அறிவொளிர்தல் என்றால் என்ன?: கேள்விக்கு ஒரு பதில் இம்மானுவேல் காண்ட்,தமிழாக்கம்: விவேக் ராதாகிருஷ்ணன்

றிவொளிர்தல் (Enlightenment) என்பது மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட முதிர்ச்சியற்ற நிலையிலிருந்து கிடைக்கும் மீட்பு. முதிர்ச்சியற்ற நிலை என்பது, மற்றவரின் வழிகாட்டுதல் இல்லாமல் தன் சொந்த அறிவாற்றலைப் பயன்படுத்த முடியாத ஒரு நிலை. இந்த முதிர்ச்சியற்ற நிலையைத் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்வதற்குக் காரணம் நம் அறிவாற்றலின் குறைபாடு அல்ல. மாறாக, இதற்குக் காரணமாய் இருப்பது, அறிவாற்றலை மற்றவரின் வழிகாட்டுதலின்றி பயன்படுத்தத் தேவையான மனத்திடம், மற்றும் துணிவின் இல்லாமையே. “பகுத்தறிந்திட துணிவுகொள்! (Sapere aude!) உன் சொந்த அறிவாற்றலைப் பயன்படுத்தத் தைரியம் கொள்!” என்பதே அறிவொளிர்தலின் பொன்மொழி ஆகும்.

இயற்கை நம்மை மற்றவரின் வழிகாட்டுதலிலிருந்து விடுவித்து (naturaliter maiorennes) நீண்ட காலமாகியும், மனித சமூகத்தின் ஒரு பெரும் பகுதி தங்கள் வாழ்க்கை முழுவதையும் முதிர்ச்சியற்ற நிலையிலேயே கடக்கிறது.  சோம்பலும், துணிவின்மையும்தான் இதற்கு முழுமுதற்க் காரணங்களாக இருக்கின்றன. இதனால்தான்,  இவர்களின் பொறுப்பாளர்களாக தங்களையே நியமித்துக்கொள்ள மற்றவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கிறது. உண்மையில் முதிர்ச்சியற்ற நிலையிலிருப்பது மிகவும் சௌகரியமானது! எனக்காக உலகைப் புரிந்துகொள்ளும் ஒரு புத்தகம் என்னிடம் இருந்தாலோ, என் மனசாட்சியாகச் செயல்படும் ஒரு ஆன்மீக குரு என்னிடம் இருந்தாலோ, எனக்கான உணவுமுறையை நிர்ணயிக்க ஒரு வைத்தியர் என்னிடம் இருந்தாலோ, மற்றும் இதுபோன்ற பலர் என் வாழ்வில் எனக்காகப் பொறுப்பேற்றாலோ, நான் என்னை சிரமப்படுத்தாமலே, முயற்சியின்றி வாழலாம். எனக்காகப் பொறுப்பேற்பவர்களுக்கு நான் எப்படி ஊதியம் தருவேன் என்றுகூட நினைக்கத் தேவையில்லை. அவர்களே சோர்வளிக்கும் வேலைகளைக் கூட எனக்காக மனமார மேற்கொள்வார்கள். மனித சமூகத்தின் பெரும்பகுதி (பெண் பாலினம் முழுவதும் உட்பட) அறிவுமுதிர்ச்சிக்கான முன்னேற்றத்தை, கடினமானதாக மட்டுமல்லாமல், ஆபத்தானதாகவும் கருதுகிறது. இந்த கருத்தை, மக்களை கனிவுடன் கண்காணிக்கும் பொறுப்பாளர்கள் தக்கவைத்துக் காத்துக்கொள்வார்கள். முதலில், அவர்கள் வளர்த்துவரும் மனித விலங்குகளை அடிமைப்படுத்தி முட்டாளாக்குவார்கள்; பிறகு, அந்த செல்லப் பிராணிகள் கட்டை வண்டியின் கட்டுப்பாடில்லாமல் துணிவுடன் ஒரு அடி எடுப்பதைக் கூட கவனமாகத் தடுப்பார்கள்; அதன் பிறகு, இவை தனியாக நடக்க முயன்றால் விளையும் அச்சுறுத்தும் ஆபத்தைக் காண்பிப்பார்கள். உண்மையில் இந்த ஆபத்தானது மிகப் பெரியதல்ல; ஒரு சில முறை விழுந்ததற்குப் பிறகு, தனியாக நடக்கவே கற்றுக்கொண்டு விடலாம். ஆனால், ஆபத்தையே முன்வைக்கும் எடுத்துக்காட்டுகள் இவற்றைக் கோழைகளாக்கி, வேறு முயற்சி ஏதும் எடுக்க விடாமல் பயமுறுத்திக்கொண்டே இருக்கும்.

எனவே, கிட்டத்தட்ட தன் சொந்த இயல்பாகவே மாறிவிட்ட இந்த முதிர்ச்சியற்ற நிலையிலிருந்து விடுவிப்பதென்பது தனி ஒருவருக்கு மிகக் கடினமான ஒன்றாக இருக்கிறது. இது அவருக்கு ஒரு விருப்பமான நிலையாகக் கூட மாறிவிடுகிறது. இந்த முதிர்ச்சியற்ற நிலையில், தன் சொந்த காரணத்திறனை (reason) பயன்படுத்த அவரால் முடியாமல் போய்விடுகிறது. சுயமாகச் சிந்திக்கும் முயற்சியைக் கூட எடுக்க அவருக்கு அனுமதி இல்லாததே இதற்குக் காரணம். அவருடைய நிரந்தர முதிர்ச்சியற்றத் தன்மையின் சங்கிலிகளாக இருப்பவை, அவருடைய இயற்பண்புகளின் பயன்பாட்டிற்கு – குறிப்பாக, முறைகேடான பயன்பாட்டிற்கு – கருவிகளாகச் செயல்படும் சட்டங்களும் மற்றும் ஒழுங்குமுறைகளுமே ஆகும். இச்சங்கிலிகளைக் கழற்றி எறிபவரும்கூட மிகக் குறுகலான பள்ளத்தை சந்தேகத்துடன்தான் தாண்டுவார். இதற்குக் காரணம், அவர் இது போன்ற சுதந்திரமான பயணத்திற்குப் பழக்கப்பட்டவர் அல்ல. ஆகையால், மிகச் சிலரே, சொந்த அறிவாற்றலை முனைப்புடன் உழைக்கச் செய்து, முதிர்ச்சியற்ற நிலையிலிருந்து தங்களை விடுவிப்பதில் வெற்றிகண்டு, அப்பாதையில் நம்பிக்கையுடனும் பயணிப்பர். 

ஆனால், பொதுமக்கள் ஒரு கூட்டாகத் தாமே அறிவொளிர்வை அடையும்  சாத்தியம் கூடுதலாக இருக்கிறது. உண்மையில், பொதுமக்களைச் சுதந்திரமாக இருக்கவிட்டால், அவர்கள் அறிவொளிர்வை அடைவது கிட்டத்தட்டத் தவிர்க்க முடியாததாகவே இருக்கும். இதற்காகவே, மக்கள் கூட்டத்தின் பொறுப்பாளர்களாக நிறுவப்பட்டவர்களுள் கூட, சுயமாகச் சிந்திக்கக் கூடிய சிலர் எப்போதும் இருப்பார்கள். அவர்கள், முதலில், முதிர்ச்சியற்றநிலை என்ற பாரச்சுமையிலிருந்து தங்களையே விடுவித்துக் கொள்வார்கள்; பிறகு, நம் சொந்த தகுதிகளுக்குத் தகுந்த மதிப்பை அளிப்பதற்கான உணர்வையும், தனி ஒருவர் சுயமாகச் சிந்திப்பதற்கான கடமையுணர்வையும் பரப்புவார்கள். இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், நிறுவப்பட்ட பொறுப்பாளர்களால் இந்த பாரச்சுமையின் பிடியில் போடப்பட்ட பொதுமக்களே, காலப்போக்கில் பொறுப்பாளர்களை அதே பாரச்சுமையின் பிடியிலிருக்கக் கட்டாயப்படுத்துவார்கள். இது, குறிப்பாக, அறிவொளிர்வை அடைவதற்குத் திறனில்லாத சில பொறுப்பாளர்களால் தூண்டப்பட்ட மக்கள் செய்வது. அறிவுக்கு முரணான முற்சாய்வுகளை மக்களுக்குள் விதைப்பதால் வரும் தீங்கு என்னவென்றால், அவ்வாறு விதைக்கத் தொடங்கினவர்களையும், அல்லது, அதைப் பின்பற்றுபவர்களையும் மக்களே பின்பு பழி வாங்குவார்கள். பொதுமக்கள் அறிவொளிர்வை (அதாவது, அறிவுமுதிர்ச்சியை) மெதுவாகத்தான் அடைய முடியும். ஒரு தனி நபரின் சர்வாதிகாரத்தையும், பேராசைப் பிடித்த அல்லது கொடுங்கோன்மையான அடக்குமுறையையும், ஒரு புரட்சியினால்  வீழ்ச்சியடையச் செய்ய முடியும். ஆனால், மக்கள் சிந்திக்கும் முறையில் உண்மையான சீர்திருத்தத்தைக் கொண்டுவர புரட்சியால் நிச்சயமாக முடியாது. மாறாக, புரட்சியால் வரும் புதுப் புது முற்சாய்வுகள், சிந்தனையற்ற பெரும் மக்கள் கூட்டத்திற்கு வழிகாட்டும் கடிவாளங்களாகச் செயல்படும்.

அறிவொளிர்தல் உண்டாவதற்குத் தேவையான ஒன்று சுதந்திரம் மட்டுமே. உண்மையில், இருப்பதிலேயே தீங்கற்ற ஒன்றைத்தான் “சுதந்திரம்” என்று அழைக்க முடியும்: அதுதான், எல்லா தருணங்களிலும், ஒருவருடைய காரணத்திறனின் பொதுவான பயன்பாட்டிற்கு (public use of one’s reason) தேவையான சுதந்திரம். ஆனால், இப்போது, நான் எல்லா பக்கங்களிலிருந்தும் கேட்பதெல்லாம் இதுதான்: “வாதம் செய்தே!”. அதிகாரி சொல்கிறார்: “வாக்குவாதம் பண்ணாதே, கடமையைச் செய்!”; வரி வசூலிப்பவர் சொல்கிறார்: “வாக்குவாதம் பண்ணாதே, பணத்தைக் கட்டு!”; திருச்சபையின் குரு (clergyman) சொல்கிறார்: “வாக்குவாதம் பண்ணாதே, நம்பு!”; (உலகின் சிறந்த தலைவர் மட்டும் தான் சொல்வார்: “எவ்வளவு வேண்டுமானாலும், எதைப் பற்றி வேண்டுமானாலும் வாதம் செய், ஆனால் இட்ட கட்டளைகளைப் பின்பற்று!” என்று). சுதந்திரத்திற்கு எங்கும் கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால், எந்த வகையான கட்டுப்பாடு அறிவொளிர்வைத் தடுப்பதாக இருக்கிறது? மற்றும், எந்த வகையான கட்டுப்பாடு  அதைத் தடுக்காமல், மாறாக ஆதரித்து மேம்படுத்துகிறது? இக்கேள்விகளுக்கு என் பதில்: ஒருவருடைய காரணத்திறனின் பொதுவான பயன்பாடு எப்போதும் சுதந்திரமாகவே இருக்க வேண்டும். அதனால் மட்டுமே மனிதர்களிடம் அறிவொளிர்வைக் கொண்டுவர முடியும். ஆனால், ஒருவருடைய காரணத்திறனின் தனிப்பட்ட பயன்பாடு (private use of one’s reason), அறிவொளிர்வுக்கான முன்னேற்றத்தை எந்த விதத்திலும் தடுக்காது என்றாலும், அது பெரும்பாலும் ஒருவருடைய குறுகிய வட்டத்தினுள் அடைபட்டுவிடும். என் புரிதலில், காரணத்திறனின் பொதுவான பயன்பாடு என்பது, படித்தவர்களின் உலகத்தில் ஒருவர் தன் காரணத்திறனை ஒரு அறிஞராகப் பயன்படுத்துவது; மற்றும், காரணத்திறனின் தனிப்பட்ட பயன்பாடு என்பது, தனக்கு ஒப்படைக்கப்பட்ட அரசுப் பணியிலோ அல்லது அலுவலகத்திலோ தன் காரணத்திறனை அளவோடு பயன்படுத்துவது.

ஒரு சமூகத்தின் நலனுக்கான பணிகளை நடத்தி நிறைவேற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட இயக்கமோ அல்லது அமைப்போ தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு அமைப்பில் அந்த சமூகத்தைச் சேர்ந்த சிலர் பொதுநலன் கருதி (குறைந்தபட்சம், வரும் நலன்களைக் கெடுக்காமல் இருக்க), அரசால் வழி நடத்தப்படுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் அரசுடன் ஒரு போலித்தனமான ஒற்றுமையுணர்வோடு அடங்கித்தான்   பணியாற்ற வேண்டும். அந்த இடத்தில் வாதாடுவதற்கு அவர்களுக்கு நிச்சயமாக அனுமதி இருக்காது. மாறாக, கொடுக்கப்படும் கட்டளைகளைக் கட்டாயமாகப் பின்பற்றவேண்டும். ஆனால், அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னையே ஒட்டுமொத்த சமூகத்தின் ஒரு உறுப்பினராக, மற்றும் அதோடு உலகமென்னும் சமூகத்தின் குடிமகனாகக் கருதுவார். அப்போது, ஒரு அறிஞர் என்ற தகுதியோடு, அவர் பொதுமக்களுடன் தன் கருத்துகளின் மூலமாக உரையாடவும் செய்வார். அவ்வாறு தன்னை உலகக் குடிமகனாக, சமூகத்தின் அறிஞராகக் கருதும்போது, அரசுக்குப் பணிந்து பொறுப்பேற்கும் பணிகள் எதுவும் பாதிக்கப்படாமல், அவரால் வாதங்களில் நிச்சியமாக  ஈடுபட முடியும். உதாரணத்திற்கு, ஒரு இராணுவ அதிகாரி, தன் மேலதிகாரியிடம் உத்தரவைப் பெற்று தன் கடமையைச் செய்யும்போது, வெளிப்படையாகத் தர்க்க வாதத்தில் ஈடுபட்டு, பெற்ற உத்தரவின் நோக்கத்தையும், பயன்பாட்டையும் கேள்வி கேட்டால், அது பெரும் தீங்கையே விளைவிக்கும். பெற்ற உத்தரவை அவர் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். ஆனால், மனித சமூகத்தின் அறிஞராக, அவர் இராணுவப் பணியில் நடக்கும் தவறுகளை விமர்சித்து, அதைப் பொதுமக்களின் தீர்ப்புக்காக எடுத்துரைப்பதை, நியாயமான முறையில் யாராலும் தடுக்க முடியாது. இதைப் போலவே, ஒரு குடிமகன் தனக்கு விதிக்கப்பட்ட  வரியைச் செலுத்த மறுக்க முடியாது. அவ்வாறு வரியைக் கட்டவேண்டிய ஒருவர், தனக்கு விதிக்கப்பட்ட வரிகளுக்கு எதிராகத் தகாதமுறையில் கண்டனத்தைப் பொதுவெளியில் தெரிவித்தால், அவரை மக்களிடம் தேவையற்ற அவதூறைப் பரப்புவதாகக் கருதி  தண்டிக்க முடியும் (குறிப்பாக, அது பொதுமக்களிடம் எதிர்ப்புத்தன்மையை வளர்க்கக்கூடும் என்பதால்). ஆனால், அதே குடிமகன், ஒரு அறிஞராக, வரி விதிப்பு அமைப்பின் முறைகேட்டை அல்லது அநீதியைப் பற்றிய  தன் எண்ணங்களைப்  பொதுவெளியில் வெளிப்படுத்தும்போது, ஒரு குடிமகனின் கடமைக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருத முடியாது. மேலும், இதைப் போலவே,  திருச்சபையின் குரு ஒருவர், தன் மறைக்கல்வி (catechism) மாணவர்களுக்கும் மற்றும் தன் திருக்கூட்டத்தினருக்கும் (congregation), தான் தொண்டாற்றும் திருச்சபையின் நம்பிக்கை அறிக்கைக்கு (creed) ஏற்றவாறு போதனையுரையை வழங்கக் கடமைப்பட்டவர். அவர் திருச்சபையின் குருவாக நியமிக்கப்பட்டதே, இந்த கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையில்தான். ஆனால், ஒரு அறிஞராக அவருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. அதாவது, அவர் ஏற்ற நம்பிக்கை அறிக்கையின் தவறுகளைப் பற்றி, கவனமாக ஆய்வுசெய்து, தன் நல்லெண்ணங்களைப் பொதுவெளியில் எடுத்துரைக்கலாம். மேலும், ஒரு அறிஞராக, திருச்சபை மற்றும் மதம்  சார்ந்த நிறுவனங்களின் சீரமைப்பிற்கு தன் பரிந்துரைகளை  அவர் முன்வைக்கலாம். இதையெல்லாம் செய்வதால், அவர் மனசாட்சியில் பாரம் ஒன்றும் கூடாது. திருச்சபையின் ஒரு பிரதிநிதியாக, மற்றும் ஏற்ற பதவியின் விளைவாக, தான் போதிக்க வேண்டியதை தன் போக்கில் போதிக்கும் சுதந்திரம் அவரிடம் இல்லை. மாறாக, வேறொருவரால் பரிந்துரைக்கப்பட்டதை, வேறொருவருக்காகப் போதிக்கவே அவர் குருவாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் சொல்வது: “நம் திருச்சபை இதையே போதிக்கிறது; மற்றும் இதெல்லாம்தான் அது நமக்குத் தரும் விளக்கங்கள்”. ஆகையால், அவரே முழு நம்பிக்கையுடன் ஏற்காத போதனைகளிலிருந்தும், நடைமுறைக்குத் தேவையான நலன்களை திருக்கூட்டத்திற்கு அவர் பெற்றுத்தர வேண்டும். இதற்கு மாறாக, அவர் போதனைகளை வழங்குவதற்குக் காரணம், அதில் உண்மைகள் மறைந்திருக்கிறது என்ற சாத்தியத்தின் மேலுள்ள நம்பிக்கையாகக் கூட இருக்கலாம். குறைந்தபட்சம், அதில் மத உணர்வுக்கு முரணான எதுவும் இருக்காமல் அவர் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி மத உணர்வுக்கு முரணான ஒன்று அதிலிருப்பதாக அவர் நம்பினால், அவரால் மனசாட்சியுடன் தன் பதவிக்கான கடமைகளைச் செய்ய முடியாது; மற்றும் அப்பதவியிலிருந்து அவர் விலக வேண்டியதாக இருக்கும். ஆகையால், திருச்சபையில் நியமிக்கப்பட்ட ஒரு குருவின் காரணத்திறனின் பயன்பாடு வெறும் தனிப்பட்ட பயன்பாடாகத்தான்  (private use) இருக்கிறது. ஒரு திருக்கூட்டம் என்பது, எவ்வளவு பெரிய கூட்டமைப்பாக இருந்தாலும், அது ஒரு சிறிய சமூகத்தின் மக்கள் கூட்டமே. இதைப் பொறுத்த வரையில், குரு என்பவர் சுதந்திரமற்றவர்;  மற்றும் அவரால் சுதந்திரமாக இருக்கவும் முடியாது என்பதுதான் உண்மை. இதற்குக் காரணம், அவர் வேறொருவரின் ஆணைகளையே நிறைவேற்றி வருகிறார். இதற்கு மாறாக, ஒரு அறிஞராக, அவர் தன் கருத்துகளைப் பரந்த பொதுமக்களின் திரளுக்கு, அதாவது, மொத்த உலகிற்கும் வழங்கலாம். அவ்வாறு பொதுமக்களிடம் உரையாற்றும்போது, தன் காரணத்திறனின் பொதுவான பயன்பாட்டினை (public use) அவர் உபயோகிப்பார். தன் சொந்த காரணத்திறனைப் பயன்படுத்துவதில், மற்றும் தன் சொந்த கருத்துகளைப் பொதுமக்களின் முன் எடுத்துரைப்பதில், அவர் எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவிப்பார்.

மதம் தொடர்பான விஷயங்களில் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் கட்டாயமாக அறிவு முதிர்ச்சியற்று தான் இருக்கவேண்டும் என்று நினைப்பது, இருக்கும் அபத்தங்களை நிலையானதாக மாற்றக்கூடிய மாபெரும் அபத்தமாகும். ஆனால், மக்களை நிரந்தரமாக அவர்கள் பொறுப்பில் வைத்துக்கொள்ள, மதகுருமார்கள் ஒன்றுகூடி (ஒரு திருச்சபை மாநாட்டிற்கு ஒன்று கூடுவதைப் போல), மாற்றமுடியாத ஒரு நம்பிக்கை அறிக்கையை அல்லது மத ஒழுங்குமுறைமையை மக்கள் சார்பில் ஏற்றுக்கொள்ளத்  தீர்மானிப்பது நியாயமாகாதா? என்னைப் பொறுத்தவரையில் இது முற்றிலும் தவறானது. அப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை உயர் அதிகாரமோ, பாராளுமன்றமோ அல்லது ஒரு சில கண்ணியமான சமாதான அமைப்புகளோ கூட உறுதிப்படுத்தலாம். ஆனால், அது உண்மையில் செல்லுபடியாகாத ஒரு ஒப்பந்தமாகவே இருந்துவிடும்; மனிதஇனம் அடையவேண்டிய அறிவொளிர்வை நிரந்தரமாகத் தடுக்கக்கூடிய ஒன்றாக இருந்துவிடும். இப்படிப்பட்ட ஒப்பந்தங்களின் மூலமாக, ஒரு தலைமுறையினர் தங்களையே கட்டுப்படுத்திக்கொண்டு, பின் வரும் தலைமுறையை, அறிவை விரிவாக்க விடாமல், அறிவை பிழைகளிலிருந்து வெளியிட விடாமல், மற்றும் பொதுவாக அறிவொளிர்தலுக்கான முன்னேற்றத்தை அடையவிடாமல்,  சூழ்ச்சி செய்யக்கூடாது. மனித இனத்தின் உண்மையான இலக்கே இந்த முன்னேற்றத்தில் இருப்பதால், இது மனித இயல்புக்கு எதிரான ஒரு குற்றச்செயல் ஆகும்; மற்றும், இப்படிப்பட்ட தீர்மானங்கள் நியாயமற்ற மற்றும் வன்மமான நோக்கத்தில்தான் இயற்றப்பட்டுள்ளன என்று கருதுவதற்குப் பின்வரும் தலைமுறையினருக்கு முழு உரிமை உண்டு.

எதை மக்களுக்கான சட்டமாக்கலாம் என்பதன் அளவுகோல் ஒரு கேள்வியில்தான் இருக்கிறது: மக்களால் தங்களை அச்சட்டத்திற்கு ஆட்படுத்தி அதைச் செயல்படுத்த முடியுமா என்பதுதான் அது. ஒரு குறிப்பிட்ட மத ஒழுங்குமுறை சட்டத்தை, அதை விடச் சிறந்த சட்டம் ஒன்று உருவாகும் என்ற எதிர்பார்ப்புடன், ஒரு குறுகிய வரையறுக்கப்பட்ட காலத்திற்கு அமல்படுத்தலாம். அப்போது குடிமக்கள் ஒவ்வொருவரும், முக்கியமாக மதகுருமார்கள் அனைவரும், அறிஞர்கள் என்ற தகுதியில், புதிதாக நிறுவப்பட்ட மத ஒழுங்குமுறைமையிலுள்ள பிழைகளை, கருத்துகளின் மூலமாக, சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் சுட்டிக்காட்ட வேண்டும். அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மத ஒழுங்குமுறைமையின் உண்மையான இயல்பை பொதுமக்கள் உணர்ந்து, அது ஒரு பரவலான பார்வையாகும் வரை, அச்சட்டத்தை செயல்பட வைக்கலாம். விரைவில் இந்த உண்மையான பார்வை பல அறிவார்ந்த குரல்களின் ஒருங்கிணைந்த ஒரு குழுவால் (அதில் அனைவரும் பங்கேற்காவிட்டாலும்) உறுதிசெய்யப்படும். மேலும், இந்த அறிஞர்களின் குழு, நல்ல கருத்துகளின் மூலமாக உருவாகும் புதிய மதச் சட்டமைப்பை, அதை ஏற்கும் மக்களின் சார்பில் அரசிடம் முன்மொழிய வேண்டும். அதே நேரத்தில், பழைய மத ஒழுங்குமுறைமையைத் தொடர விரும்பும் வேறு சில மக்களை இவர்கள் தடுக்கக் கூடாது.

யாராலும் கேள்வி கேட்க முடியாத ஒரு நிரந்தரச் சட்டமைப்பை, ஒரு தனி மனிதனின்  ஆயுட்கால அளவிற்குக்கூட ஏற்பது சரியாகாது. அப்படிப்பட்ட ஒரு நிரந்தர ஒப்பந்தம், மனித இனத்தின் மேம்பாட்டிற்கான முன்னேற்றத்தை முடக்கி, பயனற்றதாக ஆக்கிவிடும். அதை ஏற்பது பின்வரும் தலைமுறைக்கும் பாதகமாக இருக்கும். தனி ஒருவர் தான் அறிய வேண்டியதைப் பொறுத்தவரையில், அவருக்குரிய அறிவொளிர்தலை ஒரு குறுகிய காலத்திற்குத் தள்ளிப்போடலாம். ஆனால், அதை மொத்தமாக விட்டுக்கொடுப்பதென்பது, மனிதகுலத்தின் அனைத்து உரிமைகளையும் மீறுவதற்குச் சமம். அதுவும் பின்வரும் தலைமுறையினரின் சார்பாக அதை முற்றாக உதறித் தள்ளுவது, நம் உரிமைகளைக் காலால் மிதித்து நசுக்குவது போன்றதாகும்.   

மக்களால் தங்களையே ஆட்படுத்திக்கொள்ள முடியாத சட்டத்தை, மக்களுக்காக விதிக்கும் உரிமை ஒரு ஆட்சியாளரிடம் இல்லை. சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரம் என்பது,  ஆட்சியாளரின் நோக்கம் பொதுமக்களின் நோக்கத்துடன் இணைவதில்தான் இருக்கிறது. தீர்மானிக்கப்படும் சமூக ஒழுங்குமுறைமை மக்களின் உண்மையான வளர்ச்சிக்கு ஒப்புதலுடன் இருக்கிறதா என்பதை மட்டும் ஆட்சியாளர் பார்த்தால் போதும். மற்றவற்றைப் பொதுமக்கள் தங்கள் நலனுக்காக அவர்களே செய்துகொள்வார்கள் என்று அவர் விட்டுவிட வேண்டும். அதை எப்படிச் செய்வார்கள் என்பதைப்பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், ஒரு சில மக்கள் தங்கள் நலன்களை நிர்ணயிப்பதற்காக மற்றும் மேம்படுத்துவதற்காக உழைக்கும்போது, அதை வேறு சிலர் வலுக்கட்டாயமாகத் தடுத்தால், ஆட்சியாளர் சரியாகச் சிந்தித்து தன் அதிகாரத்தால்  தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றபடி, பொதுமக்கள் அறிஞர்களாகச் செயல்படும்போது ஆட்சியாளர் தலையிட்டால், அது அவரின் மகிமையைக் குறைப்பதாகவே இருக்கும். மக்கள் தங்கள் பார்வைகளைக் கருத்துகளின் மூலமாக ஆட்சியாளரிடம் தெரிவித்தால், அதுவே அவரின் ஆட்சியை  மதிப்பீடு செய்வதற்கு போதுமானது. அவர் தன் அதிகாரப் பார்வையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்பட முற்படும்போது,  “மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்” (“Caesar non est supra grammaticos”) என்பதை உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும். இதை மீறி, அவர் நாட்டிலுள்ள சில அடக்குமுறையாளர்களை ஆதரித்து, அவர்களிடமே ஒழுங்குமுறைக்கான சட்டதிட்டங்களையும் ஒப்படைத்தால், தன் உயரதிகாரத்தை சிறுமைப்படுத்துவதோடு, தன் மாட்சிமையையும் அவரே கெடுத்துக்கொள்கிறார் என்றுதான் கருத வேண்டும்.   

“இப்போது நாம் அறிவொளிர்ந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருகிறோமா?”  என்ற கேள்விக்கு, “இல்லை, நாம் அறிவொளிர்ந்து கொண்டிருக்கும் காலத்தில் வாழ்கிறோம்” என்பதே சரியான பதிலாகும். இப்போதுள்ள நிலையில், மற்றவர்களின் வழித்துணை இல்லாமல், நம் சொந்த காரணத்திறனை துணிவுடனும் சுதந்திரமாகவும் பயன்படுத்த (குறிப்பாக மதம் தொடர்பான விஷயங்களில்) செய்ய வேண்டியவை ஏராளமானதாக இருக்கின்றன. ஆனால், இதற்காக சுதந்திரமாக உழைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன. மற்றும், உலகளாவிய அறிவொளிர்வுக்கு, அல்லது முதிர்ச்சியற்ற நிலையிலிருந்து நமக்குக் கிடைக்கவிருக்கும் மீட்பிற்கு இருக்கும் தடங்கல்கள் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது. இவ்விதத்தில், நாம் இருக்கும் இக்காலத்தை அறிவொளிக் காலம் (age of enlightenment) அல்லது ஃபிரெடெரிக்கின் (Frederick II) நூற்றாண்டு என்று அழைக்கலாம்.

குறிப்பாக மதம் தொடர்பான விஷயங்களில் பொதுமக்களுக்குக் கட்டளைகளை விதிக்காமல் இருப்பதே தன் கடமை என்று கருதி, அவர்களுக்கு முழு சுதந்திரத்தைக் கொடுப்பவர்தான் உண்மையில் அறிவு முதிர்ச்சியடைந்த  தலைவர். இதைச் செய்வதோடு, தான் சகிப்புத்தன்மை மிக்கவர்  என்ற ஆணவமும் இல்லாதவர்தான் முதலில் மனித இனத்தை அறிவு முதிர்ச்சியற்ற நிலையிலிருந்து விடுவிப்பார். இவர்தான் மனசாட்சியுடன் செயல்பட வேண்டிய விஷயங்களில் மக்களின் காரணத்திறனை சுதந்திரமாகப் பயன்படுத்த, அரசு தரப்பிலிருந்து அனுமதிப்பார். இதனால், நன்றியுள்ள இந்தத் தலைமுறை மக்களின், மற்றும் பின் வரப்போகும் தலைமுறையினரின் பாராட்டுகளுக்கும், மரியாதைக்கும் தகுதியாவார். இவருடைய ஆட்சியில்தான், மதிப்பிற்குரிய மத குருமார்கள், மனித சமூகத்தின் அறிஞர்கள் என்ற தகுதியில், ஏற்றுக்கொண்ட கடமைகளை மீறாமல், சுதந்திரமாகத் தங்கள் கருத்துகளை மக்களின் மேற்பார்வைக்காகப் பொதுவெளியில் வைக்க முடியும். அவ்வாறு சுதந்திரமாக முன்வைக்கும் மதகுருமார்களின் சில கருத்துகள், ஏற்றப்பட்ட மத கொள்கைகளிலிருந்து சற்று  விலகியிருந்தாலும் நல்லதே. மேலும், இவர்களைப் போல் அதிகாரத்தின் பிடியில் இல்லாதவர்கள்தான், இன்னும் கூடுதலான சுதந்திரத்தை அனுபவிப்பார்கள். இப்படிப்பட்ட ஆட்சியில் இருக்கும் சுதந்திர உணர்வு, சொந்த நாட்டைத் தாண்டி, தவறான புரிதலுள்ள வேறொரு அரசு ஏற்படுத்தும் இடையூறுகளால் போராடிக் கொண்டிருக்கும் அந்நாட்டு குடிமக்களுக்கும் பரவும். அறிவுச் சுதந்திரத்தை மக்களுக்கு வழங்குவதால் பொது ஒழுங்கமைதிக்கும், நாட்டு ஒற்றுமைக்கும் கேடு ஏற்படாது என்பதற்குச் சான்றாக அறிவொளிர்ந்த ஆட்சி திகழும். குறிப்பாக, மக்களைக் காட்டுமிராண்டித்தனத்தில் சூழ்ச்சிசெய்து முடக்காமலிருந்தாலே, அவர்கள் படிப்படியாக அந்த நிலையிலிருந்து வெளிவருவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அறிவு முதிர்ச்சி பெற்ற  ஆட்சி விளங்கும்.

அறிவொளிர்தலின் முக்கியமான கருத்து, தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட முதிர்ச்சியற்ற நிலையிலிருந்து மனிதனுக்குக் கிடைக்கும் மீட்பு என்பதே. இதைப் பொதுமக்களின் மீட்பாக, அதுவும் குறிப்பாக மதம் தொடர்பான விஷயங்களில் ஏற்படும் மீட்பாக நான் விளக்கியதற்குக் காரணங்கள் உண்டு: ஒன்று, நம் காலத்து ஆட்சியாளர்களுக்குக் கலை மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் நமக்குப் பொறுப்பாளர்களாகச்  செயல்பட ஆர்வம் இல்லை; இரண்டு,  மதம் தொடர்பான விஷயங்களால் ஏற்படும் முதிர்ச்சியற்ற நிலையே மிகப்பெரிய தீமைகளை விளைவிப்பதாகவும், மற்றும்  மாபெரும் இழிநிலையை ஏற்படுத்தக்  கூடியதாகவும் இருக்கிறது. மேலும், மதம் தொடர்பான விஷயங்களில் அறிவுச் சுதந்திரத்தை ஆதரிக்கும் ஒரு தலைவர், ஒரு படி மேல் சென்று, பொதுச் சட்டங்களை இயற்றி அமல்படுத்துவதிலும் மக்கள் தங்கள் காரணத்திறனின் பொதுவான பயன்பாட்டினை சுதந்திரமாகச் செயல்படுத்த அனுமதி அளிப்பார். குறிப்பாக, இயற்றிய சட்டங்களை மேம்படுத்த, தெளிவான விமர்சன மதிப்பீட்டின் மூலமாக தங்கள் கருத்துகளை பொதுவெளியில் எடுத்துவைக்கும் உரிமையை மக்களுக்கு வழங்குவார். இப்படிப்பட்ட தலைவருக்கான சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர், நம் அனைவரின் போற்றுதலுக்குரிய நம் அரசரே ஆவார் என்பதில் சந்தேகமில்லை.

போலித் தோற்றங்களைக்  கண்டு அஞ்சாமல், அறிவு முதிர்ச்சியோடு செயல்படும் தலைவரிடம், பொதுவான ஒழுங்கமைதியை உறுதிசெய்யும் கட்டுப்பாடுள்ள எண்ணற்ற இராணுவப் படைகளும்  இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவரால் முழு சுதந்திரத்தை மட்டுமே வழங்கக்கூடிய ஒரு அரசால் துணிவுடன் சொல்லமுடியாத ஒன்றைப் பொதுவெளியில் தைரியமாகச் சொல்ல முடியும்: “எவ்வளவு வேண்டுமானாலும், எதைப்பற்றி வேண்டுமானாலும் வாதம் செய், ஆனால் இட்ட கட்டளைகளைப் பின்பற்று!”. இங்கு, வேறு இடங்களில் பொதுவான ஒன்றைப் பார்க்கும்போது ஏற்படும் முரண்பாட்டைப் போல, விசித்திரமான மற்றும் எதிர்பாராத ஒன்று மனித இயல்பில் வெளிப்படுகிறது. அதாவது, மிகப்பெரும் அளவிலான குடிமைச் சுதந்திரம் (civil freedom) மக்களின் அறிவுச் சுதந்திரத்திற்கு (intellectual freedom) சாதகமாக இருப்பது போலத் தோன்றினாலும், உண்மையில் அதற்கு  மீறமுடியாத தடைகளையே ஏற்படுத்தும். மாறாக, குறைந்த அளவிலான குடிமைச் சுதந்திரம்தான், அறிவாற்றலை மேம்படுத்த மக்களுக்கு இடமளிக்கிறது. கல் போன்ற கடினமான உறையிலிருந்துதான், இயற்கை அன்புடன் அக்கறை செலுத்தி, ஒரு விதையை வெளிப்படுத்துகிறது – அதுதான் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கான (thinking freely) நம் மனப்போக்கு மற்றும் நம் வாழ்வின் நோக்கம். முதலில், இந்த விதை படிப்படியாக அதன் தாக்கங்களை மக்களின் மனநலனில் ஏற்படுத்தும். இதன் மூலமாக, மக்கள் படிப்படியாகச் செயல்பாட்டுச் சுதந்திரத்திற்கு (freedom of action) மேலும் தகுதியாகிறார்கள். இறுதியில்,  சிந்தனைச் சுதந்திரம் என்னும் விதையின் தாக்கம் அரசாங்கத்தின் கொள்கைகளைச் சென்றடையும். இதனால், அரசு தன் மக்களை, இயந்திரத்தை விட மேலான  மனிதர்களாக, அவர்களின் கௌரவத்திற்கு ஏற்றவாறு நடத்தும்.*

ப்ருஸ்ஸியாவின் கொன்னிக்ஸ்பெர்க், 30 செப்டம்பர் 1784.

*செப்டம்பர் 30-ஆம் தேதியான இன்று, செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியான Büsching’s Wöchentliche Nachrichten என்ற வார இதழில் ஒரு செய்தியைப் படித்தேன். இந்த மாதம் வெளியான Berlinische Monatsschrift-ல் திரு. மோசஸ் மேன்டெல்சனின் இதே கேள்விக்கான பதில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. இந்த மாத இதழை நான் இன்னும் பெறவில்லை. பெற்றிருந்தால் நான் மேற்கண்ட கருத்துகளை முன்வைக்க தவிர்த்திருப்பேன். இருந்தும், தற்செயலாகச் சிந்தனையில் எந்த அளவிற்கு ஒப்புதல் இருக்க முடியும் என்பதற்கு என் கட்டுரை சான்றாக இருக்கிறது.

மூலம்: Kant, Immanuel. “Beantwortung der Frage: Was ist Aufklärung?”. Translated by Mary Gregor as “An Answer to the Question: What is Enlightenment?” in Practical Philosophy. Cambridge: Cambridge University Press, 1996.

கட்டுரை பற்றிய சிறுகுறிப்பு

மேற்கத்திய மெய்யியல் வரலாற்றில் அறிவொளிக் காலம் (enlightenment period) மிக முக்கியமான மற்றும் மிகவும் விமர்சிக்கப்பட்ட காலமாகத் திகழ்கிறது. 17-ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாகக் கருதப்படுகிற இக்காலத்தில் கையாளப்பட்ட சிக்கல்கள், குறிப்பாகத் தனிமனித சுதந்திரத்தின் அளவுகோல் மற்றும் மரபைக் கேள்விக்குள்ளாக்கும் தேவை, இன்றும் நமக்குப் பொருந்துகிறது. அறிவொளியை ஒரு அறிவார்ந்த இயக்கமாக எண்ணிச் செயல்பட்ட சிந்தனையாளர்களுள், ப்ருஸ்ஸியாவைச் சேர்ந்த இம்மானுவேல் காண்ட் மிக முக்கியமானவர் ஆவார். அவர் இறந்த  1804- ஆண்டையே அறிவொளிக் காலத்தின் முடிவாகப் பலர் பார்க்கின்றனர்.

1783-இன் முடிவில் Berlinische Monatsschrift என்ற பிரபல ஜெர்மானிய மாத இதழ் அறிவொளிச் சிந்தனையை விளக்க அறிஞர்களையும், சிந்தனையாளர்களையும் அழைத்தது. அதன் விளைவாக மோசஸ் மேன்டெல்சன், கார்ல் ரெயின்ஹோல்ட், கிறிஸ்டன் டேனியல் எர்ஹார்ட் போன்ற சிந்தனையாளர்கள் தங்கள் விளக்கங்களைக் கட்டுரைகளாக அந்த இதழில் வெளியிட்டனர். அப்படி வெளிவந்த கட்டுரைப் பட்டியலில், மேலே தமிழாக்கப்பட்ட காண்டின் “Beantwortung der Frage: Was ist Aufklärung?”-ம் அடங்கும். இக்கட்டுரையில், பொதுமக்களின் சுயசிந்தனையை மற்றும் அதிகாரமிக்க நிறுவனங்களின் கட்டுப்பாடில்லாத பொதுத்தள உரையாடலை, அறிவொளிர்தலின் சான்றாக விளக்குகிறார் காண்ட். 1784-ல் வெளிவந்த இக்கட்டுரை, அறிவொளிக் கால சிந்தனையின் ஒரு சின்னமாக அறிஞர்களால் பார்க்கப்படுகிறது.

 இக்கட்டுரையிலுள்ள காண்டின் கருத்துகளுக்கு முதற்கட்ட விமர்சன அலை யோஹான் ஹாமன், யோஹான் ஹெர்டர், ஃபிரெடெரிக் ஷெல்லிங் போன்ற ஜெர்மானிய புனைவிய சிந்தனையாளர்களால் (German romantics) எழுந்தது. ஏறத்தாழ 150 வருடங்களுக்குப் பின் வந்த தற்கால ஐரோப்பிய மெய்யியலாளர்களான மிஷேல் ஃபூக்கோ, தியோடோர் அடோர்னோ, மேக்ஸ் ஹோர்க்ஹைமர், யூற்கேன் ஹாபர்மாஸ் போன்றோரும் இக்கட்டுரையைப்பற்றி  போற்றியும் விமர்சித்தும் எழுதியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.