களவு

உள்ளூர் இன்ஸ்பெக்டர், உள்ளே வந்து சல்யூட் அடித்தார். ”அய்யா, அந்தாளை விசாரிச்சுட்டேன். பேரு டேனியல் தங்கதுரை தான். ஒரு பழைய லாரி வச்சுருக்காரு. திருட்டு மணல் ஓட்டுறாரு. கையோடு அழைச்சுட்டு வந்துட்டேன்.  ஏதும் பிரச்சினைன்னா, கேஸ் புக் செஞ்சு உள்ளே வச்சுடலாம்ய்யா” என்றார். அவருடைய குழப்பம் புரிந்தது. “அதெல்லாம் இல்லை, நீங்க அவரை உள்ளே வரசொல்லிட்டு போகலாம்” என்றேன். திரும்பவும் சல்யூட் அடித்துவிட்டு வெளியேறினார்.

கன்மேன் செல்வம்,  கதவை திறந்துவிட டேனியல் உள்ளே வந்தான். பழுப்பு நிறத்தில் பாலியஸ்டர் வேட்டியும், கோடுபோட்ட சட்டையும் அணிந்திருந்தான். தாடி முழுவதும் நரைத்திருந்தது. போலிஸ் அழைத்து வந்ததில் பயந்திருந்தான்.

”வணக்கம் அய்யா”, என்று கும்பிட்டான்.

செல்வத்தை பார்த்தேன். அவன் புரிந்துக்கொண்டு, தோளில் தொங்கும் மெஷின்கன்னுடன் அறையைவிட்டு வெளியேறி கதவை ஒட்டி நின்றுக்கொண்டான்.

என்னை தெரியுதா டேனியல்?

ஜட்ஜய்யா கூப்பிட்டிங்கன்னு, இன்ஸ்பெக்டரு சொன்னாரு.  வண்டி ஓட்டும்போது ஏதும் சைடு கொடுக்காம வந்தியான்னு மிரட்டுனாரு. இரண்டு நாளா நான் வண்டிக்கு போகலைங்க.

அவனுக்கு சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. தெரிவதற்க்கு வாய்ப்பில்லைதான். யோசித்துப்பார்த்தால், இந்த ஊருக்கு நான் பிறகு வரவேயில்லை. இந்த ஊரை பற்றி நினைக்கும்போதெல்லாம், சிறு வயதில் நல்ல உறக்கத்திலிருக்கும்போது, ஒழுகும் ஓடுகள் வழியாக உள்ளிறங்கும் மழை, கொடுக்கும் நடுக்கமே நினைவில் எழும். அம்மா, மழைத்தண்ணீரை உறிஞ்ச சாக்குகளை கொண்டு வந்து போட்டிருப்பாள். அதன் மீதிருந்து எழும் ஊசல் நாற்றம் இப்போதும் நாசியை நிமிண்டுகிறது. வீடு முழுவதும் ஒழுகும். வீடு என்பது என்ன, ஒரு முற்றமும், பழைய இரும்பு பீரோ வைக்கும் அறையும் தானே. ஸ்டோர்ஸ் வீடு என்றழைக்கப்படும் அந்த குடியிருப்பில் எங்கள் குடித்தனத்தையும் சேர்த்து ஆறு குடும்பங்கள் இருந்தன. எல்லாவற்றுக்கும் சேர்த்து இரண்டு லெட்ரீன். அந்த வீட்டுக்கு மாத வாடகை நாற்பது ரூபாய். சாமினாதா ரைஸ் மில்லில் கணக்கு எழுதி கிடைக்கும் சம்பளத்தில், ஆறு பேர் கொண்ட குடும்பத்தை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் உழன்ற அப்பா, நான் பத்தாவது வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வந்ததை காண கூட கொடுத்துவைக்கவில்லை. அவர் இறந்தபின்பு தாய்மாமா ஊருக்கு சென்று ஒண்டிக்கொண்டோம். உண்மையில் இந்த ஊரை மறக்கவே இத்தனை நாள் முயன்றிருந்தேன்.

”டேனியல், என் பேரு அப்போ மாவு வெங்கட்டு. உன் கூட பத்தாவது படிச்சேன் இந்த ஊர் ஸ்கூல்லே”, என்றேன்.

அவன் கொஞ்சம் பயம் நீங்கி, சம நிலைக்கு வர முயன்றான். அப்போதும் பிடி கிடைக்காமல், ”ஒண்ணா ஹாக்கி விளையாண்டிங்களா” என்றான்.

நீ அப்போ டிஸ்ட்ரிக் ப்ளேயர்லே. செயிண்ட் ஜோசப் ஸ்கூலுக்கும், நம்ம ஸ்கூலுக்கு நடக்குற போட்டின்னா, நீ தானே ஸ்டார். எனக்கு அதுக்கும் வெகு தூரம் . நான் படிப்ஸ் குரூப். முதல் பெஞ்ச். ஸ்கூல் பர்ஸ்ட் வந்தேன் டென்த்லே. எங்க வீடு மழுப்பன் தெருவுலே இருந்துச்சு. மாவுமில்லுலே வேலை பார்த்தாரு எங்கப்பா.

”ஓ.. இப்போ ஞாபகம் வருது சார். உங்கப்பா மில்லுலே கணக்கு புள்ளையா இருந்தாருலே” என்றான். கொஞ்சம் சகஜமாகியிருந்தான்.

”முதல்லே உட்காரு” என்று சேரை காட்டினேன். ஒரு ஓரமாக தயங்கி உட்கார்ந்தான் டேனியல்.

இன்னைக்கு காலைலே கருடகம்பத்துக்கிட்டே லாரி பக்கத்துலே நின்னுகிட்டு இருந்தே. நான் கார்லே இருந்து பார்த்தேன். அதான் இன்ஸ்பெக்டருகிட்டே உன்னை கூட்டிவர சொன்னேன்

”ஆமா. அந்த பக்கமா சைரன் வச்ச கார் போணுச்சு, அது நீங்கதானா?. ரொம்ப ஆச்சரியமா இருக்கு சார். எப்படி என்னை கரெக்டா கண்டுபிடிச்சிங்கன்னு தெரிலை. இன்னும் உங்க சின்ன வயசு மொகத்தை என்னால ஞாபகத்துக்கு கொண்டு வர முடிலை”

இந்த ஊரில் எந்த நல்ல நினைவுகளும் இல்லை. எனவே ஊரை விட்டு வெகுவேகமாக நான் ஓடிக்கொண்டேயிருந்தேன். ஆனால், நாம் எவற்றை மறக்க நினைக்கிறோமோ அவையெல்லாம் நினைவில் இன்னும் அழமாக பதிகிறது. இந்த ஊரும், மனிதர்களும் அப்படியே நினைவில் இருக்கிறார்கள். அப்போது, நாங்கள் பத்தாவது வகுப்பிலிருந்தோம். இருபாலாரும் சேர்ந்து படிக்கும்பள்ளியென்றாலும், உண்மையில் ஒரு வகுப்பிற்க்கு நான்கு அல்லது ஐந்து பெண்கள் இருந்தால் பெரிது. எங்கள் வகுப்பில், எண்ணெய் செட்டியார் வீட்டு தனம், ஒல்லிகுச்சி பிரேமா, சைன்ஸ் வாத்தியார் மகாலிங்கத்தின் மகள் சியாமளா என மூன்றே பேர் இருந்தனர். எனக்கும் சியாமளாவிற்க்கும் தான் படிப்பில் போட்டி இருந்தது. சியாமளா, மகாலிங்கம் சாரை போலவே நல்ல சிவந்த மேனி. சுருள் கேசம். அழகான பெரிய கண்கள். பெரும்பாலான காலை ப்ரேயர்களில் அவள் ஸ்லோகம் பாடுவாள். அவளை எல்லா பாடங்களிலும் முந்தினாலும், எப்போதும் கணிதத்தில்  என்னை தோற்கடித்தாள். கணித பேப்பர் திருத்தி வருகையில் மட்டும் அவள் முகத்தை பார்க்க பிடிக்காது. பெண்களுக்கென்று ஒரு தனி பெஞ்சு. அதற்கு பின்பெஞ்சு ஆண்கள் வரிசை. அதில் நான் அமர்ந்திருப்பேன்.

கடைசி வரிசையில் டேனியல் தங்கதுரை இருந்தான். அவனருகே பூதமங்கலம் சாதிக், தியேட்டர் ஓனர் பையன் ராஜ மகேந்திரன் ஆகியோர் அமர்ந்திருப்பார்கள். மாப்பிள்ளை பெஞ்ச் என்றழைக்கபட்ட அந்த வரிசை முழுவதுமே ஸ்போர்ட்ஸ் ப்ளேயர்கள்தான். அனைவருமே இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கோட்டடித்துதான் பத்தாவது வந்திருந்தனர். விளையாட்டு போட்டிகளில் பள்ளி, தொடர்ந்து மெடல் அடிக்கவேண்டுமென்றே, சிலரை பத்தாம் வகுப்பில் நிறுத்திவைக்குமென்பார்கள்.

டேனியல், அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் முழித்துக்கொண்டிருந்தான்.  டிராவலர்ஸ் பங்களாவின் பெரிய ஹால், வெளியே நிற்கும் போலிஸ் இவையெல்லாம், எதுக்கு வம்பு என்கிற நிலையிலேயே அவனை வைத்திருந்தது.  அவனை சகஜமாக்காமல் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமும் இல்லை. டவாலி மாணிக்கத்தை கூப்பிட்டு, அறையிலிருந்த பாட்டிலை எடுக்க சொன்னேன். மாணிக்கம்,  அம்ருத் சிங்கிள் மால்ட் விஸ்கி பாட்டிலை எடுத்து வந்தான். இரண்டு கிளாஸ் என்றதும் மாணிக்கம் குழம்பினான். பிறகு ஐஸ்பேக், தண்ணீர் கொண்டு வந்ததும் அவனை போகலாம் என்று சைகை காட்டினேன்.

என்ன டேனி அடிப்பில்லே?

எப்பயாச்சும் உண்டு சார்.

இரண்டு கிளாஸில் மதுவை விட்டு, ஐஸ்துண்டங்களை போட்டு தண்ணீர் கலந்தேன். டேனியல் கிளாஸை எடுத்துக்கொண்டான். சியர்ஸ் சொல்லலாமா என்று தயங்கினான். ”சியார்ஸ்டா டேனி”, என்றேன். எனக்கு நேரே நிமிர்த்தி சிரித்தான். பிறகு, ஒரே மூச்சில் குடித்துவிட்டு வாயை துடைத்துக்கொண்டான்.

எவ்வளோ பெரிய நெலமலே இருக்கே வெங்கட்டு. ரொம்ப சந்தோஷம். ஹைகோர்ட் ஜட்ஜ் என் ப்ரெண்டுன்னு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா? உன்கிட்டே சொல்றதுக்கு என்னா? மொதல்லே இன்ஸ்பெக்டரு வந்து கூப்பிட்டதும், உண்மைலே ரொம்ப பயந்துட்டேன். ஊர்லே லாரி பெருத்துபோச்சு. அப்பா செஞ்சுட்டு இருந்த தொழிலு. உன்ன மாறி நல்லா படிச்சிருந்தா, வேலைக்கு போயிருக்கலாம். சவாரி சுத்தமா கிடையாது. மாசத்துலே நாலைஞ்சு வாட்டி மணலடிப்பேன். அதுலே ஏதாச்சும் கிடைச்சா உண்டு.  மணலடிச்சது தெரிஞ்சுதான் நீ கூப்பிடுறியோன்னு ரொம்ப பயந்துட்டேன். இப்போ இருக்குற நிலைமைலே லாரியும் போச்சுதுன்னா, சிங்கிதான்.

எத்தனை பசங்க டேனி உனக்கு ?

இரண்டு பசங்க. இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. அவனுகளும் என்னை மாதிரியே, ஒழுங்கா படிக்கலை வெங்கட்டு. ஒருத்தன் திருப்பூர் பனியன் பேக்டரிலே வேலை பாக்குறான். இன்னொருத்தன் என்னோட லாரிலே ஓடுறான். உனக்கு எத்தனை பிள்ளைக?

ஒரு பொண்ணு. கல்யாணமாகி சிங்கப்பூர்லே இருக்கா. பேரன் இருக்கான்.

உங்கப்பா இருந்தா ரொம்ப சந்தோசபடுவாரு வெங்கட்டு. எங்கேயோ போயிட்டே.

இரண்டாவது ரவுண்ட் அவனாகவே ஊற்றிக் கொண்டான். அதையும் ஒரே மூச்சில் குடித்தான். டேனியல் வியர்த்திருந்தான்.

உனக்கு வாட்டாறு செந்திலு ஞாபகம் இருக்கா வெங்கட்டு? என்னா மாதிரி போல்வால்ட் தாண்டுவான். நாலரை மீட்டரு அசால்ட்டா தாண்டுவான். டிஸ்ட்ரிக் கோல்ட் அடிச்சான். கால் ஒவ்வொண்ணும் சும்மா தேக்கு கணக்கா இருக்கும். போன வருசம் போயிட்டான் வெங்கட்டு. வெவசாயம் தான் ஒண்ணுமில்லாம போச்சே இந்த பக்கம். பாலிடால் குடிச்சிட்டான். நீங்க எல்லாம் இந்த வூர வுட்டு கிளம்பினது கரெக்ட்டு வெங்கட்டு. இங்கேயிருந்தா கஷ்டம் தான்.

என்னால் செந்திலை நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. கூட்டம் ஆர்ப்பரிக்க, வலது கையில் சிவப்பு கலர் ரிஸ்ட் பேண்டுடன்,பெனால்டி கார்னரில் கோல் அடித்துவிட்டு, ஹாக்கி பேட் உயர்த்தி ஸ்டைலாக சுற்றி வந்த டேனியல் மட்டுமே நினைவில் இருந்தான்.

செமிபைனல் ஹாக்கி மாட்ச்லே சேலம் டீமுக்கு எதிரா நீ போட்ட கோல் ஞாபகம் இருக்கு டேனி. அதுக்கு உனக்கு பி.டி வாத்தியார் சிவராமன் நூறு ரூபாய் கொடுத்தாரு.

அது ஒரு காலம் வெங்கட்டு. அதெல்லாம் மறந்துபோச்சு. நூறு ரூபாயா கொடுத்தாரு? அவர் பெரிய ஸ்போர்ட்ஸ்மேன். காலைலே ஆறு மணிக்கு கிரவுண்ட்லே இல்லன்னா, விசில் கயித்தால காலிலேயே போடுவாரு. அப்படியெல்லாம் இப்போ ஆளு இல்லை.  நீதான் இதெல்லாம் ஞாபகம் வச்சு இருக்குறே.

டென்த் பெற்றொர் நாள் விழாலே நீ ஆடுன பாட்டும் ஞாபகமிருக்கு டேனி.

ராஜா.. கண்ணு.. போகாதடி..

நீ போனா, நெஞ்சுக்கு ஆகாதடி..

எவ்வளவு கிளாப்ஸ் அந்த பாட்டுக்கு. ஒன்ஸ்மோர் கேட்டு பசங்க ரகளை செஞ்சு, திரும்ப நீ ஆடுனே. ஒரு காலை தூக்கி, இடுப்பை மட்டும் அசைத்து நீ போட்ட அந்த ஸ்டெப், அப்படியே ரவிச்சந்திரன் மாதிரி இருந்துச்சு. அவ்வளோ க்ரேஸ்.

”அதெல்லாம் போயிடுச்சு வெங்கட்டு”, வெட்கத்துடன் சிரித்தான் டேனியல்.

ரவிச்சந்திரன் நடிக்கவந்தபோது, எம்ஜிஆர், சிவாஜி என இருவருமே உச்ச நட்சத்திரங்கள். ஆனால், இருவருக்குமே வயதாகியிருந்தது. ரவிச்சந்திரனின் உடல்மொழி துள்ளிக்கொண்டேயிருப்பது. நல்ல அழகன். அவருடைய நடனம் என்பது துள்ளல் தான்.   உடனடியாக பெண்களுக்கு பிடித்தவராக அவர் ஆகிபோனார்.  அவரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடியது. அப்போதுதான் ”நான்” திரைப்படம் வந்தது. அதில் அவர், ஜெயலலிதாவுடன் ஆடும் பாடல் தான்  ”ராஜா கண்ணு போகாதடி”. ரவிச்சந்திரனின் உடல்மொழியில் உள்ள துள்ளலை அப்படியே கொண்டுவந்தான், டேனியல்.  ஜெயலலிதாபோல் வேடமிட்ட பெண்ணை சுற்றி வந்து, ”நினைத்தேனா.. பார்ப்போமென்று” என்று அவன் இடுப்பை அசைத்து அந்த ஸ்டெப்பை ஆடியபோது, பெண்கள் கத்தினார்கள்.  பெண்கள் கத்தியதும் ஆண்கள் பக்கமிருந்து ஒன்ஸ்மோர் கேட்டார்கள். சத்தம் அதிகமானதும், சமூக அறிவியல் ஆசிரியர் தியாகராஜன் வெற்றிபுன்னகையுடன், தலைமையாசிரியரிடம் வந்து மெதுவாக, ஒன்ஸ்மோருக்கு பர்மிஷன் கேட்டார். அவர்தான் வருடாவருடம் கலை நிகழ்ச்சிகளுக்கான இன்சார்ஜ். கிராப்தலையும் டைட் பேண்டும் அணிந்து சினிமா ஹீரோபோல் தான் பள்ளிக்கு வருவார் தியாகராஜன். அவருடைய உடல்வாகுக்கும், குரலுக்கும் சம்பந்தமேயிருக்காது. பெண்களைபோல் ஹஸ்கி வாய்ஸில் பேசுவார் தியாகராஜன். நல்ல மூடிலிருந்த தலைமையாசிரியர், சிரித்தபடி ஒன்ஸ்மோருக்கு அனுமதி கொடுத்தார்.  தியாகராஜன் சார், திரும்பி சந்திரிகா டீச்சரை பார்த்து மர்ம புன்னகை சிந்தியபடி, மேடைக்கு சென்று, டேனியலை திரும்ப ஆட சொன்னார். டேனியல், அதேபோல் துள்ளலுடன், இன்னும் அதிக உற்சாகத்துடன் ஆடினான். பெண்கள் கைதட்டினார்கள். திரும்பி சியாமளாவை பார்த்தேன். அவளும் கத்தினாள். அவளுக்கு ஏன் இந்த கழுதை கூத்தெல்லாம் பிடிக்கிறது என்று கோபம் வந்தது.

”அந்த டான்ஸ்லேதானே சியாமளாவை பிடிச்சே”, என்றேன்.

நிமிர்ந்து பார்த்து சிரித்தான், டேனியல். ”அதெல்லாம் இல்ல வெங்கட்டு. அதுக்கும் முன்னாடியே பழக்கந்தான்.” என்றான்.

பத்தாம் வகுப்பில் யார் ஸ்கூல் பர்ஸ்ட் என்பதில் எனக்கும், சியாமளாவுக்கும் போட்டி இருந்தது. முதல் தேர்வு தமிழ் தாள். அன்று என்னுடைய அறையில் தான் சியாமளாவும் எழுதவேண்டும். பத்து மணியை தாண்டியும் அவள் வரவில்லை. பதட்டமாக இருந்தது. எப்படியும் இன்னும் ஐந்து நிமிடங்களில் வரவில்லையென்றால், தேர்வு எழுத முடியாது. ஒரு தேர்வு எழுதவில்லையென்றாலும், அந்த வருடம் தோல்விதான்.   அனைவரும் அவரவர் இடங்களில் அமர்ந்தோம். கண்காணிப்பாளராக தியாகராஜன் வந்திருந்தார். அவரும் சியாமளாவின் இடம் காலியாக இருப்பதை பார்த்து, ”இது யார் இடம்டா?”, என்றார். ”மகாலிங்கம் சார் பொண்ணு சியாமளா இடம் சார்”, என்றேன். ”ஏன் வரலை உடம்புக்கு ஏதும் முடியலையா?”  என்று கேட்டார். அழுகை முட்டியது. ”தெர்லை சார்”, என்றேன். கடைசிவரை அன்று அவள் வரவேயில்லை. அவள் இடத்தை பார்த்துக்கொண்டே தேர்வு எழுதினேன்.

தேர்வெழுதிவிட்டு வெளியே வந்து நண்பர்களுடன் பேசியபோதுதான் பரிட்சை எழுத டேனியலும் வரவில்லை என்பது தெரிந்தது. சில நாட்களில், இருவரும் ஊரை விட்டு ஓடிவிட்டார்கள் என்னும் தகவல் வெளிவந்தபோது நம்ப முடியவில்லை. எப்படியும் அடுத்த தேர்வுக்கு வந்துவிடுவாள் என்று ஒவ்வொரு நாளும் அவளை எதிர்பார்த்திருந்தேன். அடுத்தடுத்த தேர்வுகளுக்கும் இருவரும் வரவில்லை. இனி சியாமளியை பார்க்கவே போவதில்லை என்பதை உணர்ந்தபோதுதான்,  வலி பிசையும் தனிமையை அடைந்தேன். வெயில் சுட்டெரிக்கும் பிற்பகல் பொழுதுகளில் அவள் வீடிருக்கும் தெருவில் திரிந்துக்கொண்டிருந்தேன். பெரிய பூட்டு மட்டுமே என்னை பார்த்துக்கொண்டிருந்தது. சில நாட்களில் மகாலிங்கம் சார் வேறு ஊருக்கு மாத்தலாகி போய்விட்டார், என்றார்கள்.

”தமிழ் பரீட்சை அன்னைக்கு இரண்டு பேரும் எங்கே போனிங்க?”

”வேளாங்கண்ணிக்குதான் போனோம். பரீட்சை எல்லாம் முடியட்டும்ன்னு நான் சொன்னேன். சியாமளிதான் பிடிவாதமா நின்னுட்டா.”

“அங்கேயே கல்யாணம் செஞ்சுகிட்டீங்களா?”

அதெல்லாம் இல்லை வெங்கட்டு. மகாலிங்கம் சார், போய் எங்கப்பாரு கால்லே விழுந்துட்டாரு. பொண்ணு திரும்பி வரலைன்னா, தூக்குலே தொங்கிடுவேனுட்டாரு.  எங்கப்பாரு ஊரு முழுக்க ஆள் வச்சு தேடினாரு. ஒரு லாரிகாரன் கண்ணுலே நாங்க அம்புட்டுட்டோம். நாலு  நாள்லே எங்களை வந்து புடிச்சிட்டாங்க. சியாமளியை உடனே அவங்கம்மா ஊருக்கு அனுப்பிட்டாங்க. எனக்கு எங்கப்பாரு செம உதை.  கை உடைஞ்சு போச்சு. என்னை மாமா வூட்டுலே கொண்ட விட்டுட்டாங்க. அங்கேயே கொஞ்ச நாள் டூடோரியல்  போனேன். மாமா பொண்ணையே கல்யாணம் செஞ்சு வச்சாங்கே. அதெல்லாம் முடிஞ்சு போச்சுடா.

மீண்டும் பாட்டிலை எடுத்து அரை கிளாஸ் ஊற்றி, அதில் தண்ணீரை கொஞ்சமாக கலந்து உடனடியாக எடுத்துக்குடித்தான்.

தன்னுடைய போனில் எதையோ தேடினான்.

”ராஜா.. கண்ணு.. போகாதடி,

நீ போனா… நெஞ்சுக்கு ஆகாதடி”

பாடலை தேடி ஒலிக்கவிட்டான். டேனியல் எழுந்து ஆட துவங்கினான். ”நினைத்தேனா, பார்ப்போமென்று”, இடுப்பை அச்சு அசலாக அதே போல் அசைத்து ஆடினான் டேனி. ”வணக்கம் அய்யா”  என்று பவ்யமாக வந்து நின்றவன் இல்லை இவன். ஹாக்கி பேட் தூக்கி அலட்சியமாக மைதானத்தை சுற்றி வரும் டேனி எழுந்திருந்தான். அதெல்லாம் மறந்துடுச்சு என்று சொன்னதெல்லாம் பொய். அவனுடைய பொன்கணங்கள் இவை.

ஆடி முடித்து ஓரேடியாக மூச்சிரைக்க, சேரில் சரிந்தான். தண்ணீரை எடுத்து குடித்தான்.

”அப்புறம், சியாமளாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியுமா?” என்று கேட்டேன்.

”அவளை அவங்கம்மா ஊருக்கு கொண்டு போயிட்டாங்க. மகாலிங்கம் சாரும் டிரான்ஸ்பர் ஆகி அங்கேயே போயிட்டாரு. இப்போ மாதிரி போன் எதுவும் அப்போ கிடையாதே. அதுனால ஒரு தகவலும் தெரியலை. அங்கேயே படிச்சப்புறம் சொந்தத்துலே அவளுக்கு கல்யாணமாயிடுச்சு.

”பப்பி லவ்” என்றேன்.

அப்படின்னா? என்று கேட்டான் டேனியல்.

அந்த மாதிரி வயசுலே வர்ற ஒரு மாதிரி பாலின ஈர்ப்புடா. எல்லோரும் அதை தாண்டிதான் வர்றோம். அதுலே ஒரு அர்த்தமும் இல்லை. இப்போ நினைச்சு பார்த்தா அவளுக்கு இதெல்லாம் பெரிய காமெடியா தெரியும். தாந்தான் இதெல்லாம் செஞ்சோமான்னு வெட்கமா கூட இருக்கும். உண்மையா பார்த்தா, இது பெரிய அசட்டுத்தனம்தானே.  உடனடியா மறந்துடுவாங்க.

கிளாஸில் மிச்சம் வைத்திருந்த விஸ்கியை எடுத்துக்குடித்தான். இல்லை என்பதுபோல் தலையசைத்தான் டேனி. “சியாமளி அமெரிக்காலே இருக்கா, வெங்கட்டு. ஒரு பத்து வருசம் முன்னாடி, எப்படியோ என்னோட செல் நெம்பர் கிடைச்சு, போன் செஞ்சா. ”நல்லா இருக்கியா டேனி”ன்னு கேட்டா. அதே குரல்.”, என்றான்.

சேரில், கண்களை மூடி சரிந்திருந்த திருட்டுமணல் ஓட்டும் டேனியலுடன், இத்தனை வருடங்கள் கழித்து ”நல்லாருக்கியா டேனி?” என்று கேட்கும் அமெரிக்கா சியாமளியின் முகத்தை, நினைவில் எழுப்ப முடிந்தது. உள்ளே சட்டென்று ஏதோ உடைந்தது.  சிறிது நேரம் கழித்து “தூக்கம் வருது, இன்னொரு தடவை பார்ப்போம்.” என்று சொன்னேன். டேனியல் எழுந்து தள்ளாடினான். ”உன் போன் நெம்பரை கொடு வெங்கட்டு” என்று கேட்டு பதிவு செய்துக்கொண்டான். பிறகு, எழுந்து வெளியே போனான்.

அடுத்த நாள் காலை, சென்னை திரும்புகையில் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தேன். “அய்யா சொல்லுங்கய்யா” என்றார். “அந்த டேனியல் திரும்பவும் மணல் அடிச்சான்னா, லாரியை சீஸ் செஞ்சு உள்ளே தள்ளிடுங்க.“ என்றேன்

Previous articleமேரி ஆலிவர் கவிதைகள்
Next articleநகர்தல்
ரா.செந்தில்குமார்
ரா.செந்தில்குமார் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர். 1976 ஆம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்தவர். ஜப்பான், டோக்கியோவில் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இசூமியின் நறுமணம் மற்றும் பதிமூன்று மோதிரங்கள் என இரு சிறுகதை தொகுப்புகள் வெளியாகி பரவலானக் கவனத்தைப் பெற்றுள்ளது. சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

5 COMMENTS

  1. கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்பதுதான் கதையின் நாயகன் டேனியல் அவன் இறுதி வரை இயல்பாக , உண்மையாக இருக்கிறான் ஆனால் அந்த நீதிபதி அப்படி இல்லை. மனிதனுடைய ஈகோதான் அவனுடைய விதியை நிர்ணயிக்கிறது. எனக்கு பிடித்திருந்தது.

  2. வெங்கட் ,டேனியல் உரையாடல் வழியாக பள்ளிப்பருவ நினைவுகளை அழகாக கொண்டு போனது வாசிக்க நன்றாக இருந்தது.வெங்கட்டுக்கு சியாமளா மேல் இருந்த ஒரு தலைக்காதல் பணமும் பதவியும்,படிப்பும் இருந்த தன் மேல் அன்பு வராமல் டேனியல் மேல் வந்தது ஒரு கட்டத்தில் எரிச்சலாகி விட்டிருக்கிறது.தன் கற்பனையில் சியாமலாவின் வாழ்க்கை இப்படித்தான் சீரழிந்து போயிருக்கும் என்று நினைத்தவனுக்கு அவள் அமெரிக்காவில் இருக்கிறாள் என்பது நெருடல் அதோடு இன்னும் வாழ்க்கையின் அன்றாடங்களுக்கே போராட்டிக்கொண்டிருக்கும் டேனியல் மேல் இன்னும் ஈர்ப்பு இருப்பதை அவரது ஆணவம் தாங்கிக்கொள்ளமுடியாமல் தனக்கு முடிந்த வழியில் பழி தீர்த்துக்கொள்கிறான்.ஒவ்வொரு மனிதனுள்ளும் எல்லையற்ற ஆணவம் தேங்கிக்கிடக்கிறது அதை வெளியே எடுப்பதற்கு ஒரு மெல்லிய கீற்று போதும்.

  3. மிக அற்புதம்! என்னே அழகான நிறைவு வரி! காதலும், வன்மமும் காலம் முடியுமட்டும் துரத்துகிறதே!

  4. அற்புதமான சிறுகதை!! அதிகாரம் எப்போதும் வன்மம் கொண்டதாக இருக்கும் என்பதற்கு வெங்கட்டு சாட்சி.

    டேனியல், சியாமளா, வெங்கட்டு பெயர்கள் கச்சிதமாக இருக்கிறது. அதற்குப்பின் இருக்கும் சாதியும் வர்க்கமும் அற்புதமாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறது இந்த சிறுகதை

  5. பால்யத்தை அழகாக நினைவில் மலர்த்தும் கதை.மனமொத்தகாதல் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளும். இருதலைக்காதல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஆற்றாமையும் அகங்காரமும் கொண்டாடடும் என்பதைக் கச்சிதமாக சொல்லியுள்ளார் செந்தில் குமார். களவொழுக்கத்திவ் சிக்குண்ட டடேனியல் களவாளி என்றால் ஒருதலைக் காதல் தோல்விக்கு பல பத்தாண்டுகளைக் கடந்தும் வஞ்சம் தீர்க்கும் லெங்கட் நீதிபதியாக இருந்தபோதும் கயவாளி ஆகியே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.