தோல்வியுற்ற அந்த ராஜ்ஜியத்துக்கு பின்புறத்தில் ஓர் அழகான சிறு நதி இருந்தது. தெளிவான நீரோடை அது. நிறைய மீன்களும் அதில் இருந்தன. பலவிதமான நீர்த்தாவரங்களும் அதில் வளர்ந்திருந்தன. மீன்கள் அத்தாவரங்களை உண்டன. அந்த மீன்கள் அங்கிருந்த ராஜ்ஜியம் தோல்வியடைந்ததா இல்லையாவென்பதைப் பற்றியெல்லாம் அக்கறை கொண்டிருக்கவில்லை. அது முடியாட்சியா அல்லது குடியாட்சியா என்பதெல்லாம் அவற்றுக்குத் தெரியாது. அவை வாக்களிப்பதுமில்லை, வரி செலுத்துவதுமில்லை. அதைப் பற்றி நமக்கும் எந்த அக்கறையுமில்லை. அவை அங்கு இருந்தன. அவ்வளவுதான்.
ஓடையில் என் பாதங்களைக் கழுவினேன். பனிக்கட்டி போல சில்லிட்டிருந்த தண்ணீரில் நொடிநேரத்துக்கு அமிழ்த்தி எடுத்ததற்கே பாதங்கள் சிவந்துவிட்டன. ஓடை நீரில் தோல்வியடைந்திருந்த அந்த ராஜ்ஜியத்தின் கோட்டைச் சுவர்களும் கோபுரமும் பிரதிபலித்தன. கோபுரத்தில் இன்னமும் பறந்துகொண்டிருந்த இருவண்ணக்கொடி காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது. ஓடையைக் கடந்து செல்பவர்கள் அந்தக் கொடியைப் பார்த்து, “ஹே, அங்கே பார். அது தோல்வியடைந்த ராஜ்ஜியத்தின் கொடி“ என்று சொல்லிக்கொண்டு சென்றனர்.
க்யூவும் நானும் நண்பர்கள். அதாவது கல்லூரி காலத்தில் நண்பர்களாக இருந்தோம். நட்புத் தொடர்பு விட்டுப்போய் பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதனால்தான் இறந்தகாலத்தில் குறிப்பிடுகிறேன். எப்படியிருந்தாலும் நாங்கள் நண்பர்களாக இருந்தவர்கள்.
க்யூவைப் பற்றி யாரிடமாவது சொல்வதாக இருந்தால் – அதாவது, அவன் எப்படிப்பட்டவன் என்று விளக்குவதாக இருந்தால் – என்னால் பேசமுடியாமல் போய்விடும். எதையும் விவரித்துச் சொல்வதற்கு எப்போதுமே என்னால் முடிவதில்லை. இப்படியொரு குறை என்னிடம் இருந்திருக்காவிட்டாலும்கூட க்யூவைப் பற்றி சரியாக வர்ணிப்பதென்பது பெரும் சவாலாகவே இருந்திருக்கும். அவனைப் பற்றி விளக்கத்தொடங்கினாலே எனக்குள் ஆழத்திலிருந்து எழும் மனமுறிவுணர்ச்சி என்னை முடக்கிப்போட்டுவிடுகிறது.
என்னால் இயன்றளவுக்கு எளிமையாக விளக்க முயல்கிறேன்.
க்யூவுக்கும் எனக்கும் ஒரே வயது. ஆனால் அவன் என்னைவிட ஐநூற்றி எழுபது மடங்கு அழகானவன். அவனுடைய குணாம்சங்களும் இனிமையானவை. தன்னகங்காரமோ தற்பெருமையோ அவனிடம் எப்போதுமே இருந்ததில்லை. அவனிடம் யாராவது அறியாமல் தவறிழைத்துவிட்டாலும் அவன் கோபப்பட்டதில்லை. “ஓ, அதனாலென்ன பரவாயில்லை. இதைப்போல நானே தவறு செய்திருக்கிறேன், “ என்பான். ஆனால் அவன் யாருக்கும் எந்தத் தவறும் இழைத்ததாக நான் கேள்விப்பட்டதேயில்லை.
அவன் மிகவும் ஒழுங்காக வளர்க்கப்பட்டவன். அவனுடைய தந்தை ஒரு மருத்துவர். ஷிகோகு தீவில் அவருக்கு சொந்தமாக மருத்துவமனை இருந்தது. அதனால் அவனுக்கு பாக்கெட் மணிக்குப் பஞ்சமே இருந்ததில்லை. ஆனால் அவன் வீணாகச் செலவழிப்பவனுமில்லை. அழகாக உடையணிவான். மிகச் சிறந்த விளையாட்டு வீரன். பள்ளிகளுக்கிடையிலான டென்னிஸ் போட்டிகளில் உயர்நிலைப் பள்ளிக்காக விளையாடினான். நீச்சல் அவனுக்குப் பிடிக்கும். வாரத்துக்கு இருமுறை நீச்சல் குளத்துக்குச் செல்வான். அரசியலைப் பொறுத்தவரை அவன் ஒரு மிதமான தாராளவாதி. அவன் வாங்குகின்ற மதிப்பெண்கள் முதல்தரமானவையாக இல்லாவிட்டாலும் திருப்திகரமாகவே இருக்கும். தேர்வுகளுக்காக அவன் தீவிரமாகப் படிக்க மாட்டான். ஆனாலும் எந்த வருடத்திலும் அவன் தோல்வியடைந்ததேயில்லை. வகுப்பில் பாடம் நடக்கும்போது அதை ஒழுங்காக கவனிப்பவன் அவன்.
பியானோ வாசிப்பதில் ஆச்சரியகரமான திறமை கொண்டவன். பில் ஈவான்ஸ், மொஸார்ட் இசைத்தட்டுகள் நிறைய வைத்திருந்தான். அவனுக்கு பால்ஸாக், மாப்பசான் என்று பிரெஞ்சு எழுத்தாளர்களைப் பிடிக்கும். எப்போதாவது கென்ஸாபுரோ ஓ வின் நாவலையோ, அல்லது மற்றவர்களுடைய புத்தகங்களையோ படிப்பான். அவனுடைய விமர்சனங்கள் எப்போதுமே மிகத் துல்லியமாக இருக்கும்.
பெண்கள் மத்தியில் அவன் பிரபலமாக இருந்தது வியப்பல்ல. ஆனால் அவன் “யாரை வேண்டுமானாலும் என் வலையில் வீழ்த்திவிடுவேன்’ என்கிற ரகமல்ல. அவனுக்கு நிரந்தரமாக ஒரு சினேகிதி இருந்தாள். நகரத்தில் இருந்த ஒரு நவநாகரிகக் கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு படிக்கும் ஓர் அழகான பெண்ணான அவளோடு ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் வெளியே செல்வான்.
கல்லுரியில் நான் அறிந்திருந்த க்யூவைப் பற்றி எனக்குத் தெரிந்தவை இவ்வளவுதான். சுருக்கமாகச்சொன்னால் குறைகளேயற்ற பிரகிருதி அவன். அப்போது நாங்கள் வசித்துவந்த அடுக்ககத்தில் எங்கள் வீட்டுக்கு அடுத்ததில் க்யூ இருந்தான். பக்கத்து வீட்டிலிருந்து உப்பு, சாலட்டுக்கு டிரஸ்ஸிங் என்று கடன் வாங்குவதில் ஆரம்பித்த நட்பு சீக்கிரமே பலப்பட்டு எப்போதும் ஒருவர் வீட்டில் மற்றவர் என்று எல்லா நேரமும் இசைத் தட்டுகள் கேட்டுக்கொண்டு, பியர் அருந்திக்கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டிருப்போம். ஒருமுறை நான், என் சினேகிதி, க்யூ, அவனுடைய சினேகிதி எல்லோரும் ஒன்றாக கமாகுரா கடற்கரைக்குச் சென்றோம். அவ்வளவு இணக்கமாக எல்லோரும் ஒன்றாக இனிமையாகப் பொழுதைக் கழித்தோம். பிறகு, எனது கடைசி வருடப் படிப்பின்போது கோடை விடுமுறையில் நாங்கள் வீடு மாற்றிச் சென்றோம். அத்துடன் தொடர்பு அறுந்தது.
அடுத்தமுறை அவனைப் பார்த்தபோது கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடந்திருந்தன. அலாஸ்கா மாவட்டத்தில் இருக்கும் ஒரு பகட்டான ஹோட்டலின் நீச்சல் குளத்தின் ஓரத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பக்கத்திலிருந்த மடக்கு நாற்காலியில் க்யூ உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில் நீச்சல் உடையில் ஒரு மிக அழகான பெண்.
பார்த்தவுடனே அது க்யூ என்று தெரிந்துவிட்டது. எப்போதும்போல அழகாகவே இருந்தான். முப்பது வயதை கடந்திருப்பதால் முன்பு அவனிடம் தென்படாத ஒரு கண்ணியத் தோற்றம் இப்போது வந்திருந்தது. அவனைக் கடந்து செல்லும் இளம் பெண்கள் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றுகொண்டிருந்தனர்.
அவனுக்கருகில் நான் உட்கார்ந்திருப்பதை அவன் கவனிக்கவில்லை. நான் ஒரு சாதாரணத் தோற்றம் கொண்ட ஒருவன். போதாக்குறைக்கு வெயில்கண்ணாடியும் அணிந்திருந்தேன். அவனிடம் பேச்சு கொடுக்கவேண்டுமாவென்று உறுதியாக முடிவெடுக்க இயலவில்லை. கடைசியில் வேண்டாமென்று தீர்மானித்தேன். அவனும் அந்தப் பெண்ணும் தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தனர். அதில் குறுக்கிடுவதற்கு தயக்கமாக இருந்தது. மேலும் அவனும் நானும் பேசிக்கொள்வதற்கு அதிகமாக எதுவும் இல்லை. “உனக்கு உப்பு கடன் தந்திருக்கிறேன், ஞாபகம் இருக்கிறதா?” “ஏய், ஆமாம். நான் ஸாலட் டிரெஸ்ஸிங் ஒரு பாட்டில் கடன் வாங்கியிருக்கிறேன்.” அதற்குமேல் பேசுவதற்கு விஷயம் இருக்காது. எனவே வாயை மூடிக்கொண்டு புத்தகத்தில் ஆழ்ந்தேன்.
ஆனாலும் க்யூவும் அவனுடைய அழகான சினேகிதியும் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒட்டுக் கேட்கும் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதோ சிக்கலான விஷயம் என்றுமட்டும் புரிந்தது. படிப்பதைத் துறந்துவிட்டு காதுகளைத் தீட்டிக்கொண்டேன்.
“அதெல்லாம் முடியாது,” என்றாள் அந்தப் பெண். “விளையாடுகிறாயா?”
”சரி, சரி, “ என்றான் க்யூ. “ நீ என்ன சொல்கிறாயென்று எனக்குத் தெரிகிறது. ஆனால் என் பக்கத்திலிருந்தும் இதை நீ பார்க்கவேண்டும். என் விருப்பத்தின் பேரில் இதை நான் செய்யவில்லை. மாடியில் இருக்கிறார்களே அவர்கள்தான் காரணம். அவர்கள் முடிவெடுத்திருப்பதைத்தான் நான் உன்னிடம் சொல்கிறேன். அதனால், நீ என்னை அப்படிப் பார்க்கவேண்டாம்.”
“ஆம், சரிதான்,” என்றாள்.
க்யூ நிம்மதிப் பெருமூச்செறிந்தான்.
அவர்களுடைய நீண்ட உரையாடலை – புரியாத இடங்களை என் கற்பனையால் நிரப்பி – தொகுத்துச் சொல்கிறேன். க்யூ ஏதோவொரு தொலைக்காட்சி நிலைத்துக்கோ, அல்லது வேறெந்த நிறுவனத்துக்கோ இயக்குனராக இருப்பதாகத் தெரிந்தது. அந்தப் பெண் ஓரளவுக்குப் பிரபலமான பாடகியோ, நடிகையோ போல. அவளை எந்த நிகழ்ச்சியிலிருந்தோ, அவள் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்லது அவதூறு காரணமாக நீக்கிவிட்டிருக்கிறார்கள். அல்லது அவளுடைய புகழ் சரிந்துவிட்டிருப்பதாலும் இருக்கலாம். அவளிடம் இத்தகவலைத் தெரிவிக்கும் சங்கடமான வேலையை தினசரி நிர்வாகப் பொறுப்பை கவனித்துக்கொள்பவன் என்ற முறையில் க்யூவின் தலையில் கட்டியிருக்கிறார்கள். கேளிக்கை ஊடங்களின் செயல்பாடுகள் பற்றி அதிகம் எனக்குத் தெரியாது. அதனால் உண்மையில் நடந்தது என்னவாக இருக்குமென்று நுணுக்கமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஓரளவுக்கு நான் சரியாகவே ஊகித்திருப்பதாக நினைத்தேன்.
என் காதில் விழுந்ததை வைத்துப் பார்க்கும்போது க்யூ அவனிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை நேர்மையாக நிறைவேற்றியிருப்பதாகவே கருதினேன்.
“விளம்பரதாரர்கள் இல்லாமல் நம்மால் பிழைத்திருக்க முடியாது. இதை நான் சொல்லி நீ தெரிந்துகொள்ளவேண்டியதில்லை,” என்றான்.
’’அதாவது இந்த விஷயத்தில் உங்களுக்கு எந்தவிதமான பங்கும், பொறுப்பும் இல்லை என்கிறீர்களா?”
“இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் உண்மையில் என்னால் செய்யக்கூடியது அதிகம் இல்லை.”
அதன் பிறகு அவர்களின் உரையாடல் வேறொரு முட்டுச்சந்துக்குத் திரும்பியது. அவளுக்காக அவன் எந்தளவுக்கு சிபாரிசு செய்திருக்கிறான் என்று கேட்டாள். க்யூ தன்னால் முடிந்த அளவுக்கு அவளுக்காகப் பேசிப்பார்த்ததாகச் சொன்னான். ஆனால் அதையெல்லாம் இப்போது அவனால் நிரூபித்துக்கொண்டிருக்க முடியாதென்றான். அவள் நம்ப மறுத்தாள். அவன் சொல்வதை என்னாலும் நம்ப முடியவில்லைதான். அவன் விஸ்தாரமாக தனது முயற்சிகளை எடுத்துச் சொல்லச்சொல்ல அவற்றின்மீது பொய்யின் புகைமூட்டம் கவிந்துகொண்டே வந்தது. க்யூவைச் சொல்லிக் குற்றமில்லை. இதற்காக யாரையும் குற்றம் சொல்லமுடியாதுதான். அதனால்தான் இந்த விவாதம் முடிவேயில்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது.
அந்தப் பெண்ணுக்கு க்யூவின் மீது எப்போதுமே பிரியம் இருந்துவந்திருப்பதாகத் தெரிந்தது. இந்தப் பிரச்சனை தலையெடுப்பதற்கு முன்புவரை அவர்கள் இருவரும் நல்ல நட்பில் இருந்திருக்கவேண்டும். அதனால்தான் இப்போது அவளுக்கு இந்தளவுக்கு கோபம் வந்திருக்கிறது. கடைசியில், அவளே சமாதானத்துக்கு இறங்கி வந்தாள்.
“ஓ.கே. போகட்டும். எனக்கு ஒரு கோக் வாங்கித் தருவீர்களா?”
அதை கேட்டதும் க்யூ நிம்மதிப் பெருமூச்சோடு எழுந்து குளிர்பானங்கள் விற்கும் இடத்தை நோக்கிச் சென்றான். அந்தப் பெண் வெயில் கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டு விறைப்பாக உட்கார்ந்துகொண்டாள். நான் கையிலிருந்த புத்தகத்தில் ஒரே வரியை அதற்குள் சில நூறு முறை திரும்பத் திரும்ப படித்துவிட்டிருந்தேன்.
கொஞ்ச நேரத்தில் க்யூ கையில் இரண்டு பெரிய காகிதக் கோப்பைகளுடன் திரும்பி வந்தான். ஒன்றை அவளிடம் தந்துவிட்டு, தனது மடக்கு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். “இதைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்பட்டுக்கொண்டிருக்காதே. விரைவிலேயே உனக்கு _ “
அவன் அந்த வாக்கியத்தை முடிப்பதற்கு முன், அந்தப் பெண் தன் கையிலிருந்த கோக்கை அப்படியே அவன் முகத்தில் விசிறியெறிந்தாள். மூன்றில் இரண்டு பங்கு கோக் அவன் முகத்திலும் ஒரு பங்கு என் மீதும் விழுந்து வழிந்தது. எதுவும் பேசாமல் அவள் எழுந்து நின்றாள். தன் பிகினியின் அடிப்பாகத்தை சற்று இழுத்துவிட்டுக் கொண்டாள். இலேசாகக்கூட பின்னால் திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றாள். க்யூவும் நானும் அடுத்த பதினைந்து விநாடிகளுக்கு திகைத்து, உறைந்து, அமர்ந்திருந்தோம். அருகிலிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியோடு எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
க்யூதான் முதலில் சமாளித்துக்கொண்டான். “ஸாரி,” என்று ஒரு டவலை என்னிடம் நீட்டினான்.
“பரவாயில்லை,” என்றேன். “போய் குளித்துக்கொள்கிறேன்.”
சற்று எரிச்சலோடு டவலை எடுத்துக்கொண்டு தன் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.
“உங்கள் புத்தகத்துக்கான தொகையாவது தந்துவிடுகிறேன்,” என்றான். உண்மையில் புத்தகம் முழுசாகவே நனைந்துவிட்டிருந்தது. ஆனால் அது ஒரு மலிவுப்பதிப்பு புத்தகம்தான். அப்படியொன்றும் சுவாரஸ்யமான புத்தகமும் அல்ல. இந்தப் புத்தகத்தின் மீது யாராவது கோக்கைக் கொட்டி என்னை படிக்கவிடாமல் செய்துவிட்டால், அது அவர்கள் எனக்கு செய்த பெரிய உபகாரம் என்றே சொல்வேன். இதை அவனிடம் சொன்னபோது அவன் முகம் தெளிந்தது.. எப்போதும்போல அவனது அபாரமான புன்னகை முகத்தில் மலர்ந்தது.
க்யூ அத்துடன் பேச்சை முடித்துக்கொண்டு, மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொண்டு கிளம்புவதற்கு எழுந்தான். என்னை கடைசிவரை அடையாளம் கண்டுகொள்ளவேயில்லை.
இந்தக் கதைக்கு ‘தோல்வியடைந்த ராஜ்ஜியம்’ என்று தலைப்பிட்டதற்குக் காரணம், அன்று மாலை செய்தித் தாள்களில் தோல்வியடைந்த ஆப்பிரிக்க சாம்ராஜ்ஜியம் ஒன்றைப் பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்ததுதான். “ஒரு மகத்தான சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியடைவதென்பது ஒரு இரண்டாந்தரக் குடியரசு வீழ்வதைக் காட்டிலும் துயரமானது” என்றது அக்கட்டுரை.
– ஹாருகி முரகாமி
தமிழில்: ஜி.குப்புசாமி
[tds_info]
ஆசிரியர் குறிப்பு :
ஹாருகி முரகாமி ( பிறப்பு: ஜனவரி 12, 1949 ) ஜப்பானிய எழுத்தாளர். சிறுகதை, நாவல்.கட்டுரை,மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பலவடிவங்களிலும் பன்முகம் கொண்டவராக திகழ்கிறார். ஜப்பானியப் பண்பாட்டின் வெளிப்பாடாக மட்டுமின்றி அவர் படைப்புகளின் பார்வை உலகளாவியதாக இருக்கிறது. தனிமனித சுயத்தின் இயல்பு என்ன? வெற்றி, மகிழ்ச்சி ஆகியவைகளுக்கு உலகளாவிய விளக்கம் என்ன? என்று இது போன்ற வினாக்களை எழுப்பிச் சிந்திக்க வைப்பதாக அவர் படைப்புகள் அமைகின்றன. Norwegian Wood , Kafka on the Shore, South of the Border West of the Sun ஆகியவை இவருடைய படைப்புகளில் சிலவாகும். Franz Kafka Prize ,Hans Christian Andersen Literature Award. Jerusalem Prize உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறார். இவரது புத்தகங்கள் மற்றும் கதைகள் ஜப்பானிலும் சர்வதேச அளவிலும் சிறந்த விற்பனையாகும் நூல்களாக உள்ளன, இவரது படைப்புகள் 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான பிரதிகள் அவரது சொந்த நாட்டிற்கு வெளியே விற்கப்படுகின்றன. மேலும் அறிய விக்கிபீடியா காண்க.
[ads_hr hr_style=”hr-dots”]
ஜி.குப்புசாமி (பி.1962) மொழிபெயர்ப்பாளர்
அயல் மொழி இலக்கிய மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுவரும் இவர் முக்கியமான சமகால எழுத்தாளர்கள் பலரின் எழுத்துகளைத் தொடர்ந்து தமிழாக்கம் செய்துவருகிறார்.
‘என் பெயர் சிவப்பு’ மொழிபெயர்ப்புக்காக கனடா இலக்கியத் தோட்டம் விருதும், SRM பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராய விருதும் (2012) இவர் பெற்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வசிக்கிறார்.
[/tds_info]
தோல்வியுற்ற ராஜ்ஜியம் கதை மண்ணின் மணம் மாறாமல் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. மிக அருமை..
கதையின் தளமே வித்யாசம். ஆரம்ப வரிகள் ஒரு புரதானக் கதை என வாசகனை நம்ப வைத்து விடுகிறது. இது ஒரு ட்ராக்
மெல்ல க்யூவின் ஆரம்ப கால நட்பும் அந்த நட்பை நினைவு கூறும் தன்னிலை விளக்கமும் ஒரு ட்ராக்
அடுத்து க்யூவிற்கும் அந்தப் பெண்ணுக்குமான உரையாடல். பக்கத்தில் அமர்ந்து நம்மையும் கேட்க வைத்து விடுகிறது.
மூன்று பரிமாணங்களாகத் தெரிந்தாலும் அற்புதமான கதை.
ஹாருகு முகராபியின் காகிதக்கோப்பை அழகான படம் பிடிப்பு சின்னஞ்சிறு சொற்கள் தொடர்ந்து பயணிக்கவைக்கும் கலகலப்பு அருமை அருமை
சிறப்பான கதை, அருமையான மொழிபெயர்ப்பும் கூட !
எப்போதும் போல முரகாமியின் ஆர்ப்பாடம் இல்லாத கதை சொல்லும் முறை.புறவுலகைத் துண்டித்து கதைக்குள் ஈர்த்துக் கொள்கிற நேர்த்தி கதையிலிருந்து நீங்கள் உங்களை தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடிய இடம்.அசலான வாழ்வை சொல்லும் போது இயல்பாகவே நடந்தேறி விடும்.570 மடங்கு அழகின் மேல் கோக் ஊற்றப்படுகிற இடத்தில் தலைப்பு நனைந்து விடுகிறது.
சிறப்பான மொழிபெயர்ப்பு சரளமான நடை.கனலிக்கும் ஜி.குப்புசாமி சாருக்கும் வாழ்த்தும் நன்றியும்.
good story