அர்ஜூன்ராச்-கவிதைகள்

1

மதிப்பிற்குரிய கல்லாப்பெட்டி அவர்கள்…

தன் கண்டடைதல்களை
மேல் கவனிப்பிற்குக் கொண்டுசெல்ல
“நீங்கள் தான் சரி” யென
யாரை அழைப்பு விடுப்பது

யாரிடம் கத்திரியைக் கையளிப்பது
மற்றும்
ரிப்பன் வெட்டித்தொடங்கச்செய்வது

தொடங்கிவைக்க ஒருவர் கிடைத்துவிடுகிறார்
ரசனைகளை அளவளாவிச் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டு
நேரே கல்லாப்பெட்டியிடம் செல்கிறார்.

(தொடக்கத்திலேயே இன்னமும் வாழ்ந்து வருபவராதலால்
ஆன்லைன் பரிவர்த்தனை பற்றி அறிந்திலார்)

அவரது கல்லாப்பெட்டியோடு ஒப்பிட்டுக்கொள்கிறார்.

அதில் ஒன்றுமே இல்லாதது
மட்டற்ற மகிழ்ச்சியை  மேலிடச்செய்கிறது.

தன் உளங்கனிந்த வாழ்த்தினை அதில் முதல் வரவாக்கித்தருகிறார்

அக்கணம்  விளைந்த அறியாமை பொருட்டுதான் 
ஒரு ஃபைனான்ஷியரிடம்
யாரும் அனுமதிக்கப்படாத முற்றத்து அறையில்
மாதச்சம்பளத்திற்கு
இப்போதவர்
ஒரு கல்லாப் பெட்டியாக வேலைப் பார்த்து வருகிறார்.

____

2

நண்பன்,
அந்த மரத்தில் இலைகளைப்
பார்த்துக்கொண்டிருந்தான்

இலைகளுக்கு  இணையாக  இலைவிட்டிருந்த
வெய்யிலை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்

அவன் அதில்
வசந்தத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்

நான்
இலைகள் உதிர்வதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்

அவன்  பார்வையை  எட்டிப்பார்த்தேன்
சில பழுத்த இலைகள்
அலகிலா விளையாட்டோடு
மகிழ்வைப் பாடிக்கொண்டிருந்தன

என் பார்வைக்கு அவனை அழைத்தேன்

இலைகள் உதிர்ந்த கிளைகளில்
சில பறவைகள் பூத்துப் பூத்துக் களிப்பதைப் பார்த்தான்

மேலும்

“பகல் அசைந்தசைந்து குலுங்குகிறதே
இதென்ன அக்கினி பழமா ” என்றான்.


3

நீண்ட நேர பயணத்தொய்வில்
வலது இடது கால்களை
இட வலப் பக்கமாக வைத்தபடி
தூங்கிவிட்டிருந்தேன்

பேருந்து நிற்க, 
இறங்கவேண்டிய நிறுத்தம் பொட்டிலடித்தது

பதற்றத்தில்தான் கவனித்தேன்

சப்பாத்துகள்,
என் கால் குழந்தைகளிடம்
தன்னை  மாற்றி மாற்றி அணிந்து
விளையாடிக்கொண்டிருந்ததை

வழக்கம்போல்  அது அதட்டும் நேரம்
அல்லாததால்,
வேகம் கூட்டி இறங்க முயன்றேன்
இறக்கி விட்டதோ குழந்தை நடைதான்.

4

சாலையில்
ஓரமாகப் போய்க்கொண்டிருந்தேன்
சுதாரிக்க  முடியாததொரு கணத்தில்
சேறடித்துப்போனது அ-வாகனம்.

சம்பவத்தில் துமியளவும் என் மீது
தப்பிதம் இல்லாததால்
கறையைக் கழுவிக்கொள்ளவில்லை.
சினம் முற்றினும், 
கண்ணீரை முற்றவிடவில்லை.

மனமோ ஒரு குழந்தை முஷ்டி .

என்ன செய்வது
என்ன செய்வதென்றபடியே
அ-பதற்றத்திலிருந்து
அலறாமல் விழித்துக்கொண்டேன்.

அர்ஜூன்ராச்

Previous articleநயனக்கொள்ளை
Next articleநீரை மகேந்திரன் கவிதைகள்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments