பூனாச்சி – தங்கி வாழ்தலின் துயரம்


மிழின் முதல் சிறுகதை என்று பரவலாக ஒத்துக் கொள்ளப்படும் குளத்தங்கரை அரசமரத்தின் கதை சொல்லி அந்த அரச மரம்தான். டால்ஸ்டாயின் கஜக்கோல் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை போன்ற படைப்புகள் மனிதர்கள் அல்லாத கதை சொல்லலுக்கான உதாரணங்களாக உடனடியாக நினைவுக்கு வருகின்றன. கருணாநிதியின் குப்பைத் தொட்டி என்றொரு கதையில் குப்பைத்தொட்டி கதைசொல்லியாக வருகிறது.  மனிதரல்லாத ஒரு பாத்திரத்தை முதன்மைப்படுத்துவது புனைவில் ஒரு மாயத்தன்மையை கூட்டுகிறது. சில சமயங்களில் ஜடப்பொருட்களில் அல்லது மனிதரல்லாத உயிர்கள் இதுபோன்ற மனித உணர்வுகள் ஏற்றப்படுவது கையறு நிலையை சுட்டுவதாகவும் அமைந்து விடுகிறது. உதாரணமாக குளத்தங்கரை அரசமரத்தையே எடுத்துக் கொள்ளலாம். வெல்ல வேண்டிய ஒரு காதல் தன் வேரடியில் தோற்றுப்போய் சிதைவதன் சாட்சியாக ஏதும் செய்ய இயலாத ஒன்றாக அந்த அரச மரம் அங்கு நின்று கொண்டிருக்கிறது. சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதையில் வரும் புளியமரம் ஒரு காலகட்டம் மாறுவதன் சாட்சியாக நின்று அதன்பின் அழிகிறது. 

இவற்றில் இருந்து மாறுபட்ட ஒன்றாக மனிதர்களே சாமான்ய மனிதனுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரங்கள் ஏதும் அற்று விலங்குகளைப் போல நடத்தப்படுவதை ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலில் காண்கிறோம். ஒரு வகையில் தன் சொந்த வாழ்க்கையின் மீதே எந்தவொரு அதிகாரமும் இல்லாத மனிதர்கள் விலங்குளாக மாற்றப்பட்டு அலைகழிக்கப்படுவதை அந்த நாவல் சித்தரிக்கிறது என்று சொல்லலாம்.

பெருமாள் முருகனின் பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை என்ற இந்த புனைவும் தலைப்பு சுட்டுவதைப் போலவே ஒரு வெள்ளாட்டினை மையமிட்டு நிகழ்கிறது. ஒரு வகையில் இந்த நாவலும் ஆடுகளின்  கையறு நிலையைத்தான் சொல்கிறது. ஆடுகள் என்பதை மனிதர்களாகவும் பொருத்திக் கொண்டு வாசிக்கும் சுதந்திரத்தை நாவல் வழங்குகிறது. பெருமாள் முருகன் இந்த கதை ‘எங்கு’ நடைபெறுகிறது என்று நம்மிடம் சொல்வதில்லை. மக்களுடைய வட்டார வழக்கு சூழல் சித்தரிப்புகளில் இருந்து புனைவின் களம் எது என ஊகிக்க இடம் இருந்தாலும் புனைவு நிகழும் பிரதேசம் எங்குமே ஆசிரியரால் சுட்டப்படுவதில்லை. அவருடைய முந்தைய நாவலொன்றுக்காக அவர் எதிர்கொள்ள நேர்ந்த சிக்கல்கள் ஆசிரியரை பிரதேசத்தின் பெயரை பயன்படுத்துவதில் இருந்து தடுத்திருக்கலாம் என்று ஊகிக்க இடமிருக்கிறது. இந்த சூழல் சார்ந்த திட்டவட்டமின்மை பெரும்பாலும் ஒரு அரசியல் சூழலுக்கு எதிரான கடுமையான விமர்சனத்தை முன் வைக்கும்போதே தவிர்க்க முடியாததாகிறது. மார்க்குவஸின் மகோந்தா, ஜார்ஜ் ஆர்வெல்லின் ஓசோனியா போன்றவை தங்களுடைய அடையாளங்களை மறைத்துக் கொள்வதற்கு நியாயம் செய்யும் படைப்புகளாகின்றன. ஆனால் பெருமாள் முருகன் இந்த ஆக்கத்தில் சூழலின் அடையாளத்தை மறைத்து வைப்பதற்கு நாவலின் கருப்பொருள் எந்தவித நியாயத்தையும் செய்திருப்பதாக தெரியவில்லை.

மகளை மணமுடித்துக் கொடுத்துவிட்டு ஒரு கிராமத்தில் தனித்து வசிக்கும் ஒரு வயதான தம்பதியினருக்கு பூனாச்சி ஒரு சிறிய (புழுக்கை போன்ற) ஆட்டுக்குட்டியாக கிடைக்கிறாள். பூனாச்சியின் வளர்ச்சியும் இந்த கிழத்தம்பதியினருடனான அவளது வாழ்க்கையும் புனைவின் உடலை கட்டமைக்கின்றன.ஆடு வளர்ப்பு என்பது கிராமங்களின் முக்கியமான வருவாய் வழிகளில் ஒன்று. விடுமுறை நாட்களின் அதிகாலைகளில் தீனமாக குரல் கொடுத்தபடி இரு சக்கர வாகனத்தில் தூக்கிச் செல்லப்படும் ஆட்டினை  பெரும்பாலானவர்கள் கண்டிருப்பார்கள். உழைப்புக்கும் உழவுக்கும் பயன்படுவதாலேயே மாட்டின் மீதான நம்முடைய பார்வை வேறாக இருக்கின்றது. அதாவது கொல்லப்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மட்டும் மாடுகள் வளர்க்கப்படுவதில்லை. நாய்கள் ஏறக்குறைய குடும்ப உறுப்பினர்கள் ஆகிவிடுகின்றன. ஆனால் ஆடுகள் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. நூற்றாண்டுகளாக வெட்டப்பட்டுக் கொண்டே இருப்பதாலோ என்னவோ அவற்றின் முகமே துயரத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்ற பாவத்தை அடைந்து விடுகின்றனர். பாவப்பட்டவர்களையும் உள்ளொடுங்கியவர்களையும் நாம் ஆடுகளாகவே காணப்பழகி இருக்கிறோம். எப்போதும் ஆட்டுக்குட்டியுடன் இருக்கும் ஏசு கிறிஸ்து ஒரு பிரபலப் படிமம். பலியாடு!

 பூனாச்சி இந்த பலியாடு என்ற படிமத்திற்கும் ஆசிரியர் சித்தரிக்க விரும்பும் அரசியல் சூழலுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் நாவல் என்று வகுத்துவிடலாம். நாவல் பேச முனையும் அல்லது பேச விரும்பும் அரசியல் கதைப்போக்குக்கு எந்தவித வலுவும் சேர்க்கவில்லை. தொடக்க அத்தியாயங்கள் தாயற்ற குட்டியாக கிழவியிடம் வரும் பூனாச்சி தாய்ப்பால் கிடைக்காமல் இன்னலுக்கு ஆளாவதும் பூனாச்சியை கிழவி காப்பாற்றுவதும் என்பதாக செல்கின்றன. சட்டென ஒரு அத்தியாயத்தில் ஊரில் புதிதாகப் பிறக்கும் ஆட்டுக்குட்டிகளுக்கு ‘காது குத்த’ வேண்டும் என்றொரு நடைமுறை கதை நிகழும் தேசத்தில் இருப்பதாக ஒரு அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. ஆடுகளின் காதில் ஒரு வில்லை மாட்டப்பட்டு அதில் அந்த ஆட்டுக்கான பிரத்யேக எண் கொடுக்கப்படுகிறது. பூனாச்சி ஒரு அந்திவேளையில் கிழவனுக்கு பாகாசுரனால் கொடுக்கப்பட்ட ஆட்டுக்குட்டி. ஆனாலும் பூனாச்சியை தன் ஆடுகளில் ஒன்று ஈன்றதாகச் சொல்லி கிழவி பதிகிறாள். கதைப் போக்கில் அடிக்கடி சொல்லப்படும் பாகாசுரன், மேசாசுரன் என்ற ‘அசுர’ப் பெயர்கள் நாவலில் கூடுதலாக எதையும் சேர்ப்பது போலத் தெரியவில்லை. அரசாங்கத்துக்கு அஞ்சி குடிகள் நடக்க வேண்டியதன் தேவை மீதான விமர்சனமாக இந்த ‘காது குத்துதல்’ சடங்கை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த அரசாங்கம் சார்ந்த பகுதிகள் நாவலில் செயற்கையாக இணைக்கப்பட்ட தோற்றத்தை கொண்டிருக்கின்றன. 

மக்களிடம் கடுமை காட்டும் அவர்களை கவனிக்கும் அரசாங்கம்,  அசுர லோகம் போன்ற பதங்கள் புனைவின் போக்கில் வலுவற்ற இழைகளாக திரிந்து நிற்கின்றன. ஆனால் பூனாச்சியும் அவளுடைய சக ஆடுகளும் வலுவாகச் சொல்லப்பட்டுள்ளனர். நாவலில் வரும் மனிதர்கள் கிழவன், கிழவி, மகள், மருமகன், அதிகாரி, மருத்துவன் என்றே குறிப்பிடப்படுகின்றனர்.ஆனால் ஆடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. இந்த காரணத்தினாலேயே மனிதர்களை விட ஆடுகளின் உலகம் நாவலில் மேலும் உயிர்ப்புடன் துலங்கி வருகிறது.

ஒரே ஒரு நாள் பெண்ணுடன் சேர்ந்திருக்க அனுமதிக்கப்பட்டு மறுநாள் விதைநீக்கம் செய்யப்படும் கடுவாயன் பூனாச்சி மேல் பெருங்காதல் கொண்ட பூவன் எதேழ்ச்சியாக கல்லடி பட்டு இறந்து போகும் ஊத்தன் என பூனாச்சிக்கும் பிற ஆடுகளுக்குமான உறவு நாவலில் நேர்த்தியாக சொல்லப்படுகிறது. ஆடுகள் குறித்த சித்திரம் பெரும்பாலும் இன்னொரு ஆடான பூனாச்சியின் வழியே சொல்லப்படுவதால் வலுவாகவே நாவலில் இடம்பெறுகின்றன. ஏழு குட்டிகளை ஈன்று அவற்றுக்கு பால் கொடுக்க இயலாத அவலம், தன் கண் முன்னேயே அத்தனை குட்டிகளும் விலை பேசி ஏற்றிச் செல்லப்படுவதை காணுதல் என காருண்யம் மிக்க ஒரு மனம் ஆட்டினை எண்ணி அடையும் அத்தனை அவசங்களும் பூனாச்சியின் வழியாக சொல்லப்படுகின்றன.

நாவலில் ஒரு பஞ்சம் சொல்லப்படுகிறது. அந்தப் பஞ்சம் பூனாச்சியின் வாழ்விலும் மனிதர்களின் வாழ்விலும் ஏற்படுத்தும் தாக்கங்களும் சொல்லப்படுகின்றன. ஆனால் அந்த பஞ்சம் நிகழும் நிலம் குறித்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்படியாக நாவலுக்குள் எந்த சித்தரிப்பும் இல்லாததால் பஞ்சம் ஒரு செய்தியாக மட்டுமே நாவலில் ஒலிக்கிறது. ஒரு சில வருடங்களே வாழக்கூடிய ஆட்டின் வழியாக இந்தக் கதையை சொல்லத் தேர்ந்து கொண்டது ஒரு நல்ல உத்தி என்றால் அந்த ஆட்டின் கால் ஊன்றி நிற்கும் நிலத்தின் அடையாளங்கள் மறைக்கப்படுவது வாசிப்பை அந்நியப்படுத்தி விடுகிறது.

பூனாச்சியை ஒரு ஆடு என்பதைத் தாண்டி வேறு எந்தெந்த இடங்களில் பொருத்தலாம் என்பதே நாவலின் மையக்கேள்வியாக இருக்க முடியும் என நினைக்கிறேன். பூனாச்சியின் வழியாக நாம் அறியநேரும் துயரங்கள் அனைத்தும் மனித இருத்தல் சார்ந்தவையாகவே உள்ளன. அந்த இருத்தல் பூனாச்சியை பொறுத்தவரை உறவுகளால் (கிழவன்,கிழவி) வலுவாகவும் அரசாங்கத்தால் சற்று மேம்போக்காகவும் கட்டுப்படுத்தப்படுகிறது. பூனாச்சி என்ற படிமத்தை மேலதிகமாக எடுத்துக் கொண்டு சென்று வாசிக்கும் வாய்ப்பை நாவல் தன்னுள் கொண்டிராததால் இது பூனாச்சி என்கிற ஒரு வெள்ளாட்டின் கதையாக மட்டுமே நின்று விடுகிறது.


-சுரேஷ் ப்ரதீப்

நூல் : பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை

ஆசிரியர்: பெருமாள் முருகன்

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்

விலை : ₹175

Previous articleபீட்டில்ஸுடன்
Next articleகட்டியங்காரனின் கூற்று
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.