Saturday, Dec 4, 2021
Homeசிறப்பிதழ்கள்சிறப்பிதழ் 1கட்டியங்காரனின் கூற்று

கட்டியங்காரனின் கூற்று


ரு சித்ரா பௌர்ணமியன்று நானும் சா.தேவதாஸும் கூத்தாண்டவர் கோவில் சென்றிருந்தோம்.  பேருந்தில் அமர்ந்திருந்த எங்களைச் சுற்றிலும் அரவாணிகளே நிரம்பியிருந்தனர். இதுவரை காணாத புதிய கிழ அரவாணிகள் முதல் சிறிய குழந்தை அரவாணிகள் வரை படுகளத்தில் அழுதுகொண்டிருந்த காட்சி இப்போதும் துயரத்தையே உருவாக்குகிறது. நாங்கள் அமர்ந்திருந்த பேருந்தைப் பார்ப்பவர்கள், எங்களையும் அரவாணிகள் என்று கூறலாம். அந்தப் பாக்கியம் யார் வழியாவது கிட்டியிருந்தால் ஆண் என்கிற சாபத்திலிருந்து விடுபட்டிருக்கலாம். இப்போது அரவாணிகள் என்ற வார்த்தைகளுக்குப் பதிலாகத் திருநம்பி, திருமங்கை என்று புழக்கத்தில் வந்திருக்கிறது. ஆத்மார்த்தமான வார்த்தைகள் அவை.  அங்கே நடந்த அரவாண் படுகளத்துக்கு அருகில் நிகழ்ந்த கூத்தில் ஏற்பட்ட அழுகையும் துயரமும் இந்த உலகத்திற்கானவை.  அங்கே நாடகம் என்பது இல்லாமல் போய், ஒரு வாழ்வாக ஒளிர்ந்தது. அந்தப் பௌர்ணமி வெளிச்சத்தில் ஒளிர்ந்த திருநம்பி, திருநங்கை முகங்கள் என்னுடைய தாயுடையதாகவும். தந்தையுடையதாகவும் நினைவு கூறியதை வியப்பேதும் இல்லை. என்னுடைய நாடகம் மீதான ஈர்ப்பு அங்கிருந்தே தொடங்கியது.

1995 களில் இலக்கியம் பயில சென்னைப் பல்கலைக்கழகம் சேர்ந்தேன். இலக்கியம் என்பதைக் கடந்து அங்கு மௌனக்குறம் நாடக உறுப்பினர்கள், ஆய்வாளராக இருந்தார்கள்.  அவர்கள் கிராமத்தான்கள் என்பது கூடுதல் விசேஷம்.  அந்தக் கிராமத்தான்கள் நவீன இலக்கியத்துடன், நாடகத்தின் ருசியையும் ஊட்டினார்கள்.  கோ. பழனி, அமைதி அரசு, ஸ்டாலின் எனத் தொடரும் கிராமத்தான்களின் உடல்கள் வாழ்வை நடித்துக்காட்டிக் கொண்டிருந்தன.  அவர்கள் வழியாகவே நாடகத்தின் மீதான விருப்பமும் கலைமீதான தேடலும் உருவாகின. ஒரு பக்கம் இவர்களைப் பிரதானமாகக் கொண்ட அ.மங்கையின் மௌனக்குறம், மறுபக்கம் பரிக்ஷா, கூத்துப்பட்டறை, நாடகக் குழுக்கள் யாவும் நவீன நாடகக்களனாக மாறி, அரங்க மரபை மீட்டு, நவீன சிந்தனையுடன் செயல்பட்டுவந்த காலம் அது.  நாடகர்களுடன் சிற்பிகள், இலக்கியவாதிகள், ஓவியர்கள் சேர்ந்து நாடகத்தை ஒரு கலையாக வளர்த்த காலம் அது.  சுபமங்களா இதழில் இந் நாடகக் குழுக்களின் செயல்பாட்டினைப் பற்றிய செய்திகளும் உரையாடல்களும் பேட்டிகளும் வந்தவண்ணம் இருந்தன. அல்லியன்ஸ் பிரான்சைஸ், மாக்ஸ்முல்லர் பவன், லலித் அகாதெமி வளாகம், சிற்றரங்கம் எனப் பல இடங்களில் நிகழ்ந்த நாடகங்களை ஒரு வாசகனாகவும் இலக்கிய விழுமியத்துடன் பார்த்திருக்கிறேன்.  புரிசை கண்ணப்ப தம்பிரான் கூத்து. எங்கள் ஊரில் இரவு வரை நடக்கும் கூத்துகள், நவீன நாடகங்கள் பார்வையுடன் நவீன இலக்கியம் பற்றிய புரிதலுடன் அலைந்துகொண்டிருந்த காலம் அது. நவீன இலக்கியம் குறித்த உரையாடல்களை அந்நாடக நடிகர்களுடன் உரையாடி இருக்கிறேன்.  அதி தீவிரம் என்பது வெகுஜனத்திற்கு அப்பாற்பட்டது என்கிற தொனியை, சமணக் குகைகளிலும் காடுகளிலும் நாங்கள் நிகழ்த்திய கூட்டங்கள் சாட்சி. அவற்றிற்கு ஒரு வகையில் தூண்டுதலாக இருந்தவை நாடகமாகவும் இருக்கலாம்.

மேற்காணும் செய்திகள் யாவும் உடல்மொழியின் கலை என்கிற வெளி ரங்கராஜனின் கட்டுரைத் தொகுதியை வாசிக்கும்போது, ஏற்பட்ட நினைவுகள்தான். 22 கட்டுரைகளில் 7 கட்டுரைகள் மட்டுமே இலக்கியம் சார்ந்தவை. மற்ற கட்டுரைகள் பாலசரஸ்வதி, சந்திரசேகர கம்பார், ந.முத்துசாமி, முருகபூபதி, தாகூர் ஆகிய நாடக ஆளுமைகள், நாடகம் பற்றிய விமர்சனம், தாகூரின் நாடக உரையாடல், நாடக மரபுகள், நாடகக் கருத்தாக்கங்கள் என விரிந்து செல்பவை. ஓவியர் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி தனிக்கட்டுரை ஒன்றும் உண்டு.

இந்த நூலில் வெளிப்படும் கருத்தும் வரலாறும் வெளி. ரங்கராஜன் அவர்களுக்கு உரியதுதான் என்றாலும், அது அவருக்கானதாக இல்லாமல், ஒரு வரலாறாக, ஒரு சாட்சியாக மாறிவிட்டிருக்கிறது. இலக்கியச்சூழலில் அமையும் அபத்தங்களும், நாடக வெளியில் நிகழும் நிறைவின்மையும் நிறைவும் எங்கும் பரவியிருக்கிற எழுத்தாக இருக்கிறது, இக்கட்டுரைகளில்.

இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஓர் அபத்தத்தையும், அவதானத்தையும் ஒருசேர மிளிர்வதைப் பார்க்கமுடிகிறது. பெரும்பாலான நாடகக்காரர்கள் நவீன இலக்கிய வாசிப்பைத் தீவிரமாகக் கொண்டவர்களாக இருந்தார்கள்.  கல்விசார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்களான தமிழ்ப் பண்டிதர்களின் இலக்கிய உணர்வும் அறிவும் கேலி செய்யப்படும் வகையில், நாடகக்காரர்களுடைய  இலக்கிய ஞானம் மிதமிஞ்சிப்  பெருகியிருந்தது. நவீனம் மட்டும் அல்லது மரபார்ந்த இலக்கியத்தின் மீதான பரிச்சயம் கொண்டவர்களாக இருந்தார்கள்.  அதற்கு உதாரணம் என ந.முத்துசாமி, பரிக்ஷா ஞானி, வெளி ரங்கராஜன், அ.மங்கை, பிரஸன்னா ராமசாமி, அ. ராமசாமி எனப் பட்டியல் நீளவே செய்யும். காப்பியங்களையும் பக்தி இலக்கியத்தையும் மறுவாசிப்பு செய்யும் நாடகங்களை உருவாக்குபவர்களாக இவர்கள் இருந்தார்கள். இவர்களில் சிலரிடம் உரையாடியும் இருக்கிறேன்.

நகுலன் அபத்தங்களை எழுதுபவராக இருப்பவராக இருப்பினும், விளக்கு விருது பெறும் நிகழ்வில் நோய்மை நீங்கிய ஒரு மனிதனாகத் தெரிந்ததாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.  அதுவும் இன்னொருவகையான அபத்தம்தான் போலும்.  

 பக்தி இலக்கியம் குறித்த கட்டுரையொன்றில், “பக்தி இயக்கம் மனித வாழ்க்கையை மகிழ்வுக்கும், கொண்டாட்டத்துக்கும் உரியதாக முன் நிறுத்தியது.  கடவுளைச் சார்ந்து நின்றால் ஊழ்வினை நீங்கும் என கடவுள் வழிபாட்டை மையப்படுத்தியது.  நுண்கலைகள் புலன் உணர்வைத் தூண்டும் என்று சமணம் அவைகளுக்கு எதிராக நின்றது.  பக்தி இலக்கியம் உலகியல் இன்பங்களை நுகர்ந்துகொண்டே இறைவனிடம் பக்தி செலுத்தலாம்“ என்று குறிப்பிடுகிறார். வெளி ரங்கராஜனின் பக்தி இயக்கத்தை ஒரு மறுவாசிப்பாகப் பார்க்கும்பொழுது, கல்வித் துறை சார் பக்தி அணுகுமுறை எவ்வளவு கேவலமாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.  சைவ, வைணவ இயக்கங்களின் செயல்பாடுகளை நுண் அரசியலாகப் பார்க்கும் கட்டுரைகள் இவை.  பக்தி இயக்கத்தின் தோல்வி அதிகாரம் ஆகும்போது தொடங்குவதாக எழுதுகிறார் இவ்வளவு நுணுக்கமாகக் கல்வி சார் பேராசிரியர்கள் சொல்லித் தந்ததில்லை. 

தொடர்ந்து சிறுபத்திரிக்கைகளை வாசித்துவருகிறேன்.  சிறுபத்திரிக்கை என்பது ஒரு மறைமுகமான இயக்கம். வெகுஜனத்தின் சுவைக்கு எதிரான ஒன்று. அல்லது தனிப்பட்ட, கூட்டு மனதின் பிரதிபலிப்பு  என்றும் சொல்லலாம்.  தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகள் சிறுபத்திரிக்கைகளிலிருந்தே தோன்றியிருக்கின்றனர். இலக்கிய வளர்ச்சியும் விவாதமும் அங்கிருந்தே தொடங்கியது.  இந்த உரையாடல் ஒன்றே மறுவாசிப்பைக் கோரியவை.  இம்மறுவாசிப்பே இலக்கியத்தை இன்னும் தீவிர ஒன்றாகப் பார்க்கப்பட்டது. அந்தச் சிறுபத்திரிக்கை தமிழ் இலக்கியத்தில் தோன்றி வளர்ந்த கதையைத்தான் “தமிழில் சிறுபத்திரிக்கை இயக்கம்“ என்ற கட்டுரை விவாதிக்கிறது. இக்கட்டுரையின் கூடுதலான அம்சம், சிறுபத்திரிக்கையின் லட்சணங்களை, சிறுபத்திரிக்கைகளைக் குறிப்பிடுவதாகும். அஃக், முன்றில் காலத்து இதழ்களைக் குறித்தும், அதில் வெளியான கதைஞர்களைக் குறித்தும் குறிப்பிடுகிறார். ஒரு எழுத்தாளரின் ஆகச் சிறந்த கதைகள் யாவும் சிறுபத்திரிக்கைகளில்தான் வந்திருக்கின்றன. சிறுபத்திரிக்கையைப் புறக்கணிப்பதும் வெகுஜனத்தை நோக்கிப் பயணிப்பதும் அவலமாகவும் வெட்கக்கேடாகவும் பார்க்கப்பட்ட காலம் அது. அதன் இன்றைய தேவையையும் அது அறுதியிட்டுக் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாகவே, சமகால இலக்கிய உரையாடல்கள் கட்டுரையை நாம் பார்க்கவேண்டும்.  வெகுஜன உரையாடல் தளத்திலிருந்து விடுபட்ட தீவிர உரையாடல் குகைகளிலும் காடுகளிலும் நிகழ்ந்தேறின.  ஒரு சாக்கடையில் புத்தகம் வீசுவது வழியாக ஒரு புத்தக வெளியீடு நிகழ்ந்தேறியதும் உண்டு. போர்ஹே குறித்த உரையாடல் சமணக்குகையில் நடந்தேறியது.  அருவிகள், காடுகள், மலைகள், தேரிக் காடுகளில் உரையாடல் நிகழ்ந்தது. இன்று சமூக ஊடகங்களில் நிகழும் உரையாடல்களின் அபத்தங்களையும் இக்கட்டுரையில் எழுதுகிறார்.  ஒரு கலாச்சாரத்தின் உயிர்ப்புக்கு உரையாடல்கள் முடிவற்று தொடரவேண்டிய நிலை உள்ளதையும் குறிப்பிடுகிறார்.  சிறுபத்திரிகை இயக்கம் என்பது இலக்கியம், ஓவியம், சிற்பம் ஆகிய படைப்பாளிகள் கொண்ட கூட்டு இயக்கமாகச் செயல்பட்ட காலம் அப்போது. சிறுபத்திரிக்கைகளையும் முன்னோடிகளையும் தவிர்த்துத்  தனித்தனியாகச் செயல்பட்டுத் தோல்வியுறும் படைப்பாளிகளே அதிகம். 

புதுமைப்பித்தன் கதைகள் நீக்கம் என்ற கட்டுரையில் சென்னைப் பல்கலைக்கழகம் தலித் வாழ்வைக் குறித்த தவறான சித்தரிப்பை உடைய புதுமைப்பித்தனின் கதைகளை நீக்கியதைப் பற்றி ஒரு விரிவான ஆழமான உரையாடலை முன்வைக்கிறார் ஆசிரியர். நவீன இலக்கியத்தைப் புரிந்துகொள்ள இயலாத அசடுகள்தான் அவர்கள்.  ஒரு படைப்பு சாதிய அரசியலுக்கு உட்படும்போது, அது மறுவாசிப்புக்கானது; நிராகரிப்பிற்கானது அல்ல. மேலும் ஒரு படைப்பு இன, சாதி, அரசியலுக்கு உட்படும்போது படைப்புடன் படைப்பாளியும் உயிரோடு எரிக்கவும்படலாம். அது அந்த எதிர்த்தரப்பின் பலம், பலவீனம் பொறுத்த ஒன்று. இதன்மூலம் நம் சமூகம் நுண் திறன்களை இழந்துகொண்டிருப்பதாக ஆதங்கப்படுகிறார் ரங்கராஜன்.

கலையும் மனப்பிறழ்வும், நடனம் அனுபவம் சடங்காகும் கலை, ஆகிய கட்டுரைகள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளாக இருக்கின்றன. இதை இலக்கியப் பிரதியாகவும் நாடகப் பிரதியாகவும் கொள்ளலாம். இரண்டும் அறிவார்ந்த தளங்களில் இயங்குபவை. ஒன்று உளவியல் வழியாகப் பார்க்கப்படுகிறது எனில், இன்னொன்று அறிவுநிலையிலிருந்து எழுதப்படுவதாகப் படுகிறது.   இக்கட்டுரைகளில் வெளிப்படும் இருண்மையும் வரலாறும் அக்கட்டுரை விரிவான தெளிவான உரையாடலை முன்வைக்க முடியாமல் போகிறது. அது போர்ஹேயிடமும் யோஹனிடமும் இருக்கும் ஒரு சிக்கல்தானே தவிர கட்டுரையாளரிடம் இல்லை.

நாடக ஆளுமைகளில் பால சரஸ்வதி குறித்தும் பூபதி குறித்தும் ந.முத்துசாமி  குறித்துமான கட்டுரைகள் நுண்ணிய பார்வை கொண்டவை. அதிலும்  பரதநாட்டியம் குறித்த அணுகுமுறைகள் பால சரஸ்வதிக்கும். ருக்மணி அருண்டேலுக்கும் எவ்வாறு வேறுபட்டிருக்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ருக்மணிதேவியின் தூய்மைவாதத்திற்கு எதிராக, சிருங்காரத்தைக் கலையை அழைத்துச்செல்வதை நோக்கமாகக் கொண்டவர் பாலசரஸ்வதி என்கிறார்.  கடவுளர்களுடன் ஒரு அத்யந்த நெருக்கத்தையும் நடனத்தை இறைமையுடன் உரையாடுவதற்கான ஒரு தளமாகவும் பாலசரஸ்வதி பயன்படுத்தியுள்ளார் என்பதைக் கட்டுரை தெளிவாக்குகிறது. 

ந.முத்துசாமியின் 50 ஆண்டுகால நாடக இயக்கத்தில், கூத்தை நவீன நாடகத்திற்குக் கொண்டுசென்றதை எழுதுகிறார்.  கூத்திலிருந்து சூத்ரதாரி என்ற அம்சத்தை ந.முத்துசாமி தேர்ந்தெடுத்துக்கொள்வதாகக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த சுவரொட்டிகள், கட்டியங்காரன், உந்திச்சுழி, நற்றுணையப்பன், இங்கிலாந்து, படுகளம், அர்ச்சுனன் தபசு ஆகிய நாடகங்களின் மையங்கள், அவற்றில் ஒளிந்துள்ள அரசியல், அவை பார்வையாளர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களைச் சுருக்கமாகவும் ஆழமாகவும் எழுதுகிறார். “நற்றுணையப்பன் நாடகம் குப்பை, நறுமணம், காலம் கடத்தும் நூலேணி, எம்.ஜி.ஆரின் பிம்ப அரசியல், புஞ்சை நற்றுணையப்பன் என சமூகத்தில் இயங்கும் பல சரடுகளை ஒரு கொலாஜ் பாணியில் ஒருங்கிணைத்தது.  ந.முத்துசாமி நாடகங்களைப் பற்றிச் சொல்லும்போது, அவை கருத்து ரீதியிலும் தொழில்நுட்ப ரீதியிலும் பல சோதனைகளை முன்வைத்தவை எனக் குறிப்பிடுகிறார்.  நாட்டுப்புற இசை, கூத்தைச் சுவீகரித்த நாடகங்கள் அவருடையவை எனவும் எழுதுகிறார்.  கூத்துக்கும் நவீன நாடகத்திற்குமான இடைவெளியைப் பெரிதும் குறைத்தவர் ந.முத்துசாமி என்கிறார் அவர். அதற்கான உதாரணமாக அவரின் நீண்ட சிறகுகள் உடைய வயோதிகன் என்னும் மார்க்வெஸ் கதை, கூத்து மற்றும் நவீன நாடகப் பாணியின் கலவையில் அமைந்து நடத்தப்பட்டதை நினைவுகூர்கிறார். 

தேரிக்காட்டில் செம்மண் பரப்பில் முருகபூபதியின் நாடகத்தை இருளில் ரசித்திருக்கிறேன்.  வசனம் என்னும் மொழி தோற்று, உடலின் மொழியால் நாடகம் உயிர்ப்பாகிக் காற்றில் அலைந்துகொண்டிருந்ததது.  பார்ப்பவர்கள் தானும் நாடகத்தில் ஓர் அங்கமென மாறிவிட்டிருந்தார்கள்.  நாடக நடிகர்கள் வேலையற்றவர்கள்;  இலக்கியப்பிரதி வாசிப்பவர்கள்; இந்தச் சமூகத்தின்மீது கோபம் கொண்டவர்கள். ஒருவகையில் பைத்தியம் பிடித்தவர்கள்.  கதையின் கதாப்பாத்திரங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். இவர்கள்தான் முருகபூபதியின் நாடக நடிகர்கள். கவிஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள், இசைவல்லுநர்கள் சூழ்ந்த அரங்கம் அது. மணல்மகுடி என்ற பெயர் பெறுவதற்கு முன்பே அவர்களின் சிறுபிராயத்திலிருந்து ஆர்வத்துடன் கவனித்துவருகிறேன்.  பரிசோதனைமிக்க கதைசொல்லல், உடல்வழியாக அதிவேட்கைமிக்க உரையாடல், நவீன களம் என்று நிகழும் முருகபூபதியின் நாடக ஆளுமையைப் பற்றி வெளி ரங்கராஜன் விரித்துப் பேசுகிறார். “கலைவழிக் கல்வி என்கிற கோட்பாட்டின்மூலம் நாம் இழந்துகொண்டிருக்கிற வாழ்க்கைமுறை விழுமியங்களை, இயற்கை உறவை, பொருள்களின் பயன்பாட்டை, சகமனிதர்களின் நெருக்கத்தை வலியுறுத்துவனவாக இந்த உரையாடல்கள் அமைந்துள்ளன.“ என்று கட்டுரையில் குறிப்பிடுகிறார்.  தெருக்கூத்து மட்டுமல்லாது பாரம்பரிய நாடக, நடனங்களை தம் நாடகத்தில் பயன்படுத்துபவராக இருக்கும் முருகபூபதியைப் புரிந்துகொள்ள இக்கட்டுரை பெரிதும் உதவுகிறது.

ஒரு எழுத்தாளன் என்ற வகையில் எனக்கு இத்தொகுப்பில் பிடித்த கட்டுரை ஒன்று இருக்கிறது என்றால், அது, நாடக வாசிப்பும் ஒத்திகையும் என்ற கட்டுரைதான். இக்கட்டுரை நாடகம் என்பதைக் கடந்து, எழுத்தின் பலவீனத்தையும், அந்தப் பலவீனமே வாசகர்களிடத்தில், பார்வையாளர்களிடத்தில் பெரிதும் விளைவை உண்டாக்கும் விந்தையைக் காணும்போது, பிரதியின் பலவீனம் என்றால் என்ன? என்ற கேள்வியும் ஐயமும் உருவாகுவது ஒன்றும் தவறில்லை. மனிதர்கள் புழக்கமற்ற திறந்தவெளியே ஒத்திகைக்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. முருகபூபதியின் கூந்தல் நகரம், உதிரமூகமூடி ஆகிய நாடகங்கள் உருவாக, தேரிக்காட்டின்மீதான பயணமே காரணமாகிறது. அவர்கள் தேரிக்காட்டில் உள்ள மணல்முகட்டைப் பார்க்கிறார்கள். அங்கிருந்தே கதையும் களனும் உருவாகிறது. “காட்டுக்குள்ளேயே வாழ்ந்து மிருகங்களுடனும் தாவரங்களுடனும் பழகி அங்குள்ள உணவை உண்டு அவர்களுடைய வாழ்க்கை முறையையும், உணர்வுகளையும் அந்த நாடகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டிருந்தது.  நாடகம் முடிந்தவுடன் அந்த நாடகத்தில் நடித்த கந்தசாமி, அந்த நிலத்தைக் கிரயம் செய்துகொண்டு, அங்கு நாடகத்திற்கான நிலவெளி அரங்கத்தை உருவாக்கும் அளவிற்கு ஒத்திகை செயல்பட்டிருக்கிறது.“ என்று குறிப்பிடுகிறார். நாடகப்பிரதி வாசிப்பின்போதும் ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமாகத் தோன்றிய அப்பிரதி ஒரு நிகழ்வடிவத்தை நோக்கிப் போகத்தொடங்கியதும் அதன் வரிகள் புதிய பரிமாணம் கொள்வதாக எழுதுகிறார், வெளி.  நாடகப் பிரதியில் மௌனமான பல பகுதிகள் ஒரு நிகழ் வடிவத்தை நோக்கிப்போகும்போது அதிக வெளிச்சம் கொள்வதாகவும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

இந்நூலை வாசிப்பவர்கள் நாடகம் மீதான புதிய அக்கறை தனக்குள் கிளைவிடுவதை உணரமுடியும்.  படைப்பிலக்கியத்தில் நாடகப் பிரதிகள் வாசிப்பின் உலகிற்கு வரவேண்டும்.  மீளமுடியுமா என்கிற நாடகப் பிரதியை நான் வாசித்திருக்கிறேன்.  சமீபத்தில் கிரிஷ்கர்னாட்டின் நாடகப் பிரதிகளைப் பாவண்ணன் மொழிபெயர்த்திருக்கிறார்.  அதையும் வாசிக்கவேண்டும். வெகுஜன மையம் நோக்கி இன்று படைப்புகள் நகர்ந்தபின், அவை பலவீனம் அடைந்திருக்கின்றன.  இலக்கியவாதிகள், நாடக் கலைஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள், மரபான ஆட்டக்கார்கள் ஒன்றிணைந்து கலையையும் இலக்கியத்தையும் போஷிக்கவேண்டிய காலம் வந்துவிட்டதை இந்தப் புத்தகம் வலியுறுத்துகிறது. கவிதை, கதைகளை வாசிப்பதைப் போல நாடகப் பிரதிகளை வாசிக்கவும் விமர்சிக்கவும் செய்யவேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.

நவீன நாடகக் கலையின் வரலாறு, தொழில்நுட்பம், பிரதிக் கோட்பாடு, நடிகர்களின் உடல் இயக்கம், நாடகக் கருத்தாக்கங்கள், நாடக வெளி குறித்து இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் வெளி ரங்கராஜன் எழுதவேண்டும்.  அது கலையின் வரலாறு மட்டுமல்ல;  அது நம் பண்பாடு, கலாச்சார வாழ்க்கையும் கூட.  


-ராணி திலக்

நூல் : உடல்மொழியின் கலை

ஆசிரியர்: வெளி ரங்கராஜன்

பதிப்பகம் : போதி வனம்

விலை : ₹120

பகிர்:
No comments

leave a comment