- ரகசியங்களற்றவனின்
நிழலில்
கண்ணாடி வளர்கிறது.
- எப்படியாயினும்,
இதற்கு ரகசியமெனப் பெயரிட
நான் இன்னொருவருக்கும்
இதனை தத்துக்கொடுக்க வேண்டியதிருக்கிறது.
- ரகசியங்கள் பெறுமதியானவை
என்பதிலிருந்து
வெளியேறிவிட்ட என் புதுவயதில்
நான் சிறிய காற்றாடிகளை
நீண்ட தொலைவில் செலுத்தும்
ஞானம் பெற்றேன்.
- எல்லாவற்றிலிருக்கும்
ரகசியங்களை
என் வெகுளித்தனம் சுரண்டி விலக்குகிறது.
அங்கே குருதியற்ற ஓருடல் வெளிப்படுகிறது.
எடையிழந்த எல்லாமும்
மிதக்கத்துவங்குகின்றன.
- ரகசியமற்ற ஈருடல்கள்
புணர்ந்து கொண்டிருக்கின்றன.
இப்போது
கண்ணாடி உடல்கள்
பிறக்கும் பருவம்.
- கடவுள் என்னை சபித்தார்.
ரகசியங்கள் ஆரஞ்சின் தோல் போன்றவை எனச்சொல்லியபடி.
தீவினைகளற்ற வாழ்வில்
நீ இருக்கும்போதே இறப்பாய் என்றார்.
நான் ஆற்றில் மிதந்து செல்கின்ற
சடலத்திற்கு
எவ்வளவு மீன்கள்
எவ்வளவு மீன்கள்
என முனங்கினேன்.
- ரகசியங்களற்ற ஒன்றை
நான் வரைந்தேன்.
இப்போது
அது உங்களைப் பார்ப்பதை
நீங்கள் ஏன் உணரவேயில்லை.
-பா.திருச்செந்தாழை