ஆனந்த்குமார் கவிதைகள்

சில்லறை

ஒரு பெரிய
ரூபாய் நோட்டு மொத்தமும்
சட்டென உடைந்து
சில்லறைகளாய் மாறிவிட்டதைப்போல
ஒரு சின்னத் தடுக்கல்
அந்த ஆளுயரக் கண்ணாடியைப்
பிரித்துவிட்டது
ஆயிரம் சின்ன கண்ணாடிகளாய்.
ஒவ்வொரு சில்லிலும்
இப்போது தெரிவது
ஒரு குட்டி மிட்டாய்.
சுவைத்துச் சுவைத்தாலும்
ஒரு மிட்டாயின் ஆயுள்
குறைந்தது இரண்டு நிமிடங்கள்.
அவனது ஆளுயரம் இப்போது
இரண்டிரண்டு குட்டி நிமிடங்களாகப்
பிரிந்தும் சேர்ந்தும்
இவன்முன் நிற்கிறது
பற்பல வண்ணங்களில்.


மருந்து

உனக்கான மருந்தில்லை
இது
ஒரு குட்டியூண்டு
காய்ச்சலுக்கானது
இந்த குப்பியின் குறிப்பைவிட
நீ கொஞ்சம் வளர்ந்து
விட்டதல்ல பிரச்சினை,
உனது நோய்மையைச்
சிறு துண்டுகளாக வெட்டி
இந்த மருந்திற்குத் தினம்
தின்னக் கொடுக்கலாம்தான்
ஆனால்
கசப்பின் பயனல்ல
‘இன்னொரு வாயென’
உனை ஆசையுடன் கேட்கவைக்கும்
இனிப்பின் வியப்பே
உன்னைக் குணப்படுத்துமெனத்
திரும்பவும் நீ
பரிபூரணமாக நம்பவேண்டும்.


விலை

என்னிடம்
இல்லாத செல்வமெல்லாம்
ஏன் என்னிடம் இல்லையென
இன்றெனக்குத் தெரிந்துவிட்டது.
அதை இந்த உலகிற்குப்
பகிர்ந்து கொடுத்துத்தான்
இந்த சின்னஞ்சிறிய ஊதா மலரை
நான் வாங்கினேன் என
எனக்குத் தோன்றிவிட்டது
இப்போது இந்த
சின்னஞ்சிறிய மலரை
எந்த ஒருவரால் வாங்க முடியும்?
வாங்க முடிந்தாலும்
இது
இன்னும் கொஞ்சம்
இதழ் விரித்துவிட்டதே
இதை விற்கமுடியுமா என்ன?


உனது வேண்டுதல்
உனக்கு ஞாபகம் இருக்கிறதா
உனது வேண்டுதலின் அளவேயாக
நீ கொண்டுவந்த அந்தச்
சிறிய நெய்விளக்கை?
ஏற்றி வைத்தபோது
அருகில்
துடித்து அணையவிருந்த
மற்றொரு வேண்டுதலை
உன்னதில் நீ
சேர்த்து வைத்ததை?
பிரார்த்தனை மறந்து
கைகூப்பி நின்ற
உன்முன் நிகழ்ந்த
உன் வேண்டுதலினும்
சற்று பெரிய சுடரை?

விரிதலின் பாதை

வழக்கமான பாதையினின்று
கிளைபிரியும் சாலையில்
நிற்குமந்த தனிமரம்
இன்று
ஒரு ரகசிய வாசல்போல்
சாலையை
கைகளால் குவித்துக்காட்டுகிறது
வான் நோக்கி
விரிந்து விரிந்து
மண்ணைத் தொட்டுவிட்ட
மரம்.