கவிதை அன்று முதல் இன்று வரை (லஷ்மி மணிவண்ணன் மற்றும் கண்டராதித்தன் கவிதைகளை முன்வைத்து)

லக்ஷ்மி மணிவண்ணன்

தற்காலக் கவிஞர்களுள் கணிசமான அளவு சாதனைகளைச் செய்துள்ள கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். சமீபத்தில் அவருடைய ‘கேட்பவரே’ என்ற முழுத் தொகுப்பும், ‘கடலொரு பக்கம் வீடொரு பக்கம்’ என்ற குறுங்கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. லக்ஷ்மி மணிவண்ணன் படிமங்களைப் பின்தொடர்ந்து செல்லும் கவிஞரல்ல. தனது அனுபவங்களைப் பெரும்பாலும் நேரடியாகத் தனக்கான கவிதைமொழியில் கூறவே இவர் முயற்சிக்கிறார். இலக்கிய மொழியும், இயல்பான புழக்கத்திலுள்ள மொழியும் கலந்த மொழிநடை லக்ஷ்மி மணிவண்ணனுடையது. இவர் கவிதைகளில் எந்த மெனக்கெடலுமில்லை. தன்போக்கில் கவிதை நிகழ்கிறது. இக்காலக் கவிஞர்களிடம் அருகிவிட்ட போக்கு இது.

 

‘கவிதை’ என்றதும், எங்கோ உச்சாணிக்கொப்பில் ஏறியிருப்பதான பாவனையும், பம்மாத்தும் மலிந்துவிட்ட இந்த நாட்களில் இவரது இயல்புத்தன்மை என்னை வெகுவாகக் கவர்ந்தது. புனைவும் யதார்த்தமுமாக இவரது கவியுலகு விரிகிறது. லக்ஷ்மி மணிவண்ணனின் ஆரம்பக்கால கவிதை என்று தோன்றுகிற ‘ஊதாப்பூ’ என்ற கவிதையிலேயே புனைவும் யதார்த்தமும் விரவிக் கிடக்கின்றன. ஈஸ்வரி சித்தியினால் இவரை அடையாளம் காணமுடியாதது பற்றி விவரிக்கும்போது ‘காக்கைப் பார்வையில் விலக்கிக் கடக்கிறது அவளது உத்வேகம்…’ என்கிறார். ‘கடந்து செல்லும் ஈஸ்வரி சித்தியை / வாழ்ந்துகொண்டிருக்கும் ஈஸ்வரி சித்தி அறியமாட்டாள் என்று மொழியின் எளிமையிலேயே கவியுணர்வைத் திரட்டிவிடுகிறார். இதிலொரு தத்துவச் சரடும் ஊடாடுகிறது.

‘பிசகு’ என்ற கவிதை, ‘பிசகு’ என்ற ஒற்றைச் சொல்லிலிருந்து பிறந்தது போலிருக்கிறது. பிசகை அபாரமான கற்பனையாக்கி, அதை வளர்த்தெடுக்கிறார் கவிஞர். இக்கவிதையின் தொடக்கத்திலுள்ள நான்கு வரிகளுமே கவிதையாகி விட்டன. அந்த வரிகளைத் தொடர்ந்துவரும் ‘நானா சரி செய்கிறேன்? / முன்னிருந்து நீங்களல்லவோ சரி செய்கிறீர்கள்?’ என்கிற தட்டையான வரிகளை நீக்கிவிட்டால் கவிதை இன்னும் இறுக்கமாகும். இது ஒரு அருமையான கவிதை.

‘ஒடுக்கத்து வெள்ளி’ என்ற கவிதையும் முழுமையான கவிதை. யதார்த்தம் அல்லது நடப்பியல்பைப் புனைவுடன் பிரமாதமாக இணைக்கிறார் லக்ஷ்மி மணிவண்ணன். இது ஒரு நீண்ட கவிதை. ‘நடமாடிகள்’ என்ற கவிதையும் சற்று நீண்ட கவிதையே. இக்கவிதையில் பல்வேறு காட்சிகள் கவிதைப்படுத்தப்பட்டுள்ளன. நான்-லீனியர் தன்மை மிகுந்த இக்கவிதை, ஒரு அரசு ஊழியர் குடியிருப்பில் நிகழ்த்தப்படுகிறது. தாவித் தாவிச் செல்லும் புனைவுக் காட்சிகளினூடே ‘பெண்ணை / அறைக்குள் குளிர்சுற்றிப் / போர்த்தியிருக்கிறது…’ என்கிற அபூர்வமான படிமம் வந்துவிழுகிறது.

‘சட்டைகளின் அறையின் கதை’ என்கிற கவிதை வினோதமும் யதார்த்தமும் கொண்டு திரியும் கவிதை. இது நடப்புலகைப் பற்றிய கவிதை என்றாலும் இடையிடையே எழும்பும் பொருளின் அர்த்தம் கவிஞரின் நடையினால் நெரிபடுகிறது. இதுவே மாயமெனவும், வினோதமெனவும் தோற்றுகிறது. இதுபோல ‘எழுபது வயதுக்கு முந்தைய…’ என்கிற வரிகளிலிருந்து ‘மேலும் 40,70,80,100 வயது நிரம்பிய / எதிர்காலத் தற்கால அறைகள்…’ என்கிற வரிகள் வரை தொடரும் விவரணைகளைத் தவிர்த்தாலும் கவிதைக்கு எந்தச் சேதாரமுமில்லை.

எதையும் லக்ஷ்மி மணிவண்ணனால் கவிதையாக்க முடிகிறது. இது ஒரு பெரும் வரம். இவரால் சில கவிதைகளை – சாமிகளின் நகரப் பயணம், புத்தகத் திருவிழா, பராக் பராக் – நகைச்சுவையுணர்வுடனும் எழுத முடிகிறது. ஒரே நடையில் எழுதாமல் விதவிதமாக எழுதிச் செல்லும் லக்ஷ்மி மணிவண்ணன் ஒரு முழுமையான கவிஞர்.


கண்டராதித்தன்

 

தற்காலக் கவிஞர்களில் கண்டராதித்தன் மிக முக்கியமானவர். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகளைக் கண்டராதித்தன் வெளியிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். வாழ்வின் மெய்க்குள் புனைவுகளைப் பொதிந்து தருகிறார் கண்டராதித்தன். அல்லது புனைவுக்குள் மெய்ம்மையைப் பொதிந்து தருகிறார் என்றும் கொள்ளலாம். இவரது கவிதைகளுக்கான உருவங்கள் தானே கவிதைக்குள் திரள்கின்றன. தினசரி கவிதை எழுதுபவரல்ல கண்டராதித்தன். தோன்றும்போது எழுதுகிறார். அதனால்தானோ என்னவோ இவரது கவிதைகள் பெரும்பாலும் இறுக்கமான கட்டமைப்பிலும், சொற்சிக்கனத்துடனும் காட்சி தருகின்றன. நூதனமான புதுமை மிக்க பொருளை விவரிப்பதில் இவர் ஆசுவாசம் கொள்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் இவரும் கவிதைக்குள் பூடகத்தன்மையை இடையறாது செருகிக் கொண்டே செல்கிறார். புதன்கிழமை என்ற கவிதையில் இறுதி வரிகள் இவை;

புதன்கிழமை இரவும்

புதன்கிழமை பகலும்

தமது துயரங்களை என்னிடம் தெரிவித்தன

நிச்சயம் அதுவொரு புதன்கிழமை இரவா

புதன்கிழமை பகலா என்பது மட்டும்

எனக்கு நினைவில் இல்லை.

-என்று ஒரு போதவுணர்வுடன் கவிதை முடிகிறது. ‘புதன்கிழமைகள்’ என்றே இன்னொரு கவிதை இருக்கிறது.

கண்டராதித்தன் கவிதை மொழியில் மரபு என்றோ தொன்மம் என்றோ கருதத்தக்க காட்சிகளும் இடையிடையே விரிகின்றன. ‘பஞ்சமுக விளக்குகளை / ஒளிச்செய்து / சிவபாத சுந்தரனைப் பணிந்து…’ என்று மரபைத் தொடுகிறார் கவிஞர். ‘உருவும் திருவும்’ நீண்ட கவிதை. மேலெழுந்தவாரியாக இது ஒரு காதல் கவிதை போல் தோன்றுகிறது. ஆனால் கவிதைக்குள் பொருளும், மொழியும் மடங்கி மடங்கி ஒரு லகரியை ஏற்படுத்துகின்றன. ‘…நாசம் பெருக்கிய இரவுகளையெல்லாம் / அள்ளி அள்ளி ஓங்காரியுன் பார்வை படாத / புதர்களில் பதுக்க / இன்னும் இன்னும் என நீ கோரும் குரலை / திசைகள் மூன்றும் தின்று தீர்த்தன…’ என்று நீள்கிறது கவியின் குரல்.

 

‘சா’வும் ‘சீதமண்டல’மும் நீண்ட கவிதைகளே. சீதமண்டலத்தில் ‘மகிஷபுரி’ என்ற ஊர் கட்டமைக்கப்படுகிறது. ‘கண்டராதித்தன் கவிதைகள்’ தொகுப்பில் நித்யா என்ற பெண் சில கவிதைகளில் தோன்றித் தோன்றி மறைகிறார். ‘சீதமண்டலம்’ கவிதை ஒரு நவீன புராணம் போலவே விரிகிறது.

 

‘திருச்சாழல்’ தொகுப்பில் ‘நீண்டகால எதிரிகள்’, ‘சங்கரலிங்கனாரின் லீனியர்குடி’ போன்ற கவிதைகளில் மெலிதான பகடி இழைகிறது. ‘நீண்டகால எதிரிகள்’ கவிதையை, கவிதையறியாதவர் யாரும் எழுதியிருந்தால் உரத்த பிரகடனமாகியிருக்கும். ஆனால் கண்டராதித்தனின் தேர்ந்த மொழிநடை ‘….அவர்கள் நம் விரோதிகள் அல்லர் / நாம் எதிர்பாராத அதிரூபங்கள் / அவ்வளவே…’ என்று வன்முறையாளர்களைப் பகடி செய்கிறது. மெலிந்த மென்மையான சொற்களில் கவிதையைக் கண்டராதித்தன் நடத்திச் செல்கிறார்.

 

‘சங்கரலிங்கனாரின் லீனியர்குடி’ இக்கால இலக்கிய உலகின் போக்கைச் சுட்டுகிறது. ‘சங்கரலிங்கனார்’ என்று ‘ஆர்’ விகுதியைப் போட்டுக்கொள்ளும் பெருந்தமிழ்ச் சார்பாளர்களைக் கவிதையின் தலைப்பிலேயே இடித்துரைக்கிறார். குடிப்பதை, இலக்கியச் சொல்லாடலான லீனியர் – நான்லீனியர் என்று பகுத்துப் பகடி செய்கிறார் கவிஞர். இதுபோல் ‘கடவுள் முட்டாள்களிடம் அன்பாயிருக்கிறார் என்பது உண்மைதான்’ என்ற நீண்ட தலைப்புகொண்ட கவிதையிலும் மெலிதான கிண்டல் உள்ளது. ‘தனித்தவில்’ என்று இசை நிகழ்ச்சிகளில் கூறப்படுவதைப் பகடி செய்கிறது கவிதை.

 

விதவிதமான உருவம், உள்ளடக்கங்களைக் கொண்டு எழுதுபவர் எழுத்துக் கலைஞராகிறார். கண்டராதித்தன் கவிதைகளில் நூதனமும், மொழியும் கைகோர்த்து நிற்கின்றன. கேலியுணர்வையும் எளிதாகக் கவிதையாக்குகிறார். ஒரு பூரணமான கவிஞர் கண்டராதித்தன் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.