கசப்பின் பிரகடனம்

உணவில் ,  அறுசுவைகளில் பிரதானமான சுவைகள் இனிப்பும் கசப்புமே.

இவை இரு துருவங்களாக எதிரெதிராக நிற்கும்போது,இடைப்பட்ட பகுதிகளில் மற்ற சுவைகள் இடம் பிடித்துள்ளன.

இலக்கியத்தில் இச்சுவைகள் படைப்போரின் கைவண்ணத்தால் துலங்கிவருகிறது. படைப்பாளிகள்  தங்களின் மனோரதத்திற்கு ஏற்ப தங்கள் படைப்புகளைப் படைக்கும்போது இச்சுவைகள் அவர்களது ஆக்கங்களில் பிரதிபலிக்கும்.

தேர்ந்த படைப்பாளிகளின் படைப்புகளைத் தொகுப்பாகப் பகுத்து ரசனை அடிப்படையில் பார்க்கும்போது இம்மாதிரியான சுவைகளில் ஏதோ ஒன்று ஆதார சுருதியாக,அடி நாதமாக எழுந்து வருவதைக் காணலாம்.

உதாரணத்திற்கு ஆ.மாதவனின் ஆக்கங்களைப் படிக்கும்போது, வாழ்வின் இரக்கமற்ற பக்கங்களைப் படித்து முடித்த பெரியவரின் கரிப்பு சுவை மேலோங்கித்தெரியும்.

தி.ஜா வின் எழுத்துக்களில் வாழ்வில் வரும் உறவுகளின் சுவைகளில் சுவைத்துத் திகட்டாத அவரது உள்ளத்தைக் காணலாம்.

ஜெயமோகன் போன்றோர் பல்வகை சுவைகள் வெளிப்படும்படி பல மோஸ்தர்களில் எழுதி வாசகர்களுக்குப் படையலிடுகிறார்கள்.

புதியவர்களாக புத்தாயிரத்திற்கு பிறகு எழுதி வரும் சுனீல் கிருஷ்ணன், விஷால் ராஜா, போன்றோர்களோடு சுரேஷ் பிரதீப் தனக்கான Genre மற்றும் Niche யாக கசப்பை அவரது ருசியாகப் பிரதானப்படுத்துகிறார்.

இவரது கதைமாந்தர்கள் தங்களது உடனடி மற்றும் தொலைதூர உறவுகளில் கொண்டுள்ள பரஸ்பர அவநம்பிக்கை, மற்றும் வாழ்வின் மீதான தீர்மானமான எண்ணங்கள் ஆகியவை கசப்பு சுவையை அடிக்கோடிட்டு எழுந்துவருகின்றன.

சுரேஷ் பிரதீப்பின் கதைகளில் அவரது கதைநாயகன் அல்லது கதைநாயகி தீர்க்கமான முன்முடிவுகளை அகவயமாக தர்க்கப்பூர்வமாக ஆராய்ந்து அதைப் புற வயமாகச் செயல் படுத்துகிறார்கள்.

இதை அவரது சிறுகதைகளின் மூலம் உதாரணப்படுத்தி ஆராயலாம்.

முதலில் ஈர்ப்பு எனும் சிறுகதையை எடுத்துக்கொண்டால்,இது ஒரு சுய அவநம்பிக்கையும் தன்னிரக்கமும் கொண்ட ஒரு இளைஞனின் கதையாக ஆரம்பிக்கிறது. இவன் நினைவுகளின் வழியே இன்ப மற்றும் துன்பங்களை, நாத்ம் அளவிற்கதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஏற்றுக்கொள்கிறோம் என தீர்மானித்து, அதை Soliloquy முறையில் தற்பிதற்றல் மொழியில் நம்மிடம் கதையைக் கடத்துகிறான்.

கதைசொல்லி ஆண்பெண் உறவில் சகநம்பிக்கையையும் மரியாதையையும் முற்றாக ஒதுக்கி அவர்கள் எங்காவது உறவில் விரிசல் உள்ளதா எனத் தேடி அதன் மூலமே உள்நுழைகிறார்கள் என்ற கருதுகோளை முன் வைக்கிறான்.

சாகச மனமுடைய ஆண், உறவில் .Fore play போன்ற முன் புணர்வு மயக்கங்களைச் செலுத்தியே பெண்களோடு ஒரு சுமூகமான சமூக உறவை ஏற்படுத்திக்கொள்கிறான் எனவும்,   இதுபோல சாகசம் செய்ய முடியாத ஆண்களைப் பெண்கள் சகோதர உணர்வை நிர்ப்பந்தித்து அவர்களது இடம் அவ்வளவிற்கானது தான் என நிலை நிறுத்துகிறார்கள் எனவும்,மேலும் பெண்களை வெல்ல சாகச ஆண், அம்மாத்தனம் எனும் ஆயுதத்தைத் தந்திரமாக உபயோகித்து அவளை வெல்கிறான், என்கிறான் கதைசொல்லி.

இந்த கருதுகோள்கள் யாவும் கதைசொல்லியின் பார்வைக்கோணமாக கதாசிரியர் கொண்டுவருகிறார். மேலும் தீர்மானமான பார்வைகளாகவும் தீர்ப்புகளாகவும் பெண்களைப் பற்றிய முடிவாகச் சொல்கிறார்.

பரஸ்பரம் ஒரு ஆத்மா மற்றொன்றிடம் எதிர்பார்க்கும் ஆறுதலையே ஒரு ஆபத்தான குணமாகவும், இவ்வாறு அளிக்கப்படும் தேறுதல் என்பது ‘தடவி கொடுத்தல்’ என்பதாகவும் இது ஆணை வீழ்த்தும் மிக முக்கிய கண்ணி என்கிறார்.

இவ்வளவு தீர்க்கமான ஆலாபனைக்குப் பின் கதைசொல்லி, சிந்து என்கின்ற ஆல்ஃபா பெண்ணிடம் வீழ்ந்த காதையைச் சொல்லி முடிக்கிறார்.

விவாதங்களுக்கு உரிய முன் தீர்மானங்கள் இக்கதையில் இருந்தாலும், ஆண்பெண் உறவின் கவர்ச்சிகளையும், மனோதத்துவ ஊடாட்ட ஈர்ப்புகளையும் அவர் கைக்கொண்ட மட்டும் அள்ளி ஆராய்ந்துள்ளார்.

ஆண்பெண் உறவில் மூன்று வகையாகத்தான் பெரும் பிரிவாக பிரித்து இதுவரை இவ்வுலகம் இயங்கி வருகிறது.

1.ஆணாதிக்க ஆண்பெண் உறவு.

2.பெண்ணாதிக்க ஆண்பெண் உறவு.

3.சூழ்நிலைக்கேற்ப ஆணோ பெண்ணோ அனுசரித்துப் போகும் உறவு நிலை.

இதில் ஊசல் பெண்டுலம் போல இப்புறமும் அப்புறமும் ஆடியபடியே உறவு பயணப்படும்.

இம்மாதிரியான உறவுக்களன்களைக் கதாசிரியர் காண மறுக்கிறார்.

ஆனாலும்,சரளமான நடையும் ஆணித்தரமான சொல்லாடல்களும் இவரது ஆக்கங்களை ஊன்றிப் படிக்கவைக்கிறது.

ஆழத்தில் மிதப்பது : இக்கதையில் தத்துப் பெண்ணிற்கும் அவளது மாற்றந்தாய்க்கும், அவளது மகனுக்குமிடையே உள்ள உறவு முரண்களைப் பற்றி ஒரு பூதக்கண்ணாடி பார்வை பார்த்துப் படைத்துள்ளார். நுட்பமான அகங்காரங்கள், பழிதீர்த்தல்கள், உறவுச் சமன்பாடுகள் ஆகியவை துலக்கமாக வந்துள்ள கதையிது.

எஞ்சும் சொற்கள் : தற்கால சாதீய மேட்டிமையின் மறுபக்கத்தை உண்மைத்தன்மையோடு சுட்டும் ஆக்கம். இக்கதையிலும் படைப்பாளி தன்னுள் மூளும் கசப்பை லாவகமாக வாசகனுக்குக் கடத்துகிறார்.

முடிவின்மையின் வடிவம் : Dystopian genre ல் எழுதியுள்ள கதை. ஆனால் இதிலும் நிகழ்வாழ்வின் பொருளற்ற தன்மையும் அதன் உள்ளீடற்ற கட்டமைப்பையும் துல்லியமாகக் கதைக்கிறார்.

கசப்பு : ஆண் பெண் உறவில் உள்ள மேம்போக்கான இனிமைக்குப் பின் உள்ள உள்ளார்ந்த கசப்பை நம்பகத்தன்மையோடு காட்சிப்படுத்தியுள்ளார்.

ஒரு நாள் கழிந்தது :  உறவுகளில் உள்ள உரசல்களையும் கனன்று கொண்டுள்ள கசப்பையும் கதாபாத்திரங்கள் மூலம் சொல்கிறார்.

இவரது கதாபாத்திரங்கள் கதைகள்தோறும் வந்து யாராவது வேறு ஒரு பாத்திரத்தை, சீக்கிரம் சாக மாட்டார்களா? எனக் கேட்காமல் விடுவதில்லை.

ரக்தமணம் :  இந்தச் சிறுகதையின் கரு  ஜார்ஜ் ஆர்வெலின் 1984 நாவலைப்போல் நகைச்சுவையோடு எழுதப்பட்டுள்ளது.

நல்லிலக்கியத்திற்கு சரளமான நடை அவசியமில்லை என பின்நவீனத்தியர்கள் சொன்னாலும் இவரது நடையில் சரளமும் நறுக்கு தெரித்தாற்போல் வந்து விழும் சொற்பிரயோகங்களும் பலம்.

ஆனால் இவரது கதைகளில் உள்ளுறையும் கசப்புச் சுவை வரும் காலங்களில் கனியும் என அவதானிக்கிறேன்.

எந்தப் படைப்பாளியும் ஒரே ஏகோபித்த சித்தாந்தத்தில் நிலைநின்றவர்கள் அல்ல. காலம் செல்லச்செல்ல அவர்களின் பார்வை விரிவடைந்தும் கனிந்தும் உயர்ந்தும் பறவை பார்வையாக உரு மாறலாம்.


விஜயராகவன்

திரு. மணோன்மணி யின் புதிய எழுத்து இதழில் ,

இசபெல்லா அலேண்டே

D.H லாரன்ஸ்

சல்மான் ரஷ்டி

பாஷாவிஸ் சிங்கர்

ஆகியோரின் சிறுகதைகளை மொழியாக்கம் செய்தவர்.

பின்பு காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக நால்வர் இணைந்து ரேமண்ட் கார்வரின் சிறுகதை தொகுப்பை
” வீட்டின் மிக அருகே மிகப்பெரும் நீர்பரப்பு”வெளியிட்டது.

இவரின் அனைத்து மொழியாக்க கதைகளையும் “தேரையின் வாய்” என்ற தலைப்பில் புதுநெல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

1 COMMENT

  1. கசப்பின் பிரகடனம், சிறப்பான கட்டுரை அழகிய கோர்வை சிறப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.