முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள். (தகழி சிவசங்கர பிள்ளை)

கொச்சுக் காங்கோலி கிருஷ்ண பிள்ளை

(தகழி) சிவசங்கர பிள்ளை

(புனை பெயர்: தகழி சிவசங்கர பிள்ளை

இலக்கியச் சேவை: சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதுபவர். தகழியின் சிறுகதைகளும் நாவல்களும் கேரள மண்ணின் மணம் தவழும் எல்லா மனிதக் குணங்களைப் பற்றியும் சித்தரிப்பன. சிறுகதைகளில் குறிப்பிடத் தக்கவை: ‘வெள்ளப்பொக்கம்’, ‘சாத்தானின் கதை’, ‘பாகம்’, ‘கெட்டு தாலியின் கதை’, ‘தல்லாள்’, ‘கிருஷிக்காரன்’ என்பவையாகும். நாவல்களில் ‘செம்மீன்’, ‘கயறு’, ‘ஏணிப்படிகள்’, ‘இரண்டிடங்கழி’, ‘பலூன்கள்’ முதலியன குறிப்பிடத் தக்கவையாகும். ‘செம்மீன்’ முதலான நாவல்கள் சினிமாவாக வந்து பல பரிசுகளைப் பெற்றுள்ளன. ‘கயறு’ தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில சாகித்ய அகாதமி அவார்டுகளும், ‘ஞானபீடம்’ பரிசும் பெற்றவர். இவருடைய கதைகளும் நாவல்களும் மற்ற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)

 

1968-ல் என்றுதான் எனக்கு ஞாபகம். மார்ச் மாதத்திய முதல் ஞாயிற்றுக்கிழமை. மதியத்திற்கு முன்பே அந்த வீட்டையடைந்து விட்டேன். மாலை வரை நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். மாலை ஆறு மணியான பின்தான் வெளியே வந்தோம். அங்குள்ள பரபரப்பினால் எங்களின் மாலை நேரப் பயணம் அம்பலப்புழையிலேயோ அல்லது தகழியிலேயோ உள்ள கள்ளுக்கடை வாசலுடன் முடிந்துவிடும்! அன்றைய பயணம் தகழியிலுள்ள கள்ளுக்கடையுடன் முடிந்துவிட்டது. கள்ளுக்கடையின் பின்புறம் உள்ள ஓர் உடைந்த பெஞ்சில் நாங்கள் வி.ஐ.பி.களாக அமர்ந்தோம். பாட்டில்கள் வருவதும் போவதுமாக இருந்தன. நேரம் இரவு மணி எட்டு இருக்கும். திடீரென ஓர் ஆரவார சப்தம் கேட்டது. ஆறரையடி உயரமுள்ள ஒரு வெள்ளைத் துரையும் ஒரு துரைசானியும் முன்னால் நடந்துவர, குழந்தைகளும் பெரியவர்களுமாக ஒரு கூட்டமே பின்னால் வந்தது.

“தங்களைக் காணத்தான் அவர்கள் வருகிறார்கள்” என்று நான் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவர்கள் எங்கள் முன்னே வந்து நின்று விட்டார்கள்.

ஒரு துண்டை மட்டுமே இடுப்பில் கட்டிக்கொண்டு, ஒருபோதும் சீவாத தலைமுடியை இடது கையால் கோதிக்கொண்டு, வலது கையில் கள் நிரப்பிய கிளாசுமாக நின்று கொண்டிருந்தார், உலகப் புகழ்ப்பெற்ற நாவலாசிரியரான டி.எஸ்.பிள்ளை என்னும் தகழி சிவசங்கர பிள்ளை. அந்தக் கோலத்தில் பிள்ளையைப் பார்த்ததும் அவர்கள் அப்படியே ஆச்சரியத்துடன் நின்று விட்டார்கள். இரவு பத்து மணிக்கு அவர்கள் தகழியிடம் விடைபெற்றுப் பிரியும்போது, நியூயார்க்குக்காரனான ஜார்ஜ் டீவருக்கும் அவன் மனைவி ஆனி டீவருக்கும் ஒரு ‘முத்தச்சி’ கதையை நேரில் கண்ட அனுபவத்துடன் செல்ல முடிந்தது.

தேவையான அளவிற்குக்கூட நாகரிகம் புகாத தகழி என்னும் அச்சிறிய கிராமத்திற்கு வெளிநாட்டுப் பயணிகள் வந்து செல்வது ஒரு சாதாரண விஷயமாகவே இருந்தது.

தனக்கு மிகவும் பிடித்த இந்திய இலக்கியவாதியான ‘தகழி’யைக் காண மிக ஆவலோடு வந்து நிராசையோடு திரும்பிய ‘ஆனிஸுஜங்க்’ என்பவர் ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி’யில் எழுதிய கட்டுரையைப் படிக்கும்போது, கேரளத்தின் அபிமானமும் சொத்துமான இந்த இலக்கியவாதி உலகத்தில் எங்கெல்லாம் எத்துணை அளவிற்கு ஆதரிக்கப்பட்டார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அதனால், நான் இங்கே உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவது, ‘ஏணிப்படிகளை’யும் ‘இரண்டிடங்கழி’யையும், ‘செம்மீனை’யும், ‘கயிறை’யும் எழுதிய உலகப் பிரசித்தரான டி.எஸ்.பிள்ளை என்னும் தகழி சிவசங்கர பிள்ளையை அல்ல; ஒரேயொரு ‘துண்டு’ மட்டும் அணிந்து ‘தகழி’ என்னும் தனது சர்வமும் அடங்கிய அக்கிராமத்தில் ஓர் உண்மையான விவசாயியாகப் பிரகாசித்த கே.கே.பிள்ளை என்னும் கொச்சுக்காங்கோலி கிருஷ்ண பிள்ளை சிவசங்கர பிள்ளையைத்தான்.

ஆயிரத்து எண்பத்தியேழாம் ஆண்டு (இது கொல்லமாண்டு இதற்கு சரியான ஆங்கில ஆண்டு 1914 ஏப்ரல் 17-ம் நாள்) மேட மாதம் 5-ந் தேதி விடியற்காலை ரேவதி நட்சத்திரத்தில் தகழி ‘படகாரம்’ அறையில் ‘அரிப்புறத்து வீட்டில்’ சிவசங்கர பிள்ளை பிறந்தார். தந்தையின் பெயர் தகழி பொய்ப்பள்ளிக்களத்தில் சங்கர குரூப். தாயின் பெயர் பாரவதியம்மாள். கதகளியில் மிகப் பிரபலமானவரும் நல்ல உடற்கட்டு கொண்டிருந்தவருமான ‘குரு குஞ்சு குரூப்’ என்பவர்தான் தகழி சிவசங்கர பிள்ளையின் தந்தைக்கு சகோதரனாவார். அவர்களுக்கிடையேயான வயது வித்தியாசம் இருபத்திரண்டு ஆண்டுகளாகும். கமலாட்சியம்மாள் என்னும் ஒரேயொரு சகோதரி மட்டுமே தகழியுடன் பிறந்தவர்.

கொச்சுக்காங்கோலி குடும்பத்தின் ஒவ்வொரு தலைமுறையினரும் அவரவர்களின் தந்தைவழி பாதுகாப்பில் வளர்ந்தவர்கள்தான். அம்மாவன்மார் (தாய்மாமன்கள்) முறை தகழியின் தலைமுறையில்தான் ஏற்பட்டது. ஆனால் மருமக்கள் தாயத்தில் பிறந்ததால் அவரிடம், அதன் பக்கம் சிறிது சாய்மானம் உண்டு. ஏன், அதனுடைய எல்லா அம்சங்களும் தகழியின் ஒவ்வொரு மயிர்க்காலிலும் இருந்தது உண்டு.

‘துள்ளல்’காரர்களும், ‘கதகளி’காரர்களும் நிறைந்த ஊர் தகழி. தகழியின் தந்தை சங்கர குரூப் கதகளியை முறையாகப் பயின்றவர். துள்ளலிலும் கூடப் பங்கு பெற்றதுண்டு. சில நாட்கள் வேஷம் அணிந்து நடிகனாகவும் அவர் இருந்ததுண்டு. ஒரு ‘கதகளி’காரனாகவே இருந்தால் ஒரு நல்ல நிலைமைக்கு வருமுடியாது என்று தோன்றியவுடன் அவர் அதை உதறிவிட்டார். தகழி சிவசங்கர பிள்ளையைத் தூக்கி நிலை நிறுத்தியதும் கூட அவர் தந்தைதான். தகழி முதன்முதல் மலையாள மொழிப் பள்ளியிலும், அதன் பின் அம்பலப்புழை ஆங்கில மீடியம் பள்ளியிலும் வைக்கம் உயர்நிலைப் பள்ளியிலும், கருவாட்டா உயர்நிலைப் பள்ளியிலுமாகப் படித்தார். பின்பு, திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில், ப்ளீடர்ஷிப் கோர்ஸைப் பூர்த்தி செய்தார். அரசியல் போராட்டத்திலும் மாநில காங்கிரஸ் போராட்டத்திலும் தகழி கவர்ந்திழுக்கப்பட்டார். 1111-ல் (கொல்லமாண்டு) ஆலப்புழையில் வழக்கறிஞராகத் தொழிலைத் தொடங்கினார். சர்.சி.பி..யின் கைது படலத்திலிருந்து தப்பிக்க மறைந்து வாழ வேண்டியதாயிற்று. வழக்கறிஞர் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தைப் பற்றி ‘என்டெ வக்கீல் ஜீவிதம்’ என்னும் புத்தகத்தில் தகழி இதயத்தைத் தொடும்படியாக இப்படி எழுதியுள்ளார்:

“அம்பலப்புழை கச்சேரி மூலையில் அந்தத் தாடிக்காரரை இனிமேல் காணமுடியாது. அரை நூற்றாண்டு காலமாக காலை நேரங்களில் கச்சேரி மூலையில் பார்க்கும் வாய்ப்புள்ளவர்களுக்கும், சரியாக ஆறு மணிக்கே வந்து பக்திப் பரவசத்துடன் வணங்கும் பக்தனை அம்பலப்புழை கிருஷ்ணனுக்கும் வாசுப்பிள்ளை என்கிற அந்தத் தாடிக்காரர் இல்லாமல் ஆகிவிட்டார். வாசுப்பிள்ளை இறந்த அன்றிரவு அலுவலகத்தின் முன்னால் மாட்டப்பட்டிருந்த போர்டும் அறுந்து கீழே விழுந்தது. ஒரு பிரத்யேக முறையுள்ள அந்த வாழ்க்கையும் அத்துடன் முடிந்துவிட்டது. இனிமேலும் நான் வழக்கறிஞர் தொழிலைத் தொடர்ந்தால் வழக்குகளில் என்னால் ஜெயிக்க முடியுமா? அதுபற்றி எனக்குச் சந்தேகம்தான். நானும் வாசுப்பிள்ளையும் சேர்ந்ததுதான் என் வழக்கறிஞர் வாழ்க்கை. அதன் முக்கிய உறுப்பு ஒன்று போய்விட்டது. வேறொரு நபரால் அந்தப் பிளவை மூட முடியாது.”

வழக்கறிஞர் சிவசங்கர பிள்ளையின் வாழ்விலிருந்த மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம் வக்கீல் குமாஸ்தா வாசுப்பிள்ளை.

1110-ம் ஆண்டு சிம்ம மாதம் 30-ந் தேதி ‘காத்தே’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட கமலாட்சியம்மாளை தகழி திருமணம் செய்து கொண்டார். நெடுமுடிமங்கலத்து கமலாட்சியம்மாள் ஜாதியைப் பொறுத்த மட்டில் உயர்ந்த குடும்பத்தவராக இருந்தார். திருமணத்தின் போதும் கூட அவருடைய குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடக்கூடிய தகுதி தகழிக்கு இல்லாமல்தான் இருந்தது.

“காத்தம்மா அக்காவுடன் தாங்கள் காதல் வயப்பட்டிருந்தீர்களோ?” என்று ஒரு சமயம் நான் கேட்டேன்.

“இல்லை, பெரியோர்கள் நடத்திய திருமணம்தான் அது. நான் காத்தேயை குழந்தைப் பருவத்தில் கண்ட உருவத்தை இன்றும்கூட நினைத்துப் பார்க்கிறேன். வாழை மட்டையை அணிந்துகொண்டு கருக்காப் பற்களை வெளிக்காட்டித் திரியும் எட்டு வயசுள்ள ஒரு நோஞ்சான் பொண்ணு அவள்.”

அற்புதமான ஒரு தாம்பத்யமும், ஒரு ஆத்ம உறவுமாகும், தகழிக்கும் காத்தம்மைக்கும் உள்ள பிணைப்பு. வெளி வாசற்படியிலிருந்து தகழி சிவசங்கர பிள்ளை நேசமும் பாசமும் நிறைந்த குரலில், “காத்தே” என்றழைத்தால் “எந்தா” என்று மெல்லிய குரலில் பதில் கிடைக்கும்.

சங்கரமங்கலத்து வீட்டின் ஒவ்வொரு அறையிலும் அந்த அழைப்பும் அந்த பதிலும் மாதுர்யம் நிரம்பி நிற்கும்.

காத்தம்மா சகோதரி கேரளத்தை விட்டு வெளியே சென்றதே 1974-ல் தான். மத்திய ஃபிலிம் அவார்டு கமிட்டியின் அங்கத்தினராகத் தகழி டெல்லிக்குப் பறந்தபோது காத்தம்மாவையும் அழைத்துச் சென்றார்.

“தகழி என்னும் கிராமத்தை விட்டு வெளியே சென்று தங்கிய ஒரு மாதத்திய வாழ்க்கை அது, அதுவே எங்களின் தேன் நிலவுமாகும்.”

கொச்சி விமானத் தளத்தில் அபூர்வமான அந்த நட்புறவுடன் தோள் மேல் கையைப் போட்டு அணைத்தவாறு, விமானத்தினுள்ளே ஒன்றாக ஒன்றிச் சென்ற அந்தத் தம்பதியின் அசாதாரணக் காட்சியைப் பற்றி நண்பர் இராமச்சந்திரன் எனக்கு எழுதியிருந்தார். தகழி என்னும் கிராமத்திற்கு வெளியே வேறோரு உலகமும் உண்டென்னும் உண்மையை நேற்றுவரை புரிந்துகொண்டிராத காத்தம்மா பயந்தவாறே டெல்லியில் இறங்கினார். முண்டும் தாவணியும் பிளவுஸும் அணிந்து டில்லியின் வி.ஐ.பி.யாக இறங்கிய காத்தம்மாவைப் பற்றி எத்தனையோ நண்பர்கள் எனக்குக் கடிதம் எழுதினார்கள்!

டாக்டர் பாலன் (தகழியின் மகன்) கூறினார்:

“அம்மா டெல்லிக்குப் போனதால் இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒன்று விஸ்கி குடிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு வீட்டில் கூட அரைகுறை ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.”

பாசம் நிறைந்த காத்தம்மா சகோதரி, நீங்கள் எந்தவொரு எழுத்தாலும் பேச்சாலும் பிரதிபலிக்க முடியாத அளவிற்கு பாக்கியவதி ஆகிவிட்டீர்கள். தகழி அண்ணன் தங்களைப் பற்றி என்னிடம் சொல்லியது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, சகோதரி?

“குடும்பச் சுமை உணர்வும், குடும்பத்தின் மேலுள்ள அக்கறையும் இந்த அளவிற்கு வேறு எந்தப் பெண்களிடமும் காண முடியாது. காத்தம்மாவைத் தவிர வேறு யாராவது என் வாழ்க்கையில் புகுந்திருந்தால் என் வாழ்க்கை ஒரு பரிதாபத்துக்குரிய தோல்வியாகவே இருந்திருக்கும்,” என்று மனம் நெகிழ்ந்து கூறினார்.

தகழி காத்தம்மா தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள் உண்டு. ராதா, பாலன், ஜானம்மா, ஓமனா, கனகம் என்பவர்கள்தான் அவர்கள். எல்லோரும் திருமணமானவர்கள். ஆலப்புழை எஸ்.டி.கல்லூரியிலுள்ள வேதியியல் பேராசிரியர் திரு.பி.சங்கர நாராயண பிள்ளைதான் ராதாவை மணந்தவர். ஜானம்மாவை கோபிநாதன் நாயர் என்ற டாக்டர் திருமணம் செய்துகொண்டார். ஓமனாவின் கணவர் ஓ.ஜெ.ராஜகோபால். இவர் மத்திய அரசு பி.டபிள்யூ.டி.யில் இருந்தார். மகன் பாலன் ஒரு டாக்டர். மலேசியா இராமகிருஷ்ணனின் மகளை மணந்துள்ளார். பேரப்பிள்ளைகளும் நிறைய பேர்கள் உண்டு.

தகழி தன் பிள்ளைகளுடனும் பேரப்பிள்ளைகளுடனும் அன்போடும் பாசத்தோடும் சேர்ந்திருந்த காட்சி என்னை மெய்சிலிர்க்கச் செய்தது. குடும்பத்துடன் இந்த அளவிற்கு இணைந்திருந்தவரும், மனைவியுடனும் பிள்ளைகளுடனும் இந்த அளவிற்குப் பாசமும் அன்பும் கொண்டிருந்தவருமான ஓர் எழுத்தாளரை கேரளாவிலேயே காண முடியாது. அந்த வகையிலும் தகழி சிவசங்கர பிள்ளைதான் தனித்துவம் பெற்றுத் திகழ்ந்தார்.

தகழி தனது காதல் பால பாடங்களைக் கற்றுக்கொண்டது வைக்கம் உயர்நிலைப் பள்ளியில்தான். காதல் கடிதத்தைத் திருப்பியளித்த அந்தப் பிரபலமான நடைபாதையும், அந்த நடைபாதையிலேயே உயிரற்று விழுந்த உருவமற்ற மோகமும் அந்த இளம்பிராய சிவசங்கரனால் மறக்கவே முடியவில்லை. அந்தக் காதலின் நினைவாக ‘கமலம்’ என்ற பெயரில் தகழி ஒரு கதையை எழுதி, அதைத் தன் காதலியிடம் படிக்கக் கொடுத்தாராம். ‘நல்ல கதை. வாழ்த்துக்கள்’ என்னும் குறிப்புடன் அந்த அழகி அக்கதையை அதே நடைபாதையில் திருப்பிக் கொடுத்துவிட்டாளாம். அந்தத் துர்பாக்கியவதியின் பெயரும் ‘கமலம்’தானோ என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இளம் வயதில் இனங்காண முடியாத மாற்றங்களாலும் மோகங்களாலும் முளை விட்டு நசுங்கிப் போன, தெளிவற்று நிழல்ரேகை விழும் அந்தக் காதல் கதை, தகழியின் நினைவென்னும் அறையில் என்றும் ஒரு சாபச் சிலையாகக் கிடந்ததல்லவா!

காத்தம்மாவை மணந்துகொண்டபின்தான் தகழியிடம் காதலில் ஒருபோதும் வாடாத, ஒருபோதும் இற்றுவிழாத ஒரு காதல் மலர் மலர்ந்து விரிகிறது. பொழுதுபோக்காக ஆரம்பித்த உறவு தகழியின் ஆன்மாவையே குலுக்கும்படியாக வளர்ந்துவிட்டது. ‘கேரள கேஸரி’யுடன் உறவு கொண்டு திருவனந்தபுரத்தில் தங்கியிருந்தபோதுதான் தகழி தங்கம்மாவைப் பார்த்தார். ஒரு பெண்கள் ஸ்டோரில்தான் தங்கம்மா வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் தகழியைப் பார்க்கும்போதெல்லாம் நகைச்சுவையாகப் பேசவும் சிரிக்கவும் செய்து கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பை ஒருநாள் கூட காணாமல் தன்னால் இருக்க முடியாது என்னும் உண்மை தகழியிடம் வேரூன்றி அழியாக் காதலாக மாறியது. ஈ.வி.கிருஷ்ண பிள்ளைக்கு இந்தக் காதல் நன்கு தெரியும். சுமதிக்குட்டியை ஈ.வி. பதிவு திருமணம் செய்த நேரம் அது. அம்பலப்புழை பி.என்.பரமேஸ்வரன் பிள்ளையுடன்தான் தகழியும் தங்கியிருந்தார். ஒரு நாள் ஸ்டோரிலேயே தங்கம்மாவை முத்தமிட்ட நிகழ்ச்சியை என்றும் தகழி மெய்சிலிர்ப்புடன் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். காத்தம்மாவையே மறக்கக் கூடிய அளவிற்கு அந்தக் காதல் உறவு வளர்ந்துவிடுமோ என்றுகூட ஈ.வி. பயந்துவிட்டார். திரு.ஏ.பாலகிருஷ்ண பிள்ளையைத் தவிர்த்து, தகழியின் எதிர்காலத்தை அறிந்த ஒரே நபரான ஈ.வி., தகழியை அம்பலப்புழைக்கு வண்டியேறும்படிப் பலவந்தப்படுத்தி இடைவிடாமல் வற்புறுத்த ஆரம்பித்துவிட்டார்.

நட்பின் கவசமான அந்த வற்புறுத்தலை ஏற்க முடியாது என்று சொல்ல தகழியால் முடியவில்லை. தகழி அம்பலப்புழைக்கு தனது கீறப்பட்ட இதயத்துடன் வண்டியேறினார். பல்லாண்டுகள் வரை கடிதம் மூலமாகவே அந்த உறவு தொடர்ந்து கொண்டிருந்தது. இடையில் ஒருமுறை தங்கம்மாவைக் கண்டார் தகழி. ஏக்கப் பெருமூச்சும் கண்ணீரின் சுவையுமுள்ள அந்த நிமிடங்கள் என்றும் தகழியை அழ வைத்தன. என்றோ எங்கேயோ அந்த இனிமையான உறுதியான உறவுக்குப் பிளவு ஏற்பட்டுவிட்டது. அதன்பின் இறுதிவரை தங்கம்மாவைத் தகழி பார்க்கவே இல்லையாம். தகழியின் ஆத்மாவில் ஒரு திராட்சைக் கொடிபோல் படர்ந்து ஏற முடிந்த பாக்கியவதி தங்கம்மா, மணமாகாமலேயே இருந்து இருக்கிறார்.

“தற்செயலாகவாவது எப்போதாகிலும் அவரைப் பார்த்து விட்டால்… அதைப் பற்றித் தாங்கள் சிந்தித்ததுண்டா?” என்று நான் கேட்டதும் தகழியின் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்துவிட்டது.

“இனிமேல் அதைப் பற்றி ஒன்றும் என்னிடம் கேட்காதே… நீ என்னை இம்சிக்காதே!” என்று எல்லாவற்றையும் துறந்துவிட்ட ஒரு துறவியைப் போன்று தகழி கூறினார்.

நான் அவருடைய முகத்தை நோக்கினேன். அவருடைய கண்கள் கண்ணீரால் நிறைகிறதோ? ‘ஏணிப்படிகளில்’ வரும் தங்கம்மாவின் தழுதழுக்கும் குரல் உங்களுக்குக் கேட்கிறதா?

மதுவையும் கஞ்சத்தனத்தையும் தவிர்த்துவிட்டு தகழியிலுள்ள சிவசங்கர பிள்ளையை அறிமுகப்படுத்த முடியவில்லை. தகழியுடன் சேர்ந்து எத்தனையோ ஆண்டுகளாக நானும் மது அருந்தி இருக்கிறேன். ஆனால், ஒருபோதும் ஒரு குடிகாரராக நான் அப்பெரிய மனிதரைப் பார்த்த தில்லை. எவ்வளவு மது அருந்தினாலும் சப்தத்திலோ சலனத்திலோ எந்தவொரு வித்தியாசமும் உண்டாக்காமல் இருக்கக்கூடிய, எனக்கு நெருங்கிய அறிமுகமான எழுத்தாளர்களில் ஒரே எழுத்தாளர் தகழிதான்.

தகழி சிவசங்கர பிள்ளை முதன் முதல் 1104-ம் ஆண்டு கர்க்கடக (ஆடி) மாதத்தில் கருவாட்டாவில் நண்பர்களுடன் படிப்பதற்காகத் தங்கியிருந்த நேரத்தில்தான் மது அருந்த ஆரம்பித்தார். ஒருநாள், மது அருந்த வேண்டும் என்னும் திட்டத்துடன் தாரா இறைச்சியையும் கள்ளையும் தயார் செய்தார். மதுவை அருந்த அருந்த சுவையும், ஒரு வித இன்ப மயக்கமும் கொடுத்ததால் அளவுக்கு மீறி நிறையக் குடித்துவிட்டார். முதல் குடியே ஒரு வரலாற்று உண்மையாகப் பரிணமிக்கத்தக்கும் விதத்தில் வாந்தி எடுக்கவும் ஆரம்பித்துவிட்டார். அதைப் பற்றிப் பள்ளிக்கூடத்திற்கும் வீட்டிற்கும் தெரிந்துவிட்டது. அத்துடன் அந்த அனுபவம், பள்ளி முன்னேற்ற அறிக்கையில் இப்படியொரு குறிப்பையும் உற்பத்தி செய்துவிட்டது.

‘இந்தக் குழந்தையின் சுபாவம், நேரந்தவறாமை முதலியவை கெட்டுவிட்டன என்று வருத்தத்துடன் அறிவிக்கின்றோம். முயன்றால் வகுப்பிலேயே முதல்வனாக வர வாய்ப்புண்டு.’

அயல் நாட்டு மதுவை முதன்முதலில் திருவனந்தபுரத்திலுள்ள ஸேவியர்ஸில்தான் அருந்தினார். அந்த அயல் நாட்டு மதுவின் பெயர் கொக்கோ பிராந்தியாகும்.

சமகால எல்லா எழுத்தாளர்களிடமிருந்தும் தனித்தன்மை பொருந்தியவர் என்னும் நிலையில் சிவசங்கர பிள்ளைக்கு மிகவும் பிரத்யேகத் தன்மை உண்டு. ஒருவேளை, அதற்கான காரணம், தகழி என்னும் அற்புதமான, மிகப் பிரத்யேகமுள்ள, நாகரிகம் என்பதே இன்னும் தேவையான அளவிற்குப் புக முடியாத கிராமமாக அது இருப்பதால் இருக்கலாம்.

ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்த பின்தான் தந்தைக்குப் பிடித்தமில்லாமலேயே தகழி தன் தலையைக் கிராப் செய்துகொண்டார். சிறிய குடுமியுள்ள மொட்டை அடித்த தலையும், ஓலைக்குடையும் பிடித்து, வேட்டி அணிந்து பள்ளிச் செல்லும் அந்தச் சிறிய சிவசங்கரனை ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள்! முதன் முதலில் நல்ல உடை அணிந்ததே அம்பலப்புழை பள்ளிக்கூடத்தில் படிக்கச் சென்றபோதுதான். திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் படித்தபோதுதான் முதன்முதலாக இஸ்திரி போட்ட சட்டையையும் அவர் அணிந்தார்.

கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற பண்டிகைகள் என்னவென்றே அப்போது தகழிக்குத் தெரியாது. அம்பலப்புழை பள்ளியில் சேர்ந்த பின்தான் அவையெல்லாம் என்னவென்று புரிந்தன. பல்வகை மளிகை சாமான்கள் விற்கும் ஒரேயொரு கடை மட்டுமே இருந்த தகழி என்னும் மிக அழகான நாகரிகம் இல்லாத கிராமத்தின் பிரத்யேகமே அதுதான். ஆனால் மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, செக்கோஸ்லோவாக்கியா போன்ற நாடுகளிலெல்லாம் இந்தியாவின் முக்கிய மனிதராகப் பயணம் சென்ற டி.எஸ்.பிள்ளை என்னும் தகழி சிவசங்கர பிள்ளை, எப்போதும் அரைக்கை சட்டையையும் கரை போட்ட வேட்டியையும்தான் விரும்பினார். என்றால் அதற்கு அவரை ‘கருமி’ என்பதில் மட்டும் பிடித்து நிறுத்தி விட முடியாது. தகழியிலிருந்த சிவசங்கர பிள்ளை என்பவரின் தனி முத்திரைகளில் ஒன்றாக கருமித்தனமும் சேர்ந்தது என்று வேண்டுமானால் கூறலாம். இந்த அளவிற்கு அயல் நாடுகளில் பயணித்து வந்த வேறோர் இலக்கியவாதி கேரளாவில் இல்லை என்றே கூறலாம். இவ்வாறு வெளிநாடுகளில் பயணித்து வந்தும் கூட ‘தகழி’யை மட்டும் விரும்பக் காரணம்? அது, மிகமிகப் பாரம்பரியம் மிக்க நாடாகிய இந்தியாவின் ஓர் அங்கமாக இருப்பதால்தான் என்று கருதினார்.

முதல் வகுப்பில்கூட சேர முடியாமல் இறந்துபோன இரண்டு இளம்பருவ நண்பர்களை – கல்வேலி கேசவனையும், அரிப்புறத்துக்களத்தில் பரமேஸ்வரனையும் – நினைத்து எப்போதும் கண்ணீர் விட்ட தகழியை நான் பல தடவைகளிலும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததுண்டு. அம்பலப்புழையிலுள்ள ஆரம்ப வகுப்பில் தகழிக்கு இரண்டு நண்பர்கள் மட்டுமே இருந்தார்கள். ஒருவன் வெளுத்து மெலிந்த ஒரு சிறிய பையன் ஶ்ரீகண்டன் (என்.ஶ்ரீகண்டன் நாயர் என்னும் முன்னாள் எம்.பி.), மற்றொருவன் எல்லா பாடங்களிலும் முதல்வனாகவும், அதிகம் பேசாதவனாகவும் ஆசிரியர்களின் அன்பிற்குகந்த மாணவனுமான பொதுவாள் (இந்திய அரசின் நிதி ஆலோசகராக இருந்த நீலகண்ட பொதுவாள்). உற்ற நண்பர்கள் என்பவர்களில் இவர்களை மட்டும்தான் தகழிக்கு எப்போதும் நினைவில் இருந்தது. அம்பலப்புழையில் படிக்கும்போது சக தோழர்களில் பலரும் கடற்கரையிலுள்ள மீனவக் குழந்தைகளாவர். அவர்களின் பலரும் படிப்பை முழுமைப் படுத்தாதவர்கள். பெரும்பாலும் மதிய நேரங்களில் அவர்களின் வீடுகளுக்குச் செல்வது அவருக்குப் பழக்கமாகி விட்டிருந்தது. ‘செம்மீன்’ என்ற உலகப் புகழ்பெற்ற மலை யாள நாவலுக்கான வேர்களும் அங்கேதான் ஓடின.

தகழி சிவசங்கர பிள்ளைக்குத் தன் வாழ்க்கையில் ஒரே முறைதான் ஒருபோதும் மறக்க முடியாத கடுங்கோபம் ஏற்பட்டது. அதுவும் அம்பலப்புழையில் படிக்கும்போது நடந்த து. ஒரு நாள் ஒரு நண்பன் தகழியிடம், “உன்னோட அம்மா அம்பலப்புழைக்குத் தயிர் விற்க வருவாங்களா?” என்று கேட்டுவிட்டான். அவ்வளவுதான். தாயிடம் தெய்வத்துக்கு சமமான அன்பு கொண்டிருந்த சிறுவன் சிவசங்கரன் ஒரு கொடும்புயலாக மாறி அவனை அடியோ அடியென அடித்துத் தள்ளிவிட்டான்.

தகழி அந்நிகழ்ச்சியைப் பற்றிக் கண்ணீருடன், “எனது நெருங்கிய நண்பனாக இருந்த அந்த நல்ல பையனிடம் நான் பின்பு பேசவே இல்லை. இரண்டு வருடங்களுக்குப் பின் அந்த நண்பனும்கூட இறந்துவிட்டான்” என்று கூறினார்.

(தகழியிலும் அம்பலப்புழையிலும் அக்காலத்தில் தயிர் விற்கும் பெண்களில் பெரும்பாலானவர்களும் உடலை விற்கும் பெண்களாகவே இருந்தனர் என்னும் உண்மையை ஒதுக்கிவிட முடியாதுதான்.)

தகழியின் மனதில் மற்றொரு நிகழ்ச்சியும் எப்போதும் உறங்காத நினைவாகத் தங்கி நின்றது. மலையாள இலக்கியத்திற்குத் தீராத இழப்பை ஏற்படுத்திய பல்லனவளைவில் நடந்த படகு விபத்துதான் அது. அந்த விபத்தில்தான் குமாரன் ஆசான் என்னும் ஒரு பெரிய மனிதர் இறந்துவிட்டார் என்பது மட்டுமே அன்றைய இளம்பிராய சிவசங்கரனுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அந்த நஷ்டம் எத்தனைப் பெரியது எனப் பல ஆண்டுகளுக்குப் பின்புதான் உலகப் புகழ் பெற்றவரான தகழிக்குப் புரிந்தது.

தும்பிக்கை இல்லாத யானையை நீங்கள் கற்பனை செய்ய முடியுமோ? முடியாது. அதேபோல்தான் ‘கருமி’ என்னும் சுபாவத்தை ஒதுக்கிவிட்டு எழுத்தாளனல்லாத தகழி சிவசங்கர பிள்ளையையும் நாம் காண்பது. எழுத்தாளரான தகழி கருமியல்ல. தகழியின் கருமித்தனத்தைப் பற்றி நேரிட்டறிந்தவர்கள் என்னைப் போல் வேறு யாரும் இன்று உயிருடன் இல்லை. அதனால், தகழியின் கருமித்தனத்தைப் பற்றி ஓர் உதாரணம் கூறி நான் அதை முடித்துக் கொள்கிறேன்.

ஃபோன் இணைப்பு கிடைத்ததும் தகழி தன்னுடைய நண்பர்களுக்கெல்லாம் ஓர் கார்டு அனுப்பினார். அதிலிருந்த வரிகள் இதுதான்!

“எனக்கு ஃபோன் கிடைத்துவிட்டது. நெம்பர் 43 (அம்பலப்புழை). அத்தியாவசியமாயிருந்தால் மட்டுமே என்னை அந்த நெம்பரில் அழைக்கவேண்டும்.”

எனக்குக் கிடைத்த கார்டு ஸ்டாம்பு ஒட்டாமையால் ஃபைன் போட்டு வந்தது. மற்றவர்களுக்கும் அதே போன்ற கார்டுகளைத் தான் அனுப்பினாரா என்பது எனக்குத் தெரியாது.

எழுத்தாளர் இல்லாத தகழி சிவசங்கர பிள்ளையின் வாழ்க்கை ‘நிகழ்ச்சிகள்’ நிறைந்ததல்ல. ஒரு சாதாரண வாழ்க்கைதான் அவருடையது. சொந்தத்திலும் குத்தகையிலுமாக ஆயிரம் ‘பறை’ நிலங்களை விவசாயம் செய்து கொண்டிருந்த பொய்ப்பள்ளிக்களத்தில் சங்கர குரூப், தன் குடும்பத்திலிருந்து வெறும் கையோடுதான் இறங்கிச் சென்றார். தன் அறுபதாம் வயதில் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது நல்ல உழைப்பாளரான அந்தக் குட்டநாடன் விவசாயி தோற்கவில்லை. அந்தக் குட்டநாடன் விவசாயியின் மகனான தகழி சிவசங்கர பிள்ளையும் இன்றும் தோல்வி என்றால் என்னவென்றே அறியாத விவசாயிதான். புராணங்களில் சொல்லப்பட்டுள்ள தர்ம நீதிகளைக் கவனத்துடன் வாழ்க்கையில் கடைபிடிக்கப்பட வேண்டுமென்னும் அந்தத் தந்தையின் நிர்ப்பந்தம், தகழியிடம் என்றும் வேரோடி நின்றது. வாழ்க்கை என்பதற்கு ஓர் அர்த்தமும், லட்சியமும் உண்டென்றும், அதைத் தேடிக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம் என்றும் அவருக்கு உண்டாக்கியதே அந்த சுவாதீனம்தான். தகழியிலுள்ள சங்கரமங்கலத்தில் காணும் ஏகாந்த சுயதிருப்தியைத்தான் அது தெளியவைத்தது.

“வாழ்வில் இன்னும் என்னென்ன ஆசைகள் தங்களிடம் மீதமுள்ளன?” என்று ஹோட்டல் நீலாவில் வைத்து நான் கேட்டேன்.

அதற்கு அவர், ‘கயிறு’ என்னும் நாவலை எழுதி முடிக்க வேண்டும் என்று கூறிவிட்டுக் கடைசியில் கரகரக்கும் குரலில், “என் காத்தம்மா இருக்கும்போதே நான் இறந்துவிட வேண்டும்” என்றார்.

தகழி சிவசங்கர பிள்ளை என்னும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரின் கண்கள் கண்ணீரால் நிறைவதற்கு முன் என் கண்கள் நிறைந்துவிட்டன.

 

********

 

(மலையாள நாடு’ என்னும் வார இதழின் ஓணப்பதிப்புகளில் வெளிவந்தவை இக்கட்டுரைகள். நேர்காணல் போன்றுள்ள இக்கட்டுரைகளின் நோக்கம், மலையாள மொழியின் பல படைப்பாளர்களுக்குள்ளேயுள்ள பச்சை (அப்பட்டமான) மனிதனை வெளிப்படுத்துவதுதான். பொதுவாகவே, “எழுத்தாளர்களை அறிந்து கொள்ளாதீர்கள். அப்படி அறிந்து கொண்டால் அவர்களின் படைப்புகளுடன் உங்களுக்கிருக்கும் மதிப்பை முழுவதும் இழக்கவேண்டியதாகிவிடும்” என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான நம்பிக்கை என்பதுதான் இக்கட்டுரையாசிரியரின் நம்பிக்கை.

அதற்கு இக்கட்டுரையாசியரின் விளக்கம் இதுதான்: “வாழ்க்கையிலுள்ள நீண்ட அனுபவங்களின் தீப்படர்ப்பிலிருந்து தான் உன்னத கலைப்படைப்புகள் பிறக்கும் என்னும் உண்மையானது, கண்டும் கேட்டும் படித்தும் உருவம் கொள்ளும் அறிவிலிருந்தும் உத்தம கலைப்படைப்புகள் பிறக்கும் என்னும் உண்மையோடு மோதிக் கொள்ளும் காட்சிகள் இக்கட்டுரைகளைப் படித்து முடிக்கும்போது உங்களுக்கே புரியும்.”

வாசகர்களாகிய நாம் ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொண்டால் போதும். அனுபங்களை மனதில் போட்டுப் பழுக்கவைக்காத யாராலும் உத்தமமான இலக்கியத்தைப் படைக்க முடியாது. இந்த நோக்கம்தான் இத்தொடரின் யதார்த்தம்.

மலையாள மொழியில் வந்த இக்கட்டுரைகள் முதலில் (1970-80களில்) தீபம் மாத இதழில் தொடராக வெளிவந்தபின் மணியம் வெளியீடு மூலம் இருபதிப்புகளை (1990களில்) நூலாகவும் கண்டன. தற்போது இக்கட்டுரைகளை மீள்பதிவு செய்யும் ‘கனலி’க்கு நன்றி)

 

முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்-வி.பி.சி. நாயர்,தமிழில் குறிஞ்சிவேலன்

 

 

1 COMMENT

  1. ‘மலையாள நாடு’ என்னும் வார இதழின் ஓணப்பதிப்புகளில் வெளிவந்தவை இக்கட்டுரைகள். நேர்காணல் போன்றுள்ள இக்கட்டுரைகளின் நோக்கம், மலையாள மொழியின் பல படைப்பாளர்களுக்குள்ளேயுள்ள பச்சை (அப்பட்டமான) மனிதனை வெளிப்படுத்துவதுதான். பொதுவாகவே, “எழுத்தாளர்களை அறிந்து கொள்ளாதீர்கள். அப்படி அறிந்து கொண்டால் அவர்களின் படைப்புகளுடன் உங்களுக்கிருக்கும் மதிப்பை முழுவதும் இழக்கவேண்டியதாகிவிடும்” என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான நம்பிக்கை என்பதுதான் இக்கட்டுரையாசிரியரின் நம்பிக்கை.

    அதற்கு இக்கட்டுரையாசியரின் விளக்கம் இதுதான்: “வாழ்க்கையிலுள்ள நீண்ட அனுபவங்களின் தீப்படர்ப்பிலிருந்து தான் உன்னத கலைப்படைப்புகள் பிறக்கும் என்னும் உண்மையானது, கண்டும் கேட்டும் படித்தும் உருவம் கொள்ளும் அறிவிலிருந்தும் உத்தம கலைப்படைப்புகள் பிறக்கும் என்னும் உண்மையோடு மோதிக் கொள்ளும் காட்சிகள் இக்கட்டுரைகளைப் படித்து முடிக்கும்போது உங்களுக்கே புரியும்.”

    வாசகர்களாகிய நாம் ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொண்டால் போதும். அனுபங்களை மனதில் போட்டுப் பழுக்கவைக்காத யாராலும் உத்தமமான இலக்கியத்தைப் படைக்க முடியாது. இந்த நோக்கம்தான் இத்தொடரின் யதார்த்தம்.

    மலையாள மொழியில் வந்த இக்கட்டுரைகள் முதலில் (1970-80களில்) தீபம் மாத இதழில் தொடராக வெளிவந்தபின் மணியம் வெளியீடு மூலம் இருபதிப்புகளை (1990களில்) நூலாகவும் கண்டன. தற்போது இக்கட்டுரைகளை மீள்பதிவு செய்யும் ‘கனலி’க்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.