பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு கோடியில்.
“என் கேள்விக்கு பதில் வேண்டும்” என ஒரு குரல் ஒலித்தது, பத்தாயிரம் தூண்கள் தாங்கி நிற்கும் மஹா மண்டபம் அதிர்ந்தது. நட்சத்திரங்கள் பிரதிபலிக்கும் ஒளிர்ந்த தரையில் உறுதியுடனும் கால்கள் நடந்துவரும் சத்தம் கேட்டது. அங்கு தனித்திருக்கும் அரியணை முன்வந்து ஒருவன் நின்றான்.
தன்னுள் அடங்கி தன்மறதியில் திழைத்திருந்த கண்கள் மலர்ந்தன. “என்ன?” என ஒருவர் தன் அமைதியின் தவம் அணுவளவு கலைந்துவிடாமல் வினவினார்.
“இந்த மனிதர்கள் நமக்கெதற்கு? இவர்களோடு நான் அலுத்துப்போய் விட்டேன். அவர்கள் மீதான என் இரக்கம் கூட பயனற்றதானது” என நிலம் பார்த்தான்.
“தோல்வியுற்ற படைப்பிற்கு வருந்துகிறேன்.” என அவர் எதையோ யோசித்தபடியே உச்சு கொட்டவும், அதைக்கண்ட அவன் சினந்துகொண்டான்.
“என் பிதாமகரே! சந்ததி பெருகச் செய்ய இருவரை அனுப்பி வைத்தீர், திரும்பி வந்தவர்கள் மனம் பிறழ்ந்து கிடக்கிறார்கள்.” என ஒரு திசையில் கை நீட்டினான். தூரத்தில் மங்கிய புகைவிலகி ஆதாமும், வைவஸ்வத மனுவும் அடைப்பட்டிருக்கும் ஒரு கூண்டு தென்பட்டு மறைந்தது. “இவர்களின் துணைவிகள் தினம் ஓலமிட்டு அழுகிறார்கள். எதற்கு இவையெல்லாம்?” என்று நரம்புகள் புடைக்க முஷ்டிகள் இறுக கைகள் உயர்த்திக் கேட்டான்.
“சிருஷ்டியின் திட்டம் தான் என்ன? யுகங்கள் கடந்து விட்டன. இவற்றை நாம் ஏன் செய்ய வேண்டும்? எனக்கென்ன லாபம்?” என அவன் ஒவ்வொரு பேச்சுக்கும் குரல் உயர்ந்தது.
“இனியும் எனக்கானதென்று எதுவுமில்லை. எதுவும் உனக்கானதில்லை. எப்போதும் நமக்கானதில்லை” என விண்மீன்களை அண்ணாந்து பார்த்தபடியே அவர் கூறினார். வார்த்தைகள் ஒவ்வொன்றும் கணீரென ஒலித்தது.
“அப்போது எவை தான் நமக்கானவை?” ஏமாற்றத்தின் குரல் தொனித்தது.
“அது தான் எதுவுமே இல்லை என்று சொல்லிவிட்டேனே. நாமெல்லாம் ஒன்றுமில்லை. எவரும் ஒன்றுமில்லை. எனக்கே தெரியவில்லை” என கடிந்துகொண்டார்.
அந்த வார்த்தைகள் அவனை நிலைகுலையச் செய்தது. யுகயுகமாய் அவனுள் படிந்துகிடந்த ஆதங்கங்கள் இனியும் முடியாதென்றது. அவன் நம்பிக்கைகளுடன் சேர்ந்தே சிதறி வெடிக்க சித்தமாயிற்று. ரிஷிக்கோபம் அவன் சிரம் ஏறிப் பற்றி எரிந்தது.
“பிறகு நீ எதற்கு?” என அவர் அரியாசனத்தை ஒரு அடி நெருங்கினான்.
“அற்ப பதரே.” என எரிச்சலுற்று சீறிய அவர், சொல்லின் பின் கோடி சூரியன்கள் கொண்டு கோர்த்த சாட்டையை ஓங்கி விசிறியதில்., பின் சென்ற சாட்டையின் நுனி ஒருகணத்தில் இருண்ட விண்ணில் கோடி சூரியன்களின் ஜுவலிப்புடன் எங்கோ இரு கிரகங்களில் மீது பட்டு துவம்சம் செய்துவிட்டு அவன் மீது சீறிப்பாய்ந்தது.
அடுத்த சிலமணி நேரங்களில் அந்த மஹா மண்டபம் முழுக்க செந்நிற ஒளிவெள்ளம் பரவிக்கிடந்தது. ஒரு உடலை இரு கைகள் நடுங்கியபடியே தூக்கியது.
“என் நண்பனை கொலை செய்தது யார்? ஏன்?” கலங்கியபடி கர்ஜித்தார் ஒருவர்.
“என் நான்காவது பேரன். நோய்களின் அதிபதி. மனிதர்கள் அர்த்தமற்ற படைப்புகள் என்று கருதி வெறுப்பில் இதை அவன்…… அவன்” என்று அவரின் நான்கு குரல்களிலும் தழுதழுத்தார்.
“இப்போது எங்கிருக்கிறான் பிரம்மரே?”
“பூமியில். ஒரு கொடிய நோயை பரப்பி மனிதர்களை கொன்றழித்துக் கொண்டிருக்கிறான் என வதந்திகள் பரவுகின்றன.” என்று தொடர்ந்தார்.
“சாத்தானே!…கடவுள் மாண்டுவிட்டார். இனிமேல் என்ன செய்வது?” என பயத்தோடு பேரிடிகள் முழங்கிக்கொண்டிருந்த திசையெங்கும் அண்ணாந்து பார்த்தபடியே கேட்டார் பிரம்மா..
அந்த உடலை அள்ளி அணைத்துக் கொண்டு, அரியணைப் படிகளில் ஏறி, கடவுளை அந்த ஆசனத்திலேயே ஒரு குழந்தையை அத்தனை லாவகத்துடன் கிடத்துவது போல் கிடத்தி, பரிவுடன் அந்த விரல்கள் நெற்றியை தடவிக் கொடுத்தன. உதடுகள் துடித்து நின்றன. செங்கண் ஜுவலித்தன. ஒரே வார்த்தை மட்டும் உறுதியுடன் வந்தது.
“பார்க்கலாம்”.
- ஜனார்த்தனன்