தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ [கண்ணீரைப் பின்தொடர்தல்]

நாவல் காலம் மாறுவதைப்பற்றி பேசும் ஒரு இலக்கிய வடிவம்’ மிக பொத்தாம்பொதுவான ஒரு கூற்று. ஆனால் வியப்பூட்டுமளவுக்கு சரியானதும்கூட. உலக இலக்கியத்தின் மகத்தான ஆக்கங்கள் பலவும் காலமாறுதலை விரிவாகச் சொல்வதையே கருவாகக் கொண்டுள்ளன. காலம் மாறுவது எதனூடாக தெரியவருகிறது? வாழ்க்கை மாறுவதனூடாக. ஆகவே அது வாழ்க்கையின் இயக்கத்தைப் பற்றிப் பேசும் கலை. வாழ்க்கை மாறும்போது மதீப்பீடுகள் மாறுகின்றன. ஆகவே நாவல் மதிப்பிடுகளின் உண்மையான சாரம் பற்றி விவாதிக்கும் கலை.

மதிப்பீடுகள் மாறும்போது ஏற்படுவது ஆழமான உணர்ச்சிக்கொந்தளிப்பு. ஆகவே நாவல் மானுட உணர்ச்சிகளை தொட்டுக்காட்டும் ஒர் இலக்கிய வடிவம்.ஆகவே மானுட உணர்ச்சிகளின் நிலைக்களமாகிய மானுட மனத்தைப் பற்றிய அதன் ஆழத்தைப்பற்றிய கலை நாவல். மானுட ஆழம் என்பது பண்பாட்டின் ஆழமே. ஆகவே நாவல் என்பது பண்பாட்டைப்பற்றிய அவதானிப்பு . ஆம், காலமாகி நிற்கும் அனைத்தைப்பற்றியும் பேசும் ஒரு மகத்தான கலையே நாவல்.

இந்திய மொழிகளில் பெரும் நாவல்கள் பலவும் காலமாறுதலைப்பற்றிச் சொன்னவை. காலநதியை காட்டும் அக்னி நதி [குர் அதுல் ஐன் ஹைதர்] காலத்தின் அலைகளைக் காட்டும் மண்ணும் மனிதரும் [ சிவராம காரந்த்] காலப்பிரம்மாண்டத்தை வரைந்திடும் கயிறு [ தகழி சிவசங்கரப்பிள்ளை]என பட்டியல் பெரிது. ஆனால் இவையனைத்திலும் முதன்மையான ஆக்கம் என் நோக்கில் ஆரோக்கிய நிகேதனமேயாகும். அது காலச்சுழிப்பை வாழ்க்கை மோதலின் பேருருவமாக ஆக்குகிறது. உணர்ச்சிகரமான நாடகத்துவமும் அழகிய கவித்துவமும் கைகூடிவந்த நாவல் இது. மொழிபெயர்ப்பு வழியாக நமக்குக் கிடைக்கும் இந்திய நாவல்களில் இதுவே சிறந்தது. உலக அளவில்கூட இதற்கிணையான ஆக்கங்கள் மிகமிகக் குறைவேயாகும்.

 

ஆரோக்கிய நிகேதனம் வாழ்க்கையை சித்தரிக்கும்போதே இயல்பாக அதன் பல கூறுகளை கவித்துவமாக அழுத்தி உருவகங்களாக ஆக்கிவிடுகிறது. இவ்வுருவகங்கள் மூலமே பற்பல ஆழ்பிரதிகளை உருவாக்கி மாறுபட்ட வாசிப்புகளுக்கு இடமளிக்கிறது. இந்த சொல்லப்பட்ட கதை வழியாக வாசகன் முன்னகர்ந்து சொல்லப்படாத ஆழங்களுக்கு செல்ல வழி அமைகிறது. இவ்வாறு ஆழ்பிரதியை தொட்டெழுப்பும் வாசகர்களுக்குத்தான் இந்நாவல் பேரிலக்கியமாக ஆகிறது. இந்திய நாவல்களில் இந்த அளவுக்கு கவ்த்துவ நுட்பம் கொண்ட பிறிதொரு ஆக்கம் இல்லை. ஆனால் மிக யதார்த்தமான மொழி மற்றும் சித்தரிப்பு கொண்ட நாவல் இது.

‘ஆரோக்கிய நிகேதன’த்தில் ஒரு சம்பவம் வருகிறது. தாந்து கோஷால் என்ற பிராமணனுக்குக் கார உணவு மீதும் மசாலா மீதும் அளவுகடந்த பிரேமை. (வங்கப் பிராமணர்கள் பொரித்த மீன் மற்றும் மீன் ஊறுகாய் மீது உயிரையே வைத்திருப்பவர்கள்.)

விளைவாக வயிற்றுப்புண் முற்றிப்போய் சிகிச்சைக்காக அப்பகுதியின் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவரான ஜீவன் மஷாயிடம் வருகிறான். அவனுக்குச் சிகிச்சை அளிக்கும் ஜீவன் மஷாய் அவன் தன் உணவுப் பழக்கத்தை விடாதவரை நோய் குணமாகாது என்கிறார். ”இது உன்னுடைய விதி தாந்து. இது ஒருபோதும் குணமாகாது. நீ இதை வெல்லமாட்டாய். இதன்மூலம்தான் உன் மரணம் நிகழும்” என்கிறார் மஷாய்.

தாந்து அதிர்ச்சி அடைகிறான். ”சாதாரணமான வயிற்றுவலிக்காக தேடிவந்தால் எனக்கு நாள் குறிக்கிறாயா? நீ போலி மருத்துவன். ஆஷாட பூதி. சாகப்போவது நீதான்! ” என்று கத்துகிறான். அழுகிறான். ”நான் இப்போதே அல்லோபதி டாக்டரிடம் போய் நோயைக் குணப்படுத்திக் காட்டுகிறேன்!” என்று சவால் விடுகிறான். வாழ்க்கைபோலவே மரணமும் இயல்பானதுதான் என்று சொல்லும் மஷாய் சிகிழ்ச்சை என்பது மரணத்துக்கு எதிரான போராட்டமல்ல. சிறந்த வாழ்க்கையை உருவாக்கும் முயர்சியே என்கிறார். உன் மரணத்தை இந்த நோயில் காண்கிறேன். நீ அதை ஏற்பதே உனக்கு நல்லது என்கிறார். ”இது உன் ரிபு தாது கோஷால் ” என்கிறார் மஷாய்.

ஆயுர்வேத மருத்துவம் ரிபு என்ற ஒன்றைப் பற்றி வலியுறுத்திக் கூறுகிறது. நோய் என்பது ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையிலிருந்து உருவாகக் கூடியது. அவ்வாழ்க்கை முறைக்குக் காரணமாக அமையும் மனோபாவமே ரிபு எனப்படுகிறது. ஒவ்வொருவருக்குமே ஒவ்வொன்று ரிபுவாகிறது. பண ஆசை, புகழ்மோகம், வேலைப் போதை, ருசிகள், சபலங்கள்… ரிபு உண்மையில் மரணத்தின் தூதன். நம்மில் உறைந்து நம் வாழ்க்கையை வடிவமைத்து, நம்மை பலவீனப்படுத்தி, உடன் அழைத்துச் சென்று மரணத்திடம் ஒப்படைப்பவன். ரிபு ஒருவன் பிறக்கும்போதே கூடவே பிறந்துவருகிறது. ‘ உடன்பிறந்தே கொல்லும் நோய்’ என நம் நூல்களும் இதைச் சொல்கின்றன. ஆனால் நடு வயது ஆனபிறகே அது என்ன என்று தெளிவாகத் தெரிகிறது. தாந்துகோஷாவின் ரிபு என்பது உணவில், குறிப்பாக மசாலா ருசியிலும் காரத்திலும் உள்ளது; அதிலிருந்து அவன் தப்பமுடியாது என்கிறார் மஷாய். மனமுடைந்த தாந்து மண்வாரி வீசி சபித்தபடி, அழுதபடி ஓடிப்போகிறான். நேராக ஊருக்குப் புதிதாக வந்த அலோபதி டாக்டரிடம் சென்று முறையிடுகிறான்.

டாக்டர் பிரத்யோத் போஸ¤க்குத் தாங்கமுடியாத கோபம் வருகிறது. சிகிச்சைக்கு வருபவர்களுக்கு மரணம் நிச்சயித்துகூறும் மருத்துவமுறையை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதுவும் ஆறுமாதத்தில் குணமாகக்கூடிய பெப்டிக் அல்சர் நோய்க்காக மரண தண்டனை விதிப்பதைக் கேட்டு அவர் குமுறுகிறார். தாந்துவைத் தன் ஆஸ்பத்திரியில் கூடவே தங்க வைத்து மருத்துவம் செய்கிறார். அவரைப் பொறுத்தவரை அது பழைய காட்டுமிராண்டித்தனமான சிகிச்சைமுறைகளுக்கு எதிரான ஒரு சவால், போர். ஆறு மாதத்தில் தாந்து முற்றிலும் குணப்படுவான் என்று உறுதியளிக்கிறார். சிகிச்சை நடக்கிறது. தாந்து தன் ருசிகளைக் கட்டுப்படுத்தி மீனையும் ஊறுகாயையும் மட்டும் ஆறுமாதகாலம் ஒதுக்கினால் போதும். ஆனால் நாக்கை அடக்க முடியாத தாந்து டாக்டரின் வீட்டிலேயே உணவைத் திருடித்தின்று வயிற்றுவலி வந்து நோய்முற்றி சாகிறான். டாக்டருக்கு அது பெரிய அதிர்ச்சி.

இருவேறு வாழ்க்கை நோக்குகளுக்கு இடையேயான போராட்டத்தை, கால மாறுதல் மூலம் ஏற்படும் வாழ்க்கைச் சுழிப்பை ஆரோக்கிய நிகேதனம் பல முனைகளில் பலவகையான உணர்ச்சிவேகங்கள் மூலம் சொல்லிச் செல்கிறது. இத்தகைய முரண்படுதல்களைச் சித்திரிக்கும்போது ஏதாவது ஒரு தரப்புடன் படைப்பாளி இணைந்து விடுவதுண்டு. அல்லது எதையும் சாராது உணர்ச்சியற்ற சாட்சி மட்டுமாக ஒதுங்கிவிடுவதுமுண்டு. ஆனால் தாராசங்கர் பானர்ஜி வாழ்க்கைப் போராட்டத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிக உணர்ச்சிகரமாக ஈடுபடுகிறார். வியப்பு என்னவென்றால் எல்லா தரப்புகளுடனும் அவருடைய மனம் ஒரேவிதமான ஆர்வத்துடன் இணைந்துகொள்கிறது. மொத்த நாவலுமே சரி தவறுகளை, உண்மை பொய்களை முழுமையாக நிர்ணயித்து விடமுடியாத தளத்தில்தான் நகர்கிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இந்நாவல் தனது புதுமையைத் தக்கவைத்தபடி, நம்மை ஆழ்ந்த சிந்தனைகளை நோக்கி நகர்த்துவதாக இருப்பதற்குக் காரணம் இதுவே.

ஆயுர்வேதம் மனிதனுக்கு சிகிழ்ச்சை அளிப்பதைப்பற்றி பேசுகிறது. அலோபதி உடலுக்கு சிகிழ்ச்சை அளிக்க முற்படுகிறது. ஒரு உடல் அதனுள் வாழும் ஆத்மாவும் அவ்வாத்மாவின் வெளிப்பாடான மனமும் அம்மனதையும் உடலையும் கட்டுப்படுத்தும் வாழும் சூழலும் எல்லாம் இணைந்த ஒன்றே என்று நம்புகிறது ஆயுர்வேதம். ஆகவே ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ அது சிகிழ்ச்சை அளிக்கிறது. அலோபதியைப்பொறுத்தவரை மனித உடலென்னும் இயந்திரம் தன் இயல்புக்கு தடை ஏற்பட்டு பழுதாகிறது, அப்பழுது நீக்கப்படும்போது அது சீரடைகிறது. ஒன்று வாழ்க்கை சார்ந்த முழுமைநோக்கு. இன்னொன்று நடைமுறை நோக்கு. இரண்டுமே இருவகைகளில் முக்கியமானவை , உதவிகரமானவை. முழுமை நோக்கு ஒரு கட்டத்தில் இயர்கையின் பிரம்மாண்டத்தை உணர்ந்து அதை தன் அறிவால் அள்ளமுடியாது சரண் அடையும் மனநிலையை கொள்ளும். நடைமுறைநோக்கு ஒருபோதும் தன் நம்பிக்கையை இழப்பதில்லை. தன் செயல்வட்டத்துக்க்கு வெளியே அது பார்ப்பதில்லை. ஆகவே அதற்கு திசைதடுமாற்றங்களே இல்லை.

இங்கே இருவகை வாழ்க்கை முறைகள் தான் சொல்லப்படுகின்றன என்பதில் ஐயமில்லை. இரு காலகட்டங்கள். இரு யுகங்கள். அவை மோதிக்கொள்ளும் , அல்லது வழிபிரியும் ஒரு சந்தியில் இந்நாவல் நிகழ்கிறது. ஜீவன் மஷாய் மெல்லமெல்ல பின் வாங்கி மறையும் ஒருகாலகட்டத்தின் பிரதிநிதி. பிரத்யோத் உருவாகிவரும் ஒரு காலகட்டத்தின் முகம். வேறுவழியில்லை. இயற்கையின் மடியில் மானுட வாழ்வை வைத்துப் பார்ப்பது ஜீவன் மஷாயின் நோக்கு. அவருக்கு மருந்துகளை அளிப்பதும் இயற்கையே. அங்கு வாழ்க்கை மரணத்தால் நன்கு சமன்செய்யப்பட்ட ஒரு இயக்கம். பிரத்யோத் இயந்திரங்களின் ஆட்சியில் மனிதன் வாழ்வதைப் பார்க்கிறார். அவருடைய மருந்துகள் தொழிற்சாலையில் உற்பத்தியாகின்றன. அங்கே வாழ்க்கை என்பது மரணத்திற்கு எதிரான பெரும் சவாலாக உள்ளது.

ஆரோக்கிய நிகேதனம் ஒவ்வொரு கணுவிலும் இவ்விரு யுகங்களும் உக்கிரமாக மோதிக்கொள்வதைக் காட்டுகிறது. அதன் எல்லா நிகழ்ச்சிகளையும் இந்நோக்கில் நாம் நுண்வாசிப்புக்கு உட்படுத்த முடியும். நாவலின் இறுதியில் ஒரு புதிய யுகம் எழுந்துவருவதை, அதம் எல்லையில்லா வீச்சை ஜீவன் மஷாய் உணர்கிறார். சென்ற காலத்தின் ஆழத்தை பிரத்யோத் அறிகிறார். ஒரு புள்ளியில் அடிப்படையான மானுட தீவிரம் ஒன்றுதான் இவ்விரு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது என்ற தரிசனத்தை அளித்து முழுமைகொள்கிறது நாவல்.

முதல் வாசிப்பில் கட்டுக்கோப்பான கதையமைப்பு கொண்ட சம்பிரதாயமான நாவலாக ‘ஆரோக்கிய நிகேதனம்’ தோற்றமளிக்கக்கூடும். ஜீவன்மஷாய் என்ற மையக் கதாபாத்திரத்தின் வாழ்க்கையை இளமை முதல் மரணம் வரை சித்தரிக்கும் முறை இதில் உள்ளது. புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவக் குலத்தில் பிறந்தவர் ஜீவன் மஷாய். செல்வம், அழகு, அறிவு முதலியவற்றை இளமையிலேயே அடைந்தவர். இத்தகைய நிறைவிலிருந்து உருவாகும் ஆணவம் அவரிடம் உண்டு. தந்தை அவரை மேல்நாட்டு மருத்துவம் பயில கல்கத்தாவிற்கு அனுப்புகிறார். தோல்வியறியாதவறாக , வாழ்க்கையை வெல்லத்துடிப்பவராக, அங்கு செல்லும் ஜீவன் வாழ்வின் முதற்கட்ட சவால்களைச் சந்திக்க நேர்கிறது.

அங்கு அவர் உடன் பயிலும் நண்பனின் சோதரியாகிய மஞ்சரி தத்தா என்ற துடிப்பான அழகியைச் சந்தித்து காதல் கொள்கிறார். உலகியல் சார்ந்த இச்சை மட்டுமே அளிக்கும் உத்வேகத்தின் வடிவம் மஞ்சரி. அவளுடைய கட்டற்ற இளமையின் ஜாலத்தில் அடிமையாகி கிடக்கிறார். அவளை விரும்பும் ஜமீந்தார் மகனாகிய பூபீ போஸ¤க்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டு அவர் தப்பியோட நேர்கிறது. படிப்பு இல்லாமலாகிறது. அவர் காதலித்த மஞ்சரியை அவரது ஜென்ம விரோதி பூபேந்திரநாத் போஸ் திருமணம் செய்து கொள்கிறார்.

மஞ்சரியை இழந்தது ஜீவனின் நெஞ்சில் ஒரு கனலை எரியவிடுகிறது. அதன் வெம்மையில் எண்ணங்கள் கருக அவர் அலைகிறார். மஞ்சரி அவரை நிராகரித்து பூபிபோஸை மணம் செய்ததற்கு ஒரே காரணம்தான், பூபி மேற்படிப்பு படிப்பவர். ஜீவன் மேலே படிக்கப்போவதில்லை, சட்டைபோட்டாத நாட்டுப்புற மருத்துவனாக அவன் வாழப்போகிறான். அந்த வன்மம் ஜீவனை விட்டுச்செல்ல்வதேயில்லை. எளிய குடும்பத்தைச் சேர்ந்த பேரழகியான, ‘ஆத்தர் பௌ’வை திருமணம் செய்து கொள்கிறார். குலத்தொழிலான ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த மருத்துவராகிறார்.

அதற்கு ஒரே நோக்கம்தான். ஆத்தர்பௌவை வைர நகைகள் பூட்டி பல்லக்கில் ஏற்றி கொண்டுசென்று மஞ்சரியின் முன் நிறுத்தவேண்டும். அவள் அதைக்கண்டு மனம் எரிந்து புழுங்கவேண்டும். காதலும் பகைமையும், அல்லது இரண்டும் ஒன்றாகக் கலந்து உருவான ஓர் ஆற்றாமை. பழிவாங்கும் பகல் கனவுகள். எத்தனை குழந்தைத்தனமானவை அவை. வெளியே எடுத்தால் அப்படியே கூச்சி சிறுத்து அழியக்கூடியவை. இன்னொரு மனிதரிடம் சொன்னாலே சிரிப்பாக மாறக்கூடிய அளவுக்கு அற்பமானவை. ஆனால் அவையே ஜீவன் மஷாயின் முழுவாழ்க்கையையும் இயக்குகின்றன. அந்த வன்மமே அவரது ரிபு

அதை ஆத்தர் பௌ நன்கறிவாள். அவர் மனதில் தனக்கு இடமில்லை என்பதும் அவர் விரும்பிய வேறு ஒருத்தியின் நிழலாக மட்டுமே தான் தேர்வுசெய்யப்பட்டுள்ளோம் என்பதும் அவளுக்கு திருமணமான சிலநாட்களிலேயே தெரியவருகின்றன. அவளுடைய ஆத்மா ஆழமாகப் புண்படுகிறது. அவளை எந்நேரமும் எரியும் தழல்மீது நிற்பவளாக ஆக்குகிறது. அவள் நெஞ்சில் நஞ்சு நிறைகிறது. நாவிலிருந்து அது வெளிவந்தபடியே உள்ளது. அவள் மகன் நோயுற்று இறக்கிறான். அதைக்கூட அவர் மீதான விஷத்தை உமிழ்வதற்கான ஒரு சாக்காக மாற்றிக் கொள்கிறது அவள் ஆழ்மனம். அவள் நெஞ்சுக்குள் மிக ஆழத்தில் ஒன்று தெரியும் அவளுக்கு, உலகில் அந்த ஒரு மனிதர் அன்றி எதுவுமே அவளுக்கு ஒரு பொருட்டு அல்ல. அந்த மனிதரையன்றி எவரையுமே அவள் நேசிக்கவில்லை. அவளுடைய விடுதலையை, முக்தியை அவர் மட்டுமே அளிக்க இயலும். அவர் தன்னை மறந்து அளிக்கும் ஒருதுளி உண்மையான அன்பு போதும். ஆனால் அதை அவரால் அளிக்க முடியாது என்றும் அவள் ஆழம் அறியும்.

நாவல் தொடங்கும்போது ஜீவன் மஷாய் வயோதிகர். ஆயுர்வேதம் புதிய ஆங்கில மருத்துவத்தின் முன் செல்வாக்கிழந்து சுருங்கிவிட்டது. உடைந்துபோன வைத்திய சாலையில் வயோதிகரான ஜீவன் மஷாய் தன் இறுதிக்கட்ட வாழ்வை நினைவுகளும் துயரங்களுமாகக் கடத்தி வருகிறார். அவரது அருமை மகன் மரணமடைந்து விட்டான். படிப்படியாக ஆயுர்வேதத்திற்கும் புதிய மருத்துவமுறைக்கும் இடையே ஒரு மோதல் உருவெடுக்கிறது.

ஜீவன் மஷாயின் எதிர் தரப்பாக அதில் முன் வருபவர்தான் கிராமத்திற்குப் புதிதாக வந்துள்ள டாக்டர் பிரத்யோத். பிரத்யோத் டாக்டரின் பார்வையில் ஆயுர்வேதம் காலத்திற்கு ஒவ்வாத குருட்டு வைத்தியமுறை. தடுத்து நிறுத்தப்பட வேண்டியது. ஆயுர்வேதம் மரணத்தை பிங்கலநிற கூந்தலுடன் துயரங்களிலிருந்து விடுதலை தர வரும் தேவதையாக, ‘பிங்கல கேசினி’யாகப் பார்க்கிறது. வாழ்வு இறுதியில் மரணத்திற்கு அடிபணிந்தேயாக வேண்டும். வாழ்வை மருத்துவம் மூலம் செம்மைப்படுத்தலாம். ஆனால் மருத்துவம் மூலம் மரணத்தை தவிர்த்துவிட முடியாது. மரணத்தைக் கண்டுவிட்ட பிறகு மனநிம்மதியுடன் நிறைவுணர்வுடன் அதை எதிர் கொள்வதே முக்கியமானது.

மரணத்தை மருத்துரின் தோல்வியாக பார்க்கும் பிரத்யோத் ஆயுர்வேதத்தை வாழ்வைவிட மரணத்தைப் பற்றிப் பேசும் சிகிச்சை முறை என்கிறார் . மரணம் என்ற கரியபெரும் சக்தியை அனைத்து ஆயுதங்களாலும் எதிர்த்துப் போரிடும் போராகவே நவீனச் சிகிச்சை முறை அவருக்குப் படுகிறது. இந்த மாறுபட்ட இரு பார்வைகளும் பல்வேறு அழுத்தமான படைப்புத் தருணங்கள் வழியாக மோதி இறுதியில் ஒன்றையன்று கண்டடைகின்றன. இயற்கையின் அளவிலா வலிமையை எதிர்த்து நிற்கும் மானுட ஞானத்தின் சோர்வில்லாத ஊக்கத்தை ஜீவன் மஷாய் கண்டடைகிறார். மரணம் என்று தன் முன் வருவது பிரபஞ்ச இயக்கத்தின் மகத்தான விதிமுறைகளில் ஒன்று என்று பிரத்யோத் டாக்டர் கண்டடைகிறார்.

டாக்டரின் மனைவி வழிப் பாட்டியாகத் தன் இளமைக் காதலி மஞ்சரி தத்தாவைக் காணும் ஜீவன் மஷாய் வாழ்வெனும் மாபெரும் அபத்த நாடகத்தின் இறுதி அங்கதத்தை அறிகிறார். அவரது மரணத்தின் மீது விழுந்து, இறுதிவரை கிடைக்காது போன காதலின் பலியாக, அத்தர் பௌவும் மரணமடைகிறாள்.

இப்பெரும் படைப்பை கூர்ந்த வாசகன் மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் ஊடுருவிப் படிக்க முடியும் என்பதே இதை பேரிலக்கியமாக ஆக்குகிறது. இதன் வாசிப்புச் சாத்தியங்களைக் குறிப்பிட்டு முடிப்பது எளிதல்ல. நாவல் முழுக்க நுண்ணிய படிமங்கள் பல ஊடுபாவாகப் பரவி கவித்துவச் செறிவை அளிக்கின்றன. நோயாளிகளின் நாடியை தொட்டுப் பார்த்து ஜீவன் மஷாய் அறியும் மரணத்தின் காலடியோசை நாவல் முழுக்க ஒலித்தபடியே உள்ளது. அதேபோல கிராமம் முழுக்க முழங்கும் ஜீவன் மஷாயின் கனத்த காலடியோசை மீட்பின் ஒலியாகவும், தவிர்க்கமுடியாத மரணத்தின் ஒலியாகவும் மாறிமாறி வடிவம் கொள்கிறது. ஒவ்வொரு கதைச் சந்தர்ப்பமும் வேறு ஒரு தளத்தில் கவித்துவப் படிமமாக மாறி குறியீட்டுப் பொருள்தரும் அற்புதம் இந்நாவலில் சாத்தியமாகியுள்ளது.

இந்நாவலில் காலம் சீரான முன்னோக்கிய நகர்வாக இல்லை. இயல்பான முறையில் ஜீவன் மஷாயின் நினைவுகளாக பழைய கதையும் நிகழ்காலக்கதையும் கலந்துசெல்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் சாதாரணமாக நடைபெறுவதில்லை. ஒவ்வொரு தருணத்திலும் ரத்தம் தெறிக்கும் உயிர் வதையுடன் அவை மோதிக்கொள்கின்றன. பழைமை தன் உயிர்சாரத்தை புதுமைக்குத் தந்து மறைய புதுமை தன் முன்னோக்கிய பாய்ச்சலுக்கான சக்தியை பழைமையின் பின்பாரத்திலிருந்தே பெறுகிறது. பழைமை புதுமை எதுவுமே இந்நாவலில் ஒற்றைப்படையாகச் சித்திரிக்கப்படவில்லை. ஒவ்வொரு கதைச் சந்தர்ப்பத்திலும் இந்நாவல் அளிக்கும் காலதரிசனம் சந்தேகமின்றி மகத்தானதுதான்.

ஜீவன் மஷாயின் வாழ்க்கைச் சித்திரம் அளிக்கும் வாசிப்பனுபவம் கடைசியில் வேறு ஒரு திசையில் நம்மை நகர்த்துகிறது. காலவெள்ளத்தில் ஒரு சிறு குமிழியாக ஜொலித்து வர்ணஜாலம் காட்டி உடைந்து மறைந்துபோகும் மானுட வாழ்வின் அபத்தத்தைத் திடுக்கிட வைக்கும் தீவிரத்துடன் இந்நாவல் சித்திரிக்கிறது. அதே சமயம் அந்தச் சிறு குமிழியின் பரப்பில் கொப்பளித்து மறையும் முடிவற்ற பிம்பங்களையும் இது காட்டுகிறது. வாழ்வு நிலையற்றது என்று ஒரு கணமும் வாழ்வு மகத்தானது என்று மறுகணமும் காட்டியபடியே உள்ளது இது.

ஆரோக்கிய நிகேதனம் நாவல் தொடங்கும்போது ஜீவன் பந்து மஷாயின் அப்பா ஜகத் பந்து மஷாய் சொன்னார். வைத்தியம் எப்போதும் செல்வம் குன்றாத தொழில். கொடுப்பவனுக்கும் கொள்பவனுக்கும் லாபம் வரும் வணிகம். புண்னியமும் பணமும் தருவது என்று. அந்த நம்பிக்கையே அவரது தொழிலின் அடிப்படை. அவரைப்பொறுத்தவரை வைத்தியம் என்பது ஒரு சத்கர்மம். சாத்வீகமே அதன் அடிப்படை தன்மை. வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையேயான சமரசமே ஆயுர்வேதம் உத்தேசிக்கும் சிகிச்சை.

அதற்கு நேர் எதிரானது அலோபதி மருத்துவம். அது ரஜோ குணம் கொண்டது. மரணத்துடன் உருவிய வாளுடன் கடைசிச் சொட்டு வரை போரிடுவதே அதன் பணி. ஜீவன் மஷாயின் கணக்குநூல் முழுக்க வராக்கடன்களின் பட்டியல்தான். அவரால் மருந்துக்கு கணக்கு சொல்ல முடியாது. நோயுற்றுவருபவனுக்கு அவர் அன்னை, தந்தை, குரு, தெய்வம் போல. அந்நிலையில் நோயாளியும் அப்படித்தான் நினைப்பான். ஆனால் நோய் விலகியதும் மனம் மாறிவிடும். ‘என்னது ஐம்பது ரூபாயா? கொஞ்சம் பச்சிலைச் சாற்றை பிழிந்து விட்டதற்கு ஐம்பது ரூபாயா? ‘ என்பான். ஆனால் சாரு டாக்டருக்கு வராக்கடனே இல்லை. கட்டணம் கொடுக்காமல் அவர் சிகிழ்ச்சையை ஆரம்ப்பிப்பதே இல்லை. அவரை நோயாளி தவறாக என்ணுவதுமில்லை. அவரை ஒரு நிபுணராக மட்டுமே நோயாளி காண்கிறான். ஜீவன் மஷாயை தன் உறவினர் போல. இவ்வேறுபாடு இரு யுகங்களின் அற வேறுபாட்டின் குறியீடுபோல நாவலில் வருகிறது.

ரஜோ குணத்தின் முழு உருவம் ரங்லால் டாக்டர். அவருக்கு அவரே குரு. நதியில் செல்லும் பிணங்களை அறுத்து நூல்களை கற்று மருத்துவம் கற்றார். சுடுகாட்டில் பிணம் மீதமர்ந்து யோகசாதனை செய்யும் தாந்த்ரீகன் போன்றவர் அவர். அவரிடம் மெல்லிய உணர்ச்சிகளே இல்லை. அன்னைமடியில் குழந்தை சாவதைக் கண்டும் அவர் கலங்குவதில்லை. சாத்வீகவடிவமான ஜகத்பந்து மஷாய்க்கு நேர் எதிர் அவர். ‘மனிதன் பரிதாபத்துக்குரிய ஜீவன். விலங்குகளுக்குரிய காமமும் குரோதமுமே அவனுக்குள்ளும் நிரம்பிவழிகின்றன. விலங்குகளுக்குரிய உடல்வலிமையும் அவனுக்கு இல்லை’ என்கிறார் ரங்க்லால் டாக்டர். மனிதனை இறைவடிவமாக, பரபபுருஷனின் நுண்ணிய புருஷவடிவமாக, காணும் ஆயுர்வேதத்துக்கு நேர் எதிராக!

ஜீவன் அவரது இளமையில் ரஜோ குணம் நிறைந்தவராக இருந்தார். புஜங்களை பயிற்சி மூலம் இரும்பாக்கி வைத்திருந்தார். உலகை வெல்லும் துடிப்பு அவரில்நிறைந்திருந்தது. நினைத்ததை அடைய முடியும் அடைந்தாகவேண்டும் என்ற எண்ணம். அப்போது அவருக்கு ஆத்ர்சமாக இருந்தவர்ற்றங்க்லால் டாக்டர். அவரைப்போல ஆவதற்கென்றே ஜீவன் கல்லூரிக்குச் செல்கிறார். அங்கு மஞ்சரியின் காதலும் பூபி போஸின் பகைமையும் கிடைக்கின்றன. அவற்றை அதே ராஜஸ வேகத்துடன் எதிர்கொள்கிறார் அவர். பூபி புலி என்றால் அவர் மேலும் மூர்க்கம் கொண்ட பன்றி. மஞ்சரியில் அவர் கொண்ட காதல் அப்படியே வன்மமாக அவரில் நிறைந்தமைக்கும் காரணம் அதுவே

படிப்பை விட்டுவிட்டு ஆயுர்வேதத்தை அப்பாவிடமிருந்து கற்றுக்கொள்ளும்போதும் ஜீவன் மனதில் நிறைந்திருப்பது ராஜஸ குணமே. ஆயுர்வேதம் கோரும் சத்வ குணம்வவரிடம் இயல்பாகவே இருந்தாலும் ஓங்கி நிற்பது அதுதான். அவர் வெறியுடன் ஆயுர்வேதம் கற்றதற்குக் காரணம் மஞ்சரி மீது கொண்ட வன்மம். அதை அவர் தந்தை உணர்ந்திருந்தார். அதை விட்டுவிடும்படி ஜீவனிடம் மரணத் தருவாயில்கூட மன்றாடுகிறார். ஆனால் ஜீவனால் இறுதிக் கணம் வரை அந்த வன்மத்தில் இருந்து முற்றிலும் விடுபடவில்லை. அவரது ‘உடன் பிறந்த நோய்’ அது. ஆகவேதான் அவர் மீண்டும் ரங்க் லால் டாக்டரை தேடிச்செல்கிறார். அலோபதி கற்க முயல்கிறார். ஆனால் அவரால் பிணத்தை அறுத்து ஆராய முடியவில்லை. உடனே ரங்க்லால் கண்டுகொள்கிறார், உள்ளே துடிக்கும் ஒரு துளி வன்மத்தின் ராஜசம் அன்றி இவன் சத்வ வடிவமேயானவன் என. உன்னால் ஒருநாளும் அலோபதி கற்க முடியாது, ஆயுர்வேதமே உன் துறை என்று அவரை திருப்பி அனுப்பிடுவிடுகிறார்.

ஜீவனின் வாழ்நாள் முழுக்க அந்த ரஜோ குணத்தின் துளி அவரில் கொந்தளித்திருந்தது. தும்¨ப்பபூ போல தாடி நரைத்த பின்னும் அவரது நெஞ்சு அடங்கவில்லை. நாவல் முழுக்க தன்னந்தனிக் காட்டானையின் வேகத்துடன் அவர் நடந்துகொண்டிருக்கிறார், காலடியோசை மரணத்தின் ஓசையென ஊர்த்தெருக்களில் முழங்க. அந்த வன்மத்தினால்தான் அவர் ஆயுர்வேதத்தை பிறர் சீண்டும்போதெல்லாம் கோபத்துடன் திருப்பியடிக்கிறார். அது புறக்கணிக்கப்படும்போது அவர் வருந்துகிறார். அலோபதிக்குச் சவால்விட்டு அவர் மரணத்துக்கு கெடு விதிப்பது அதனாலேயே. அவரது கெடு பலித்து மரணம் நிகழும்போது உள்ளூர அவரது அகங்காரம் மகிழ்ந்திருக்கக் கூடும். தன் மகனுக்கே கெடு விதிப்பதும் அந்த அகங்காரத்தினாலேயே.

அனைத்தையும் இழந்து உலகில் காம்பு கனிந்த கனி போல ஜீவன் எஞ்சிவாழக்காரணம் அந்த அகங்காரம் அறுபடவில்லை என்பதனாலேயே. தன் நாடியையே பார்த்து தன் விடுதலைநாளை அடிக்கடி பார்க்கிறார் ஜீவன். இல்லை, முதிர்ச்சி நிகழவில்லை. இன்னும் ஏதோ எஞ்சியுள்ளது. ‘ஊருக்கெல்லாம் கெடு விதிக்கிறீர்கள், எனக்கு கெடு சொல்லுங்கள்’ என்று ஆத்தர் பௌ ஆங்காரமாகக் கேட்கும்போது ஜீவன் சொல்லும் சொற்களும் பொருள் பொதிந்தவை–‘என் மரணத்துக்குப் பின்’. அவர்தான் ஆத்தர் பௌவின் ரிபு. அவர் மீது கொண்ட பேரன்பு, அவரை அடையமுடியாத வன்மம். ‘உலகை வெல்லவேண்டாம் ,என்னால் ஒரேயொரு மனிதனையே வெல்ல முடியவில்லை’ என்று ஆத்தர் பௌவே அதைச் சொல்கிறாள். அவர் இறந்த மறுகணமே ஆத்தர் பௌ மானசீகமாக இறக்க அதுவே காரணம்.

கடைசியில் மஞ்சரியை சந்திக்கும் கணம்தான் ஜீவனின் முக்தியின் தருணம். அவரில் எஞ்சிய வன்மத்தின் இறுதித்துளி அப்படியே சிரிப்பாகவும் கண்ணீராகவும் மாறி உதிர்ந்துவிடுகிறது. ‘ஆடிமாதத்து வரண்ட மேகத்தின் கீற்றே இல்லாத வானம் சட்டென்று எரிமீன் பாய்ந்து நீல ஒளிகொண்டு மின்னுவது போலிருந்தது. ஜீவன் மரமென சமைந்து நின்றார்’ நோயுற்ற மஞ்சரியின் உடலை அவர் தொட்டுப்பார்க்கிறார் ” உள்ளே புழுத்துவரும் உடல். எப்போதும் சஞ்சலம் நிரம்பிய மனம்!’ மஞ்சரியை கண்டதுமே முதன் முதலாக மஷாய் தன்னை கண்ணாடியில் கூர்ந்து பார்க்கிறார். முதுமைகொண்டு நொய்ந்த உடல், விடுபட்டு உதிரக் காத்திருக்கும் உடல். அவர் அந்த செங்கூந்தலாளைக் கண்டுவிட்டார்.

‘பிங்கல வண்ணத்தாள், பிங்கல கேசியாள், பிங்கல விழியாள், அந்த கன்னிகை.பட்டாடை தரித்தவள். அங்கமெல்லாம் தாமரை மணிகளை அணிந்தவள். எதையும் செவியில் கொள்ளாதவள். எதையும் நோக்காத கண்ணினள்….’ ஜீவன் அதை முதல்முறையாக பேரமைதி அளிக்கும் அமுதமாக உணர்ந்தார். ”பரமானந்த மாதவ! உனுடைய மாதுர்யமே எங்கும் நிரம்பி வழிகிறது. மரணத்தையும் அது அமிருதமாக்கிவிடுகிறது!’ உடனே தன் நாடியையே பிடித்துப் பார்க்கிறார் மஷாய். மரணம்! அது எப்படி இருக்கும்? இருட்குகையா? மறு உலகமா? என்ன அது?

மஞ்சரியைப்பார்த்ததும் ஜீவன் அடையும்விடுதலையை மிகுந்த ஆழத்துடன் செதுக்கியுள்ளார் தாராசங்கர்.” அந்த சமயத்தில் அவர் மனம் ஒரு புதிய அனுபூதியைப்பெற்றிருந்தது. அது ஆச்சரியகரமான ஓர் உற்சாகம்!” மரணப்படுக்கையில் மஞ்சரி இறந்துபோன செய்தியை பிரத்யோத் சொல்லும்போது அவர் அதைக் கவனிக்காமலேயே கையசைத்து ”வேண்டாம், அதெல்லாம் எதற்கு இப்போது?’என்றார்.

கடைசிக்கணம். ”மிக மெல்லிய அவர்களுடைய குரல் அவர் காதில் விழுகிறது. ‘என்ன சொல்கிறீர்கள். என்ன அது?’ என்கிறார். என்ன உங்களுக்கு என்று கூடியிருப்போர் கேட்கிறார்கள். மஷாய் தலையசைத்து ‘எனக்கு ஒன்றும் தெரியவில்லை’ என்றார். கண்கள் மூடிக்கொண்டன. மஷாய் என்ன பார்த்தார்? பிரத்யோத்துக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆரோக்கிய நிகேதனம் மரணத்தைப்பற்றிய காவியம். பிங்கல கேசினி நாவலெங்கும் அலைந்தபடியே இருக்கிறாள். விதவிதமான மனிதர்கள் மரணத்தை எதிர்கொள்ளும் முறைகள் நாவல்பரப்பெங்கும் வந்தபடியே உள்ளன. மரணத்தை சரண்அடையும் முதியவர்கள், மரணத்தைக் கொண்டாடும் மகந்த், மரணத்தின் உக்கிரமான அடியின் முன் உடைந்து சிதறும் அன்னையர், மரணத்தின் அற்பத்தனம், அபத்தம். மரணம் வராத பத்து பக்கங்கள்கூட இந்நாவலில் இல்லை.

மருத்துவனே மரணத்தை நினைவூட்டுபவனாக , மெல்லமெல்ல மரணமேயாக ஆகும் பரிணாமமே இந்நாவலின் மிகமிக கவித்துவமான இடம் எனலாம். ஒரு கட்டத்தில் ஜீவன் மஷாய் மனித வாழ்வின் இன்றியமையாத முடிவை, அதன் முன் துணயற்றவனாக தன் ஆசைகளுடனும் சபலங்களுடனும் நிற்கும் மனிதனின் சிறுமையையும் நினைவூட்டி திடுக்கிட வைப்பவராக ஆகிறார். அவரது உயிர்நண்பர் சேதாப் கூட ஜீவன் தன் நாடியைப்பார்க்கும்போது அஞ்சி நடுங்கி தப்பி ஓடுகிறார்!

உலக இலக்கியத்தில் மரணத்தை அதன் உச்ச வல்லமையுடன் சித்தரித்தவர் தல்ஸ்தோய்தான் என்பது பொதுவான விமரிசன மதிப்பீடு. அன்னா கரீனினா, போரும் அமைதியும் ஆகிய இரு நாவல்கள் உதாரணங்கள். ஆனால் அவற்றை விட ஒருபடி அதிகமாகவே கவித்துவமும் ஆழமும் கூடிய ஆக்கம் ஆரோக்கிய நிகேதனம். காரணம் ஈராயிரம் வருடம் மரணத்தை தியானித்து சாரம் கண்ட ஒரு பெருமரபின் செழுமையையும் தன்னுள் கோண்டது இவ்வாக்கம்

ஆரோக்கிய நிகேதனத்தின் இன்னொரு சிறப்பம்சம் இருபதாம் நூற்றாண்டில் தொடங்கி இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பேருருவம் கொண்டிருக்கும் அடிப்படைவினா ஒன்றை அது பற்பல கோணங்களில் மீண்டும் மீண்டும் எழுப்புகிறது என்பதே. ‘வளர்ச்சி என்பது என்ன?’ என்ற வினாதான் அது. அறிவு பரந்து விரிகிறது, வாழ்வின் வளங்களும் மனிதனின் வாழ்வுச் சாத்தியங்களும் பெருகி வளர்கின்றன. ஆனால் அவை அவனை மகிழ்ச்சிகரமானவனாக மாற்றுகின்றனவா? நேற்றும் மனிதன் துயரம் நிரம்பிய மனத்துடன் எண்ணற்ற வினாக்களை, பதிலற்ற வினாக்களை, தன் அகம் நோக்கி ஏவியபடி வாழ்ந்தான். இன்றும் அப்படியே வாழ்கிறான். எதை வென்றால், எதை அடைந்தால் அவன் உண்மையான விடுதலையையும் மகிழ்ச்சியையும் அடைவானோ அதை வெல்லவோ, அடையவோ இல்லை. மாறாக அவன் அதை அடையும் பாதையை மேலும் மேலும் சிக்கலாக ஆக்குவதாகவே நாகரிக வளர்ச்சியும் அறிவுப் பெருக்கமும் உள்ளன.

ஒவ்வொரு புதிய அறிவையும் மனிதனின் அந்தரங்கம் அஞ்சுகிறது. அறிவின் வெற்றி மனிதனை தற்கூச்சமடைய வைக்கிறது. ‘பிராங்கன்ஸ்டீன்’ போன்ற ஒரு அடிப்படையான உருவகம் உண்மையில் இத்தகைய அச்சத்திலிருந்தும் கூச்சத்திலிருந்தும் பிறந்ததே. நவீன விஞ்ஞானப் புனைகதைகள் மிகப் பெரும்பாலானவை ‘பிராங்கன்ஸ்டீனை’ பின்தொடர்பவை என்பதைக் காணலாம். ‘குளோனிங் முறை’ அல்லது ‘மரபணுத்துறை’யின் புதிய வெற்றிகள் நம்மை உள்ளூர அச்சம் கொள்ள வைக்கின்றன எனபதும் இதனாலேயே. இந்த ஆதாரமான அச்சத்தை ‘ஆரோக்கிய நிகேதனம்’ பதிவு செய்கிறது.

புதுமை நம்மை சிக்கல்களை நோக்கித் தள்ளுகிறது. எளிமையின் இன்பத்தையே மனிதமனம் நாடுகிறது. தன்னை வெல்லாத மனிதனின் கையில் எந்தப்புதுமையும் துயரமாகவே மாறும் என்று அவன் அறிவான். ஆயினும் புதுமையிலிருந்து விலக முடிவதில்லை. அதை நிராகரிக்கவும் முடிவதில்லை. ஏனெனில் புதுமை என்பது இளமை. அதில்தான் உயிரின் அதிகபட்ச துடிப்பு உள்ளது. பிரபஞ்சத்திற்கு உயிர்சக்தி விடுக்கும் சவால் உள்ளது. அச்சவாலில் இருந்து உருவாகும் தன்னகங்காரம் உள்ளது. அதை மனிதனால் ஒருபோதும் தவிர்த்துவிடமுடியாது. ஆகவே, பதறியபடியும் அஞ்சியபடியும் முன்னேறியபடியே இருக்கிறான் மனிதன்.

இந்த முரண்பாட்டை மிகுந்த கவித்துவத்துடன் வாழ்வின் பல்வேறு தளங்களுடன் பிணைக்கிறது ஆரோக்கிய நிகேதனம். மரணத்திற்கும் வாழ்வுக்கும், உள்ளுணர்வுக்கும் தருக்கபூர்வ அறிவுக்கும், கிராமத்திற்கும், நகரத்திற்கும், இசைந்து வாழ்தலுக்கும் போராடி வாழ்தலுக்கும் இடையேயான முடிவற்ற முரண் சாத்தியங்களை இந்நாவலின் ஒவ்வொரு தருணத்திலிருந்தும் நாம் வாசித்தெடுக்க முடியும்.

ஆயுர்வேதம் சிகிழ்ச்சையை வைத்தியனுக்குப் பொறுப்புள்ள ஒன்றாக ஆக்குகிறது. அலோபதி அதை ஒரு தொழிலாக மார்றுகிறது. விளைவாக வினயன் போன்ற ஒரு மருந்துவணிகன் உள்ளே புகுந்து போலி மருந்துகளை விற்று பணம் சேர்க்கிறான். மனிதனுக்கு கடைசிவரை ஆசையை அளித்து பெரும்பணச்செலவில் சிகிழ்ச்சையளிக்கும் அலோபதி ஏழைகளை முற்றாகக் கைவிடுகிறது. பணமிருப்பவர்களை கடைசித்துளிவரை சுரண்டும் அமைப்பாக ஆகிறது.

இந்நாவல் ஐம்பதுகளில் எழுதப்பட்டது. இன்று இப்போக்குகள் உச்சத்தை அடைந்து மருந்து உற்பத்தியாளர்- மருத்துவர்- மருந்து வணிகர் என்னும் மும்முனைக்கூட்டு நோய்களை உருவாக்கி மருந்துகளை விற்கும் நிலை வரை வந்துள்ளது. இன்றுள்ள நோய்களில் பெரும்பகுதி அதீத மருந்துகளினால் உருவானவையே என்று இவான் இல்யிச் போன்ற அறிஞர்கள் நிறுவியுள்ளனர். ஹாத்தி கமிட்டி போன்ற ஆய்வமைப்புகள் இன்று இந்தியாவில் நிலவும் மருந்துகளில் எண்பது சதவீதம் மருந்துகள் தேவையற்றவை, அபாயகரமானவை என்று கண்டுபிடித்துள்ளன. ஆனால் இருபது வருடங்களா¢யும் அவ்வறிக்கை மீது நடவடிக்கைஎ டுக்க நம் அரசுகளால் முடியவில்லை. மருத்துவம் மனிதத்தன்மையை இழப்பதன் அபாயத்தை அன்றே சொல்லிச்சென்றுள்ளார் தாராசங்கர்.

1951 ல் எழுதப்பட்ட இந்நாவலுக்கு 1953ல் ரவீந்திர புரஸ்கார் என்னும் உயரிய விருது கிடைத்தது. 1956ல் சாகித்ய அக்காதமி விருது. தமிழில் த.நா.குமாரசாமி மிகுந்த அர்ப்பண உணர்வுடன் அவரது நாவல்களை மொழியாக்கம் செய்துள்ளார். கமலினி [ராஇ கமல்] அக்கினி [ஆகுன்] நீலகண்டன் [நீல்கண்ட்] கணதேவதை [கணதேவதா] கவி [கவி] ஆகியவை அவரால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. கலைமகள் காரியாலய வெளியீட்டாக வந்த இவற்றில் ஆரோக்கிய நிகேதனம் மட்டுமே சாகித்ய அக்காதமியால் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

1972ல் இப்படைப்பு தமிழில் வெளிவந்துள்ள போதிலும் பரவலான வாசகக் கவனத்தை இது ஈர்த்தது என்பதற்கான தடயங்களைச் சிற்றிதழ்களில் காண முடியவில்லை. தமிழின் மூத்த எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள் எவருமே இந்நாவலைப்பற்றி ஏதும் சொன்னதாக நான் வாசித்தது இல்லை. தி.ஜானகிராமனின் மோகமுள் இந்திய நாவல்களில் தலையானது என்று சொன்ன க.நா.சு இதைப்பற்றி என்ன சொன்னார், அதை வழிமொழிந்த வெங்கட் சாமிநாதன் என்ன சொன்னார் என்று அறிய தடையங்கள் இல்லை. இந்திய நாவல்கள் மேல் இயல்பான ஒரு உதாசீனம் நம்மிடையே இருந்துள்ளது

உதாரணமாக சுந்தர ராமசாமி என்னிடம் அவர் தாராசங்கருக்கு 1959ல் கலைமகள் காரியாலயத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு சென்றிருந்ததையும் அங்கு அன்னியமாக உணர்ந்ததையும் சொல்லியிருக்கிறார். ஆனால் 1995 வரை அவர் தாராசங்கரின் எந்நாவலையும் படிக்கவில்லை. ஆரோக்கிய நிகேதனத்தை பத்து பக்கத்துக்குமேல் படிக்கும் உந்துதலே வரவில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் முதியவயதில், தன் கடைசி நாவலுக்குத் திட்டமிட்டபோது என்னிடம் அவர் சிறந்த இந்தியநாவல்களாக நான் கருதுவனவற்றின் ஒரு பட்டியலை எழுதிக்கேட்ட கடிதத்தை சமீபத்தில் மீண்டும் பார்த்தேன். நான் அளித்த பட்டியலையும். அதில் ஏறத்தாழ எல்லா நாவல்களையும் அவர் படித்தார் – மலையாளத்தில் படிக்கமுடியவில்லை என்றார். ஆரோக்கிய நிகேதனம் படித்தபோது ஆழமான மனநகர்வுக்கு ஆளாகி பலநாட்கள் தூக்கமில்லாது துன்புற்றதாகச் சொன்னார். அப்போது சௌந்தரா இறந்த நாட்கள். ”நீங்கள் எனக்கு இந்நாவலை சிபாரிசு செய்திருக்கக் கூடாது. என்னால் தாங்க முடியாத படைப்பு இது” என்றார்

இதன் இந்தியத்தன்மையே நம் நவீனத்துவர்களுக்கு அணுக முடியாதபடி செய்தது என எண்ணுகிறேன். சுந்தர ராமசாமி இறுதிநாள்வரை ஐரோப்பிய இலக்கியம் மீது மிக விரிவான கவனம் கொண்டிருந்தார். ஏராளமான அமெரிக்க நவீன நாவல்களைப்பற்றிச் சொல்லும் அசோகமித்திரன் கூட இந்நாவலைப்பற்றி எங்கும் சொல்லவில்லை. அவர்களுக்கு இதன் இந்தியத்தன்மையே பழைமையாக பட்டிருக்குமோ?

அன்றைய இலக்கியப் போக்குகள் மூன்று. சிற்றிதழ் சார்ந்த போக்கு வெகுவேகமாக மேற்கத்திய நவீனத்தை விழுங்கி செரிக்க முயன்றபடி இருந்தது. பிரபலமான கேளிக்கை எழுத்து சரித்திர கனவுகளையும் பாலுறவு பகற்கனவுகளையும் பயிரிட்டு வந்தது. கல்வித்துறை மரபு தூய தமிழ் மோகத்தில் நீராடியிருந்தது. பல முக்கியமான மொழிபெயர்ப்புகள் இம்மூன்று தளங்களுக்கும் வெளியே நின்றுவிட நேர்ந்தது. இதற்கு க.நா.சு மொழிபெயர்த்த நூல்கள் விதிவிலக்கு என்று காணலாம். காரணம் அவை பொதுவாக நவீனத்துவ நாவல்கள் அல்லது நவீனத்துவத்தின் முன்னோடிநாவல்கள்.

ஆனால், பிற இந்திய மொழிகளில் இப்படி நிகழவில்லை. உதாரணமாக மலையாளத்தில் நிலீனா ஆப்ராம் மொழிபெயர்த்த ஆரோக்கிய நிகேதனம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மலையாள நாவல்களின் வடிவப் பிரக்ஞையில் அதன் பங்களிப்பு மிகவும் பெரியது. தமிழில் இன்னமும் வெளிவராத ஆஷாபூர்ணாதேவியின் நாவல்கள் முதலியவை அங்கு வெளிவரவும் வழிவகுத்தது. இப்பெரிய நாவல்கள் இங்கு வராததும், வந்தவை கவனிக்கப்படாததும்தான் நமது நாவல் பிரக்ஞையை குறுக வைத்தன என்று படுகிறது.

ஆகவே நாம் நீண்ட சிறுகதைகளைக்கூட நாவல் என்று நம்ப ஆரம்பித்தோம். ‘இடைவெளி’ போல; ‘வாடிவாசல்’ போல. அல்லது தொடர்கதைகளை நாவல்களாக எண்ணி மயங்கினோம். மோகமுள் போல. நாவல் என்பது நாலா பக்கமும் பரவி விரியும் ஒரு பெருந்தொகுப்பு வடிவம் எனும் பிரக்ஞை நமக்கு ஏற்படவில்லை. இன்று தமிழில் கிடைக்கும் இந்திய நாவல்கள் பலவற்றை நாம் மீள் கட்டமைப்பு செய்யப்பட்ட புதிய நாவல் பிரக்ஞையுடன்தான் அணுக முடியும்.

தரிசனத்திலும் கூறுமுறையிலும் உள்ள தீவிரமான இந்தியத் தன்மையே ஆரோக்கிய நிகேதனத்தைப் பேரிலக்கியமாக்குகிறது. அதை தொட்டுணர இந்தியக் காவிய மரபுகளில் சிறிதளவேனும் அறிவும், ருசியும் உள்ள மனம் தேவை. அக்காவிய மரபுகளின் பல்வேறு உணர்வு நீட்சிகளை ஆரோக்கிய நிகேதனம் எப்படி உள்வாங்கி மறு ஆக்கம் செய்துள்ளது என்று அப்போதுதான் புரிந்து கொள்ளமுடியும். துரதிர்ஷ்டவசமாக நமது இலக்கிய வாசகர்களில் குறிப்பாக தமிழ்ச் சிற்றிதழ்கள் வாசகர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் மேற்கத்திய படைப்புகள்தான் மகத்தானவை என்ற தீவிரமான நம்பிக்கையை வளர்த்து வைத்திருப்பவர்கள். மேற்கத்திய நடுவாந்தர படைப்புகளைகூட புல்லரித்து வழிபடுவார்கள். இமயத்தின் ஒரு சிகரம்போல அற்புதமான மௌனத்துடன் தியானத்திலாழ்ந்திருக்கும் இப்பெரும் படைப்புக்கிணையான படைப்புகளை உலக இலக்கியத்தில் அபூர்வமாகவே காணமுடியும் என்பதை அவர்கள் அறிவதேயில்லை.

[ஆரோக்கிய நிகேதனம் தாராசங்கர் பந்த்யோபாத்யாய, தமிழாக்கம்: த.நா. குமாரசுவாமி, வெளியீடு: சாகித்ய அகாதமி, 1972.]

————————————————————————————————————————————-

ஜெயமோகன்.

www.jayamohan.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.