புகை

ள்ள இழுல. புகைய வாயால உறிஞ்சு மெதுவா வெளிய விடு.” “முன்னாடி ரெண்டு இழுப்புதான் கேப்ப. இப்போ தனியா சிகரெட் பிடிக்கயோ, தண்டவாளம் பக்கம் போறியா.தீப்பெட்டி இருக்கா” மணி அண்ணனோடு உரையாடல்கள் இப்படித்தான் ஆரம்பித்தது. மாமா இறந்த வீட்டில் அவரைக் கண்டேன். ஆள் ஒல்லியாக அடையாளம் தெரியவில்லை. எரிக் குழியில் பாடை கவிழ்த்து சவம் இறக்கும் போது, மாமாக்கு பிடித்தமான சிசர் பில்டர் இரண்டு பாக்கெட்டை அதில் போட்டார். “மாமா, பாத்திலா. மருமவன் தான் உமக்கு பிடிச்சதை போடுகேன். செத்தா தெய்வமமாம். எனக்க ஆயுச கொஞ்சம் நீட்டு. பொட்டப் பிள்ள ரெண்டு. கொமர கற சேக்கனும்.”, “நீ குடிச்சு ஈரல் அழுகி போனா, சாமி என்னல பண்ணும். எழவுல போன குடிய நிறுத்து. போக்கத்த பயங்களுக்கு இப்போ ஒல்னேசேரி பஸ் ஸ்டாப்புல டாஸ்மாக் வந்தாச்சு. கொஞ்ச நாளுல வீட்டுக்கு ஒரு ஒயின்ஷாப் திட்டம் அரசாங்கம் கொடுக்கும் போல” பின்னால் வாத்தியார் ரவியின் குரல் ஒலித்தது.

ஒழுகினசேரியின் நீண்ட சுடுகாட்டில் வரிசையாய் சாதிக்கு ஒரு எரிக்குழி. எட்டு அடியில் மண் பீடமாய் நிற்கும் மாசாண சுடலை தான் மொத்த பொறுப்பு. குழியில் சாந்து நிரப்பி, உள்ளே எரியும் வைக்கோல் நின்று எரிய வசதியாய் சாந்தின் மேல் தலைமாட்டில், நெஞ்சு, கால்மாட்டில் சிறிதாய் மூன்று கையளவு குழியிட்டனர். அத்தான் மொட்டைப் போட போகவும், நான் பழையாற்றில் இறங்கி முங்கியெழுந்து படித்துறையில் ஏற, மணி அண்ணன் ஓல்ட் கிங்ஸ் ரம் பாட்டிலை இடப்புறமிருந்த மின்மயான மேடையில் அமர்ந்த படி திறந்து கொண்டிருந்தான். ரம்மின் வாடை படித்துறையில் ஏறிய எனக்கே மூக்கை அடைத்தது. “என்னா மணி, இப்போவே ஓட்டம் பாக்கியா. அடுத்த குழி உனக்குத்தான் போல.” ஆற்றிலிருந்து ஒரு குரல் கேட்டது. மணி அண்ணன் இதையெல்லாம் கவனிக்கவில்லை. “குடில என்னையா கணக்கு மயிறு, நா என் மேலு வலிக்காக்கும் குடிக்கேன், சங்கடம் உள்ள வாழ்க்கை உனக்குண்டா. எங்க அய்யா இருந்தத அழிச்சான். நா ரெண்டு பொட்டப் பிள்ளையை பெத்து கஷ்டப்படுகேன். எவனாச்சும் சொக்காரன், அவன் இவன்னு உபகாரம் உண்டா. எம் பைசா, எம் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு. பெயிண்ட் அடிச்சு இருக்கிறீரா, ஆக்கர் லோடு தூக்கும் போது மூட்ட ஒவ்வொண்ணும் நூறு கிலோ இருக்கும். எழவு இந்த நேரத்துல உன் உபதேசம் ஒன்னுத்துக்கும் புடுங்க லாயக்கு இல்ல. நீரு நல்லவனா இரய்யா. மனசுல ஆயிரம் விஷயம் கிடந்து கீலு கணக்கா கொதிக்கும். குடிச்சா கொஞ்சம் உறங்குவேன்” அண்ணன் என்றோ ஊர்ப் பெரியவரிடம் உதிர்த்த சொற்கள் நினைவில் வந்தன.

குப்பியில் பாதியை, கையிலிருந்த பிளாஸ்டிக் கப்பில் ஊற்றி, தண்ணீரைக் கொஞ்சமாய் கலந்து, கை நடுங்க, வாயில் ஊற்றும் போது, ஊற்றியது நாடி வழியே வழிந்து, அவரின் சட்டையில் பட்டது. திறந்திருந்த சட்டையில் நெஞ்செலும்பு துருத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. கட்டிய வேட்டி வெளிறி, முக்கிய நீலத்தில் நிறம் மாறி இருந்தது. நான் அருகில் நிற்பது தெரிந்தாலும் அவர் அடுத்த ரவுண்டு சென்றார். அதையும் முடித்து என்னைப் பார்த்தார் “ஆளுக்கு எங்களலாம் கண்ணு தெரியு போல. நான் பாடை கட்டும் போதே உன்னைய பாத்தேன். நீ பாக்காத மாதிரிலா நின்ன. பவுசு கூடிட்டோன்னு நினச்சேன்.” மது உள்ளே போகவும் மனதில் நினைத்ததைப் பேசினார். “இல்லணே, நீங்க அங்கேயும் இங்கேயும் அலைஞ்சுட்டு இருந்தீங்க. வேலையா இருக்கீங்க. அப்புறமா பேசலாம்னு பாத்தேன். தப்பா நினைக்காதீங்க.”, “தம்பிய தப்பா நினைப்பனா. விடு மக்கா.எங்க மெட்ராஸ்ல தான இருக்க. அந்த செவப்பு சட்டை போட்ட பயதான உம்பிள்ள.”, “ஆமாண்ணே”. பேசிக்கொண்டே சிகரெட்டைப் பற்ற வைத்தார். ஒன்றை எனக்கும் நீட்ட நான் வேண்டாம் என்றேன். “என்னடே மயிராண்டி, இப்போ என்ன விலை கூடுன சிகரெட் தான் அடிப்பியா. எது இந்த கிங்ஸ், லைட்ஸ் மாதிரி”, “இல்லனே சிகரெட் விட்டுட்டேன்”, ஏறி இறங்கி பார்த்தவர் “சல்லத்தனம், மலைக்கு மாலை போட்டும் பாத்துட்டேன். ரெண்டு நாளுதான் இருப்பேன். அப்புறம் அய்யப்பன்ட்ட ‘தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த குற்றங்களை மன்னிக்கனும்’ன்னு சிகரெட் அடிச்சிருவேன்.”, மொட்டை போட்ட அத்தான் குளித்து முடித்து, நெற்றியில் பட்டையிட்டு அருகில் வந்தார். “மணி அண்ணே, சாயந்திரம் வீட்டுக்கு வா. சாமியானா, சேர் எல்லாம் மூக்கன் செட்டியார்ட்ட திருப்பி கொடுக்கணும். காலைல நல்ல உபகாரம் செஞ்ச. இந்தா இத வச்சுக்கோ. அக்காட்ட கொஞ்சமாச்சும் கொடு, மொத்தமா குடிச்சிராதே” கையில் இருநூறைத் திணித்தான்.

நாங்கள் அங்கிருந்து விலகிச் சென்றோம், அத்தான் சிகரெட்டை பற்ற வைத்தான். “அப்பாக்கு கடைசி காலத்துல மணி அண்ணந்தான். சிகரெட், சில சமயம் பிராந்தி எல்லாம் அவரு கூடத்தான். அண்ணனுக்கும் பைசா படியேறும். ஆசுபத்திரில இருந்த நாள் மட்டும் தான் தண்ணி, சிகரெட் இல்ல. நுரையீரல் ரொம்ப வீக் ஆகி, டாக்டர் சொல்லியும் கேக்கல. போற நாள் வந்துட்டுன்னு யாரு பேச்சையும் மதிக்கல. அப்பிடி ஒரு பிடிவாதம். அம்மை என்ன செய்வா. ரூமுல ராத்திரி பழைய பாட்டு ஓடிட்டே இருக்கும். கூட அம்மை கால்மாட்டுல இருக்கணும். ஒரு பாக்கெட் சிகரெட் தீத்திருவாரு. இதுக்கு இடையிலே இப்போ பவர் கட் வேற. என்னத்த புடுங்குகாணுகளோ. நிம்மதியா உறங்கி நாளாச்சு, இருமலு சத்தமும், பாட்டும்.  முத போய் நல்ல கிடந்து உறங்கனும்”  பேசிய படியே வீட்டுக்கு நடந்தோம். அத்தான் உடன் வீட்டுக்கு செல்லும் முன்னே, அலைபேசியில் அழைத்து கிளம்பிவிட்டதை சொல்லிவிட்டோம். சரியாய் வாசலில் ஆரத்தி எடுக்க அம்மை நின்றாள். அத்தை உள்ளே விளக்கின் முன்னே அமர்ந்திருந்தாள். புளிக்கறியும், சோறும் கோதைகிராமம் கண்ணன் சரியாய் எடுத்து வந்தான்.

கமலின் தீவிர ரசிகர். குடும்ப தொழிலாய் மாமாவுக்கும் சமையலே தொடர்ந்தது. காலை எழுந்ததும் மாமாக்கு வெளிக்கி போக சிகரெட் வேண்டும் இல்லையேல் முக்கியும் பயனில்லை. எல்லா வேளையும் சாப்பாட்டுக்கு முன், பின் கட்டாயம் உண்டு. இடையே கணக்கு இல்லை. அப்பா பீடி வாங்க என்னை கடைக்குப் போகச் சொன்னாலே அம்மை சாமியாடி விடுவாள். மாமா அதே வீட்டிலே ஆச்சியின், பெரியப்பாவின், பெரியம்மையின் முன் தவிர்த்து சிகரெட்டை மற்றவரின் முன் தயக்கமின்றி பிடிப்பார். சமையல் வேலைக்கு அதிகாலை மூன்றுக்கு அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும். மழையும், குளிரும் சிலநேரம் வாட்ட, துணைக்கும் ஆளும் இல்லாமல், புகைப்பிடிப்பது பழக்கம் ஆச்சு. அத்தையின் மூக்கு அதிகம் சுவாசித்தது கல்யாணத்திற்குப் பிறகு அதன் புகையாய் தான் இருக்க வேண்டும். அதுவே பிராயத்திலே மூச்சு விட சிரமம் ஆக்கியிருக்க வேண்டும். ஆனாலும் புகை மாமாவின் அறையில் எப்போதும் நிரம்பி இருக்கும். மாமாவின் மணம் சிகரெட் புகையின் அசல் தான். எங்கள் முன் மறைத்த படி பிடித்தாலும், முரணாய் சந்தர்ப்பங்களில் எங்களிடம் வாங்கி வரச் சொல்வார். அவருக்கு எனப் பொய் சொல்லியே கடைகளில் சிசர் பில்டர் வாங்கும் வழக்கம் வந்தது. மாமா என்றாலே கையில் சிகரெட் பிடித்த படி நிற்கும் பிம்பமே உடனடியாய் நினைவில் வரும்.  வீட்டில் அத்தை விளக்கின் அருகிலே தூங்கி கொண்டிருந்தாள். அடுத்த நாள் காலை காடாத்து, ஆக தூங்க முயற்சித்தேன். ஆனால் மாமாவின் நினைவுகளே நெஞ்சை அடைத்தது.

முதலில் முழு சிகரெட் அடித்தது, மாமாவுக்கு தெரியாமல் அவரின் பாக்கெட்டில் களவாடிய சிசர் பில்டர் தான். பின் முழு நீள திருடனானேன், சித்தப்பாவின் கோல்ட் பில்டர், சில சமயம் அப்பாவின் செய்யது பீடி. ஐந்து பைசாவுக்குக் கிடைக்கும் எம்.எஸ், காஜா பீடி. முழுக்க புகையை இழுத்து ஒழுங்காய் வெளிவிட வேண்டும், பசங்க முன் இருமி தொலைத்து விடக்கூடாது. புகைக்கும் பழக்கம் இப்படித்தான் ஆரம்பித்தது. சரியாய் சொன்னால் ஆறாம் வகுப்பில் துண்டு பீடியில் ஆரம்பித்து, இடையே விட்டு, பத்தாம் வகுப்பில் ஒரு பீடியை, சிகரெட்டை மூவர் பகிர்ந்து, பன்னிரெண்டில் ஒன்றை முழுதாய் அடிக்க ஆரம்பித்தோம். அத்தானும் சிகரெட் பிடிக்க, வீட்டில் இருவராய் அடிக்கடி காணாமல் போவோம்.

சிகரெட் எப்போதும் உடன் இருந்தது. சென்னை கிளம்பும் போது பேருந்து பரவாயில்லை, நிற்கும் போது இரண்டு இழுப்பு இழுக்கலாம். ஆனால் ரயிலில் கடினம் அல்லவா, இருந்தாலும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் மதுரை கடந்து நடுராத்திரி புகைத்தால் தான் உறக்கம் வரும். பிறகு சென்னையில் முதல் மூன்று வருடம் காலை டிபன் உண்டோ, இல்லையோ பத்து மணிக்கு முன்னால் மூன்று சிகரெட் தீர்ந்துவிடும். அதற்காகவே தி. நகர் துரைசாமி சப்வே டீ கடையில் அக்கவுண்ட் உண்டு. டீ குடிக்க போய் திரும்பி வரும் போது உடன் வேலை பார்க்கும் தோழிகள் என் வாயிலிருந்து கிளம்பும் சிகரெட் வாடைக்கு, நான் அருகில் சென்றாலே மூக்கை பிடிப்பர். தெரிந்தும் அதுவே தொடர்ந்தது. கல்யாணம் முடிந்து, அவுட்டோர் போட்டோ எடுக்க உதயகிரி கோட்டை சென்றிருந்தோம். அங்கும் சிகரெட் பிடிக்க, கட்டியவள் அன்றைய நாள் முழுக்க என்னுடன் பேசவில்லை.

பிரசவத்திற்காக சீமந்தம் முடிந்து அவளின் அம்மை வீட்டில் அவள் இருக்க, சென்னையில் தனியாய் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். கட்டுப்பாடே இல்லை, வேலை முடிந்து வீடு திரும்பும் போதே பாக்கெட்டில் சிகரெட் பாக்கெட் இருக்கும். யாரும் உடன் இல்லையேல் ஒரு முழு சோம்பேறி நான், அடித்த சிகரெட் துண்டுகளை ஒரே பிளாஸ்டிக் கப்பில் மொத்தமாய் சேகரித்தேன். இரண்டு வாரம் கழித்து கப்பில் உள்ள துண்டுகளை அகற்றும் போது, அடர்கரு நிறத்தில் கெட்டியாய் சீல் போல புகையிலையின் துகள்கள் சேர்ந்து நீர்மமாய் தெரிந்தது. ஏனோ மனம், அதிலே நிலை கொண்டது. அதற்கு முன்னே சிகரெட்டை வேண்டாம் என முடிவு செய்து நான்கு, ஐந்து நாட்கள் முயன்று பின்னால் அதன் முன்னே தோற்றேன். ஒன்றை விலக்க முயற்சிக்கும் போது சதாசர்வ நேரமும், மனம் அதையே மறக்க நினைத்து நிந்திக்கிறது. பார்ப்பதைத் தவிர்க்கவும், எப்போதெல்லாம் எங்கெல்லாம் அதன் நினைவு வருகிறதோ? அவை விட்டு விலகினேன். நம்மை அதன் முன்னே தோற்றுக் கொண்டவன் நான் என ஒப்படைத்து விடவேண்டும், அதுவே விலகி ஓட எளிதாய் இருக்கும்.  உண்மையில் சிகரெட்டை விடக் காரணம்,  தயக்கமின்றி என் பிள்ளைக்கு நான் முத்தமிட வேண்டும். வாழ்வின் மேல் பற்றுதல் என்பதெல்லாம் எனக்கான பொய் அவ்வளவுதான். மாமாவின் சாவு வீட்டில் எல்லாம் ஞாபகம் வந்தது. அத்தையின் ஆஸ்துமா பிரச்சனைக்கு மாமாவின் சிகரெட் புகைதான் காரணமாய் இருக்க வேண்டும்.

காடாத்து முடிந்து, அடியந்தரம் ஞாயிறு கழிக்க முடிவு செய்தோம். இடையே மூன்று நாட்களே இருக்க சென்னை போவதைத் தவிர்த்து ஊரில் தங்கினோம். மனைவி அவளின் அப்பா வீட்டிற்கு மகனோடு இரண்டு நாட்கள் சென்றாள். நான் மாமாவின் வீட்டிலே அம்மையுடன் தங்கினேன். இரண்டு நாட்கள் எவ்வித பிரச்சனையும் இல்லை. மூன்றாம் நாள் இரவு தூங்கும் போது, மாமாவின் அறையிலிருந்து சிகரெட் புகையின் மணம் வந்தது. இரண்டு நாட்கள் அதே நினைவில் இருப்பதால் ஏற்பட்ட பிரமை என்றே நினைத்தேன். அடுத்த நாள் பேச்சு வாக்கில் அத்தானும் அதையே கூறினான். மாமா ஆவியாகவா அலையப் போகிறார், ஆனால் புகை, மணம் வருவது உண்மை. அத்தை மட்டுமே அந்த அறையில் தனியாய் படுத்தாள். மாமாவுக்கும், அத்தைக்கும் பெரியோர் நிச்சயம் செய்த திருமணம் என்றாலும், அன்னியோன்யம் காதலித்து மணமுடித்தவர்களை விட அதிகம். இரவு உணவு முடிந்ததும் அறையில் இளையராஜாவின் பாட்டு ஒலிக்கும். பாட்டின் பல்லவியின் சரணத்தின் இடையே அத்தையின் இருமலும் இணைச் சுருதியாய் இசைக்கும். மாமாவின் இறப்பில் அத்தை புத்தி பேதலித்தது போலத் தான் நடந்து கொண்டாள். அவளிடம் போய் புகை வருகிறது, சிகரெட் நாற்றம் அடிக்கிறது என்றெல்லாம் கேட்க முடியாது. விட்டுவிடலாம் என்றே இருவரும் யோசித்தோம். அடுத்த நாளும் அதே மாதிரி நடந்தது.

காலையில் இயல்பாக அத்தை இருப்பாள். ராத்திரி மாமாவின் அறைக்கு நேரமாய் சென்று கதவை அடைத்து விடுவாள். அன்று அத்தானும் நானும், அத்தை அறைக்கு நுழைந்ததும், கதவின் அருகே நின்றோம். சரியாய் சில நிமிடங்களில் சிகரெட் புகை வந்தது. கதவைத் தட்டினோம், அத்தை திறக்கவில்லை. காலை வரை கதவைத் திறக்கவில்லை. அத்தானுக்கு பயம் அதிகம்,  அத்தையிடம் நேராய் கேட்கவும் தோன்றவில்லை. தெரிந்த சாமியாடி இசக்கி அண்ணனை வீட்டிற்கு அழைத்தோம். அத்தைக்கு இதற்கென தெரியாது, அடியந்திரம் பூஜைக்கு பேசுகிறோம் என்றே வீட்டில் தெரிவித்தோம். “மாமாவுக்கு வேலை தாம்ல கேட்டியா. ஆசை இன்னும் இருக்கு. அதான் வீட்ட சுத்தி வராரு. பரிகாரம் இருக்கு. செஞ்சா சரியாயிடும்.ஆவிக்குரிய நன்மை இன்னும் முடியல. முடிஞ்சா தெய்வமா மாறி உன் குடும்பத்த காப்பாத்தும். நேரம் இல்ல. சீக்கிரம் முடி” சிரித்த படியே இசக்கி அண்ணன் மாமாவின் நினைவுகளை இன்னும் வார்த்தைகளால் பயமுறுத்தினார்.

வீட்டில் அத்தை யாரிடமும் அதிகம் பேசவில்லை. பகலில் தூங்குவதும் இல்லை, இடையே மணி அண்ணன் மட்டுமே அவ்வப்போது அத்தையிடம் பேசுவார். மாமாவுக்குக் கடைசி காலம் கூடவே இருந்ததும் அவர் தான். அத்தானும் நானும் ஓல்ட் மங்க் அரைக் குப்பி வாங்கி மணி அண்ணனுக்குக் கொடுத்து, நாங்கள் ஆளுக்கு ஒரு பியரை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தோம். அவர் நேரடியாகவே மாமாவை எண்ணி அழுதார். இப்போதும் அத்தை என்னிடம் சொல்லி சிகரெட் வாங்குகிறாள் என்றார். நடப்பதைக் கூறினோம் “மாமா இருக்கு பாத்தியா. நம்ம வீட்டுல இருக்கு. நாளைக்கே கொல்லங்கோடு மந்திரவாதிய பாப்போம். இங்கயே அமத்தி குலசாமியா கும்பிடுவோம்”. இவரிடம் பேசியும் வீணாய் போனது. அத்தான் மந்திரவாதியிடம் போக முடிவு செய்ததுதான் எனக்கும் வயிற்றைக் கலக்கியது.

அன்றைய இரவு உணவு முடிந்ததும், அத்தையிடம் பேச்சுக் கொடுத்தோம். “தனியா உறங்காண்டாம். மைனி பிள்ளைகள் கூட ஹால்ல படுக்கலாம்லா” நான் சொன்னதும், வலுவிழந்த கண்களால் பார்வையை என் மேல் குவித்தாள். ஈரத்தில் ஒட்டிய உதடுகள் மெலிதாய் சிரிக்க, கன்னங்கள் விரிந்தன. “மாமா ஒத்தைல படுக்காது மக்கா. எனக்கும் அவரு கால் மாட்டுல தூங்கினாதான் கண் அசறும்” பேசிக்கொண்டே மாமாவின் அறைக்குள் நுழைந்தாள். இந்நேரம் அத்தானின் முகலட்சணங்களை காண்பது தான் ஆக பயம்.

அறையின் வெளிச் சன்னலில் இருந்த துளை வழியே அத்தானும் நானும் உள்ளே பார்த்தோம். அத்தை கீழே அமர்ந்திருந்தாள். தீப்பெட்டியில் நெருப்பைப் பற்ற வைக்கும் சுர்ரென்ற ஒலி கேட்கவும், அத்தான் கண்களை மூடிக் கொண்டான். வெளியே இருட்டில் இதயம் எகிறி எகிறித் துடித்தது. கட்டிலின் ஒரு பகுதி மாத்திரமே தெரிந்தது. சில நொடிகளில் சிகரெட் மணமும் வந்தது. கையை இருக்கமாகப் பிடித்து, அத்தான் முகத்தை நெஞ்சில் சாய்த்தான். கதவிடுக்கின் வழி புகையும் வந்தது. அத்தை இன்னும் அதே இடத்தில் இருந்தாள், அவளின் கழுத்துக்கு மேலே தெரியவில்லை. எட்டிப் பார்த்தேன், அத்தையின் விரலிடுக்கில் சிகரெட் இருந்தது. புகை கட்டிலின் மேலிருந்து வருவது போலவிருந்தது. சில நேரத்தில் அத்தை கட்டிலின் கால்மாட்டில் படுத்துக் கொண்டாள். கடைசியாய் நான் பார்க்கும் போது, கட்டிலின் மேலே பாதி எறிந்த சிகரெட் சாம்பலை நீட்டி புகையைக் கக்கியப் படி கிடந்தது.


வைரவன் லெ ரா.       

[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.