அம்மும்மாவின் பால்கனித் தோட்டம்
நிறைந்துவிட்டது.
கத்தரி புதினா தக்காளி இருந்தாலும்
அம்மும்மாவிற்கோ ரோஜா பைத்தியம்
வளர்ந்த ஒரு ரோஜாவின்
கிளைமுறித்து கிளைமுறித்து
வேறுவேறு தொட்டிகளில் வளர்த்தெடுத்தாள்.
இனி இடமில்லை என ஆனபின்னும்
குட்டி ரோஜாத் தைகளாய் ஒடித்து
அதன் கீழேயே நட்டுவைத்தாள்.
ஒரு தொட்டியில் இத்தனை நட்டால்
ஒன்றுமே பிழைக்காது என்றதை
அவள் கேட்டமாதிரியில்லை
காய்ந்த ரோஜா பதியன்களுக்கு
தளும்பத் தளும்ப நீர் ஊற்றுகிறாள்
அம்மும்மா உறங்கும் மதியவேளையில்
குத்தி நிற்கும் சுள்ளிகளின் மீது
பூக்களின் நிழல்பரப்பி நிற்கிறது
பெரிய ரோஜாச்செடி
அவள் எழுந்து வந்து பார்க்கிறாள்
மூட்டில் கையூன்றி
உதிர்ந்த இலைகளின் நிழல்களுக்கடியில்
கண்டுபிடிக்கிறாள்
இன்னுமோர் இடைவெளியை
விழித்தபின்
நகர் நடுவே
அந்த ஏரியை
வேலியிட்டு வைத்திருந்தார்கள்.
தொட்டிலுக்குள்
எழுந்துவிட்ட குழந்தைபோல்
கவிழ்ந்து கிடந்து உருள்கிறதது,
அழவில்லை சமர்த்து.
கம்பித் தடையின்றி
ஏரியைப் பார்க்க
சுற்றி வந்தேன்.
சாலை தாழும்
ஒரு பழைய
ஓடையருகே
விரல்விட்டு வெளியே
மணல் அளைந்துகொண்டிருந்தது
ஏரி.
மலையெனக்கருதி இருளை
பாதிவரை ஏறிவிட்டேன்
இடரும் எதன்தலையிலும்
அழுந்த மிதித்தே
வந்திருக்கிறேன்.
வழியென்பது ஒன்றேதான்,
மேலே.
விடிய நான் தொட்டது
பாழ்வெளியின் பெருமூச்சு.
எனக்குத் தெரியும்
ஏறுவதை விட இறங்குவது
கடினமென.
ஆனாலும்,
மலையில்லாத உச்சியிலிருந்து
எப்படி இறங்க?
ஆனந்த் குமார்
தற்போது திருவனந்தபுரத்தில் குழந்தைகள் புகைப்படக் கலைஞனாக இருக்கிறார்.குறும்படங்கள் ஆவணப்படங்கள் எடுப்பதிலும் பங்காற்றி வருகிறார் . சிறார் இலக்கியம், கதை சொல்லலிலும் ஆர்வம் உண்டு.