நைனாரியும் பதின் கரைகளும்.

ப்பொழுதெல்லாம் நைனாரி குளக்கரை புளியமரங்களில் ஏதேனுமொன்றுதான் எங்கள் பகல் நேர வாழ்விடம். இன்று சிதைந்த படித்துறைகளும் சீமைக் கருவேலம் புதர்களுமாய் காட்சியளிக்கும் நைனாரி உயிர்ப்போடிருந்த காலகட்டமது. நானும் ஜான்போஸ்கோவும் புளியம்பிஞ்சுகளின் சுவையில் மயங்கிக் கிடந்த அக்காலை வேளையில் சிலசமயம் கொழுந்திலைகளையும் ஆட்டுக்கிடாய்களைப் போல் மேய்ந்தவாறிருந்தோம். புளிப்பினால் உண்டான கூச்சம் குளிரில் நடுங்குபவர்களைப் போல் எங்கள் முழு உடலையும் அவ்வப்போது சிலிர்க்கச் செய்தது.

நைனாரியில் நீராடிய மனிதர்கள் கிளம்பி விட்டதால் தண்ணீர் பாம்புகள் கரையோரம் நீந்தத் துவங்கின. யாரோ துணி வெளுக்கும் ஓசை மட்டும். அவ்வோசைக்கு ஒத்திசைவாக வரதன் எனும் வரதராஜன் ஏதோ ஊசித்தட்டான் உயரே பறக்க எத்தனிப்பதைப் போல் படிகளில் தாவி ஏறிக்கொண்டிருந்தார். எப்போதும் நடன அசைவுகளாய் இயங்கும் கால்கள் அவருடையவை. குளத்திற்குள் இறங்காமல் வேப்பங்குச்சியின் கசப்பை முகச்சுளிப்புடன் உமிழ்ந்தவர் தென்கரை புளியமரத்தின் மீதிருந்த எங்களைக் கவனிக்கவில்லை. பின் நீராடப் படித்துறையில் இறங்கியவரின் முகத்தில் தனது அருகாமை படித்துறையில் எதையோ கண்டதன் திகைப்பு. அப்பொழுது துணி வெளுக்கும் ஓசை ஓய்ந்திருந்தது. எங்களுக்கு அப்படித்துறையில் என்ன நிகழ்கிறதெனத் தெரியவில்லை. உலகின் மொத்தக் கள்ளத்தனங்களையும் செய்யத் தயாரான மனிதனாய் வரதன் குளத்தின் நான்கு கரைகளையும் நான்கு மூலைகளையும், ஏதோ தான் முழு உடலும் கண்களால் ஆனவன் என்பதைப் போல் சுழன்றபடி கவனமாய் ஆராய்ந்தார். பின் சட்டையைக் கழற்றி அருகில் வைத்துவிட்டு உள்ளங்கையில் நீரை அள்ளித் தலையில் ஊற்றி, குளித்தபின் தலை துவட்டுபவனைப் போல் பாவனை செய்ய ஆரம்பித்தார். நாங்கள் ஓசையெழுப்பாமல் புளியமரத்திலிருந்து கீழிறங்கினோம். அடுத்த படித்துறையில் நீரின் சலசலப்புக் கேட்டு அடங்கிய திசையில் எட்டிப்பார்த்தோம். சரஸ்வதி அக்காள் பாவாடைக்குள் கொங்கைகள் திமிற தன் புறங்கையால் முதுகு தேய்த்துக் கொண்டிருந்தாள். வரதன் பிளந்த வாயை மூடாமல் மீண்டும் நீரைத் தலையில் ஊற்றித் துவட்டினார். ஜான் மெதுவாக “வரதண்ணே” என்றான். உடல் அதிரத் திரும்பியவர் எங்களைப் பார்த்ததும் மனம் நொந்தவராய் “சே என்ன பன்னாலும் கண்டுபுடிச்சுப்புடுறாங்கப்பா” என்றார். அப்பொழுது நைனாரிக்கும் எங்களுக்கும் வரதனுக்கும் உருவான ஒரு பந்தத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.

வரதண்ணனுக்கு சரஸ்வதி மீது பிரியம். அப்பிரியத்திற்கு மறுமொழியாய் சரஸ்வதியும் சிறு புன்னகையை ஒப்புதலாய் அளித்துச் செல்வாள். அவர்களின் அந்நேசத்தை சரஸ்வதியின் கணவரும் அறிந்திருந்தார்.

ஐயனார்புரம் முதல் தெரு நுழைவிலுள்ள பாலக்கட்டையில் மாலை நேரத்தில் கூடும் இளைஞர்கள் அனைவரும் ஐயனார்புரத்தைச் சேர்ந்தவர்களல்ல. அவர்களில் பெரும்பான்மையோர் எப்போதாவது ஐயனார்புரவாசிகளாய் இருந்திருப்பர். தெருவுடனான தங்களது தொடர்பை இதுவரை யாரும் துண்டித்துக்கொண்டதில்லை. நாங்கள் பேச்சு சுவாரசியத்தில் பெரும்பாலும் தெருவின் ஆள்நடமாட்டங்களைக் கவனிப்பதில்லை. ஒருவேளை தெருவிளக்குகள் வருடத்திற்கு ஒருசில நாட்கள் மட்டும் ஒளிர்ந்ததுகூட அதற்குக் காரணமாய் இருக்கலாம். ஆனால் பெண்பிள்ளைகளைப் பெற்றவர்கள் எப்போதும் எங்களை விரோதத்துடனே அணுகுவர். எங்களைக் கண்டிக்குமாறு முறைவைத்து கணேஷ்நகர் காவல் நிலையத்திற்கு தொலைப்பேசி அழைப்புகளை விடுப்பர்.  வாரத்திற்கு ஓரிருமுறை கடமையாற்றவரும் காவல்துறையின் ரோந்து வாகனத்தைக் காணும் முதல் ஆள் போலீஸ் எனக் கத்திவிட்டு நைனாரியை நோக்கி ஓட்டமெடுப்பான். நாங்கள் அனைவரும் அவனைப் பின்தொடர்ந்து ஓடுவோம். ஒருசிலரின் கால்கள் நைனாரிக் கரையின் மீதேறி புதுக்குளத்தை நோக்கிப் பாயும். வேறுசிலர் வலது வரிசைக் குடியிருப்பின் சந்துகளில் ஏதேனும் ஒன்றில் நுழைந்து இரண்டாம் வீதியில் தஞ்சமடைவர். நாங்களோ இடது புறமுள்ள பி.யு.சின்னப்பா அக்காள் வீட்டுச் சந்தின் வழி ஓடி மாதாகோயில் மாலைநேரத் திருப்பணியில் ஆமென் சொல்லிக் கொண்டிருப்போம். அந்நாட்களில் எங்களுக்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்தவர் நரிஏட்டு. அவரின் உண்மையான பெயர் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. நரிஏட்டின் பெயருக்குக் காரணமாய் குற்றவாளிகளைப் பிடிக்க அவர் கையாளும் தந்திரங்களினால் என்றும் அவரிடம் அரை வாங்கியவர்களின் செவிகளில் நரியின் ஊளைச் சத்தம் விடாது ஒலிப்பதால் என்றும் இருவிதமான கருதுகோள்கள் ஐயனார்புரத்தில் நிலவின. ரோந்து வாகனத்தில் நரிஏட்டு வந்திருந்தால் கண்டிப்பாய் ஒருவராவது சிக்குவர். நரிஏட்டிடம் மாட்டுபவர்களின் செவிகளில் அன்று ஊளைச் சத்தம்தான். அன்றிலிருந்து ஒருவாரமாவது அரை வாங்கியவரை தெருப்பக்கம் காண முடியாது. ஏனெனில் வரதன் இயக்கவிருக்கும் திரைப்படங்களில் கதாநாயகனாய் இருப்பது அவ்வளவு சுலபமல்ல. கதாநாயகி அந்தோனியார் கோயிலுக்கு வெளியே எப்போதும் போவார் வருவோரைக் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் செல்லாயிக்கிழவி தான். அக்கதாநாயகன் அநியாயங்களைப் புரியும் காவல்துறையினரைத் தீர்த்துக் கட்டும் ரகசியக் கொலையாளியாய் இருப்பான். அவன் ரகசியத்தை அறிய நேரும் கதாநாயகியிடம் காவலர்களிடம் அரை வாங்கிய நிகழ்வு ஃப்ளாஸ்பேக்காக துயர இசையுடன் சொல்லப்படும்.

வரதனுடன் இருப்பது எப்போதும் திகைப்பூட்டக் கூடியது. ஏனெனில் யாரும் எதிர்பாரா நேரங்களில் ஏதேனுமொன்று கண்டிப்பாய் நிகழும். நைனாரியில் சுவாரசியமாய் ஒரு கதையைச் சொல்லிச் சிரிக்க வைத்துவிட்டு குளத்திற்குள் இறங்குவார். சிரிப்பின் உச்சத்தில் விலாவைப் பிடித்திருப்பவனின் கழுத்தில் தண்ணீர் பாம்பு மாலையாய் விழுந்து நெளியும். நாம் அலறி ஓடிக்கொண்டிருப்போம். வரதன் தனியாளாய் நாங்கள் ஓடுவதை ஏளனம் செய்து கொண்டிருப்பார்.

நான் எனது பேச்சுக்களில் வரதனையே நகலெடுப்பேன். ஆனால் வரதனின் உடல்மொழியை நகலெடுப்பது சாத்தியமாகக் கூடியதல்ல. ஒருமுறை வரதன் நெற்றியில் குருதிக் கறையுடன் கூடிய பெரிய பிளாஸ்திரியுடன் வந்தார். ஐயனார்புரத்திற்கும் காமராஜபுரத்திற்கும் தகராறுகள் நிகழ்ந்த காலகட்டமது. நாங்கள் பதைபதைத்து என்ன நிகழ்ந்ததெனக் கேட்டோம். சற்று நேரம் அமைதியாய் ஆகாயத்தை நோக்கி விட்டு என்னிடம் “சம்பவம் செய்ய பாத்தாங்க தம்பியான்” என்றார். நான் உடல் முறுக்கேற “யாரு? எப்படி?” என்றேன். வரதன் வெகு இயல்பாக “ஜட்டி மாட்டும் போது கால் இடறி கட்டில் கால் மேல விழுந்துட்டேன்” என்றார்.

ஞாயிற்றுக் கிழமை மதியங்களில் அரிமளம் காட்டிற்கு எங்களை வேட்டைக்கு அழைத்துச் செல்லும் மருத்துவர் பாலமுருகன் எனும் முன்னாள் ஐயனார்புரவாசியைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். மேல் கவசமில்லா அவரது ஜீப்பில் நின்றவாறு பயணிக்கும் நாங்கள் ஆளுக்கு ஐந்து நிமிடங்களென முறைவைத்து அவரது துப்பாக்கியைத் தலைக்கு மேல் உயர்த்தியவாறு “ரம்பா ரம்பா ரம்பாதான் ரம்பா பொண்ணு சம்பாதான்” எனக் கூச்சலிடுவோம். தவிட்டுக் குருவியிலிருந்து தென்திசை குமரியில் நீராடி வடதிசையில் சத்திமுத்திப் புலவரின் மனைவிக்கு சேதி சொல்லச் செல்லும் செங்கால் நாரை வரை அவர் ருசிக்காத பறவைகள் ஏதேனும் இருக்குமா எனத் தெரியவில்லை. வீச்சமெடுக்கும் சில வலசைப் பறவைகளின் இறைச்சிக்கும் ஒரு சமையல் பக்குவம் சொல்லுவார். அவரால் சுடப்படும் ஒவ்வொரு பறவையின் உயிரியல் பெயரையும் எங்களுக்குச் சொல்லித் தருவார். நாங்கள் அதுதான் இதுவா என்பதைப் போன்று தலையசைப்போம். மாலை மயங்கியபின் முயல் வேட்டை முடிந்து வீடு திரும்ப பதினொன்றாகி விடும். அதன் பிறகுதான் சமையல் சாப்பாடு எல்லாம்.

அன்றைய மாலையில் அப்பழந்தின்னி வௌவாலை முதலில் பார்த்தது நாகு அண்ணன் தான். அதற்குமுன் பழந்தின்னி வௌவால் நரிக்குறவர்களால் சிலமுறை உண்ணக் கிடைத்துள்ளது. அவர்களின் வேட்டை முறை விசித்திரமானது. தங்களைக் கடந்து செல்லும் பழந்தின்னி வௌவாலை அவர்கள் துரத்திச் செல்வதில்லை. ஒரு விசித்திரமான ஒலியெழுப்பி அதைத் தங்களை நோக்கி வரச்செய்து சுட்டு வீழ்த்துவர். ஐந்து ரூபாய் கொடுத்தால் போதும். புதுக்கோட்டை கலெக்டர் கேம்ப் அலுவலகத்திலுள்ள ஆலமரமே அவற்றின் பிராதான வசிப்பிடம். மாலை நேரத்தில் இரைதேடக் கிளம்பும் அவற்றிலொன்று ஐயனார்புர நடுத்தெரு அரசமரத்தில் வந்தமர்ந்தது. நாகு ஃபோன் பூத்திலிருந்து மருத்துவருக்கு தகவலைச் சொன்னார். அது நோயாளிகள் நிறைந்திருக்கும் நேரம். மருத்துவர் காத்திருக்கும் நோயாளிகளிடம் “ஒரு சீரியஸ் கேசு அரைமணி நேரத்துல வந்துருவேன் எங்கயும் போயிராதிக” என போன் ரிசீவரைக் கூட வைக்காமல் பேசியது எங்களுக்கும் கேட்டது.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மருத்துவர் தனது பஜாஜ் எம்.ஐ.டியில் வந்து சேர்ந்தார். பின்னிருக்கையில் துப்பாக்கியைச் சுமந்தவாறு அவரது கம்பவுன்டர் விசு அண்ணன். நாங்கள் மருத்துவரிடம் பழந்தின்னி வௌவாலைக் காட்டினோம். அவர் கண்கள் ஒளிர என்னை நோக்கி “டிரோபஸ் ஜைஜான்டியஸ்” என்றார். நான் குழப்பமடைந்ததைக் காட்டிக் கொள்ளாமல் “அதான் சார்” என்றேன். எனக்குப் பின்னே “டுமிக்கோல்” என்று  வரதன் எழுப்பிய ஓசையைக் கேட்டுத் திரும்பினேன். வரதன் மருத்துவரின் துப்பாக்கியை வைத்து குறிபார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது குறி தனது எக்ஸெல் சூப்பருடன் நின்றிருந்த நரிஏட்டை நோக்கியிருந்தது. மீண்டும் “டுமிக்கோல்” என ஓசையெழுப்பிய பின் வரதன் துப்பாக்கிக் குழலின் நுனியில் கட்புலனாகாப் புகையை வாயைக் கோணிக் கொண்டு ஊதினார். ஜான் சிரிப்பை அடக்கியவாறு “அண்ணே சும்மா இரு” என்றான். நரிஏட்டின் இறுகிய முகத்திலிருந்து எதையும் யூகித்தறிய இயலவில்லை. உண்மையில் அன்று நரிஏட்டை நாங்கள் பெரிதாய் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் துப்பாக்கியைக் கண்டதும் எங்களைச் சுற்றி தெருசனங்கள் எல்லாம் கூடிவிட்டனர்.

ஜான்  மருத்துவரிடம் “பழந்தின்னி வௌவாலுக்கு நாம தலைகீழாத் தொங்குற மாதிரி தானே தெரியும்” என்றான். மருத்துவர் தனது துப்பாக்கியில் இரும்பு குண்டுகளையும் தேங்காய் நாரையும் கரித்தூளையும் இட்டு நிரப்பியவாறு அவற்றின் மந்தமான பார்வைத் திறனைப் பற்றியும் அவையெழுப்பும் மீயொலிகளைப் பற்றியும் விளக்கினார். பிறகு துப்பாக்கியைப் பின்னோக்கிக் கொண்டு சென்றவர் மெத்தென்று பின் கட்டை யார் மீதோ மோதியதையும் அதைத் தொடர்ந்து சற்று உரக்கமாய் ஒலித்த சிணுங்கல் ஒலியையும் கேட்டுத் திரும்பினார். சரஸ்வதி அக்காள் வயிற்றைத் தடவியவாறு மருத்துவரை நோக்கிப் புன்னகைத்தாள். சிவபெருமானை நோக்கி அம்பை எய்த எத்தனிக்கும் குடுமியான்மலை மன்மதன் சிலையைப் போல் விறைப்பாய் நிற்கும் மருத்துவரின் கைகளும் கால்களும் அன்று துப்பாக்கியை ஏந்தி நிற்கையில் லேசாய் நடுங்கின. பழந்தின்னி வௌவால் அமர்ந்திருக்கும் கிளையைக் கூட அவரது குறி எட்டவில்லை. ஒவ்வொரு முறையும் குறி தவறுகையில் சரஸ்வதி அக்காள் அச்சச்சோ எனும் போது மருத்துவர் மேலும் பதட்டமடைந்தார். கூட்டம் சற்று நேரத்திலே அசிரத்தை அடைந்தாலும் யாருக்கும் அவ்விடத்தை விட்டு அகல மனம் வரவில்லை. தள்ளுவண்டியில் நிலக்கடலை விற்பவர் கடையை அங்கேயே நிறுத்திவிட்டார். மருத்துவருக்கு அன்று தன் இலக்கில் மனம் குவியவில்லை. அவர் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. அதோடு சரஸ்வதியின் செல்லச் சிணுங்கல்களும் வேறு சேர்ந்து அவரை இம்சித்தது. மருத்துவரின் வேண்டுதலுக்கு செவிமடுத்ததைப் போல பழந்தின்னி வௌவால் சற்று பறந்து வெறும் இருபதடி உயரத்தில் ஒருகிளையின் மேலாகவே அமர்ந்தது. இம்முறை கண்டிப்பாய் அதை வீழ்த்திவிடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தோம். நான் கூட்டத்தில் ஒரு முறை பார்வையைச் சுழலவிட்டேன். வரதனும் சந்துருவும் சரஸ்வதியின் கவனத்தைக் கவர குட்டிக்கரணம் அடிக்காத குறையாய் நின்றிருந்தார்கள். சரஸ்வதியின் கணவரோ நரிஏட்டிடம் ஏதோ விளக்கிக் கொண்டிருந்தார்.

இம்முறை துப்பாக்கிச் சுடும் ஓசையைத் தொடர்ந்து “அட என்னப்பா” என மொத்தக் கூட்டமும் அலுத்துக் கொண்டது. வறுத்த கடலை விற்பவர் தனது தள்ளு வண்டியில் சுவாரசியமாய் வியாபாரத்தைத் தொடர்ந்தார். பழந்தின்னி வௌவால் தனது இறக்கைகளை நன்றாக விரித்து உடலை எங்களுக்குக் காட்டியது. “சார் அதுவே ஹேண்ட்ஸ் அப் சொன்ன மாதிரி எல்லாத்தையும் தூக்கிக்கிட்டு நெஞ்ச காட்டி நிக்கிது இந்த வாட்டி விட்டுறாதிக” என்றார் வரதன். அம்முறையும் குண்டுகள் அரசமர இலைகளைத்தான் துளைத்துச் சென்றன. எங்களை விரக்தியுடன் திரும்பி நோக்கியவரைப்  பார்க்கையில் பள்ளி பேச்சுப் போட்டியில் மேடையேறிய குழந்தைகள் மனனம் செய்த அனைத்தையும் மறந்துவிட்டு விழிப்பதைப் போன்றிருந்தது. துப்பாக்கியில்தான் ஏதோ கோளாறு என்பதைப் போன்று சற்று நேரம் அதை ஆராய்ந்த பின் “நாம இன்னொரு நா பாத்திக்கிடுவோம் நாகு” என மருத்துவர் கிளம்பி விட்டார்.

அந்நாட்களில் சந்துரு அண்ணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவர் எங்கிருந்தோ ஒரு துப்பாக்கியை வாங்கி விட்டார். அதை சரஸ்வதி வாசலில் நிற்கும் நேரமாகப் பார்த்து தெருவிற்கு பிரகடனப்படுத்தினார். எங்கள் அனைவருக்கும் அவர் எதற்காகத் துப்பாக்கி வாங்கியிருக்கிறார் எனத் தெரிந்திருந்தாலும் எங்களுக்கான துப்பாக்கியாக அதை வரித்துக் கொண்டோம். வரதராஜன் மட்டும் சற்று எரிச்சலாக இருந்தார். சிலநாட்கள் கழித்து மாலைநேரத்தில் நாங்கள் அமரும் முன்னரே நரிஏட்டும் இன்னொரு காவலரும் சந்துருவைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சந்துருவிற்கும் தெருவினருக்குமான உறவைப் பற்றியும் யாருடனாவது அவருக்குப் பகை எதுவும் உள்ளதா என்பதையும் அறிய முயன்றனர். எங்களைப் பார்த்ததும் தெருக்காரர்கள் “அதான் சேக்காளிக நிக்குறாங்கலே” என்றனர். வரதனிடம் சந்துரு எப்படிப்பட்ட ஆளு எனும் ஒரு கேள்வியைத் தான் நரிஏட்டுடன் நின்றிருந்த காவலர் கேட்டார். “நல்ல ஆளுதான் சார் ஆனா எப்ப கோவம் வரும்னு தெரியாது. கோவம் வந்தா கையில கெடைக்கிறத விட்டு வீசுவாரு. லவ் ஃபெய்லியர்னால ரெண்டு சூசைட் அட்டெம்ப்ட் வேற. பைப்புல தண்ணி வரும் போது அவரும் குடத்தோட வந்து பொம்பள ஆளுகள் கூட கொஞ்சம் தகராறு பண்ணுவாரு எல்லாரையும் சுட்டு பொசுக்கிருவேம்பாரு அதான் இப்ப துப்பாக்கி வேற வாங்கிருக்காருல” எனச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். நான் ஏன் இப்படிச் சொன்னாரெனப் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். பிறகு இரண்டு நாட்களில் சந்துருவிற்கு துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் மறுக்கப்பட்ட விசயம் தெரியவந்த போது தான் எனக்கு எல்லாம் புரிந்தது.

அன்றைய நாட்களில் அவர்களின் உலகின் மேல் எங்களுக்குப் பெரிய ஈர்ப்பு இருந்தது. பள்ளி விடுமுறை நாட்களிலும் மாலை வேளைகளிலும் எங்கள் வயதொத்தவர்களுடன் எங்களைக் காணமுடியாது. மேலும் வரதன் தான் என் கதாநாயகன். வரதன் சொல்லும் கதைகளை பள்ளியில் அவர் பேசும் தோரணையில் நான் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். ஆனால் ஜான் அவர்கள் குறித்து ஒருவித எச்சரிக்கையுணர்வுடன் இருப்பான். என்னையும் அவன் சில நேரங்களில் எச்சரிப்பது எனக்கு எரிச்சலையூட்டும். பெற்றோர்களை இழந்து அத்தை வீட்டில் வளர்ந்த அவன் பின்னாளில் பாதிரியாராய் ஆகவிருக்கிறான் என்பதை நான் அப்போது யூகித்திருக்கவில்லை. பதின்ம வயதின் நிலைகொள்ளாமையால் தத்தளித்த நான் புதிதாய் கண்டறியும் பெண்ணுடலின் ஈர்ப்புகளையும் தெருவினரின்  மர்மங்களையும் ஒருவிதப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருப்பான்.

வரதனின் முயற்சி தற்காலிக வெற்றியே அடைந்தது. சந்துரு விடாப்பிடியாய் தனது அப்பாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி துப்பாக்கி உரிமம் பெற்றுவிட்டார். அதன் பிறகு அவர் சுட்டுப் பழகியதெல்லாம் நைனாரிக் கரையில் தான். ஆனால் விரைவிலேயே துப்பாக்கிச் சுடுவதொன்றும் அவ்வளவு எளிதானதில்லையென்பதை கண்டுகொண்டார். ஆகவே பிறகொரு நாள் கால்களைக் கட்டிய கோழிக் குஞ்சொன்றை எங்கள் கையில் கொடுத்து நைனாரிக்கு அழைத்துச் சென்றார். என்னை மேற்கு கரை புளியமரத்திலேறி கோழிக்குஞ்சைத் தலைகீழாய் கட்டச் சொல்ல நானும் அவர் சொன்னதைப்போல் செய்துவிட்டுக் கீழிறங்கினேன். கோழிக்குஞ்சு  அலகைத் திறந்தவாறு தனது விசையால் இறக்கைகளை  அசைத்து தலைகீழாய் சுற்றிக் கொண்டிருந்தது. சந்துரு அண்ணன் வெகுநேரம் அதைக் குறிவைத்தார். நாங்கள் சுவாரசியமிழந்து வேறு எதையோப் பேச எங்களைக் கோபத்துடன் கடிந்துகொண்டவர் ஜானிடம் “டேய் ஓடிப் போய் வீட்டுல அருவா வாங்கிட்டு வாடா” என்றார். ஜான் வேகமாய் அரிவாளுடன் வந்தான். இம்முறை கையில் அரிவாளைத் தந்து என்னை மரத்திலேறச் சொன்னார். நான் ஏறியதும் கோழிக்குஞ்சு தொங்கிய கிளையின் அடிக் கிளையைக் காட்டி “டேய் அந்த வாதை கழிச்சு விடுறா” என்றார். நான் அவர் சொன்னவாறு செய்துவிட்டுக் கீழிறங்கினேன். பிறகு கோழிக்குஞ்சைக் குறிவைத்தவர் சரியில்லையென்பதைப் போல் தலையசைத்து என்னை மீண்டும் மரத்திலேற்றி, கோழிக்குஞ்சு தொங்கிய கிளையின் மேல் கிளையைக் காட்டி, அதிலிருந்து கீழ்முகமாய் வந்த ஒரு பக்கக் கிளையை கழித்துவிடச் சொன்னார். சற்று அமைதியடைந்த கோழிக்குஞ்சு என்னைக் கண்டதும் இறக்கைகளை அசைத்தவாறு உந்தி மேலெழத் துடித்தது. அப்படியே தலைகீழாய் தொங்கிய கோழிக்குஞ்சை கிளையின் மீது அமர்ந்திருப்பது போல் கட்டச் சொன்னார். நான் இறங்கும்வரை அமைதியாய் நின்றவர் இம்முறை குறி வைக்கும் தோரணையைக் கண்டு கோழிக்குஞ்சை சுட்டுவீழ்த்திவிடுவாரோ என்ற ஐயம் எனக்கும் ஏற்பட்டது. பிறகு நீண்ட நேர அமைதிக்குப் பின் ஒலித்த வெடியோசையைக் கேட்டு கோழிக் குஞ்சு திரும்பிப் பார்த்தது. நான் ஜானைக் கிள்ளி “அண்ணன் பசிக்குது வீட்டுக்கு போரோம்னே” என்றேன். சந்துரு கோபமடைந்தவராய் ஜானிடம் “டேய் இவன் சரிப்படமாட்டாம் நீ மரத்தில ஏறி அந்தப்பக்கமா பாத்துக்கிட்டுருக்க கோழிக்குஞ்ச என்னையைப் பாத்த மாதிரி திருப்பிக் கட்டுடா” என்றார். உச்சி வேளையில் கரையேறிய நாங்கள் சூரியன் மேல் வானுக்குச் சென்று சந்துரு அண்ணனால் குறிவைக்க முடியாதவாறு கண்கூசிய பிறகுதான் கரையிறங்கினோம். நான் கோழிக்குஞ்சின் கால்களிலிருந்து கயிற்றை அவிழ்த்து சந்துரு வீட்டுத் திண்ணையிலிருந்த ஈச்சங் கூடையை அதன் மேல் கவிழ்த்தபின் வீட்டை நோக்கித் தலைதெறிக்க ஓடினேன்.

வரதன், சந்துரு, நாகு மூவரின் கைகளிலும் எப்போதும் பணப்புழக்கம் இருக்கும். அதற்கும் அவர்கள் மாதத்திற்கு ஓரிருமுறை நாகுவின் ஆட்டோவில் தனியாய் செல்வதற்கும் ஏதோ தொடர்புள்ளதாய் ஜான் யூகித்திருந்தான். அது எப்படியென்று அறிவதற்கான வாய்ப்பு அன்று எங்களுக்குக் கிடைத்தது. அவர்கள் மூவரும் கிளம்புவதற்காய் உத்தேசித்திருந்த அம்மதிய வேளையில் சந்துருவால் வர இயலவில்லை. வரதன் எங்கள் இருவரையும் அன்று உடன் அழைத்துச் சென்றார். ஆட்டோ போஸ்நகர் சுடுகாட்டுப் பக்கம் சென்று கொண்டிருந்தது. காற்றில் முதல் நாள் இரவு எரிந்த பிணத்தின் புகை. வரதன் ஆட்டோவை நிறுத்தச் சொல்ல அப்போது தான் ஆட்டோவைக் கவனித்தேன். நாகு வழக்கமாய் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்களை முகப்புக் கண்ணாடியில் காணவில்லை. சாலை வளையுமிடத்திற்கு ஜானை போகச் சொல்லி மூத்திரமிருப்பவனைப் போல் நின்று கொண்டு யாராவது வந்தால் குரல் எழுப்பச் சொன்னார். நாகு ஆட்டோவின் இஞ்சினை நிறுத்தியிருக்கவில்லை. சாலையோரமாய் சில ஆடுகள் மட்டும் மேய்ந்தவாறிருந்த அவ்விடத்தில் இவர் என்ன செய்யவிருக்கிறார் எனக் குழம்பியவாறு நின்றிருந்தேன். கால்சட்டைக்குள்ளிருந்து பெரிய செல்லோடேப் உருளையை வெளியிலெடுத்தவர் அதை பிளேடால் உள்ளங்கையளவு நறுக்கி என் கையில் கொடுத்தார். என் பின்னால வாடா என்று ஆட்டின் அருகில் வரதன் மெதுவாய் செல்ல புற்களை மேய்ந்தவாறிருந்த வெள்ளாட்டுக் கிடா ஒன்று அந்நேரத்தில் எம்பி வேம்பின் அடிக்கிளையிலுள்ள இலைகளைக் கடிக்க முயன்றது. முதல் முயற்சியில் வாயில் அகப்பட்ட சில இலைகளை அது மெல்லும்வரை அமைதியாய் நின்றவர் மறு முறை கிடா எம்பிய போது அதன் முன்னங்கால்களின் கீழே இடது கையைச் சுற்றி வளைத்தும் வலது கையால் வாயைப் பொத்தியவாறும் என்னருகே கொண்டு வந்தார். “டேய் தம்பியான் நான் கைய எடுத்ததும் செல்லோடேப்ப வாயில ஒட்டுடா” என்றார். நான் பதட்டத்தில் ஆட்டின் நாசித் துவாரத்தில் செல்லோடேப்பை ஒட்டியதும் சில வசவுச் சொற்களை வாங்கியவாறு தடுமாறி மீண்டும் வாயில் ஒட்டி விட்டேன். வரதன் ஆட்டைத் தரையில் கிடத்த நாகு கத்தரிக்கப்பட்ட கயிறுகளுடன் வந்து அதன் கால்களைச் சேர்த்துக் கட்டினார். அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆட்டோ பிஸ்மில்லா மட்டன் கடை வைத்திருக்கும் ஷாஜகான் அண்ணன் வீட்டின் முன் நின்றது. பெரிய சாகசமொன்றை நிகழ்த்தும் மனநிலையில் நானிருக்க ஆட்டோவிற்குள் ஜான் கிடாவைக் கண்டதும் முதலில் புரியாமல் விழித்தான். பிறகு எதுவும் பேசாமல் வெளியே வேடிக்கை பார்த்தவாறு பயணித்தான்.

வரதன் தந்த இருபது ரூபாயை நான் வாங்கிக் கொண்டேன். ஆனால் ஜான் அவனுடைய பங்கை வாங்க மறுத்துவிட்டான். அன்று மாலை என்னை மாதாகோயில் வெளியே நிற்கச் சொல்லிவிட்டு பாவமன்னிப்பு கேட்கும் அறைக்குச் சென்று வந்தான். ஆனால் நானோ அந்நாட்களுக்குப் பிறகு அவர்களில் ஒருவனாய் உலவ ஆரம்பித்தேன்.

வரதன் மூத்திரச்சந்திலிருந்து  கொல்லைப்புறக் கதவின் வழியாய் சரஸ்வதியின் வீட்டிற்குள் நுழைகையில் நான் தெருவில் காவலுக்கு நிற்பேன். தூரத்தில் சரஸ்வதியின் கணவன் சைக்கிளில் வரும்பொழுது ஓட்டின் மீது ஓசையெழும்படி சிறிய கல்லை வீசுவேன். ஜான் எங்களுடனே இருந்தாலும் சில விசயங்களில் நாசூக்காய் ஒதுங்கிக் கொள்வான். நான் அவனைத் துணிச்சலற்றவன் என ஏளனம் செய்வேன். வரதனின் ஒவ்வொரு பழக்கங்களும் நாயகனுக்குரியவை. ஆகவே அதை நானும் பின்பற்ற முடிவெடுத்தேன். வரதனைச் சுற்றிக் கமழும் பான்பராக்கின் வாசனையைப் போல் என்னைக் கிளர்ச்சியூட்டுவது பிறிதொன்றில்லை. ஆகவே பான்பராக்கை வாங்கி உள்ளங்கையில் கொட்டி வரதன் செய்வதைப் போல் அதன் வாசனையை நுகர்ந்து வாயில் அதக்கினேன். நிஜாம் பாக்கைப் போல் இனிப்பாய் இருக்குமெனக் கருதிய எனக்கு அதன் சுவை முகம் சுளிக்க வைத்தது. இருப்பினும் ஜானின் முன் அதை ரசித்துச் சுவைப்பவனைப் போல் தொடர்ச்சியாய் பாவலா காட்டிக் கொண்டிருந்தேன். ஜான் வரதனைப் போல் உனக்கும் பற்கள் கறையாகிவிடுமென்று எச்சரித்தான். ஏதோ அவன் சொல்வதற்கு செவிமடுப்பதைப் போல் அப்பழக்கத்தை மேற்கொண்டு தொடரவில்லை.

அவ்வருடம்  பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைத்து பதிமூன்று மாதங்களுக்குப் பிறகு பெரும்பான்மையில்லாமல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலையொட்டி துப்பாக்கியை ஒப்படைக்க சந்துருவுடன் கணேஷ் நகர் காவல் நிலையத்திற்குச் சென்றோம். எழுத்தர் தந்த படிவத்தை சந்துரு அண்ணன் பூர்த்தி செய்து கொண்டிருந்தார். என் பின்னே “டுமிக்கோல்” என்ற ஓசையைக் கேட்டு  வரதனைத்  திரும்பிப் பார்த்தேன். ஆனால் நரிஏட்டு ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் துப்பாக்கியைப் போல் வரதனை  நோக்கி  குறிவைத்தவாறு   “தம்பி வரதராஜன் எப்படி இருக்கீங்க” என்றார். தன் பெயரை நரிஏட்டு அறிந்திருப்பது அவ்வளவு சிறப்பான விசயமல்ல என்பதைப் போல் விழித்த வரதன் சமாளித்தவராய் “நல்லா இருக்கேன் சார்” என்றார். பிறகு நரிஏட்டு வரதனின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு “வரதா….எனக்கு தலைக்கறி ரொம்ப பிடிக்கும். நம்ம பிஸ்மில்லா மட்டன் கடை ஷாஜகான் ராவுத்தர்டதான் ஆட்டுத்தலை வாங்குவேன். ஆனா என்னன்னு தெரியல இப்பல்லாம் அடிக்கடி பாய் துலுக்க ஆடா வெட்டுறான். அதுவும் ஆட்டு மயிரை எவனோ செல்லோ டேப்ல சவரம் பண்ணிருக்கான். அதான் ஒன்னும் புடி கெடக்கல” என்றொரு விசப்புன்னகையை உதிர்த்தார். அதைக் கேட்டதும் எனக்கு மூத்திரம் முட்டி அடிவயிறு வலிக்கத் தொடங்கியது.

ஷாஜகான் இதைச் சொல்லியிருப்பதற்கு வாய்ப்பில்லை என்று வரதன் உறுதியாய் சொன்னார். ஆனால் எனக்கு அவர் மேல்தான் சந்தேகமாய் இருந்தது. நாங்கள் ஷாஜகானிடம் விசாரிக்கையில் இதுவரை நரிஏட்டு தன் கடைக்கு ஒருமுறை கூட வந்ததில்லை என ஏக இறைவனின் மீது சத்தியம் செய்தவர் இனிமேல் களவாடும் ஆடுகளைத் தன்னிடம் கொண்டுவர வேண்டாமென்று ஒரு கும்பிடுபோட்டார். வரதன் கடந்த ஒருமாதமாய் தலைக்கறி வாங்கியவர்களின் விவரங்களைக் கேட்க ஷாஜகான் வரிசையாய் ஆட்களை நினைவு கூர்ந்தார். அப்பட்டியலில் சரஸ்வதி கணவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அதன் பிறகு அவர்கள் சிலமாதங்கள் ஆடு திருடச் செல்லாமலிருந்தனர். ஆனால் அச்சமயத்தில்தான் தன்பழக்கடையிலிருந்து இரவு வீடு திரும்பிய சரஸ்வதியின் கணவர் யாரிடமோ அடிவாங்கி இரண்டு நாட்கள் பெரியாஸ்பத்திரியில் இருந்தார். கண்களில் மிளகாய் பொடித் தூவப்பட்டதால் அவருக்கு அடித்தது யாரெனத் தெரியவில்லை. ஆனால் அடித்த மூவரில் ஒருவன் மட்டும் அவரது விதைப்பையில் நடுவிரலால் நான்கு முறைச் சுண்டினான் எனச் சொல்லி அவ்வலியை மீண்டும் நினைவுகூர்ந்தவராய் எல்லோரிடமும் அழுதிருக்கிறார்.

அச்சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் வரதனின் கைகளில் பணம் புரளத் தொடங்கியது. நான் மட்டும் இரண்டு முறை அவர்கள் அழைத்ததற்கு உடன் சென்றேன். அதில் ஈடுபடும் போது முன்னர் இருந்த அச்சம் கலந்த மகிழ்ச்சி தற்போது இல்லை. ஆனால் எப்படி அவர்களுக்கு மறுப்பு சொல்வதெனத் தெரியவில்லை. பள்ளிப் பரீட்சைகளின் தரவரிசைப் பட்டியலில் நான் பின்னோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தேன். என் வீட்டில் அதற்கு ஜானைக் குற்றம் சுமத்தினர். “ஆயி அப்பன் இல்லாதவன் புத்தி சொல்லி வளக்க ஆளில்ல அவங்கூட சுத்தி நீயும் தருதலையாயிராத” எனக் கடிந்துகொண்டனர். ஜானைக் குறித்து என் வீட்டில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவன் எப்படியோ அறிந்திருந்தான்.

பிறகொரு நாள் மதியத்தில் நைனாரி புளியமரத்தின் மீதிருந்த என்னைத் தேடிக் கொண்டு வரதன் வந்தார். அன்று நாகுவால் வர இயலவில்லை. ஜான் அம்முறை எந்தக் காரணமும் சொல்லாமல் எங்களுடன்வர சம்மதித்தான்.  எனக்கு அது சற்று ஊக்கத்தைக் கொடுத்தது. சந்துருவே ஆட்டோவை ஓட்டினார். ஆடு கலீஃப் நகரில் விற்பனையானது. நாங்கள் கடையிலிருந்து சற்று தூரத்திலே நின்றுகொண்டோம். அவர்கள் அளித்த பணத்தை வாங்கி குழந்தைக் கடையில் புரோட்டாவும் காடை சுக்காவும் முட்டை மாஸும் தின்றோம். அவர்களோ மதுபாட்டில்களுடன் கலசக்காட்டை நோக்கிச் சென்றனர். நான் ஜானிடம் ஒயின் என்பது மண்ணில் புதைக்கப்பட்ட திராட்சை ரசம் என்றும் அதை அருந்துவதால் உண்டாகும் மேனி பளபளப்பைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். பின் தற்போது சரஸ்வதி என்னைப் பார்த்தும் சிரிப்பதாய் சொன்னேன். (இப்போதெல்லாம் சரஸ்வதியை நான் அக்கா எனக் குறிப்பிடாமல் தவிர்ப்பதை ஜான் அறிந்திருந்தான்).

அன்று மாலை பாலக்கட்டையில் அமர்ந்திருக்கையில், வரதன் முன்தினம் காரைக்குடி பேருந்தில் கூட்ட நெரிசலில் உடல் பிதுங்கியவாறு பயணித்த அனுபவத்தைச் சொல்ல ஆரம்பித்தார். ஒரு கிழவி மாலையீட்டில் ஏறி நமணசமுத்திரம் செல்வதற்காய் தன்னிடம் ஐந்து ரூபாய் கொடுத்து சீட்டு வாங்கச் சொன்னதாகவும் கண்டக்டரிடம் சீட்டு வாங்கி மிச்சத்தை திருப்பித் தருகையில் தான் பத்து ரூபாய் கொடுத்ததாக கூப்பாடு போட்டதாகவும் சொன்னார். நாகு “பெறகு என்னாச்சு வரதா” என்றார். வரதன் கோவமாய் “பெறகென்ன கீரை முண்ட ஒப்பாரி வைக்குறதப் பாத்து பஸ்ஸில இருந்தவன் எல்லாம் நம்மளத் திட்ட ஆரம்பிச்சுட்டான். என்ன பண்றது என் காச குடுத்து அனுப்புனேன்.” எல்லோரும் வரதனுக்காய் அனுதாபப்பட்டோம். ஆனால் வரதன் புன்னகைத்தவராய் “நான் சும்மா விடுவேனா கெழவி எறங்குறப்ப சுருக்குப் பைய லவுட்டிட்டேன்ல” என்றார். நான் வேகமாய் முந்திக் கொண்டு “பைக்குள்ள என்னண்ணே இருந்துச்சு” என்றேன். வரதன் என்னை நோக்கி “கெழவி கூதி இருந்துச்சு” என்றார். அன்று வரதனின் வலையில் நான் வீழ்ந்ததை உணர்வதற்குள் எல்லோரும் என்னைப் பார்த்து கைதட்டி வெடிச் சிரிப்பு சிரித்தனர். ஜான் மட்டும் ஆலங்குடி சாலையை நோக்கியவாறு  யாரையோ எதிர்பார்ப்பவனைப் போல் நின்றிருந்தான்.

வரதனிடம் அன்று வசமாய் சிக்கியிருந்தேன். நான் எதைச் செய்தாலும் பேசினாலும் அது கேலிக்குரியதாக்கப்பட்டது. நான் என்ன செய்வதெனத் தெரியாமல், அங்கிருந்து கிளம்பவும் முடியாமல், விழி பிதுங்கி நின்றிருக்க, சற்று நேரத்தில் ஜான் போலீஸ் எனக் கத்தியவாறு என் கைகளைப் பிடித்து இழுத்துச் சென்றான். அனைவரும் சுதாரிப்பதற்குள் நாங்கள் பி.யு.சின்னப்பா அக்காள் வீட்டுச் சந்தின் அருகில் சென்று விட்டோம். என்னைக் காப்பாற்றுவதற்காய் அவன் பொய்யுரைத்திருப்பான் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் வழக்கத்திற்கு மாறாய் மாதாகோயிலை நோக்கி ஓடாமல் நைனாரிக் கரைக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதைக்குள் இழுத்துச் சென்றான். அப்பாதைக்குத் திரும்புகையில் ஆலங்குடி சாலையில் நரிஏட்டு நிற்பதைக் கவனித்தேன். உடன் தலையில் குல்லா வைத்து கைலி அணிந்த வேறொரு ஆளும் நின்றிருந்தார். நாங்கள் மேற்கு கரை புளியமரத்தின் பின் சென்று பதுங்கிக் கொண்டோம். எங்களுக்குப் பின் வரதன் தனி ஆளாய் ஒற்றையடிப் பாதையில் ஓடி வந்தவர் மலம் கழிப்பவனைப் போல் கால்சட்டையைக் கழட்டி அமர்ந்தார். ஆனால் புளியமரத்தின் பின் மறைந்திருந்த எங்களை அவர் கவனித்திருக்கவில்லை. நைனாரிக் குளத்து நீர் பௌர்ணமிக்குப் பிந்தைய நிலவொளியில் தனது பச்சையத்தை மறைத்திருந்தது. கரை முழுதும் நிறைந்திருந்த தவளைகளின் கூக்குரலை சிறிது நேரத்தில் காலடியோசைகள் ஊடறுத்தன. இம்முறை நரிஏட்டும் உடன் இரு காவலர்களும் ஒற்றையடிப் பாதையில் ஓடி வந்தனர். வரதன் தன் முழங்கால்களுக்கிடையே முகத்தைப் புதைத்துக் கொண்டார். அவர்கள் அருகில் வர வர வரதனிடமிருந்து டர்… புர்….ரென காற்றுப் பிரியும் ஓசைகள் கேட்டன. நிச்சயம் அவர் வாயின் மூலம் தான் அவ்வோசையை எழுப்புவார் என்பதை அறிந்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவ்வோசைகளைக் கேட்டு மற்ற இருவரும் தயங்கி நிற்க நரிஏட்டு மட்டும் வரதனின் அருகில் வந்தார். நான் ஜானின் காதுக்குள் “வக்காலவோலி மோப்பம் புடிச்சுட்டுத்தான் போவாம் போல” என மெதுவாய் கிசுகிசுக்க அவன் என் கைகளை அழுத்தி அமைதியாய் இருக்குமாறு எச்சரித்தான். நரிஏட்டு தன் இரையை கூர்ந்து நோக்கிய பின் அதட்டலாய் “டேய் என்ன பண்ற?”   என்றார். ஆனால் வரதன் “என்ன சார் பாத்தா தெரியல? ஆய் போறேன்” என எவ்வித பதட்டமும் இல்லாமல் பதிலளித்தார். அதற்கு நரிஏட்டு “அப்படியா  ராசா?   ஜட்டிய அவுக்காமத்தான் ஆய் போவியா?” எனக் கேட்டவாறு இடது கையால் மின்னல் வேகத்தில் வரதனின் பிடரியில் அறைய வரதன் இரண்டடி முன் சென்று மண்ணில் முகம் புதைய கவிழ்ந்தார். அதன் பிறகு என் கதாநாயகனை அவர்கள் இழுத்துச் சென்ற விதமும் அவர் காவலர்களிடம் கெஞ்சிய விதமும் சரி போதும் விடுங்கள் அதையேன் எழுதிக்கொண்டு.


சித்ரன்                                                 

[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.