பேதமுற்ற போதினிலே-3


உள்ளும், வெளியும்

பிரபஞ்சம் இரண்டாக இருக்கிறது, அகம் புறம் என்று. இத்தனை பிரம்மாண்டமான முடிவிலா வெளி ஒருபக்கமென்றால், உடலுக்குள் இருக்கும் சூட்சுமமான உணர்வுகள், மனம், புத்தி, ஆன்மா குறித்தும் நம்மால் அறியமுடியாத புதிராயிருக்கிறது. ஆனாலும் இத்தனை பெரிய ஆணவத்தை சுமந்து திரிகிறோம். உணர்வுகள் தன்னிச்சையானவை. உயிரெனப் பிறந்த அனைத்தும் நகர்வது அவ்வழியே. இது இயற்கையின் ஆதார சுருதியாய் இருக்கிறது. விலங்குகளிலும் நம்மால் கண்கூடாகப் பார்க்கமுடியும். இந்த உணர்வுகள் மனதாலோ, உடலாலோ, புத்தியாலோ முடிவெடுத்து எழுப்பப்படுவதில்லை. இயற்கையின் விதிப்படி இந்தத் தூண்டல்கள் நிகழ்கின்றன. குழந்தை தாய்மடி நாடுவதும், வாலிபத்தில் எதிர்பாலினததுக்கான தேடலும் ஓர் நியதிப்படி நிகழ்கிறது.

நாகரீகமடைந்த சமூகம் இதற்கு பெரிதும் எதிராய் செயல்படுகிறது. ஆடை உடுத்துதல்கூட உணர்வுகளை மறைத்துக்கொள்ளும் ஒரு செயலே. யாருடன் இணைசேர்வது, எப்படி வாழ்வது என்று உணர்வுகளை நெறிப்படுத்தவும், தவிர்க்கவும், ஒத்திப்போடவும் நாகரீகமடைந்த சமூகம் முயல்கிறது. இதனால் பல்வேறு குழப்பங்கள் நேர்ந்துவிடுகின்றன. மனநிலை பிறழ்வு, தற்கொலை, வன்புணர்வு, கொலை என பல பிரச்சினைகள் நாகரீகம் உருவாக்கியுள்ளது. உணர்வுரீதியான வாழ்வுக்கும் விலங்கு வாழ்க்கைக்கும் வேறுபாடில்லை. எனவே புத்தியுடன் கூடிய மத்தியமமான வாழ்க்கையை கண்டடைவதே ஒவ்வொரு சமூகத்தின் சவாலாக இருக்கிறது.

உணர்ச்சிகள் உருவாக்கப்பட முடியாதவை என்றாலும் தூண்டப்படக் கூடியவையாக உள்ளன. சோகமான நிகழ்வுகளை சிறிதுநேரம் பார்ப்பதன் மூலம் அழுகையுணர்ச்சியை, கிளர்ச்சியூட்டும் எழுத்துக்கள், காட்சிகளால் காமவுணர்வை, என இப்படி. உடல்தான் ஊடகம். உடல் என்ற சுவரில்தான் சித்திரங்கள் வரையப்படுகின்றன. உணர்வுகள் உடலை ஆதாரமாகக் கொண்டு, புலன்களின் மூலம் உணர்வை அடைகின்றன. எனவேதான் உடல் வெட்கப்படக்கூடிய பொருளாகிறது. புறத்தூண்டல் இன்றி மனமேகூட நினைவுகளை எழுப்பி உணர்ச்சிகளைத் தூண்டவும் செய்கிறது.

மனித வாழ்க்கையே உணர்வுகளுடனான தொடர்யுத்தம் தான். புத்தியும் மனமும், உணர்வுகளுடன் கடும்போர் புரிகின்றன. இதன் வெற்றி தோல்வியைப் பொறுத்தே மனிதன் தன் சமூகநிலையைக் கட்டமைத்துக் கொள்கிறான். இது ஒருவகையில் புராணங்களில் நாம் காணும், தேவர்களுக்கும், அசுரர்களுக்குமான யுத்தம்போல இது. அசுரர்கள் ஒருக்காலும் அழிவதில்லை. தோற்கலாம். மகாபாரதப் போரையே ஒரு மனிதனுக்குள் நடக்கும் அகப்போராட்டமாகச் சொல்வோரும் உண்டு.

மனம் என்ன செய்கிறது? மனம் என்பதுதான் என்ன? அகம் என்னும் உள்-வெளியில் மனதிற்கு எட்டாத இடமில்லை. உணர்வுகளின் மீது, புத்தியின்மீது ஒரு குரங்கைப்போல சவாரி செய்பவனின் சாகசத்தோடு, சிலகணங்கள் என மாறிமாறித் தாவுகிறது. மனமே அவற்றுக்கு வெளிச்சமாய் இருக்கிறது. மனதின் வெளிச்சத்திலேயே சிந்தனையும், உணர்வுகளும் துலக்கம் பெறுகிறது. மனம் மற்றொன்றுக்கு மாறியபின் அவை இருளுக்குள் செல்கின்றன. இருட்டறையில் குவிந்துகிடக்கும் பாம்புகளைப்போல நனவிலியில் நீந்துகின்றன. சோப்புநுரை பொங்குவதைப்போல எண்ணங்களை, உணர்வுகளைப் பொங்கச்செய்கிறது மனம்.

மனம் என்பது தான் என்ற மையம். உடலுக்கும் அதன் உள்-வெளி அனைத்துக்கும் ‘தான்’ என்று இருப்பதால் அரசனாக முனைகிறது, அல்லது நினைத்துக் கொள்கிறது. மனம் அமராத இடத்தில் எதுவும் துலங்குவதில்லை. கடும் இருளாய் வெளி பரந்திருக்கிறது. நெருப்பைப்போல, காற்றினும் வேகமாய், உலகில் எதனினும் வேகமாய் இவ்வெளியில் உலவ மனதால் முடிகிறது. அதன் கட்டுப்பாடற்ற எல்லையில்லா சுதந்திரத்தால் அது எப்போதும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்கிறது.

மனதின் விருப்பம்தான் என்ன? மனம் மாறிமாறி வெவ்வேறு எண்ணங்கள் உணர்வுகள் என்று படரும்போது மனிதன் அலைக்கழிகிறான். மனம் இன்பத்தை விழைகிறது. தன் அதிகாரத்தைப் போற்றும் செயல்களை நாடுகிறது. மேலும் மேலுமென விரிவு கொள்ள ஒரு பேரரசனாக இருக்க விரும்புகிறது. ஆனால் அதற்கு தனித்த அவயம் ஏதுமில்லை. It’s like a hollow man. எனவே நுகர்வையூட்டும், உணர்ச்சிகளின் பின்னே மனம் திரிகிறது. மனம் கணத்துக்கு கணம் மாறிமாறித் தாவுவதால் எந்த அனுபவமும் முழுமையற்றுப் போகிறது.

சமயங்களில் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி உணர்வின் ஆதிக்கத்தில் நாம் இருப்பதுபோல் தோன்றினாலும் மனம் அங்கும் வந்து அமர்ந்துகொண்டு எல்லாம் தன் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும் தன் முடிவுப்படி எல்லாம் நடப்பதுபோலவும் ஒரு கண்துடைப்பு மேலாண்மை பார்த்துச் செல்கிறது. அது எதிலும் திருப்தியடைவதில்லை. தனக்கு நிறைவையளிக்கும் ஒன்றைத் தேடியபடியே இருக்கிறது. ‘நிறைவு’ என்பது இங்கு ஒரு அர்த்தமற்ற சொல்லாகவும் இருக்கிறது. இதனால் சிலநேரங்களில் ஒன்றிலிருந்து அதற்கு நேரெதிரானதற்குக்கூட மாறுகிறது. மொடாக்குடியர்கள் சட்டென்று குடியை நிறுத்துவது, குடிகாரர்களின் குற்றவுணர்ச்சி, ஒரு செயலைச் செய்யும்போதே அதற்கு நேர்மாறானதில் ஈடுபடுதல் என இப்படி பல முரண்களை நாமே அனுபவத்தில் பார்த்திருப்போம். இதற்குக் காரணம் மனம் சரி தவறுகளை அறிவதில்லை. ஒரு தரமேம்பாட்டு அதிகாரியாய், இலஞ்சஒழிப்புத்துறை அதிகாரியாய், வழிநடத்துநராய் புத்தி வருகிறது.


-பாலா கருப்பசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.