அல்ஹம்டுலிலா

நாடித்துடிப்பு படபடவென அதிகரித்துக் கொண்டே இருந்ததை ஆக்ஸ்மிட்டரில் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘அல்ஹம்டுலில்லா…அல்ஹம்டுலில்லா’ என மிக மகிழ்ச்சியுடன் கிழவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். இப்படி அவர் முணுமுணுப்பது முதல் முறையல்ல. மகிழ்ச்சியோ, சோர்வோ எதுவாக இருந்தாலும் இந்தச் சொல்லைத்தான் நொடி தவறாமல் உச்சரிப்பார். அவருடைய உச்சரிப்பைக் கேட்டு எனக்குமே எதைக் கேட்டாலும் அல்ஹம்டுலில்லா சொல்லும் வழக்கம் ஒட்டிக்கொண்டது. ஆனால், இதுவரையில் ஒருமுறை கூட உடல் வலியின் காரணமாய் இம்மாதிரி அவர் உச்சரித்து நான் கேட்டதில்லை.

அவர் உடலில் வலியெனும் உணர்வே இல்லை என்றுதான் நான்காண்டுகளாக நினைத்திருந்தேன். ஒரு நாள் கூட காய்ச்சல், இருமல் அல்லது வேறெந்த உடல்நலக்கோளாறுகளும் அவருக்கு ஏற்பட்டுப் பார்த்ததில்லை. வலி என்ற உணர்வே மரத்துப்போனவராக இருப்பதாலே பெருஞ்சிக்கல்கள் எதுவுமின்றி நான்காண்டுகளாக அவரைப் பராமரிக்க முடிந்தது. ஆனால், இன்றைக்கு ஏனோ அவருடைய இதயத்துடிப்பு மிகுந்தோறும் பயமாக இருக்கிறது. வீட்டில் இருந்த சோபாவில் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்து விடாமல் அல்ஹம்டுலில்லா சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய பார்வையில் மகிழ்ச்சி மேலும் கூடிக்கொண்டே இருந்தது. எல்லாமே எனக்குப் புதியதாக இருந்தது.

சோபா கூட சாய்வாக அமரும் வகையில் இருக்கக்கூடாதென அவருடைய முதல் மகள் ஹசினா மிகக் கவனத்துடன் நேராக மட்டுமே அமருகின்ற வகையில் இருந்த சோபாவை வாங்கியிருந்தார். கிழவருக்கும் ஹசினாவுக்கும் பெரியளவில் உரையாடல் எதுவும் நடந்தது கிடையாது. பகல் வேளையில் அவர் சற்று சோர்ந்து அமர்ந்திருப்பதைக் கண்டாலே என்னைக் கண்ட மாதிரி திட்டுவார். வயதான பெரியவரைப் பராமரிக்கும் வேலை எனத்தான் வேலை முகவர் குறிப்பிட்டிருந்தார். திருமணமாகாத குழந்தைகள் இல்லாத ஆணாகத்தான் வேண்டுமென ஹசினா வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதால் எனக்குத் திருமணமாகவில்லை என்றே அவரிடம் குறிப்பிட்டிருந்தேன். கிழவரைப் பார்த்துக் கொள்ளத் தொடங்கிய நான்காவது மாதம் வரையில் இரவில்தான் வீட்டுக்கு அழைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். என்னுடைய ஒரு வயது மகனை கைப்பேசித்திரைக்கு நேராய் வைத்து ‘அப்பா’ ‘அப்பா’ எனச்சொல் என மனைவி சன்னமான குரலில் சொல்லச் சொல்லிக் காட்டுவாள். அடுத்த அறையில் அதிக நேரம் இருக்கவும் முடியாது. கிழவர் நல்ல நடமாட்டமுள்ளவர் என்பதால் அடுத்த அறைக்கு நுழைந்து விடலாம். அத்துடன், தூக்கம் வராமல் போனால் பலமணி நேரம் கூட எதொவொன்றை வெறித்துப் பார்த்துக் கொண்டு நெடு நேரம் அமர்ந்திருப்பார். பலமணி நேரத்துக்குப் பிறகு சில சொற்களைத் தன் போக்கிலே குறிப்பிடுவார். அவருடைய நடமாட்ட சத்தமோ சொற்களை உச்சரிக்கும் சத்தமோ கேட்டால் உடனே கைப்பேசியை அடைத்து அவரறைக்குச் சென்றுவிடுவேன்.

‘துங்கு அப்துல் ரஹ்மான்’, ‘ பிராண்க் ஸ்வெட்டன்ஹாம்’, ‘ ஹென்றி கர்னி’ ஹொரால்ட் பிரிக்ஸ், பங்கோர் ஒப்பந்தம்’ இப்படி எதாவது பெயரைச் சொல்லி சுவரைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவருடைய மகள் சொல்லித்தான் அவர் முன்னாள் வரலாற்று ஆசிரியர் என்பதும் தெரிந்தது. என்னை பார்த்துக் கூட எதாவது விநோதமான பெயர்களைக் குறிப்பிடுவார். பிலிப்பைன்ஸில் மலாய்க்காரர்களின் தலைவர் ஜோஸ் ரிசால் என்ற பெயரை என்னைப் பார்த்து உச்சரித்திருக்கிறார். மிண்டானாவில் மலாய்க்காரர்கள் அந்தப் பெயரைப் புரட்சியாளரைப் போலச் சொல்லியிருந்ததைக் கேட்டிருக்கிறேன். அவருடைய 89 ஆவது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் என்னுடைய மகனுக்குக் காய்ச்சல் எனக் காலையிலிருந்தே மனைவி பதற்றமாகப் புலனத்தில் பேசி அனுப்பியிருந்தாள்.  உடலெல்லாம் சிவந்து போய் கண்கள் கூட திறக்க முடியாமல் அவன் சோர்ந்து போய் கிடக்கும் படங்களையும் உடன் அனுப்பியிருந்தாள். மதிய வேளை உணவின் போது எப்போதும் போலச் சோற்றைத் தட்டில் வைத்து விட்டுக் கிழவரைச் சாப்பிடச் சொல்லிக் காத்திருந்தேன். மெதுவாகச் சோற்றை அளைந்து அளைந்து வாயில் சில பருக்கை தரையில் சில பருக்கை என ஒவ்வொரு வாயாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரைப் பார்த்தவுடன் பொறுமையிழந்து விட்டேன். எப்பொழுதும் இப்படியாக அவர் சாப்பிட்டு முடிக்க நாற்பது நிமிடங்களாகவது ஆகும். அதுவும் ஹசினா எங்களுக்காக ஆர்டர் செய்து கிரேப்பில் அனுப்பும் உப்பு குறைந்த உணவுகளை அவர் முழுமையாகச் சாப்பிடும் வரையில் பொறுமையாக இருக்க வேண்டுமென ஹசினா கறாராகச் சொல்லியிருந்தார். தட்டை என் கைகளில் வாங்கி கரண்டியைக் கொண்டு சோற்றை ஊட்டினேன். ஒரு வாய்க்குப் பிறகு வாயில் அதக்கி வைத்திருந்த சோற்றை முழுதுமாக முகத்தை நோக்கி துப்பினார். துப்பிய சோற்றுப்பருக்கைகள் எல்லாமே தரையில்தான் சென்று விழுந்தன. நான் விடாப்பிடியாக இன்னும் சோற்றுப்பருக்கைகளை வாயில் திணிக்கத் தொடங்கினேன். முதலில் வாயிலிருந்ததைத் துப்பத் தொடங்கியவர் பின்னர் மெல்லச் சோற்றை விழுங்கிக் கொண்டிருந்தார். 20 நிமிடத்திலே சோற்றுத்தட்டை முழுமையாகக் காலி செய்திருந்தார். அப்படியே சோபாவில் அமரவைத்து அறைக்குள் சென்று மனைவியிடம் பேசினேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருந்து செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மனைவி சொன்னாள். மகன் உடல்நலம் தேறிவிடுவான் என்ற நம்பிக்கையில் வெளியே வந்தேன்.

கிழவர் சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரருகில் வந்தமர்ந்ததும் ‘ துரோகி’ என ஆங்கிலத்தில் சொன்னார். அவருடைய 89 ஆவது பிறந்தநாளின் போது ஷேக் ராவுத்தருக்குப் பிறந்தநாள் எனப் பாடல் பாடிக் கொண்டு நான்கு மகள்களும் கேக்கைக் கையில் ஏந்திக் கொண்டு கிழவர் முன்னால் வைத்து அவர் கையைப் பிடித்து கேக்கை வெட்டச் செய்தனர். மொத்த நிகழ்ச்சியிலும் கிழவர் ‘ அல்ஹாம்டுலில்லா’ எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். இரு பக்கமும் இரண்டு மகள்கள் அமர்ந்து கொண்டு தங்களுக்குள் எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லாருமே சரிபாதி கிழமாகிப் போய் வீட்டில்தான் இருக்கிறார்கள். ஆனாலும், இவரைத் தனியே பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்கள். கிழவரும் மகள்களுடன் ஒரிரு வார்த்தைகள் மட்டுமே பேசினார். நிகழ்ச்சி முடிந்ததும் அப்பாவை இறுக்கி அணைத்து ‘வருகிறோம்’ எனச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் ஹசினா என்னை அழைத்து ‘ முதலிலே சொல்லலாம் என நினைத்தேன்…’நீ திருமணமானவன் என்பதை முன்னரே சொல்லியிருக்கலாமே…என்னை ஏமாற்றி இந்த வேலையைப் பெற்றிருக்கிறாய்…உன்னை வேலையை விட்டு அனுப்ப எனக்கு நெடுநேரம் ஆகாது…வேறெந்த பொய்களும் இல்லை என நினைக்கிறேன்..நீ அவரை நன்கு பார்த்துக் கொள்கிறாய் என நினைக்கிறோம்…உனக்கு மிக்க நன்றி’ எனச் சொன்னார்.

அதிலிருந்துதான் ஹசினாவிடம் மட்டும் கிழவர் நடந்ததைக் குறித்துப் பேசுகிறார் என்ற எண்ணம் வந்தது. அதனாலே, அவரிடம் எதையாவது சொல்லிவிடுவார் என்ற பயமும் வந்தது.  அரசு கண் மருத்துவமனையில் மருத்துவராக இருந்து ஓய்வுபெற்றுத் தனியே கண் கிளினிக் ஒன்றை வைத்து நடத்துகிறார். ஹசினா திருமணமாகாமல் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். இங்கிருந்து முப்பது நிமிடத்துக்குள் இருக்கும் அம்பாங்கில்தான் வசிக்கிறார். ஒரு நாளைக்கு மூன்று முறையாவது எனக்கு அழைத்து கிழவரைப் பற்றிக் கேட்டுவிடுவார். ‘ தூங்க வில்லை, நடந்துவிட்டார், நன்றாக இருக்கிறார், முழுமையாகச் சாப்பிட்டார், தூங்கினார்’ இப்படியான பழகியச் சொற்கள்தான் பேச வேண்டும். ஹசினாவே என் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியவுடன்தான் கொஞ்சம் துணிவுடன் குடும்பத்துடன் அவர் முன்னாலே பேசத்தொடங்கியிருந்தேன்.  குடும்பத்துடன் பேசுகின்ற போது கைப்பேசித்திரை எவ்வளவு அருகிலிருந்தாலும் கிழவர் பார்க்க மாட்டார். சில நேரங்களில் நானே வற்புறுத்தி அவர் முன்னால் என் மகனைக் காட்டுவேன். அவனைப் பார்த்தவுடன் மெல்லிய புன்முறுவல் புரிவார். அதைத் தவிர வேறொன்றும் பேச மாட்டார். அவரைக் குளிப்பாட்டும் போது கூட சுவரைப் பார்த்த வெறித்த பார்வைதான் இருக்கும். நான் யுடியுபில் தகாலோக் பாடல்களைத் திறந்துவிட்டு குளிப்பாட்டி முடிக்கும் வரையில் சுவரை நோக்கித்தான் இருப்பார். அவர் உடலை அழுத்தமாக தேய்த்தால்  தமிழில் எதையாவது சொல்லித் திட்டுவார். அவர் அப்படிச் சொல்லும் போது சிரித்துக் கொள்வேன். ஹசினா வந்தால் எதையாவது சொல்லி விடுவார் என்ற பயம் வேறு வந்துவிடும். கிழவரைப் பார்த்துக் கொள்வதென்பது ஹசினாவின் உடைமைப் பொருளொன்றைப் பார்த்துக் கொள்வதைப் போலத்தான் தோன்றும்.  ஆனால், ஹசினாவுக்குக் கிழவரின் மீது உடைமைப்பொருளை தாண்டிய பாசம் இருப்பதையும் உணர்ந்திருந்தேன்.

ஹசினா மட்டும்தான் வாரம் ஒரு முறையாவது வீட்டுக்கு வந்து கிழவரின் கைகளைக் கோர்த்துக் கொண்டு அருகே அமர்ந்திருப்பார். அவர்களுக்குள் எந்த உரையாடலும் நிகழ்வதுமில்லை. கொஞ்ச நேரத்திலே கைகளை விடுவித்துக் கொண்டு கைப்பேசியில் எதையாவது பார்க்கத் தொடங்கிவிடுவார். என்றாவது ஒருநாள் மற்ற மூன்று மகள்களுக்கும் சேர்த்துக் காணொளி அழைப்பு செய்து நால்வரும் ஒருசேரப் பேசுவார்கள். அப்பொழுதும் கிழவர் தமிழில் ஒரு சில சொற்கள் பேசுவதோடு சரி. அப்பாவை இருக்கையிலே அமரச்செய்து ஹசினா தரையிலமர்ந்து தொழுகையைச் செய்வார். அந்தத் தொழுகை முடித்தவுடன் கிழவரின் நெற்றியில் முத்தமிட்டுச் சென்றுவிடுவார்.

ஹசினாவின் கட்டளைப்படி ஒருநாளைக்கு நாங்கள் வசிக்கும் அடுக்ககத்தின் கீழ் இருக்கும் முந்நூறு மீட்டர் சுற்றளவு வளாகத்தை காலையில் மூன்று முறை, மதிய உணவுக்கு முன்னால் இரண்டு, சாயந்திரம் இரண்டு முறை என ஏழு முறை கிழவருடன் வலம் வரவேண்டும். வீட்டிலிருந்து அழைத்து வரும் போது கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டு தோரணையாக வருபவர் நடக்கத் தொடங்கியவுடனே என் தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டு மெல்ல நடை பழகுவதைப் போல நடக்கத் தொடங்குவார். அவர் கைகளின் இறுக்கம் தோளில் வலியையே உண்டாக்கி விடும். வழியில் தூக்கம் வருவதைப் போலக் கீழே சரியச் செல்பவரைத் தாங்கச் சென்றால் என் தோளை உதறி கைகளை முன்போல பின்புறம் கட்டிக்கொண்டு நடக்கத் தொடங்குவார். கீழே சரிந்து விழும் இமையை நேராக உயர்த்தி எதாவது வரலாற்றுப் பெயரைச் சொல்லிக் கொஞ்சதூரம் நடப்பார். இந்த மாதிரியான தருணங்களில் கூட மகள்கள் பெயரையோ அல்லது நெருங்கிய உறவினர்கள் பெயரையோ கிழவர் உச்சரிக்காததைக் கவனித்திருக்கிறேன்.

மறுபடியும் தூக்கக் கலக்கத்தால் சரிந்து விழுவதைப் போலச் சாய்பவரைத் தாங்கி நடக்கச் செய்யும் போது தோளைப் பற்றிக் கொள்வார். வழியில் நேபாளப் பாதுகாவலர்கள் கிழவருடன் உற்சாகமாக எதையாவது பேசிச் சிரிப்பார்கள். அதிலும் வயதில் மிக இளையவனான சோபன் ராஜ் கிழவரின் வழுக்கை மண்டையில் கைகளையோ அல்லது பேனாவையோ கொண்டு தட்டிப் மிக உரிமையாகப் பேசுவான். அவன் பேசுவதைக் கிழவர் ரசித்துக் கேட்பதைப் போலிருக்கும். நேபாளத்தில் மகர் இனத்தைச் சேர்ந்தவன். 19 வயது முடிந்து 20 தொடங்கினாலும் கூட அரும்பு மீசையுடன் துருதுருப்பாகப் பேசிக் கொண்டே இருப்பான். மற்ற நேபாளப் பாதுகாவலர்களைக் கூட அவர்கள் மொழியில் கிண்டல் செய்து கொண்டிருப்பான். அவன் அவரது வழுக்கைத் தலையில் கை வைத்து வருடி பேனாவால் அடிக்கும் போது கூட ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருப்பார். பகல் நேர வேலையின் போது அவசியமாய்க் கிழவரை வந்து சந்தித்துவிட்டுச் செல்வான். அவருக்குக் கை குலுக்குவதைப் போல கைகளைக் கொடுத்து ஏமாற்றுதல். கைகளைக் கிள்ளிப்பார்த்தல் என அவருடன் அவன் புரியும் விளையாட்டுகள் வேடிக்கையாக இருக்கும். கிழவரும் நிலை குத்திய பார்வையுடன் அத்தனையும் அனுமதித்து அமர்ந்திருப்பார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் காலை நடை முடிந்து சோபன் ராஜ் பேசிக் கொண்டிருக்கும் போது  அவர் அரிதாகத் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் தமிழ்சொல்லான ‘ நல்லா இருக்கேன்…எப்டி இருக்கே’ என்பதை மிகக் கேலியாகப் பேசிக் காட்டினான். அவரைப் போலவே வாயைக் குவித்து மூச்சு விட்டேவாறே பேசி முடித்தான். அவன் பேச்சைக் கேட்டுச் சிரிப்பாக இருந்தது. கிழவருக்கு உடனே உடலெல்லாம் விதிர்த்துப்போய் ‘கூர்க்கா…திருட்டுக் கூர்க்கா…’ என்று தமிழில் எதையோ சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார். சோபன் ராஜ்க்கும் அவர் ஏசுவது புரியவில்லை என்றாலும் அவர் கோபப்பட்டுவிட்டார் என உணர்ந்து அப்படியே அங்கிருந்து அகன்றுவிட்டான். கிழவரை வீட்டுக்கு அழைத்து வந்து நாற்காலியில் அமரவைத்துக் கொஞ்ச நேரமாகியபின் தான் உடலில் விதிர்ப்பு அடங்கியது. மதிய நடைக்கு அழைத்துச் சென்ற போது என் தோளைப் பற்றாமல் முழுமையாக இரண்டு சுற்று வலம் வந்தார். அவர் கைகளைப் பற்ற முயன்ற போது இறுக்கமே இல்லாமல் கைகளைக் கொடுத்தார். இரண்டு முழுச் சுற்றையும் முடித்து வீட்டுக்குத் திரும்பியதும் வழக்கம் போலவே சுவரைப் பார்த்துக் கொண்டு எதையோ ஆழமாக முணுமுணுக்கத் தொடங்கினார்.

மறுநாள் காலையில் கிழவர் எழுந்திருக்கவே மிக சிரமப்பட்டார். கிழவரின் தலையில் கைவைத்துப் பார்த்தேன். உடல் முழுதும் வெப்பமாக இருந்தது. ஹசினாவிடம் காலையிலே சொல்லி மருத்துவரை அழைத்துப் பார்க்கச் சொன்னேன். ஹசினாவும் மருத்துவருடன் வந்து பார்த்து உடலில் நீர்ச்சத்து குறைந்திருக்கலாம். அதனால் காய்ச்சல் ஏற்படுவது இயல்பு என்று சொல்லி மருந்துகளைத் தந்துவிட்டுச் சென்றார். கிழவரை எழுப்பி மருந்துகளை வேளை தவறாமல் தந்து கொண்டிருந்தேன். அன்றைக்கு நடைக்கு அழைத்துச் செல்ல வேண்டாமென ஹசினா சொல்லியிருந்தார். கிழவர் ஐந்தரை மணிக்கு என்னைக் கட்டாயப்படுத்தி நடைக்கு அழைத்துச் செல்லச் சொன்னார். ஹசினாவிடம் ஒருமுறை அழைத்துக் கேட்டேன். அவர்’ பப்பா, ஒக்கேவென்றால் அழைத்துச் செல்…நீதான் நடக்க வைத்து அழைத்துச் செல்ல வேண்டும்..தனியே விட்டுவிடாதே’ என வேலைக்குச் சேர்ந்த நாளில் குறிப்பிட்ட அறிவுரைகளையெல்லாம் பதினைந்து நிமிடம் சொல்லி முடித்தார். எனக்கே கூட கிழவரை முதல் நாள் பார்த்துக் கொள்வதைப் போன்ற உணர்வு வந்துவிட்டது.

அவருடைய நீண்ட தளர்வான காற்சட்டையை அணியச் செய்து கையில் தடியையும் கொடுத்து மெதுவாக நடக்க வைத்து அழைத்துச் சென்றேன். வாயில் வழியும் எச்சிலைத் துடைப்பதற்காகச் சிறிய கைக்குட்டையொன்றை சட்டையில் கட்டிவிட்டேன்.  அடுக்ககத்தை விட்டு வெளியே வந்ததும் நடையில் விரைவு கூட்டித் தனியே நடக்கப் பார்த்தவரின் கைகளை இறுக்கமாகப் பிடித்து நடை பழகுவதைப் போல மெதுவாக நடக்கச் செய்தேன். சோபன் ராஜ் அமர்ந்திருக்கும் பாதுகாவலர் அறைக்கு வந்ததும் நின்று கொண்டார். சோபன் ராஜ் அடுக்ககத்தைச் சுற்றி நடந்து கண்காணிக்கச் சென்றிருப்பான். அவரிடம் ஆங்கிலத்தில் ‘சோபன் ராஜ் இல்லை’ எனச் சொன்னேன். அங்கேயே நிற்கலாம் என்பதைப் போலத் தலையை ஆட்டிவிட்டு   நின்றார். உடன் எடுத்து வந்த தடியை விரித்தேன். அதில் அமர்வதற்கு இருந்த சிறிய இருக்கையில் அவரை அமர வைத்தேன். பத்து நிமிடம் கழித்து சோபன் ராஜ் வந்தான். அவனைப் பார்த்தவுடன் எழுந்து கொண்டார். அவன் என்னைப் பார்த்துப் புன்னகைத்து நேராக அறைக்குள் நுழைந்து கொண்டான். கிழவர் அறை முன் நின்று கொண்டார். சோபன் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு எதையும் பாராதவனாய் வேலை செய்து கொண்டிருந்தான். கதவினருகில் நின்று கொண்டார். சோபன் திரும்பியதும் அவன் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார். வெறும் முனகல் ஒலி மட்டுமே வந்தது. நானும் அவரிடம் ‘ சோபனுக்கு பை சொல்லுங்கள்…நம் மேலே செல்லலாம்’ எனச் சொன்னேன். அவன் கைகளைக் கொஞ்சம் கூட விடாமல் பற்றிக் கொண்டார். சோபன் கைகளை விடுவித்துக் கொண்டு உள்ளே சென்றான். கிழவரின் முகத்தைக் கூட பார்க்காமல் மேசை மேலிருந்த புத்தகத்தைப் புரட்டி எதையோ எழுதத் தொடங்கினான்.  அவன் உள்ளே சென்ற போதும் கூட கொஞ்சதூரம் அங்கே நின்று கொண்டிருந்தார். அப்புறமாகத் தளர்ந்து நின்றவரின் கைகளைப் பற்றிக் கொண்டு நடக்க வைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.

வீட்டுக்குள் நுழைந்ததும் வழக்கம் போலச் சுவரில் நிலை குத்திய பார்வையுடன் நெடுநேரம் அமர்ந்திருந்தார். குளியல், உணவு, தூக்கம் எல்லாமே வழக்கம் போலவே நடந்து முடிந்தது. ஹசினாவும் இரவில் அழைத்து வழக்கம் போல நலம் விசாரித்து முடித்தார். எல்லாமே எந்த மாற்றமும் இன்றியே நடந்து முடிந்தது. காலையில் எழுந்ததும் தான் எதையுமே செய்யாமல் செய்யவும் விடாமல் மகிழ்ச்சியான முகத்துடன் சோபாவில் அமர்ந்து கொண்டு அல்ஹம்டுலில்லா சொல்ல தொடங்கினார். சோபாவில் படுத்ததும் கண்களை மூடிக் கொண்டு பிரார்த்திப்பதைப் போல முணுமுணுத்துக் கொண்டிருந்தார். ஹசினாவுக்கு அழைத்துச் சொன்னேன். அவரை அமர வைத்து நீர் தந்து ஆக்ஸிமீட்டரை விரலில் செருகி உயிர்வளியைக் கண்காணிக்கச் சொன்னார். இன்னும் கொஞ்ச நேரத்தில் தான் அங்கு வருவதாகவும் சொன்னார். கிழவரின் முனகல் சத்தம் கூட நின்று போயிருந்தது. எதையுமே பேசாமல் மெளனமாக இருந்தார். இதயத்துடிப்பு மட்டும் வேகமாக இருந்தது. குவளையில் நீரை எடுத்து அருகில் அமர்ந்து கொண்டு உதட்டில் நீரைக் கொஞ்சமாகப் பருக்கச் செய்தேன். நீர் வாய் வழியே வழிந்தது. இதயத் துடிப்புக் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. ஹசினாவுக்கு இரண்டு முறை அழைத்தும் கிடைக்கவில்லை. ஹசினாவின் உடைமைப் பொருளை நான் பார்த்துக் கொள்ள வேண்டிய தேவை இன்றுடன் முடியப்போகிறதென்ற எண்ணம் வந்தது. கிழவரின் கைகளைப் பற்றிப் பார்த்தேன். என்னை நன்கு இறுக்கவே பற்றினார். ஆனால், இதயத்துடிப்பளவு கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைவதைக் காணப் பயமாய் இருந்தது.

என் கண் முன்னால் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் பொருளை மீட்க வழிதெரியாமல் நானும் கிழவரைப் போலவே சுவரில் நிலை குத்திய பார்வையுடன் அமர்ந்திருக்கிறேன். ஹசினா என்னை அழைத்தார். ‘ அரோரா, நாங்கள் நினைத்ததை விட நீ எங்கள் அப்பாவை நன்றாகவே பார்த்துக் கொண்டாய்..எந்தக் குற்றவுணர்வும் இல்லாமலிரு…நான் வந்து கொண்டிருக்கிறேன்…உன்னை உடனே எங்கும் அனுப்பி வைக்க நான் முயலவில்லை…அப்பாவை அருகிலிருந்து பார்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றி…இறைவனுக்கு நன்றி…அல்ஹம்டுலில்லா..’எனச் சொல்லி முடித்தார். கிழவரின் பிடி இன்னும் இறுக்கமாகத்தான் இருந்தது. உடலில் துடிப்புக் கொஞ்சமாய் இருக்கச் செய்தது.

நானுமே கடவுளுக்கு நன்றியென்பதை விளையாட்டு போலச் சொல்லிக் கொண்டேன். எனக்கும் கொஞ்சமாய் பதற்றம் குறைந்திருந்தது. அரோயா புலனத்தில் அழைத்தாள். மகனைக் காட்டிப் பேசுவதற்காய் இருக்கும். அழைப்பை எடுத்துத் திரையைப் பார்த்தேன். மகனைக் காட்டுவதற்கு முன்னரே ‘ எங்கே…மகன்…’ என அவசரத்துடன் கேட்டேன். இணைய இணைப்பு சரியாக இல்லாததால் காட்சி தெளிவாகத் தெரியாமல் இருந்தது. இருங்கள்…இருங்கள்…வந்து கொண்டிருக்கிறான் என்றாள்…அவன் வருவது வரையில் மனம் படப்படப்பாக உணரத்தொடங்கியது.…’அமா…அமா அரோரா’ என என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் குரல் கேட்டதும் அழைப்பைத் துண்டித்துக் கொண்டேன். கிழவரின் உடலில் குளிர் என்னையும் அணைக்கத்தொடங்கியது.

1 COMMENT

  1. அருமையான கதை அர்வின். ஒரு முதியவரைப் பார்த்துக் கொள்வதென்பது அவ்வளவு எளிதன்று. அஃது ஒரு வேலையாக இருந்தாலும், அதில் ஒரு பாசம் இழையோடிருப்பதை உணர்த்தும் இடங்கள் சிறப்பு. கதையின் முடிவு எதிர்பார்த்தது என்றாலும், அதைச் சொன்ன விதம் பல விடயங்களைக் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.