல்லலாம்.”

“விருப்பம் அல்ல நேரம் தான் பிரச்சனையாக இருக்கும்”.

“ஆமாம். நேரம் மட்டும் தான் எல்லோருக்கும் பிரச்சனை – இருக்கிறவனுக்கும் இல்லாதவனுக்கும் கூட.”

அதற்குப் பிறகு சிறிது நேரம் நாங்கள் எதுவும் பேசவில்லை.

பாதித் தூரம் மேல் போனதும் லியோனல் ஆரம்பித்தான், “பிக்காசோவிற்குப் பிறகு வந்த நவீன படைப்பாளிகளின் படைப்புகளும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றிருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சம். என்ன தான் பிக்காசோ அருங்காட்சியகம் என அழைக்கப்பட்டாலும், இருபதாம் நூற்றாண்டின் சில முக்கிய நவீன படைப்பாளிகளின் ஓவியங்களும் சிற்பங்களும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன. மொட்டை மாடியின் உப்பரிகையில் சிற்பங்களும், கீழ்த்தளத்திலும், முதல் தளத்திலும் ஓவியங்களும் பிற படைப்பாளிகளுடையவை. இரண்டாவது தளம் முழுக்கப் பிக்காசோவின் படைப்புகள் தான்.”

“சரி. அந்தப் பிக்காசோவின் ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் அப்படி என்ன ஒரு சிறப்பியல்பை நீயும் ஆல்டியாவும் உணர்ந்து கொண்டீர்கள்.”

பதில் சொல்லாமல் வண்டியை ஓட்டிக் கொண்டே போன லியோனல் கொஞ்சம் நேரத்தில் புன்னகைத்தபடியே தன் காரை என் விடுதி வாசலின் முன் நிறுத்தினான். இறங்கி, கார் கதவை மூடிவிட்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். எனக்கும் ஒன்று நீட்டினான். நான் அந்தச் சிகரெட்டை மறுத்துவிட்டு அவன் முகத்தைச் சற்றுத் தீவிரமாகப் பார்த்தேன். அவன் எதுவும் பேசாமல் புகைக்கலானான். நான் காத்திருந்தேன். பிறகு, ஏதோ கடைசியாகப் புகைக்கப் போவதான ஒரு பாவனையுடன் மீதமிருந்த சிகரெட்டை, பசி தீராத சிசு, முலைப் பாலின் இறுதிச் சொட்டினை உறிஞ்சுவது போல அந்தச் சிகரெட்டைக் குடித்து முடித்துவிட்டுக் கீழே எறிந்தான். நான் அதை மிதித்துத் தேய்த்து அமைதியாக்கினேன்.

“சரி லியோனல், நேரம் மாலை ஏழு முப்பது. நீ கிளம்பு. திங்கட்கிழமை சந்திக்கலாம்.”

லியோனல் அப்போது என்னிடம் சொன்னது அந்தப் ‘பிக்காசோ புதிரின்’ ஸ்வாரஸ்யத்தை மேலும் அதிகரித்தது. நாங்கள் விடைபெற்றோம். விடுதிக்குச் சென்று, குளித்து, உடை மாற்றி, இரவு உணவு உண்டு, மிகவும் களைத்துப் போய் அந்த வெள்ளியிரவைத் தூங்கிக் கடந்தேன்.

அடுத்த நாள் காலை எழுந்து போய் விடுதி வழங்கிய இலவசச் சிற்றுண்டிக்கு ஒரு ஃப்ரெஞ்சு ஆம்லெட் மற்றும் சில சாசேஜ்கள் சாப்பிட்டதுமே எனக்கு என் அந்த வார இறுதியின் பயணத் திட்டம் துலங்கப் பெற்றது. லியோனல் சொன்ன அந்த ஒன்பது ஓவியக் கலைக்கூடங்களையுமே நான் அந்த வார இறுதியே பார்வையிட விரும்பினேன், ஆனால் ஒரு நாளில் அவ்வாறு செய்வது நடைமுறைக்கு மாறானது என்று எனக்குத் தெரியும். எந்தவொரு அருங்காட்சியகத்திலும் கிட்டத்தட்ட அரை நாள் எளிதாகச் செலவிடுவது எனக்கு வழக்கம் என்பதால் நான் லியோனல் சொன்ன அந்த அருங்காட்சியகங்களின் பட்டியலிலிருந்து கவனமாகக் குறைத்து இரண்டு இடங்களை மட்டும் தேர்வு செய்ய முடிவெடுத்தேன்.

ஆம். உண்மையில் என்னிடம் ஒரு நாள் தான் கையிலிருந்தது. என்ன தான் லியோனல் உதவி செய்ய வாக்குறுதி அளித்திருந்தாலும் அந்த அறிக்கைகளின் அடிப்படை உள்ளடக்கத்தை நான் தான் முன்பே தயாரித்து வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டும் என்பது என் அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம். அதற்கு நிச்சயம் எனக்கு ஒரு நாள் தேவைப்படும்.

வெளிநாட்டுப் பயணங்களில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரோப் பயணங்களில், பல நடுத்தர வர்க்க இந்தியர்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்வது போன்றே நானும் இருக்கப் பழகியிருந்தபடியால், அருங்காட்சியகங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை விதிகளாக நான் இரண்டே விஷயங்களைத் தான் வகுத்துக் கொண்டிருந்தேன். சிக்கனத்தின் பொருட்டு, நுழைவுக் கட்டணங்கள் நான் செல்லும் நாட்களில் இலவசமாக இருக்க வேண்டும் அல்லது அதிகபட்சம் மூன்று யூரோக்கள் – இந்தியப் பண மதிப்பில் தோராயமாக இருநூற்றுச் சொச்சம் ரூபாய்கள் வரை அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். தவிர, அந்த அருங்காட்சியகம் எந்த ஓவியரின் படைப்புகளைக் காட்சிப்படுத்துகிறது என்பதும் முக்கியம்.

ஒரு மணி நேர இணைய அலசலுக்குப் பிறகு, என் இறுதிப் பட்டியலில் வந்து சேர்ந்தவை, மார்க் ஷெகால் தேசிய அருங்காட்சியகம் – ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அனைவருக்கும் அனுமதி இலவசம் மற்றும் ம்யூஸே பிக்காசோ – ஒவ்வொரு மாதமும், முதல் வாரம், செவ்வாய் முதல் ஞாயிறு வரை அனைவருக்கும் அனுமதி இலவசம்.

என் செல்பேசியில் தேதியையும் நேரத்தையும் பார்த்தேன். 02 ஜூலை 2016 காலை பத்து மணி நாற்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. என் அலுவலகப் பணியினை இன்று சனிக்கிழமை முடித்துவிட்டு நாளை ஞாயிற்றுக் கிழமை அந்த இரு அருங்காட்சியகங்களையும் பார்க்கச் செல்லலாம் என முடிவெடுத்தேன். அதிலும் குறிப்பாக அந்தப் பிக்காசோவின் அருங்காட்சியகம் என்னை மிகவும் வசீகரித்தது. அதற்கு மூன்று காரணங்கள் – பிக்காசோ எனக்குப் பிடித்த ஓவியர்களுள் ஒருவர் மற்றும் அந்த அருங்காட்சியகம் குறித்து லியோனல் சொன்ன அதன் வரலாறு மற்றும் அந்த ஒளிப்படம் மற்றும் ஓவியம் குறித்து அவன் என்னிடம் போட்ட புதிர்.

நேற்று லியோனல் என்னை விட்டுச் செல்லும் போது சொன்னவை நினைவில் மலர்ந்தன. “அந்த ஒளிப்படத்திலும், ஓவியத்திலும் நாங்கள் கண்டு கொண்டதை நீயும் சுயமாகக் கண்டுபிடித்தால் தான் நான் மகிழ்வேன். ஆல்டியாவும் என்னிடம் இது பற்றி முதலில் சொன்ன போது அந்த உண்மையை நானே கண்டறிய வேண்டும் என்று தான் விரும்பினாள். பிறகு நான் உணர்ந்ததும் அவள் உணர்ந்ததும் ஒன்றே தான் என அறிந்த போது பெருமகிழ்வாக இருந்தது”, எனத் தன் புன்னகையைப் பின்விட்டுத் தன் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றான்.

கடைசிவரை அந்த ஒளிப்படத்திலும், ஓவியத்திலும் உள்ள செய்தி என்ன என அவன் சொல்லவேயில்லை. ஒரு புதிரை நாமே அவிழ்த்தால் அதன் மகிழ்வே தனி தான். இணையத்தில் இது குறித்துத் தேடிப் பார்க்கலாம் என முதலில் நினைத்துப் பின் உண்மையை அதன் குகைக்குள் சென்று தரிசிப்பது தான்  சாகசம் மற்றும் சந்தோஷம் என விட்டு விட்டேன்.

மடிக்கணினியைத் திறந்து என் அலுவலகப் பணிகளைக் கவனிக்கத் துவங்கினேன். ஜப்பேன் விமானச் சேவை நிறுவனத்திற்காக எங்கள் நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கும் புதிய மென்பொருள் உருவாக்கத் திட்டப்பணியில் வாடிக்கையாளருக்கு அனுபவ முதலீட்டின் மீதான வருவாய் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைக் காட்சிப்படுத்த சில விளக்கப்படங்களை உருவாக்கத் தொடங்கினேன். வேலை என்னை உள்ளிழுத்து உறிஞ்சிக் கொள்ள, மதியம் சாப்பிட மறந்திருந்ததை மாலை ஏழு மணிக்குத் தான் உணர்ந்தேன். பசித்தது. இன்னும் சில முக்கிய விளக்கக்காட்சிகளைச் சேர்த்துவிட்டால் போதும் ஜப்பேனிய வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக இதையே காண்பித்து விடலாம் எனும் அளவு நம்பிக்கை வந்துவிட்டது. ஆனால் அந்தச் சில முக்கிய தகவல் காட்சிப்படுத்தல்களை முடித்தே தீர வேண்டும். அதுவும் இன்றிரவே. அப்போது தான் நாளை நிம்மதியாக ஷெகாலையும் பிக்காசோவையும் காணச் செல்ல முடியும்.

இரவு உணவை முடித்துவிட்டு வந்து மிச்ச வேலையை முடிக்கலாம் என நினைத்து அறையின் சாவியை மறக்காமல் எடுத்து வைத்திருக்கிறேனா எனப் பார்க்க என் பணப்பையைத் திறந்தேன். பலமுறை அறைச் சாவியை எடுக்காமல் தானாகப் பூட்டிக் கொள்ளும் கதவினைச் சாத்தி விட்டுப் போய் திரும்ப வந்து திகைத்து விடுதியின் வரவேற்பறைக்குச் சென்று அங்கு இருக்கும் பணிப்பெண்ணிடம் விஷயத்தைச் சொல்லி ஒரு புதிய சாவியைப் பெற்றுக் கொள்வது என் வழக்கம்.

அந்த வரவேற்பாளப் பணிப்பெண்கள் ஒன்று வேலையாக இருப்பார்கள் இல்லை சோம்பலாக இருப்பார்கள். ஒரு போதும் முதன்மைத் திறவுகோல் அட்டையை எடுத்துக் கொண்டு மேலே என்னுடன் வந்து கதவைத் திறந்து கொடுத்ததேயில்லை. ஒரு புதிய மின்-திறவுகோலை உருவாக்கித் தருவது அவர்களுக்குத் தங்கள் இருக்கையிலிருந்து எழுவதை விடச் சுலபமான வேலை மற்றும் குறைவான நேரச் செலவு போல. மேலும் அந்தப் பணிப்பெண்கள் எல்லோரும் என் அந்த கவனக்குறைவான பழக்கத்தைக் கண்கள் சுருங்கிய ஒரு புன்னகையுடன் கடந்தார்களே ஒழிய, என்னை இதுவரை கடிந்து கொண்டதில்லை. இப்போதே இதுவரை என்னிடம் என் அறைக்கு மூன்று சாவிகள் இருக்கின்றன. கிளம்புவதற்குள் இன்னும் எத்தனை சேகரிப்பேனோ.

பணப்பையில் ஒரு மின் திறவுகோல் அட்டை இருந்தது. மற்ற இரண்டு சாவிகளும் அலமாரியில் இருக்கும். அந்தப் பையை மூடும் போது தான் கவனித்தேன்; இந்த விடுதி நிர்வாகம், வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் முதல் நாள் வருகையின் போது, விடுதியின் மதுக்கூடத்தில் இலவசமாக ஏதாவது பானம் ஒன்றினை அருந்தும் பொருட்டு, சீட்டு ஒன்றினைத் தரும். அதை, ஒரு முறை மட்டும், அங்கே தங்கியிருக்கும் காலத்திற்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  எனக்கும் அந்தச் சீட்டு கிடைத்திருந்தது. சரி இலவசம் என்பதால் ஏதாவது ‘மாக்டெய்ல்’ வகைப் பழச்சாறு தருவார்கள், அதை அருந்தலாம் என நினைத்துக் கொண்டு, விடுதியின் மதுக்கூடத்திற்குச் சென்று அமர்ந்தேன்.

விடுதியின் மதுக்கூடத்தில் அன்றைக்கு இருந்த பணிப்பெண் என்னைப் பார்த்துப் புன்னகைத்து “போன்ஸ்வா”, என்று ஃப்ரெஞ்சில் மாலை வணக்கம் சொன்னார்.

நானும் “போன்ஸ்வா”, எனச் சொல்லிவிட்டு அந்தச் சீட்டை நீட்டியதும், அவர், “என்ன மது வேண்டும்”, என்றார்.

நான் ஆச்சரியத்துடன், “இந்த இலவசச் சீட்டுக்கு மதுவே கிடைக்குமா, ஏதாவது பழச்சாறு தான் கிடைக்கும் என்றல்லவா நான் நினைத்திருந்தேன்”, என்றேன்.

அவர் புன்னகையுடன், “உங்களுக்குப் பழச்சாறு தான் வேண்டும் என்றாலும் தருகிறேன்”, என்றார்.

“இல்லை. எனக்கு மதுவே கொடுங்கள். இந்த மது வகைகள் தான் இந்தச் சீட்டுக்குத் தரப்படும் என ஏதும் கட்டுப்பாடு இருக்கிறதா இல்லை எந்த மது வகையும் பெற்றுக் கொள்ளலாமா”, எனக் கேட்டேன்.

“எந்த மதுவும் சம்மதம். உங்களுக்கு என்ன வேண்டும்.”

“பேஸ்டிஸ்!”, எனச் சொன்ன போது தான் கவனித்தேன், அங்கே ‘அப்ஸந்த்’ மதுவும் என்னை அருந்தவோ அமைதி காக்கவோ என்றழைத்தபடி அமர்ந்திருந்தது. லியோனல் அப்ஸந்த் குறித்துச் சொன்ன தகவல்கள் நினைவிற்கு வர, மீண்டும் “பேஸ்டிஸ்”, என்றேன்,

“ஹ்ம், சரி பேஸ்டிஸ். ‘சிங்கள் ஷாட்டா டபுள் ஷாட்டா’.”

“டபுள்.”

முதலில், ஒரு சிறிய தட்டில் வினிகரில் ஊற வைத்த பச்சை மற்றும் கருப்பு ஆலிவ் பழங்களையும், இன்னும் ஒரு சிறிய தட்டில் வறுத்த நிலக்கடலைகளையும் என் மேசைப் பக்கம் வைத்துவிட்டுப் பிறகு பேஸ்டிஸ் மதுக் குவளை, பனிக்கட்டிகள் கொண்ட பாத்திரம், ஒரு குவளை நீர் ஆகியவற்றையும் அருகில் இட்டார் அவர். அதை அருந்தியதுமே யோசித்தேன் – பேஸ்டிஸ் மதுவை அறுபது மில்லியுடன் நான் என்றுமே நிறுத்தியதில்லை. ஆனால் முடிக்க வேண்டிய அலுவலகப் பணி கிடக்கிறதே. ஹ்ம். சரி, இன்னும் அறுபது மில்லி பேஸ்டிஸ் மட்டும் அருந்திவிட்டு, இரவு உணவை முடித்துவிட்டுப் போய் அலுவலகப் பணியை முடித்துவிட்டு உறங்கலாம் என முடிவெடித்தேன். நாளை காலை ஷெகாலையும் பிக்காசோவையும் காணச் செல்ல வேண்டும்.

கழுவிய கண்ணாடிக் குவளைகளைத் துணியால் துடைத்துக் கொண்டிருந்த அந்தப் பணிப்பெண்ணிடம், “‘எக்ஸ்க்யூசே மா’, எனக்கு இன்னும் அறுபது மில்லிகள் பேஸ்டிஸ் வேண்டும். நான் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்கிறேன்”, என்றேன்.

விழிப்பு தட்டிய போது ஜன்னல் திரைச்சீலையை மீறிச் சூரிய வெளிச்சம் அறையில் பரவிக் கிடந்ததை உணர்ந்தேன். செல்பேசியை எடுத்து மணி பார்த்தேன். ஞாயிறு மதியம் 1:12. என்னது! ஒரு நொடி வெறுமையை உணர்ந்து மீண்டேன். போர்வையை விலக்கி எழுந்து நேற்றிரவு என்ன நடந்தது என நினைவிற்குக் கொணர முயன்றேன். இரண்டு அறுபது மில்லி பேஸ்டிஸ் தானே அருந்தினேன். அதற்கு இவ்வளவு தூக்கம் வராதே. நேற்றிரவு அருந்திய மது பானத்திற்கான ரசீதை எடுத்துப் பார்த்தேன். கடவுளே! இரண்டாவது அறுபது மில்லி பேஸ்டிஸுடன் நான் நிறுத்தியிருக்கவில்லை. மேலும் நான்கு முறை அறுபது மில்லிகளாக அருந்தியிருக்கிறேன். அதுவும் வெறும் ஆலிவ் பழங்கள் மற்றும் வறுத்த நிலக்கடலைகள் மட்டுமே உண்டு. இரவு உணவு உண்ணவேயில்லை.

அறைக்குத் திரும்பியவுடன் அலுவலகப் பணியைத் தொடர்ந்து செய்ததும் நினைவிற்கு வர, அப்படி என்ன தான் வேலை பார்த்து முடித்தேன் என அறிய ஆவலுடன் மடிக்கணினியைத் திறந்து பார்த்ததில், தொண்ணூறு சதவிகிதம் வேலையை முடித்திருக்கிறேன் எனத் தெரிந்தது. ஒரே ஒரு முக்கிய விளக்கப்படம் மட்டும் தான் பாக்கி. ஜப்பேனிய நிறுவனத்திற்காக எங்கள் நிறுவனம் உருவாக்கும் மென்பொருளைச் சந்தைக்குள் கொண்டு போகும் வெவ்வேறு நிலைகளில், மதிப்புக் கூட்டல் என்பதை, எவ்வாறு எங்கள் ஆய்வு முன்னேற்ற அமைப்பு, புதிய தொழில் நுட்பங்கள், ஆராய்ச்சி மேம்பாடுகள், நூதன செயல்முறைகள் மற்றும் புதுமைகள் மூலம் சேர்க்கும் என்பதையும், அதனால் வாடிக்கையாளர் அடையப் போகும் பலன் எவ்வாறு இருக்கும் என்பதையும் வெறும் தகவல்களாக அல்லாமல் ஒரு சரியான இறுதி வரைபடம் மூலம் காட்சிப்படுத்த வேண்டும். அதற்கு எந்த வரைபடம் உபயோகப்படுத்துவது எனப் புரியாமல் விட்டு வைத்திருக்கிறேன்.

நாளை லியலோனலுடன் ஆலோசித்துத் தான் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் போல. இப்போது என்ன செய்யலாம், ஷெகால் மற்றும் பிக்காசோ அருங்காட்சியகங்கள் செல்ல நேரம் இருக்குமா என யோசித்தவாறே மணி பார்த்தேன். மதியம் 1:35. ஹ்ம், நிச்சயம் இரண்டு அருங்காட்சியகங்களையும் இன்று காண முடியாது. பிக்காசோ தான் நமக்கு முக்கியம். அருங்காட்சியகம் நடை சாத்த இன்னும் நேரம் இருக்கிறது. போய்ப் பார்த்துவிடலாம். இல்லாவிட்டால் ஆன்டீப் கடற்கரையிலும் அதன் பழைய நகரத்திலும் ஒரு நடைப்பயணம் சென்று திரும்பலாம். வெளிநாட்டிற்கு வந்து ஒரு வார இறுதி முழுக்க அறைக்குள் அடைந்து கிடப்பதை விட அது மேல்.

கீழே போய் விடுதியின் உணவகத்தில் ஒரு வேகவைத்த சாலமன் மீன் துண்டுடன் கொஞ்சம் உருளைக்கிழங்கு மசியல் சாப்பிட்டபடியே கூகிள் வரைபடத்தில் திசை தேடியபோது, ‘லீன்யஸ் த’அஸுர்’ எனும் அரசாங்கத்தின் சாதாப் பேருந்து எண் 200 இங்கிருந்து ஆன்டீப் செல்லும் எனவும் அதற்கு ஒன்றரை ஈரோக்கள் தான் செலவாகும் ஆனால் வேடிக்கை காட்டியபடியே அது ஒரு மணி நேரப் பயணம் செல்லும் என்றும் தெரிந்தது. வாடகைக் காரில் சென்றால் இருபது நிமிடங்களில் அருங்காட்சியகத்தின் வாசலில் இருக்கலாம்; ஆனால் அதற்கு அறுபது ஈரோக்கள் வரை கூட ஆகும் எனவும் தெரிந்தது. ‘எஸ்.என்.சி.எஃப்.’ – ‘சொசைட்டி நேஷனல் டெஷ் ஷெமென் டெ ஃபெர் ஃப்ரான்சே’ எனும் ஃப்ரெஞ்சு அரசின் ரயில் நிறுவனத்தின் மார்க்கம் தான் கட்டணம் குறைந்ததும், விரைவானதும் எனத் புரிந்தது; ஒருவழிப் பயணத்திற்கு நான்கரை ஈரோக்கள் தான் செலவாகும்.

என் விடுதியின் இருப்பிடத்தின் அருகிலேயே இருந்த ‘சேன் லாரான் டு வேர்’ ரயில் நிலையத்திற்கு இங்கிருந்து பத்து நிமிட நடை தான். அந்த ரயில் நிலையத்திலிருந்து ‘கார் த’ஆன்டீப்’ ரயில் நிலையம் செல்லப் பதினெட்டு நிமிடங்கள் தான். அங்கிருந்து பிக்காசோ அருங்காட்சியகம் செல்லப் பதினைந்து நிமிட நடை தான். நேரம் பார்த்தேன். மணி மதியம் 2:35. இன்னும் அரை மணி நேரத்தில் ஒரு ரயில் வர இருக்கிறது.

அடுத்த நாற்பது நிமிடங்களில் நான் ஆன்டீப் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி நடக்கத் துவங்கியிருந்தேன். வெய்யில், ஆன்டீப் நகரத்தின் மீது அரூபத் தங்கமாகத் தகித்து ஜொலித்துக் கொண்டிருந்தது. யாரிடமும் வழி கேட்கத் தேவையில்லாமல், செல்பேசியில் சேமித்திருந்த கூகிள் வரைபடத் திரைப்பிடிப்பின் உதவியுடனேயே நடந்தேன். சாலையின் வலதுபுற நடைமேடையிலேயே கூகிள் நடக்கச் சொன்னது. அப்படியே செய்தேன்.

வழியில், ‘சவுத்ராப் & பென்சன்’ எனும் பெயர் கொண்ட ‘யாட்’ வகைப் படகு விற்பனை நிறுவனத்தின் வாயிலில் மட்டும் சில நிமிடங்கள் செலவிட்டேன். அதற்குக் காரணம் அந்தக் கடையின் கண்ணாடிச் சுவருக்குப் பின்னே அவர்கள் காட்சிக்கு வைத்திருந்த ‘யாட்’ படகுகளின் மிகத் தத்ரூபமான சிற்றுருவ மாதிரிகள். அதில் அற்புத அழகுடன் இருந்த ஒரு படகின் பெயரையும் விலையையும் பார்த்தேன். ‘எஸ்.ஏ.ஆர்.பி. 46எம்’ – வரிகள் நீங்கலாக 22,500,000 ஈரோக்கள் என்றிருந்தது – இந்திய ரூபாய் மதிப்பில், ஒன்றரை கோடி ரூபாய்களுக்கு மேல் வரும். ஹ்ம். நடையைக் கட்டினேன்.

ஆன்டீபின் பழைய நகரத்தின் கோட்டையின் உயர்ந்த மதில்கள் தென்படத் தொடங்கின. ‘வியல் வில்’ எனப்படும் பழைய நகரத்தின் நுழைவாயிலில் இருந்த சுவர் கடிகாரத்தில் மணி 3:45 காட்டியது. ‘கூர் மசீனா’ எனும் சாலையில் என் கால்கள் பட்டதுமே என் புத்திக்கு வழி துலங்கி விட்டது. அதுவரை, சரியான பாதையில் தான் செல்கிறோமா எனச் சற்றுச் சந்தேகமாகத் தான் நகர்ந்து கொண்டிருந்தேன். ‘மார்ஷே ப்ரொவென்சல்’ என்று அழைக்கப்படும் அந்த மாகாணத்தின் சந்தையை அடைந்தேன். மலர்கள், பழங்கள், உணவுப் பண்டங்கள், வாசனைத் திரவியங்கள், கலைப் படைப்புகள், ஆபரணங்கள், இறைச்சி, மது எனப் பல்வேறு பொருட்களின் கடைகளை ஒரு நிமிடப் பார்வையில் கடந்து இடது புறம் திரும்பினேன். அடுத்த இரண்டு நிமிட நடையின் முடிவில், என் எதிரே, ஆன்டீபின் தேவாலயம் தென்பட்டது; வலது புறம் இருந்த கோபுரத்தில் தேவாலய மணி தெரிந்தது; இடது புறம் பிக்காசோவின் ‘தேவாலயம்’ தெரிந்ததும் பரவசமானேன்.

வேகமாகச் சென்று அருங்காட்சியகத்தின் வாயிலில் நின்றிருந்த சிறு வரிசை மனிதச் சங்கிலித் தொடரின் இறுதியில் என்னையும் இணைத்துக் கொண்ட போது நேரம் மதியம் 4:02. இலவச அனுமதிக்கு ஏன் எல்லோரும் வரிசையில் நிற்கிறார்கள் என யோசித்து, ஒரு வேளை, பதிவேட்டில், அன்றைய தினத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கையைக் குறிப்பிடப் போல என நானே ஒரு முடிவிற்கு வந்தேன்.

என் முறை வந்ததும், அந்த வரவேற்பாளப் பெண்ணைப் பார்த்தேன். அவர் தலை நிமிர்ந்து புன்னகையுடன் என்னைப் பார்த்ததும் நான் முந்திக் கொண்டு  “போன்ஜோர்”, என்றதும் அவரும் பதிலுக்கு “போன்ஜோர்! ஆறு ஈரோக்கள்.” என்றார்.

“…”

மீண்டும் அவர், “ஆறு ஈரோக்கள்”, என்றார்.

நான் சற்று ஆச்சரியத்துடன், “எக்ஸ்க்யூசே மா, இன்று ஞாயிற்றுக்கிழமை தானே”, எனக் கேட்டேன்.

“‘உய்’”, என ஃப்ரெஞ்சில் ‘ஆம்’, என்றார்.

“இன்றைக்கு இலவச அனுமதி என இணையத்தில் பார்த்தேனே.”

ஒரு நொடி அவர் குழம்பிப் பின், “ஆஹ். ஆமாம். செவ்வாய் முதல் ஞாயிறு வரை இங்கே அனைவருக்கும் அனுமதி இலவசம் தான். ஆனால், அந்தச் சலுகை ஃபெப்ருவரி மற்றும் நவம்பர் மாதங்களின் முதல் வாரங்களில் மட்டும் தான். இது ஜூலை மாதம்”, என்றார்.

“ஆஹ். பிக்காசோவையும் இலவச அனுமதியையும் மட்டுமே பார்த்து, இலவசத்தின் காலத்தைக் கவனிக்கத் தவறியிருக்கிறேன்.”

என் முகத்தில் உருவான சிறு ஏமாற்றத்தை அவர் கவனித்திருக்க வேண்டும்.

“ஓஹ். ஆனால், என்னால் உங்களுக்கு மூன்று ஈரோக்கள் விலையுள்ள மாணவர் அனுமதிச் சீட்டை வழங்க இயலும்”, என்றார் பரிவுடன்.

“ஆனால் நான் மாணவன் இல்லையே”, என்றேன் பரிதாபமாக.

“எனினும் நான் உங்களுக்கு மூன்று ஈரோக்கள் விலையுள்ள மாணவர் அனுமதிச் சீட்டை வழங்க இயலும்”, என்றார் மீண்டும்.

“ஆனால், நான் தான் மாணவன் இல்லையே”, என்றேன் மீண்டும்.

அந்த நொடி அவர் என்னைப் பார்த்த பார்வையிலிருந்த ஆச்சரியமும் கேலியும் எனக்குப் புரியச் சில நொடிகள் ஆனது.

“‘மெர்சி, மெர்சி பூக்கூ’”, என ஃப்ரெஞ்சில் ‘நன்றி, மிக்க நன்றி’, என்றபடியே என் பணப்பையைத் திறந்து மூன்று ஈரோக்களை எண்ணி அவரிடம் கொடுத்தேன்.

அப்போது அந்தப் பெண் முகத்தில் தோன்றிய புன்னகை எனக்கு விலை மதிக்க முடியாத ஒரு ஓவியம் போலத் தெரிந்தது. என் நிதி நிலையையும், என் கலை ரசனையையும், பிக்காசோவின் ஓவியங்களின் மீதான என் காதலையும் அவர் கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லை. எனினும் அவரின் குறிப்பறிதலும் எதிர்வினையும் அவரின் உணர்திறனை வெளிக்காட்டியது. நான் மீண்டும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அருங்காட்சியகத்திற்குள் நகர்ந்தேன்.

முதலில் தரைதளத்திலும், பிறகு முதல் தளத்திலும் இருந்த ஓவியங்களைத் தரிசித்தேன். ‘ஹேன்ஸ் ஹார்டங்’ எனும் ஜென்மானிய மற்றும் ஃப்ரெஞ்ச் ஓவியரின் இசைவுகளற்ற தன்மையிலான அரூப ஓவியங்கள் பிரம்மிக்க வைத்தன. அவரின் கோடுகளின் சிதைவுகள் தம் கிறுக்கல்களில் ஒரு ஞான வெளியின் தரிசனத்தைக் கொண்டிருந்தன. இத்துடன் சேர்ந்து, ஹார்டங்கின் மனைவியான ‘அன்னா-ஈவா பெர்க்மென்’ அவர்களின் வெளிப்பாட்டுவாத ஓவியங்களும் சொக்க வைத்தன. ‘சொக்கத் தங்கம்’ என்ற பிரயோகத்தைப் பிரதி எடுத்தது போலத் தெரிந்த அவரின் படைப்பு ஒன்று மிகவும் வசீகரித்தது. ஹார்டங்கின் உயிரில்லாப் பொருட்களின் ஓவியங்கள் மற்றும் அறையிலிருந்து தென்படும் காட்சிகள் வழிப் புறவுலகின் அகவயத்தைக் காட்டும்  ஓவியங்கள் எனப் பலவகையான படைப்புகள், என்னைச் சிலிர்க்க வைத்தன.

பிறகு, முதல் தளத்திற்குச் சென்றதும் தென்பட்ட, ‘நிக்கோலா டெ ஸ்டால்’ எனும் ரஷிய மற்றும் ஃப்ரெஞ்சு ஓவியர் இங்கே செப்டம்பர் 1954 முதல் மார்ச் 1955 தங்கி உருவாக்கிய புகழ் மிக்க அரூப வகையிலான நிலக்காட்சி ஓவியப் படைப்புகள்  மெய் சிலிர்க்க வைத்தன.

பிக்காசோவின் படைப்புகள் அடங்கிய இரண்டாம் தளத்தை இறுதியாகப் பார்க்கலாம் என நேரடியாக மேற்தளத்தின் மொட்டை மாடிக்குச் சென்றேன்.

அங்கே, ‘ஜெர்மெய்ன் ரிஷியேர்’ என்ற ஃப்ரெஞ்ச் சிற்பியின் வெண்கலச் சிலை ஒன்று என் பார்வையை முதலில் கோரியது. அது அவரின் ‘கானக மனிதன்’ எனும் சிலை. ஒரு அருவம் போன்ற மனித உருவம் ஒரு கையால் தன் தலையில் அடித்துக் கொள்வதைப் போன்று அமைக்கப் பெற்று ஒரு கிலேசத்தை மனதில் உண்டாக்கியது அது. மேலும் ‘இலை’ எனும் ஒரு சிலை, ஒரு மனித உருவத்தைச் செதுக்கிக் காட்டி அதை ஒரு இலையின் உருவத்திற்கு ஒப்புமையாக்கி பிரம்மிக்கச் செய்தது.

அடுத்து ‘ஏன் மற்றும் பேட்ரிக் போய்ரியே’ என்ற ஆண்-பெண் ஃப்ரெஞ்ச் கலையுலக ரெட்டையர்களின், கடவுளர்கள் மற்றும் ராட்சதர்களின் போரின் சிதைவினைக் காட்டும் புராணச் செறிவுடன் கூடிய ‘ஜூப்பிடர் மற்றும் என்செலெடஸ்’ என்ற சிலை வித்தியாசமான கவர்ச்சியுடன் இருந்தது. ஜூப்பிட்டர் என்பவர் கடவுளர்களின் கடவுள் – ‘ஸூஸ்’ என்றும் அழைக்கப்படுவார், வானம் மற்றும் இடியின் கடவுள் அவர். ‘என்செலெடஸ்’ ஒரு ராட்சசன். ஸூஸ் அவர்களின் அம்பு ஒரு வெண்கலச் சிலையாகச் சுவரில் குத்திட்டு நிற்க, அருகில் ராட்சதர்களின் கண்கள் இரண்டு உடைந்த வெண்ணிறக் கற்சிலைகளாகக் கட்டிடச் சிதிலங்களுக்கு இடையே கிடக்க, அந்தப் படைப்பு பிரபஞ்ச உயிர்ப்புடன் இருந்தது.

அங்கே காணக் கிடைத்த சிற்பப் படைப்புகள், புராணச் செறிவையும், நவீன உலகின் மீதான விமர்சனப் பிரதி பிம்பங்களையும் காட்டி, கிலேசத்தையும், பிரமிப்பையும் அளித்தன.

இதுவரை கண்ட கலையே போதை தர மெதுவாக இறங்கி இரண்டாவது தளமான பிக்காசோவின் கலைக் கூடத்திற்குள் நுழைந்தேன். என் ஒளிப்படக் கருவியையும், செல்பேசியையும் முதுகுப்பைக்குள் திணித்துக் கொண்டே முன்னகர்ந்தேன். மணி ஏறக்குறைய மாலை ஐந்தாகியிருந்தது. சித்திரங்கள், ஓவியங்கள், கற் சிற்பங்கள், பீங்கான் சிற்பங்கள், பிக்காசோ தன் கலைப் படைப்புகளில் ஈடுபட்டிருக்கும் போதும் மற்ற சில பொழுதுகளிலும் சீமா எடுத்த ஒளிப்படங்கள் என லியோனல் கூறிய மற்றும் கூறாத அனைத்து பிக்காசோவின் படைப்புகளையும் கண்ணுற்றுக் களித்தேன். பிக்காசோ உருவாக்கிக் காட்டியிருந்த அந்த கிரெக்க புராண உலகின் வெளியில் மிதந்தேன். பிக்காசோவின் வடிவவியல் சார்ந்த படைப்புகளில் சிக்குண்டு வெளிவர முடியாமல் தவித்தேன்.

லியோனல் குறிப்பிடாத இன்னும் ரெண்டு பிக்காசோவின் ஓவியங்களும் எனைத் தனித்துக் கவர்ந்தன. முதலாவது – ‘லா ச்செவ்ர்’ எனும் ஓவியம் – ஒரு ஆடு தலை நிமிர்ந்து படுத்தபடி ஓய்வாக இருக்கும் காட்சி – ஆட்டின் தலையும் கழுத்தும் மடக்கிய முன்னங்கால்களும் ஓவியமாகவும், அதன் மீதி உடலும் மடக்கிய பின்னங்கால்களும் கோட்டுச் சித்திரமாகவும் வரையப்பட்டிருந்தன – அந்தக் காட்சியில் தொனிக்கும் ஓய்வின் நிம்மதி என்னுள்ளும் சிறிது பரவியது.

இரண்டாவது – ‘யுலிசஸ் மற்றும் சைரன்கள் (மெர்மெய்டுகள்)’ என்ற ஓவியம் – ‘ஹோமரின்’, ‘ஒடிசி’ எனும் கவிதைக் காவியத்தில் வரும் ஒரு அத்தியாயத்தின் முழுக்காட்சி அது. சைரன்கள் அல்லது மெர்மெய்டுகள் என்பவை கடற்கன்னிகள் – அவை தங்கள் தீவிற்கு அருகில் வரும் கடற்பயணிகளைத் தம் வசீகர இசையாலும் பாடலாலும் கவர்ந்திழுத்துக் கப்பலையே கவிழ்க்கும் ஆபத்தான வல்லமை பெற்றவை என்பதாகக் கிரெக்க புராணத்தில் சொல்லப்படுகிறது. கடற்கன்னிகளின் வசீகரிக்கும் பாடலைக் கேட்க விரும்பினாலும் அவர்களின் மோசவலையில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க, யுலிசஸ், தனது கப்பலின் குழுவினருக்குத் தன்னை கட்டிப் போட்டு விட்டு, அவர்கள் தம் காதுகளை மூடிக்கொள்ளும்படி உத்தரவிடுகிறான் – அப்படித் தங்கள் வசீகரப் பாடலிருந்து யாரேனும் தப்பிவிட்டால் அந்தக் கடற்கன்னிகள் உளம் நொந்து உயிர் விடுவர் என்பதாக வரும் கதை அது – அந்த ஓவியத்தின் வண்ணங்களும் வடிவமும் அவ்வளவு நேர்த்தியுடன் இருந்தன.

மேலும் என்னைக் கவர்ந்த மற்றொரு அம்சம் அந்தப் பறவைகள் மற்றும் விலங்குகளின் பீங்கான் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் – குறிப்பாக ஆந்தைகள் மற்றும் மீன்கள் – ‘ஸூமார்ஃபிசம்’ எனப்படும் கலையியலை வெளிப்படுத்தும், விலங்குகளின் வடிவிலேயே உருவாக்கப்படும், அருமையான சிற்பப் படைப்பு வகைமையைச் சேர்ந்தவை அவை.

அந்தத் தளத்தின் உப்பரிகைக்குச் சென்று அர்மான் என்ற கலைஞனின் ‘ஹோமேஜ் அ பிக்காசோ’ – ‘பிக்காசோவுக்கு மரியாதை’ எனும் கிட்டார் இசைக்கருவிகளின் கூடல் புணர்ச்சியாக உருவாக்கப்பட்ட வெண்கலச் சிற்பத்தைக் கண்டேன். அது எழுப்பிய அதன் ஒத்திசைவின் குணமும் மணமும் என்னை உறையச் செய்தது. இதன் ஒரு விதப் பிரதியாக, வயலின்களின் கூட்டம் ‘பிரமிடாக’ உயர்வதை, நீஸின் பழைய நகரம் அருகே பார்த்தது நினைவிற்கு வந்தது.

பிறகு, இறுதியாக, லியோனல் சிறப்பாகக் குறிப்பிட்ட, அந்த, பிக்காசோ ஆந்தையுடன் நிற்கும் ஒளிப்படம் மற்றும் ‘வாழ்வின் பெருமகிழ்வு’ ஓவியம் ஆகிய இரண்டு படைப்புகளிடமும் இருமுறை சென்று ஒவ்வொரு படைப்பிற்கு முன்னும் ஐந்து நிமிடங்கள் நின்று நிதானமாகக் கவனித்துப் பார்த்தேன். லியோனலும், ஆல்டியாவும் கண்டுகொண்ட அவற்றின் மறைபொருள் இணைவு என்னவாக இருக்கும் என யோசித்தேன். ம்ஹூம். இரண்டாம் பார்வைக்கும் எனக்கு அவற்றில் லியோனலும், ஆல்டியாவும் கண்டுகொண்ட ‘அந்த’ உட்பொருள் பிடிபடவில்லை.

நாளை லியலோனலிடம் தான் இதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் போல எனக் கிளம்பினேன். மணி 5:50, அருங்காட்சியகம் மூடும் நேரம். நுழைவாயிலே வெளியேறும் வாயிலானதால் வந்த வழியே கீழே இறங்கித் திரும்பி நடந்தவன் வாயிலில் ஒரு கணம் நின்று திரும்பி வரவேற்பிடத்தை கவனித்தேன். எனக்கு மாணவர் அனுமதி மூலம் குறைந்த விலையில் சீட்டு கொடுத்த அதே பெண்மணி அங்கே இன்னும் அமர்ந்திருந்தார். நான் அவரைப் பார்த்ததை உணர்ந்து தன் தலையை உயர்த்தி என்னைப் பார்த்தார். பார்த்த அதே கணம் தன் முகத்தை மலர்த்தி ‘என்ன தரிசனம் சிறப்பாக முடிந்தது தானே’, என்பதாகப் புன்னகை புரிந்தார். நானும் பதிலுக்கு ஆமோதித்து ‘நன்றி’, என்பதாக முகவுணர்வு காட்டிப் புன்னகைத்துவிட்டு வெளியேறி, விடுதி திரும்ப ஆன்டீப் ரயில் நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். அந்த ஓவியமும், ஒளிப்படமும் அவற்றில் இருந்த புதிர் குறித்த கேள்வியும் என் மனதில் கூடவே நடந்தபடி வந்து கொண்டிருந்தன.

சற்று தூரம் நடந்தபின் எனக்குச் சட்டென்று அது புரிந்துவிட்டது. ஆம், அது தான் பிக்காசோவின் அந்த ஒளிப்படத்திலும், ஓவியத்திலும் இருக்கும் செய்தி – புன்னகை – பிக்காசோவின் புன்னகை.

‘வாழ்வின் பெருமகிழ்வு’ ஓவியத்தில் வெளிப்படையாகத் தெரியும் அந்தப் புன்னகை, அந்த ‘பிக்காசோவின் ஆந்தை’ ஒளிப்படத்தில் அதன் உக்கிரத்திலும் மறைந்திருக்கிறது. பகலில் தெரியும் சூரியன் இரவில் மறைந்திருப்பது போல, இரவில் தெரியும் நிலவு பகலில் மறைந்திருப்பது போல. புன்னகை எல்லோரிடத்திலும் எல்லா இடத்திலும் எப்போதும் இருப்பது. என்ன அது மலர்ந்திருக்கும் அல்லது மறைந்திருக்கும். காலம் தான் வேறுபடுகிறது, காட்சிகள் அப்படியே தான் இருக்கின்றன. புன்னகை என்பதே அகத்தின் பிறப்பு. உடலின் பிறப்பு தான் அழுகை. புன்னகை என்பது தான் வாழ்வின் பெருமகிழ்வு எனும் கடலின் சிறு துளி. அது தான் தொடக்கம். அது தான் மூலக் கரு. நாடு, மொழி, இனம், குழு, வயது, பணம், மதம் எனப் பல கூறுகளால் வேறுபடும் மனிதனோ அல்லது இன்னும் வேறு பிற வகைகளில் பல வேறுபாடுகள் கொண்டிருக்கும் பிற உயிர்களோ அல்லது உயிரற்ற பொருட்களோ யாவுமே ஒரு புன்னகையைத் தம்மிடம் கிளர்த்தியோ ஒளித்தோ வைத்தே இருக்கின்றன.

உடனடியாக, என் இந்தப் புரிதலை, லியோனலிடம் பகிர்ந்து கொண்டு அவனும் அவன் தோழியும் இங்கே கண்டு கொண்டது இந்தச் செய்தியைத் தானா எனக் கேட்க விழைந்தேன். செல்பேசிக்கு இலவசக் கம்பியில்லா இணையச் சேவை எங்கே கிடைக்கும் என அவ்வப்போது செல்பேசியைப் பார்த்துத் தேடியபடியே நடந்தேன். இல்லாவிட்டால் விடுதி போய் தான் அவனைத் தொடர்பு கொள்ள வேண்டிவரும். அதனால் என்ன. இன்னும் ஒரு மணி நேரம் தான், இல்லாவிட்டால் நாளை நேரில் பகிரலாம். அப்படியே பகிராமல் போனால் தான் என்ன. எனக்கு ஒரு செய்தி கிடைத்ததே. அதன் மூலம் என் வாழ்வின் ஒரு பெருமகிழ்வினை நான் அடைந்தேனே. அது போதாதா.

ஆனால் அந்த ‘சவுத்ராப் & பென்சன்’ என்ற ‘யாட்’ வகைப் படகு விற்பனை நிறுவனத்தின் வாயிலில் இலவச இணையம் கிடைத்துவிட, லியோனலின் வாட்ஸேப் எண்ணுக்கு, ‘ஆன்ட்டீபின் பிக்காசோ தந்த பெருமகிழ்வினை உணர்ந்து கொண்டேன் :)’ என ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தேன். உடனேயே, ‘அற்புதம் :)’ எனப் பதில் வந்தது.

ரயில் நிலையத்தின் தானியங்கி எந்திரத்திடம் பணம் செலுத்திப் பயணச் சீட்டு பெற்றுக் கொண்டு ரயிலுக்குக் காத்திருந்தேன். இணைய உலகின் முதல் எழுத்துச் சிரிப்பானை நேர்முகமாகப் பார்க்கத் தொண்ணூறு பாகைகள் திரையையோ பார்வையையோ திருப்ப வேண்டும். அப்படித் தான் ஒன்றை விளங்கிக் கொள்ள நம் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மணி பார்த்தால் மாலை ஆறரைக்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்தது. அடுத்த ஐந்து நிமிடங்களில் வந்த ரயிலில் ஏறிச் சன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். ரயில் நகரத் தொடங்கியது.

புன்னகை 🙂

ஜப்பேன் விமான நிறுவனத்திற்கு அந்த மதிப்புக் கூட்டல் குறித்த தகவல் விளக்கத்திற்கு எந்த வரைபடம் உபயோகப்படுத்தினால் சரியாக இருக்கும் என எனக்கு விளங்கிவிட்டது. ‘புன்னகை வளைவு’ அல்லது ‘புன்னகைக்கும் வரைபடம்’ எனப்படும் ‘ஸ்மைல் கர்வ்’ அல்லது ‘ஸ்மைல் க்ராஃப்’ தான் அது. எப்போதோ ஒரு பயிற்சிப் பட்டறையில் கற்றுக் கொண்டது, இப்போது நினைவிற்கு வந்து உபயோகப்படுகிறது. அந்த வரைபடத்தின் முதல் வரைவை மனதளவில் உருவாக்கிப் பார்த்தேன். அவ்வளவு திருப்தியாக இருந்தது.

புன்னகை என்பது அதீதமாக இல்லாமல் மிதமாக இருக்கும் சந்தோஷத்தின் அடையாளம். அது தரும் அமைதியும் ஆனந்தமும் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தி பொருந்தியவை போல.

ரயிலின் ஜன்னல் கண்ணாடித் திரை வழியே வெளியே பார்த்தேன். மெடிட்டரேனியன் கடல் இந்த வாழ்வின் பெருமகிழ்வின் கொண்டாட்டம் தரும் சந்தோஷத்தைத் தன் அலைகளின் இதழ்களில் புன்னகைகளாகத் தவழவிட்டபடியே என்னுடன் வந்து கொண்டிருந்தது.


நந்தாகுமாரன்           

[email protected]

Previous articleநைனாரியும் பதின் கரைகளும்.
Next articleநான்காவது சுவர்
Avatar
கோவையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது பெங்களூரில் கணினித் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிகிறார். இலக்கியத்திலும், ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் ஆர்வமுள்ள இவர் பிரதானமாகக் கவிதைகளும் அவ்வப்போது சிறுகதைகளும், கட்டுரைகளும், பயணப் புனைவுகளும் எழுதுகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுதி ‘மைனஸ் ஒன்’, உயிர்மை வெளியீடாக டிசம்பர் 2012-இல் வெளியானது. இவரின் ஆதிச் சிறுகதைத் தொகுதி ‘நான் அல்லது நான்’, அமேசான் கிண்டில் மின்னூலாக ஃபிப்ரவரி 2019-இல் வெளியானது. ‘கலக லகரி: பெருந்தேவியின் எதிர்கவிதைகளை முன்வைத்துச் சில எதிர்வினைகள்’ எனும் ரசனை நூல் அமேசான் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 2020-இல் வெளியானது. இவர் தற்போது, 'ரோம் செல்லும் சாலை' எனும் பயணப் புனைவுப் புதினம் ஒன்றினை எழுதி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.