Bestseller வார்த்தை
ஒரேயொரு மன்னிப்பானது உடனிருந்தால் போதும்
எதிலிருந்தும் தப்பிவிடலாமென்கிற தைரியம்
ஒருவகையில் அதுவும் உண்மைதான்
மன்னிப்புகள் ஒருபோதும் தீர்ந்துபோகாதது
மன்னிப்புகளால் ஒருபோதும் பழசாகவும் முடியாது
வருடாவருடம் அதிகளவில் விற்றுத்தீர்கிற
அவ்வார்த்தைக்குத்தான் சந்தையில் எப்போதும் மவுசு அதிகம்
பிற்பாடு தன் தேவைகள் அதிகமாவதை உணர்ந்தபின்னர்
பகிரங்கமாகவே நான்குபேர் மத்தியில்
கால்மேல் காலிட்டு சிகரெட் புகைப்பது,
பரிகாரங்களின்மீதும் பிராயச்சித்தங்களின்மீதும்
சாம்பலைத் தட்டிக்கொள்வது என
அதன் நடவடிக்கைகள் மொத்தமும் மாறத்துவங்கின
எனக்குத்தெரிந்து
இன்றையதேதிக்கு
மன்னிப்புகளே நேரில்சென்று சந்திக்கும் அளவிற்கு
ஊருக்குள் எந்த குற்றங்களுக்கும்
முக்கியத்துவமில்லை என்பதே உண்மை நிலவரம்
பெருவெடிப்புச் சித்திரம்
மூக்குநீண்டவொரு புகைப்படக்கருவிக்குத் தெரிந்திருக்கிறது
யாரை எப்படிக் காணவேண்டுமென
சட்டகத்திற்குள் வந்துநிற்கும் யுவதிக்கும் தெரிந்திருக்கிறது
அத்தனை இலைகளையும் எவ்வாறு ஒரேமூச்சில் அசைப்பதென
எதிர்பாரா நேரமொன்றில் தெளிக்கப்பட்ட மௌன ஒளித்துகள்
வெளியெங்கும் சிதறியபொழுதில்
காற்றில் தமக்குத்தாமே பதம்தீட்டிக்கொள்ளும் புற்களென
ஒன்றின் மீதொன்றாய் சாய்ந்துகிடக்கும் அவளின்
காலவரிசையிலிருந்து
ஒரேயொரு நுண்நொடியை நோகாமல் பிடுங்கியபின்
எடுத்த புகைப்படத்தை சரிபார்க்கின்றேன்
அதில் அப்பெண்ணோடு சேர்த்து பிண்ணனியில் பதிந்துவிட்டது
நிறம்வெடித்துச் சிதறும் மாலைவானம்
கூடு சுமையேறி முதுகுவளைந்த மரம்,
களைப்பில் காலைக் கீழிறக்கயோசிக்கும் ஒரு நடராஜர்சிலை
இவைகளோடு
இந்த யுகத்தின் இறுதிவடிவம்போல் அப்பெண்ணின் தோற்றம்
அப்படியொரு பாவனை அது……
அதன்பிறகு என்ன முயன்றும்
அந்த கச்சிதத்தை
அதே பெண்ணாலும் திரும்ப அடையமுடியவில்லை
மீள
அவ்வளவு சிரமத்தோடெல்லாம்
இங்கிருந்து நிரந்தரமாய்
எனைவிட்டுப் பிரியவேண்டாம்
ஆற்றில் பயணிக்கும்
ஆளற்ற படகே
விருப்பமில்லையெனில்
திரும்ப வந்துவிடு
உன்னால் முடியும் என்றால்….
தினசரிக்கு பழகுதல்
திடுதிப்பென உறுப்புகள் மொத்தமும் இழந்த உடலாக
என் நிழலைக் கண்டுகொண்டேன்
இவ்வளவு நடந்தபின்னும் நிம்மதியாக இருக்கின்றேன்
இவ்வளவு கூக்குரலையும் பாசாங்கு என்கின்றேன்
சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் எதற்கும் எனக்கும்
எந்தவித தொடர்பும் இல்லாததுபோல்
யாவற்றையும் எளிதாகப் புறந்தள்ள முடிகிறதல்லவா
என்ன ஜென்மம் நான்
சரி சரி, நாளை பொழுது விடியட்டும்
புத்தம்புது மனிதனாகி நடந்த அனைத்திற்கும்
நானே பொறுப்பேற்று, யாவற்றையும் சரிசெய்துவிடுவதாக
சமாதானம் செய்துகொண்டதும் வழக்கம்போல் ஆழ்ந்த உறக்கம்
எல்லாவற்றையும் மறக்கும்படி …….
நல்லதோ கெட்டதோ, என்ன ஆனாலும் சரி
மறுநாள் மட்டும் தவறாமல் வந்துவிடுகிறது.
பெரு விஷ்ணுகுமார்.
மிகவும் சிறந்த கவிதை நடை, அழகு வாழ்த்துகள்