1. நொய்யல் ஆறே நொய்யல் ஆறே (அ) தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி
வாசனை மரங்கள் நீரில் பேசிவரும் ரகஸிய மூச்சின் இழை
அதன் நாமத்தை அழைக்கும் உடம்பின் உப்பு
சிற்றாற்றுப் பொடிகளை உணவில் தூவி
காட்டைத் திரிக்க பெரிய ஆசை
இருந்தும் கிடைத்தது ஒரு ஆயுளின் மூச்சுதான்
நதியினை நனைக்கும் காற்றால்
உயிருக்குள் ஒரு ஓடை செய்தேன்
அதை அப்படியே இறங்கச்சொல்லி
நொய்யல் நதியில் நீந்தச்சொன்னேன்
அம்மண மலையில் ஏறி சறுக்கும் பனியை
இலை மடையில் நடக்கச்சொல்லி
நொய்யல் மேலே ஊறவைத்தேன்
பின் ஓடும் நதியின் மேல் காடு வந்துவிழும்
சூரியச்செதில்கள் நீருக்கு நன்றி சொல்ல
காணாமல்போனது நீர்க்காலம்
கால்கள் இன்றி ஓடிவந்த நீர்
உடைந்த கால்களால் இனி நகராது
சிறிய செடியிலிருந்து மாக்கள் பிறக்க
இல்லாத நீரைத்தானே இரையாகக் கேட்கும்
ஆற்றுப்படுகையில் அமர்ந்த மக்கள்
குலவையிட்டதால் தாகம் வந்தது
நொய்யல் நாகரீகம் நீரைக்கேட்கும்
அல்லது நீர் ஓடிய மணலைக் கேட்கும்
நான் மணலைத் தின்றேன்
இல்லாத நீருக்காக மலையிலிருந்து குதித்தேன்
இறந்தே விழுந்தேன் தொள்ளாயிரம் மூர்த்தியில்
என் உயிர்க்குடம் உடைத்து தான் பனிக்குடம் தருவேன்.
2 . அம்மண ஒளி
தாவாத பூனையாக இருக்கிறது வெயில்
அதன் ஒளியில் ஒரு ஊனம்
வெளியே திரியும் பகலவனை
கட்டிடச்செங்கல்லுக்குள் அடைத்தது யார்
மோசமான விரல்களால் ஒளியை அடைத்து
பின் மதியத்தைத் திறந்து விட யார் வருவது
மரநாயின் கல்லில் தெறிக்கும் சூரியச்சடங்கு
அதில் முளைக்கும் கோடிக் கங்குகள்
ஒன்றில் இருந்து ஒன்றாக
குழந்தையைத் தூக்குவது மாதிரி பகலைத் தூக்கினேன்
ஒன்றில் இருந்து ஒன்றாக
குழந்தையை வீசுவது மாதிரி பகலை தூரத்தில் வீசினேன்
பின் மலரின் சிகப்பால் தடயத்தைத் துலக்கி
ஒளியின் பெயரில் நானே எரிந்தேன்
சூரியன் என்மீது விழும்
பகல் போல நிலத்தின் மீது அம்மணமாய்க் கிடந்தேன்
கதிர்களாக நெளியும் உடல்ரோமங்கள்
கண்கூசச் சொல்லும் ஊடலின் திரி
அதுதானே எனது எரியும் சதுப்புநிலம்
இரவு போல யாரும் வரும்வரை
அம்மணச்சடங்கில் தீயாய்க் கணப்பேன்
கனக்காத உயிரோடு பகலை உடுத்தி
இல்லாத ஒளியோடு ஊடலில் இருந்தேன்.
- அதிரூபன்