ரியூ முரகாமி உடன் ஒரு கலந்துரையாடல்


புகழ்பெற்ற எழுத்தாளருடைய, ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் என்னும் சமீபத்திய புத்தகமானது, இதுவரை குற்றப் புனைவு புதினங்களுக்காக அதிகம் அறியப்பட்டவரின் குறிப்பிடத்தக்க புதிய பயணம் ஆகும். இலக்கிய வகையின் மாற்றம், குழந்தைப் பருவ நினைவுகள், மற்றும் ட்ரம்ப் எதிர் கிளிண்டன் ஆகியவற்றைக் குறித்து பேசுவதற்காக அன்னேமரி லாக் உடன் அவர் அமர்கிறார்.

ரியூ முரகாமி, தன்னுடைய பெயர், தொழில், முகவரி உள்ளிட்டவை அச்சிடப்பட்ட வணிக அட்டையை என்னிடம் கொடுக்கும் போது, அவர் முதலில் கேட்ட விஷயம், வணிக அட்டையைத் தொடுகையில் ஏற்படுகிற உணர்வைப் போல நான் இருக்கிறேனா என்பது தான். என்னிடம் அட்டையைக் கொடுத்ததற்கும் கேள்வி கேட்டதற்கும் இடையிலான மெல்லிய இடைவெளியில் நான் ஏற்கெனவே வெள்ளைத் தாளில் என் கட்டை விரலை மேலும் கீழும் தடவிப் பார்த்து என்னே! வழுவழுப்பாக இருக்கிறது என்பதைக் கவனித்து விட்டேன். “மரத்தினாலும் அல்ல, தண்ணீரினாலும் அல்ல, சுண்ணாம்புக் கல்லினால் செய்யப்பட்டுள்ளது” என புன்னகையுடன் சொல்லுகிறார்.

இருவருக்கும் இடையேயான மௌனத்தை, தயக்கத்தை உடைப்பதற்கான வழக்கத்திற்கு மாறான முயற்சி இது, ஆனாலும் இந்த யுக்தி பலனளித்தது. டோக்கியோவின் மத்தியில், ஓர் ஆடம்பர தங்கும் விடுதியில், பல அறைகளுடன் கூடிய தொகுப்பாக அமைந்திருக்கும் தன் அலுவலகத்தில் என்னை அவர் வரவேற்ற போது, ஜப்பான் நாட்டின் மிகவும் புகழ்பெற்ற – மற்றும் சர்ச்சைக்குரிய – புதின எழுத்தாளரைச் சந்திக்கும்போது எதையெல்லாம் நீங்கள் எதிர்பார்ப்பீர்களோ அவை ஏதுமின்றி, என் மனநிலை எளிதாக, அமைதியாக, மிகமிக இலகுவாக இருந்தது.

எனினும், 64 வயதுடைய இவர், எதிர்பாராததை வழங்குகின்ற தொழில் சார்ந்த வாழ்க்கையைத் தன்னுடைய முதல் புதினத்தில் இருந்தே, கட்டமைத்துள்ளார். முதல் புதினம், ஏறக்குறைய தெளிவாகத் தெரிகின்ற நீலநிறம் (Almost Transparent Blue) 1976-இல் வெளிவந்தது. இப்புதினம் மதிப்புமிக்க அக்டகவா (Akutagawa) பரிசு பெற்றது. புது வகையான இலக்கியத்திற்கு கட்டியங் கூறியது. எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான இவர், பாலியல், வன்முறை, போதை மருந்து போன்றவற்றை அடிநாதமாக வைத்து பயமூட்டுகிற, கிராஃபிக்ஸ் கலந்த கதைகளைப் படைத்து அதிர்ச்சியளித்தார், வாசகர்களைக் கவர்ந்தார்.

தற்போது, மேலிருந்து கீழே பார்க்கிறேன். கூட்டமாக நிற்கும் மரங்களின் மேற் பகுதி தெரிகிறது. எண்ணற்ற வண்ணங்களில் இருந்த இலைகளை இலையுதிர்காலம் உதிர்த்துப் போட்டிருக்கிறதைப் பார்க்கிறபோது, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கான முரகாமியின் தீவிர கதைக்களத் தேர்வுகளைக் குறித்து நான்  வியப்படைகிறேன்.

மிருகத்தனமான, மனநிலை பிறழ்ந்த கதாபாத்திரங்களில் இருந்து – உதாரணமாக, தொடர் கொலைகாரனை கதாநாயகனாகக் கொண்ட, விருது பெற்ற புதினமான இன் மிசோ சூப் (In the Miso Soup – 1997) – சமீபத்தில் வெளிவந்த, புனைவு இல்லாத, படங்களுடன் கூடிய ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் என்னும் புத்தகத்தை எப்படி இவரால் எழுத முடிந்தது?

“எழுதுவது என்னுடைய தொழில். ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகளைத் தொகுக்கும் வழிமுறையானது புதினங்கள் எழுதுவதில் இருந்து மாறுபட்டதே, என்றாலும், இந்த மாதிரியானவற்றை நான் எழுதிப் பழக்கமில்லை என்பது அர்த்தம் இல்லை” நடைமுறைக்கேற்ற பதில் தருகிறார்.

அருகில் உள்ள சில பெட்டிகளில் ஒரு பிரதியைக் கிளறித் தேடிக்கொண்டே, பதின்பருவத்தினருக்காக தொழில்சார் வழிகாட்டி புத்தகம் ஒன்று தான் எழுதியதாகக் குறிப்பிடுகிறார். என்னிடம் காட்டுவதற்காக, 13 வயதினருக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டி என்னும் புத்தகத்தைக் கொண்டு வரும்பொழுதே, “இந்தப் புத்தகம் 15 லட்சம் பிரதிகள் விற்பனையானது” என்கிறார்.

ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் புத்தகத்தையும் வழிகாட்டி நூல் எனலாம். ஆனால் இந்தப் புத்தகத்தில் ஜப்பான் நாட்டின் பாரம்பரியக் கலாச்சார நிகழ்வுகள் மையமாக அமைந்துள்ளன. உதாரணமாக, புத்தாண்டு நாளில் திருத்தலங்கள் அல்லது கோவில்களுக்குப் போவது; பிப்ரவரி மாதத்தில் அவரை விதை தூவும் விழா (Setsubum); மற்றும் மார்ச் மாதத்தில் பொம்மை விழா (Hina-matsuri).

ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் புத்தகம் அழகான படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மேலும், குறுந்தகடுகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் குறுந்தகட்டில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் ருச்சி சகமோடோ அவர்கள் தயாரித்த பிரபலமான, ஜப்பானியக் குழந்தைகள் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

யாரோ கதவைத் தட்டுகிறார்கள். விடுதிப் பணியாளர் சிறு தள்ளுவண்டியில் எங்களுக்காக சூடான காபி கொண்டு வருகிறார். முரகாமி ஒரு குவளையில் எனக்கு காபி ஊற்றுகிறார், பால் மற்றும் சீனி பிடிக்குமா என கேட்கிறார். பிறகு, உரையாடலைத் தொடர்வதற்காக நாங்கள் இருவரும் மெத்தை இருக்கையில் அமர்கிறோம்.

Ryu Murakami | Photo Courtesy : Tokyo Weekender | Gui Martinez

[ads_hr hr_style=”hr-fade”]

 

ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள், புத்தகத்தில் உங்கள் குழந்தைப் பருவம் பற்றி உணர்வுபூர்வமாக எழுதியுள்ளீர்கள். கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஏதாவது குறிப்பிட்ட நிகழ்வு இந்தப் புத்தகத்தை எழுத உங்களுக்குத் தூண்டுதலாக அமைந்ததா?

நாகசாகியில் உள்ள சசீபோ நகரில் நான் வளர்ந்த காலத்தில், ஒவ்வொரு புத்தாண்டின் போதும் மோச்சி-சுகி (Mochi-Tsuki) விழா கொண்டாட 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாகா நகரில் இருந்து விவசாயிகள் குழுவாக வருகை தந்தார்கள். நீராவியில் வேக வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு நீளமான மர சுத்தியல் கொண்டு படுவேகமாக அடித்து அரிசி கேக் செய்வது இவ்விழாவின் சிறப்பு. எங்களுக்கு இது மிகவும் உற்சாகமாக இருந்தது.

ஆனால், நான் நடுநிலைப் பள்ளிக்குச் சென்ற நேரம், வணிக வளாகங்கள் கட்டப்பட்டன மேலும் அவர்கள் ஏற்கெனவே செய்யப்பட்டு தயாராக இருந்த மோச்சிகளை விற்றார்கள். அதனால், மோச்சி-சுகி குழுவினர் வருவதை நிறுத்திவிட்டார்கள். எங்கள் பாரம்பரியங்களுள் ஒன்றான இதை எங்கள் கலாச்சாரத்திலிருந்து நாங்கள் மிகவே இழந்து வருவதாக நான் உணர்கிறேன்.

எனவே இதைக் குறித்து எழுதுவதும், நான் சிறுவனாக இருந்த போது புத்தாண்டு எப்படி இருந்தது என்கிற உணர்வைப் பகிர்ந்துகொள்ளுவதும் தகுதியானதே என நான் கண்டேன். ஜுலை 7 அன்று கொண்டாடப்பட்ட தனபாதா (Tanabata) எனப்படும் நட்சத்திரத் திருவிழாவையும் நான் உண்மையிலேயே மகிழ்ந்து கொண்டாடினேன். எங்கள் வீட்டின் பின்புறம் மூங்கில் மரங்கள் இருந்தன. சிறிய தாளில் எங்களின் விருப்பங்களை எழுதி மூங்கில் கிளைகளில் தொங்க விடுவோம். அது மிகவும் உணர்வுபூர்வமானது.

 

இப்போதும் நீங்கள் அப்படிச் செய்கிறீர்களா?

(சிரிக்கிறார்) அதிகமாக இல்லை. ஜப்பானில் இந்த நாட்களில் விருப்பங்களைக் கொண்டிருப்பது கடினம் என நான் நினைக்கிறேன். குறிப்பாக, இளைஞர்களுக்கு, நல்ல நிறுவனத்திற்குள் நுழைவதும், நல்ல ஊதியம் பெறுவதும் கடினமாகிக்கொண்டே இருக்கிறது. அற்பமான  ஊதியத்தில் வாழ்க்கை நடத்துகிற மக்கள் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் வீடு மற்றும் நல்ல கணவர் அல்லது மனைவி குறித்து விருப்பப்பட்டாலும், இத்தகையச் சூழலில் நம்பிக்கை வைத்திருப்பது கடினமானது.

 

ஆனால் நம்பிக்கை என்பது பணத்தை விட மேலானது இல்லையா?

ஆமாம், ஆனால் ஜப்பானில் மதம் பெரிய அளவில் பயன் தருவதும் இல்லை. மதங்களைப் பின்பற்றும் சிலர் இருக்கிறார்கள், உண்மைதான், ஆனால் புத்த மதத்தையா அல்லது ஷின்டோ மதத்தையா எதை நம்புவது என்கின்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். எனவே, கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி ஆலயத்திற்குப் போவது போன்ற ஒரு சமூகம் உருவாகாதது வருத்தமாகத்தான் உள்ளது.

 

ஜப்பானின் எதிர்காலம் இருட்டாக உள்ளதுஎன நீங்கள் சொன்னதாக மேற்கோள் காட்டப்படுகிறது. உலகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்…. அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றது (2016) குறித்து ஏதாவது கருத்துகள்?

ஹிலாரியைவிட நன்றாகவே இருக்கும் (சிரிக்கிறார்). இதன் வழியாக நான் என்ன சொல்லுகிறேன் என்றால், ஹிலாரி மற்றும் அவரின் ஊடக ஆதரவாளர்கள் என்னதான் திட்டமிட்டு ட்ரம்ப்பிற்கு எதிராக சந்தேகத்துக்குரிய குற்றச்சாட்டுக்களை வைத்தாலும் அவர்களின் தந்திரம் அமெரிக்க மக்களை பெரிய அளவில் பாதிக்கவில்லை. இதை நினைத்து உண்மையிலேயே நான் அசந்துபோனேன்!

உங்களுக்குத் தெரியுமா, ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள், புத்தகத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் ரால்ஃப் மெக்கார்த்தி, ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்தப் புத்தகத்தை நான் ஏன் எழுதினேன் என்பதைப் புரிந்து கொள்ள இந்தத் தேர்தல் உதவியது என சொல்லுவதற்காக எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்.

என்னுடைய சில புதினங்களை மொழிபெயர்த்துள்ளதால்,“ஏன் புத்தாண்டு பற்றி எழுதுகிறீர்கள்?” என முன்பு என்னைக் கேட்டிருக்கிறார். (சிரிக்கிறார்). ஆனால் தேர்தல் முடிந்த பிறகு, தற்போது அமெரிக்கா எத்தகையக் குழப்பத்தில் இருக்கிறது என்பதை தான் உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

எவ்வளவு தூரத்திற்கு அவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் நாடு எப்படி கட்டமைக்கப்பட்டது, மற்றும் அரசியலமைப்பு எதை அடிப்படையாகக் கொண்டுள்ளது போன்ற அவர்களின் பாரம்பரியத்தை அவர்கள் மறந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் அரசியல் ரீதியாகக் குழப்பத்தில் உள்ளதால், ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் புத்தகத்திற்காக நான் மெனக்கெட்டது போல, அவர்களும் தங்கள் பாரம்பரியத்தின் கலாச்சாரப் பக்கங்களைத் திருப்பிப் பார்க்கும் காலம் இது.

 

ஆனால், வெளிநாட்டினரின் பார்வையில், பாரம்பரியங்களை அதிகம் தாங்கிப் பிடிக்கிற நாடுகளுள்  ஜப்பான் நாடும் ஒன்று…..

திபெத், பூட்டான் போன்ற வளரும் நாடுகள் எங்களைவிட சிறப்பாக பாரம்பரியங்களைத் தாங்கிப் பிடிப்பதாக நான் உணர்கிறேன்.

 

இருப்பினும் டோக்கியோவில் இப்போதும் மக்கள் கிமோனோ அணிந்து நடக்கிறார்களே?

கிமோனோ சரியாக அணிவது எப்படி என தெரியாதோர் எண்ணற்றோர் இருக்கிறார்கள்.

 

சமுதாயத்திற்கு உதவ அல்லது மாற்றம் கொண்டுவர அரசியலில் பங்குபெற எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?

என்னால் மாற்ற முடியும் என நான் நினைக்கவில்லை, அரசியலில் ஈடுபடவும் நான் விரும்பவில்லை. உங்களுக்குத் தெரியுமா, ஒருமுறை வாசகி ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அவர் உயர்நிலைப்பள்ளி மாணவி. பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு தப்பிப்பதற்காக வீட்டை விட்டு ஓடிவந்துவிட்டார். நிறைய பிரச்சனைகள் இருப்பதாக உணர்ந்த அவர் தற்கொலை செய்துகொள்ள விரும்பினார். ஆனால், பேருந்து நிலையத்தில் என்னுடைய ஒரு புத்தகத்தை வாசித்திருக்கிறார். இவரைப் போலவே நினைக்கின்ற எண்ணற்றோர் இருக்கிறார்கள் என இப்புத்தகம் அவரை உணர வைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். எனவே, இறப்பதைப் பற்றி இருமுறை யோசித்திருக்கிறார்.

இந்த வகையான தாக்கத்தை சிலர் மீது என்னால் செலுத்த முடிகிறது என்பது எனக்குக் கிடைத்த மரியாதையாக நான் நினைக்கிறேன். அவர்கள் தனி நபர் அல்ல என அவர்களை உணர வைப்பது. அதாவது, வாழ்க்கையில் எப்போதும் எல்லாமே நல்லதாக இல்லாவிட்டாலும், தற்கொலை செய்வது ஒருபோதும் சிறந்த எண்ணமாகாது. தொடர்ந்து நீங்கள் வாழ்ந்தீர்கள் என்றால்,  நல்லவை சில எப்போதும் இருந்தே தீரும்.

 

உணர்வுகளை மறைக்கும் ஜப்பான் மக்களின் இயல்பு மற்றும் அவை திடீரென்றும் உக்கிரமாகவும் வெடிப்பது குறித்து கடந்த காலங்களில் நீங்கள் பேசியுள்ளீர்கள். இவை மாறிவருகிறது என நீங்கள் நினைக்கிறீர்களா?

இது பெரிய அளவில் மாறவில்லை. ஒருவேளை, எப்படி எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது என்று அதிகம் எங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒருவேளை ஜப்பானிய மொழியின் பாணியும் ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக, மரியாதையுடன் விளிக்கக்கூடிய வார்த்தைகள் (keigo) இன்னும் எங்களிடம் இருக்கின்றன. மேலும், ஒரு வார்த்தையைச் சொல்லுவதற்கு வெவ்வேறு முறைகள் இருக்கின்றன. ஒருவேளை, எங்கள் உணர்வுகளை மறைப்பதற்கு நாங்கள் பயன்படுத்தும் முறைகளுள் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

 

ஜப்பான் நாட்டில் வாழ்வதற்காக நிறைய வெளிநாட்டினர் வருவதாக ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள்  புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஜப்பான் நாட்டு கலாச்சாரத்தின் மீது இது தாக்கத்தை ஏற்படுத்துவதாக எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள்?

நான் இதை நேர்மறையாகப் பார்க்கிறேன். வெளிநாட்டினருடன் இணைந்து போக ஜப்பானியர்கள் கஷ்டப்படுவதற்கான காரணங்களுள் ஒன்று, மற்ற ஜப்பானியர்களுடன் பழகுவது எங்களுக்கு மிகவும் எளிதானது என்பதே. மேலும், நாங்கள் தீவுகளில் வாழ்கிறவர்கள், எனவே மற்ற நாட்டினருடன் தொடர்பு கொள்வதற்குக் குறைவான வாய்ப்புகளே எங்களுக்கு இருக்கின்றன.

 

அதனால் தான் ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்பினீர்களா? வெளிநாட்டினருடன் பகிர்ந்து கொள்வதற்காக?

ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள், என்னும் புத்தகத்தை, ஏறக்குறைய பாடப்புத்தகம் போல் மக்கள் பயன்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். அல்லது நீங்கள் ஜப்பானியர், வெளிநாட்டில் வாழ்கிறீர்கள், பாரம்பரிய நிகழ்வுகள் குறித்து விளக்குங்கள் என யாராவது கேட்டார்கள் என்றால் அவர்களுக்கு இந்தப் புத்தகத்தை நீங்கள் கொடுக்கலாம்.

மேலும், முன்பு எப்போதையும் விட இப்போது நிறைய வெளிநாட்டினர் ஜப்பானில் வேலை செய்கிறார்கள். உதாரணத்திற்கு, உணவு கொடுப்பது, அறையைத் தூய்மை செய்வது போன்ற அடிப்படைப் பணிகளைச் செய்வதற்கு என் அறைக்கு வருகிறவர்களில் ஒருவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு புத்தகத்தின் ஒரு பிரதியைக் கொடுத்தேன். ஜப்பான் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள அவரின் சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு உண்மையிலேயே இப்புத்தகம் உதவியதாகச் சொன்னார்.

இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்த எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. இது குழந்தைகளுக்கானது மட்டுமல்ல. அமெரிக்காவில் வாழ்கின்ற, மூன்றாம் மற்றும் நான்காம் தலைமுறை ஜப்பானிய சமூகக் குழுக்கள் குறித்த தகவல்களை நான் தற்போது சேகரித்துக்கொண்டு இருக்கிறேன். இந்தப் புத்தகத்தை அவர்களுக்கு அனுப்ப நான் விரும்புகிறேன். மக்களை ஒன்றிணைக்க இது உதவும் என நினைக்கிறேன்.

 

இப்போது நீங்கள் என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொடர்பான பல்வேறு புத்தகங்களைத் தொடர்ந்து நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். (Machine Intelligence – பொறி நுண்ணறிவு எனவும் அழைக்கப்படுகிறது). மனிதர்களைப் போலவே செயற்கை நுண்ணறிவும் கனவு காணுமா என்பதைக் குறித்து அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

 

ஒருவேளை புதிய புதினத்திற்கான புதியத் தலைப்பா?

ஆமாம், அப்படித்தான் நினைக்கிறேன்…


தமிழாக்கம் :  சூ..ஜெயசீலன்

நன்றி : http://tokyoweekender.com/

2017- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் tokyoweekender.com இணையதளத்தில் வெளியான கலந்துரையாடல்.

[ads_hr hr_style=”hr-fade”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.