ஓங்குபனை-அருணா சிற்றரசு

துவரை யாருமே நடந்திடாத அன்றைய நாளுக்கான புதுப்புழுதியுடன் சுருளிலிருந்து விடுபட்ட பந்திப்பாய் போல விரிக்கப்பட்டிருந்தது அந்தக் குறுஞ்சாலை. பக்கவாட்டிற்குப் பனைமரங்களையும், தலைமாட்டிற்கோர் ஆலமரமுமாய் கிளைப் பாதைகளைப்  பரப்பிக் கொண்டு கீழ்த்திசையிலிருந்து இன்னும் கிளம்பாத சூரியனுக்காய் ஆகாசம் பார்த்து சீழ்க்கை அடித்தது.

ஏதோ அந்த ஊரை விட்டால் ஓங்கி நிற்க மண்ணே இல்லாதவாறு, கணக்கில்லாமல் அடுத்தடுத்து நின்று மொத்த ஊரையும் சிங்காரித்தன பனைமரங்கள்.யாருடைய உதவியுமின்றி ஓங்கி வளர்வது பனைமரம். அதன் மிகுதியால் வந்ததோ அல்லது ஊர் மக்களின் தகுதியால் வந்ததோ தெரியாது. அவ்வூரின் பெயர் பனையூர்.

பனையூருக்கு தலை, கால் எல்லாமே மலைவாசன் தான். அவர் நின்றால் மொத்த ஊரும் நிற்கும். அவர் உட்கார்ந்தாலும் மொத்த ஊரும் நிற்கும். காதுகுத்து கருமாதி என எல்லாவற்றிற்கும் அவரின் தலைமைதான். வயது ஐம்பதைத் தொட்டாலும் வாளிப்பான வாகுக்கட்டு. கூட்டத்தில் அவரைப் பார்ப்பதற்கென்றே பெண்கள் கூட்டம் தன் கணவன்மார்களை ஒட்டிக்கொண்டே வரும்.”மொதொ மந்திரி காமராசர் இவரு ஒசரம் இருப்பாரு” என ஒப்புமைக் காட்டுவார்கள் டீக்கடை தினப்பத்திரிக்கை பேச்சாளர்கள்.

நாட்டு நடப்பைப் பற்றிய விவாதம் செல்லும் எந்தவொரு இடத்திலும் அவர் இருப்பதில்லை. ஆனால் கதர் பார்ட்டி பற்றிய முந்தைய நாள் வரையிலான தகவல் அவர்வசம் இருக்கும். “கூட்டத்துல மரியாதை கிடைக்குதுன்னு நின்னு சாவுகாசமா பேச்சு கொடுக்க மாட்டாரு. வந்தோமா முடிச்சோமான்னு துண்டைத் தோள்ல போட்டுட்டு ப்ளசர் கார்ல ஏறி போய்ட்டே இருப்பாரு”. ஊர்க்காரன் ஒருவனின் கருத்து.

“எந்த நாட்டுக்கு ராசான்னாலும் கட்டி ஆள வாரிசு இல்ல பாரு!”

“எவடி அவ வாரிசு இல்லன்னு அளக்கறவ, அதான் ரெண்டு பொம்பள புள்ளைக இருக்குல்ல!” கூட்டத்துல மூளை தெளிஞ்சவ ஒருத்தி சரியாகக் கேட்டாள்.

அந்தக் காதுகுத்து வீட்டின் கூடிவிட்ட பெண்டுகளோட பேச்சு அவருக்கு ஒரு வாரிசு இல்லன்னுதான்.

“அடியே வதங்குன சிறுக்கி! பொட்டைக்கு ஏதுடி ஆள்ற கொடுப்பினை, வாரிசுன்னா கொடுக்குறவன் தான் வாங்குறவளுக இல்ல” கூட்டத்தின் அப்போதைய தலைவி உரக்கச் சொன்னாள்.

வேண்டுமென்றே நல்லாள் காதில் விழ வேண்டும் என்றே சொல்லியிருக்க வேண்டும் அவள்.

மலைவாசனின் சீக்காளி பொஞ்சாதி நல்லாள். “கருவை கலைச்சே சீக்கேறி போய்ட்டா நல்லாள்” என்றும் ஊரில் பேச்சுண்டு.

மூத்த மகளைப் போன வருசந்தான் புத்தகரத்துல கட்டிக் கொடுத்தாங்க.

இளையவள் ஊட்டோட இருந்தா.

தாம் புருசனுக்கு ஒரு ஆம்பள புள்ளய பெத்துக் கொடுக்க முடியலையேன்னு வவுத்த தடவி தடவி வெந்து மடிவாள் நல்லாள். எப்படியாச்சும் ஆம்பள புள்ளக்கி வழி பண்ணிடலாம்னு ஆறு வருசம் முன்னடி வரை மெனக்கெட்டாள். அவ வாட்டத்துக்கு வைத்திச்சி ஒருத்தி இருக்கா. கை உட்டே என்னா புள்ளைன்னு கணிப்பா. அந்தக் கணிப்பு, அவளுக்குத்தான் வெளிச்சம். இதுவரைக்கும் நாலு தடவைக்கும் மேல வவுத்த கழுவியாச்சு. வைத்திச்சி கருவைக் கலைக்கிறதுல பேர் போனவ. குச்சி வச்சே கருவை உருவிடுவா.

அந்த சகவாசத்தில் நல்லாள் தன் உடலைத் தானே சீக்கிற்குள் புதைத்து வைத்திருந்தாள்.

மலைவாசன் பொஞ்சாதி கிறுக்கன்.

சீக்குப்பொஞ்சாதியைத் தள்ளி வைத்ததே இல்லை. சீக்கும் அவளைத் தள்ளி வைக்கவில்லை. “எத்தனைக் கூத்தியா வேணாலும் வச்சிக்கலாம் யாரு கேட்பா!” ஆனாலும் மனுசன் நல்லாள் கையாலத்தான் சோறு புசிப்பார். தான் எந்த விசேசத்துக்குப் போனாலும் அவளை வலுக்கட்டாயமா அழைத்துப் போவார். உடல் நலம் ஒத்துழைக்காத நாட்களில் மட்டுமே அவளின்றி பயணப்படுவார்.

“புண்ணியவதி உம்புருசன் மாதிரி ஆம்பள கிடைக்க, போன சென்மத்துல மஞ்சக் கொத்தா பொறந்திருப்ப போல”ன்னு ஊர்க்காரிகள் நல்லாளைப் பார்த்து உச்சுக்கொட்டிக் கொள்வது நல்லாளுக்குப் பூரிப்பாய்த்தான் இருந்தது.

மலைவாசன் ஒரே ஆண் பிள்ளை. மலைவாசனைப் பெத்தெடுக்க அவன் ஆத்தாக்காரியை அஞ்சாந்தாரமா கட்டி வச்ச கதையெல்லாம் கேட்டு வளந்தவதான் நல்லாள். மலைவாசனுக்கு தூரத்து வகையில அத்தை மவ  நல்லாள். எப்படியும் ஒரு ஆண் பிள்ளையைப் பெத்து தள்ளிடனும்னு போராடியபடிதான் கிடந்தாள். மலைவாசன் அது பற்றிய பேச்சுக்கே காது கொடுப்பதில்லை. அவர் குரலெடுத்தாலும் எப்பேற்பட்ட பெரிய வழக்கையும் இரண்டே வரிக்குள் முடித்துக் கொள்வார்.

மூத்த மகளைக் கட்டிக் கொடுப்பதற்கு ஒரு மாதம் முன்பு வரை நல்லாள், மலைவாசனைக் குடைந்து கொண்டே இருந்தாள்.” ஊருக்குள்ள இடுப்பு வேட்டி நிக்கா பயல்லாம் உங்களைக் கேலி பேசுறான், உங்க காதுக்கு வருதா இல்லையா?”

“என் காதுக்கு வராம அவனுக பேசுறானுக. உன் காதுக்கு வரனும்னு இந்த பொட்டச்சிக ஓதுறாளுக. அவன் அவன் வாங்குன வரத்துக்குத்தான் வாழ முடியும். சேத்துல புரண்டாலும் ஈரந்தான் முடிவு பண்ணும் எவ்வளவு ஒட்டனும்னு. யாருடி இவ சவசவன்னு . சோத்தை கொண்டாந்து வை. சின்ன வெங்காயத்தை சோத்துக்குள்ளயே போட்டுக் கொண்டா”.

“பொண்ணைக் கட்டிக்கொடுத்த மூனாம் மாசமே நல்லாளின் பொம்பள சம்மந்தி வாயைப் பொளந்துட்டா. கல்யாணத்துக்குள்ளயே தாங்காதுன்னு நினைச்ச உசுரு அது. இழுத்துப் புடிச்சு மூனு மாசம் ஓடியாந்துட்டு. காலைல டீ தண்ணி வைக்கும்போதுதான் பார்த்துருக்காங்க எறும்பு அதுக்குள்ள மொய்ச்சிட்டுதாம்”.

சம்மந்திபுற துக்கம். ஊரையே வண்டி கட்டி இழுத்துவிட்டார் மலைவாசன். பொம்பளக் கூட்டமும் ஆம்பளக் கூட்டமும் ஒன்னுக்கொன்னு சளைச்சதில்லன்னு மொத்த ஊரையும் இருட்டுல போட்டுட்டு விளக்கேத்த ரெண்டொரு ஊட்ல மட்டும் முடத்துப்போன கிழவிகளைப் போட்டுட்டு துக்கங்கொடுக்க சீவுன கொண்டையும், சிலுக்கு சட்டையுமாக இந்த ஊர் அந்த ஊரில் இருந்தது.

கல்யாணம்னாலும் பந்தல், சாவுன்னாலும் பந்தல். வாழை மரமும் தென்னை ஓலையுந்தான் சாங்கியத்தை முடிவு செய்கிறது. ஆம்பள சம்மந்தியும், மூத்த மவ மாப்பிள்ளையும், அவுக பங்காளி முறைகளும் பந்தலுக்குள்ள வரிசையா நின்னாங்க. மலைவாசன் தாரை, தப்பட்டை வேட்டுச்சத்தம் , சனக்கூட்டம்னு கித்தாப்பா பந்தலுக்குள்ள நுழைஞ்சாரு. ஆளுயர மாலையை மலைவாசனுக்குப் பின்னால முருகேசு அவன் தலைக்கு மேல தூக்கிப்பிடிச்சிருந்தான். வரிசையா நின்னவங்க ரெண்டு கையையும் விரிச்சாப்ல நீட்ட, அவங்க உள்ளங்கைல மலைவாசனோட உள்ளங்கைகள் பொருந்துற மாதிரி கவுத்து கவுத்து எடுத்தாரு. வரிசையா நின்ன பத்து பேருக்கும் இதே மாதிரி கையைக் கொடுத்தாரு. இதுதான் ஆம்பளை துக்கம் கொடுக்குற முறை அங்க.

பொம்பளக்கூட்டம் அரிசி, நெல்லு, இளநீர், ஊதுபத்தின்னு பந்தலைப் படகலக்கியது. மலைவாசனோட மூத்த மொவளைக் கட்டி மொத்த ஊரும் அழுதா அவ எப்படி தாங்குவா? அவளும் தாங்கல பந்தலும் தாங்கல. முருகேசன் சத்தம் போட்டு பாதி பொம்பள சனத்தை மாட்டு கொட்டகைப் பக்கம் அனுப்பி இருந்தான். அந்தப்பக்கம் போனதும் ஒப்பாரியும் வைக்கல துக்கமும் தாக்கல. இடுப்புல முடிந்து வந்திருந்த வெத்தல சீவ மூட்டையப் பிரிச்சி  வாயிலிட்டுக் கொதக்கி ஒவ்வொரு குடும்பத்தையா மென்றது.

சின்னவ சுலோட்சனா நல்லாள் பக்கத்துல அமைதியா உட்கார்ந்துட்டா. அவளுக்கு அழுகையே வரலங்குற குற்ற உணர்ச்சி. நம்ம அழுவாததை யாராச்சும் பாத்திருப்பாங்களோ! அவ்ளோ கத்தியும் ஒரு சொட்டு தண்ணி கண்ணுல வரலையே!.குனிஞ்சாப்ல முகத்தை ஒளிச்சு எச்சைத் தொட்டு கண்ணுக்கு கீழ கோடா இறக்கி விட்டாள். அப்பத்தான் அவள் சகசமா அழுதாள். இதை யாரும் கவனிச்சிருக்கக் கூடாது மாரியாத்தான்னு உள்ளுக்குள்ள வேண்டிக்கிட்டுக் கெடந்தாள்.

நல்ல தெனவெடுத்த சாரைப்பாம்பு ஒன்னு சப்பனமிட்டிருந்த அவள் மடிக்குள் தொப்பென விழுந்தது போல திடுக்கென திடுக்கிட்டாள் சுலோ.

அந்த சாரைப்பாம்பிற்கு விரல்கள் இருந்தன. நல்ல உருண்டையான விரல்கள். கண்ணாடி வளையல்களுடன் கிடந்த அந்தப் பாம்பைப் பார்த்துக் கொண்டிருந்த கணம்,

“என்னடி சுலோ பயந்துட்டியா?”

அந்த சாரைப்பாம்பு சம்புவின் இடக்கை.

கை முளைப்பின் மூலத்தை நிமிர்ந்து பார்த்தாள் சுலோ.

“அடியே! சம்பு. நீயாடி, பயந்துட்டுட்டேன் டி. இப்படியா கையை பொந்துக்குள்ள உடுவ?”

என்று சுலோ கேட்டதும் இருவரும் சத்தம்போட்டு கெக்க பெக்க என்று சிரித்து விட்டனர்.

பந்தலின் மொத்தப்பார்வையும் அவர்கள் மேல் விழுந்தது. பிணத்திற்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை கேட்டிருந்தால் “எந்த ஊரு சிறுக்கி இப்படி சிரிச்சா குலுக்கி” என்று ஆய்ந்திருக்கும்.

மலைவாசன் சுலோவை விழுங்கி விடுவது போல் முறைத்தார். இதற்கு மேல் அங்கே இருப்பது சூழலை மேலும் சிடுக்காக்கும் என்று சுலோ முதலில் எழுந்தாள். கைகொடுத்து சம்புவையும் நெம்பினாள். அடர் நீல பாவாடையும் மாம்பழ மஞ்சள் சட்டையுமாக சுலோவை விட ஒரு சாண் ஒசரத்தில் சம்பு எழுந்து அவ்விடம் விட்டு நகர்ந்தாள். தாவணி போட்டிருந்தால் அந்த எடுப்பான கொழுந்து தனங்கள் மறைந்திருக்கும். அழுத்தியிருந்த மாம்பழ சட்டைக்கு அவ்வளவாக அவை பணியவில்லை.

அந்த ஊரில்தான் சுலோவின் பெரியம்மாவையும் கொடுத்தது. பெரியம்மா வீட்டிற்கு வரும்போதெல்லாம் சுலோவுக்கு கூட்டு சம்புதான். சம்புவைப் பார்ப்பதற்காகவே பெரியம்மா வீடு வருவாள் சுலோ. தன்னுடைய பழைய ஆடைகள் எல்லாம் சம்புவுக்கு என்று எடுத்துக்கொண்டு வருவாள். ஆனால் இனி அப்படிக் கொடுக்க முடியாது. சுலோவை விட சம்பு பெரியவளாகத் தெரிந்தாள்.

சம்புவின் வீட்டில் வரிசையாக ஏழு பொட்டை புள்ளைகள். சம்பு ஐந்தாம் இடம். நாலு பொண்ணுகளை நான் நீன்னு போட்டி போட்டு கட்டிட்டு போய்ட்டானுக. பதிமூனு வயசு தாண்டி ஒரு பொண்ணு கூட ஊட்ல இல்லை. மூனாவது பொண்ணு சடங்காவுறதுக்கு முன்னடியே கச்சி பண்ணி கட்டிட்டு போய்ட்டாரு புலவஞ்சி மைனரு. அங்க போய்தான் சடங்கானாள். அவளுக்கு இப்ப ரெண்டு ஆம்பள புள்ளைக.சம்பு ஊட்டு பொண்ணுக எல்லாம் விக்ரகம் மாதிரியான கட்டுடையவர்கள். குடும்ப விருத்தி பசுக்கள். கட்டிட்டுப் போன பத்தாம் மாசத்துல தேதி குறிச்ச மாதிரியே புள்ளய பெத்து போடுவாளுக. அம்புட்டும் ஆம்பளப் புள்ளதான். சம்பு ஊடு பொட்டைச்சிக கூடாரம்னாலும் உருவி போட்டது அத்தனையும் காளைக் கன்னு.

இதை வெவரியா சுலோவின் பெரியம்மா, வைத்தியச்சி களவாணிக்கிட்ட சொல்லிட்டு இருந்தாள். வைத்தியச்சி பேரு என்னவோ கலைவாணிதான். ஆனால் அவளை ஊரே களவாணின்னுதான் கூப்டும்.

ரெண்டு வெத்தலையை ஒத்தாப்ல மடிச்சி வாய்க்குள்ள சொருகிக் கொண்டே சுலோவோடு குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்த சம்புவின் உடற்கட்டை ஆராய்ந்து சேமித்தாள் களவாணி.

சுடுகாட்டாங்கரைக்குப் போய்ட்டு ஆம்பளக்கூட்டம் திரும்பிருச்சு.நல்லாளும் சுலோவும் தங்கி விட்டார்கள். ஊர் மக்களையெல்லாம் சொந்த ஊர் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பொறுப்பில் மலைவாசன் புறப்பட்டார். பத்தாம் நாள் சடங்கு முடிந்து வருவதாகவும், மலைவாசனுக்கு வேளா வேளைக்குப் பொங்கி போடவும் களவாணியிடம் சொல்லியிருந்தாள் நல்லாள்.

அந்தப் பத்து நாட்களும் சுலோவுக்கும் சம்புவுக்கும் ஊடளந்த திருவிழாதான். கல்லாங்காய், நொண்டி புடிச்சு, பச்சைக்குதிரை, ஆத்தாங்கரை, மாமரம்னு உறங்கவே இல்லை அவர்களின் உற்சாகம்.

“ஏட்டி சம்பு! ஒரு எடமா நிக்குதியா? பாவாடையை முழங்காலுக்கு மேல ஏத்திக்கிட்டு தடியாட்டம் போட்ற! அப்பன் உசுரோட இருந்திருந்தா வாருக்குச்சி வச்சி வரி வரியா இழுத்துருப்பான். அவனும் இல்லை. அண்ணனோ தம்பியோ இருந்திருந்தாலும் அடக்கி வச்சிருப்பானுக அதுக்கும் வழியில்லை. இப்டியே தலுக்கி குலுக்கி ஓடிட்டே இரு எவனோ வந்து பொண்ணு கேக்கப்போறான். மொத்தமா அவிஞ்சி மூலையில உட்காரப் போற”  தொட்டி நீரில் பிண்ணாக்கு கரைத்துக்கொண்டிருந்த சம்புவின் அம்மா  அவள் ஆதங்கம் அனைத்தையும்  சேர்த்தே கரைத்தாள்.

பத்தாம் நாள் சுலோ அவள் ஊருக்கு வண்டியேறி விட்டாள். அடுத்தடுத்து கருமாதி , ஆக்கி விடுதல் ,முப்பது படையல் என எல்லாம் முடிந்தது. சுலோ அதற்கெல்லாம் வந்து வந்து போய்க்கொண்டிருந்தாள். “இனி எப்ப பாக்கப் போறோமோ” என்று முப்பது முடிந்து சுலோவும் சம்புவும் அழுது வைத்தார்கள்.

“நான் என்ன என் சந்தோசத்துக்கா இப்படி போராடுறேன் நம்ம வம்சம் தடைபட்டு போய்டக் கூடாதுன்னுதான் இப்படி கிடந்து அடிச்சிக்குறேன்.

 ஏ கருப்பா! ஏ வீரப்பா!

என் கதறலு உன் காதுல கேக்கலையா?

ஏ முனீஸ்வரா! உன் காலைக் கட்டி என் நீதியை பொதைச்சானுகளா! “

சீலை தலைப்பில் மூக்குத்தண்ணியை ஒரு பிழியாய் மூக்குடன் திருகி எடுத்தாள் நல்லாள்.

தனது அப்பா அம்மா படத்திற்கு முக்காலி ஒன்றில் ஏறி செம்பருத்திப் பூக்களை அரசன் தலைக்கான குடை போல அன்னார்த்தி சொருகிக் கொண்டிருந்தார் மலைவாசன்.

“அண்ணே! ஊர்ல என்னா நடக்காததய்யா நாம செய்யப் போறோம். அண்ணியைப் பாரு அதுக்கு சீக்கே இந்த  ஆண் வாரிசு கவலைதான். அடுப்ப விட்டு இறங்காத உலையா கொதிச்சிட்டு இருக்கு அதுவும் பல காலமா. அந்தக்குட்டி சூடிகையான குட்டி. டசன் டசனா பெத்து தள்ளுவா பாருண்ணே!” களவாணி நல்லாளுக்கு ஒத்து ஊதினாள்.

“நான் ஒரு பொம்பள புள்ள அதே வயசுல வச்சிருக்கேன்”.

 அப்பா அம்மாவை மனமுருக வேண்டி திருநீரை நான்கு விரல்களில் ஒற்றி எடுத்து பட்டையாக நெற்றியில் தேய்த்தார் மலைவாசன்.

“உங்க மூணாவது அக்கா சடங்காயிருந்தப்பதான் உங்க ஆத்தாளைக் கட்டி கூட்டியாந்தாரு அப்புச்சி. உங்க சின்னக்கா சடங்கானப்ப நீரு பொறந்தீரு. பட்டு கெழவி வைக்காத கதையா அப்புச்சி லீலைகளுக்கு. ஒன்னும் தெரியாத மாதிரி இதுக்கெல்லாம் சால்சாப்பு சொல்லாதீங்கண்ணே! இல்ல உடம்புக்கு ஏதும் இழுபாடோ! சின்னக்குட்டிக்கு ஈடு கொடுக்க முடியுமான்னு அஞ்சுறீகளோ!”

களவாணி குரலைப் பொசுந்தினாற் போல் அமுக்கி முடித்தாள்.

“அடியே கோக்கு மாக்கு சிறுக்கி! யாரைப் பார்த்து என்னா வார்த்தடி சொல்லிப்புட்ட என் புருசன் சூரன் டி, வரிசையா பத்து சிறுக்கி நின்னாலும் சோர்ந்து போவ மாட்டாருடி”

 எய்யா! கேட்டீரா! என்ன வார்த்தை சொல்லிப்புட்டான்னு. பத்து நாளா தவிச்சி நிக்குறேனே என் கட்டை வேக வழி செய்யப்படாதா!

நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வானம் பார்த்தபடியாய் நிலை சரிந்தாள் நல்லாள்.

“அய்யோ அண்ணி! உன் கதி இப்படியா ஆவனும். அடியேய் சுலோ தண்ணியைக் கொண்டாடி” களவாணி சீவனை விட்டு கத்தினாள். தண்ணீரை முகத்தில் அடித்து கன்னங்களை அழுத்தி உதடுகளைப் பிரித்து தண்ணீரை ஊற்றினாள் களவாணி. மெல்ல நினைவு திரும்பினாள் நல்லாள்.

“பொண்ணுக்கு மாப்ள கண்ட ஊருலையே தனக்கொரு பொஞ்சாதியைப் புடிச்சிடாருடா மலைவாசன்”. “வெவரமான ஆளுய்யா. பாலிசான ஆளுங்கன்னாலே காரியத்துல வெளிச்சமா இருப்பாங்க, அவரும் புது மாப்ளை கணக்கா உடம்பை நல்லா முறுக்கேத்தித்தான் வச்சிருக்காரு. எவன் சொல்லுவான் அம்பது வயசுன்னு”. கல்யாணப் பந்தலுக்குள்ளான இந்த பேச்சுக்களை மொண்டு கொண்டே அரசாணி பானைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள் சுலோ.

சுலோ இன்னும் சடங்காகவில்லை என்பது மட்டுமே அவளைக் குழந்தை என விட வைத்திருந்தது. அவள் குழந்தை அல்ல. சம்புவின் தோழி. அப்பாவின் மனைவியாக சம்புவை வைத்துப் பார்க்க எந்த சமாதானமும் அவளிடம் ஏற்படவில்லை. அப்பா எத்தனை கனம்! அவரை எப்படி சம்பு தாங்குவாள்! அப்பாவின் பக்கத்தில் ஆலமரம் பக்கத்திலான ரோசா செடி போல தெரியவே மாட்டாளே! ஆமாம் ஆலமரத்தின் நிழலில் வேறெதுவும் வளர வாய்ப்பில்லையே! அம்மாவிடம் என்னென்னவோ எடுத்துச் சொல்லியும் சுலோவின் பேச்சு எடுபடவில்லை. அந்தக் கூனிக்கெழவி மஞ்சக் குளிச்ச கதையைத்தான் இன்னும் எல்லாரும் பேசுறாங்க.சம்புவுக்கு ‘காக்கும் கரங்கள்’ படத்து  சிவக்குமாரை ரொம்ப பிடிக்கும். என்கிட்ட அடிக்கடி சொல்வாளே! அப்பா எந்த கோணத்துலையும் அந்த சாயல்ல இல்லையே! சுலோ அங்கு வளர்க்கப்பட்டிருந்த திருமணத்தீயில் நின்று கொண்டிருந்தாள்.

சம்புவின் கண்கள் அழுது அழுது வீங்கியிருந்தன. அது மைவிட தோதாக அமைந்தது. வீங்கிய விழி எடுப்பாக இருந்தது அந்த மணப்பெண் அலங்காரத்திற்கு. “சுலோவுக்கு அப்பான்னா, எனக்கும் தானே அவர் அப்பா! நான் அப்பான்னுதானே அவரைக் கூப்பிடனும்! அவர்தான் உன் அத்தாங்குறாள் அம்மா. எனக்கு நாக்கு கூசுகிறது”. பொஞ்சாதியின் கடமை என்னென்ன என்பதை கோமதி கெழவி ராவெல்லாம் ஓதி வைத்திருந்தாள். அதிலெல்லாம் தன்னையும் அவரையும் அவளால் பொருத்தவே முடியவில்லை. அவருக்கும் இதில் விருப்பமே இல்லை என சுலோ சொல்லியிருந்தாள். ஊருக்கே வழக்காடும் மனுசனுக்கே பொண்டாட்டி சொல்லை மறுதலிக்க முடியல. இந்த நல்லாள் கெழவி என்னைச் சீரழிக்கத்தான் சீக்கு வாங்கியிருக்கா போல”. இதையெல்லாம் மனதுக்குள் ஓட விட்டு முடிக்கும் போது சம்புவின் கழுத்திற்குக் கீழ் வயிறு வரைக்கும் தாலி தொங்கியது.

நல்லாளுக்கும் மலைவாசனுக்கும் கல்யாணம் நடந்த போது என்னென்ன சாங்கியங்களோ அதில் ஒன்று கூட விடுபடவில்லை. நல்லாள் அளவிற்கான சீர் செனத்திதான் சம்புவிற்கு இல்லை. அதற்கு வழி இருந்தால் சம்புவுக்கு ஏன் இந்த நிலை!

புருசனை புதுசா ஒருத்தியிடம் தூக்கிக் கொடுத்து விட்டோமே என்ற பதற்றம் துளி கூட நல்லாளுக்கு இல்லை. ராவுக்கு மட்டும் தான் புது பொண்டாட்டி, விடிஞ்சா நல்லாளோட ஆட்சியாத்தான் விடியும். இதுதான் நல்லாளின் கணக்கு.

சுலோவும் சம்புவும் பேசிக்கொள்ளாத வகையில் பார்த்துக் கொண்டாள் களவாணி. சுலோவை மூத்த மகளோடு அனுப்பி வைத்திருந்தாள் நல்லாள்.

“எட்டி களவாணி, அந்த குட்டி மொரண்டு பிடிக்கப் போறா. எல்லாத்தையும் சொல்லி வச்சியா?”நல்லாளுக்கு அவள் புருசன் வேலையை இலகுவாக்கும் பிரயத்தனம்.

“எல்லாம் பேசிட்டேன் . அவள்கிட்ட புட்டு புட்டு வச்சிட்டேன். பத்தாம் மாசம் குஞ்சாமணியை நீ கொஞ்சலாம்”.

“வீரப்பா! உனக்கு படையலப் போட்டு குதிரை செஞ்சி வுடுறேனப்பா. இவ வாக்கு பலிக்கட்டும்”.

சம்பு அறைக்குள் விடப்பட்டிருந்தாள். “இந்த மலைவாசன் அண்ணன் இந்நேரத்துல எங்க போனாரு!” ராத்திரி சடங்குக்கான பொறுப்பில் விடப்பட்டிருந்த பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். “அக்கா உன் புருசனை அப்டி என்னத்தைப் போட்டு மயக்கி வச்சிருந்த! துள்ளிக்கிட்டு ஓடி வருவானுக இந்தச் சின்னக்குட்டிக்கு. உன் புருசனை ஆள உட்டு தேட வேண்டிருக்கு”.

“கதவை பொத்துனாப்புல சாத்திப்புட்டு அந்தாண்ட போங்கடி வருவாரு” . சம்புவும் அவள் அறையும் தனித்து விடப்பட்டன. கல்யாணத்திற்குத் தான் கட்டியிருந்த பட்டுச்சேலையை ராக்காத்துல ஒனத்தலாம்னு கொடி பக்கமா வந்தாள் நல்லாள்.

தொழுவத்தில் இரண்டு உருவங்கள் நின்றன. நல்லாளின் கண் பார்வை அந்த இருட்டிற்குள் அவ்வளவாக வேலை செய்யவில்லை. சீக்கு அதையும் தின்றிருந்தது.

எதையோ அந்தக் குட்டை உருவம் நெட்டை உருவத்திடம் கொடுத்தது. “இந்தப் பொடியைப் பால்ல கலந்து குடிச்சிருங்கண்ணே! ஒத்தாசையா இருக்கும்” களவாணிதான்.

“உங்க ஆசைப்படியே நடத்தி கொடுத்துட்டேன். உங்க நினைப்பு படித்தான் இத்தனை நாளும் எல்லாத்தையும் அமைச்சி கொடுத்துருக்கேன்” களவாணியே தான்.

நெட்டை உருவம் பதில் ஏதும் பேசவில்லை. அவசர வேலை வந்தது போல் மின்னலாய் மறைந்தது.

நல்லாள் வைத்திருந்த பட்டுச்சேலை கீழே தவறியது. தண்ணீர் படாமல் இத்தனை வருடங்களாக நல்லாள் வைத்திருந்த பட்டுச்சேலை சாணிக்குழிக்குள் விழுந்தது. நல்லாள் அதை மீட்காமலேயே உள்ளே சென்றாள்.

கதவு திறக்கும் சத்தம்  கேட்டு சம்புவின் இதயத்துடிப்பு அறை முழுக்க இடித்தது. கட்டிலில் உட்கார்ந்த மலைவாசன் “பயப்படாத பாப்பா இங்க வா” என்றார். அவர் முகமெல்லாம் பற்களாக இருந்தன. அவர் சிரித்து அப்போதுதான் பார்க்கிறாள் சம்பு. மறுபடியும் அழைத்தார். இதற்கு மேல் போகாமல் இருந்தால் என்ன விளையுமோ என்ற அச்சம் வியர்க்க வைத்தது. மெல்ல நகர்ந்து அவர் கைக்கெட்டும் தூரத்தில் நின்றாள்.

“அட. இப்டி வாங்குறேன்” என்று மடியில் அவளை அமர்த்தியவர், அந்தப் பாவாடை சட்டையில நீ எப்படி இருந்த தெரியுமா!” என்று அவளை இறுக்கினார்.

புதுப்பானை கட்டியிருந்த

அந்த உயரமான பனைமரத்திற்கு

போதை ஏறிக்கொண்டிருந்தது.

புகைப்படம் : சரண் முத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.