ஒரு சந்திப்பு
ஒரு பிரிவு
ஓர் இரவு
ஒரு பகல்
பூமியை
எதனுடன் தைக்கிறது
இந்தச் சூரியன்
ஒரு சந்திப்பு
ஒரு பிரிவு
யாருக்காக நெய்யப்படுகிறது
இந்த ஆடை
வலைபோல் அல்ல
இன்னும் இன்னும்
நெருக்கமாக
மணித்துளியும் ஒழுகாத
வெளிபோல
அனைத்தையும் போர்த்தி மயக்கி
முடிவற்று ஆடும் இத்துணியில்
யாரும் சேர்க்கவில்லை
ஆனாலும்
எப்படித் தோன்றின
காதலின் வண்ணங்கள்.
நீருள் எரிவது
இவ்வளவு அருகில்
நீ இருக்கும்போது
என்னால் உன்னை
காண முடியவில்லை
இவ்வளவு நெருக்கத்தில்
நீ ஆட்கொண்டபின்
நானென என்னை
உணர முடியவில்லை
நான் நாவசைக்கையில்
உனது குரல் கேட்கிறது
எனது அசைவுகள்
உனது உடலில்
நடனமிடுகின்றன
உனது வெப்பத்தின் அளவீடுகள்
எனது வேர்வையைத் தீர்மானிக்கிறது
நீயென்பது இன்னொன்றென
சொல்ல முடியவில்லை
நானென்பது நானென்றே
நம்ப முடியவில்லை
இரு பருபொருட்கள்
ஒன்றாக முடியாத
பௌதீக விதிகளை
அடித்துச் செல்கிறது
இரு துளிகள் கலந்துருவான
பேராறு
எல்லாமழிந்த பின்னும்
ஒன்றை ஒன்று உண்கிறது
இருபக்கமிருந்தும்
காட்டை எரித்த தீ
இப்போது
உடலுக்குள் திகழ்வது
இன்னொரு உடல்
நீருக்குள் எரிவது
ஒரு தீபம்.
தூரத்தின் கருணை
நிலையில்லா நீர்த்தூண் மண்டபத்தில்
நமை இணைக்கும்
மழை
மதுரப் பொன்கொதிப் பாத்திரத்தில்
நமை சமைக்கும்
வெயில்
தூரத்தின் நூல் கோர்த்து
நமை அடைகின்றன
சந்திப்பில் சிதறி வீழ்ந்தவை
எத்தனை நாள் ஆனாலும்
கன்னத்தில் கைவைத்து
நமை இணைத்தபடி கிடக்கிறது
தூரம்
தூரத்தின் திரையில்லாமல்
சந்திப்பின் தூரிகை
என்ன செய்யும்
தூரத்தின் தந்தியன்றி
சந்திப்பின் விரல்கள்
எதனை மீட்டும்
தூரத்தின் அமைதியல்லவா
நம்மை நமக்கு
கேட்கச் செய்தது
தூரத்தின் கருணையல்லவா
வானத்தை இப்படி
வண்ணமயமாக்கியது.
இந்த பெரிய வாழ்வை
நமது சிறிய சந்திப்பு
என்ன செய்துவிட்டது
பார்த்தாயா
கூரிருளில்
ஒற்றை மின்மினி போல்.




