பீட்டில்ஸுடன்

யது முதிர்வதில் எனக்கு விசித்திரமாகத் தெரிவது எனக்கு வயதாகிவிட்டது என்பதல்ல. கடந்த காலத்தில் இருந்த இளமையான எனக்கு, நான் உணராமலேயே வயது கூடிவிட்டது என்பதும் இல்லை. மாறாக, என்னை மிகுந்த ஆச்சரியத்துக்குள்ளாக்குவது எதுவென்றால், என்னையொத்த ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் முதியவர்களாகி விடுவது, நானறிந்த அழகான, உற்சாகமான பெண்களெல்லாம் இரண்டு பேரக்குழந்தைகள் இருக்குமளவு வயதாகிப் போவது. இது சற்றுக் குழப்பமானது வருத்தமானது என்றும் கூறலாம். இருப்பினும் எனக்கும் அதேயளவு வயது கூடிவிட்டது என்ற உண்மை என்னை வருத்துவதில்லை.

எனக்குத்தெரிந்த பெண்கள் முதுமையடைவதில் என்னைக் கவலைக்குள்ளாக்குவது எதுவென்றால், என்னுடைய இளமைக்காலக் கனவுகள் என்றென்றைக்குமாகத் தொலைந்து விட்டன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதாக இருப்பதே என்று நினைக்கிறேன். கனவின் மரணம் என்பது, ஒருவகையில் உயிருள்ள ஒன்றின் மரணத்தைக் காட்டிலும் துயரமானது.

 

ரு சிறுமி இருந்தாள் — அதாவது ஒருகாலத்தில் சிறுமியாக இருந்த பெண் — அவளை நன்றாக நினைவிருக்கிறது. என்றாலும் அவளது பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. மேலும், இயல்பாக இப்போது அவள் எங்கிருக்கிறாள் அல்லது என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதும் தெரியாது. அவளைப்பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் பயின்ற அதே மேல்நிலைப்பள்ளியில் அவளும் பயின்றாள், நான் பயின்ற அதே ஆண்டில் அவளும் இருந்தாள் (ஏனெனில் அவளது சட்டையிலிருந்த அடையாள அட்டையின் நிறமும் என்னுடையதும் ஒரே நிறம்), மற்றும் அவளுக்கு பீட்டில்ஸை மிகவும் பிடிக்கும். 

இது நடந்தது 1964இல், பீட்டில்மேனியா உச்சத்தில் இருந்த காலம். இலையுதிர் காலத்தின் முன்பகுதி. பள்ளியில் புதிய பருவம் துவங்கி விஷயங்கள் மீண்டும் அதன் ஒழுங்கிற்குள் வரத் தொடங்கியிருந்தன. அவள் தனது அரைப்பாவாடை படபடக்க பழைய பள்ளிக் கட்டடத்தின் நீண்ட, மங்கலான தாழ்வாரத்தில் விரைந்து சென்று கொண்டிருந்தாள். அங்கிருந்த மற்றொரு நபர் நான் மட்டுமே. எல்.பி. ஒன்றை, அது மிகவும் விலைமதிப்பற்ற பொருள் என்பதுபோல மார்போடு சேர்த்து அணைத்திருந்தாள். ‘பீட்டில்ஸுடன்’ என்ற எல்.பி. கவர்ந்திழுக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் பீட்டில்ஸ் குழுவினர் நால்வரும் அரை இருளில் இருப்பதுபோல இருக்குமே அது. ஏதோ காரணங்களால், ஏனென்று உறுதியாக எனக்குத் தெரியவில்லை, அவள் வைத்திருந்தது அசல் பிரிட்டிஷ் பதிப்பு என்ற துல்லியமான நினைவு எனக்குள் இருக்கிறது, அமெரிக்கப் பதிப்போ அல்லது ஜப்பானியப் பதிப்போ அல்ல.

அவள் ஓர் அழகான பெண். குறைந்தபட்சம், அப்போது எனக்கு அவள் ஓர் அழகியாகத் தெரிந்தாள். உயரமானவள் அல்ல, ஆனால் அவளுக்கு நீண்ட கருங்கூந்தல், ஒல்லியான கால்கள், மற்றும் மிக ரம்மியமான வாசனை (அது தவறான நினைவாகக்கூட இருக்கலாம், எனக்குத் தெரியாது. ஒருவேளை, அவளிடமிருந்து எந்த மணமும் வெளிப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் என் நினைவில் அப்படியிருக்கிறது, அவள் கடந்து செல்லும்போது மயக்குகின்ற, வசீகரிக்கின்ற மணம் நானிருந்த திசையில் வீசியது). அவள் என்னைத் தன்வசமாக்கிக் கொண்டாள் — அந்த அழகான, பெயரற்ற, ‘பீட்டில்ஸுடன்’ இசைத்தட்டை நெஞ்சோடு அணைத்திருந்த பெண்.

என் இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது, மூச்சுவிடத் திணறினேன், சத்தங்கள் அனைத்தும் நின்று போனதுபோல் இருந்தது, குளத்தின் அடிப்பகுதியில் மூழ்கிவிட்டது போல. என்னால் கேட்க முடிந்ததெல்லாம் காதுகளின் ஆழத்தில் ஒலித்த மங்கலான மணியோசை மட்டுமே. யாரோ முக்கியமானதொரு செய்தியைத் தீவிரமாக எனக்கு அனுப்ப முயற்சி செய்வதுபோல இருந்தது. இது அத்தனைக்கும் பத்து அல்லது பதினைந்து வினாடிகள் ஆகியிருக்கும். நான் உணரும் முன்பே அது முடிந்து விட்டது. மேலும் கனவுகள் அனைத்தின் சாரத்தைப்போல அதில் அடங்கியிருந்த முக்கியமான செய்தி காணாமல் போனது.

மேல்நிலைப்பள்ளி ஒன்றின் மங்கலாக வெளிச்சமிடப்பட்ட தாழ்வாரத்தில் ஓர் அழகான பெண், அவளது பாவாடையின் ஓரம் படபடக்கிறது, ‘பீட்டில்ஸுடன்’.

 

ந்தப் பெண்ணைப் பார்த்தது அந்த ஒருமுறை மட்டுமே. அப்போதிருந்து இரண்டு வருடங்கள் கழித்து பட்டம் பெற்று வெளியேறும்வரை நாங்கள் ஒருமுறை கூட ஒருவரையொருவர் கடந்து செல்லவில்லை. யோசித்தால் இது மிகவும் விநோதமானது. நான் படித்த மேல்நிலைப்பள்ளி கோபேயின் மலையுச்சியில் இருந்த பொதுப்பள்ளி, கிட்டத்தட்ட ஒவ்வொரு படிநிலையிலும் அறுநூற்று ஐம்பது மாணவர்கள். (நாங்கள் பேபி-பூமர் என்றழைக்கப்பட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள், எனவே எண்ணிக்கையில் அதிகமாக இருந்தோம்.) எல்லோரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. உண்மையில் பள்ளியின் மிகப் பெரும்பகுதி மாணவர்களின் பெயர் எனக்குத் தெரியாது அல்லது அவர்களது அறிமுகம் கிடையாது. ஆனாலும், நான் அநேகமாக அனைத்து நாட்களும் பள்ளிக்குச் செல்வேன், அடிக்கடி அந்தத் தாழ்வாரத்தைப் பயன்படுத்துவேன் என்பதால் அந்த அழகான பெண்ணை ஒருமுறை கூட மீண்டும் பார்க்கவில்லை என்பது எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தத் தாழ்வாரத்தில் நடக்கும்போதெல்லாம் நான் அவளைத் தேடுவது வழக்கம்.

அவள் புகையைப்போல மறைந்துவிட்டாளா? அல்லது அந்த இலையுதிர்காலத்தின் துவக்கத்தில் நான் பார்த்தது உண்மையான நபரில்லாமல் ஏதேனும் மனக்காட்சியா? ஒருவேளை, நாங்கள் ஒருவரையொருவர் கடந்தபோது அவளை என் மனதில் அதிகமாக உயர்வுபடுத்திக் கொண்டுவிட்டதால் அவளை மீண்டும் பார்த்தால்கூட என்னால் அடையாளம் காண முடியவில்லையா? (அநேகமாக இந்தக் கடைசிச் சாத்தியத்திற்கே அதிகமான வாய்ப்பு என்று நினைக்கிறேன்.)

அதன்பிறகு, சில பெண்களின் அறிமுகம் கிடைத்து, அவர்களோடு வெளியில் சென்றேன். ஒவ்வொருமுறையும் புதிய பெண்ணைச் சந்திக்கும்போது என்னையறியாமலேயே, 1964ஆம் வருட இலையுதிர்காலத்தில் அந்தப் பள்ளியின் மங்கலான வெளிச்சமுள்ள தாழ்வாரத்தில் அடைந்த திகைப்பூட்டும் தருணத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஏங்குகிறேன் என்பதை உணர்ந்தேன். என் இதயத்தில் உண்டான அந்த அமைதியான, உறுதியான சிலிர்ப்பு, மார்பில் உருவான மூச்சற்றுப் போன உணர்வு, காதுகளில் மெலிதாய் ஒலிக்கும் மணிச்சத்தம்.

சிலசமயம் அந்த உணர்வை மீண்டும் பெற முடிந்தது, மற்ற சமயங்களில் இல்லை. மற்ற சமயங்களில் அதை இறுகப் பற்றிக்கொள்ள முடிந்தாலும் என் விரல்களினூடே நழுவிப் போனது. அடுத்து வந்த எந்தவொரு நிகழ்விலும் அது நடந்தபோது எனக்குள் உருவான உணர்வுகள் எனது விருப்பத்தின் தீவிரத்தை அளவிடுவதற்காக நான் பயன்படுத்தும் ஒருவகையான அளவுகோலாக மாறின. 

உண்மையான இப்புறவுலகில் அவ்வுணர்வு கிடைக்காதபோது அமைதியாக அதுகுறித்த நினைவுகள் எனக்குள் எழ அனுமதிப்பேன். இவ்வகையில், நினைவுகள் என்னுடைய மதிப்பு மிக்க உணர்வுக் கருவிகளில் ஒன்றானது, உயிர்வாழும் வழிமுறை என்று கூடச் சொல்லலாம். அளவில் பெரிதான மேலாடையின் பைக்குள் சுருண்டு, ஆழ்ந்து உறங்கும் கதகதப்பான பூனைக்குட்டியைப் போல.

 

பீட்டில்ஸ் குறித்து.

அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்கு ஒருவருடம் முன்புதான் பீட்டில்ஸ் குழுவினர் பெருமளவில் பிரபலமடைந்தனர். 1964 ஏப்ரல் மாதம் போல, அவர்களது பாடல்கள் அமெரிக்கத் தனிப்பாடல் பட்டியலின் முதல் ஐந்து இடங்களைக் கைப்பற்றின. பாப் இசை உலகம் அதுபோல ஒன்றை அதற்குமுன் கண்டதில்லை. அந்த ஐந்து பாடல்கள் இவை: (1) ‘கான்ட் பை மீ லவ்’; (2) ‘ட்விஸ்ட் அண்ட் ஷௌட்’; (3) ‘ஷீ லவ்ஸ் யூ’; (4) ‘ஐ வான்ட் டு ஹோல்ட் யுவர் ஹேண்ட்’; (5) ‘ப்ளீஸ் ப்ளீஸ் மீ.’ தனிப்பாடலான ‘கான்ட் பை மீ லவ்’ மட்டும் அசல் இசைத்தட்டு விற்பனைக்கு வருவதற்கு முன்பே இரண்டு மில்லியன் முன்பதிவுகளோடு இரட்டை பிளாட்டினம் அந்தஸ்தைப் பெற்றுவிட்டது.

நிச்சயமாக பீட்டில்ஸ் ஜப்பானிலும் வெகுபிரபலமாக இருந்தனர். வானொலியைத் திருப்பினால் அவர்களின் பாடல் ஒன்றைக் கேட்கும் வாய்ப்பு இருந்தது. எனக்கும் அவர்களது பாடல்கள் பிடிக்கும், மேலும் அவர்களது பிரபலமான பாடல்கள் அனைத்தும் தெரியும். அவற்றை பாடச் சொன்னால் பாடுவேன். வீட்டில் படித்துக் கொண்டிருக்கும்போது (அல்லது படிப்பதாக நடிக்கும்போது), பெரும்பாலான நேரங்களில் ரேடியோ சத்தமாக ஒலித்துக் கொண்டிருக்கும். ஆனால் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நான் தீவிர பீட்டில்ஸ் விசிறியல்ல. அவர்களது பாடலை எப்போதும் தேடிக் கேட்டதுமில்லை. என்னைப் பொறுத்தவரை அது முனைப்பற்றுக் கேட்பது மட்டுமே. பாப் இசை எனது சிறிய பேனசோனிக் டிரான்சிஸ்டர் வானொலியின் ஒலிபெருக்கிகள் மூலம் வழிந்து ஒருகாதில் நுழைந்து மற்றொன்றில் வெளியேறும், மிகவும் குறைவாகவே மனதில் பதியும். அவை என் இளமைப்பருவத்தின் பின்னணி இசை. இசையாலான வால் பேப்பர்.

மேல்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் நான் பீட்டில்ஸின் இசைத்தட்டு ஒன்றைக்கூட வாங்கவில்லை. எனக்கு அதிகம் பிடித்தது ஜாஸ் இசை மற்றும் பாரம்பரிய இசை. இசையில் கவனம் செலுத்த வேண்டும் எனும்போது அதிகம் கேட்டது அவற்றையே. பணம் சேர்த்து ஜாஸ் இசைத்தட்டுகளை வாங்கினேன், ஜாஸ் பார்களில் மைல்ஸ் டேவிஸ் மற்றும் தெலோனியஸ் மாங்க் ஆகியோரது இசையை எனது விருப்பமாகக் கேட்டேன், மேலும் பாரம்பரிய இசைக் கச்சேரிகளுக்குச் சென்றேன்.

இது உங்களுக்கு வினோதமாகப் படலாம் ஆனால் என்னுடைய முப்பதுகளின் மத்தியில்தான் ‘பீட்டில்ஸுடன்’ பாடல்களை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை உட்கார்ந்து கேட்டேன். எங்களது மேல்நிலைப்பள்ளியின் தாழ்வாரத்தில் அந்த எல்.பி.யை சுமந்து சென்ற அப்பெண்ணின் சித்திரம் என்னைவிட்டு அகலவில்லை என்றாலும் வெகுகாலத்திற்கு அந்த இசைத்தட்டைக் கேட்கவேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. அவள் தன் நெஞ்சோடு அவ்வளவு இறுக்கமாக அணைத்துச்சென்ற அந்த வினைல் தட்டின் பள்ளங்களில் என்ன வகையான இசை பொறிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம் இருக்கவில்லை.

என்னுடைய முப்பதுகளின் மத்தியில் இருக்கும்போது, குழந்தைப்பருவம் மற்றும் இளமைப்பருவத்தைக் கடந்து வெகுகாலம் ஆனபின், அந்த இசைத்தட்டு குறித்த என்னுடைய முதல் எண்ணம் அது அப்படியொன்றும் சிறப்பானது இல்லை என்பதே. அல்லது குறைந்தபட்சம் உங்கள் மூச்சை நிறுத்தக்கூடிய இசை அல்ல. அந்தப் பாடல் தொகுப்பிலிருந்த 14 பாடல்களில் ஆறு பாடல்கள் கவர்ஸ் என்று சொல்லப்படும் வேறு இசைக்கலைஞர்களின் பாடல்கள். மார்வெலெட்ஸின் ‘ப்ளீஸ் மிஸ்டர் போஸ்ட்மேன்’ மற்றும் சக் பெர்ரியின் ‘ரோல் ஓவர் பீத்தோவன்’ ஆகிய பாடல்கள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. இப்போது கேட்டால் கூட என்னை ஈர்க்கக்கூடியவை, இருந்தாலும் அவை வேறு இசைக்கலைஞர்களின் பாடல்கள். மற்ற எட்டு அசல் பாடல்களில் பால் உடைய ‘ஆல் மை லவிங்’ பாடலைத் தவிர எதுவும் ஆச்சரியப்படுத்தவில்லை. அதில் பிரபலமான தனிப்பாடல்கள் எதுவுமில்லை, என் காதுகளைப் பொறுத்தவரை பீட்டில்ஸின் முதல் ஆல்பமான ‘ப்ளீஸ் ப்ளீஸ் மீ,’ அது ஒரே டேக்கில் பதிவு செய்யப்பட்டது எத்தனையோ மடங்கு துடிப்பானது மற்றும் ஈர்க்கக்கூடியது. இருந்தாலும் பீட்டில்ஸ் ரசிகர்களது தணிக்கமுடியாத புதிய பாடலுக்கான விருப்பத்திற்குத்தான் நன்றி சொல்லவேண்டும், இந்த இரண்டாவது பாடல் தொகுப்பு முதல்முறையாக இங்கிலாந்தில் முதலிடத்தைப் பிடித்தது, தொடர்ந்து இருபத்தோரு வாரங்களுக்கு அவ்விடத்தைத் தக்க வைத்துக்கொண்டது (அமெரிக்காவில் இப்பாடல் தொகுப்பின் தலைப்பு ‘பீட்டில்ஸைச் சந்தியுங்கள்’ என்று மாற்றப்பட்டது, வேறுசில பாடல்கள் சேர்க்கப்பட்டன. ஆனாலும் அதன் அட்டை வடிவமைப்பு கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருந்தது.) 

அவள் அந்தப் பாடல்தொகுப்பை விலைமதிப்பற்ற ஒன்றைப்போலப் பற்றிக்கொண்டு இருந்ததுதான் என்னை ஈர்த்தது. பாடல்தொகுப்பின் அட்டையிலுள்ள புகைப்படத்தை எடுத்துவிட்டால் ஒருவேளை, அக்காட்சி என்னை அந்தளவுக்கு ஈர்க்காது என்றே நினைக்கிறேன். அங்கே இசை இருந்தது, நிச்சயமாக. ஆனால் அதேசமயம் வேறொன்றும் இருந்தது, ஒப்பீட்டளவில் மிகப்பெரியது. ஒருநொடியில் அந்தக்காட்சி என் இதயத்தில் பொறிக்கப்பட்டு விட்டது—அது குறிப்பிட்ட வயதில், குறிப்பிட்ட இடத்தில், காலத்தின் குறிப்பிட்ட கணத்தில், அங்கே மட்டுமே காணக்கூடிய ஒருவகையான ஆன்மிக நிலக்காட்சி.

 

ன்னைப் பொறுத்தவரை அடுத்துவந்த வருடமான 1965இல் நடந்த மிகப்பெரிய நிகழ்வு என்பது, அதிபர் ஜான்சன் வடக்கு வியட்நாம் மீது குண்டு வீச உத்தரவிட்டதால் உருவான போரின் விரிவாக்கமோ அல்லது இரியோமோடே தீவில் புதியவகைக் காட்டுப்பூனை கண்டுபிடிக்கப் பட்டதோ அல்ல. அந்த வருடம் நானொரு காதலியைப் பெற்றேன் என்பதே. அவளும் என்னைப் போலவே முதல் வருடத்தில் இருந்தாள், என்றாலும் இரண்டாம் வருடத்தில் இருந்துதான் நாங்கள் வெளியே செல்லத் தொடங்கினோம்.

தவறான புரிதல்களைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காக முன்னுரையாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நான் அழகனில்லை, எப்போதுமே பிரபலமான தடகள வீரனாக இருந்ததில்லை, மேலும் பள்ளியில் எனது மதிப்பெண்கள் என்பது எப்போதும் நட்சத்திர அந்தஸ்துக்குக் கீழேயே இருந்தது. நான் பாடுவது ரசிக்க வைக்கும்படியான ஏதோவொன்றைத் தவறவிட்டது மேலும் வார்த்தைகளைக் கையாள எனக்குத் தெரியவில்லை. நான் பள்ளியில் இருந்தபோதும் அதற்குப் பிறகான வருடங்களிலும் எப்போதும் என்னைச் சுற்றிப் பெண்கள் இருக்கக் கண்டதில்லை. இந்த நிச்சயமற்ற வாழ்வில் என்னால் நிச்சயமாகச் சொல்லமுடிந்த விஷயங்களில் ஒன்று அது. இருந்தாலும், எப்போதும் என்னைச் சுற்றி, என்மீது ஏதோ காரணத்திற்காக ஈர்ப்புக்கொண்ட பெண்ணொருத்தி இருந்ததாகவே தெரிகிறது. உண்மையில் அது ஏனென்று எனக்கும் புரியவில்லை, ஆனால் அப்பெண்களுடன் சில மகிழ்ச்சிகரமான, நெருக்கமான தருணங்களை என்னால் அனுபவிக்க முடிந்தது. அவர்களில் சிலரோடு நல்ல நட்பில் இருந்தேன், எப்போதாவது அது அடுத்த கட்டத்திற்கு நகரும். அப்படியான பெண்ணைப் பற்றித்தான் இங்கே சொல்கிறேன் நான் நெருக்கமாக உறவு வைத்திருந்த முதல் பெண்.

என்னுடைய முதல் காதலி ஒல்லியாக, அழகாக இருந்தாள். அந்தக் கோடைகாலத்தில் நான் வாரம் ஒருமுறை அவளுடன் வெளியில் சென்றேன். மதியப்பொழுதொன்றில் அவளுக்குச் சிறிய முத்தம் தந்தேன், இருந்தாலும் முழு உதடுகளுக்கான முத்தம், மேலும் உள்ளாடை வழியாக அவளது முலைகளைத் தொட்டேன். கையில்லாத வெள்ளை ஆடை ஒன்றை அணிந்திருந்தாள், அவளது கூந்தல் எலுமிச்சை போன்ற மணமுள்ள ஷாம்பூவின் வாசனையைக் கொண்டிருந்தது. 

அவளுக்கு பீட்டில்ஸ் மீது கிட்டத்தட்ட எந்த விருப்பமும் இல்லை. ஜாஸ்இசையிலும் பெரிய விருப்பமில்லை. அவளுக்குப் பிடித்ததெல்லாம் கனிவான இசை அதாவது நடுத்தர வர்க்க இசை என்போமே அது மான்டோவானொ ஆர்கெஸ்ட்ரா, பெர்சி ஃபெய்த், ரோஜர் வில்லியம்ஸ், ஆன்டி வில்லியம்ஸ், நேட் கிங் கோல் போன்றவர்கள் (அந்தக் காலத்தில், ‘நடுத்தர வர்க்கம்’ என்பது இழிவானசொல் அல்ல). அதுபோன்ற இசைத்தட்டுகளின் குவியல் அவள் வீட்டில் இருக்கும் இப்போது அவற்றை எளிதாகக் கேட்கும் இசை என்று வகைப்படுத்துகிறார்கள்.

அந்த மதியநேரம், அவளது வீட்டின் வரவேற்பறையில் இருந்தபோது சுழல்மேடையில் ஓர் இசைத்தட்டை வைத்தாள் — அவள் வீட்டில் மிகப்பெரிய, கவர்ந்திழுக்கக் கூடிய ஸ்டீரியோ இசைபெருக்கி இருந்தது — மிகப்பெரிய, வசதியான நீளிருக்கையில் அமர்ந்து நாங்கள் முத்தமிட்டுக்கொண்டோம். அவளது குடும்பத்தினர் எங்கோ வெளியில் சென்றிருந்ததால் நாங்கள் தனியாக இருந்தோம். உண்மையைச் சொன்னால் அதுபோன்ற சூழ்நிலையில் என்ன வகையான இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் கண்டுகொள்ளக் கூட இல்லை. 

அந்த 1965 கோடைக்காலம் குறித்து என் நினைவில் உள்ளவை என்றால், அவளது வெள்ளை ஆடை, எலுமிச்சை போன்ற மணம் கொண்ட அவளது ஷாம்பூ, அவளது ஒயர்பிராவின் கடினமான உணர்வு (அப்போதெல்லாம் பிரா, உள்ளாடை என்பதைவிட கோட்டையைப்போல இருக்கும்), பெர்சி ஃபெய்த் ஆர்கெஸ்ட்ராவின் மேக்ஸ் ஸ்டெய்னரது மனதிற்கு உகந்த இசையில் ‘‘எ சம்மர் ப்ளேஸ்’ஸின் தீம் இசை’. இப்போதும்கூட ‘‘எ சம்மர் ப்ளேஸ்’ஸின் தீம் இசை’யைக் கேட்கும்போது அந்த நீளிருக்கை என் நினைவுக்கு வரும். 

தற்செயல் நிகழ்வாக, சில வருடங்கள் கழித்து — 1968 என்று ஞாபகம், ராபர்ட் கென்னடி படுகொலை செய்யப்பட்ட அதே காலகட்டத்தில் — நாங்கள் ஒரே வகுப்பில் இருந்தபோது எங்களது பள்ளியில் முதன்மை வகுப்பின் ஆசிரியராக இருந்தவர் நிலைவாயிலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர் எங்களுக்கு சமூக வரலாறு கற்பித்தவர். கருத்தியல்ரீதியாக அவரடைந்த இக்கட்டான நிலை அவரது தற்கொலைக்குக் காரணமாகக் கூறப்பட்டது. 

கருத்தியல் இக்கட்டு?

ஆனால் அது உண்மை — அறுபதுகளின் கடைசியில் மனிதர்கள் கருத்தியல் ரீதியாக ஓரிடத்தில் முட்டிமோதி நின்றுவிட்டால் தற்கொலை செய்துகொண்டார்கள். என்றாலும் அது அடிக்கடி நிகழக்கூடியதல்ல. 

இதைப்பற்றி நினைக்கும்போது நான் வினோதமாக உணர்வேன். அந்த மதியநேரம் நானும் என் காதலியும் அந்த நீளிருக்கையில், பெர்சி ஃபெய்த்தின் அழகான இசை பின்னணியில் ஒலிக்க, அலங்கோலமாக ஏதோ செய்து கொண்டிருக்கும்போது, அந்த வரலாற்று ஆசிரியர் படிப்படியாக தனது மரணத்தை விளைவிக்கக்கூடிய கருத்தியல் முட்டுச்சந்து நோக்கி அல்லது வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கயிற்றின் அமைதியான, இறுக்கமான-முடிச்சு நோக்கி முன்னேறிக் கொண்டிருந்திருக்கிறார். சிலசமயம், அதுகுறித்து நான் குற்றவுணர்ச்சி கொள்வதுண்டு. நானறிந்த ஆசிரியர்களுள் மிகச்சிறந்தவர்களில் ஒருவர் அவர். வெற்றி பெற்றவராக இருந்தாரா என்பது வேறுகேள்வி. ஆனால் அவர், தனது மாணவர்களை எப்போதும் நேர்மையாக நடத்த முயற்சிசெய்தார். வகுப்புக்கு வெளியே அவரிடம் பேசியதில்லை, என்றாலும் அப்படித்தான் அவரை நினைவுகூர்கிறேன். 

 

றுபத்து நான்கைப் போல 1965ம் பீட்டில்ஸுக்கான வருடம். அவர்கள் பிப்ரவரியில் ‘எய்ட் டேஸ் எ வீக்’, ஏப்ரலில் ‘டிக்கெட் டு ரைட்’ ஜூலையில் ‘ஹெல்ப்’ செப்டம்பரில் ‘யெஸ்டர்டே’ ஆகியவற்றை வெளியிட்டனர் — அத்தனை பாடல்களும் அமெரிக்காவின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தன. அவர்களது இசையை எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருப்பதுபோல இருந்தது. அது எங்களைச்சுற்றி எங்குமிருந்தது, சுவரின் ஒவ்வொரு அங்குலத்திலும் உன்னிப்பாக, கவனமாக ஒட்டப்பட்ட வால்பேப்பரைப் போல.

பீட்டில்ஸின் இசை ஒலிக்கவில்லை என்றால் ரோலிங் ஸ்டோன்ஸின் ‘(ஐ கான்ட் கெட் நோ) சாடிஸ்ஃபாக்‌ஷன்,’ அல்லது பைர்ட்ஸ்’சின் ‘மிஸ்டர். டம்போரின் மேன்,’ அல்லது டெம்ப்டேஷன்ஸின் ‘மை கேர்ள்’, அல்லது ரைட்டியர்ஸ் ப்ரதர்ஸின் ‘யூ ஹேவ் லாஸ்ட் தட் லவ்விங் ஃபீலிங்’,’ அல்லது பீச் பாய்ஸ்’சின் ‘ஹெல்ப் மீ ரோண்டா,’ போன்றவை ஒலிக்கும். டயானா ரோஸ் மற்றும் சுப்ரீம்ஸ் குழுவினரும் அடுத்தடுத்து வெற்றிப்பாடல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து இவ்வகையான அற்புதமான, மகிழ்ச்சியான இசை என்னுடைய சிறிய பேனசோனிக் டிரான்சிஸ்டர் வானொலி வழி வடிகட்டப்பட்டு வந்துகொண்டேயிருந்தது. உண்மையில், அது பாப் இசைக்கு வியக்கத்தக்க வகையில் முக்கியமான ஆண்டு.

நம் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான காலகட்டம், பாப் இசை நமக்கு ஏதேனும் அர்த்தத்தைத் தருகின்ற, நம்மைத் தொடுகின்ற காலகட்டம் என்று சொல்வார்கள். ஒருவேளை, அது உண்மையாக இருக்கலாம் – உண்மையாக இல்லாமலும் இருக்கலாம். பாப் இசைப் பாடல்கள் உண்மையில் பாப் இசைப்பாடல்களாக மட்டுமே இருக்கலாம். ஒருவேளை, நம் வாழ்க்கை வெறுமனே ஓர் அலங்காரப் பொருளாக, பயன்படுத்திவிட்டு வீசக்கூடிய பொருளாக, வெடித்துச் சிதறும் நொடிப்பொழுது வண்ணமாக, அதற்கு மேல் எதுவும் இல்லை என்றுகூட இருக்கலாம்.

 

ன் காதலியின் வீடு நான் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் கோபே வானொலி நிலையத்துக்கு அருகில் இருந்தது. அவளது அப்பா மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்து கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். அதைப்பற்றிய விபரங்கள் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்படியிருந்தாலும் அவர் தனது சொந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தார், அது நன்றாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களது வீடு கடலுக்கு அருகேயிருந்த பைன் மரத் தோப்பிற்குள் இருந்தது. அவ்வீடு தொழிலதிபர் ஒருவரின் கோடைக்காலத்து இல்லமாக இருந்ததென்றும் அவளது குடும்பம் அவரிடமிருந்து வாங்கி மறுவடிவமைப்பு செய்தது என்றும் கேள்விப்பட்டேன். எப்போதும் பைன் மரங்கள் கடல் காற்றில் சலசலக்கும். ‘‘எ சம்மர் ப்ளேஸ்’ஸின் தீம் இசை’யைக் கேட்பதற்கு மிகச்சரியான இடம். 

பல வருடங்கள் கழித்து தொலைக்காட்சியில் பின்னிரவு ஒளிபரப்பில் 1959இல் வெளிவந்த ‘எ சம்மர் பிளேஸ்’ திரைப்படத்தைப் பார்த்தேன். இளம்காதல் குறித்த வழக்கமான ஹாலிவுட் படம், இருந்தாலும் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. அந்தத் திரைப்படத்தில் கடலுக்கு அருகே பைன்மரங்களின் தோப்பு, பெர்சி ஃபெய்த் ஆர்க்கெஸ்ட்ராவின் காற்றிசைக்கருவிகள் வரும்போது கோடைத் தென்றலில் அசைந்தாடும். அந்தப் பைன்மரங்கள் காற்றில் அவ்வாறு அசைந்தாடுவது இளம்காதலர்களது பொங்கும் காம இச்சைக்கான உருவகம் என்று எனக்குத்தோன்றியது. ஆனால் அது எனக்கு மட்டும் தோன்றியதாக, எனது தனிப்பட்ட சார்புள்ள பார்வையாகக்கூட இருக்கலாம்.

அந்தப்படத்தில் ட்ராய் டோனஹ்யூ மற்றும் சான்ட்ரா டி இருவரும் அப்படியான பெரும் ஆற்றல் கொண்ட காமச் சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்டு, அதன் காரணமாக அனைத்து விதமான உலகியல் சார்ந்த பிரச்சினைகளையும் சந்திப்பார்கள். தவறான புரிதல்களை அடுத்து நல்லிணக்கங்கள் உருவாகின்றன, தடைகள் மூடுபனி விலகுவதைப்போல விலகுகின்றன, இறுதியில் அவர்கள் இருவரும் ஒன்று சேர்கிறார்கள், திருமணம் செய்து கொள்கிறார்கள். ஐம்பதுகளில் வந்த ஹாலிவுட் திரைப்படங்களில் மகிழ்ச்சியான முடிவு என்பது திருமணத்தில் முடிவதாக இருக்கும் – அதாவது, காதலர்கள் சட்டப்படி உடலுறவு கொள்ளலாம் என்ற சூழ்நிலையின் உருவாக்கம். நானும் என் காதலியும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏனெனில் நாங்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் செய்ததெல்லாம் ‘‘எ சம்மர் ப்ளேஸ்’ஸின் தீம்’ இசை பின்னணியில் ஒலிக்க நீளிருக்கையில் அலங்கோலமாகத் துழாவிக் கொண்டது மட்டுமே.

“உனக்கொன்று தெரியுமா?” நீளிருக்கையில் இருக்கும்போது மெல்லிய குரலில், குற்றத்தை ஒப்புக் கொள்பவள் போல அவள் என்னிடம் கூறினாள்: “நான் மிகவும் பொறாமை பிடித்தவள்.”

“உண்மையாகவா?” என்றேன்.

“இது நிச்சயம் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.”

“சரி.”

“சில சமயம் பொறாமைப்படுவது மிகவும் வலி தரக்கூடியது.”

நான் அமைதியாக அவளது கூந்தலைக் கோதினேன். அந்தக் காலகட்டத்தில் எரியும் பொறாமை எவ்வாறு உணரச்செய்யும், எது அதை உருவாக்குகிறது, அது எதில் முடியும் என்றெல்லாம் சிந்திப்பது எனக்கு அப்பாற்பட்டது. நான் என்னுடைய உணர்ச்சிகளில் மூழ்கியிருந்தேன்.

பக்கக் குறிப்பாக, ட்ராய் டோனஹ்யூ – அந்த அழகான இளம் நட்சத்திரம் பின்னாட்களில் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். மேலும் சிறிது காலத்திற்கு வீடற்றவராக இருந்தார். சான்ட்ரா டீயும் மதுப் பழக்கத்தினால் சிரமப்பட்டார். டோனஹ்யூ பிரபல நடிகையான சூசன் ப்ளெஷெத்தை 1964இல் மணந்துகொண்டார். ஆனால் அவர்கள் எட்டு மாதத்திற்குப் பிறகு விவாகரத்துச் செய்துகொண்டனர். சான்ட்ரா டீ பாடகரான பாபி டேரினை 1960இல் மணந்தார். ஆனால் அவர்கள் 1967இல் விவாகரத்து செய்துகொண்டனர். இது ‘எ சம்மர் ப்ளேஸ்’ இன் கதைக்கு முற்றிலும் தொடர்பற்ற விஷயம். மேலும் என்னுடைய மற்றும் என் காதலியுடைய விதிக்குத் தொடர்பில்லாதது.

 

ன் காதலிக்கு ஒரு மூத்த சகோதரன் மற்றும் ஓர் இளைய சகோதரி உண்டு. இளைய சகோதரி இடைநிலையில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள். அவளது மூத்த சகோதரியைக் காட்டிலும் இரண்டு அங்குலம் உயரமானவள். குறிப்பிடத்தகுந்த அழகி இல்லை. மேலும் தடிமனான கண்ணாடி அணிந்திருப்பாள். ஆனால், என் காதலிக்குத் தனது இளைய சகோதரி மேல் பாசம் அதிகம். “பள்ளியில் அவளது மதிப்பெண்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன” என்று என்னிடம் கூறுவாள். எனது காதலியின் பள்ளி மதிப்பெண்கள் சுமார் என்பதிலிருந்து நடுத்தரம் என்று சொல்லுமளவில் இருந்தன. கிட்டத்தட்ட என்னுடையதைப் போல.

ஒருமுறை அவளது இளைய சகோதரி எங்களுடன் திரைப்படம் பார்க்கவரச் சம்மதித்தோம். அப்படிச் செய்யவேண்டிய கட்டாயம் ஏதோ இருந்தது. படத்தின் பெயர் ‘தி சவுண்ட் ஆஃப் மியூசிக்’. அரங்கம் நிரம்பி வழிந்தது. எனவே நாங்கள் முன்வரிசையில் அமர வேண்டியதாயிற்று. அந்த 70mm படத்தை அகன்ற திரையில் அவ்வளவு அருகில் உட்கார்ந்து பார்த்ததால் படம் முடியும்போது என் கண்கள் வலித்தது எனக்கு நினைவில் உள்ளது. என் காதலிக்கு படத்தில் உள்ள பாடல்கள் மிகவும் பிடித்துப்போயின. அந்தப் படத்தின் பாடல்களை எல்.பி.யை வாங்கி முடிவற்றுக் கேட்டுக் கொண்டேயிருந்தாள். எனக்கு ஜான் கோல்ட்ரெனின் மயக்குகிற பதிப்பான ‘மை ஃபேவரிட் சாங்ஸ்’ மட்டும் பிடித்திருந்தது, ஆனால் அதை அவளிடம் சொல்வது அர்த்தமற்றது என்று தோன்றியதால் சொல்லவில்லை.

அவளது இளைய சகோதரிக்கு என்னை அதிகம் பிடித்ததுபோல் தெரியவில்லை. நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட போதெல்லாம் அவள் என்னை அந்நியமான பார்வை பார்ப்பாள், முற்றிலும் உணர்ச்சியற்ற பார்வை கிட்டத்தட்ட, குளிர்சாதனப் பெட்டியில் பின்னால் இருக்கும் கருவாடு, இன்னமும் உண்ணத் தகுந்த நிலையில் இருக்கிறதா இல்லையா என்று சோதிப்பதுபோல. ஏதோ காரணத்தினால் அந்தப்பார்வை எப்போதுமே என்னைக் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கும். அவள் என்னைப் பார்க்கும்போது, வெளிப்புறத் தோற்றத்தை புறக்கணித்துவிட்டு (ஒப்புக்கொள்கிறேன், அதில் பார்க்கும்படியாக ஏதுமில்லை) அவளால் எனக்குள்ளாகப் பார்க்க முடியும் என்பது போல, என்னுடைய இருப்பின் ஆழத்தை ஊடுருவிப் பார்ப்பதுபோல இருக்கும். ஒருவேளை, உண்மையிலேயே என் மனத்தில் அவமானம் மற்றும் குற்றவுணர்ச்சி இருந்ததால் நான் அவ்வாறு உணர்ந்திருக்கலாம்.

என் காதலியின் அண்ணன், அவளை விட நான்கு வயது மூத்தவன். எனவே, அப்போது அவனுக்கு இருபது வயது இருக்கும். அவள், அவனை எனக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை, மிக அரிதாகவே அவனைப்பற்றிப் பேசியிருக்கிறாள். அவனைப்பற்றி பேசவேண்டி வந்தால், நேர்த்தியாக விஷயத்தை மாற்றிவிடுவாள். அவளது இந்த நடத்தை சற்று வழக்கத்திற்கு மாறானது என்று இப்போது தோன்றுகிறது. அது குறித்து அதிகம் கவலைப்பட்டேன் என்றில்லை. அவளது குடும்பத்தின் மீது எனக்கு அவ்வளவு ஆர்வமில்லை. அவளிடம் என்னை ஈர்த்தது மிக அவசரமான தூண்டுதல் மட்டுமே.

 

ன் காதலியின் சகோதரனை நான் முதன்முதலில் சந்தித்துப் பேசியது 1965 ஆம் வருடத்தின் இலையுதிர்கால முடிவில். அந்த ஞாயிற்றுக்கிழமை அவளை அழைத்துக் கொள்வதற்காக அவளது வீட்டிற்குச் சென்றேன். பலமுறை அழைப்புமணியை அழுத்தியும் யாரும் வரவில்லை. சிறிது இடைவெளிவிட்டு, முடிவில் யாரோ மிக மெதுவாக கதவை நோக்கி உள்ளிருந்து நடந்து வருவது கேட்கும்வரை மீண்டும் மீண்டும் அழுத்தினேன். அது, என் காதலியின் மூத்த சகோதரன்.

அவன் என்னைக்காட்டிலும் சற்று உயரம் மற்றும் பெரிய உருவம். தளர்வான உடல் அமைப்பல்ல, ஆனால் தடகள வீரன் ஒருவன் ஏதோ காரணத்திற்காக உடற்பயிற்சியை சிறிது காலத்திற்குக் கைவிட்டு அதனால் சில பவுண்டுகள் எடை கூடியது போன்ற உடலமைப்பு, தற்காலிகமான கொழுப்பு. அவனுக்கு அகன்ற தோள்கள் ஆனால் அதனோடு ஒப்பிடுகையில் நீளமான ஒல்லியான கழுத்து. அவனது தலைமுடி பரட்டையாகி இப்போதுதான் படுக்கையிலிருந்து எழுந்து வந்தவன்போல அனைத்து திசைகளிலும் நீட்டிக்கொண்டிருந்தது. கடினமான மற்றும் கரடுமுரடான தலைமுடி, அவனைப் பார்த்தால் முடிவெட்டிக்கொள்ள இரண்டு வாரங்கள் தாமதமானது போலிருந்தது. வட்டக்கழுத்துள்ள அடர்நீலச்சட்டை, தளர்வான கழுத்துள்ளது மற்றும் சாம்பல்நிற அரைக்கால் சட்டை முழங்கால் அருகே பெரியதாக இருக்கும் பேகி வகை. என் காதலிக்கு முற்றிலும் எதிர்மாறான உருவம் – அவள் எப்போதும் சுத்தமாக, நேர்த்தியாக உடுத்திக்கொண்டு தன்னை அழகுபடுத்திக் கொள்பவள். 

அருவெறுப்பான விலங்கொன்று நீண்ட குளிர்கால உறக்கத்திலிருந்து விழித்து அப்போதுதான் சூரிய வெளிச்சத்தை பார்ப்பதுபோல அவன் தன் கண்களைச் சிமிட்டி சிறிதுநேரம் என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தான். 

நான் எந்த வார்த்தையையும் வெளியிடுவதற்கு முன்பாக, “நீ அநேகமாக…. சயோகோவின் நண்பனா?” என்றான். தொண்டையை செருமிக்கொண்டான். அவனது குரலில் தூக்கத்தின் சாயல் இருந்தது. அதேசமயம் அதில் ஆர்வத்தின் பொறியை என்னால் உணரமுடிந்தது. 

“அது சரிதான்” என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். “நான் இங்கே பதினோரு மணிக்கு வர வேண்டும்.”

“சயோகோ இப்போது இங்கு இல்லை” என்றான்.

“இங்கு இல்லை” என்று அவன் சொன்னதைத் திருப்பிச் சொன்னேன்.

“அவள் எங்கோ வெளியில் சென்றிருக்கிறாள், வீட்டில் இல்லை.”

“ஆனால் பதினோருமணிக்கு வந்து அவளை அழைத்துச்செல்ல வேண்டுமென்று சொல்லியிருந்தாள்.”

“சரியாகத் தெரியுமா?” என்று கடிகாரத்தைப் பார்ப்பதுபோல அவனுக்குப் பின்னால் இருந்த சுவரைத் திரும்பிப் பார்த்தான். ஆனால் அங்கே கடிகாரம் ஏதுமில்லை, வெறும் வெள்ளைச் சுவர் மட்டுமே இருந்தது. பிறகு தயக்கத்துடன் தனது பார்வையை எனது பக்கம் திருப்பினான்.

“இருக்கலாம், ஆனால் உண்மை என்னவென்றால் அவள் வீட்டில் இல்லை.”

உண்மையில், என்ன செய்யவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. அவளது சகோதரனுக்கும் அதேநிலை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. நிதானமாக ஒரு கொட்டாவியை வெளியேற்றி பின்னர் தலையைச் சொறிந்தான். அவனது செயல்கள் அத்தனையும் மெதுவாக, அளந்து வைத்தவைபோல் இருந்தன.

“இப்போது வீட்டில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை” என்றான். “சிறிது நேரத்திற்கு முன்பு நான் எழுந்தபோது யாரும் இங்கில்லை. எல்லோரும் வெளியே சென்றிருக்க வேண்டும், ஆனால் எங்கே என்று எனக்குத் தெரியாது.”

 நான் எதுவும் சொல்லவில்லை.

“என் அப்பா அநேகமாக, கோல்ஃப் விளையாடச் சென்றிருப்பார். என் சகோதரிகள் பொழுதுபோக்கிற்காக வெளியே சென்றிருக்க வேண்டும். ஆனால் என் அம்மாவும் வெளியே சென்றிருப்பதுதான் சற்று வித்தியாசமாக இருக்கிறது. இது அடிக்கடி நடப்பதல்ல.”

நான் யூகிப்பதைத் தவிர்த்தேன். இது என் குடும்பம் அல்ல.

“ஆனால் சயோகோ இங்கிருப்பேன் என்று சொல்லியிருக்கிறாள் என்றால் சீக்கிரம் வந்துவிடுவாள்” என்றான். “நீ ஏன், உள்ளே வந்து காத்திருக்கக் கூடாது?”

“நான் உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. பக்கத்தில் எங்கேனும் சுற்றித் திரிந்து விட்டு சிறிதுநேரம் கழித்து வருகிறேன்” என்றேன்.

“இல்லை அதில் தொந்தரவு ஏதும் இல்லை” என்று உறுதியாகக் கூறினான். “மீண்டும் அழைப்பு மணி கேட்டு வந்து முன்கதவைத் திறப்பதுதான் அதிகத் தொந்தரவு. எனவே உள்ளே வா.”

எனக்கும் வேறு வழியில்லை என்பதால் உள்ளே சென்றேன், என்னை வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றான். கோடைக்காலத்தில் நானும் அவளும் முயங்கிக் கிடந்த நீளிருக்கை இருக்கும் வரவேற்பறை. நான் அதில் அமர்ந்து கொண்டேன், என் காதலியின் சகோதரன் என்னைப் பார்த்திருந்த நாற்காலியொன்றில் தன்னை ஓய்வாக இருத்திக்கொண்டு மீண்டும் நீளமான கொட்டாவியை வெளியிட்டான். 

மறுமுறை உறுதிப்படுத்திக் கொள்வது போல “நீ சயோகோவின் நண்பன்… சரிதானே?” என்று மீண்டும் கேட்டான். 

“ஆமாம் சரி” என்று அதே பதிலைக் கொடுத்தேன்.

“யூகோவின் நண்பனில்லையா?”

இல்லை என்று தலையசைத்தேன். யூகோ என்பது உயரமாக இருக்கும் அவளது தங்கை.

“சயோகோவுடன் வெளியே செல்வது சுவாரஸ்யமாக இருக்கிறதா?” அவனது கண்களில் ஆர்வம் வெளிப்பட்டது.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத்தெரியவில்லை, எனவே அமைதியாக இருந்தேன். அவன் அமர்ந்தபடி என்னுடைய பதிலுக்குக் காத்திருந்தான்.

“ஆமாம், மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது” என்று கடைசியில், சரியான வார்த்தைகள் என்று நம்பியதைக் கூறினேன்.

“மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆனால் சுவாரஸ்யமாக இல்லையா?”

“இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை…” என் வார்த்தைகள் தடுமாறின. 

“அது முக்கியமில்லை” என்றான் அவள் சகோதரன். “சுவாரஸ்யமோ அல்லது மகிழ்ச்சியோ – இரண்டுக்குமிடையே வித்தியாசம் இல்லை என்று நினைக்கிறேன். ஹேய், நீ காலையுணவு சாப்பிட்டாயா?”

“ஆமாம், சாப்பிட்டேன்.”

“நான் சில டோஸ்ட்டுகள் தயாரிக்கப் போகிறேன். நிச்சயம் உனக்கு வேண்டாமா?”

“இல்லை வேண்டாம்” என்று பதிலளித்தேன்.

“காஃபி தரட்டுமா?”

“இல்லை, பரவாயில்லை.”

கொஞ்சம் காஃபி வேண்டுமென்று கேட்டிருக்கலாம், ஆனால் என் காதலியின் குடும்பத்துடன் அதிகமாக ஈடுபடுவதில் எனக்குத் தயக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக அவள் வீட்டில் இல்லாதபோது.

அவன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் எழுந்து நின்று அறையை விட்டு அகன்றான். சிறிது நேரத்திற்குப் பிறகு, பாத்திரங்கள் மற்றும் குவளைகளின் ஓசை வந்தது. நான் அந்த நீளிருக்கையில் தனியாக, பணிவுடன் என் கைகளை மடிமீது வைத்து நேராக அமர்ந்தபடி, அவள் எங்கே சென்றிருந்தாலும் அங்கிருந்து வரக்காத்திருந்தேன். கடிகாரத்தில் இப்போது மணி பதினொன்றே கால்.

பதினோரு மணிக்கு வரவேண்டும் என்று உண்மையிலேயே நாங்கள் முடிவு செய்திருந்தோமா என்பதை மீண்டும் ஒருமுறை நன்றாக யோசித்துப் பார்த்தேன். ஆனால் எத்தனை முறை யோசித்தாலும் தேதியும் நேரமும் சரிதான் என்றே தோன்றியது. முதல்நாள் இரவு இதைப் பற்றி பேசி உறுதி செய்து கொண்டிருந்தோம். அவள் மறக்கின்ற அல்லது வாக்குறுதியை மீறுகின்ற வகையைச் சேர்ந்தவளல்ல. மேலும் அவளும் அவளது குடும்பத்தாரும் ஞாயிற்றுக்கிழமையில் மொத்தமாக அவளது மூத்த சகோதரனை மட்டும் தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றிருப்பது வினோதமாக இருந்தது.

இதை யோசித்துக் குழம்பியபடி அங்கே அமர்ந்திருந்தேன். நேரம் துன்புறுத்தும் வகையில் மிகமெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. சமையலறையிலிருந்து அவ்வப்போது சில ஓசைகள் தண்ணீரைத் திறக்கும் ஓசை, கரண்டியினால் எதையோ கலக்கும் ஓசை, அலமாரியை திறந்து மூடும் ஓசை. இந்தச் சகோதரன் எதைச்செய்தாலும் பெரும் அமளியை உண்டாக்கும் வகையினனாகத் தெரிந்தான். ஆனால் சத்தங்களைப் பொறுத்தவரை அவைமட்டுமே இருந்தன. வெளியே காற்று வீசவில்லை, நாய்கள் குரைக்கவில்லை. கண்ணுக்குத்தெரியாத சேறு போல அமைதி என் காதுகளுக்குள் நிதானமாக ஊர்ந்து அடைத்துக் கொண்டிருந்தது. அதைச் சரி செய்ய சிலமுறை விழுங்கிக் கொள்ள வேண்டியதாக இருந்தது.

ஏதேனும் இசையிருந்தால் நன்றாக இருக்கும். ‘‘எ சம்மர் ப்ளேஸ்’ஸின் தீம் இசை,’ ‘ஏடெல்வைஸ்’ ‘மூன் ரிவர்’ ஏதேனும். இதுதான் வேண்டுமென்று இல்லை. ஏதேனும் இசை. ஆனால் மற்றவர்களின் வீட்டில் அவர்களின் அனுமதியில்லாமல் ஸ்டீரியோவை தொடமுடியாது. படிப்பதற்கு ஏதேனும் கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் பார்த்தேன், செய்தித்தாள்கள் அல்லது இதழ்கள் ஏதும் கண்ணில்படவில்லை. என்னுடைய தோள்பையில் என்ன இருக்கிறது என்று பார்த்தேன். பொதுவாக என்னிடம் பையில் அப்போது வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகம் இருக்கும், ஆனால் அன்று இல்லை.

நானும் என் காதலியும் சந்தித்துக்கொள்ள வெளியே செல்லும்போது படிப்பதற்காக நூலகத்திற்குச் செல்வதாக நடிப்போம். அதை நிரூபிக்க பள்ளிப்பாடம் சம்பந்தமான விஷயங்களைப் பையில் வைத்துக்கொள்வேன். அமெச்சூர் குற்றவாளி பலமற்ற அயலிடச் சான்றை உருவாக்கிக்கொள்வது போல. எனவே அன்று என் பையில் இருந்தது பள்ளியின் துணைப்பாட நூலான ‘ஜப்பானிய மொழி மற்றும் இலக்கியம்’ மட்டுமே. தயக்கத்துடன் அதை வெளியே எடுத்து பக்கங்களைப் புரட்டினேன். புத்தகங்களை முறையாக, கவனமாக வாசிக்கக்கூடிய வாசகன் என்று என்னைச் சொல்லமுடியாது, ஆனால் படிப்பதற்கு ஏதும் இல்லையென்றால் பொழுதைப் போக்குவது கடினம் எனும்வகை. என்னால் ஓரிடத்தில் நிலையாக, அமைதியாக, வெறுமனே அமர்ந்திருக்க முடியாது. எப்போதும் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டு அல்லது இசை கேட்டுக் கொண்டிருப்பேன், இது அல்லது அது. புத்தகம் ஏதும் கிடைக்கவில்லை என்றால் அச்சிடப்பட்ட எதையும் எடுத்துக்கொள்வேன். தொலைபேசி எண்கள் அடங்கிய புத்தகம், நீராவி இஸ்திரிப்பெட்டியின் அறிவுறுத்தல் கையேடு போன்றவற்றைக்கூட படிப்பேன். அவற்றோடு ஒப்பிடும்போது ஜப்பானிய மொழித் துணைப்பாட நூல் எவ்வளவோ பரவாயில்லை.

புத்தகத்தில் இருந்த புனைகதைகள் மற்றும்  கட்டுரைகளைப் புரட்டிக்கொண்டே வந்தேன். சில வெளிநாட்டு எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை, ஆனால் பெரும்பாலானவை நன்கறியப்பட்ட நவீன ஜப்பானிய எழுத்தாளர்களின் எழுத்து ரைனோசுகே அகுதகவா, ஜூனிசிரோ தானிசாகி, கோபே ஆபே போன்றவர்கள். அத்தனை படைப்புகளுக்குப் பின்னாலும் – அனைத்து நூல் சுருக்கங்கள், சில சிறிய கதைகளைத் தவிர – சில கேள்விகள் கொடுக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கேள்விகள் முற்றிலும் அர்த்தமற்றவை. இவ்வாறான அர்த்தமற்ற கேள்விகளால் அதற்கு அளிக்கப்படும் பதில் தர்க்கரீதியாக சரியானதா இல்லையா என்று கூறுவது கடினம் (அல்லது சாத்தியமற்றது). இந்தக் கேள்விகளை உருவாக்கியவர் யாராக இருந்தாலும் அவராலே கூட முடிவு எடுக்க முடியுமா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது. ‘இந்தப் பத்தியின் மூலம் எழுத்தாளரின் போர் குறித்த நிலைப்பாடு பற்றி நீ அறிந்து கொள்வது என்ன?’ அல்லது ‘ஆசிரியர் நிலவு வளர்வதை, தேய்வதைக் குறிப்பிடும்போது அங்கு என்னவகையான குறியீட்டு விளைவு உருவாக்கப்படுகிறது?’ போன்ற கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் வேண்டுமானாலும் எழுதலாம். நிலவு தேய்வது, வளர்வது இங்கு எவ்விதமான குறியீட்டு விளைவையும் உருவாக்கவில்லை, அவை வெறுமனே நிலவு தேய்வதை, வளர்வதை மட்டுமே குறிக்கின்றன என்று பதிலளித்தால் எவராலும் அந்தப் பதில் தவறானது என்று உறுதிபடக் கூறிவிட முடியாது. நிச்சயமாக ஒப்பீட்டளவில் சரியான பதில் இருக்கும், ஆனால் ஒப்பீட்டளவில் சரியான பதிலை வந்தடைவது இலக்கியத்தைப் படிப்பதற்கான நோக்கங்களில் ஒன்றென நான் கருதவில்லை.

எப்படி இருந்தாலும், இந்த ஒவ்வொரு கேள்விக்குமான பதிலைக் கற்பனை செய்வது மூலமாக நான் நேரத்தைக் கொன்று கொண்டிருந்தேன். பெரும்பாலான கேள்விகளுக்கு என் மனதில் தோன்றிய அதாவது என் மூளையில், அது அப்போதுதான் வளர்ந்து, உருவாகிக் கொண்டு, ஒருவகையான உளவியல் சுதந்திரத்திற்காக ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருந்தது பதில்கள் ஒப்பீட்டளவில் பொருந்தாத பதில்கள் என்றாலும் நிச்சயம் தவறானது என்று சொல்லமுடியாது. ஒருவேளை, இந்த மனோபாவம் பள்ளியில் எனது மதிப்பெண்கள் அவ்வளவு சிறப்பாக இல்லாமல் இருப்பதன் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

இது நடந்து கொண்டிருக்கும்போது என் காதலியின் சகோதரன் மீண்டும் வரவேற்பறைக்கு வந்தான். அவன் தலைமுடி இன்னமும் அனைத்து திசைகளிலும் நீட்டிக்கொண்டிருந்தது, ஆனால் தனது காலை உணவை எடுத்துக் கொண்டு விட்டான் என்பதனாலோ என்னவோ அவன் கண்கள் முன்புபோல தூக்கக்கலக்கத்தில் இல்லை. அவன் கையில் பெரிய வெள்ளைக் குவளை, அதில் முதலாம் உலகப்போர் காலக்கட்ட, இரட்டை இறக்கை கொண்ட ஜெர்மானிய விமானத்தின் படம், அதன் விமானியறையில் இரண்டு இயந்திரத்துப்பாக்கிகள் உள்ளது போல் பக்கவாட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. இது அவனுடைய தனிப்பட்ட குவளையாக இருக்கவேண்டும். என் காதலி இப்படியொரு குவளையில் குடிப்பதை என்னால் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை.

“உண்மையிலேயே உனக்கு காஃபி வேண்டாமா?” என்று கேட்டான்.

நான் தலையசைத்தேன். “இல்லை. உண்மையிலேயே வேண்டாம், நன்றி.”

அவனது ஸ்வெட்டர் ரொட்டித் துகள்களால் தோரணமிடப்பட்டிருந்தது. அரைக்கால் சட்டையும் அவ்வாறே. அநேகமாக அவன் மிகவும் பசியாக இருந்து ரொட்டித் துண்டுகளின் துணுக்குகள் அனைத்து பக்கங்களிலும் சிதறுவதைக் கவனிக்காமல் சாப்பிட்டிருக்க வேண்டும். அது என் காதலியைத் தொந்தரவு செய்வதை என்னால் கற்பனை செய்யமுடிந்தது. ஏனெனில் அவள் எப்போதும் சுத்தமாக, நேர்த்தியாக இருப்பாள். நானும் அப்படிச் சுத்தமாக, நேர்த்தியாக இருப்பதை விரும்புபவன், எங்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டதற்கு நாங்கள் பகிர்ந்து கொண்ட இந்த விஷயமும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அவளது சகோதரன் சுவரை ஏறிட்டுப் பார்த்தான். அங்கே கடிகாரம் இருந்தது. அதன் முட்கள் பதினொன்றரையை நெருங்கிக் கொண்டிருந்தன.

“அவள் இன்னும் திரும்பவில்லை, இல்லையா? எங்கே போய்த் தொலைந்திருப்பாள்?”

 நான் பதிலுக்கு எதுவும் பேசவில்லை.

“என்ன படித்துக் கொண்டிருக்கிறாய்?”

“எங்கள் ஜப்பானிய மொழிப் பாடத்தின் துணைப்பாட நூல்.”

“ம்ம்…” என்றான், லேசாக தலையைச் சாய்த்து. “அது சுவாரஸ்யமாக இருக்கிறதா?”

“குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. என்னிடம் வாசிப்பதற்கு வேறெதுவுமில்லை.”

“அதை எனக்குக் காண்பிக்க முடியுமா?”

தாழ்வாக இருந்த மேசைக்குமேல் புத்தகத்தை நீட்டினேன். இடதுகையில் காஃபி குவளையுடன் வலது கையால் அதை வாங்கினான். அதில் காஃபியைச் சிந்திவிடுவானோ என்று எனக்குக் கவலையாக இருந்தது. அப்படி நடந்துவிடும் போல் இருந்தது. ஆனால் அவன் சிந்தவில்லை. கையிலிருந்த குவளையைக் கண்ணாடி மேசைமீது ஓசையெழ வைத்தான், புத்தகத்தை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு பக்கங்களைத் திருப்பினான்.

“இதில் எந்தப் பகுதியைப் படித்துக் கொண்டிருந்தாய்?”

“அகுதகவாவின் ‘சுழலும் சக்கரங்கள்’ கதையைப் படித்துக்கொண்டிருந்தேன். பகுதிக்கதை மட்டும்தான் அதில் உள்ளது, முழுவதுமாக அல்ல.”

அவன் இதைப்பற்றிச் சிறிது யோசித்தான். “‘சுழலும் சக்கரங்கள்’ நான் படிக்காத கதை. அவருடைய ‘கப்பா’ கதையை வெகுநாட்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். இந்தச் ‘சுழலும் சக்கரங்கள்’ கதை மிகவும் சோகமானது இல்லையா?”

“ஆமாம். அவர் தனது இறப்பிற்கு முன்பாக அதை எழுதினார்.” அகுதகவா, தனது 35 ஆம் வயதில் அளவுக்கதிகமாக மருந்தை உட்கொண்டதால் இறந்தார். என்னுடைய துணைப்பாட நூல் குறிப்பு ‘சுழலும் சக்கரங்கள்’ 1927இல் அவரது இறப்புக்குப்பின் வெளியிடப்பட்டது என்கிறது. இந்தக் கதை கிட்டத்தட்ட அவரது கடைசி விருப்பம் மற்றும் மரணசாசனம். 

“ஹ்ம்ம்…” என்றான், என் காதலியின் சகோதரன். “ நீ அதை எனக்குப் படித்துக்காட்ட முடியுமா?”

நான் வியப்புடன் அவனைப் பார்த்தேன். “வாய்விட்டுச் சத்தமாகப் படிக்கவேண்டும் என்றா சொல்கிறீர்கள்?”

“ஆமாம். எனக்கு எப்போதும் யாராவது படித்துக்காட்டினால் பிடிக்கும். நான் அவ்வளவு நன்றாகப் படிப்பவனில்லை.”

“நானும் வாய்விட்டுப் படிப்பதில் தேர்ந்தவனில்லை.”

“அதுபற்றி கவலையில்லை. நீ அதில் தேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்பதில்லை. அதைச் சரியான வரிசையில் படி, அது போதுமானது. நமக்கும் செய்வதற்கு வேறெதுவும் இல்லையே.”

“இது நரம்புக் கோளாறுகள் சார்ந்த, மனத்தைச் சோர்வடையச் செய்யும் கதையாயிற்றே” என்றேன்.

“சிலசமயம் அப்படியான கதைகளைக் கேட்க விரும்புவேன். அதாவது, தீமையைக்கொண்டு தீமையை எதிர்த்துப் போராடுதல் என்பது போல.”

புத்தகத்தை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு இரட்டை இறக்கையோடு இரும்புச் சிலுவைகள்1 கொண்ட விமானத்தின் படமுள்ள காஃபி குவளையை எடுத்து ஒரு மிடறு அருந்தினான். பிறகு இருக்கையில் நன்றாகச் சாய்ந்தமர்ந்து வாசிப்பது தொடங்கக் காத்திருந்தான் . 

 

ப்படியாக, அந்த ஞாயிற்றுக்கிழமை அகுதகவாவுடைய ‘சுழலும் சக்கரங்கள்’ கதைப்பகுதியை என் காதலியின் விசித்திரமான மூத்த சகோதரனுக்கு படித்துக் காட்ட வேண்டியதாயிற்று. முதலில் எனக்குச் சற்று தயக்கம் இருந்தாலும் போகப்போக எனக்குப் பிடித்துப்போனது. துணைப்பாட நூலில் சிறுகதையின் கடைசி இரண்டு பாகங்கள் இருந்தன ‘சிவப்பு விளக்குகள்’ மற்றும் ‘விமானம்’ ஆனால் நான் ‘விமானம்’ பகுதியை மட்டும் படித்தேன். கிட்டத்தட்ட எட்டுப் பக்கங்கள் கொண்ட அதன் கடைசிவரி இப்படி முடியும். “யாரேனும் நான் உறங்கும்போது என் கழுத்தை நெறித்து எனக்கு உதவக்கூடாதா?” அகுதகவா, இந்த வரிகளை எழுதிய பின் தற்கொலை செய்து கொண்டார்.

படித்து முடித்தேன், ஆனால் இன்னும் அவர்கள் குடும்பத்திலிருந்து யாரும் வீடுவந்து சேரவில்லை. தொலைபேசி ஒலிக்கவில்லை, வெளியில் காகங்கள் ஏதும் கரையவில்லை. எங்கும் அசைவற்ற சூழ்நிலை. இலையுதிர் காலத்துச் சூரியன் ஜரிகைத் திரைச்சீலை வழியாக வரவேற்பறையை ஒளியூட்டியது. நேரம் மட்டும் அதன் மெதுவான, நிலையான வழியில் முன்னேறிக் கொண்டிருந்தது. என் காதலியின் சகோதரன் கைகளை மடித்துக் கண்களை மூடியபடி, நான் வாசித்த கடைசி வரிகளைத் தன் மனத்துக்குள் அனுபவிப்பவன் போல அமர்ந்திருந்தான் : “தொடர்ந்து எழுத என்னில் வலுவில்லை. இவ்வுணர்வுகளோடு தொடர்ந்து வாழ்வதென்பது வார்த்தைகளில் சொல்லமுடியாத வலி. யாரேனும் நான் உறங்கும்போது என் கழுத்தை நெறித்து எனக்கு உதவக் கூடாதா?”

உங்களுக்கு இந்தப் படைப்பு பிடிக்கிறதோ இல்லையோ, ஒன்றுமட்டும் தெளிவானது: இது வெளிச்சமான, தெளிவானதொரு ஞாயிற்றுக்கிழமையில் படிக்கக்கூடிய கதையல்ல. புத்தகத்தை மூடிவிட்டு சுவரிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். அப்போதுதான் மணி பன்னிரண்டைக் கடந்திருந்தது. 

“ஏதோ தவறான புரிதல் ஏற்பட்டிருக்க வேண்டும்” என்றேன். “நான் புறப்பட வேண்டுமென்று நினைக்கிறேன்.” நீளிருக்கையிலிருந்து எழுந்திருக்கத் தயாரானேன். அம்மா சிறுவயதிலிருந்தே எனக்குப் பலமுறை சொல்லி வளர்த்திருக்கிறார், உணவு நேரத்தில் மற்றவர்கள் வீட்டில் இருந்துகொண்டு அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது. நல்லதற்கோ அல்லது கெட்டதற்கோ அது என் இருப்புக்குள் நுழைந்து ஓர் அனிச்சையான வழக்கமாகவே மாறிவிட்டது.

“இவ்வளவு தூரம் வந்துவிட்டாய், ஏன் இன்னும் முப்பது நிமிடங்கள் வரை காத்திருந்து பார்க்கக்கூடாது?” அவளது சகோதரன் கேட்டான். “இன்னும் முப்பது நிமிடங்கள் பார், அப்போதும் அவள் வரவில்லை என்றால் அதற்குப்பின் நீ கிளம்பலாமே?”

அவனது வார்த்தைகள் விசித்திரமான வகையில் தெளிவாக இருந்தன, நான் மீண்டும் அமர்ந்து கைகளை மடிமீது வைத்துக் கொண்டேன்.

“நீ வாய்விட்டுப் படிப்பதில் மிகவும் தேர்ந்தவன்” என்றான், அவன் குரலில் உண்மையிலேயே  ஈர்க்கப்பட்டதன் தொனி. “இதை எப்போதாவது, யாராவது உனக்குச் சொல்லியிருக்கிறார்களா?”

நான் இல்லையென்று தலையசைத்தேன்.

“அதன் சாரம் புரியவில்லை என்றால் உன்னால் இப்படிப் படிக்கமுடியாது. குறிப்பாக கடைசிப் பகுதி மிகவும் நன்றாக இருந்தது.”

“ஓ” என்று தெளிவற்ற முறையில் பதிலளித்தேன். என் கன்னங்கள் சற்று சிவப்பானதை உணர்ந்தேன். அந்தப் பாராட்டு இலக்குத்தவறிய ஒன்றைப் போலிருந்தது, மேலும் அது என்னைச் சங்கடப்படுத்தியது. ஆனால் இந்த வார்த்தைகள் இன்னும் அரைமணிநேரம் அவனோடு பேசிக் கொண்டிருப்பதற்காகச் சொல்லப்பட்டவை என்ற அளவில் புரிந்துகொண்டேன். யாருடனாவது பேச விரும்புகிறான் என்பது போலிருந்தான் .

அவன் தனது உள்ளங்கைகளை பிரார்த்தனை செய்வதைப் போல, தனக்கு முன்னால் இறுக்கமாகச் சேர்த்துக் கொண்டான், பிறகு திடீரென இப்படிக் கேட்டான்: “இது விசித்திரமான கேள்வியாக இருக்கலாம், ஆனால் உனக்கு எப்போதாவது நினைவு நின்று போயிருக்கிறதா?”

“நிற்பதா?”

“நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் காலத்தின் ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிவரை நீ எங்கிருந்தாய் அல்லது என்ன செய்துகொண்டிருந்தாய் என்பது உனக்கு நினைவிருக்காது.”

நான் இல்லையென்று தலையசைத்தேன். “எனக்கு எப்போதும் அப்படி நடந்ததில்லை என்று நினைக்கிறேன்.”

“அப்படியென்றால், எப்போது என்ன செய்தாய் என்ற விபரங்கள் காலவரிசைப்படி உனக்கு நினைவிருக்கும் இல்லையா?”

“சமீபத்தில் நடந்ததென்றால், ஆமாம் என்று சொல்வேன்.”

“ஹ்ம்ம்…” என்று கூறியபடி சிறிதுநேரத்திற்குப்  பின்னந்தலையைச் சொறிந்துகொண்ட பிறகு  பேசினான்: “அது இயல்பானது என்றே நினைக்கிறேன்.”

அவன் தொடரக் காத்திருந்தேன். 

“உண்மையில், எனக்குப் பலமுறை இவ்வாறு நினைவு தப்பிப்போவது நிகழ்ந்திருக்கிறது. அதாவது, பகல் 3 மணிக்கு என் நினைவு நின்று போகிறது என்றால், அடுத்து எனக்குத் தெரிவது 7 மணிதான். மேலும், அந்த நான்கு மணிநேரங்களுக்கு நான் எங்கிருந்தேன் அல்லது என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடியாது. அந்த நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எனக்கு ஏதோ நடந்தது என்றில்லை. அதாவது, தலையில் அடிபட்டது அல்லது அதிகமாகக் குடித்து விட்டேன் அல்லது வேறெதுவும் இல்லை. நான் என்னுடைய வழக்கமான வேலைகளைச் செய்து கொண்டிருப்பேன், திடீரென எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் நினைவு துண்டிக்கப்படும். இது எப்போது நடக்கும் என்று என்னால் முன்கூட்டிச் சொல்லவே முடியாது. மேலும் எத்தனை மணி நேரத்திற்கு, எத்தனை நாட்களுக்கு என்று கூடச் சொல்லலாம், என் நினைவு மறைந்து போகும் என்பதும் எனக்குத் தெரியாது.”

“அப்படியா” பேசுவதைத் தொடர்ந்து கேட்கிறேன் என்பதைக் காண்பிக்க முணுமுணுத்தேன்.

“நீ ஒலிநாடாவில் மொஸார்ட்டின் சிம்பொனி ஒன்றைப் பதிவு செய்திருக்கிறாய் என்று கற்பனை செய்துகொள். அதை மீண்டும் இயக்கும்போது ஒலி, இரண்டாவது இயக்கத்தின் நடுப்பகுதியிலிருந்து மூன்றாவது இயக்கத்தின் நடுப்பகுதிக்குத் தாவிச்செல்கிறது, இடையில் இருக்க வேண்டியது மறைந்து போய்விட்டது. அப்படித்தான் இது நடக்கும். நான் ‘மறைந்து’ என்று சொல்லும்போது ஒலிநாடாவில் அந்த இடத்தில் ஒன்றுமற்ற அமைதியான பதிவு இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. அது இல்லை, காணாமல் போய்விட்டது. நான் சொல்வது புரிகிறதா?”

“புரிகிறது என்று நினைக்கிறேன்” என்று நிச்சயமற்ற தொனியில் சொன்னேன்.

“அது, இசை என்று வரும்போது ஒருவகையான சங்கடம், உண்மையில் கெடுதல் ஏதுமில்லை, சரிதானே? ஆனால் அது உன் நிஜவாழ்க்கையில் நடந்தால் வலி, என்னை நம்பு…. நான் சொல்ல வருவது புரிகிறதா?”

நான் தலையசைத்தேன்.

“நீ நிலவின் இருண்ட பகுதிக்குச் சென்று வெறுங்கையுடன் திரும்புகிறாய்.”

நான் மீண்டும் தலையசைத்தேன். இந்த உவமையை நான் முழுமையாகப் புரிந்து கொண்டேனா என்று தெரியவில்லை.

“இது ஒருவகை மரபணுக் கோளாறினால் உருவாவது, என்னைப்போல தெளிவான பாதிப்புள்ளவர்கள் அரிது. பல பத்தாயிரக்கணக்கானவர்களில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு உருவாகும். மேலும், நிச்சயமாக அவர்களுக்குள் இதில் வித்தியாசங்கள் இருக்கும். நான் மேல்நிலைப்பள்ளியில் கடைசிவருடம் படித்துக் கொண்டிருந்தபோது பல்கலைக்கழக மருத்துவமனையில் நரம்பியல் நிபுணர் ஒருவர் என்னைச் சோதித்துப் பார்த்தார். அம்மாதான் என்னை அங்கே அழைத்துச் சென்றிருந்தார்.”

அவன் சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்: “வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உன் நினைவுகளின் வரிசை குழப்பத்திற்கு உள்ளாகிறது. உன்னுடைய நினைவுகளில் சிறுபகுதி தவறான இழுப்பறையில் பதுக்கி வைக்கப்பட்டு விடுகிறது. எனவே அதைக் கண்டுபிடிப்பது சாத்தியமற்றது என்பதற்கு முன்னுள்ள விஷயம் அல்லது உண்மையில் சாத்தியமற்றது. இப்படித்தான் அவர் எனக்கு அதை விளக்கினார். இது உயிரை எடுக்கக்கூடிய அல்லது படிப்படியாக ஞாபகசக்தியை இழக்கவைக்கக் கூடிய பயங்கரமான கோளாறு அல்ல. ஆனால் அன்றாட வாழ்க்கையில் சிக்கலை உண்டாக்கக்கூடியது. இந்தக் கோளாறின் பெயரைச் சொல்லி அவர்கள் சில மாத்திரைகளைக் கொடுத்தார்கள், ஆனால் அந்த மாத்திரைகள் எதுவும் செய்வதில்லை. அவை வெறும் மருந்துப்போலிகள்.”

என் காதலியின் சகோதரன் ஒருகணம் அமைதியாக, எனக்குப் புரிகிறதா என்று நுணுக்கமாகக் கவனித்தபடி இருந்தான். அது வீட்டிற்கு வெளியே நின்று சாளரத்தின் வழியாக வெறித்துப் பார்ப்பது போலிருந்தது.

“இந்நிகழ்வுகள் இப்போது வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை நடக்கின்றன” என்றான். “அடிக்கடி நடப்பதில்லை, ஆனால் எத்தனைமுறை நடக்கிறது என்பதல்ல விஷயம். அது நடக்கும்போது உண்மையான பிரச்சினைகளை உருவாக்குகிறது. எப்போதாவதுதான் நடக்கிறது என்றாலும் இவ்வகையான நினைவிழத்தலைக் கொண்டிருப்பது, அது எப்போது நிகழும் என்று தெரியாமல் இருப்பது மிகவும் அச்சம் தரக்கூடியது. அது உனக்குப் புரிகிறதா?”

“அஹ்-ம்ம்” என்று தெளிவில்லாமல் பதிலளித்தேன். அவனுடைய புதுமையான, குறுகிய நேரத்தில் சொல்லப்பட்ட கதையைத் தொடரும்போது அவ்வளவுதான் முடிந்தது.

“நான் சொன்னதுபோல, அது எனக்கு நிகழ்கிறது, என்னுடைய நினைவு சட்டென்று நின்று போகிறது, அந்த இடைப்பட்ட நேரத்தில் பெரிய சுத்தியலை எடுத்து யாருடைய மண்டையிலேனும் அடித்துவிட்டேன், எனக்கு பிடிக்காத யாரோ ஒருவர். ‘இது மிகவும் மோசமானது’ என்று சொல்லி அதைக் கடந்துவிட உன்னால் முடியாது, சரிதானே?”

“அப்படித்தான்  நினைக்கிறேன்.”

“காவலர்கள் இதில் சம்பந்தப்படுகிறார்கள் அவர்களிடம் இப்படிச் சொல்கிறேன், ‘விஷயம் என்னவென்றால், எனக்கு எதுவும் நினைவில்லை’, அவர்கள் நிச்சயம் இதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, இல்லையா?”

நான் இல்லையென்று தலையசைத்தேன்.

“உண்மையில் எனக்கு சுத்தமாகப் பிடிக்காத ஓரிருவர் இருக்கிறார்கள். என்னை மிகவும் கோபப்படுத்துபவர்கள். என் அப்பாவும் அவர்களில் ஒருவர். ஆனால் இப்படி நினைவுடன் இருக்கும்போது அப்பாவின் தலையில் சுத்தியலால் அடிக்கப்போகிறேனா என்ன? என்னால் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் நினைவின்றி இருக்கும்போது என்ன செய்கிறேன் என்பதே எனக்குத் தெரியாது.”

நான் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் தலையை லேசாகச் சாய்த்தேன்.

“மருத்துவர் அப்படியான ஆபத்திற்கு சாத்தியமில்லை என்கிறார். எனக்கு நினைவு இல்லாமல் போகும்போது என்னுடைய ஆளுமையை வேறொருவர் எடுத்துக் கொள்ளப்போவதில்லை. அதாவது, டாக்டர்.ஜெகிள் மற்றும் மிஸ்டர்.ஹைட் போல. நான் எப்போதும் நான்தான். பதிவு செய்யப்பட்டதில் இரண்டாம் அசைவிலிருந்து மூன்றாம் அசைவின் நடுவில் உள்ள பகுதி மட்டும் காணாமல் போகிறது. எப்போதுமே நான் யார் என்பது என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும், பெரும்பாலும் இயல்பாகவே நடந்து கொள்வேன். மொஸார்ட் திடீரென ஸ்ட்ராவின்ஸ்கியாக மாற மாட்டார். மொஸார்ட் மொஸார்ட்டாகவே இருப்பார் ஒருபகுதி மட்டும் எங்கோ இருக்கும் இழுப்பறைக்குள் காணாமல் போய்விடுகிறது.”

இந்த இடத்தில் அவன் அமைதியாகி தன்னுடைய இரட்டை இறக்கை விமான காஃபி குவளையிலிருந்து ஒரு மிடறு அருந்திக்கொண்டான். எனக்கும் கொஞ்சம் காஃபி இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினேன்.

“குறைந்தபட்சம் அதுதான் மருத்துவர்கள் எனக்குச் சொன்னது. ஆனால் மருத்துவர்கள் எதைச் சொன்னாலும் அதில் ஒருகல் உப்பைச் சேர்த்துதான் புரிந்துகொள்ள வேண்டும். நான் மேல்நிலைப் பள்ளியில் இருந்தபோது அது எனக்குப் பீதியை உண்டாக்கியது. ஒருவேளை, நான் என்ன செய்கிறேன் என்று தெரியாதபோது, உடன் பயிலும் மாணவர்கள் யாருடைய தலையிலாவது சுத்தியலால் அடித்து விடுவேனோ என்று பயந்தேன். மேல்நிலைப் பள்ளி வயதில் இருக்கும்போது, உண்மையில் நீ யார் என்று உனக்குத் தெரியாது இல்லையா? மேலும் நினைவில்லாமல் போவதற்கான வலியை இதனோடு சேர்த்துக்கொள், உன்னால் தாங்கிக் கொள்ள முடியாது.”

நான் அமைதியாகத் தலையசைத்தேன். அவன் சொல்வது சரியாக இருக்கலாம்.

“இதனால் பள்ளிக்குச் செல்வதையே கிட்டத்தட்ட நிறுத்திக்கொண்டேன்” என் காதலியின் சகோதரன் தொடர்ந்தான். “இதுகுறித்து எவ்வளவு யோசித்தேனோ, அவ்வளவு பீதியடைந்தேன், பள்ளிக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை என்னால் உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. அம்மா என் சூழ்நிலையை ஆசிரியரிடம் விளக்கினார், பெரும்பாலான நாள்கள் பள்ளிக்கு வராமல் இருந்தாலும் என்னுடைய நிலையை விதிவிலக்காகக் கொண்டு என்னைத் தேர்வெழுத அனுமதித்தனர். எனது பள்ளி என்னைப்போன்ற சிக்கலான மாணவனை எவ்வளவு சீக்கிரம் வெளியே அனுப்ப முடியுமோ அவ்வளவு நல்லது என்று நினைத்திருக்கலாம். ஆனால் நான் கல்லூரிக்குச் செல்லவில்லை. என்னுடைய மதிப்பெண்கள் அவ்வளவு மோசமில்லை, என்னால் ஏதேனும் கல்லூரியில் சேர்ந்திருக்க முடியும், ஆனால் எனக்கு வெளியே செல்லும் தைரியம் இல்லை. அப்போதிருந்து வீட்டிற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். நாயை வெளியே நடைக்கு அழைத்துச் செல்வதுண்டு, அதைத்தவிர வீட்டைவிட்டு வெளியேறுவது அபூர்வம். சமீப நாட்களாக முன்னளவு பீதி அல்லது வேறெதையும் உணரவில்லை. விஷயங்கள் இன்னும் கொஞ்சம் அமைதியடைந்தால் அநேகமாகக் கல்லூரிக்குச் செல்லத் தொடங்குவேன் என்று நினைக்கிறேன்.”

அதற்குப்பின் அவன் அமைதியானான், நானும் அமைதியாக அமர்ந்திருந்தேன். என்ன பேசுவதென்று எனக்குப் புரியவில்லை. என் காதலி தனது சகோதரனைக் குறித்து ஏன் எதுவும் பேசவிரும்புவதில்லை என்று புரிந்தது.

“எனக்காக அந்தக் கதையை வாசித்ததற்கு நன்றி” என்றான். “‘சுழலும் சக்கரங்கள்’ மிக நன்றாக இருந்தது. நிச்சயமாக அது சோகமான கதை, ஆனால் அதன் சிலவரிகள் உண்மையில் என்னைப் பாதித்தன. உனக்கு நிச்சயம் காஃபி வேண்டாமா? தயாரிக்க ஒரு நிமிடம்தான் ஆகும்.”

“இல்லை, பரவாயில்லை. நான் சீக்கிரம் கிளம்புவது நல்லது.”

அவன் மீண்டும் சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். “நீ ஏன் ஒருமணி வரையில் காத்திருக்கக் கூடாது, ஒருவேளை, அப்போதும் யாரும் வரவில்லை என்றால் நீ கிளம்பலாம். நான் மேலே என்னறையில் இருப்பேன். எனவே நீ தனியாக இருக்கலாம். என்னைப் பற்றிய கவலை வேண்டாம்.”

நான் சரியென்று தலையசைத்தேன்.

“சயோகோவுடன் வெளியே செல்வது சுவாரஸ்யமாக இருக்கிறதா?” என் காதலியின் சகோதரன் மீண்டும் ஒருமுறை கேட்டான்.

நான் ஆமோதிப்பாகத் தலையசைத்தேன். “சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.”

“எது சுவாரஸ்யம்?”

“அவளைப்பற்றி எனக்குத் தெரியாத விஷயங்கள் எவ்வளவு இருக்கின்றன என்பது” என்று பதிலளித்தேன். மிக நேர்மையான பதில் என்று நினைக்கிறேன்.

“ஹ்ம்ம்…” என்றான் அதைப்பற்றி யோசித்தபடி. “நீ இதைக் குறிப்பிட்டபின் எனக்குத் தோன்றுகிறது. அவள் என் தங்கை, ரத்த உறவு, ஒரே மரபணு எல்லாமும், நாங்கள் இருவரும் அவள் பிறந்ததிலிருந்து ஒரே கூரையின்கீழ் வாழ்கிறோம். ஆனால் அவளைப்பற்றி என்னால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்கள் டன் கணக்கில் உள்ளன. எனக்கு அவளைத் தெரியவில்லை – இதை எப்படிச் சொல்வது? எது அவளுக்கு உந்துதல் அளிக்கக்கூடியது? அந்த விஷயங்களை எனக்காக நீ புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் இருப்பதே நல்லது எனும்படியான சில விஷயங்களும் இருக்கும் என்றாலும்.”

கையில் காஃபி குவளையோடு அவன் நாற்காலியிலிருந்து எழுந்தான்.

“எப்படியோ, உன்னால் முடிந்தவரை முயற்சி செய்” என்றான். மற்றொரு கையை என்னை நோக்கி அசைத்துவிட்டு அந்த அறையை விட்டுச் சென்றான்.

“நன்றி” என்றேன். 

 

ரு மணி ஆகியும் யாரும் திரும்பி வருவதுபோல் தெரியவில்லை. எனவே நான் தனியாக முன்பக்கக் கதவுக்குச் சென்றேன். செருப்பை மாட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன். பைன் மரங்களின் காட்டைக் கடந்து ரயில் நிலையத்திற்குச் சென்று ரயிலில் ஏறி வீட்டிற்கு வந்துசேர்ந்தேன். அதுவொரு வித்தியாசமான, அசைவற்ற மற்றும் அமைதியான இலையுதிர் காலத்து ஞாயிற்றுக்கிழமை மதியம்.

இரண்டு மணிக்குப் பிறகு காதலியிடமிருந்து தொலைபேசியழைப்பு வந்தது. “நீ அடுத்த ஞாயிற்றுக்கிழமைதான் வருவதாக இருந்தது” என்றாள். எனக்கு அதில் முழு ஒப்புதல் இல்லை. ஆனால் அவள் அந்த விஷயத்தில் மிகவும் தெளிவாகயிருந்தாள் என்பதால் ஒருவேளை, அவள் சொல்வதுகூடச் சரியாக இருக்கலாம். அவளது இடத்திற்கு ஒருவாரத்திற்கு முன்னதாகச் சென்றதற்காக பணிவுடன் மன்னிப்புக் கேட்டேன். 

அவளது வீட்டில் காத்திருந்தபோது நானும் அவளது அண்ணனும் உரையாடலில் ஈடுபட்டிருந்தோம் என்று அவளிடம் கூறவில்லை அநேகமாக ‘உரையாடல்’ என்பது சரியான வார்த்தையாக இல்லாமல் இருக்கலாம், ஏனென்றால் அடிப்படையில் நான் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அகுதகவாவின் ‘சுழலும் சக்கரங்கள்’ கதையை அவனுக்குப் படித்துக் காட்டியதை, அவன் தனக்கிருந்த நினைவிழப்பு நோய் குறித்து என்னிடம் கூறியதை அவளிடம் சொல்லாமல் இருப்பதே சரி என்று எனக்குத்தோன்றியது. ஒருவேளை, இந்த விஷயங்களை அவன் அவளிடம் சொல்லவில்லை என்றால் நான் சொல்வதற்கு எவ்விதக் காரணங்களும் இல்லை.


தினெட்டு வருடங்கள் கழித்து அவளது சகோதரனை மீண்டும் சந்தித்தேன். அது அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதி. அப்போது எனக்கு முப்பத்தைந்து வயது, டோக்கியோவில் என் மனைவியுடன் வசித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய வேலை என்னை எப்போதும் பரபரப்பாக வைத்திருந்ததால் மிக அரிதாகத்தான் மீண்டும் கோபேவுக்கு சென்றேன். 

அது பின்மதியம், சரிசெய்யக் கொடுத்திருந்த கைக்கடிகாரத்தை வாங்குவதற்காக ஷிபூயாவிலுள்ள குன்றின்மீது நடந்துசென்று கொண்டிருந்தேன். ஏதோ சிந்தனையில் ஏறிக்கொண்டிருந்தபோது என்னைக் கடந்து சென்ற மனிதர் என்னை அழைத்தார். 

“எக்ஸ்க்யூஸ் மீ” என்றார். அவரிடமிருந்தது தெளிவான கான்சாய் பேச்சுவழக்கு. நான் நின்று திரும்பி அடையாளம் தெரியாத அந்த மனிதரைப் பார்த்தேன். அவருக்கு என்னைவிடச் சற்று வயது அதிகம், சிறிது உயரமும் அதிகம். அடர் சாம்பல் நிற ஜேக்கெட் அணிந்திருந்தார், காலர் இல்லாத வட்டக் கழுத்து, க்ரீம் நிற காஷ்மீர் ஸ்வெட்டர், அரக்குநிற காற்சட்டை அணிந்திருந்தார். குட்டையான தலைமுடி, தடகள வீரரைப் போன்ற தளராத உடற்கட்டு மற்றும் ஆழமான பழுப்பு நிறம் ( கோல்ஃப் விளையாட்டினால் உண்டாகும் பழுப்பு நிறம்போல இருந்தது). அவரது அம்சங்கள் மாசற்றவை என்று சொல்லமுடியாவிட்டாலும் ஈர்க்கக்கூடியதாக இருந்தன. அழகன் என்றே சொல்வேன். இம்மனிதர், தன்னுடைய வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியாக இருப்பவர் என்று எனக்குத் தோன்றியது. நன்கு வளர்க்கப்பட்ட மனிதர் என்பது என்னுடைய யூகம்.

“உங்கள் பெயர் எனக்கு நினைவில்லை, ஆனால் நீங்கள் என் தங்கையின் நண்பராகச் சிலகாலம் இருந்தீர்கள் இல்லையா?” என்று கேட்டார்.

நான் அவரது முகத்தை மீண்டும் கவனமாகப் பார்த்தேன். ஆனால் எனக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை.

“உங்களுடைய தங்கையா?”

“சயோகோ” என்றார். “நீங்கள் இருவரும் மேல்நிலைப் பள்ளியில் ஒரேவகுப்பில் படித்தீர்கள் என்று நினைக்கிறேன்.”

என் பார்வை க்ரீம்நிற ஸ்வெட்டரின் முன்பக்கத்திலிருந்த தக்காளிச்சாறின் கறையில் நிலைகொண்டது. அவர் சுத்தமான ஆடையை அணிந்திருந்தார். அந்தச் சிறுகறை, அதிலிருந்து தனித்துத் தெரிந்தது. திடீரென நினைவுக்கு வந்தது தூக்கக் கலக்கமான கண்களுடன், ரொட்டித் துணுக்குகள் ஒட்டிக்கொண்டிருந்த அடர்நீல வட்டக்கழுத்துடைய ஸ்வெட்டர் அணிந்திருந்த அந்தச் சகோதரன்.

“இப்போது ஞாபகம் வந்துவிட்டது” என்றேன். “நீங்கள் சயோகோவின் மூத்த சகோதரர். ஒருமுறை உங்கள் வீட்டில் சந்தித்தோம் இல்லையா?”

“நீங்கள் சொல்வது சரி. நீங்கள் அகுதகவாவின் ‘சுழலும் சக்கரங்கள்’ கதையை எனக்காக வாசித்தீர்கள்.”

நான் சிரித்தேன். “ஆனால் இவ்வளவு கூட்டத்தில் நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் ஒரேமுறைதான் சந்தித்திருக்கிறோம், அதுவும் வெகு காலத்திற்கு முன்பு.”

“ஏனென்று தெரியாது, ஆனால் நான் முகங்களை மறப்பதில்லை. மேலும், நீங்கள் மாறவேயில்லை.”

“ஆனால் நீங்கள் நிறைய மாறி விட்டீர்கள்” என்றேன். “இப்போது முற்றிலும் வேறுமாதிரியாக இருக்கிறீர்கள்.”

“இருக்கலாம் பாலத்தின் கீழே நிறையத் தண்ணீர் ஓடியிருக்கிறதே” என்றார் புன்னகைத்தபடி. “உங்களுக்கே தெரியும், என்னைப்பொறுத்தவரை விஷயங்கள் சிலகாலம் மிகச் சிக்கலானவையாக இருந்தன.”

“சயோகோ எப்படியிருக்கிறாள்?”என்று கேட்டேன்.

சங்கடமான பார்வையை ஒருபக்கம் வீசி தன்னைச்சுற்றியுள்ள காற்றின் அடர்த்தியை அளவிடுபவர் போல மெதுவாக மூச்சை இழுத்துப் பின்பு வெளியேற்றினார்.

“இங்கே தெருவில் நின்று பேசுவதற்குப் பதிலாக ஏன் எங்காவது அமர்ந்து பேசக்கூடாது? அதாவது, நீங்கள் வேலையாக இல்லையென்றால்” என்றார்.

“அவசர வேலை எதுவும் இல்லை” என்றேன்.

 

யோகோ காலமாகிவிட்டாள்” என்று நிதானமான குரலில் கூறினார். நாங்கள் அருகிலிருந்த காஃபி விடுதியில், பிளாஸ்டிக் மேசையொன்றில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம்.

“காலமாகிவிட்டாளா?”

“இறந்து விட்டாள். மூன்று வருடத்திற்கு முன்பு.”

பேச்சற்றுப் போனேன். வாய்க்குள் நாக்கு வீங்கிக்கொண்டது போல் உணர்ந்தேன். சேரும் எச்சிலை விழுங்குவதற்கு முயற்சி செய்தேன், ஆனால் முடியவில்லை.

நான் கடைசியாக சயோகோவைப் பார்த்தது இருபது வருடங்களுக்கு முன்னால், அப்போதுதான் அவளுக்கு ஓட்டுநர் உரிமம் கிடைத்திருந்தது, கோபேயின் ரோக்கோ மலை உச்சிக்கு, அவளது அப்பாவின் வெள்ளைநிற டொயோட்டா கிரௌன் வண்டியில் என்னை அழைத்துச்சென்றாள். அவள் வண்டி ஓட்டும் விதம் சற்று மோசமாகத்தான் இருந்தது, ஆனால் மிகவும் உற்சாகமாக வண்டியை ஓட்டினாள். யூகிக்கக்கூடியதாக வானொலி பீட்டில்ஸின் பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தது. அது எனக்கு நன்றாக நினைவிலுள்ளது. “ஹலோ, குட் பை.” you say goodbye and I say hello. நான் முன்பே சொன்னதுபோல அந்தக் காலகட்டத்தில் அவர்களது பாடல்கள் எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தன. அவள் இறந்து விட்டாள், இந்த உலகத்தில் அவள் இனியில்லை என்ற உண்மையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை எப்படிச் சொல்வது என்று எனக்குப் புரியவில்லை அதீத கற்பிதமாகத் தோன்றியது.

“எப்படி அவள்…. இறந்தாள்?” என்றுகேட்டேன், வாய் உலர்ந்து போனது.

தனது சொற்களைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பவர் போல, “தற்கொலை செய்து கொண்டாள்” என்றார். “அவளுக்கு இருபத்தாறு வயதிருக்கும்போது அவள் வேலைசெய்த காப்பீட்டு நிறுவனத்தில் தன்னுடன் வேலைசெய்தவரைத் திருமணம் செய்துகொண்டாள், இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டாள், பிறகு தற்கொலை செய்துகொண்டாள். அவளுக்கு முப்பத்து இரண்டு வயதுதான் ஆகியிருந்தது.”

“அவளுக்குக் குழந்தைகள் இருந்தனவா?”

முன்னாள் காதலியின் சகோதரர் ஆமோதிப்பாகத் தலையசைத்தார். “மூத்தது ஆண் குழந்தை, இளையது பெண்குழந்தை. இப்போது அவளது கணவர்தான் குழந்தைகளைக் கவனித்துக் கொள்கிறார், நானும் அவ்வப்போது சென்று பார்ப்பேன். அற்புதமான குழந்தைகள்.”

எனக்கு இன்னமும் இவையனைத்தின் நிதர்சனத்தைத் தொடர்வது சிக்கலாக இருந்தது. என் முன்னாள் காதலி தற்கொலை செய்து கொண்டுவிட்டாள், அதுவும் இரண்டு சிறு குழந்தைகளைக் கைவிட்டு விட்டு?

“அவள் ஏன் அப்படிச் செய்யவேண்டும்?”

அவர் தலையசைத்தார். “ஏன் என்று யாருக்குமே தெரியாது. அவள் கவலையில் அல்லது மனச்சோர்வில் இருப்பதாகக் காட்டிக்கொள்ளவில்லை. அவளது உடல்நிலை நன்றாகத்தான் இருந்தது, அவளுக்கும் அவளது கணவருக்குமிடையே உறவும் நன்றாகவே இருந்தது, தன் குழந்தைகள் மீது மிகுந்த அன்போடு இருந்தாள். மேலும், அவள் கடிதமோ அல்லது வேறு எதுவுமோ விட்டுச் செல்லவில்லை. அவளது மருத்துவர் அவளுக்குத் தூக்க மாத்திரைகளைப் பரிந்துரைத்திருந்தார், அவள் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரித்து மொத்தமாக ஒரே முறையில் எடுத்துக்கொண்டுவிட்டாள். எனவே தன்னை, கொன்றுகொள்ளத் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள் என்று தெரிகிறது. அவள் உயிரைவிட விரும்பி, ஆறு மாதங்களாக, சிறுகச்சிறுக மாத்திரைகளைச் சேமித்து வைத்திருந்திருக்கிறாள். இது திடீரென்று உருவான தூண்டல் அல்ல.”

நான் வெகுநேரம் அமைதியாக இருந்தேன். அவரும் அவ்வாறேயிருந்தார். இருவரும் அவரவர் சிந்தனையில் மூழ்கியிருந்தோம்.

அந்த நாள், ரோக்கோ மலையின் உச்சியிலிருந்த கஃபேயில் வைத்து நானும் என் காதலியும் பிரிந்தோம். நான் டோக்கியோவில் இருந்த கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தேன், அங்கிருந்த பெண்ணுடன் எனக்குக் காதல் ஏற்பட்டிருந்தது. நான் வெளிப்படையாக அனைத்தையும் அவளிடம் ஒப்புக்கொண்டேன், அவள் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தனது கைப்பையை எடுத்துக்கொண்டு எழுந்து கஃபேயைவிட்டு விரைந்து சென்றாள், என்னை அவ்வளவாகத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை.

நான் அங்கிருந்து கேபிள்கார் மூலம் தனியாக மலையிறங்கி வந்தேன். அவள் வெள்ளை நிற டொயோட்டா கிரௌன் வண்டியை வீட்டிற்கு ஓட்டிச்சென்றிருக்க வேண்டும். அது அழகான, வெளிச்சம் நிறைந்தநாள், கொண்டோலாவின் கண்ணாடி வழியாக கோபே முழுவதையும் பார்க்க முடிந்தது. அது அற்புதமான காட்சி. 

சயோகோ அதைத் தொடர்ந்து கல்லூரிக்குச் சென்றாள், பெரிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாள், தன்னுடன் வேலை பார்ப்பவரைத் திருமணம் செய்துகொண்டாள், குழந்தைகள் பெற்றாள், தூக்க மாத்திரைகளை சேமித்து வைத்தாள், பிறகு தற்கொலை செய்து கொண்டாள். 

அன்றில்லையென்றாலும் சிறிது காலத்திற்கு பிறகேனும் அவளைப் பிரிந்திருப்பேன். ஆனால் இன்னமும் நாங்கள் ஒன்றாகக் கழித்த வருடங்கள் குறித்த இனிய நினைவுகள் என்னிடம் உண்டு. அவள் என் முதல் காதலி. எனக்கு அவளை மிகவும் பிடிக்கும். அவள்தான் பெண்ணுடலை எனக்குக் கற்பித்தவள். நாங்கள் அனைத்து விதமான புதிய விஷயங்களையும் ஒன்றாக அனுபவித்தோம், அற்புதமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டோம், அனைத்தும் பதின்மத்தில் இருக்கும்போது மட்டுமே சாத்தியம் உள்ளவை. 

இப்போது இதைச்சொல்வதற்குக் கடினமாக உள்ளது, ஆனால் அவள் எப்போதும் அந்த தனிப்பட்ட மணிச்சத்தத்தை என் காதுகளுக்குள் உருவாக்கவில்லை. என்னால் எவ்வளவு உன்னிப்பாகக் கேட்க முடியுமோ கேட்டிருக்கிறேன், ஒருமுறைகூட அது ஒலிக்கவில்லை. துரதிர்ஷ்டவசமானதுதான். ஆனால் நான் டோக்கியோவில் சந்தித்த பெண் எனக்குள் அதை உருவாக்கினாள். இது உங்கள் விருப்பம்போல தர்க்கரீதியாக அல்லது ஒழுக்கமுறை சார்ந்து நீங்கள் தேர்ந்தெடுக்கும் விஷயமல்ல. ஒன்று, அது நிகழும் அல்லது நிகழாது. நிகழும்போது அதன் சொந்த இசைவின்பேரில் உங்களது பிரக்ஞைக்குள் அல்லது ஆன்மாவின் ஆழமானதொரு புள்ளிக்குள் நிகழும்.

 

ங்களுக்குத் தெரியுமா” என் முன்னாள் காதலியின் சகோதரர் கூறினார், “சயோகோ தற்கொலை செய்துகொள்வாள் என்று எனக்குத் தோன்றியதே இல்லை, ஒருமுறைகூட. உலகத்தில் இருக்கும் அனைவரும் தற்கொலை செய்துகொண்டாலும், அவள் உயிரோடு, நல்லபடியாக இருப்பாள் என்று புரிந்து வைத்திருந்தேன் தவறென்று பின்னால் தெரிந்தது. ஏமாற்றமடைகிற அல்லது தனக்குள் கவலையைப் புதைத்து வைத்துக்கொள்கிற வகையினளாக அவளை என்னால் பார்க்க முடிந்ததில்லை. நேர்மையாகச் சொன்னால், அவள் சற்று மேலோட்டமானவள் என்று நினைத்திருக்கிறேன். நான் எப்போதுமே அவள் மீது கவனம் செலுத்தியதில்லை, என் விஷயத்தில் அவளும் அப்படித்தான் இருந்தாள் என்று நினைக்கிறேன். ஒருவேளை, நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இல்லாமல் இருக்கலாம்…. உண்மையில், என்னால் என்னுடைய இன்னொரு தங்கையுடன் ஒத்துப்போக முடிந்தது. ஆனால், இப்போது சயோகோவிற்கு ஏதோ கெடுதல் செய்துவிட்டதாக உணர்கிறேன், அது எனக்கு வலியைத் தருகிறது. ஒருவேளை, நான் அவளைத் தெரிந்து கொள்ளவேயில்லையோ. அவளைப் பற்றிய எந்த விஷயத்தையும் நான் புரிந்து கொள்ளவில்லையோ. ஒருவேளை, நான் என்னுடைய சொந்த வாழ்க்கையிலேயே மூழ்கி இருந்துவிட்டேனா. ஒருவேளை, என்னைப்போன்ற ஒருவனுக்கு அவளது வாழ்க்கையைக் காப்பாற்றும் சக்தி இல்லையோ. ஆனால் அவளைப்பற்றி ஏதேனும் புரிந்துகொண்டிருக்க வேண்டும், அது அதிகமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இதைத் தாங்கிக்கொள்வதுதான் இப்போது மிகவும் கடினமாகயிருக்கிறது. நான் மிகவும் கர்வத்துடன், சுயநலமாக இருந்துவிட்டேன்.”

இதில் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. நானும்கூட அவளைப் புரிந்து கொள்ளவேயில்லை. அவரைப்போலவே, நானும் சொந்த வாழ்க்கையில் மூழ்கியிருந்தேன்.

எனது முன்னாள் காதலியின் சகோதரர் கூறினார்: “நீங்கள் அன்று எனக்குப் படித்துக் காண்பித்த அகுதகவாவின் ‘சுழலும் சக்கரங்கள்’ கதையில் ஒரு பகுதி வரும், விமானி ஒருவன் ஆகாயத்தில் உள்ள காற்றை சுவாசித்துப் பழகியபின் அவனுக்கு பூமியிலுள்ள காற்றைச் சுவாசிக்க முடியாமல் போகும்…. ‘விமானநோய்‘ என்று அழைப்பார்கள். உண்மையில் அப்படியான நோய் இருக்கிறதா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அந்த வரிகளை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறேன்.”

“அந்த சிலமணி நேரங்களுக்கு நினைவு நின்று போகக்கூடிய நிலை சரியாகி விட்டதா? “என்று கேட்டேன். விஷயத்தை சயோகோவிடமிருந்து மாற்ற விரும்பினேன் என்று நினைக்கிறேன்.

“ஓ, சரி, அதுவா…” கண்களைச் சுருக்கியபடி கூறினார்: “அது சற்று விசித்திரமானது, திடீரென்று என்னைவிட்டுப் போய்விட்டது. அது மரபணுக்கோளாறு, காலப்போக்கில் இன்னமும் மோசமடைந்திருக்க வேண்டும், அப்படித்தான் மருத்துவர் கூறினார், ஆனால் திடீரென்று அது காணாமல் போனது.  அது என்னிடம் இருந்ததேயில்லை என்பதுபோல, துர்ஆவி ஒன்று என்னிலிருந்து வெளியேற்றப்பட்டது போல.”

“இதைக் கேட்டதில் மகிழ்ச்சி” என்றேன். உண்மையிலேயே நான் மகிழ்ச்சியடைந்தேன்.

“உங்களைச் சந்தித்த சிறிது நாட்களிலேயே அது நடந்தது. அதன்பிறகு அப்படியான நினைவிழப்பு எதையும் நான் அனுபவிக்கவில்லை. ஒருமுறை கூட இல்லை. நான் அமைதியாக உணர்ந்தேன், நல்ல கல்லூரியில் இடைப்பருவத்தில் சேர்ந்து பட்டம் பெற்று, அப்பாவின் தொழிலை ஏற்றுக்கொண்டேன். அதிலிருந்து சில வருடங்களுக்கு விஷயங்கள் வேறு பாதையில் சென்றன, ஆனால் இப்போது இயல்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

“இதைக் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி.” என்று நான் மீண்டும் கூறினேன். “ஆக நீங்கள் சுத்தியலால் உங்கள் அப்பாவின் தலையிலடிப்பதில் இது முடியவில்லை.”

“நீங்கள் சில முட்டாள்த்தனமான விஷயங்களைக்கூட நினைவில் வைத்திருக்கிறீர்கள், இல்லையா” என்று அவர் சத்தமாகச் சிரித்தார். “இருந்தாலும் வியாபார நிமித்தமாக டோக்கியோவிற்கு அடிக்கடி வருவதில்லை, இவ்வளவு பெரிய நகரத்தில் உங்களைச் சந்திக்க முடிந்தது மிகவும் வினோதமானது. ஏதோவொன்று நம்மைச் சந்திக்க வைத்தது என்று நினைக்காமலிருக்க முடியவில்லை.”

“நிச்சயமாக” என்றேன்.

“நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் இவ்வளவுகாலமாக டோக்கியோவில்தான் இருந்தீர்களா?”

“நான் கல்லூரியில் பட்டம் பெற்றபிறகு உடனே திருமணம் செய்துகொண்டேன்” என்று அவரிடம் கூறினேன். “அப்போதிலிருந்து டோக்கியோவில்தான் வசிக்கிறேன். தற்சமயம் எழுத்தாளராக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன்.”

“எழுத்தாளரா?”

“ஆமாம். முழுமையாக இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட அளவு.”

“உண்மையிலேயே நீங்கள் வாய்விட்டுப் படிப்பதில் சிறந்தவர்” என்றார், அவர். “இப்போது நான் இதைச்சொல்வது உங்களுக்குச் சுமையாக இருக்கலாம், ஆனால் சயோகோவிற்கு உங்களைத்தான் அதிகம் பிடித்திருந்தது என்று நினைக்கிறேன்.”

நான் பதிலேதும் கூறவில்லை. அதன்பிறகு என் முன்னாள் காதலியின் சகோதரர் எதுவும் பேசவில்லை.

 

தோடு நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம். நான் சரிசெய்யக் கொடுத்திருந்த என் கடிகாரத்தை வாங்கச்சென்றேன், என் முன்னாள் காதலியின் மூத்த சகோதரர் மெதுவாக மலையிலிருந்து இறங்கி ஷிபுயா ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றார். கனமான ஜாக்கெட் அணிந்த அவரது உருவம் அந்த மதிய நேரத்துக் கூட்டத்தில் விழுங்கப்பட்டது.

அதன்பிறகு நான் அவரைச் சந்திக்கவே இல்லை. காலம் எங்களை இரண்டாவது முறையாக இணைத்தது. சந்திப்புகளினிடையே கிட்டத்தட்ட இருபதுவருட இடைவெளி, முன்னூறு மைல்கள் தள்ளியிருந்த நகரங்களில் வசித்த நாங்கள், மேசையில் அமர்ந்து காஃபியை அருந்தியபடி சிலவிஷயங்கள் குறித்துப்பேசினோம். ஆனால் இப்படியான விஷயங்கள் காஃபியின்போது பேசக் கூடியவையல்ல. எங்களுடைய பேச்சில் இன்னமும் முக்கியமான ஒன்று இருந்தது, எங்களுக்கு அர்த்தமுள்ளதாகத் தோன்றிய விஷயம், எங்களது வாழ்க்கையை நாங்கள் வாழும் விதத்தில் உள்ள ஏதோவொன்று. இருப்பினும் அது வெறும் குறிப்புதான், தற்செயலாக எங்களுக்கு அளிக்கப்பட்டது. முறைப்படுத்தப்பட்ட அல்லது ஸ்தூலமான வழியில் எங்கள் இருவரையும் இணைக்கக் கூடியதென எதுவுமேயில்லை. (கேள்வி: இவ்விரு மனிதர்களது வாழ்க்கையின் எக்கூறுகள் அவர்களுடைய இரண்டு சந்திப்புகள் மற்றும் உரையாடல்கள் வழி குறியீடாகப் பரிந்துரைக்கப்படுகிறது? )

‘பீட்டில்ஸுடன்’ எல்.பி. ரெக்கார்டை வைத்திருந்த அந்த அழகான இளம்பெண்ணையும் அதன்பிறகு நான் சந்திக்கவே இல்லை. சில சமயங்களில் நான் வியப்பதுண்டு அவள் இன்னமும் அந்த மேல்நிலைப்பள்ளியின் மங்கலான வெளிச்சம் உள்ள தாழ்வாரத்தில் 1964ஆம் வருடத்தில் தனது அரைப்பாவாடையின் ஓரங்கள் படபடக்க விரைந்து கொண்டிருக்கிறாளா? இப்போதும் அதே பதினாறு வயதில், ஜான், பால், ஜார்ஜ் மற்றும் ரிங்கோ பாதி வெளிச்சத்தில் இருக்கும் புகைப்படமுள்ள அந்த அற்புதமான பாடல் தொகுப்பினை, அவளது வாழ்க்கையே அதில் அடங்கியிருப்பது போல இறுகப் பற்றியபடி. 


  1. எல்.பி. – இசைத்தட்டு.
  2. துணிச்சலுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த ஜெர்மானிய இராணுவ விருது. 1813 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.


ஹருகி முரகாமி

ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கில மொழியாக்கம்: பிலிப் கேப்ரியல்.

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:  ஸ்ரீதர் ரங்கராஜ்

1 COMMENT

  1. இசையும் இலக்கியமும் பொதிந்த சராசரி வாழ்க்கையின் அதிசயத் தருணங்களைப் பேசும் அற்புதமான சிறுகதை. தேர்ந்த தமிழாக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.