மேரி ஆலிவர் கவிதைகள்

கற்களால் உணரயியலுமா?

கற்களால் உணரயியலுமா?

அவர்கள் தங்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்களா?

இல்லை அவர்களின் நிதானம் எல்லாவற்றையும்

அமைதியடையச் செய்துவிடுமா?

நான் கடற்கரையில் நடக்கும்போது

வெள்ளை நிறத்தில், கறுப்பில் எனப்

பல வண்ணங்களில் சிலவற்றைச் சேகரிக்கிறேன்.

கவலைப்பட வேண்டாம், நான் உன்னைத்

திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்கிறேன்

பிறகு அவ்விதமே செய்கிறேன்.

மரம் தனது பல கிளைகளை

உயர்த்தி உவகையடைகிறதே,

ஒவ்வொரு கிளையும் ஒரு கவிதையைப்போலவா?

முகில்கள் தங்களது மழைமூட்டையை

அவிழ்த்துவிடுவதில் மகிழ்ச்சியடைகின்றனவா?

உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்,

இல்லை, இல்லை, அது சாத்தியமேயில்லை என்று.

நான் அத்தகைய முடிவை

எண்ணிப்பார்க்கவே மறுத்துவிட்டேன்.

ஏனெனில் அது மிகப் பயங்கரமானதாக இருக்கும், மேலும் தவறாகவும்.

**

நான் கடற்கரைக்குச் சென்றேன்

நான் காலையில் கடற்கரைக்குச் சென்றேன்

நேரத்திற்கேற்ப அலைகள்

வந்துபடியும் சென்றபடியும் இருந்தன,

ஓ, நான் சோகமாக இருக்கிறேன்

என்ன செய்யட்டும்—

நான் என்ன செய்ய வேண்டும்? என்கிறேன்.

தன் அழகிய குரலில் கடல் சொல்கிறது:

மன்னிக்கவும், எனக்கு வேலை இருக்கிறது.

**

எப்போது அது நிகழ்ந்தது?

எப்போது அது நிகழ்ந்தது?

“நிறையக் காலத்திற்கு முன்பு”

எங்கு நிகழ்ந்தது?

“தூராதி தூரத்தில்”

இல்லை, சொல், எங்கு நிகழ்ந்தது?

“எனது இதயத்தில்”

இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது உனது இதயம்?

“நினைத்துப்பார்த்த படியிருக்கிறது, நினைத்துப்பார்த்தபடியிருக்கிறது!”

**

 

இந்தக் காலையில் 

இந்தக் காலையில்

செங்குருவிகளின் முட்டைகள்

பொரிந்துவிட்டன மேலும் ஏலவே குஞ்சுகள்

உணவுக்காகக் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன.

அவர்களுக்குத் தெரியாது உணவு

எங்கிருந்து வருகிறது என்று,

வெறுமனே கத்திக்கொண்டிருக்கிறார்கள் “மேலும்! மேலும்!”

வேறு எது குறித்தும், ஒரு கருத்து கூட இல்லை. அவர்களின் விழிகளோ

இன்னும் திறந்திருக்கவேயில்லை,

காத்திருக்கும் ஆகாசத்தைப் பற்றியோ

ஆயிரக்கணக்கான மில்லியன் கணக்கான மரங்களைக் குறித்தோ

அவர்களுக்கு ஒன்றும் தெரியாது

தங்களுக்கு இறக்கைகள் இருப்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

ஒன்றுமில்லை என்பது போலவும், சாதாரணமான பக்கத்து நிகழ்வு போலவும்

நிகழ்ந்து கொண்டிருக்கிறது ஓர் அற்புதம்.

 

காட்டு வாத்து

நீங்கள் நல்லவராக இருக்க வேண்டியதில்லை.

நீங்கள் பச்சாதாபங்கொண்டு பாலைவனத்தினூடே

நூறு மைல்களுக்கு முழங்காலிட்டு நடக்க வேண்டியதில்லை.

நீங்கள் உங்கள் உடலின் சாதுவான விலங்கை

மாத்திரம் அனுமதிக்கவேண்டும்

அது எதை நேசிக்கிறதோ அதை நேசிக்க.

உங்கள் ஆற்றாமையைக் குறித்துச் சொல்லுங்கள்,

என்னுடையதைக் குறித்து நான் உங்களுக்குச் சொல்வேன்.

இதற்கிடையில் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் சூரியனும் மழையின் தெளிபளிங்குத்துளிகளும்

நிலப்பரப்புகளில்,

புல்வெளிகள் மற்றும் அடர்ந்த மரங்களின் மீதும்

மலைகள் மற்றும் நதிகளின் மீதும்

நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் தூய நீலக்காற்றின் மேலே காட்டு வாத்துகள்,

வீடு திரும்பிக்கொண்டிருக்கின்றன மறுபடியும்.

நீங்கள் எவராக இருந்தாலும்,

எவ்வளவு தனிமையாக இருந்தாலும்,

உங்கள் கற்பனைக்குத் தன்னை அளிக்கிறது உலகம்.

மேலும் உங்களை அழைக்கிறது ஒரு காட்டு வாத்தைப் போல

முரட்டுத்தனமாகவும் பரவசத்திலும்—

திரும்பத் திரும்ப அறிவிக்கிறது

இயற்கையின் குடும்பத்தில்

உங்கள் இடத்தை.

 

**

துக்கத்தின் உபயோகங்கள்

(தூக்கத்தில் இக்கவிதையைக் கனவாகக் கண்டேன்)

முன்னொரு காலத்தில் நான் காதலித்த ஒருவர்

ஒரு பெட்டி நிரம்பிய இருளை

எனக்கு அளித்தார்.

இதுவும் ஓர் அன்பளிப்புதான் என்று உணர

எனக்குப் பல வருடங்கள் பிடித்தன.


மேரி ஆலிவர் (1935- 2019)

அமெரிக்க கவிஞர். இயற்கையின் மர்மம், கனிவு, துக்கம், பரவசம் இவையே இவருடைய கவிமையம். பறவைகளும் விலங்குகளும் பருவநிலைகளும் புதிர்களும் நிரம்பிய   இயற்கையையே மொத்தமாக சொற்களால் அள்ள முயல்பவை என மேரி ஆலிவரின் கவிதைகளைச் சொல்லலாம். எம்ர்சன், தோரோ, ரூமி , வில்லியம் ப்ளேக் போன்றவர்களை இவருடைய கவிமுன்னோடிகள் எனலாம். Dream work, house of light, Felicity என முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. Upstream  என்றத் தலைப்பில் இவருடைய தேர்ந்தெடுத்த கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி வெளிவந்திருக்கிறது.  இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் கவிதைகள் அவருடைய Devotions The Selected Poems of Mary Oliver- ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை

 

வே. நி. சூர்யா

நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள பறக்கையைச் சேர்ந்தவர். இயந்திரவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் பயின்றவர். சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், புனைகதைகள், மொழிபெயர்ப்புகள் என பங்களித்துவருகிறார். கரப்பானியம் (2019) எனும் கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது.

3 COMMENTS

  1. கடைசி கவிதை அருமை சூர்யா. மற்ற கவிதைகளும் தான் ஆனால் எனக்கு அது ரொம்ப பிடித்திருக்கிறது.

  2. எல்லா கவிதைகளும் நன்றாக இருக்கின்றன. குறிப்பாக கடைசி ஒன்று.

  3. எல்லாக் கவிதைகளும் அருமை! ❤️ நன்றி தோழர் சூர்யா! மொழிபெயர்ப்பு பிரமாதம்.👏👏👏 வாழ்த்துகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.