கண்ணீரைப் பின்தொடர்தல


முன்னுரை :

குமுதம் நிறுவனம் ‘தீராநதி ‘ யை ஓர் இணைய இதழாக நடத்திய தொடக்க நாட்களில் அதன் துணையாசிரியராக இருந்த தளவாய் சுந்தரம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் ‘தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள்’ என்ற தொடரை அதில் எழுதினேன். இணையத்தின் வசதிக்கேற்ப மிகச்சுருக்கமான வடிவமே அதில் வெளிவந்தது. அக்கட்டுரைகளின் முழுவடிவம் இந்நூல்.

இதில் இருபத்திரண்டு இந்திய நாவல்களைப்பற்றிய கட்டுரைகள் உள்ளன. மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் அதிகமான நாவல்கள் என் கவனத்துக்கு வந்துள்ளன. இந்தி , மராட்டி நாவல்கள் அடுத்தபடியாக. பொதுவாக என் ரசனையை தூண்டியவை என்பதே என் அளவுகோலாக இருந்தது. நூல்வடிவத்துக்குக் கொண்டு வரும்போது பிரதிநித்துவம் குறித்தும் கவனம் கொண்டேன். ‘வனவாசி ‘ குறித்து எழுதியிருந்தாலும்கூட விபூதி பூஷண் பந்த்யோபாத்யாயவின் ‘ பாதேர் பாஞ்சாலி ‘ பற்றி எழுதியிருந்தமையால் இங்கு தவிர்த்துவிட்டேன். இவ்வரிசையில் வைக்க தகுதியற்ற தெலுங்கு, பஞ்சாபி நாவல்களையும் சேர்த்துக் கொண்டேன்

தெலுங்கைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். நான் பதினொன்று தெலுங்குநாவல்களை பரிசீலித்தேன். ஒரு இலக்கியவாசகன் புரட்டிப்பார்க்கும் தகுதி பெற்ற நாவல்கள் ஒன்றுகூட இல்லை- இந்நூலில் உள்ள அற்பஜீவியை பொருட்படுத்தலாம், அவ்வளவே. தெலுங்கில் உண்மையிலேயே இலக்கியம் இல்லையா? நாம் காணும் சிரஞ்சீவி திரைப்படங்களின் தரம்தானா அவர்களின் ரசனை? ஒரு சமூகமே அப்படி ரசனையற்ற தடித்தனத்துடன் இருக்க இயலுமா என்ன? புரியவில்லை.

இந்த நாவல்களைப்படிக்கையில் சிலர் தமிழுக்கு மேலான இலக்கியங்களைக் கொண்டுவருவதையே தங்கள் வாழ்நாள்பணியாக செய்துவருவதைக் கவனித்தேன். துளசி ஜெயராமன், சு.கிருஷ்ணமூர்த்தி, பா.பாலசுப்ரமணியம், இளம்பாரதி , டி.பி.சித்தலிங்கய்யா ஆகியோரை எடுத்துச் சொல்லலாம். குறிப்பாக துளசி ஜெயராமன் இந்திவழியாக அசாமி ஒரியா குஜராத்தி உட்பட பல நூல்களை தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். அவற்றில் ‘ வாழ்க்கை ஒரு நாடகம்’ [பன்னாலால் பட்டேல்] போன்ற பேரிலக்கியங்களும் உண்டு. சு.கிருஷ்ணமூர்த்தி வங்க இலக்கியங்களை தமிழுக்கு தொடர்ந்து கொண்டுவந்திருக்கிறார். த.நா.குமாரசுவாமி, த.,நா.சேனாபதி ஆகியோரின் பங்களிப்புக்கு இணையான சாதனை அது

தமிழில் சொல்லும்படி ஒருவரிகூட எழுதாதவர்கள் இலக்கிய அரசியலில் புகுந்து வசைகள் அமளிகள் மூலம் இதழ்களில் இடம்பெற்று வாசகனுக்கு தெரிந்தவர்களாக ஆகிறார்கள். இலக்கியத்திற்கு வாழ்க்கையை அர்ப்பணித்த இம்மொழிபெயர்ப்பாளர்களை நல்ல வாசகன் கூட நினைவுகூரமாட்டான் என்பதே நம் சூழலின் அவலம். இச்சந்தர்ப்பத்தில் ஒரு வாசகனாக இம்மொழிபெயர்ப்பாளர்களுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

*

இப்போது என்னை ஆட்கொள்ளும் எண்ணங்கள் பல. இவையெல்லாமே பொதுவாக மானுட துக்கத்தின் கதைகளே. வீழ்ச்சியின் , இழப்பின் சித்திரங்கள். இந்திய விவசாயியின் இதிகாசத்தன்மை கொண்ட சமரை சித்தரிக்கும் பன்னாலால் பட்டேலின் வாழ்க்கை ஒரு நாடகமானாலும் சரி , ஒரு அதிகாரியின் ஆணவத்தைக் காட்டும் தகழி சிவசங்கரப்பிள்ளையின் ‘ஏணிப்படிகள்’ஆக இருந்தாலும் சரி. அது இயல்புதான், இலக்கியத்துக்கு எப்போதுமே துயரமே கருப்பொருளாகிறது. துயரக்கடலில் எழும் உதயமே அதனால் மானுட சாரமாக கண்டடையப்படுகிறது

ஆனால் இந்திய நாவல்களில் வரும் மகத்தான பெண் கதாபாத்திரங்களின் துயரமும் தியாகமும் அபூர்வமானவை என்று எனக்குப்பட்டது. இந்திய இலக்கியத்துக்கு என ஏதேனும் தனித்தன்மை இருக்க முடியுமெனில் அது இதுதான் — மண்னளவு பொறுமையும் கருணையும் கொண்ட சக்திவடிவங்களான பெண்கள். ஆதிகவி எழுதிய சீதையின் வடிவம் நம் பண்பாட்டில் ஆழ்படிமமாக உறைந்திருக்கிறது.

இந்தியச் சமூகமே குடும்ப அமைப்பின்மீது அமர்ந்துள்ளது. குடும்பம் பெண்களின் மீது. உறவுகளின் உரசலின் வெம்மையை பெண்களே உணர்கிறார்கள். குழந்தைகளைப் பெற்றவள் என்ற முறையில் இயற்கையின் குரூரத்தையும் முழுமையாக அவர்களே எதிர்கொள்கிறார்கள். மொத்தச் சமூகமே அவர்களின் இடுப்பில் குழந்தைபோல அமர்ந்திருக்கிறது.

எல்லா இந்தியப் படைப்பாளிகளின் நெஞ்சிலும் அவர்கள் அன்னையின் சித்திரம் அழியா ஓவியமாக உள்ளது. அவளுடைய பெரும் தியாகத்தால் உருவானவர்களாக அவர்கள் தங்களை உணர்கிறார்கள். அவர்களின் மிகச்சிறந்த கதாபாத்திரமாக அவளே பேரருளுடன் வெளிப்படுகிறாள். சிவராம காரந்தின் நாகவேணி [ மண்ணும் மனிதரும்] எஸ் எல் பைரப்பாவின் நஞ்சம்மா [ஒரு குடும்பம் சிதைகிறது] விபூதி பூஷன் பந்த்யொபாத்யாயவின் சர்வஜயா [ பாதேர் பாஞ்சாலி ] என உதாரணங்களை அடுக்கியபடியே செல்லலாம்.

மண்மகளான சிதையின் துயரமும் தியாகமும் விவேகமும் தோல்வியேயற்ற மகத்துவமும் இந்நாவல்களின் பெண் கதாபாத்திரங்களில் மீளமீள ஒளிரக் காண்கிறோம். ராஜி [ வாழ்கை ஒரு நாடகம்] பெரிய அண்ணி [நீலகண்டபறவையைத்தேடி] கௌரம்மா [ சிக்கவீர ராஜேந்திரன்] சுமதி [அண்டைவீட்டார்] கார்த்தியாயினி [ ஏணிப்படிகள்]. இவ்வனைவருமே இணையும் ஒரு புள்ளி உள்ளது, அதுவெ இந்திய இலக்கியத்தின் சாரம் என நான் எண்ணுகிறேன். வாசகர்கள் அதை கவனிப்பார்கள் என்றும் நம்புகிறேன்

காளிதாசன் ஆதிகவி வான்மீகியைப்பற்றிச் சொல்லும்போது ‘கண்ணீரைப் பின்தொடர்ந்தவன்’ என்கிறான். கிரௌஞ்சப்பறவையின் கண்ணீரை. சீதையின் கண்ணீரை. இந்திய நாவலாசிரியர்கள் அனைவருமே அப்படித்தான். அவ்வகையில் பார்த்தால் ஆதிகவியின் குரலின் ரீங்காரம்தான் நம் பேரிலக்கியங்களெல்லாம்.

*

தொடர்ந்து வியப்புடன் வாசகர்வட்டம் வெளியிட்ட நாவல்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் வைத்திருக்கும் எல்லா வாசகர்வட்ட நூல்களும் பழைய புத்தகக் கடைகளில் வாங்கியவை, முப்பது, நாற்பதுவருடம் பழையவை. அவற்றின் அட்டையும் கட்டும் இன்னும் உறுதியாகவே உள்ளன. நேர்த்தியான அச்சும் அமைப்பும் கொண்ட நூல்கள். வாசகர்வட்ட மொழியாக்கங்கள் எல்லாமே சிறப்பாக செப்பனிடப்பட்ட அழகிய மொழியில் உள்ளன. இந்த நேர்த்தியும் அர்ப்பணிப்பும் தமிழில் அபூர்வமானவை

வாசகர்வட்டம் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்கு இந்நூல் சமர்ப்பணம். தளவாய் சுந்தரம், மனுஷ்ய புத்திரன் ஆகியோருக்கு நன்றி

தமிழில் வந்த இந்திய நாவல்களின் மூழுமையற்ற பட்டியல் ஒன்று பின்னிணைப்பாக உள்ளது. வாசகர்களுக்கு பயன்படுமென எண்ணுகிறேன்.

 

 

லட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்:

இந்தியா என்ற வண்ணக் கலவை பற்றிய பிரக்ஞை கொண்ட இந்தியர் மிகச்சிலரே. இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் ஒருமுறை சென்று வரவேண்டும் என்ற கனவு உடையவர்கள் மிகமிகச் சிலர். பல உலக நாடுகள், குறிப்பாக மேற்கு, நமக்குத் தரும் ஈர்ப்பை இந்தியா நமக்குத் தருவதில்லை. ஆனால், ஒரு பயணி தன் வாழ்நாள் முழுக்க தீராத வியப்புடன் பயணம் செய்வதற்குரிய பகுதிகள் இந்தியாவில் உள்ளன. இப்பயணம் பௌதீகமான எளிய பயணமாக இல்லாமலிருக்க வேண்டுமெனில் அப்பகுதியின் இலக்கியங்களுடன் ஓர் அறிமுகம் ஏற்பட்டபிறகு அங்கு நேரில் செல்ல வேண்டும்.

இந்தியப் பகுதியில் மிக விரிவாக பயணம் செய்தவனாயினும் நான் வடமேற்கு மாநிலங்களில் அதிகம் சென்றதில்லை __ அதாவது கௌஹாத்தியைத் தாண்டியதில்லை. நில அமைப்பினால் கேரளத்தையும் குமரி மாவட்டத்தையும் ஒத்த இப்பகுதி எனக்குள் ஆழமான கனவுகளைக் கிளறக்கூடியது. அக்கனவுகள் படிந்தமையினால்தான். `லட்சுமிநந்தன் போரா’ எழுதிய `கங்கைப் பருந்தின் சிறகுகள்’ என்ற அஸ்ஸாமிய நாவல் என் மனதைப் பெரிதும் கவர்வதாக உள்ளது. (கங்கா சில் நீர் பாகீ) 1963ல் இது வெளியாயிற்று. 1975ல் இது திருமதி துளசி ஜெயராமன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது.

*

பெண்கள் நகைகளை அணிந்துகொள்ளுதல் பற்றிய ஒரு கண்ணோட்டம் உண்டு. அவை முற்காலத்தில் இலைகளாலும் கொடிகளாலும் அவளுக்கு அணிவிக்கபட்ட குல அடையாளங்கள். எந்தக் குலத்துக்கு அவள் கட்டுப்பட்டவள் என்பதைச் சொல்லுபவை. கன்றுகளின் கழுத்துமணிகள் மற்றும் கட்டுக்கயிறுகள் போல. காலப்போக்கில் அந்தத் தளைகள் பொன்னால் ஆனவையாக மாறின. கௌரவச்சின்னங்களாக, அழகுப்பொருட்களாக ஆயின. அவை இல்லாமல் வாழ்வதே முடியாது என பெண்கள் எண்ணுமளவுக்கு. கலாச்சாரத்தளைகள் என்றால் அப்படி நமக்கு நெடுங்காலமாக பழகி, நம் ஆழ்மனதால் குறியீடாக மாற்றப்பட்டு நம்மாலேயே விரும்பி அணியப்படுவனவாக இருக்கும். ஆகவே ஆழமான அகவிடுதலை இல்லாமல் நம்மால் உதறமுடியாதனவாக இருக்கும். அத்தகைய ஒரு கலாச்சாரத்தளையின் கதை இந்நாவல்.

மிக எளிய கதை இது. கற்பனாவாத சாயல் கொண்டது. சோனாய் என்ற அழகிய சிறு ஆற்றங்கரையில் உள்ள சோனாய் பரியா என்ற கிராமம். ஆற்றங் கரையில் வசிக்கும் சிறுகுடும்பம். அதன் இளம் கதாநாயகியான வாசந்தி. அவளது தமையன் போக்ராம். காதலன் தனஞ்சயன். இந்நாவல் வாசந்தியின் காதலின் துயரக்கதை; ஒருவேளை வங்க நாவல்களில் பரிச்சயமுள்ளவர்கள் இத்தகைய கதைகளை பலமுறை படித்திருக்கக்கூடும். அந்த நதியும், வாசந்தி போன்ற கபடற்ற கிறாமிய அழகியும் கூட அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்தவையாக இருக்கலாம். `கங்கைப் பருந்தின் சிறகுகள்’ ஒரு வகையில் வங்க நாவல்களின் பாணியில் அமைந்துள்ளது. இந்த அஸ்ஸாமியப் படைப்பு. அஸ்ஸாமிய கலாச்சாரம் மீது வங்கத்தின் ஆழமான பாதிப்பின் தடயமாகவும் இந்நாவலை கொள்ளலாம்.

வாசந்தி தன் தமையனுடன் வீட்டுக்குவரும் தனஜ்சயனை நினைத்துக் கொள்வதில் தொடங்குகிறது நாவல். அவளுக்கு அவன் மீது மெல்ல ஏற்படும் ஈர்ப்¨ப்பம் அதன் குதூகலத்தையும் குற்ற உணர்வையும் அழகியமுறையில் சொல்லிச்செல்கிறார் ஆசிரியர். தனஞ்சயனுக்கும் அவளுக்குமான முதல் சந்திப்பும் இனிமையாக அமைந்துள்ளது. தன் பெயர் அர்ஜுன் என்கிறான். ”…இல்லாவிட்டால் அர்ஜுனனின் பிறபெயர்கள். உனக்கு பிடித்ததை வைத்துக்கொள்”. ”எனக்கு ஏன் பிடிக்கவேண்டும்?” என அவள் செல்லக்கோபம் கொள்கிறாள். அவன் சிரிக்கிறான். அவள் அவன் பெயரை அறிய குறுகுறுப்பு கொள்கிறாள். தனஞ்சயன் என்று அறியும்போது பரவசம். அப்பெயர் அவள் நாவிலும் மனதிலும் இனிக்கிறது. மறைமுகமாக அவன் அவள் அழகைப்பற்றி சொல்லும்போது பெண்ணாக அவள் உணர்வதன் பரவசம்.

ஹோமியோ வைத்தியனான தனஞ்சயன் கிழக்கு அஸ்ஸாமைச் சேர்ந்தவன். அப்பா அம்மாவை இழந்தவன். கொடுமைக்கார பெரியப்பாவிடமிருந்து தங்கையைக் காப்பாற்ற வீட்டைவிட்டு கிளம்புகிறான். ஆனால் அவன் திரும்பிவருவதற்குள் பிரம்மபுத்ரா வீட்டையும் நிலத்தையும் உள்ளடக்கிவிட்டது. தங்கை ஒரு கிழவனுக்கு மனைவியாக விற்கப்படுகிறாள். அவன் மனமுடைந்து இந்தப்பகுதிக்கு வந்துசேவை செய்கிறான். மக்களால் மிக விரும்ப்பபடுகிறவனாக ஆகிறான். அவன் தன் கதையைச் சொல்லும்போது வாசந்தி அழுதபடி அவன் நெஞ்சில் சாய்கிறாள். அவர்களின் காதல் உறுதியாகிறது

வாசந்தியின் தாய் தனஞ்சயனை நம்ப முடியாது, முற்றிலும் நல்லவனானாலும் அவன் உறுதியற்றவன் என்கிறாள்.அவள் அண்ணி அவளுக்கு உதவி செய்கிறாள். சோனாய்பரியா கிறாமத்தில் சிறுவணிகனாக இருக்கும் பொக்ராமின் வணிகம் புதிதாககப் போடப்படும் சாலைகளால் இல்லாமலாகிறது. பெரிய வணிக சக்திகள் வந்து அவனை விழுங்குகின்றன. தேசத்தின் முதல் தேர்தல் வருகிறது. போட்டியிடும் இரு நபர்களில் பணபலமுள்ள சுபோத் சைக்கியா தந்திரம் மிக்கவர். அவருக்கு ஊரைத்தெரிந்த ஆள் தேவை. பொக்ராம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவன். வியாபாரியாக ஊரை அறிந்தவன்.அவர் அவனை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார். அரசு கடன்கள் வாங்கிக் கொடுக்கிறார். சட்டென்று பொக்ராமின் கையில் பணம் புழங்க ஆரம்பிக்கிறது. அதார்மீகமான பணம்.

 

சுரண்டிக்கொழுத்த முதலாளியான சுபோத் சைக்கியா வெல்லக்கூடாது என மக்களைத்திரட்டி போராடும் தனஞ்சயன் பொக்ராமுக்கு விரோதி ஆகிறான். தேர்தலில் வெல்லும் சைக்கியாவுடன் சேர்ந்து பொக்ராம் அரசு காண்டிராக்ட் எடுத்து செல்வந்தனாகிறான். தனஞ்சயன் வாசந்தி காதல் அவனுக்குத்தெரியும்போது அவன் கொந்தளிக்கிறான். வாசந்தி வலுக்கட்டாயமாக ஊரின் செல்வந்தன் மகனான மதுராவுக்கு நிச்சயம் செய்யப்படுகிறாள். கடும் துயரில் அவள் தனிமையில் இருக்கிறாள்.

தனஞ்சயன் அவளை இரவோடிரவாக கூட்டிச்சென்றுவிடுவதாகச் சொல்லி கடிதம் அனுப்புகிறான். அவளுக்கு அது விடுதலையாகவே படுகிறது. இரவில் அவன் படகுடன் வருகிறான். ஆற்றில் காத்துநிற்கிறான். வீட்டைவிட்டு வெளியே செல்லும் வாசந்தி அவனை காண்கிறாள். ஆனால் அவனுடன் போக அவளால் முடியவில்லை. அவள் கையை தொட்டு அவளுடைய எதிர்கால மாமியார் போட்ட நிச்சய மோதிரத்தை கழற்ற அவளால் முடியவில்லை. பெண்ணுக்கு நகை ஒரு விலங்கு, ஒரு வாக்குறுதி அது. எப்படி அதை மீற முடியும். அவள் திரும்பிவந்துவிடுகிறாள். அந்தமோதிரம் போடப்பட்டமையாலேயே அவள் இனி மதுராவின் மனைவிதான்.

வாசந்தி மெல்ல தனஞ்சயனை தன் நினைவிலிருந்து விலக்கி விடுகிறாள். மதுராவுக்கு மனைவியாகிறாள். அவனுடன் இனிய குடும்பவாழ்க்கையைத் தொடங்குகிறாள். அவன் குடும்பத்தை மகிழ்விக்கிறாள். ஆனால் மதுரா சீக்கிரமே ஊர்வம்புகள் வழியாக தனஞ்சயனுக்கும் தன் மனைவிக்கும் இடையே இருந்த உறவைப்பற்றி அறிகிறான். அவளை கூட்டிப்போகவந்த படகோட்டியின் மனைவியின் சொல் வன்மை அது. அவன் மனமுடைகிறான். வாசந்தியுடன் பேச மறுக்கிறான். விஷயமறிந்த வாசந்தி அழுதபடி நடந்ததைச் சொல்லி அவள் தவறாக ஏதும் செய்துவிடவில்லை என்று சொல்கிறாள்.

ஆனால் மதுரா அவளை உண்மையில் உள்ளுர வெறியுடன் காதலிப்பவன். அவனால் வாசந்தியின் மனதில் இன்னொரு காதலன் இருந்தான் என்பதையே ஏற்க இயலவில்லை. அவன் பைத்தியம்போல சைக்கிளில் போகும்போது லாரியில் அடிபட்டு இறக்கிறான். வாசந்தி குற்ற உணர்விலும் சோகத்திலும் நடைபிணமாகிறாள். அவளுக்கு குழந்தை பிறக்கிறது

அந்நிலையில் அவளைப்பார்க்கவரும் தனஞ்சயன் அவளிடம் தனக்கு மாறாமல் உள்ள காதலை அவள் அறியச்செய்கிறான்- பேசாமலேயே. ஆனால் அவளால் அதை ஏற்க முடியவில்லை. என் கழுத்தில் மதுராவின் தாலி இருக்கிறது. என் உடலில் அவனுடைய வெள்ளைப் புடவை இருக்கிறது என்று மறுத்துவிடுகிறாள். ‘நான் ஒரு இந்து கைம்பெண். என் எல்லைகளை என்னால் மீற முடியாது”

காலம் செல்கிறது. துயரங்களில் இருந்து விடுபடும் வாசந்தியில் மெல்ல வாழ்க்கை பற்றிய நினைவுகள் மீள்கின்றன. அதற்குக் காரணம் புதிய வேலைக்காரி மன்படி. கிராமத்துக் காதல்கதைகளை அவள் சொல்கிறாள். துணிந்து முடிவெடுத்தவர்கள் வாழ்க்கையை அடைவதை. ஒரு காதல் வெல்ல, காதலர்கள் ஓடிப்போக , வாசந்தியே பணம் கொடுத்து உதவுகிறாள். அது அவள் மனத்தை மாற்றுகிறது. அவள் தனஞ்சயனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். அவனுடன் வரத்தயாராக இருப்பதாக. ”…. நாம் இன்னும் கிழவர்களாக ஆகவில்லை. எஞ்சிய காலத்தை இப்படியே கழித்துவிடுவதா? இதுபற்றி ஒருவிதமான ஏற்பாடும் செய்ய முடியாதா? எத்தனையோ தார்மீக நூல்களை படித்தேன். ஆயினும் பரலோகத்து புண்ணியத்தைப் பற்றி எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. எந்தக்கடவுள் என்னை இத்தனை சோதனைகளுக்கு ஆளாக்கினாரோ அவர் என்னை மறுவாழ்க்கையில் சுகமாக வைப்பார் என எப்படி நம்ப முடியும். நான் உங்களுக்குரியவள். இதைக்கேட்டு ஊரார் பிரமித்துவிடுவார்கள். ஆனாலும்……”

தளைகளை உடைக்க அவள் தயாராகிவிட்டாள். காரணம் உயிரின் ஆதிவேட்கை. வாழும் இச்சை. ஆனால் அது தனஞ்சயனை பீதிகொள்ளச் செய்கிறது. அவன் அப்படி வாசந்தியைப் பார்த்ததேயில்லை. வேட்கை காதலாக மாறுவேடமிட்டால்தான் ஆணால் ஏற்க இயலும். அவன் ஊரைவிட்டே சென்று விடுகிறான்

லட்சுமி நந்தன் போரா வாழ்க்கையின் அடிப்படை இச்சைகளைத்தான் கங்கைப்பருந்தின் சிறகுகள் என்கிரார். இச்சையின் ஏழுவண்ணம் கொண்ட சிறகுகள். வானில் வட்டமிடும் வல்லமை கொண்டவை. ஆனால் சிறகுவிரிக்க உரிமையில்லாத வாழ்க்கை.

*

இந்த நாவலை இதன் எளிமையை மீறி முக்கியமாக ஆக்குவது இரண்டு விஷயங்கள் மிகையான அலங்காரங்கள் இல்லாமல் அனுபவம் சார்ந்து உருவாகும் நுட்பமான தகவல்களுடன் இதில் விரிந்து எழுந்துவரும் இயற்கையின் மனம் கவரும் தோற்றம். இயற்கையை சொல்வடிவமாக ஆக்குவதில் வங்க நாவலாசிரியர்களான `விபூதி பூஷன் பந்தோ பாத்யாய’, `அதீன் பந்தோபாத்தியாய’ ஆகியோரினால் ஊக்கம் கொண்டவராக `போரா’வையும் குறிப்பிடலாம். நுட்பமான கிராமியத்தகவல்கள் நிரம்பிய நாவல் இது. ஜோகா என்ற அரிசியின் மணம் கமழ்வதனாலேயே ஜகான்மால் என்று அழைக்கப்படும் காட்டுப்பூனை, ஜல்மயீ [ நீர் நிறைந்தவள்] பாப் சிலா [பாவக் கல்] போன்ற பெயர்கள் கொண்ட ஊர்கள். தண்ணீரில் ஒரு முறை துடுப்பு வலித்தால் செல்லும் தூரம் பேஊ என அளவிடும் நாட்டுப்புற முறைகள். மீண்டும் மீண்டும் வாசந்தியின் நெஞ்ச அலைகளுடன் இணைக்கப்படும் சோனாய் நதியின் சித்திரங்கள் எல்லாம் சேர்ந்து ஓர் அஸாமிய மலைக்கிராமத்தைக் கண்ட அனுபவத்தை உருவாக்குகின்றன

இரண்டாவதாக குறிப்பிடவேண்டிய விஷயம் எளிய கள்ளமற்ற மலைக்கிராமம் ஒன்று நவீன காலகட்டத்தை நோக்கி அரசியல் வழியாகவும் வணிகம் வழியாகவும் கல்வி வழியாகவும் நகர்வதன் சித்திரம் இதில் உள்ளது என்பதே. அறுபது எழுபதுகளில் எழுதப்பட்ட வெற்றிகரமான பல இந்திய நாவல்களில் உள்ள சித்திரம்தான் இது. இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது. எனினும் இதிலுள்ள ஓர் இழப்பு, குழந்தை வளர வளர அதன் களங்கமின்மை உதிர்வதுபோல, மனதை சோகத்தில் ஆழ்த்துகிறது.

மனிதர்களால் எளிதில் மீறமுடியாத மனத்தளைகள் குறித்த எளிய சித்திரம் இந்நாவல். காலம் மாறுகிறது. புற வாழ்க்கை எளிதில் மாறுகிறது. அகத்தைக் கட்டுப்படுத்தும் சக்திகளை அகத்தால் கூட காண முடிவதில்லை. அவற்றை வெல்வதும் எளிதாக இல்லை.

(கட்டுரையை மீள் பிரசுரம் செய்ய அனுமதி அளித்து உதவிய ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி.)

 நன்றி:  சரண்  முத்து ( புகைப்பட உதவி)


  • ஜெயமோகன்

 

 

1 COMMENT

  1. அருமை. நாவலைப் படிக்கத் தூண்டும் பகிர்வு. நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.