நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் பகுத்தறிவுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் நக்கீரன். டெல்டாவின் வளமையையும் அதன் தற்போதைய நிலையையும் கண்கூடாகக் கண்டவர். பொறியியல் படிப்பைத் தொடர முடியாமல் சிங்கப்பூர், மலேசியா, போர்னியோ, மாலத்தீவு ஆகிய நாடுகளில் பல்வேறு வேலைகள் செய்திருக்கிறார்.
கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர், உயிரைக் குடிக்கும் புட்டிநீர், அலையாத்திக் காடுகளும் அனல்மின் நிலையங்களும் என பல்வேறு சூழலியல் பிரச்சினைகளைக் கவனத்திற்குக் கொண்டு வந்த எழுத்தாளர் நக்கீரன், காடோடி நாவலில் போர்னியோ காடுகளின் அழிவைப் பதிவு செய்தார். நீர் எழுத்து புத்தகத்தில் தமிழகத்தின் தண்ணீர் வரலாற்றை சங்க இலக்கியங்கள், பெண்கள், சமூக, அரசியல் கண்ணோட்டத்துடன் தண்ணீர் ஆவணமாக எழுதியுள்ளார்.
கனலியின் சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழுக்காக மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் தொகுக்கப்பட்ட பகுதிகள்:
இன்றைக்கு இயற்கை, சூழலியல் ஆகிவற்றின் அழிவு, இழப்பிலிருந்து சுற்றுச்சூழல் சார்ந்த சொல்லாடல் தீவிரமடைந்திருக்கிறது. ஒன்றை இழக்கும்போதுதான் அதைப் பற்றிப் பேச வேண்டுமா?
இயற்கையைப் பொதுவாக, நாம் ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அது சாத்தியமில்லை. மனிதன் ஹோமோ சேப்பியனாகப் பரிணமித்த பிறகு, இன்னும் சொல்லப் போனால் வேட்டையாடும் சமூகமாக இருக்கும் போதுகூட, இயற்கை சார்ந்த பெரிய பாதிப்பு உருவாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். முதல் இயற்கை அழிவு வேளாண்மையில் இருந்து தொடங்குகிறது. என்றாலும் இந்த இனத்தின் வளர்ச்சிக்கு வேளாண்மையே முக்கியமாக இருந்ததால் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றானது. எந்த ஒரு இனக்குழு வளர்கிறதோ, அந்த இனக்குழுவுக்குத் தேவையான நிலையான உணவு ஆதாரங்களுக்காக வேளாண்மை தொடங்கப்பட்டது. இயற்கையின் முதல் அழிவு அப்போதிருந்து தொடங்குகிறது என்று சொல்லலாம். உணவு என்பது வணிகமாக மாறத் தொடங்காத காலம் வரையிலும் இது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது; மிகப் பெரிய அழிவாக உருப்பெறவில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வாழ்வைப் பதிவு செய்திருக்கும் சங்க இலக்கியங்கள் இயற்கையைப் போற்றிப் பேசுகின்றன என்றே நாம் நினைப்போம், ஆனால் அவற்றை ஆழமாக வாசிக்கும்போது, அவை இயற்கையின் இழப்பைப் பற்றியே பேசுகின்றன என்பதைக் கண்டுகொள்ள முடியும். ‘இப்படி இருந்த இடம் இப்படி ஆகிவிட்டதே!’ என்பன போன்றவற்றைச் சங்க இலக்கியங்களில் பார்க்க முடியும்.
இயற்கையின் இன்றைய அழிவைப் பார்த்துதான் நவீன இலக்கியவாதிகள், சுழலியலாளர்கள் அதைப் பற்றி பேசுகிறார்கள் என்றில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருக்கிறார்கள். இயற்கையின் இழப்பைப் பற்றி, அது சார்ந்த நினைவேக்கம் குறித்து அவை பேசுகின்றன. இயற்கையின் இன்றைய சூழலுடன் சங்க இலக்கியம் சுட்டும் இயற்கை அழிவுகளை ஒப்புநோக்க அவை அழிவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனினும் ஒவ்வொரு காலகட்டதிலும் அழிவைப் பற்றி பேசிக் கொண்டே வந்திருப்பதால், அதன் இரண்டாயிரம் ஆண்டுத் தொடர்ச்சியாகவே இன்றைய போக்கை நாம் அணுக வேண்டும்.
இதற்கிடையில் இந்த அழிவு எங்கு பெருமையாகப் பேசப்படுகிறது என்று நோக்கினால், இந்திய அளவில் அர்த்த சாஸ்திரத்தில் அதை நாம் பார்க்க முடியும்; தமிழிலும் சங்க இலக்கியத்தில் “காடு கொன்று நாடாக்கி…” என்று இது சுட்டப்படுகிறது.
ஒருபுறம் இழப்பின் ஏக்கத்தைப் பேசக்கூடிய அதே வேளையில் மற்றொரு புறம் அதை அடுத்த கட்ட வளர்ச்சி என்று பெருமிதமாக எண்ணக்கூடிய ஒரு இடமும் இங்கே இருந்திருக்கிறது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த அழிவைப் பார்த்துக் கொண்டே தான் வந்திருக்கிறோம். ஒவ்வொரு படிநிலையிலும் இருக்கக்கூடியவர்கள் இந்த அழிவை ஓர் எதிர்நிலையில் கண்டு அதைப் பெருமிதமாகப் பதிவு செய்த இலக்கியங்களும் இருக்கின்றன.
இன்றைக்கு உலகளவில் சூழலியல் போக்கை எடுத்துக் கொண்டால், சூழலியலை எதிர்க்கக் கூடிய ஆட்களும் இருக்கிறார்கள். இப்படிதான் அதை அணுக முடியும். இது ஒரு நீண்ட காலத் தொடர் நிகழ்வு. ஆதரவு ஒருபக்கமும், எதிர்ப்பு மறுபக்கமும் இருந்துகொண்டே தான் இருக்கும்.
இவற்றில் எதை மதிப்பீடு செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
இந்தப் பின்னணியின் இயற்கை என்ற சொல்/ கருத்தாக்கம் இன்று வந்தடைந்திருக்கும் இடம் என்ன?
இன்றைய நவீன உலகில், இயற்கை என்பது ஒருபுறம் பொருளாதார வளர்ச்சிக்கான மூலப்பொருளாகவும், அதற்கு நேரெதிராக மற்றொருபுறம் அதைப் புனிதப்படுத்தும் போக்கும் காணப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இவை இரண்டுமே ஆபத்தானவை.
புவியில் எல்லாமே மனிதனுக்காகப் படைக்கப்பட்டது என்பதால் எதையும் இழக்கலாம் என்ற விளக்கம் வளர்ச்சியின் பெயரால் பொருளாதார நோக்கில் வழங்கப்படுகிறது; மாறாக இயற்கையைப் புனிதப்படுத்துவது என்பது கருத்தியல், மதவாதம் சார்ந்த தூய்மைவாதத்துக்கு இட்டுச் செல்லும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது.
இந்த இரண்டுமே ஒருவகையில் கருத்துமுதல்வாதப் பின்னணியைக் கொண்டிருக்கின்றன. உலகம் மனிதனுக்காகவே படைக்கப்பட்டது என்ற பைபிளை அடிப்படையாகக் கொண்ட கருத்தின் அடிப்படையில், மேற்கத்தியவாசிகளுக்கு உலகம் என்பது இறைவனால் மனிதர்களுக்குக் கீழே உள்ள ஒன்றாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
பொருளாதார வளர்ச்சி என்பது பொருள்முதல்வாதம் என்று சொல்லிக் கொண்டாலும், அதன் அடியாழத்தில் இப்படியான ஒரு கருத்துமுதல்வாதம் இயங்கத் தான் செய்கிறது. அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் மதவாதிகளாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் அவர்களையும் அறியாமல் ஆழ்மனதில் இந்த உலகம் மனிதனுக்குக் கீழ்தான் என்பதை மதம்தான் போதிக்கிறது என்பதால் இப்படிச் சொல்கிறேன்.
இயற்கையைக் காக்க வேண்டும், புனிதப்படுத்த வேண்டும் என்பவர்களை நோக்கி, புனிதப்படுத்தப்படும் அந்தப் புனிதவெளி யாருக்கானது, எல்லோருக்கும் பலனுண்டா, எல்லோரும் அதை அனுபவிக்க முடியுமா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆக, இந்த இரண்டுமே ஆபத்தான தளத்தில் இயங்குகின்றன.
இன்றைய சூழலில், பொருளாதாரத்தைக் கைவிட்டுவிட்டு மீண்டும் பழைய வாழ்க்கைமுறைக்குத் திரும்பிச் செல்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, இயற்கை மீதான நம்முடைய தாக்கம் இன்றைக்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதில் இருந்து நாம் பரிசீலனையைத் தொடங்க வேண்டும். அதைத் தொடங்குவதற்கான நேரம் இப்போதும் நமக்கு இருக்கிறது என்றே நினைக்கிறேன். அதன் தொடக்க நிலையில்தான் இருக்கிறோம். சரியான நேரத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும்போது, இதை எங்கு, எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது மிக முக்கியம். எடுத்துகாட்டாக, மாற்று எரிசக்தி.
இன்னும் சற்று விளக்க முடியுமா?
புதைபடிவ எரிபொருட்களான பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு இனிமேலும் தொடர்ந்தால் உலகம் அழியும்; அதை நிறுத்திவிட்டால் மாற்று என்ன? வளர்ச்சி முக்கியம் என்று நினைப்பவர்கள், மரபுசாரா எரிசக்தியைக் கொண்டு வந்தால் அதன் போதாமைகளைப் பட்டியலிடுவார்கள். சரி இதற்கு மாற்று என்ன என்று அவர்களிடம் கேட்டால், அவர்களிடம் பதில் இருக்காது.
மறுபுறம் இயற்கையைப் புனிதப்படுத்துபவர்கள், அதில் கைவைக்கவே கூடாது என்பார்கள், ஆனால் அவர்களால் வளர்ச்சியை விட முடியாது. அவர்களும் நவீன வளர்ச்சியை அனுபவித்துக் கொண்டே தான் இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், இந்த இரண்டையுமே மட்டப்படுத்திக் கொண்டு போகக்கூடிய எதிர்காலப் போக்கு, வெறும் மாற்று எரிசக்தி மட்டுமே வைப்பதைவிட, எந்த வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்,
உதாரணத்துக்கு, சூரிய தகடை எடுத்துக்கொண்டால், சென்னையில் தற்போது 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, 4 ஏக்கர் நிலம் தேவை. ஒருவேளை இந்த மரபுசாரா எரிசக்தி தயாரிப்பு முதன்மை பெற்றால், விவசாய நிலங்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை கூரைகளைப் பயன்படுத்தினால், சென்னை மாநகரத்தின் மின் தேவையை நிறைவேற்றலாம் என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் பெருநிறுவனங்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில், பொதுமக்களின் வாங்கும்சக்திக்கு மீறியதாக உள்ளது. பெருநிறுவனங்களுக்கு மானியம் உண்டும்; இதே மானியத்தைப் பொதுமக்களுக்கு வழங்கினால் கிராமங்கள் வரை தங்களின் மின் தேவைகளை அவரவர்களே நிறைவேற்றிக் கொள்ள முடியும். அவர்கள் பொருளாதாரத்திற்கேற்ப அதை அமைத்துக் கொள்வார்கள். மரபுசாரா எரிசக்தியைப் பயன்படுத்துவது குறித்த கவனம் இங்கு இருக்கிறது, ஆனால் விருப்பம் இல்லை என்பதே உண்மை.
சில காலத்துக்கு முன்பு பெட்ரோல் என்பதே நம்முடைய பயன்பாட்டில் இல்லை; முன்னதாக நீராவியைப் பயன்படுத்தினார்கள். அதற்கு மாற்று இல்லை என்று நினைத்திருந்தால் மின்சாரம் வந்திருக்காது. பிறகு ஏன் புதைபடிவ எரிபொருட்களைத் தாண்டிச் செல்ல முடியவில்லை. சற்றுமுன் சொன்னதைப் போல், முடியவில்லை என்பதில்லை, விருப்பமில்லை என்பதே உண்மை.
மிகக் குறைந்த எண்ணிக்கையில், சிறிய அளவில் கொண்டு செல்லும்போது, மிகப் பெரிய இழப்பு ஏற்படாது என்று நினைக்கிறேன். இதில் இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. எலெக்ட்ரிக் கார் வந்தது, சரி. அதன் மூலம் உங்கள் நகரத்தில் மாசு ஏற்படாது. ஆனால் அனல் மின்நிலய வட்டாரங்களில் மாசு வரும். மீண்டும் பழைய நிலைக்குதான் போகிறோம்.
மறுசுழற்சி எங்கிருந்தாலும் உங்களிடம் வந்துசேரும்; அமில மழையாகக் கூட அது உங்களை வந்தடையலாம். நிலத்தில் படிகிறது, நிலத்தடி நீரை மாசாக்குகிறது. வெளிப்படையாக நமக்குத் தெரியும் அழிவுகள் இவை; அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் அடுத்த கட்டத்துக்குச் செல்லாமல் இருப்பதுதான் பிரச்சினை. ஹைட்ரஜன அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமே இல்லை. வளிமண்டலத்தில் இருந்து ஹைட்ரஜன் எடுக்கும்போது வரும் பிரச்சினைகளை ஆய்வு செய்து, அதை மேற்கொள்ளலாம். வளிமண்டலத்தில் இருக்கும் ஹைட்ரஜன் தீர்ந்துவிடுவதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அதை எதிர்கால ஆராய்ச்சிதான் சொல்லும். அதற்காக முயற்சி செய்யாமலும் இருக்கக் கூடாது.
சூழலியல் சொல்லாடலில் முக்கியமாக இடம்பெறும் இன்னொரு சொல், வளர்ச்சி!
வளர்ச்சி என்கிற கருத்தாக்கத்தை முன்வைப்பது கார்பரேட்தான். இது அறிவியல்பூர்வமானது என்றால் தவறு கிடையாது. ஆனால் பொருளாதார லாபத்தைக் கணக்கில் கொண்டு “வளர்ச்சி”யை முன்வைக்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது.
சிறிய உதாரணம் ஒன்று: மின்சாரத்தைக் கண்டறிந்த மைக்கேல் ஃபாரடே அதற்குக் காப்புரிமை வைத்துக் கொள்ளவில்லை. காப்புரிமை கோரியிருந்தால் அவருடைய குடும்பம்தான் இன்றைக்கு உலகில் மிகப் பெரிய செல்வந்தர்களாக இருந்திருப்பர். உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்ததாக, நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாக மின்சாரம் இடம்பெற்றுவிட்டது. மின்சாரத்துக்குப் பிறகு வந்த கண்டுபிடிப்புகள் முதலீட்டை லாபமாக எடுத்துவிடும் நோக்கில் தான் அறிமுகமாகின. மின்சாரம் போன்று யாருக்கும் ராயல்டி கொடுக்கத் தேவையில்லை என்கிறபோது, எல்லாமே மக்களிடம் இயல்பாகப் போய்ச் சேர்கிறது. வளர்ச்சியில் அறிவியலுக்கு முன்பாக லாபம் என்கிற சொல்தான் வருகிறது. இப்படியான சூழலை உருவாக்கியது குறிப்பிட்ட ஒரு பகுதியினர்தான். நவீன அறிவியல் வளர்ச்சியின் முழு பலனை அனுபவிப்பவர்களும் அந்த ஒரு பகுதியினர்தான்.
ஆனால் அதன் தீமைகளை ஒதுக்க இடமும், சுமக்க ஒரு பெரும் கூட்டம் தேவைப்படுகிறது. யுரேனியத் தாதுவைக் கொண்டு அணுசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் பயன் அந்தத் தாது எடுக்கப்பட்ட இடத்திலுள்ள மக்களை ஒருநாளும் சென்றடையாது. ஆனால், கண்டிப்பாக அதன் கழிவும் குப்பையும், அவற்றால் சூழலியல் பாதிப்பும்தான் அவர்களுக்குக் கிடைக்கும்.
வளர்ந்த நாடுகள் இதுபோன்ற “வளர்ச்சி”யின் பயன்களை அனுபவிப்பவையாகவும், மூன்றாம் உலக நாடுகள் உலகின் குப்பைத் தொட்டிகளாகவும் உள்ளன. உலகமயமாக்கல் இதை எளிமைப்படுத்துகிறது. நிலத்துக்கு கடல் எப்படிக் குப்பைத் தொட்டியாக இருக்கிறதோ, அதைப் போல, சூழலியல் பாதிக்கும் காரணிகளால் மூன்றாம் உலக நாடுகள் குப்பைத் தொட்டிகளாக இருக்கின்றன. குப்பைத் தொட்டி எங்கிருக்கிறது என்பதைக் கொண்டுதான் வளர்ச்சியைக் கணக்கிட முடியும்,
பொதுவாக, மூன்றாம் உலக நாடுகள் என்பவை பொருளாதார ரீதியிலும், சூழலியல் ரீதியாகவும் ஒரு குப்பைத் தொட்டியாக கருதப்படுகிறது. உலகமயமாக்கலுக்காக முதலில் கிழக்கு, மேற்காக நாடுகளைப் பிரித்தனர்; அது சரிவரவில்லை. பின் வடக்கு, தெற்காகப் பிரித்தபோது ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளால் புவியியல் ரீதியாக மேலை நாடுகளோடு ஒன்றிணைய முடியவில்லை என்பதால் இதுவும் ஒத்துவரவில்லை. அதன் பின் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் (வளராத) எனப் பிரித்தது பொருத்தமாக இருந்தது. இன்னும் எளிமயாகச் சொன்னால் சுரண்டும் நாடுகள், சுரண்டப்படும் நாடுகள் என பிரிக்கலாம். இதைச் சூழலியலோடு எவ்வாறு ஒப்பிட வேண்டுமெனில், சுரண்டபடும் நாடுகள் என்பவை, இயற்கை வளம் உள்ள நாடுகள். சுரண்டும் நாடுகள் என்பது, இயற்கை வளம் இல்லாத நாடுகள்.
இந்தியா போன்ற சுரண்டப்படும் அல்லது இயற்கை வளம் உள்ள நாடுகள் இதை எதிர்கொள்வது எப்படி?
ஒன்று சூழலியல் கருத்து; இரண்டு மொழி. மொழியைச் சூழலியலுக்குப் பயன்படுத்தப் போனால், அசல் காடு எப்படியிருக்கும் என்பதைத் தெரியப் படுத்துவதுதான் காடோடி.
சூழலியலுக்கும் மொழிக்குமான தொடர்பு மிக ஆழமானது. மொழியின் சொல்வளம் என்பது நிலத்தின் சூழலியலோடு தொடர்புடையது. அந்த அடிப்படையில் ஒரு நிலத்தில் இருந்து உயிரினம் ஒன்று அற்றுப் போகும்போது அது சார்ந்த சொற்களும் அற்றுப் போகின்றன.
மொழி சார்ந்த ஒரு சிக்கலான காலகட்டத்தில்தான் நாம் வாழ்றோம். முந்தைய காலங்களில் ஒரு மொழியின் ஆதிக்கம் என்பது படையெடுப்பின் மூலம் நிகழ்ந்தது. ஆரியர்கள் வருகையின்போது சமஸ்கிருதம் நுழைகிறது; அதன் பின் சிரமணர்கள் பாலி மொழியைக் கொண்டுவருகிறார்கள். இஸ்லாமியர் ஆதிக்கம் தமிழ்நாட்டில் அதிகம் இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட அளவில் நின்றுவிட்டது. என்றாலும் அரசு கலைப் பொருட்களில் உருது சொற்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆங்கிலேயர்கள் ஏற்கெனவே இருந்த பார்சி மொழிச் சொற்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அரசு சார்ந்த கலைச் சொற்கள் அப்படியே தங்கிவிட்டன. மக்கள் சார்ந்து மொழிகளில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. அதற்கு பின் விஜயநகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழியில்கூட பெரிய பாதிப்புகள் இல்லை என்றாலும், சமஸ்கிருதத்தின் பாதிப்பு அதிகமாகிறது; விஜயநகர பேரரசு வீழ்ச்சிக்குப் பின் தேங்கிப் போய்விடுகிறது. ஆனால் ஆங்கிலத்தை அப்படிக் கணிக்க முடியாது; கண்ணுக்குத் தெரியாத படையெடுப்பாக அது இருக்கிறது. இதில் இணையம் போன்றவை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால் இரட்டை மொழியிலேயே சவாரி செய்யக்கூடிய இந்தப் போக்கு சவாலானது. தமிழ்மொழி இடைக்கால மொழியாகத் தோன்றி அழிந்திருந்தால்கூட கவலைப்பட வேண்டாத சூழ்நிலை உண்டாகும்; இது தொன்மைமிக்க மொழி என்பதால் இதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
மொழியோடு பொருளாதாரத்தைத் தொடர்புபடுத்தும்போதுதான் ஆங்கில ஆதிக்கம் வலுப்பெறுகிறது. தமிழ்ப் பற்றுள்ளவர்கூட தம் பிள்ளை ஆங்கில மொழி கற்கவில்லையென்றால், எதிர்காலம் இல்லாமல் போய்விடுமோ என அஞ்சும் சூழல் உண்டாகிறது. மொழிக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லையென பல ஆய்வுகள் நிரூபித்தாலும், அது மக்களிடம் போய்ச் சேரவில்லை. பொருளாதார மொழியாக கட்டமைப்பில் ஆங்கிலம் வெற்றி பெற்றுள்ளது. பண்பாட்டுக்குச் சமஸ்கிருதம் போல, பொருளாதாரத்துக்கு ஆங்கிலம் உள்ளது. இலத்தீன் போன்ற பண்பாட்டு மொழிகள் வழிபாட்டு மொழிகளாகச் சுருங்கிபோனதும் உண்டு, ஆனால் ஆங்கிலத்தை அவ்வாறு சுருக்கிட முடியாது. எனவே ஆங்கிலத்தையும் முழுமையாக விட்டுவிடாமல், தமிழையும் தக்க வைத்துக் கொள்ளும் சவாலும் இந்த காலகட்டத்தில் இருக்கிறது. எளிய மக்கள் இதை வேறு மாதிரி எதிர்கொண்டார்கள், சமாளித்தார்கள்.
உங்களுக்குப் புதிதாக ஒரு சொல் தேவை எனும்போது, அது உங்கள் பண்பாட்டில் இல்லையென்றால் அடுத்த பண்பாட்டில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாகப் பழங்குடிகளின் மொழியில் இருந்து நாம் ஏராளமான சொற்களைப் பெறமுடியும். அதைக் கொண்டு அதற்கு இணையான மற்றொரு சொல்லை உருவாக்கலாம். ஆனால் இவை சார்ந்த எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பதுதான் தவறு.
மறைநீர் என்ற சொல் தமிழில் பரவலாகும்முன் சூழலியாலாளர்களிடம் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. இன்றைக்கு அச்சொல் சாதாரணமாக எல்லா இடங்களிலும் வழங்கிவருகிறது; மாற்று சொல் தேவைப்படாத அளவுக்கு எளிமையாக அது பயணிக்கிறது. இப்படியான சொல் உருவாக்கம் புழக்கத்தில் நுழைந்துவிட்ட பிறகு அதை மாற்றுவது சிரமம்!
ஆண்டாள் என்னை வசீகரிக்கக்கூடிய கவிஞர்; தமிழில் ஆகச்சிறந்த கவிஞர் யாரென்று கேட்டால், ஆண்டாள் என்றுதான் சொல்வேன். ஏனென்றால், எழுதப்பட்டு 12 நூற்றாண்டு கண்டும் ஆண்டாளின் மொழி இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. தேவாரம் என்னதான் இனிமையான பாடல்களைக் கொண்டிருந்தாலும், அது இன்றைய காலகட்டத்தில் நடைமொழியாக இருக்கவில்லை. தமிழ் இலக்கியத்தில் வட்டார வழக்கைப் பயின்றவர் ஆண்டாள்தான். செய்யுள் வழக்காக மிகச் சாதாரணமாக அதைக் கையாண்டுள்ளார். இலக்கிய மொழியில் வட்டார வழக்கைப் பயன்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.
இந்தப் பின்னணியில் சூழலியல்/ பசுமை இலக்கியத்தின் தேவை எத்தகையது?
பழங்குடிகள் மட்டுமல்லாமல், மிக ஆதிகால மக்களின் சிந்தனையானது, இயற்கையை ஒரு உயிர்ப் பண்பாகத்தான் பார்த்திருக்கிறது. அதாவது இயற்கையை உயர்திணையாகவே பார்க்கப்பட்டது. ஆனால், மேற்கத்திய நாடுகள் அஃறிணையாக பார்க்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. இந்த அடிப்படையில் இயற்கையை அணுகியவர்கள் பொருளாதாரத்திற்காக எதையும் செய்யலாம் என்று அதைச் சுரண்ட ஆரம்பிக்கிறார்கள்; அரசியல் அமைப்புகளை வைத்துக் கொண்டு நேரடியாகவோ, மறைமுகமாகவோ சுரண்டுகிறார்கள். அதனால் சுரண்டப்படும் பகுதியில்தான் பாதிப்புகள் உண்டாகின்றன. ஆகவே தான் அந்தப் பகுதியில் இருந்து சூழலியல் சம்பந்தப்பட்ட சொற்கள் உருவாகின்றன. மூன்றாம் உலக நாடுகள் தங்கள் வலிகளை அவர்கள் மொழியில் சொல்லுகின்றன. சூழலியல் பாதிப்பு சார்ந்த வார்த்தைகள் இவ்வாறு தான் உருவாகின்றன. இதேபோல், இயற்கை பாதிப்புகளைப் பற்றி பேச வேண்டிய கட்டாயம் சுரண்டும் நாடுகளிடம் இல்லை.
சூழலியலைப் பற்றி வளங்களைச் சுரண்டும் நாடுகள் பேச மாட்டார்கள், ஏனென்றால் மூன்றாம் உலக நாடுகளின் வலியை அவர்களால் உணர முடியாது. அழிவிலிருந்துதான் சூழல் சார்ந்த மொழி பிறக்கிறது. அது காலத்தின் தேவை. இது ஏன் சுரண்டப்படும் நாடுகள் பேச வேண்டுமெனில், அடிவாங்குபவன் தான் வலியைப் பேச முடியுமே தவிர, அடிப்பவன் வலியை உணர முடியாது. வட மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றது; ஆனால் அவை வெறும் பழங்குடிகள் போராட்டமாகச் சுருங்கிவிட்டது. இப்போதும் பழங்குடிகளின் போராட்டம் என்று சொல்கிறோமே தவிர, சூழலியல் போராட்டமாகக் கருதவில்லை. இந்தப் பின்னணியில் உருப்பெறும் சுழலியல் வார்த்தைகள் பழங்குடிகள் மொழியாகவே கருதப்படும். ஆனால், அவர்களின் வலி நமக்கு, நமது ஊர்களுக்கு வரும்போதுதான் நம்மால் உணரமுடியும்!
பொருளாதாரம், அறிவியல் சார்ந்து கொண்டு போனால் ஒரு சில மக்களிடம் கருத்துக்களைக் கொண்டு சேர்க்க முடியாது. ஆனால் பண்பாடு, கலாச்சாரம் கொண்டு பேசும்பொழுது, உடனே ஏற்றுகொள்கின்றனர். இளைஞர்கள் சூழலியலைப் பற்றிப் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
சூழலியலையும், பண்பாட்டையும் ஒன்றாகப் பார்ப்பது தமிழுக்குப் புதிது கிடையாது. இங்குப் பண்பாடுகள் அனைத்துமே குறைந்தபட்சம் ஒரு பழங்குடி இனத்தை அழித்துதான் வளர்ந்திருக்கின்றன.
உலகத்தின் எல்லா கருத்துகளோடும் சூழலியல் ஒத்துப்போகிறது. கல்விகூட சூழலியலோடு தொடர்புடையது. பழங்குடிகளைப் பற்றி படிக்க வேண்டுமென்றால், பல்கலைகழத்தில் படிக்க வேண்டும்; ஆனால், பல்கலைக்கழகங்கள் கற்றுத் தருவது, பழங்குடிகளுக்கு உதவாது. பண்பாட்டு அடிப்படையில் பேசக்கூடிய மொழிதான் நிலைபெறுகிறது. ஆகவே தமிழ் ஒரு சூழலியல் மொழி. சமஸ்கிருதம் தமிழை ஆதிக்கம் செய்யும்போது, மலையாளம் உருவாகிறது. அதன் பின் மலையாளம் தமிழுடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறது. தமிழில் வழக்கிழந்த ஆதிகாலச் சொற்கள், தற்போது மலையாளத்தில் பேச்சுவழக்குச் சொல்லாக உள்ளது.
மேற்கொண்டு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
இலக்கியவாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்: கல்வி, பொருளாதாரம் அல்லது சூழலியல் சார்ந்து கற்றுக் கொள்ளுங்கள். சூழலியலை இலக்கியத்தோடு இணைப்பது மட்டுமின்றி, எல்லா துறைகளிலும் இணைக்க முயற்சிக்க வேண்டும்.
பின்காலனிய நாடுகள் என்பவை மறைமுகமான காலனிய நாடுகள் எனப் பொருள்படும்; பிரதிநிதிகள் மறைமுகமாக ஆள்வது. இதன் அடிப்படையில் அவர்கள் சுரண்டுதலை நிறுத்தவில்லை எனத் தெரிகிறது. முதலில் பொருளியல் சார்ந்த காரணங்களை முன்னிருத்தி சுரண்டினர். தொழிற்புரட்சி காலத்தின் பிந்தைய காலச் சிந்தனையாக, பொருளாதாரத்தில் பெரியாளாகக் காட்டிக்கொள்வது எனும் போக்கு உருவாகியிருக்கிறது.
தன் நாட்டிற்குள் முதலாளியாக இருந்தாலும், வணிகரீதியாகப் பார்க்கும்போது, மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, அவ்வாறு இல்லை. கலையையும் தத்துவத்தையும் அழிப்பதிலிருந்து அரசியல் ஆரம்பமாகிறது. அவை இரண்டும் இணைந்தால் பேராபத்து, கல்வியும், இலக்கியமும் பிரியும்போது, இலக்கியச் சிந்தனை அழிக்கப்படும். அதைப் பெரிய அளவில் வடிகட்டியுள்ளனர். அதையும் மீறி, தனிப்பட்ட தேடல் இருந்தால் மட்டுமே, சூழலியல் பற்றி அறிய முடியும். அங்குதான், எழுதுபவர்களின் பணி மிக அவசியம். சூழலியல் பிரச்சினைகளை உணர வேண்டுமெனில் களப்பணியில் இருந்தால் மட்டுமே முடியும். எழுத்துக்கள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். எழுத்தாளனின் எழுத்து வாசகனிடம் போய்ச்சேரவில்லை என்றால், பிரச்சினை எழுத்தாளனிடமே உள்ளது!
சு. அருண் பிரசாத்
அருமையான ஆழமான சூழலியல் கட்டுரை…நக்கீரன்
ஒவ்வொருவரும் படித்து இன்றைய அரசியல்சார்ந்த மதம் சார்ந்த சூழல் இயற்கையை எங்ஙனம் பாதித்துவருகிறதுவென்பதைக் கண்கூடாக உணரநேரிடுகிறது. பகிர்கிறேன்..நன்றி
சூழலியல் குறித்த பிரச்சனையை ஒரு தனிப்பட்ட பிரிவாக இல்லாமல் மொழியோடு கலாச்சாரத்தோடு எப்படி இயைந்து இருக்கிறது என்று புரியம் எளிய மொழியில் நக்கீரன் சார் சொல்லியிருக்கிறார். இப்பிரச்சினையில் மற்ற பரிமாணங்களை உணர்ந்து கொண்டேன். நன்றி!