ஒரு நூற்றாண்டு கால நவீனத் தமிழ் இலக்கியத் தடத்தில் நகுலனின் வருகை வித்தியாசமானது. இவருக்கு முன்னோடி என்று மௌனியைக் கொஞ்சம் சொல்லாம் என்றாலும் மௌனி மன உலகின் புனைவுப் பாதையைத் தெளிவான சித்திரத்திற்குள் ஒழுங்குபடுத்தியபடி கொண்டு சென்றார். நகுலன் புனைவை மனஉலகின் கட்டற்ற தன்மையில் சொல்லிச் சென்று சுற்றிலும் ஒரு கரையைப் போட்டுத் தேக்கிக் கொண்டார்.
காத்திருந்தேன்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஆலின் ஆயிரமாயிரம் சிறு இலைகள் பதறி மின்ன
வானம் நீலமாக விரிய நான் தனித்திருந்தேன்
வீதியில் யாருமில்லை
வருவது என்றால், வரும்பொழுது இதுவேயானால்
நீர் வேட்கையில் வாழப் புலரும் நாவினுக்கு
நைப்பும் வேண்டுமா? என்று நானும்
அவன் வருகை நோக்கி
வெளிவாசலில் காத்திருந்து
தெருவீதியில் கண் பதித்தேன்.
பொழுது சாய, கதிருந்தளர
என் நீர்வேட்கை மறைய
தெருவீதியில், வெள்ளித் திரைச் செய்திவீசி
ஒரு வர்ணக் கடித வண்டி நீங்கிற்று
நாளும் ஞாயிறு, எங்கும் விடுதலை
எனவே புறவுலகச் செய்தி தானுமில்லை
காரணந்தான் என்று சொல்லலாம்
தகைத்தன்றி பின்னறை சென்று
முன்னறை வந்து – மீண்டும்
சூரல் நாற்காலியில் முடங்கினேன்.
தெருவீதியில் கர்த்தரின் சேனை
கையில் உமாரமும் நாவில் மந்திரமும் சப்திக்க
அடிவைத்து அடிவைத்து அசைந்து செல்லும்
மீண்டும், வீதியில் யாருமில்லை
வெறும் தனிமை
வெகுதொலைவில்
வேகம் குறைந்து வரும் டாக்ஸி
என் வீடுவரும் என்று
நம்பிக்கையின் வேதனைதாங்கி
நான் எழ மனந்தூண்ட
நான் வறிதே வீற்றிருக்க
வந்த வண்டி
என் வீடு தாண்டிப் போகும்
………………………………..
நான் இளம் வாசகனாகத் தமிழ்ப்பரப்பில் நுழைந்திருந்தபோது நகுலனின் இந்நீண்ட கவிதையை ஒரு சந்தர்ப்பத்தில் படிக்க நேர்ந்தது. எதிர்பார்ப்பு, நம்பிக்கை, காத்திருப்பு, அணுசரன, பரஸ்பரம் ஏதுமற்று தனிமையின் இருட்டில் போய் முடங்கும் ஒரு துயரார்ந்த சித்திரம் என்னை மிகவும் பாதித்தது. அன்று முழுக்க நகுலனின் தனிமை நிழல் என்னுள் நடமாடியபடியே இருந்தது. சொல்லமுடியாத வேதனை, நகுலனைப் பார்க்க வேண்டுமே என்று மனம் துடிக்க, எனக்குள்ளே திட்டமிட்டும் நிறைவேறவில்லை என்ற ஆதங்கம் எப்போதும் உண்டு. அப்போது எனக்கு வயது 23.
அவரது வாழ்வே அப்படியாகிப்போனது என்று அறியநேர்ந்தபோது இன்னும் கூடுதலான துயரத்தை அளித்தது. அவரைப் பற்றிச் சொல்லப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்களில், அவதானிப்புகளில் வித்தியாசமான வெளிப்பாடுகளில் கவர்ச்சி இருந்தது. கோணங்கி கொண்டுவந்த நகுலன் சிறப்பிதழ் அன்று அவர்மேல் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. சூரல் நாற்காலி, ஒலிநாடா போன்ற சொற்கள்கூட முணுமுணுக்க வைத்தன. அவரைப் பார்க்கவேண்டும் என்ற கிளர்ச்சியை உண்டு பண்ணியபடியே இருந்தது.
தொண்ணூறுகளின் முற்பகுதியில் இளம் படைப்பாளிகளாக அரும்பத் தொடங்கிய யாருக்கும் முன்னோடிகளைச் சந்தித்து உரையாட வேண்டும் என்ற கனவு இருந்தது. விக்கிரமாதித்தன், நாஞ்சில் நாடன், கோணங்கி என்று பலர் நகுலனின் வாழ்முறை பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அதெல்லாம் என்னைப் போன்றோருக்கு ஈர்ப்பைத் தந்தது.
புனைகதை, விமர்சனம் எழுத்தாக்கங்களைக் காட்டிலும் கவிதையில் நகுலன் கூடுதலான எல்லையைத் தொட்டிருக்கிறார். முக்கியமாக மனஉணர்வின் விசித்திரங்களை நேர்த்தியான வடிவில் மிக நெருக்கமான மொழியில் வெளிப்படுத்தியிருப்பதைத் தேர்ந்த வாசகன் உணர்ந்து கொள்ள முடியும்.
கவிதையைச் செம்மையாக்கியிருப்பது தெரியாதவிதத்தில் பிசிறு இல்லாமல் கொடுத்திருப்பதும் முக்கியக் காரணம். நகுலனின் வாழ்வுலக அனுபவத்தோடு அக்கவிதைகள் கொண்டிருக்கும் உறவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த மெனக்கெடல் புனைகதைகளில் இல்லையோ என்று படுகிறது. அதனால் படைப்பு தரும் பாதிப்பில் சில சங்கடங்களும், தடைகளும் ஏற்படுகின்றன. அது படைப்புத் தரும் நம்பிக்கையின் வீச்சைக் குறைக்கிறது.
2
நகுலனின் ‘வாக்குமூலம்’ எண்பது பக்கங்களில் அடங்கிவிடக்கூடிய நாவல். தனிமையும் அலுப்புமான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து 65 வயதைத் தாண்டி இராஜசேகரனை மைய இழையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல். 60 வயதிற்கு மேல் வாழவிரும்பாதவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு அரசே சட்டத்தில் வழிவகை செய்திருப்பதை அறிந்து அதனை முழுமையாக அறிந்துகொள்ள விரும்புகிறார். அந்தச் சட்ட நகலைத் தேடிச் செல்லும், அந்த நகலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலையும் தகவல்களையும் வாக்குமூலத்தையும் தந்து அதிகாரிகளை எதிர்கொள்வதும்தான் இந்நாவலின் கட்டமைப்பு. நகுலனின் மற்ற நாவலில் கூடிவராத வடிவ ஒழுங்கு இந்த நாவலுக்கு அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
தற்கொலைத் தேர்வு என்ற புள்ளியிலிருந்து வளர்த்துச் செல்லும் கிளைகளில் எதிர்ப்படும் மனிதர்களின் பல்வேறு குணரூபங்களைச் சொல்கிறார். மனிதர்களின் அற்பத்தனங்களை அரசு ஊழியர்களின் மேட்டிமைத்தனங்களை, திட்ட அதிகாரிகளின் காரியார்த்தமான பாவனைகளை நகுலன் எள்ளல் தொனியில் காட்டுகிறார்.
முதியோர் தற்கொலைத் தேர்விற்கான தேச முன்னேற்றச் சட்டம் (1786) வெளியிடப் படுகிறது. அந்த நாளே ஏப்ரல் முதல் தேதியாக இருக்கிறது. இது குறித்து மறுநாளிலிருந்து எந்தச் செய்திகளும் வராமல் அரசே பார்த்துக் கொள்கிறது. ஊடகங்களிலும் விவாதங்களோ விமர்சனங்களோ, அறிக்கைகளோ வராதபடிக்கு அரசு பார்த்துக் கொள்கிறது என்பதின்வழி, இந்தச் சட்டமும் மக்களை முட்டாளாக்கும் அறிவிப்பே என்பதை ஏப்ரல் முதல்தேதி வெளியிட்டிருப்பதிலிருந்து காட்டுவதாக இரு நண்பர்கள் பேசிக் கொள்கின்றனர்.
இந்தச் சட்டத்தின் வழி மரணத்தைத் தேர்வு செய்யவிரும்பும் இராஜசேகரனின் வாழ்வும் அவரது நண்பர்களின் நடத்தைகளும் சுருக்கமாகக் காட்டப்படுகின்றன. மரணத்தை இப்படித் தேராமல் அதன் போக்கிலேயே விட்டுவிடுவேன் என்று சொல்கிற அங்கமுத்துவின் (இராஜசேகரனின் நண்பர்) பார்வையில் அரசின் நடைமுறைகளை, சட்டத்தை விமர்சிப்பவனாக வருகிறான். இந்தச் சட்டவரைவைக் கொண்டுவரும் ஏபினிதாம்சன் முக்கியமான பங்கு வகிக்கிறான். வினாப் பட்டியலும், தேர்வுக்குழுவும் இந்நாவலின் முக்கியப் பகுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது.
தற்கொலைச் சட்டத்தை விரும்புகிறவர்களில் இராஜசேகரன் முதன்மையானவராக வெளிப்படுகிறார். அத்தோடு தன் வாக்குமூலத்தை குழுவிற்கு அனுப்புகிறார். அந்த வாக்குமூலம் தற்கொலை சார்ந்த தரவுகளாக மட்டுமே இல்லாமல் அவரது வாழ்வில் ஊடாடிய மனிதர்களின் துண்டு துண்டான செயல்பாடுகளைத் தொகுத்துத் தருகிறார்.
அர்த்தம் தெரியாமலே பாடுகிற ஜானோவாலே சொல், படைப்பாக்கத்தின் நுட்பங்கள் குறித்த எண்ணங்கள், ஆச்சியின் உடல் உபாதைகள், வைரவன் பின்னணியின் வியாபார ஏற்ற இறக்கம். வினா வரிசையில் சில கேள்விகள் குறித்துப் பேசும் பேச்சுக்கள், ஆனந்தின் ‘இரண்டு சிகரங்களுக்குக் கீழ்’ நாவலின் தாத்பரியம் பற்றிய விளக்கம். இவரது அப்பாகால குடும்பப் பணியாளரான இராஜகோபால ஐயங்காரின் கிண்டல், வங்கி அதிகாரியான ராமசுப்பனின் மிரட்டல், சாமிராவ் சாமியின் குடும்ப விவகாரம், தாயின் மரணத்தை ஒட்டி வெளிப்படும் மகனின் அபத்த நடவடிக்கை. இந்த நினைவுச் சுழலில் ஏபின் தாம்சன் கருத்துகளுக்கு மாற்றாகத் தோன்றும் எண்ணங்கள். வாசிப்புக்குத் தந்த அனுபவங்கள் – திறப்புகள், கனவில் வரும் விசித்திரமான நிழல்களின் நடமாட்டங்கள், தனிமை ஏற்படுத்தும் பயங்கள், பிரமைகள், எண்ணச் சிதறல்கள், பூனையுடனான தோழமை என இராஜசேகரனின் சிறிய உலகம் செறிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.
ஏபின் தாம்ஸன் தன்னை மிகத்திறமையாக வெளிப்படுத்திக் கொள்கிறார். தாம்சனின் தற்பெருமைகள், பாவனைகள், அரசின் செயல்திட்டத்திற்குள் வளைத்துப்போடும் பேச்சு சாதுர்யம், பாராட்டும்பாணி, போலியான தார்மீக ஆவேசம், சாவு பற்றி அவன் தரும் தத்துவார்த்த விளக்கங்கள். காந்தி, ஏசுவின் மரணங்களும் கோர்த்து உயர்த்தும் கொக்கி, இருப்பு பற்றிய விசாரணை, இச்சட்டத்தினால் ஏற்படும் தேசத்தொண்டு என எடுத்துரைக்கிற விதத்தில் பெரிய மெஸ்மரிசமே செய்கிறார். மரணத்தை அரசிற்கு வருமானமுள்ள துறையாக நினைக்கிற தாம்ஸனின் பாத்திரம் வலுவாக உருவாகி இருக்கிறது.
தாம்ஸனின் விளக்கங்கள் கவர்ச்சிகரமாக இருக்கின்றன. உதாரணமாகச் சிறந்த தற்கொலைக்கான வாக்குமூலம் தருபவர்களுக்குப் பரிசை அறிவித்து பொதுமக்களுக்கு வழிகாட்டியாக வைக்கப்படும் என்கிறான். தாம்ஸன் மற்ற சமமுள்ள முதியவர்களை இந்தத் தற்கொலைப் புரட்சியில் இழுக்கிறானே தவிர, பின்னாளில் இதே பாணியைத் தான் தேடிப்போவதாக எங்கும் செல்வதில்லை. அவன் அரசு கொண்டுவரும் அந்தச் சட்டத்தைப் பிரமாதமாக நடைமுறைப்படுத்துவதிலேயே கவனத்தைக் குவிக்கிறான். அரசின் அடிவருடி என்பது சொல்லப்படாமல் சொல்லப்பட்டிருக்கும் விதம் அழகாகக் கூடி வந்துள்ளது.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கானது. பின்னலான சிக்கலிலும் வாழ்ந்து திரிவது குறித்த நம்பிக்கைகளை, வெளிச்சங்களை அவன் சொல்வதே இல்லை. எண்ணிப்பார்த்தால் வசீகரம்மிக்க நளினமான சர்வாதிகார குணம் கொண்டவனாகத்தான் இருக்கிறான். அவனால் மக்களின் பக்கம் நிற்கமுடிவதில்லை. அந்தச் சட்டம் பல காரணங்களால் நிராகரிக்கப்படுகிறபோது நடுநிலமையாளன்போல் பேசுகிறான். அரசின் தந்திரங்களுக்கு செயலூக்கம் கொடுப்பவர்கள் இவனைப் போன்றவர்கள்தான் என்பதை சூசகமாகக் காட்டுகிறார்.
தற்கொலையைத் தேர்வு செய்யவிருப்வோர் பதில் தரவேண்டிய 110 கேள்விகளில் அபத்தமான கேள்விகள் உண்டு. புத்திக்கூர்மையான கேள்விகள் உண்டு. தத்துவார்த்த கேள்விகள் உண்டு. கோமாளித்தனமான கேள்விகள் உண்டு. கோணங்கித்தனமான கேள்விகள் உண்டு, படைப்பாக்கம் சார்ந்த கேள்விகள் உண்டு, இப்படிப் பலரகம். ஆனால் எந்த இடத்திலும் அரசுக்கு பாதிப்பு வராத கேள்விகளாக இருப்பதை ஒரு கணம் உணரும்போது சிரிப்பு வரத்தான் செய்கிறது. இன்னொருவகையில் இந்தக் கேள்விகள் தற்கொலை செய்ய விரும்புபவர்களைக் கண்காணித்து அதற்கான தொகை 5000 ரூபாயை வாங்கி கஜானாவில் போடும் குறிக்கோளில் இருப்பதையும் கவனிக்க முடியும். இன்றைய டாஸ்மார்க் போலத்தான். மனிதர்களைக் கேலிக்கூத்தான நிலையில் வைக்கிறது. பிச்சைக்காரர்கள் அநாதைகள் இந்தச் சட்டத்திற்கு வரமாட்டார்கள். ஓரளவு பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே வரமுடியும். அவர்களுக்குத் தேசத் தியாகிப் பட்டமும் வழங்கப்படும் என்பதிலிருந்தே புரியலாம்.
இந்த நாவலின் முடிவு சார்ந்த பார்வை முக்கியமானது. இராஜசேகரன் இந்தக் குழப்படியான வாழ்க்கையிலிருந்தும் தேச முன்னேற்றச் சட்டத்தின் கவர்ச்சியான வியாக்கியானங்கள் – வினா பட்டியலிலிருந்தும் ஒருவித அபத்தத்தை உணர்ந்து கொண்டு வாழ்க்கை என்பது இனிப்பும் கசப்பும் கலந்ததுதான் என்ற தெளிவைக் கண்டடைகிறார். அதனை ஏபின் தாம்ஸன் மறைப்பதை உணர்கிறார்.
மற்ற பத்து விண்ணப்பதாரர்களும் வேறுவேறுவிதமான முடிவுகளை எடுக்கின்றனர். இந்த 100 விலைப்பட்டியலுக்கும் அடங்காத விதத்தில் மூவர் தற்கொலையைச் சுதந்திரமாகத் தேர்வு செய்து கொண்டதைத் தேர்வுக்குழுவினர் அறிகிறார்கள். மற்ற ஏழுபேர் முன்வைக்கும் தற்கொலைக்கான காரணங்கள், வழிமுறைகள் தாம்ஸன் முன்வைத்த வரைவிலிருந்து விலகியதாகவும் இருக்கிறது. மனிதர்களின் எண்ணங்களை அப்படி லேசில் ஒரு வரையறைக்குள் கையகப்படுத்திவிட முடியாது என்பதைத்தான் இவர்களின் வாக்குமூலங்கள் வழி முன்வைத்து நாவலின் கோணத்தை அர்த்தப்பூர்வமாக மாற்றுகிறது. அவர்களது மனவெளிப்பாடுகளுக்கு இந்தச் சட்டம் அடைபடாமல் தோல்வியுறுகிறது.
நாவலில் சகமனிதர்களைக் கேலிசெய்தவர்கள், கேலிக்கு ஆட்பட்டவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், அரசின் சார்பாளர்கள், சங்கத்து அடாவடிகள், கொடுப்பதை வாங்கிக் கொள்பவர்கள், விருப்பமில்லாமலே ஒரு துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்று ஓய்வூதியத்தில் வாழ்பவர்கள் என மனிதர்கள் வாய்க்கப்பெற்ற வாழ்க்கையில் நின்று தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். அவர்களின் குணரூபங்களை நகுலன் அடையாளப்படுத்தியபடி நகர்கிறார்.
3
வாசிப்பு சார்ந்து வேறுபடைப்புகள் தந்த சாரத்தை நகுலன் தன் படைப்புகளில் மொத்தமாக இறக்கி இயல்பாக வெளிப்படுத்துகிறார். சிலசமயம் நினைவூட்டப்படுகிறது. இது படைப்பதற்குக் கூடுதல் நம்பகத்தன்மையை உண்டாக்குகிறது. நம் வாழ்வின் மீதான வெளிச்சங்களை, விமர்சனங்களை தம் படைப்பின் வழி உண்டாக்கிட இதனைக் கைக்கொள்கிறார். நகுலனுக்கு இயல்பாகக் கூடிவரும் கலையாக இருக்கிறது. படைப்பை வேறு பரிமாணத்திற்குக் கொண்டு செல்வதாகப் பங்காற்றுகிறது.
இது முழுமையான சாத்தியங்களைத் தந்திருக்கின்றன என்று பார்க்கிறபோது சில சமயம் சரிவை நோக்கியும் சென்றிருக்கிறது. மூல சிருஷ்டிகள் தெரியாதபோது இப்பகுதி வாசகரை நிச்சயம் வசீகரிக்கவும் கூடும். ஆனால் அம் மூலப்படைப்பு அடைந்த கவித்துவ வெற்றியை அடையாதபோது வெற்றுக் காட்சிகளாகப் போய்விடுகின்றன.
காஃப்கா, காம்யூ, சாமுவேல் பெக்கட், காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர், பாரதி போன்றோர் காட்டிய வாழ்வின் பிடிப்பை அல்லது அபத்தத்தை, இருத்தலியல் பிரச்சனைகளைக் கொஞ்சம் படைப்பில் இக்கட்டான இடத்தில் வைத்து விவாதிக்கிறார்.
ஏபின்தாம்ஸன் சாவைப்பற்றி தத்துவ விளக்கங்களைச் சொல்லிச் செல்லும்போது சம்பத்தின் ‘இடைவெளி’ நாவல் ஞாபகம் வருகிறது. இடைவெளி நாவல் சாவின் சந்திப்பிற்கு ஒருகணம் முன் பின்னான இருப்பு எப்படி இருக்கும் என்று நுண்மையாக உள் நுழைந்து செல்லும்போது இங்கு சாவைப் பற்றிய வியாக்கியானங்களாக இருக்கின்றன.
கெட்ட கனவொன்றில் சுடுகாட்டு நிழலாட்டங்கள் பீதியைக் கிளப்புவதாகச் சொல்லும்போது மௌனியின் ‘பிரக்ஞை வெளியில்’ கதை ஞாபகம் வருகிறது. மௌனியின் கதையில் தான் மரணமாகிக் கிடக்கும் படிமத்தைப் பின்தொடர்ந்து நிழல் காட்டி மறையும்போது இங்கு நிழல்கள் ஒருவிதமாக பயங்காட்டி இருட்டில் கூத்தாடுகின்றன. அந்த நிழல்களைப் பற்றி நகுலன்தான் சொல்கிறார்.
பக்கத்து வீட்டுப் பூனை மெல்ல மெல்ல இராஜசேகரனோடு மிகமிக நெருக்கமான ஒரு தோழமைக் கொள்வதை மிகத் துல்லியமாகச் சொல்கிறார். அசோகமித்திரனின் பூனை கதையில் கணவன் – மனைவி கலவையின் மர்மத்தை ஏந்திக்கொண்டு அலைகிறது. அப்பூனையை அவள் அப்படித்தான் பார்க்கிறாள். நகுலனின் பூனையிடம் ஒரு படிமம் உருவாகவில்லை. ஆனால் அவரது வாழ்வு ஒரு கணத்தில் அர்த்தமிக்கதாக மாற்றுகிறது. இராஜசேகரன் ஒருநாள் வெளியே சென்றுவிட்டு தாமதமாக வந்தபோது தனிமையில் அது மண்டியிட்டு அமர்ந்திருந்த காட்சி அவருக்குள் ஒரு உலுக்கலை ஏற்படுத்துகிறது. யாருமற்று அது இருந்த தனிமை – தனக்குள் இருக்கும் தனிமை உணர்ச்சியை கிளத்தும் இடம் படைப்பெழுச்சியுடன் கூடி வந்திருக்கிறது.
நகுலன் தன்னை பாதித்த படைப்பின் பகுதிகளைத் தனக்குள் ஓர் அனுபவமாக்கி தன் படைப்பில் புதிய கோணத்தில் வெளிப்படுத்தப் பார்க்கிறார். வெளிப்படையாகவே இந்த ஒரு வாதத்தைச் செய்கிறார். பெரிய உலுக்கலைத் தரிசனத்தைத் தரவேண்டும் என்பதுதான் நம் எதிர்பார்ப்பு. ஆனால் மூலப்படைப்பு தந்த புதிதான அனுபவத்தைத் தருவதில்லை. சிதறலான எண்ணத் தெறிப்புகளாக சொல்லித்தான் முடிகிறது. மூலப்படைப்பிற்கு நிகரான ஒரு மாற்றுப் படிமத்தை உருவாக்க முடியவில்லை. இவை அவரது சொந்த அனுபவங்களுக்கு நெருக்கமாக இருப்பதால் – எப்போதோ பாதித்துப் படித்த விசயங்கள் ஒரு படைப்பில் சகஜமான தொனியில் வெளிப்படுத்திக் கொள்கிறார். நகுலனே சொல்கிறார். “ஒவ்வொரு அனுபவம் என்னைப் பாதிக்கையில் நான், அவர்களின் அவைகளின் நிழல்கள் ஆகிவிடுகிறேன். நான் ‘ஏதோ ஒன்றின்’ நிழலாக இயங்கி” வருவதால்தான் என் ஜென்மமே சாந்தியடைகிறது” என்று இடைவிடாமல் என் உள்ளில் நின்று கூறிக்கொண்டிருக்கிறது. எனக்கே நான் என்ன எழுதுகிறேன் என்று தெரியவில்லை, ஆனால் வேறொன்றின் மூலம் நான்தான் இயங்குகிறேன் என்ற உணர்வும் கூடவே என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது” என்று இராஜசேகரன் வழி நகுலன் சொல்கிறார்.
4
இராஜசேகரனின் நினைவுச் சூழலில் என்னென்னமோ மனிதர்களின் பேச்சுகள் வருகின்றன. அவை தற்கொலைக்கான சாட்சியங்களாக வருவதில்லை. தெளிவாகச் சொன்னால் அதற்கும் இந்த நினைவுகளுக்கும் சம்பந்தமில்லை என்றுகூடச் சொல்லலாம். முடிந்தால் சம்பந்தப்படுத்திக் கொள்ளலாம். சாவு பற்றிய சிறு பகுதி மட்டுமே பொருந்தி வருகிறது. நகுலன் தன் எண்ணம் போனபோக்கில் நினைவலைகளைத் தொடுக்கிறார். நாவல் என்பதால் அதன் வடிவத்திற்கு வெளியே நிற்பதில்லை. முக்கியமாக இப்பகுதி இலக்கியப் பூர்வமாக உருவாகி இருப்பது என்பதும் உண்மை.
என்றாலும் நகுலன் காட்டுவது முழுமையான அக உலகம் அல்ல. அக உலகம் போன்ற தோற்றத்தை உண்டாக்கும் எழுத்து, தன்னை? தவிர்த்து மற்ற மாந்தர்களின் அகத்திற்குள் நிகழும் உளவியல் சிக்கலைக் கண்டடைவதாக இல்லை. அவர்களின் நடவடிக்கைகளின் வழி அரிதாக நாம் உளவியலைக் காணமுடிகிறது. நகுலனின் தனிமை, அரவணைப்பற்ற நிலை, உறவுகள் இல்லாத சூழல், தாம்பத்திய பந்தமில்லாது போன வாழ்க்கைமுறை, குடும்பமாக இல்லாத நிலை, இவ்விதமான கூட்டுறவிலிருந்து, தப்பி நிற்பதால் உண்டாகும் பதட்டங்களை மன அவஸ்தைகளை மொழியில் கொண்டு வருகிறார். தனிமை ஏற்படுத்தும் தத்தளிப்பு என்ற விதத்தில் தோன்றும் எண்ணங்களைத் தான் அவரால் சொல்ல முடிகிறது. அந்த எண்ணங்கள்கூட ஆழமான உளவியல் பிரச்சனைகளைக் கண்டடைவதாக இல்லை. மானிட மர்மங்களையோ தனக்குள் இருக்கும் மர்மங்களையோ திறப்பதில்லை. அவரளவில் மனப்பிறழ்வு என்று முழுமையாகவும் சொல்லிவிட முடியாது. அதுபோன்ற பதட்டநிலையில் சிலவற்றைச் சொல்ல முடிகிறது என்பதற்குமேல் பெரிய பாய்ச்சல் இல்லை. அதே சமயம் எழுத்தாளர்களின் செயல்பாடுகள் குறித்து அவர் எழுதும்போது புதிதான அறிதலையும் அனுபவத்தையும் தரத்தக்கதாக இருக்கவும் செய்கிறது. அதில் அவர் தெளிவாகத்தான் இருக்கிறார். புறத்தின் காட்சிகளை அகமொழியில் சொல்லிப் பார்க்கிறார் என்றே தோன்றுகிறது. மனப்பிறழ்வு ஆழத்திற்குச் செல்லாதபடி மேல்மட்டத்திலேயே நின்றுவிடுவதாக இருக்கிறது.
பூனையைப் பற்றிய நடவடிக்கைகளை ஓரளவு துல்லியத்துடன் சொல்லமுடிந்த நகுலனால் இன்னபிற உலக அசைவுகளை நுணுக்கமாகப் பார்க்க முடியவில்லை. நகுலன் ‘ஒரு கிராமத்தில் இறைச்சி’ என்றொரு கதை எழுதியிருக்கிறார். அதில் வெள்ளிக்கிழமைதோறும் அவர் வளர்க்கும் நாய்க்குக் கறி எடுத்துப் போடுகிறார். வெள்ளிக்கிழமையானால் விடியற்காலையிலேயே அவரது பாதத்தை நக்கத் தொடங்கிவிடும். கறிக்கு இவ்விதம் ஞாபகமூட்டும். ஒரு வெள்ளிக்கிழமை நாளன்று நண்பர் வந்ததால் கறி எடுத்து வந்துபோட மறந்துவிடுகிறார். நண்பரை ரயிலேற்றிவிட கிளம்பும்போது அவரது கெண்டைக்கால் சதையைக் கடித்துவிடுகிறது. மருத்துவமனை செல்கிறார். பிரச்சனை இல்லை என்கின்றனர். நாயை நகராட்சி ஊழியரிடம் ஒப்படைக்கின்றனர். உண்மையில் அன்புடன் வளர்க்கப்பட்ட நாய் எஜமானனை ஒருபோதும் கடிக்காது என்ற எளிய உண்மையை மறந்துவிட்டு எழுதுகிறார். ஒரு சிறுகதைக்கான திருப்பத்துடன் எழுதப்பட்ட சிறப்பான வடிவம். ஆனால் உள்ளே சொல்லப்படுகிற குணம் இயல்பிற்கு முரணான ஒன்று. கறிபோடாததால் வேறுபல சேட்டைகள் நாய் செய்யும். அதில் கவனம் செல்லவில்லை. இது தெரியாமலே இந்தக் கதையைச் சிறந்த கதை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இங்கு இக்கதையைச் சொல்வதற்குக் காரணம், நாயின் உளவியலை நகுலன் தவறாகப் புரிந்திருக்கிறார் என்பதைச் சொல்லத்தான். அகத்தை அதன் உள் நின்று அவர் தேடியதில்லை.
சில சமயம் முக்கியமான எழுத்தாளர்களின் பார்வைக் கோணத்தைச் சொல்லி தனக்குத் தோன்றும் மாற்றுப் பார்வையை முன்வைக்கும் இடத்தில் உயர்ந்தும் நிற்கிறார். “காஃப்கா கவர்ச்சிகரமாக இருந்தாலும் மனிதன் எப்பொழுதுமே ஒரு குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…” என்று ராஜசேகரன் சொல்லியதோடு ‘அமைதியாக உறங்கப்போகிறேன்’ என்கிறான். மேலும் தேச முன்னேற்றச் சட்டத்தை உபயோகிக்க விருப்பமில்லை என்று வாக்குமூலத்தை முடிக்கிறார். மிக நல்ல பகுதி இது.
விமர்சனத்தோடு கூடிய எள்ளல் நடை நாவலின் இயக்கத்தோடு இணைந்து வெளிப்படுகிறது. நாவலுக்கு ஒரு வீச்சையும் ஈர்ப்பையும் அந்த நடை தருகிறது. மனிதர்களின் பேச்சின் இடையே வெளிப்படுவதால் நெருக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
இராஜசேகரனும் அங்கமுத்துவும் பேருந்திற்காகக் காத்திருக்கிறார்கள். வரவேண்டிய ஒன்பதாம் எண்ணிற்குப் பதிலாக இரண்டாம் எண் வண்டி வருகிறது. “அரசாங்கக் காரியம் இல்லையா?” ஒன்றும் செய்ய முடியாது. அப்படியே காரியத்தை ஒழுங்காகச் செய்யாவிட்டால் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் காந்தி மகான் காட்டிக் கொடுத்த ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிவிடுவார்கள். ஒன்றுமே சொல்ல முடியாது. உன்னுடைய சாமியார் பாடி வைத்திருக்கிறாரே, ‘நித்த மவுனமில்லாமல் அறிவோன் மற்றை நிட்டைகளே’, கேலியும் கிண்டலுமான ஒரு ரகத்தை அங்கமுத்து வழி வெளிப்படுத்துகிறார்.
ராஜசேகரன் ‘நடப்பதினால் நடை தொடரும் இல்லையா?’ என்கிறார். ‘பின்னே இல்லாமெ பிரதான வீதியில் அரசாங்கத் தலைமைச் செயலகத்துக்கு’ என்றால் ஆயுள் முழுவதும் அது நீடிக்கலாம் என்று பதில் தருகிறான் அங்கமுத்து. எனக்கு விசாரணை நாவலில் நீதிமன்றத்தில் நீதிக்காக 50 ஆண்டுகளாகக் காத்துக்கிடக்கும் கிழவனின் காத்திருக்கும் காட்சி சட்டென நினைவிற்கு வந்தது. அந்தக் கிண்டல் பதுங்கலான விதத்தில் நாவல் முழுக்கவே விரவி வருகிறது.
5
நகுலனின் நாவல்களில் சொல்லவந்த விசயத்தை ஓரளவு நேர்த்தியாகச் சொல்லிய நாவல் ‘வாக்குமூலம்’ தான். இந்நாவல்களிலும் சாப்பாட்டில் கல் விழுந்தது போல இடறலான இடங்கள் நிறையவே உண்டு. செம்மையாக்கம் தொடர்பான மெனக்கெடல் இல்லாததால் அதன் நம்பகத்தன்மை சிதறடிக்கிறது.
நகுலன் எழுதும் வாக்கியங்களில் பல குளறுபடிகள் உண்டு.
- ‘அலுவலகங்களைப் படையெடுப்பதற்கு முன் அவன் நெடுநாளைய நண்பனான ஆணையடித்தெரு அங்கமுத்துவைப் பார்த்தாலென்ன. இப்படியொரு வாக்கியம்… அங்கமுத்துவைப் பார்த்தாலென்ன என்று தோன்றியது என்று வாக்கியத்தை முடிக்காமலே விடுவதை நல்ல எடுத்துரைப்பு என்று சொல்ல மாட்டேன்.’
- ‘அவனுக்குத் தோன்றியது. அங்கமுத்து அவனைப் பற்றி என்ன நினைப்பான் என்று’ இப்படி எழுதுவது சிலருக்குப் பெரிய சாகசமாகத் தெரியலாம். பிழையான தொடரைக் கொண்டாடுவது இங்கு மோஸ்தர் ஆகிவிட்டது. அவனுக்குத் தோன்றியது. அங்கமுத்து தன்னைப் பற்றி என்ன நினைப்பான் என்று என்பதைச் சொல்ல வருகிறார். அதாவது இராஜசேகரன் பார்வையில், இதில் என்ன சிக்கல் வந்துவிடப்போகிறது. சுந்தரராமசாமி ஒருபோதும் இப்படியான பம்மாத்து வேலையில் ஈடுபடமாட்டார்.
- ‘அவர் இராஜசேகரனைப் பார்த்து லேசாகச் சிரித்தாரே என்று இராஜசேகரனுக்குத் தோன்றியது’ என்ற தொடரில் நகுலன் சொல்லவந்தது. ‘அங்கமுத்துவுக்குத் தோன்றியது’ என்பதுதான். இந்தப்பிழையைச் சுட்டாமல் ஏதோ பிரமாதமான நடையில் எழுதிவிட்டதாகச் சொல்லும் மடத்தனம் நிரம்ப உண்டு.
இப்படி நாவல் முழுக்க அங்கங்கே தள்ளாடும் வாக்கியங்கள் எனக்கு எரிச்சல் ஊட்டுகின்றன.
தொலைக்காட்சித் தொடர்களில் ஒருவர் வெளியேறிவிட்டால் இந்த மாந்தரை அவராகக் கொள்க என்று புதியவரைக் கோர்த்துவிடும் நிலைமை உண்டு. வாக்குமூலம் நாவலில் அதுபோன்று இடம் உண்டு.
அங்கமுத்துவை ஓரிடத்தில் வங்கியில் பணி செய்வதாக அறிமுகப்படுத்திவிட்டு (பக்.10) பத்துப் பக்கம் தாண்டி டி.வி.யிலிருந்து ஓய்வு பெற்றதாக மாற்றி எழுதுகிறார். இராஜசேகரனை வங்கிப் பணியில் வேலை செய்து ஓய்வு பெற்றதாக மாற்றி எழுதத் தொடங்கிவிடுகிறார். இதையும் நகுலனின் புதுமை என்பார்கள்.
தேசமுன்னேற்றச் சட்டம் (286) 2084 ஆண்டு அறிவிக்கப்படுவதாகக் காட்டுகிறார். அதாவது நாவல் நூறு ஆண்டுகள் தள்ளிப்போய் எதிர்காலத்தில் இம்மாதிரி சட்டம் கொண்டுவரப்பட்டு அதை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை எழுதுவதாகக் காட்டுகிறார். ஆனால் நாவலுக்குள் பேசப்படும் காலம் 1980ஆக இருக்கிறது. எதிர்காலத்தில் நிகழ்வதாகக் கட்டமைக்க நினைத்து அம்போ என்று விட்டுவிட்டார்.
மிஸ்டர் இராஜசேகரன் மாதிரி இந்த உடல் – உள்ளப்பிணைப்பைத் துண்டிக்க நான் ஒருபோதும் உடன்பட மாட்டேன். அதுமாத்திரமன்று இன்னும் ஒருபடி மேலேபோய்ச் சொல்கிறேன். உங்கள் தேச முன்னேற்றச் சட்டம் 286 வெறும் ஒரு அரசியல் சூழ்ச்சி. இதையெல்லாம் பார்த்துப் பார்த்து எனக்கு அலுத்துவிட்டது என்று அழுத்தமாகப் பேசுகிற அங்கமுத்துதான் இராஜசேகரனோடு – அவரின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள சட்ட வரைவை நாடி உடன் வருகிறார். அவர் இராஜசேகரனின் நெடுநாளைய நண்பர். ஏன் அங்கமுத்து சாவு எண்ணத்தைக் கைவிடும்படி நண்பரிடம் பேசக்கூடாது. பிரச்சனையைக் கேட்டுச் சமாதானம் பேசுவதுதானே இயல்பு. அதுதானே நட்பாக இருந்திருக்க முடியும். இராஜசேகரன் சாவு வரைவைப் பெற அழைத்ததும் நண்பரான அங்கமுத்துவும் சரி வருகிறேன் என்று உடன் செல்வதால் வாசகனுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துமா? நாவலுக்காக எதையோ போட்டு எழுதுகிறார் என்றுதானே தோன்றும். புனைவு உண்டாக்கும் நிஜம் வாழ்க்கையின் நிஜத்தை விட அழுத்தமாகக் காட்டுவதுதானே புனைவு ஆற்றல். இப்படி எழுதும்போது நகுலன் சும்மா ஜாலிக்காக சாவு பற்றி எழுதுகிறார் என்றுதானே தோன்றும். மாந்தர்களின் அசலான குணங்கள் வெளிப்படாதபோது, நாவலும் பொய்யாகிறது. ஒரு படைப்பைப் பொருட்படுத்த முடியாமல் போவதற்கு இதுவெல்லாம் காரணம்தான். தலைபோகிற பிரச்சனையாக இருந்தாலும் நாவலைச் சும்மா தன் போக்கில் எழுதிச் செல்லும் போது டம்மி மாந்தர்களாகப் போய்விடுகின்றனர்.
- ஒரு பெருங்குடியன் பெரும்பாலும் தற்கொலையைத் தேர்வதில்லை. அவன் குடி மயக்கத்தில் வாழப் பழகியவன். குடித்தேதான் சாவான். இந்த நாவலில் வரும் இராஜசேகரன் குடிகாரன். பென்சன் வாங்கும் பேர்வழியும் கூட. குழந்தை குட்டி குடும்பத் தொந்தரவும் இல்லை. அவர் தற்கொலையைத் தேர்வு செய்வது ஒரு ஃபேசனாக இருக்கிறதே தவிர வாழ்வில் இறுக்கமான நெருக்கடியிலிருந்து உருவாகவில்லை. நல்லதங்காள் ஆறு குழந்தைகளைக் கிணற்றில் எறிந்து தற்கொலை செய்வதற்குப் பின்னுள்ள பசி, அவமானம், நிராகரிப்பு, ஏளனம், தொப்புள்கொடி உறவின் அறுப்பு, வஞ்சகம், மழை பொய்த்துப்போன சூழல். இப்படிப் பொய்த்துப்போன பல காரணங்கள் ஒன்றுதிரண்டு அழுத்துவதை எதிர்கொள்ள முடியாமல் அந்த முடிவிற்குச் செல்கிறான். இன்றளவும் பல நல்லதங்காளின் கதைகள் இப்படித்தானே இருக்கின்றன. ஏழை ஜனங்களின் கண்ணீரால் ‘துலாபாரம்’ படம் கொண்டாடப்பட்டதும் இதனால்தான். அப்படியான நெருக்கடிகள் இராஜசேகரனுக்கோ, தற்கொலை சட்டத்தை விரும்பிய மற்றவர்களுக்கோ இந்த நாவலில் இல்லை. மனதைக் காயப்படுத்தும் விசமத்தனமான வசைகள் கூட இல்லை. சில சந்தர்ப்பங்களில் மனதில் தோன்றும் வித்தியாசமான எண்ணங்களைத்தான் நகுலன் முன்வைக்கிறார். அக்காரணங்கள் நாவலை ஆழமாக்குவதற்குப் பதிலாக மானிட வேடிக்கையாக்கியிருக்கிறது. ஜாலியாக புன்னகைத்தபடி படிக்கிற மனநிலைதான் தோன்றுகிறது. பெரும் தாக்கத்தை நிகழ்த்துவதில்லை.
தற்கொலைக்கு அரசு அங்கீகாரம் தரவிருப்பதாக முதல்வரைவு செய்தியாக வருகிறது. தற்கொலை செய்ய நினைக்கும் இராஜசேகரன் எவ்விதப் பதட்டமும் இல்லாமல் நண்பன் அங்கமுத்துவை ஜோடி சேர்த்துக்கொண்டு போகிறார். இடையில் இராஜசேகரன் பிரியமாக வெற்றிலைப் போட்டுக்கொள்கிறார். அங்கமுத்து பீடி குடித்துக் கொள்கிறார். ஏதோ ஜவுளிக்கடைக்குத் துணிவாங்கப் போவதுபோலப் போகிறார்கள். இதைத்தான் முன்னமே சொன்னேன் நகுலன் படைக்கும் பிற மாந்தர்களில் அகம் இல்லை என்று. மரணத்தைப் போலியான பாவனையில் எழுதும்போது தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒரு நல்ல நாவல் இவ்விதமான கோளாறுகளால் அடையவேண்டிய இலக்கை அடையாமல் போகிறது.