அழிபாடுகளை எழுத மறுத்து கவிதை விடைபெறுகிறது
என எழுதிக் கொண்டிருக்கும் போதே
மத்தேயு
நாற்பத்தேழாவது மாடியிலிருந்து குதித்து விடுகிறான்
வாக்குறுதிகளின் பாரம் ஒழிந்த காலமிது
திரும்புதற்கென்று பாதைகள் இல்லாத வரைபடங்களை வைத்துக்கொண்டு
காதலை எப்படிக் கோருவது?
புகைமூட்டங்களால் புலப்படாத நகரமொன்றின் சாலையில்
போக்குவரத்து சமிக்ஞையில் பச்சை விழுவதற்காக
நூற்றியெட்டாவது பேருந்தில் காத்துக்கொண்டிருந்த போது
அந்தப் பாடல் ஒலிக்கிறது
பேரிருட்டுக்குள் இட்டுச்சென்ற அதன் மெட்டுகளில்
பிறந்த குழந்தைகளின் சொருகி மூடிய கண்கள்
சூரிய அஸ்தமனங்கள் பொய்த்துப் போன காலநிலையில்
பிரசவங்களை எப்படி நிறுத்துவது?
பெருகும் பல்லாயிர ஆரஞ்சு வண்ணக் கைகளாக
அழகாக விடிந்த நாள்
பருவம் திரிந்து தட்பவெப்பங்கள் கெட்டு
வியர்வையும் கண்ணீரும் அமிலமாக மாறி
மனித உடல்கள் சொட்டச் சொட்ட
நதிகளும் கடல்களும் சுருண்டுகொள்கின்றன
செத்து மிதக்கும் மீன்களைக் கண்டெழுந்த ஓலங்களில்
ஒடுங்கும் பறவை பூச்சி மிருக மர ஓசைகள்
கருகிய சிலைகளெனத் திக்குகள் திரண்டு நிற்க
காற்றறுந்த மண்டலங்களில்
இறுதி மூச்சை யார்மேல் விடுவது?
வெடித்த நிலங்களையும் வெளுத்த பாறைகளையும்
புகைப்படங்கள் எடுத்து வருகிறாள் தோழி
என்வீட்டுச் செடிகளும் அப்போது தான் எரிந்து முடிந்திருந்தன
வெப்பத்தால் உருகித் தொங்கும் கூரைகள்
அதன் விநோதத்தையும் அவள் படமெடுக்கிறாள்
குழந்தைகளின் பள்ளிப் பாடங்களுக்கு
உதவுமெனப் பத்திரப்படுத்துகிறாள்
கணினிகள் ஏய்க்கும்வரை இதயங்களும் இலகுவதில்லை
எந்நேரத்திலும் தீப்பிடிக்கக் காத்திருக்கும்
காடுகளின் பொருட்டு மழைக் கஞ்சியூற்ற
எந்தக் கடவுள் எஞ்சியிருக்கிறது?
கடைசி மாட்டின் கறியை வறுத்துக் கொண்டிருந்த போது
வெடித்துச் சிதறிய அடுப்பால் விருந்து நின்றுபோன இரவில்
சுற்றமும் நட்பும் குடும்பமும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்கின்றனர்
பதறிய ஆவிகளாய் பூமியிறங்கிய மூதாதையர் ஆன்மாக்களும்
காயப்படுகின்றன
இந்த அநாதி காலத்தில் பிறந்த சந்ததிகள்
திரும்புவதற்குக் கருப்பைகளைத் தேடுகின்றன
புல்லும் பூண்டும் பச்சையை இழந்து கொண்டிருக்கும்
கலியில் எது இறுதி நொடி?
வெட்டுவதற்கு மரங்களற்றுப் போன திணைகளில்
கவித்துவமான முடிவுகளுக்கு வாய்ப்பில்லை
பேய்களை விரட்ட ஏலாமல் விறகு முடிந்து போகிறது
நானும் மாடியேறி குதித்து விட எத்தனிக்கிறேன்
ஏற்கெனவே நிறையப் பேர் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்
தாங்கிக் கொள்ள நிலமில்லை
தற்கொலை செய்துகொண்ட காதலன்
நடுவானில் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறான்
அவனது முகத்தை ஏந்தி
நாளை மலர காத்திருக்கும் மொட்டுகளை இழந்திருப்பது போல
உன்னை இழந்து நிற்கிறேன்
எனச் சொல்ல ஏங்குகிறேன்
முற்றும் முழுதும் உணர முடியா இப்பொழுதுகளைப்
பேச ஏது மொழி?
-லீனா மணிமேகலை
டொகோரோண்டோ (மொஹாக் பழங்குடிகளின் மொழியில், நீரில் மிதக்கும் மரங்கள் அடர்ந்த நிலத்திலிருந்து எழுதுகிறேன்)
நில ஒப்புதல்:
மிசிசாகாஸ் ஆஃப் தி கிரெடிட், அனிஷ்னாபெக், சிப்பேவா, ஹவுடெனோசவுனி மற்றும் வெண்டாட் பழங்குடி மக்கள் உட்படப் பல நாடுகளின் பாரம்பரிய பிரதேசத்தில் தற்போது நான் வாழ்கிறேன் என்பதை டொராண்டோ நகரத்தின் வருகை கலைத் தொழிலாளியாக பொறுப்பளிக்கிறேன். மற்ற முதல் நாடுகளது -இன்யூட் மற்றும் மெடிஸ்- பழங்குடி மக்களின் தாயகமாகவும் தற்போது டொராண்டோ உள்ளது. மிசிசாகாஸ் ஆஃப் தி கிரெடிட்டுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் 13, பல மிசிசாகாஸ் மற்றும் சிப்பேவா இனக்குழுக்களுடன் கையெழுத்திடப்பட்ட வில்லியம்ஸ் ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு டொராண்டோ நகரம் பாத்தியப்பட்டுள்ளது என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.
இதை விட வலியை எப்படி பதிவு செய்ய முடியும்
கவிதையின் அழகியல் மிகவும் அற்புதமான சொல்லாடலால் நிரம்பியிருக்கிறது, சிறப்பு