ஓணி

1

சாலையெங்கும் படர்ந்திருந்த கொன்றை மலர்களை முடிந்தவரை கூட்டியாகிவிட்டது. அந்த நெடுஞ்சாலையின் வலது முடுக்கின் விளிம்பில் சேர்த்துக் குவிக்கப்பட்ட கொன்றைக் குவியலை இரு கைகளாலும் அள்ளியெடுத்து தடுப்போரம் அலர்ந்துநின்ற கொன்றை மரங்களுக்கடியில் விசிறிக் கொண்டிருந்தாள் முருகசோதி அக்கா. பெய்ய பெய்ய சலிக்காது நீர்வடியும் அவ்விளிம்பின் தடுப்போரம் இட்டிருந்த பொந்து அடைந்திருந்தது. அங்குக் கொன்றையின் மஞ்சள் குழைத்த கரும்புலம் மண்டிக்கிடந்தது.
அக்கா, போனவாட்டிபோல அரெகொறெயா சுத்தப்படுத்திட்டு போயிடாதே.. சரியா.. சூப்பர்வைசர்கிட்டே திட்டுவாங்க முடியாது… அங்க தேங்கி நிக்குற சேற சுத்தமா வாரி எடுக்கோனும்… அஜய அனுப்றே… அந்தப் பொந்துல கம்பியவிட்டு நிமிட்டி அடைப்பு எடுக்கச் சொல்லுங்க..
என்றவாறு கடந்துசென்ற மேற்பார்வையாளர் ராஜாவின் மோட்டார் சைக்களின் பின்சக்கரத்தில் ஒட்டியிருந்த ஒற்றைக் கொன்றை ஓங்கிச் சிரித்தவாறே சுழன்று மறைந்தது. மழைபெய்த வெக்கை நாசியேற எங்கும் குமைந்து அழுந்திய கொன்றையின் நாற்றம். லேசான கூர்தலுக்கே வெக்கையின் ஆவிபறக்கும் கருஞ்சாலை. அதன்மீதான முதல் பார்வையிலேயே மஞ்சடர்ந்த அவனின் உலகம் அவனைத் தொற்றிக் கொண்டது.
அண்ணா, இந்த வெக்கெ ரொம்ப வித்தியாசமா இருக்கில்லே.. இது மழைக்குப் பின்னெ வந்த வெக்கையா இல்லாம, வெக்கைக்கு நடுவுல வந்த மழைபோல இருக்கு…
ஆமா.. நேத்தே நெனச்செ… நைட்டு ரெண்டு மணிக்குமேலே, ரெண்டு ஃபேன போட்டும் தூங்க முடியலே. காத்தாட வெளியே வந்தாலும் பேருக்குக்கூட மரமாடலே.. இனி அக்கினி பொறக்கறத நெனச்சா பயம்மா இருக்கு தம்பி….
ஆமாண்ணா, நேத்து அங்கேயு அதே வெக்கெதா… அதெலெயும் கரெண்டு கட் வேற. ரைட்டிங் பேட எடுத்து கொழந்தெகளுக்கு விடிய விடிய விசிறியே ரெண்டு கையும் போச்சு.. எப்படா ஊருக்கு போலாண்ணு ஆயிடுச்சு.. நமக்காக இல்லாட்டியும் கொழந்தெகளுக்காகவாவது போகனும்போல…
என நீண்டது தேநீருக்கான அவர்களின் நடைபாதை விவரிப்புகள். இந்த வாடிக்கை விசாரிப்பை இன்று வெக்கை ஆட்கொண்டிருந்தது. மூன்று மணிநேர தொடர் வகுப்பிற்குப் பின்னதாக வற்றியிருந்த தொண்டைக்கு அவர்கள் குடித்த எலுமிச்சைத் தேநீர் அவ்வளவொன்றும் தோதாக இல்லை. வாங்கும்போதே கோப்பையின் அடிப்பகுதி தெரிகின்றதா என்று சோதித்தான் அவன். தெரியவில்லை. அக்கணமே அத்தேநீரின் தரத்தை முடிவுசெய்தான். நடு நாவினை பீடித்துக்கொண்ட அந்தத் தேநீரின் கசப்பு, ஐந்து ஆறு முறைக்குமேலே பயன்படுத்தப்பட்ட தேயிலைத் துகளின் நிலையைக் காட்டியது. ‘சார் உளுந்துவடை வேண்டாமா?’ என்று கேண்டீன் சரசு அக்கா கேட்க, மறுத்ததன் தவறை அப்போது உணர்ந்தான். அந்த வடையை வாங்கியிருந்தால் இந்தக் கசப்பிற்கு மாற்றாக அது ஓரளவிற்கு உதவியிருக்கும் என்று எண்ணினான்.
ஆளுங்க மாறுனதும் தரம் கெட்டுப்போச்சில்லே..
ச்சே.. டீய வாயில வைக்க முடியலே…
என்றும்போல் இல்லாமல் பகுதிக்குமேல் மீதம் வைத்த தேநீர்க் கோப்பைகள் கொன்றைக்கு அருகே அமைக்கப்பட்ட கல்திடலில் வைக்கப்பட்டன.
மழைநீரில் நைந்திருந்த கொன்றைகள் தரையெங்கும் எஞ்சிநிற்க, முற்றாக நனைந்த கொன்றை மரத்தின் சில மலர்ச்சரங்கள் சிரித்துக் கொண்டிருந்தன. காணாத கோப்பையின் விளிம்பு. காணச் சகியாத நைந்த கொன்றைகள். காணச் சிலிர்க்கும் பசுமையுடுத்திய சரக்கொன்றை, ஈச்சமாரில் வலிந்து சேற்றைக் கிளறி மண்ணுற்ற கொன்றைகளை விடாமல் சேர்த்துக்கொண்டிருந்த முருகசோதி அக்கா. எல்லாம் மஞ்சள் குழைக்க ஓயாமல் கீச்சிடும் அந்தக் கருஞ்சிட்டு மட்டும் அதுவாகவே தொடர்ந்தது.

2

சீகை மரங்கள் அடர்ந்திருந்த ‘மேலட்டி’ தோட்டமொரு சிறு மலைக்குன்று. ஆண்டில் எம்மாதமும் சொத சொதவென சேறு நிறைந்திருக்கும் அச்சோலைக்காடு இன்றும் அதன் தன்மையை இழந்திருக்கவில்லை. காட்டெருமைகளின் குளம்படிகள் ஆக்கிரமித்துள்ள அந்நிலமெங்கும் எப்பொழுதும் ஓராயிரம் சுனைகள். ஆழப்பதிந்த எருமைக் குளம்படியில் நிறைந்த மழைநீர் விளிம்பு காட்டாமலேயே எப்போதும் பசிந்திருந்தது. மழைப்புல வேளாண்மைக்குக் காலமெல்லாம் கம்பளம் விரித்த அப்புலமெங்கும் முளைக்க வைக்கப்பட்டிருந்த தேயிலை நாற்றுகளால் அவ்வளவு எளிதாக அப்புலத்தை ஆக்கிரமிக்க இயலவில்லை. குஞ்சைக் காக்க விரித்த ஒற்றைச் சிறகென வலப்புறத்தில் முளைத்து நிற்கும் பாசிபடர்ந்த அச்செம்பாறையின் நடுவே அடர்ந்திருக்கும் வாகை மரத்தைக் காணும்போதெல்லாம் தோன்றும் மலைப்பு மாதனுக்கு இன்றும் குறைந்தபாடில்லை. இந்தப் பாறையில் இது எப்படி முளைத்தது என்ற பிரமிப்பை அக்கணமும் கடத்திக்கொண்டிருந்தது அம்மரம். தன் துணைவி காங்கியோடு களவாடிய அவ்வாகை மரத்தின் நிழல் அவன் மனதில் செம்புலமாய் நீடியது.
மாத மாமா, தெரியாமல்கூட அந்த ஓணியில் இறங்கி விடாதே… அந்தச் சுண்டெ எருமைகளால் எங்கும் அட்டைப்பூச்சிகள். ஏற்கனவே பின்னங்கால் வெடிப்பின் வலியையே தாங்க முடியலே. இதிலெ இந்த அட்டைப்பூச்சியின் தொல்லைவேறு.. அப்பாடா…
என்று சொல்லிக்கடந்த போஜனின் முழங்கால்வரை அச்செம்புலம் பூசியிருந்த சேற்றுடன் ஆங்காங்கே அட்டையேறி கசிந்திருந்த செங்குருதி பாறையில் முளைத்திருந்த அவ்வாகை மரத்தின் வியப்பை ஏந்தியிருந்தது. வளர்ப்பு எருமைகள் கடந்து செல்லும் அந்த ஓணிப்பகுதி முழுக்க என்றும் அதன் குளம்படிகள் குழைந்த சகதி நிறைந்திருக்கும்.
ஏய் போஜா.. ஆலியின் உடம்பு பரவாயில்லையா?
ஆ.. ஆ… பரவாயில்லை மாமா… ஆனா, அந்தப் பாழாபோன மூச்சுதா அடிக்கடி வேலைய காட்டுது…
அடடே..
குணசேகரன் டாக்டரின் மருந்து கொஞ்சநேரந்தா கேக்குது… இருமி இருமி ராத்திரிய கழிக்கிறா… பாவம்… பாப்போ… நாளைக்கு மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகணும்..
என்றவாறு ஆலிக்கு மாலை மருந்தளிக்க நிற்காமல் விரைந்தான் அவன்.
ஏய் போஜா, அட்டைக்குக் கெரோசின் வேணும்னா நம்ம வீட்லே போய் வாங்கிக்கோ..
நேத்துதான் வாங்கியாந்தே..
சரி மாமா.. நான் பாத்துக்குறே…..
அந்த இடுக்கில் கால் வைத்துவிடக்கூடாது என்று கவனமாய் இருந்தும் ஏதோ மனசஞ்சலத்தில் தவறி காலை வைத்தான் மாதன். அச்சோ… என்ற முனகலோடு அவனது முழங்கால்வரை சேற்றில் இறங்கியது. தலையில் ஏந்தியிருந்த தோப்புராவை இறக்கி சேற்றில் வைத்தான். அதன்மேல் கையை ஊன்றி காலை வெளியில் இழுத்தான். சேறு சொட்ட சொட்ட வெளிவந்த இடது காலிற்கு அச்சேற்றின் ஈரம் சுகத்தைத் தந்தாலும் அது வறண்டபின் கால் கொள்ளும் இறுக்கமும், நெடுநாளைய சேறு விரலிடுக்கில் ஏற்படுத்தும் அழுங்கல் புண்ணும், அதன் தீராவலியும் அவன் எண்ணம் முழுக்க நிறைந்திருந்து குடைந்தது.

அடடே.. அவ்வளவு கவனித்தும் ஏமாந்து விட்டேனே.. அடச்சே…
சரிவிடு ஓணிக்கொரெ ஆற்றில் கழுவிக் கொள்ளலாம்…
என்று அவனுக்குள்ளான நிசப்த உரையாடல்கள் இதேபோல் பலமுறை படிந்த சேற்றினை முழம்போட்டுக் கொண்டிருந்தன.
அந்தச் சதுப்புப் பாதையின் வழியே நடக்காமல் சீகை மரச் சோலையின் வழியே மேலேறினான். அவ்வோணி வழியைவிட இது இரண்டு ஜாகம் சுத்து என்றாலும் வேறு வழியில்லை. காரமடையில் குடித்த கலங்கல் நீரினால் நெஞ்சில் கட்டிக்கொண்ட கபத்தின் ஒலி பெருக, ஆயுசு முட்ட அம்மேட்டில் ஏறினான். முகட்டின் விளிம்பில் விளிம்பாகி நின்ற நாவல் மரங்களில் மண்டியிருந்த மலர்களில் சில உச்சிக்காற்றில் உதிர்ந்து கொண்டிருந்தன.

3

ஒன்றாம் எண் கல்லூரிப் பேருந்திற்கு இன்னும் ஒன்பது நிமிடங்கள் இருந்தன. எனினும் அதன் ஓட்டுநர் ஜான் அண்ணாவைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும். 4.56 க்கே வண்டியை இயக்கி தயாராகிவிடுவார். நின்றிருக்கும் பேருந்தில் ஏதேனுமொன்று சற்று முன்னகருமா என்று அவரின் நோக்கம் புறப்பாட்டிலேயே நிலைக்குத்தியிருக்கும்.
அண்ணா, இதோ வந்துட்டிருக்கே… வண்டிய எடுத்திராதிங்க…
சரிங்க சார்.. சீக்கிரம் வாங்க….
மடிக்கணியை அணைக்கும்போது அது அப்டேட் கேட்டது. அடப்போடா.. என்றவாறு மடிகணியை அடைத்தான். அனிச்சையாய் அவனது கால்கள் பேருந்தை நோக்கி விரைந்தன.
சார் வாங்க… மழைக்கு முன்னாடி போயி சேர்ந்திடனும்…
ஆமாண்ணா.. இது மழைவெக்கைதான்…
அத்திப்பாளையம் ரூட் எடுத்திடலாம் சார்.. கொஞ்சம் குண்டுங்குழியுமா இருந்தாலும் சள்ளெ இல்லாம போயிடலாம்… மெயின் வழிய எடுத்த சொத சொதன்னு மேலே முழக்க தண்ணி நிக்கும். வேகமா போனாலும் சள்ளெ… மெதுவா போனாலும் சள்ளெ.. அந்த ரயில்வே கேட் வேறே.. சார் ஆயிரம் சொல்லுங்க என்னதா இருந்தாலும் நம்ம ஊரு ஊருதான்… எப்பேர்பட்ட மழை வந்தாலும் வடிஞ்சிரும்.. யாருக்கு சள்ளெயில்லெ….
என்ற ஜான் அண்ணனின் வெறுப்பின் நெடியேறிய வார்த்தைகள் முடியும் முன்னமே மீண்டும் அடைமழை பிடித்துக்கொண்டது. தான் வாடிக்கையாக அமரும் முன் இருக்கையின் ஓர ஜன்னலை இறுக மூடினான் அவன். டீ தாத்தாவிற்கு தந்ததுபோக மீதமுள்ள பணத்தினைப் பத்திரப்படுத்தினான். தோள் பையின் முன்பகுதியில் கையை விட்டு இருந்த சில்லறைகளைத் துழாவி ஒரு மனக்கணக்காக அதை எண்ணிப்பார்த்தான். மனதிலும் முகத்திலும் பகுதித் தெளிவும் நிறைவும் அவனுக்கு நிரம்பியிருந்தன.
கோத்தகிரிவரை வாடகை வண்டியில் செல்ல இதுபோதும். மீதமுள்ள பணத்திற்கு அங்கிருந்து ஆட்டோ எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை போதவில்லையென்றாலும் பள்ளி நண்பன் சபீரை அழைத்துச் சென்றுவிடலாம்… என்ற எண்ணச்சுழல் வலுவிழந்து கொண்டிருந்த மழைபோல மெல்ல மெல்ல அவனுக்குத் தெளிவினைத் தந்துகொண்டிருந்தது. மழைத்துளிகளை ஏந்திய கண்ணாடியின் வழியே கடந்து செல்லும் TN 43 எண் கொண்ட வாகனங்கள் அவனின் உற்சாகத்தை மேலும் கிளறின.
சார் ஊருக்கா..
ஆமாண்ணா.. நாளைக்கு சாயங்காலம் போலானு நெனெக்கிறே..
நானும்தா.. நாளைக்கு தற்காறி லோட் இருக்கு சார். எலெ காசு வேற வாங்குனு.. வாங்கிட்டு நாளெகழிச்சு கீழே எறங்குனு சார்… வண்டியிலதான் போறே… நீங்க வர்றீங்களா… காலேஜ் வண்டிய பார்க் பன்னிட்டு 8 மணி வாக்குலெ கிளம்பலானு இருக்கெ…
இல்லெ அண்ணா.. நா வீட்லே கூட்டிட்டுப் போணும். அந்த டைமிங் ஒத்துவராது. நீங்க பர்லியாறு வழியிலேதானே போவீங்க.. நா கோத்தகிரி போகணும்.. நீங்க போங்கணா.. நா வாடகெ வண்டி ஏற்பாடு பண்ணியிருக்கே…
டேய்.. சாவு கிறாக்கி.. என்ன வண்டி ஓட்டுறே.. நீ எல்லா எங்கடா வண்டியோட்ட கத்துகிட்டே.. இப்டியாட ரைட் ஏறி வருவே….. பிரேக் போடலேனா செத்துருப்படா.. நாயே.. ஏய்.. நிறுத்துடா… லைசன்ஸ் இருக்கா… ஓடற பாரு.. நாயே…
இவங்கெல்லா டிரைவரே இல்லெ சார்.. ஏதோ கொஞ்சநாள் டிரைவிங் கிளாஸ் போறது.. உடனே ஒரு லைசென்ஸ வாங்கிக்கறது.. ஒரு நேக்கும் தெரியாது.. மண்ணும் தெரியாது… நம்மளபோல கிளினரா இருந்து டிரைவர் ஆகியிருந்தாதான் இதெல்லா தெரியும்..
இல்லெ சார்… கொஞ்ச மிஸ் ஆயிருந்தா அவ்வளவுதான்.. நம்ம ஊருலே டிரைவிங் பழகி ஓட்டிட்டு இங்கே ஓட்டுரவங்கள பாத்தா ஆத்திரமா வருதுங்க. இவங்கள எல்லா ‘அண்ணிக்கொரெ’ ரோட்டுலெ ஓட்ட விட்டிருக்கனு.. அள்ளு விட்ரு.. அந்தக் குத்து எறக்கத்துலே அரெ கிலோ மீட்டர்கூட ஓட்ட முடியாது.. வண்டிய கவுத்துடுவாங்க…
சரி விடுங்கண்ணே.. ரைட்டுலே ஏறிப்போற வழக்கம் நம்மகிட்டே இல்லாத ஒண்ணு.. இதுலெ என்ன கொடுமெனா, இங்கிருந்து மேலே வர்றவங்க நம்ம ஏரியாவிலேயும் இததான் செய்றாங்க.. அதில்லாமே, கிளச்சிலிருந்து கால எடுக்காமே ஓட்றாங்க.. இருக்கிறதலேயே பெரிய கொடுமெ என்னான அவுங்க டி கிளச் செய்யிறதுலே சுத்தம்.. நேத்து எ ஃப்ரெண்டோட புதுக்காரு பேலட் முழுக்க காலி…
ஆமா சார்… கண்ணுல வெளக்கெண்ணெய விட்டுதா ஓட்டனு…
சார், நான் பாப்பேங்க… வார கடைசியிலே இங்கிருக்கிறவங்க எல்லா நம்ம ஊருலேத குமியுறாங்க… கொஞ்ச அதிகமா டிராபிக் இருக்கறமாதிரி தெரிஞ்ச கோத்தகிரி வழியிலேயே போயிடுவே…. எந்தச் சள்ளெயு இல்லாமே போயிடலா..
சரிதா அண்ணா… அண்ணா, ஒருவேளெ கோத்தகிரி வழிய போற ஐடியா இருந்தா எங்கள டிராப் பன்னிருங்களே.. யாருக்கோ கொடுக்குற வாடகெய உங்களுக்கு கொடுத்திடறே… என்ன சொல்லுறீங்க..
இல்லெ சார்… நான் எத்தன மணிக்கு போவேணு தெரியலெ. ஒரு சில டைம் பத்து மணிக்கு மேலேகூட ஆயிரு.. அம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல.. அவங்களுக்கு சமச்சு வச்சிட்டுதான் கிளம்புனும்… அதுவு, அவுங்கள சமாதானம் செஞ்சுட்டு கிளம்புறது அப்பப்பா.. பெரும்பாடு. நைட்லே வண்டியோட்ட அவங்க ஒத்துக்க மாட்டாங்க.. போராடி சம்மதிக்க வைக்கணு…
சார் வாடகைக்கு வண்டி பார்த்துட்டீங்களா?… இல்ல, வண்டி வேணுமா… நம்ம பிரண்ட்ஸ் இருக்காங்க.. படுக பசங்களே இருக்காங்க… அனுப்பவா…
இல்லெ அண்ணா… செல்றே… நம்ம ஏரியாவுலே சொல்லி வச்சிருக்கே.. ஒருவேளெ தேவேனா கேக்கறே…
டீச்சர்ஸ் காலனி நிறுத்தம் வந்திருந்தது. அவன் ஜான் அண்ணாவிடம் விடைபெற்று இறங்கினான். அவன் என்றும் ஊருக்குச் செல்லும் அண்ணிக்கொரெ பேருந்து அவனைக் கடந்து சென்றது. பாதையில் தேங்கியிருந்த நீரினை வாரி இறைக்காமல், அதே நேரத்தில், வேகம் குறையாது, வெகு இலாவகமாகக் கடந்து சென்ற அப்பேருந்தின் கடந்த பயணத்தின் நினைவுகள் அவனது நினைவிலாடியது.
வெறும் 50 ரூபாய் இருந்தால் போதும்.. ஊர் சேர்ந்துவிடலாம் என்று இருமிக்கொண்டே பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர் அன்று கூறிய வார்த்தை ஏனோ அதே ஒலியுடன் அவன் செவிகளில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. கோத்தகிரியை அடைந்ததும் நடத்துநர் டிப்போவிற்குச் சென்றுவரும்வரை ஐந்து நிமிடங்கள் அப்பேருந்து ‘குப்பட்டிக் கம்பெ’ நிறுத்தத்தில் நிற்கும்.
அண்ணிக்கொரெ போறவங்க, பஸ்டாண்ட் போறவங்க வண்டியிலேயே உக்காருங்க.. வண்டி கிளம்ப 5 நிமிசம் ஆகும்… என்று நடத்துநரும் அவரோடு துணையாக ஓட்டுநரும் ஒரே நேரத்தில் கூறியபோது பேருந்தில் பாதி ஒலித்துக் கொண்டிருந்த ராஜாவின் பாடலை விட்டுவிட முடியாமல் இறங்கி அப்பாடலை ஓர்ந்துகொண்டே மெதுவாகப் பேருந்தைக் கடந்ததும், நிச்சயம் வீட்டினை அடைந்ததும் இந்தப் பாடலைக் கேட்டாக வேண்டுமென்று ‘பூத்தது பூந்தோப்பு பாத்து பாத்து…’ என்று அதை முணுமுணுத்துக் கொண்டே மார்க்கெட் வழியில் கீழிறங்கியதும் அவனின் நினைவிலாடியது.
‘பூத்தது பூந்தோப்பு பாத்து பாத்து..’ என்ற பாடல் மீண்டும் அவனைத் தொற்றிக்கொள்ள வழியெங்கும் மழையில் உதிர்ந்துகிடந்த ஜக்கரண்டா மலர்களை முடிந்தளவிற்கு மிதிக்காமல் நடந்து சென்றான்.

4

மாதன் தன் தலைமீது சுமந்துவரும் தோப்புரப் பைக்குள் ரொட்டி வைத்திருப்பது தோட்டத்துக் கரிக்குருவிகளுக்கு நன்கு தெரியும். அது அவர்களுக்கிடையேயான 40 ஆண்டு வழக்கம். துணிப்பையிலிருந்து காகிதப்பைக்கும், இன்று நெகிழிப் பைக்கும், மீண்டும் சூழல் பாதுகாப்பு சார்ந்து காகிதப்பைக்கும் பரிமாணம் எடுத்த ரொட்டியை இன்றும் ‘அட்மிட்டு’ என்று அழைப்பது அவ்வூரில் அவன் ஒருவனாகத்தான் இருக்கக்கூடும். அவனின் தலைமுறைவரை ரொட்டியை அவ்வூரார் அவ்வாறுதான் அழைத்தனர். பெரும்பாலும் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரைக் காணச் செல்லும்போது வாங்கிச் செல்லும் பண்டமாகையால் இதற்கு அட்மிட்டு என்பது ஆகுபெயராகியிருந்தது. மம்மா.. ஒரு அட்மிட்டு தா… என்று ஐயன் பேக்கரி ரங்கனிடம் மாதன் கேட்கும்போதெல்லாம் தவறாமல் கொள்ளென்ற சிரிப்பு அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும்.
மாதனை வெகுதூரத்தில் காணும்போதே அக் கரிக்குருவிகள் அட்மிட்டிற்காக கீச்சிட ஆரம்பித்துவிடும். அவன் நெருங்கிவர ஓயாமல் அவைகளின் கீச்சொலி அதிகமாகும். இந்தக் கீச்சொலியே மாதனின் இந்தத் தோட்டத்தை தற்போது லீசுக்கு வாங்கியிருந்த மகாலிங்கனுக்கு மாதனின் வருகையை உணர்த்தும் மணியொலியாகும்.
அவ்வூருக்குப் புலம்பெயர்ந்த புதிதில் மகாலிங்கனுக்கு அடைக்கலம் தந்தது மாதன்தான். போதியளவிற்குத் தேயிலைத் தோட்டத்தில் பயிற்சியற்ற மகாலிங்கனுக்கு நாள் தவறாமல் வேலை கொடுத்தான். சில நேரங்களில் அவன் தேயிலைச்செடியின் குச்சித்தெரிய தேயிலைக் கொழுந்துகளைப் பறித்தபோதும் மற்ற தோட்டத்தினர்போல கடிந்து கொள்ளாமல் அவனை நன்கு பார்த்துக் கொண்டான். வேலையின்போது, தேநீர் வேளையில் அவர் கொண்டுசென்ற அட்மிட்டை பகுதிக்குமேல் மகாலிங்கனுக்குப் பிய்த்துக் கொடுத்துவிட்டு மீதியை உண்பது அவனின் வாடிக்கை. வளர்ற பைய.. நல்லா சாப்புடு.. சாப்புடு.. என்று தன்பாகத்தில் மீண்டுமொரு துண்டையும் அவனுக்குத் தருவான். என்றுமே வேலை முடிந்து செல்லும்போது முழு ரொட்டியொன்றையும் அவனுக்கு அளிக்கத் தவறுவதில்லை.
ஏய், மாதய்யா.. ஏன் இவ்வளவு நேரம்…
நா ஒரு மணிநேரமா காத்திருக்கே..
போகும்போது மட்டும் சரியான நேரத்துக்கு போயிடறே..
சரியான நேரத்துக்கு வர தெரியாதா..ஆ…
என்ற மகாலிங்கனின் வார்த்தைகள் மாதனுக்கு நகைப்பையே தந்தன. அது நன்றியின்மைக்கான நகைப்பு. பதிலேதும் பேசாமல் தோப்புராவை இறக்கி வைத்தான். அவனின் சேறுபடிந்த கால் மகாலிங்கனுக்குத் தாமதத்திற்கான காரணத்தை அறிவித்தது. மாதனைச் சூழ்ந்திருந்த கரிக்குருவிகள் அவன் இறக்கிவைத்த தோப்புராவின் மேலேறி நின்றன.
ஏய்.. பொறுங்கள்.. பொறுங்கள்… இவைகளோடு.. என்றவாறு கால் பகுதி ரொட்டியைப் பிய்த்து எல்லாக் குருவிகளுக்கும் கிடைக்கும்படி பரப்பி இடும் தன் மனைவி மணிக்கியின் நினைவாடியது அவனுக்கு. அந்த இடமெங்கும் அவளே நிறைந்திருந்தாள். சற்று நேரத்தில் அவள் இடுவதைவிடவும் கூடுதலான ரொட்டித் துண்டுகள் அக்குருவிகளின் தேவைக்குமீறி அந்நிலமெங்கும் பரவிக்கிடந்தன.
சற்றும் தாமதிக்காமல் ‘கெப்புஅறெ’ பாறைக்கு அருகிலுள்ள அஸ்ஸாம் செடிச் சாலிலிருந்து தேயிலைக் கொழுந்தினைப் பறிக்க தொடங்கினான் மாதன். மகாலிங்கனோ மாதன் கொண்டுவந்திருந்த சாக்கினைத் தரையில் விரித்துத் தூங்க ஆரம்பித்தான். வயிற்று நிறைவின் திளைப்பில் கீச்சிடும் கரிக்குருவிகளை தனக்கருகில் முன்னமே சேர்த்துவைத்திருந்த கற்களை எறிந்து துரத்திக்கொண்டே உறங்கினான் அவன். அவனின் மனம் முழுதும் மாதனின் மீதான கோபம் கனன்றது.
அந்தச் சாலின் பாதியைக் கடந்திருந்தபோது, மின்னலால் முளைத்திருந்த கூன்கள் மண்டிய நேரிமரக் குட்டைக்குச் சற்று மேலே சில நொடிகள் நின்று பார்த்தான் மாதன். அன்று அப்படித்தான் அவன் இடதுபுறமிருந்து பறித்துச் செல்ல, வலது புறத்திலிருந்து பறித்து வந்து கொண்டிருந்த மணிக்கி ‘ஒளவெ’ எனும் பேரொலியோடு மயங்கி விழுந்து, கீழே உருண்டு அரெப்பாறையின் விளிம்பில் நின்ற நினைவு அவனின் தலையைக் குடைந்தது. தலையைத் தூக்கி மடியில் கிடத்தியபோது நீடிய அவளின் மூர்ச்சைநிலை சற்றும் வீரியம் குறையாது அவனது ஆழ்மனதை உலுக்கியது. விரைந்து ஓணிகொரெ ஆற்றில் நனைத்துவந்த அவளின் தலையில் சுற்றிய மண்டெப்பட்டினை முகத்தில் பிழிந்தும் பயனின்றி தோளில் சுமந்துகொண்டு மருத்துவமனைக்குக் கொண்டோடிய அக்கணத்தின் கனம் கனத்தது.
ஐயா, சாச்சுவேசன் கம்மியா இருக்கு… ஆக்ஸிஜன் லெவல் ரெம்ப குறைவா இருக்கு.. 70 க்கு கீழேபோனா ஆபத்து…
அம்மாவுக்கு கொஞ்ச நாளாவே இந்தப் பிரச்சனெ இருந்திருக்கு போல.. அதோட அவங்க அடுப்பெரிச்சு சமைச்சிருப்பாங்கானு நெனெக்குற… அந்தப் புகையின் பாதிப்பாலே மூச்சுத்திணறல் அதிகரிச்சுருக்கு…
இப்போ கொடுத்திருக்கும் மருந்து ஓரளவுதான் கேட்கும். மூக்கிலே வச்சிருக்கற ஆக்ஸிஜன எடுக்கக்கூடாது. இந்தச் சிலிண்டர் 4 மணிநேரம் வரும். இது இல்லாமே இவங்களாலே ரொம்ப நேரம் இருக்கமுடியாதுங்க ஐயா… மூச்சுத் திணறும்… நுரையீரல் முழுக்க சளிவேற கட்டியிருக்கு…
ஐயா, இதுக்கு ஒரே வழி கொஞ்சநாளிக்கு இவங்கள பிளைன்ஸ்கு கூட்டிட்டுபோயி வைக்கிறதுதா… அங்கே போன இந்த சேச்சுவேசன் பிரச்சினை இருக்காதுங்க ஐயா… அதுதான் நல்லது.
என்று குணசேகரன் டாக்டர் கூறியபோது கண்ணீர்மல்க நெபுலேசரை தானே அகற்றி, வேறெ வழியே இல்லையா தம்பி.. என்று மூச்சுத்திணற அவள் கேட்ட வார்த்தைகள் மாதனின் காதுகளில் இன்னும் அறைந்து கொண்டிருந்தன.
எதற்கும் நஞ்சுண்டன்கிட்டே ஒருமுறை காட்டிவிடலாம்… அவர்தான் இதுக்கு சரியான வழி சொல்லுவாரு… மேல்கேரி மிச்சிக்கு அடிக்கடி இருந்த மூச்சுத் திணறலை ஒரே ஊசியிலே சரியாக்கிட்டாரு..
என்ற அவளின் அங்கலாய்ப்பும் பலிக்காமல்போனது. நஞ்சுண்டன் மருத்துவரும் ஏற்கனவே குணசேகரன் கூறிய அதே தீர்வையே கூறினார். அவளின் கண்ணீர் மருத்துவமனையின் தரையெங்கும் சிந்தியது.
தோட்டத்தில் மணிக்கி சரிந்து விழுந்த இடத்தில் சல்லித்துத் தேடியும் அவள் அணிந்திருந்த வெள்ளி செருப்பிணிகெ அணியும், தங்கக் கம்மலும் கிடைக்கவில்லை. ஒருவேளை அவளைத் தூக்கிச்சென்றபோது விழுந்திருக்கக்கூடுமோ? என்று வழியெங்கும் பலமுறைத் தேடியும் பயனில்லை. அது கிடைத்திருந்தால் அடுத்தகட்ட செயல்பாட்டிற்கு உதவியிருக்கும். வேறு வழியில்லை. இந்தத் தோட்டத்தைத்தான் லீசுக்குத் தந்தாக வேண்டுமென்ற நிலை. மரலகம்பை ஊருக்கு மணம்முடித்துக் கொடுத்த தன் இளைய மகள் தன் நகையைக் கழற்றித் தந்தபோது ‘இல்லை.. இல்லை.. பணம் பிரட்டியாகிவிட்டது.’ என்றான். யாருக்கும் தொல்லைதர எண்ணாத அவனின் குணம் என்றும்போல அவனை அழுகையாலேயே அணைத்தது. இதுவரை யாரிடமும் உதவிக்குக் கையேந்தாத அவனிடம் எதிர்பார்க்காமல் மகாலிங்கன் அத்தோட்டத்தை லீசுக்குக் கேட்டபோது அவன் மலைத்தான். கடந்தமாதம் 500 ரூபாய் முன்பணம் கேட்டுப்பெற்றவனின் கரத்திலிருந்த 50,000 ரூபாயை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டான். கத்தையான அந்த நோட்டுகள் முழுதும் மணிக்கியின் ஆபரணங்கள் மின்னிக்கொண்டிருந்தன.
கண்களில் நீர்பனிப்ப மீண்டுமொருமுறை மணிக்கி விழுந்த அந்த இடத்தை நோட்டமிட்டவன் விலைபோன பின்பும் தன் நிலத்தின் கலையைக் காத்துக் கொண்டிருந்தான். மணிக்கியின் நோய்க்காக்க குடிவைத்த வெப்ப பிரதேசமான காரமடையிலிருந்து திரும்பும்போதெல்லாம் ‘எதகெ…அந்தப் பையன் தோட்டத்தைக் கெடுத்துவிடுவான் ஜாக்கிரதை..’ எனும் மணிக்கியின் வார்த்தைகளை நொடிக்குநொடி மீட்கொணர்ந்து கொண்டிருந்தன அவளின் நினைவுகள்.
தேநீர் வேளையை எதிர்நோக்கிக் காத்திருந்தன கரிக்குருவிகள். மற்ற தோட்டங்களில் கொடுப்பதைவிட 30 ரூபாய் குறைவாகவே மாதனின் கூலியிருந்தது. எனினும் தனக்குச் சோறிட்ட தோட்டத்தின்மீது கொண்ட அன்பால் அங்கேயே கூலிக்குத் தொடரும் நன்றிக்கு வாழும் ஜீவனான அவன் அவ்வூராருக்குப் பைத்தியக்காரனாகவே தொடர்ந்தான். ஏன், மகாலிங்கனுக்குக்கூடதான்.
நாளை ஆறு மணி பேருந்திற்கு கீழே கிளம்பும் அவசரமிருந்தும் தன் தலையின்மீது இலை மூட்டையைச் சுமந்துகொண்டே செடிமீது விழுந்திருந்த சைபர் மரத்தின் இலைகளை அகற்றிக் கொண்டிருந்தான் மாதன். அடுத்தவாரத்துக் கூலியில் பிடித்துக்கொள்ளச் சொல்லி கேட்ட 500 ரூபாய் முன்பணத்திற்கு முகம்சுழித்துக்கொண்டே பதிலின்றி நகர்ந்தான் மகாலிங்கன். அப்போதும் கரிக்குருவிகள் அவனைச் சூழ்ந்து கீச்சிட்டுக் கொண்டிருந்தன.

5

அண்ணா, வண்டிக்கு சொல்லியாச்சா…
சார், பேசுனே… அவர் டிரைவிங்லே இருந்தாரு… அப்புறமா கூப்புடுறேனு சொன்னாரு.. இப்போ பேசிடறேன் சார்…
பரவாயில்லே அண்ணா…
அண்ணா, வாடகெ மட்டும் எவ்வளவுனு கேட்டுச் சொல்லுங்க…. கோத்தகிரிக்கு டிராப் பண்ணா போதும்….
சரிங்க சார்.. சொல்லிடறேன்….
சார், தக்காளி கால்கிலோ போதுமா?
போதுண்ணே… ஊர்லே பசங்கள விட்டுட்டு வர்றே… வந்துட்டு பார்த்துக்கலா… வாங்கிவச்ச வீணாகுது… அப்படியே கால் லிட்டர் எண்ணெ கொடுங்க..
சார்… இப்பல்லா கால் லிட்டர் எண்ணெ வர்றதில்லெ…
அப்படியா.. சரிண்ணே.. அப்போ 100 கிராம் தேங்கா எண்ணெ கொடுத்துருங்க..
அவன் கணித்து வைத்ததை போலவே 100 ரூபாய்க்கு உள்ளாகவே செலவுகளைப் பார்த்துக் கொண்டான். மனைவி சொன்ன பொருட்களுள் மிகவும் அத்தியாவசியமானதை மட்டும் வாங்கினான்.
அண்ணே, மறந்துட்டே.. தேசைமாவு, 10 ரூபா மில்க் பிக்கிஸ்….
வேறே சார்…
அவ்வளவுதான்…
எவ்வளவு அண்ணா…
143 ரூபா சார்…
பணப்பையில் இருந்த 200 ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தால் ஊருக்குச் செல்வதற்கு அவன் கணித்திருந்த வாடகைக்கு 100 ரூபாய் போதாமல் போகும். இந்த 200 ரூபாயைக் கொடுத்து 100 ரூபாயை மட்டும் எடுத்துவிட்டு மீதியைக் கொடுக்க கேட்பதும் முறையாகாது. தன்னைத்தவிர வீட்டிலுள்ள அனைவருக்கும் பயணத்தில் வாந்தி எடுக்கும் பழக்கம் உண்டு. அப்போதெல்லாம் ‘கொஞ்சப்பனைப்’ பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலிருக்கும் தேநீர்க் கடையில் தேநீர் குடித்துவிட்டுச் செல்வது வழக்கம். ஒருவேளை அவ்வாறு நேரின் தேநீருக்குப் பணம் என்ன செய்வது… அந்த டீக்கடைத் தாத்தா கட்சி ரீதியாக பெரியப்பாவின் அபிமானி என்றாலும் அவரிடம் கடன் சொல்வது முறையா… எனும் எண்ண விவாதங்கள். சரி, வேண்டுமென்றால் வீட்டிலேயே தேநீர் தயாரித்து எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்..
இரண்டு எலுமிச்சம்பழம் அண்ணா…
இப்ப மொத்த எவ்வளவு …
163 ஆச்சு சார்…
திறன்பேசியை எடுத்தான். ஜீபே யில் இருக்கும் இருப்புத் தொகையைப் பார்த்தான். 32 ரூபாய் இருந்தது. இந்த 32 ரூபாயை ஜிபே வழியாக அனுப்பிவிட்டு மீதித் தொகையைத் தரலாம் என்றால் வாகன வாடகைக்கான 1200 ரூபாய்க்கு பத்தாமல் போகுமே. இதுவரை இந்தக் கடையில் கடன் கூறியது கிடையாது. அதுவும் அவனை உறுத்தியது. பொதுவாகக் கடன் கூறுவது அவனது பழக்கமுமல்ல. அவனது யோசனை நீடித்தது. தன் தோள்பையில் உள்ள சில்லறைகளைத் துழாவி மீண்டுமொருமுறை மானசீகமாக எண்ணினான். ஒரு 20 ரூபாய் தேறலாம். தன் திறன்பேசியை நோண்டிக்கொண்டே யோசித்து நின்றான். திறன்பேசியில் பேசிக்கொண்டிருந்த அண்ணாச்சியைப் பார்த்தான். அவர் வண்டி ஓட்டுநரிடம் பேசிக்கொண்டிருப்பது அவனுக்குப் புரிந்தது. தெரிந்தவர்கள் எல்லோரிடமும் கேட்டாகிவிட்டது. எல்லோரின் நிலையும் இதுதான். ஊருக்குவர பணம் இருக்கிறதா? இல்லை, நான் போடவா? எனக் கேட்ட தந்தைக்கு அவரின் சிரமம் கருதி இருக்கிறது என்று சொல்லியாகிவிட்டது. இதற்குமேல் அவரிடம் கேட்டாலும் கோத்தகிரிக்கு வந்து அனுப்பும் சூழல் இருக்காது. அன்றாடம் பணம்பெற்று அளிக்கும் பல்லவன் வங்கியின் அனீசும் பணிக்குச் சென்றிருப்பான். சரி.. தேவைப்பட்டால் நாளை பார்த்துக்கொள்ளலாம்.
சார், டிரைவர் தான்… ஆம்னி வேன் மட்டும்தான் இருக்காம்.. மற்ற வண்டியெல்லாம் ஆர்டர் போயிருக்காம். மத்த வண்டியெல்லா 1700 ரூபாய்க்கு கொறச்சல இல்லையாம்… ஆம்னி வண்டியானதாலே நமக்காக 1400 க்கு வர்றேங்கராரு. என்ன சொல்ல… உங்கள கேட்டுட்டு கூப்புடுறேனு சொல்லிருக்கே… என்ன பண்ணலாம் சார்….
அவனது யோசனை மேலும் கூடியது. இருப்பதே அவ்வளவு பணம்தான். இப்போது வாங்கிய பொருளுக்குவேறு பணம் தரவேண்டுமே.
சார், சீக்கிரம் சொல்லுங்க… வேறே ஒருத்தரும் கேட்டிருக்காங்க போல. அது 2000 ரூபாய் வாடகையாம். நமக்காகத்தான் அங்கிட்டு பதில் சொல்லாம காத்திருக்காப்லெ.. டிலே பன்றது நல்லாயில்லெ சார்…
சரி அண்ணா. எனக்கொரு உதவி. இப்ப நா வாங்குன செலவுக்கு ஊருலிருந்து வந்ததும் பணம் தந்திரட்டா?..
ஓகே சார்…
அப்ப சரிண்ணா…. அவருக்கு ஓகே சொல்லிடுங்க… நாளிக்கு சரியா 6 மணிக்கு ரெடியா வரச்சொல்லுங்க. அப்படியே அவருடைய போன் நம்பரையும் அனுப்புங்க. காலேஜிலிருந்து வந்தவுடனேயே கிளம்பறமாதிரி இருக்கும்…
சரிங்க சார்….
சரிணே.. நா வர்றே…
சரிங்க சார்…
அவனது மனது லேசானது. கண்களில் சற்று தெளிவு பிறந்திருந்தது. திரும்ப வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் எனும் தெம்பு வந்தது.
காலையில் கல்லூரிப் பேருந்துக்குக் கிளம்பி வந்திருந்தபோது ஒரு கூட்டத்தினர் தேன் விற்றுக்கொண்டிருந்த இடத்தை அவன் கவனமாகக் கடந்தான். தேன் வாங்க வருபவர்களை வைத்துக்கொண்டே அரிந்துவந்த தேன்கூட்டைப் பிழிந்து தேன் எடுத்துக் கொடுத்தனர் அந்தக் கூட்டத்தினர். அவர்கள் அமர்வதற்காக இட்டிருந்த கல்லைக்கூட ஒதுக்காமல் சென்றிருந்தனர். ஆங்காங்கே ரோட்டில் இறந்துபோன தேனீக்களும், பிழிந்த தேன்கூட்டின் சக்கைகளும் பரவிக் கிடந்தன. அதில் சில தேனீக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக இறுதி ரீங்காரத்தை எழுப்பிக் கொண்டிருந்தன. அந்த இடத்தை மொய்த்திருந்த காக்கைகள்வேறு கண்கொத்திப் பாம்புகளாய் இதுவரை தாம் உண்டதுபோக மீதம் வைத்திருந்த தேனீக்களுக்காய் காத்திருந்தன. அவனது நகர்வை எதிர்பார்த்திருந்தன. அவன் அங்கிருந்து நகர தாமதித்தான். பிறழ முயன்ற தேனீயொன்று தன் சிறகை அகலநீட்டி பறக்க முயன்றது. சிறகிருந்தும் பிடுங்கப்பட்ட பறத்தல்தான் எவ்வளவு கொடுமையானது. சற்றுத் தொலைவில் காக்கைகளின் சிறகுகளும்கூட விடாமல் புடைத்திருந்தன.
மகனுக்கு வாங்கிய பிஸ்கட்டை உடைத்தான் அவன். அந்த இடத்திலிருந்து சற்றுத்தள்ளி பரப்பி வீசி எறிந்தான். கரைந்து கொண்டே அக் காக்கைகள் அந்தப் பிஸ்கட்டுகளைக் கொத்தின. எனினும் சில காக்கைகளின் பார்வை பறக்கத்துடிக்கும் தேனீக்களின் மேலேயே நிலைத்திருந்தன. அவன் நகர்ந்தான். மனது கேட்கவில்லை. நகரத்தான் வேண்டும்.
திடீரென்று பெய்த சாரல்மழை அவனுக்குச் சற்று நிம்மதியை அளித்தது. எஸ்.எம்.பி வீட்டின் ஜெனரேட்டர் சப்தம். எங்கோ தூரத்தில் இடிமுழக்கம். மின்துண்டிப்பிற்கு அவர்களுக்கு காரணம் கிடைத்தாகிவிட்டது. ஏன், தூக்கத் தொலைப்பிற்கும் கூடதான். யாரோ நிம்மதியாய் உறங்க ஓயாமல் ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரின் பேரிரைச்சலுக்கு ஒட்டியிருந்த தன்வீட்டில் உறக்கம் தொலைத்த இரவுகளை எண்ணிப்பார்த்தான். அறிவிக்கப்படாத மின்வெட்டுக்குள் அறிவிக்க முடியாத அறிவிப்புகள்தான் பல பல.
அப்பாடா.. ஏங்க இவ்வளவு நேரம்…
முன் அறையின் நடுத்தரையில் வெறும்உடலோடு படுத்துக் கிடந்தான் மூத்தமகன்.
காலேல போன கரண்ட்.. இன்னும் வரலே…
நாளைய புறப்பாட்டிற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த பைகளை ஒதுக்கி வைத்து உள்ளே நுழைந்தான் அவன்.
சிட்டா… அப்பா வந்துட்டாருடா… உனக்கொரு ஜோலி வங்கிவந்திருக்கரு… சீக்கிரம எழுந்திரு….
என்று விளித்தாளவள். என்றும் அவன் வந்த மறுகணமே மிட்டாய்க்கு விரையும் அவன் அப்படியே படுத்துக் கிடந்தான். தன் கைகளை அகல விரித்தான். கையில் கோல் மிட்டாயோடு ‘டேய் சிட்டா’ என்றவாறு அவன் அருகில் அமர்ந்தான் அவன். மகனோ, திரும்பி அவனது கால்களை தன் இரு கரங்களாலும் பற்றிக்கொண்டான்.
அப்பா, ஒரே சூடு…
காதுகிட்டே கொசுவேற கொய்ங்கென சுத்துது…
தூக்கமே வரலேப்பா…
நாம எப்பப்பா ஊருக்கு போறோ…
அவனது தலையைக் கோதியபடி,
நாளைக்கு போயிடலாடா…
ரெண்டு கம்பளி போத்திக்கிட்டு ஜாலியா தூங்கலாம் சரியா…
தன் முகத்தைத் தரையில் அழுத்தி மீண்டும் கிடந்தான் அவன். அரிதினும் அரிதாக அந்த வீட்டில் பிரிக்கப்படாத மிட்டாய் எஞ்சியது. வெளியே மழை வலுத்திருந்தது. மழையூடிவந்த காற்று அவ்வப்போது குளுமையை வார்த்தது. எனினும் மழைபெய்த வெக்கை புழுக்கத்தைக் கூட்ட வாங்கிவந்த மணித்தக்காளியின் மலர்கள் தலை கவிழ்ந்திருந்தன.

6

ஓணிக்கொரெ ஆடாவில் முடிந்தளவிற்குப் பறித்துக்கொண்ட மரத்தக்காளியைச் செலவுப்பையின் மேலாக நசுங்கிவிடாமல் பத்திரமாக வைத்தான் மாதன். இந்தவாரம் தக்காளி வாங்கவேண்டிய அவசியமில்லை என்ற சிறுமகிழ்ச்சி அவனின் மனதில் தொற்றியிருந்தது. விலையில்லா அரிசி, மண்ணெண்ணெய் போன்ற வாங்கிவந்த செலவுகளையெல்லாம் பக்குவமாகக் கட்டினான். அரசுப்பேருந்தில் மண்ணெண்ணெய்யைக் கொண்டுசெல்ல அனுமதி கிடையாது. ஆனால், கோத்தகிரியிலிருந்து நேரடியாகப் பழனிக்குச் செல்லும் பிற்பகல் 3.30 மணி பேருந்து நடத்துநர் கோவிந்தனுக்கும் அவனுக்கும் ஒரு நெளிவு சுழிவு இருந்தது. மண்ணெண்ணெய்யின் வாசம் மட்டும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டும் அவர்களுக்கிடையேயான ஒப்பந்தம். இதற்கெனவே தம் நிலத்தில் விளைந்திருந்த நன்கு வாசம்தரும் ஹட்டி கொத்தமல்லியை அந்தப் பை முழுதும் பரப்பி எடுத்துச்செல்வது அவனின் வழக்கம். அப்பேருந்தில் 50 ரூபாய் அளித்துப் பெறும் பயணச்சீட்டிற்கு எப்போதும் அவன் சில்லறை வாங்குவதில்லை. இந்த அன்பின் ஒப்பந்தம் நீண்டுகொண்டிருந்தது.
மாதனின் அலைபேசியில் உள்ள சொற்ப தொடர்பு எண்களுள் கோவிந்தனின் எண்ணும் ஒன்று. கோவிந்தனின் அப்பா போத்தன் பெரம்பலூரிலிருந்து நீலகிரிக்கு வந்த புதிதில் அவர்களுக்கான ஒருவேளைச் சோறு மாதனின் இல்லத்தில்தான். போத்தன் உண்டதுபோக அவனின் வீட்டாருக்குத் தூக்குக் கிண்ணியில் இட்டளித்த களி உருண்டையின் நன்றி கோவிந்தனுக்கு எஞ்சி இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தன் வாங்கிய இந்த நடத்துநர் வேலைக்குக் கொடுத்த கையூட்டில் மணிக்கியின் முன்கை வளையை அடமானம் வைத்தளித்த தொகையின் பங்கிருந்தது. கோவிந்தன் நாளைய சிப்டிற்கு வருவானா என்பதை அவனுக்கு அழைத்து உறுதிப்படுத்தினான் மாதன். ‘ஆ… சரி’ என்ற இரண்டு வார்த்தையோடு அந்த வாடிக்கை உரையாடல் நிறைவுற்றது.
அடுத்தநாள் எல்லாமும் தயாராக இருந்தது. மணிக்கிக்கு மருந்துவாங்க குறையும் 500 ரூபாய்க்கு மகாலிங்கனை எதிர்பார்த்து தோட்டத்தில் காத்திருந்தான் அவன். காரமடைக்குச் செல்லும் போதெல்லாம் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு வந்துவிடுவான் மாதன். சரியாக ஒரு மணிக்குக் கிளம்பிவிடுவான். எனினும் அன்று அவனுக்கு அரைநாள் கூலிதான். அன்று அவன் வாங்கிவந்த ரொட்டிகள் முழுதும் கரிக்குருவிகளுக்கே வாய்த்திருக்கும். அதன் கீச்சொலிகளுக்குக் குறைச்சலிருக்காது.
மாதன் கேட்டிருந்த முன் பணத்தைத் தர, வேண்டுமென்றே அன்று மகாலிங்கன் தோட்டத்திற்கு வரவில்லை. அதுபோனால் போகட்டுமென்றால் அன்றைய கூலியும் அவனுக்கு இல்லை. அவனிடம் பணம் கேட்டதையெண்ணி மாதனின் சுயம் அவனைச் சுட்டது. ‘ஏய், சுவ்வெ கூசு’ என்று முனங்கியபடி பறித்திருந்த இலை மூட்டைகளை அவனுக்குச் சிரமம் தர மனமின்றி ஏந்திச்சென்று இலை வண்டிவரும் இடத்திற்கு அருகிலுள்ள கவ்வாத்து கால்வாயில் வைத்து சாக்கால் மூடினான். ரோட்டின் மேற்புறம் புதரில் மறைந்திருந்து மாதனின் புறப்பாட்டிற்காக காத்திருந்தான் மகாலிங்கன்.
எல்லோரும் தோட்டத்திற்குச் சென்றிருப்பார்களே. யாரிடம் சென்று பணத்தைச் சமாளிப்பது என்ற சிந்தனையோடு நடையை விரைவுபடுத்தினான் மாதன். இதற்குமுன்பு மூச்சுத் திணறலிற்கான அம்மருந்தினை வாங்க இயலாமல் போனதுண்டு. அவ்வேளையில் கனமான பருத்தித் துணியை நெருப்பில் சூடேற்றி மணிக்கியின் மார்பில் ஒற்றடம்தர அது கொஞ்சம் பலன்தரும். மறக்காமல் கடந்தவாரம் கிழிந்துபோன போர்வைத் துணியை எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் அவனின் மனம் முழுதும் கனன்றது.
சீகைமேடு வழியில் இறங்க நேரமின்றி அட்டைகள் நிறைந்த ஓணியில் துணிந்து இறங்கி நடந்தான். காலைமுதல் அடித்த வெயிலில் நிலத்தின் சகதி சற்று புலர்ந்திருந்தது. கீழே உதிர்ந்திருந்த பிக்கெ பழங்களைப் பொறுக்குவதற்குக்கூட நேரமின்றி கடந்து சென்றான். அவன் எதிர்பார்த்ததைப் போலவே எதிர்பார்த்தவர்கள் யாருமில்லை. என்றும் எஞ்சி நிற்கும் பார்ப்போம் என்ற நம்பிக்கையோடு நகர்ந்தான். பழனி பேருந்து புறப்பட்டது.

7

இறுதிநேர வகுப்பினை எடுக்கும்போதே அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவன் எதிர்பார்த்ததைப்போலவே நாளை விடுமுறை. இவ்வாரம் சனிக்கிழமை கல்லூரி இருக்குமென்று அனைவராலும் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அதுபோல் இல்லை. ஊரிற்குச் செல்லும் ஆர்வம் அவனை மேன்மேலும் ஊக்கமூட்டியது. என்றையும்போலன்றி ஐந்து நிமிடத்திற்கு முன்னமே கல்லூரிப் பேருந்தில் ஏறினான். மஞ்சடர்ந்த அவன் உலகம் அவனை ஆட்கொண்டிருந்தது. என்றும் தன் நிறுத்தத்தில் இறங்கும் அனைவரும் இறங்கியபின்பே இறங்குபவன் அன்று முதல் ஆளாக இறங்கினான்.
நேரம் 5.45 அண்ணாச்சியைக் கண்டு இப்போதே வண்டியை வரச்சொன்னால்தான் சரி. வீட்டினை அடைவதற்குள் வண்டி வந்துவிடும். துணிமணிகளை மாற்றிக் குளித்துவிட்டுச் செல்ல நேரமில்லை. 6.15 மணியளவில் கிளம்பினால்தான் 8 மணிக்குள் வீடடைய இயலும். ஒருவேளை வாந்தி உபாதையினால் இடையில் வாகனத்தை நிறுத்த நேரலாம். பொழுது சாய்ந்தபின் ஊர்த்திடலின்வழி குழந்தைகளை அழைத்து வருவது மரபல்ல. வெளவாலின பறவைகள் குழந்தையைத் தாண்டிச் செல்வதாகாது. வாந்தி, காய்ச்சல், உடலிலிருந்து துர்நாற்றம் எழுதல் போன்ற ஒவ்வாமைகள் நேரும். தவிர்க்கவியலாதபோது குழந்தையைக் குடைபிடித்து அழைத்துச்செல்ல வேண்டும். இதற்கெனவே துறையில் வைத்திருந்த குடையினைப் பையில் எடுத்து வைத்திருந்தான். அதை மீண்டுமொருமுறை சரிபார்த்தான்.
எதையெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணிப் பார்த்தான். பேருந்தின் எச்சரிக்கையொலி. ஏற்கனவே ஒதுங்கி நடந்தவன் மேலும் ஒதுங்கிக் கொண்டான். அவனருகே வந்துநின்றது பழனிப்பேருந்து. வேகமாக இறங்கி வந்தான் மாதன்.
ஏ.. ஜோகி… கடவுளைக் கண்டதைப்போல..
எனக்கு அவசரமாக 500 ரூபாய் பணம் வேணும்…
பாட்டிக்கு மருந்து வாங்கணும்…
என்று தன் உள்ளங்கைகளைப் பிடித்துக்கொண்டு அவன் கேட்ட மறுகணமே,
அதுக்கென்ன ஐயா. இந்தாங்க.. 500 போதுமா… என்று சில நாட்களாகப் பொத்திவைத்த 500 ரூபாய் தாளோடு 200 ரூபாயைச் சேர்த்தெடுத்து நீட்டினான்.
ஏய்… 500 போதும்..
என்று அவன் மறுக்க, அந்த நோட்டுகளைச் சுருட்டி மாதனின் சட்டைப் பாக்கெட்டிற்குள் திணித்தான்..
சொன்னால் நீ கேட்கமாட்டாய்… ஆ….
பேருந்தின் எச்சரிக்கை ஒலி…
எனக்காக பஸ்சு நிக்குது…. நல்லது.. உனக்கு இத அடுத்தவாரோ தந்திடுரே.. நான் வரவா…
என்றவன் அவன் கையில் கொண்டுவந்திருந்த பையிலிருந்து பிக்கெ பழங்களை அள்ளி அள்ளி ஜோகியின் கையில் நிரப்பினான். திரும்ப ஓடிச்சென்று பேருந்தில் ஏறிக்கொண்டான். மீண்டும் எச்சரிக்கையொலியோடு பழனிபேருந்து கடந்து சென்றது. மாதனோடு கோவிந்தனும் கையசைக்க விடைபெற்றனர்.
ஊர்த் திடலிலுள்ள பிக்கெ மரம் காய்க்கும் காலத்தில் அதிகாலையில் முதல் ஆளாக மரம் உதிர்த்திருக்கும் பழங்களைப் பொறுக்கி வருவது மாதனின் வாடிக்கை. அதுமட்டுமின்றி பிக்கெ பழங்களை எங்கு கண்டாலும் அதன் அருமை கருதி அங்குச் சிந்தியுள்ள பழங்களைப் பொறுக்காமல் அவன் கடப்பதில்லை. அதிகாலையில் விழிக்கும் பழக்கமும், தம் முன்னோர் திடலில் உள்ள மரத்தை வழிப்படும் தம் ஆதிவழிபாட்டு மரபும் அவனுக்கு இதை வழக்கமாக்கியிருந்தது.
கட்டியுள்ள தன் முண்டினை மேலே மடக்கிச் சுற்றி அதில் சேகரித்திருந்த பழங்களோடு அவன் முதலில் ஜோகியின் வீட்டிற்குச் செல்வான். உறங்கிக் கொண்டிருக்கும் ஜோகியை எழுப்பி அவனுக்குக் கொஞ்சம் பழங்களைத் தந்துவிட்டே தம் வீட்டிற்குச் செல்வது அவரின் வழக்கம். சில நாட்களில் எவ்வளவு எழுப்பியும் ஜோகி எழுந்திருக்காதபோது தவறாமல் அவனது பங்கு அவனின் தலைமாட்டில் கிடக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு மாதன் பேருந்தில் தவறவிட்ட 500 ரூபாய் பணத்தைக் கொண்டுவந்து அவனிடம் ஜோகி தந்ததுமுதல் உண்டான இந்த அன்பு இன்றும் தொடர்ந்தது. அதிகாலையில் பல் விளக்காமல் பிக்கெ பழத்தை உண்ணும் ஜோகியைவிட அதைத் தந்த மாதனையே ஜோகியின் தாய் அதிகமாகத் திட்டுவதுண்டு.
அன்றும் ஜெனரேட்டரின் இரைச்சல். அதே நடு அறையில் மகன் அம்மணமாய் உறங்கினான்.
இரவெல்லாம் உறக்கம் கொள்ளாது பின்னிரவில் சற்று அயர்ந்துபோனவன் ஏதோ சத்தம் கேட்டு எழுந்தான். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் மனைவி உணவுத் தயாரித்துக் கொண்டிருந்தாள். அடுமனையின் உள்ளே நுழைந்தான். எடுத்து வைத்திருந்த வெள்ளைப் பூண்டை உரிக்கத் துவங்கினான்.
இன்னிக்கு ஒரு நாள் லீவு போட்டால் என்னவாம்….
கொழந்தெ எவ்வளவு ஆசெப்பட்டா தெரியுமா?
என்னாலேயே இந்த வெக்கெய தாங்க முடியலே…
பாவம்.. கொழந்தைக எப்படித் தாங்கும்…
முன்னாடியே சொல்லியிருந்தா கூட்டிட்டுப்போக அப்பாவ வரச் சொல்லிருப்பே..
இன்னிக்கு காலேஜ்னு ஒரு போன் பன்னி சொல்லியிருக்கலாம்தானே…
என்று ஆற்றாமையின் அனல் சன்னமாய் பரவிக் கொண்டிருந்தது. அதோடு நேற்று உண்டதுபோக மீதமிருந்த பிக்கெ பழங்களின் வாசமும் அவ்வறை முழுதும் பரவியிருந்தது.
அண்ணா, டிப்பார்ட்மெண்ட் சாவி வேணும்…
வாங்க சார், இன்னிக்கு லீவில்லெ?
ஆமா அண்ணா. கொஞ்ச வேலெ இருக்கு அண்ணா…
காப்பாளரிடமிருந்து சாவியை வாங்கி நடந்தான். வழியெல்லாம் கொன்றைமலர்கள் உதிர்ந்திருந்தன. இன்று அவை கூட்டி குவிக்கப்படப் போவதில்லை. உதிர்தலுக்கு ஏது விடுமுறை. உதிர்தலின் உறுத்தலுக்கல்லவா விடுமுறை. மகன் எழுந்ததும் மீதமிருந்த பிக்கெ பழங்களை உண்டிருப்பான். ஒருவேளை, பல்லை விளக்காமலும்கூட உண்டிருக்கலாம். ஆனால், அதற்காக இம்முறை திட்டு மாதனுக்கு விழப்போவதில்லை.

Previous articleகாவு
Next articleஅந்திமந்தாரை
Avatar
முனைவர் கோ.சுனில்ஜோகி நீலகிரி மாவட்டம், ஒரசோலை கிராமத்தைச் சார்ந்தவர். தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் கோவை வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் 5 ஆண்டுகள் தமிழ் உதவிப்பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தற்போது கோவை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். நீலகிரி படகர்கள் குறித்த “மாதி” எனும் புதினத்தை இயற்றியுள்ளார். இது பரிசல் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.  இதுவே படகர்கள் குறித்த முதல் இனவரைவியல் புதினம் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டுகளுக்கு மேலாக படகர்கள் குறித்த ஆய்வனுபவம் கொண்ட இவர் அவர்களின் மரபார்ந்த மூலிகை மருத்துவம் மற்றும் அவர்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்கு பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பாரதியார் பல்கலைக்கு ஆய்வேடு சமர்ப்பித்து ஆய்வியல் பட்டம் பெற்றுள்ளார். நாட்டுப்புறவியல், மானிடவியல், தமிழியல் சார்ந்த 50 மேற்பட்ட பன்னாட்டு ஆய்வுக்கட்டுரைகளையும், பல்வேறு தமிழ் இதழ்களில் 200 மேற்பட்ட கவிதைகளையும், சில சிறுகதைகளையும் இயற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.