அற்றுப் போகும் தேளினம் Scorpion (disambiguation)-தூ.இரா.ஆ.அருந்தவச்செல்வன்.

தேள் என்றாலே கொட்டுகிறதோ இல்லையோ அதைக்கண்டு அனைவரும் அஞ்சுவர். அத்தகைய தேள் என்னும் நட்டுவாக்காலிகள் இன்று எங்கு போயிற்று?

முன் காலங்களில் மழைக் காலம் தொடங்கி விட்டாலே தேளினை எங்கும் ஊர்ந்து செல்வதைக் காண முடிந்தது. ஆனால் இன்று தேடினாலும் கண்ணில் அகப்படுவதில்லை. நாற்பதாண்டுகளுக்கு முன்னால் கதிரவன் மறைய இருள் சூழ்ந்ததும் பெரியவர்கள் அதுவும் மழையிருப்பின் சிறுவர்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லத் தொடங்கினால் டே லாந்தர் எடுத்துட்டு யாரையாவது கூட கூட்டிக் கொண்டு போடா, தேள் இருந்திடப் போகுது என்ற அறை கூவல் பலர் வீடுகளில் கேட்கும்.

அன்றைய நாளில் மாலை வேளை மற்றும் இருட்டிய பின்பும் வேளாண்மைக் காடுகளுக்கும், வயல்களுக்கும் பலர் வேலை நிமித்தமாக நடந்தே செல்வர். அங்ஙனம் நடந்து செல்லும் பொழுது அரிக்கேன் என்னும் லாந்தர் விளக்கு கொண்டும் அல்லது சூந்து, மற்றும் தடியுடன் செல்வர். அச்சூழலில் நடந்து செல்லும் பொழுது பல இடங்களில் தேள்கள் மற்றும் பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்ணுறாமல் இருக்க முடியாது. பெரும்பாலும் அக்காலங்களில் செருப்பு அணியமாட்டார்கள். எனவே வெறும் காலில் தான் நடப்பர். அந்நாளில் பெரும்பாலும் தேளிடம் யாராவது ஒருவராவது கொட்டு வாங்கியிருப்பார்கள். இட்டேரிகளிலும், வாய்க்கால் வரப்பு, ஏரி, குளக்கரை, ஒற்றையடிப்பாதை, களம், வீட்டின் வாசல்கள் போன்ற பகுதிகளிலும் காணலாம். ஆனால் இன்று தேளினைப் பார்க்காதவர்கள் தான் மிகுந்திருப்பர் என்றால் மிகையாகாது. இரவு மட்டுமல்ல பகற்பொழுதிலும் எப்பொழுதாவது ஊர்ந்து செல்வதையும் முன்னர் காணலாம்.

கிராமப்புறங்களில் வாழ்பவர்களில் பெரும்பாலோர் தேளினால் கொட்டு வாங்கியவர்களாகவே இருப்பர். பெண்கள் சமைக்க விறகு எடுக்கும் பொழுது விறகுக்குள்ளிருந்து எதிர்பாராமல் கொட்டுவதும் அடிக்கடி நடக்கும்.  அப்படி தேள் கொட்டினால் அக்காலங்களில் சீமை எண்ணை அதாவது மண்ணெண்ணெய்யை பாத்திரத்தில் ஊற்றி அதில் கடிபட்ட காலையோ கைவிரல்களையோ உள்ளே வைப்பர்.  அல்லது முன்னர் சைக்கிளில் டைனமோ இருக்கும்.  அதில் ஒயர் இணைப்பை ஏற்படுத்தி ஒரு நுனியைக் கடிபட்ட இடத்தில் வைத்து சக்கரத்தைச் சுழற்றி மின்சாரத்தை ஏற்படுத்தி விஷத்தை முறிக்கச் செய்வர்.  வைத்தியரிடம் சென்று மூலிகை வைத்தியம், மற்றும் மருந்தினை அருந்தியும் விசத்தை இறக்கச் செய்வர். இதனை முன்னர் கண்டிருக்கிறேன்.

உலகில் இரண்டாயிரம் தேளினங்கள் உள்ளதாக அண்மை ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. அவற்றில் இருபத்தைந்து வகையான தேள்கள் வீரிய விசத்தன்மை கொண்டவை.  ஆயினும் தமிழகத்தில் கருந்தேள், செந்தேள் என்னும் இருவகைத்தேள்கள் பலருக்கும் தெரிந்ததாகும்.

கிராமங்களில் முன்னர் இடிபட்ட குட்டிச்சுவர்கள் பல தென்படும். இச்சுவர்கள் கல் மற்றும் மண் கொண்டு கட்டப்பட்டதால் மண் ஆங்காங்கே சிதைந்து சிதிலமடைந்து பல இடுக்குகள் கொண்டிருக்கும். அப்பகுதிகளில் தேள்கள் குடிகொண்டிருக்கும். மற்றும் தேள்கள் காடுகள், புதர்கள், கல் இடுக்குகள் போன்ற மறைவான பகுதிகளில் மறைந்து வாழ்கின்றன. இவற்றின் முக்கிய உணவு விசம் கொண்ட சிலந்திகள், சிறு தவளை, பல்லிகள், பூச்சிகள் போன்றவை.

தேளின் உடல் கணுக்களால் ஆனது. இவை ஆறு கால்களுடனும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளைக் கொண்டுமிருக்கும்.  இந்த முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும், வாய்க்குள் கொண்டுசென்று இரையை உண்ணவும் பயன்படுத்துகிறது. வால் பல கணுக்களைக் கொண்டும் நுனியில் ஒரு நச்சுத்தன்மை உள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். இப் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்குப் பயன்படுகின்றன.

தேளின் உடலில் அடிவயிற்றின் மேல் ஐந்து பகுதிகள், மேல் நோக்கி வளைந்திருக்கும். அதன் இறுதிப் பகுதி டெல்சன் (telson) என்று கூறப்படுகிறது. டெல்சன் என்பது விசம் உற்பத்தியாகும் பகுதியாகும். டெல்சனின் நுனியில் அக்குலியஸ் (aculeus) எனப்படும் கூர்மையான ஊசி போன்ற அமைப்பு உள்ளது. இதைக்கொண்டு பூச்சிகளையும் பிற சிறிய உயிரினங்களையும் உணவாக உட்கொண்டு உயிர் வாழ்கின்றன. கொடுக்கை ஒரு முறைப் பயன்படுத்தினால் விசம் உருவாக ஒரு வார காலம் ஆகும் என்பதால், இரையைப் பிடிப்பதற்கு அதன் முன் கொடுக்குகளையே பெரும்பாலும்  பயன்படுத்துகின்றன.

ஆய்வுகளின் மூலம் பல அரிய செய்திகளை அறிய முடிகிறது. தேள்கள் வாழும் காலம் இரண்டு முதல் இருபத்தைந்து ஆண்டுகள். இவை ஒரு வருடம் முழுவதும் உணவு இல்லாமல் வாழ முடியும். ஏனெனில் தேள் வளர்சிதை மாற்றத்தைக் கொண்டது மட்டுமல்லாமல் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும் திறனும் தேள்களுக்கு உள்ளது.

மேலும் தேளினால் நீருக்கு அடியில் 48 மணி நேரம் மூழ்கியிருந்து உயிர்வாழ முடியும். தேள் கடுமையான, வறண்ட சூழலிலும் உயிர் வாழக்கூடியது. மேலும் இது உணவிலிருந்து பெறும் ஈரப்பதத்தில் மட்டும்தான் உயிர் வாழ்கிறது என ஆய்வுகள் மூலம் அறியப்படுகிறது.  இவை உயிர் வாழ பிராண வாயு (ஆக்சிஜன்) பத்தில் ஒரு பங்கு மட்டுமே தேவைப்படுகிறது. தேள் பன்னிரண்டு கண்களைக் கொண்டுள்ளது. ஆனால் அவற்றுக்குச் சரியான பார்வைத் திறன் கிடையாது. இரண்டு கண்கள் தலைப் பகுதியிலும், நெஞ்சுப் பகுதியில் ஐந்து ஜோடி கண்களும் இருக்கின்றன. ஆயினும் இரையை அவை அதிர்வு மற்றும் வாசனையைக்கொண்டு தான் கண்டுபிடித்து இரையைப் பிடித்து உண்கிறது எனக் கூறுகிறது ஆய்வுகள். எத்தகைய உயிரினத்தை இரையாகப் பிடித்தாலும் தேள்கள் அவற்றைத் திரவ வடிவத்தில் மட்டுமே உட்கொள்ள முடியும். எனவே பிடிக்கிற இரையை அவற்றை நன்கு கொறித்து திரவமாகவே உள்ளே அனுப்பி உண்கின்றன. செரிமான திரவங்கள் அவற்றின் உணவில் ஊடுருவி பின்னர் திரவ வடிவில் சத்துக்களாக உறிஞ்சப்படுகின்றன என்பதனை ஆய்வுகள் மூலம் அறிய நேரிடுகிறது.

ஆண், பெண் இரண்டும் இனப் பெருக்கக் காலங்களில் இணை சேருகின்றன. இத்தருணங்களில் இவற்றைக் காண நேர்ந்தால் அதன் இனப்பெருக்க செயல் ஒன்றுடன் ஒன்று முன்னும் பின்னும் நகர்ந்தபடி ஒருவித நடனம் புரிந்து பின்னர் இணை சேரும். இனப்பெருக்க செயல் முடிந்ததும் ஆணுடன் பெண் தேள் இருப்பதில்லை. அவை தனித்தனியாகப் பிரிந்து சென்று விடுகின்றன.   பிற பூச்சியினங்களைப் போலல்லாமல் உடலுக்கு வெளியே முட்டைகளை அடைகாக்காமல் தேள் நேரடியாகவே உடலுக்குள் குட்டிகளை உருவாக்குகிறது, இச் செயல் விவிபரிட்டி (viviparity) எனக் கூறப்படுகிறது. முட்டையிட்ட பின் அவை இயற்கையான முறையில் முட்டையிலிருந்து வெளியே வருகிற முறை ஓவிபரிட்டி (Oviparity) என்று கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாகாக ஆமையைக் குறிப்பிடலாம்.

தேள் சுமார் 100 குட்டிகள் வரை ஈனும். அதனுடைய முட்டைகளை அதன் உடலுக்குள்ளாகவே வைத்து அடைகாக்கின்றன. குட்டிகள் கருவில் உருவாகி, பிறகு புழுக்களாக உருமாறும் வரை அதன் உடலிலேயே இருக்கின்றன. தாய்த் தேளின் உடலிலிருந்தே குட்டிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அவற்றுக்குக் கிடைத்து விடுகின்றன. குட்டிகள் பிறந்து வளரும் வரை தாயின் முதுகின் மேலேயே பயணிக்கின்றன. தாயுடன் குறிப்பிட்ட காலம் வரை குட்டிகள் இருக்கின்றன. வளர்ந்தவுடன் தாயிடமிருந்து பிரிந்து சென்றுவிடுகின்றன. 

குட்டிகளில் பெரும்பாலும் பல வேறுபட்ட காரணங்களால் அழிகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. குட்டிகளைச் சுமந்து செல்லும் தாய்த் தேள்கள் ஊர்ந்து செல்லும் பொழுது விழ நேர்ந்தால் இக்குட்டிகள் இறக்க நேரிடுவதும் அல்லது எதிரிகளுக்கு இரையாவதும் நேரிடும். மேலும் தனியாகப் பிரிந்து வரும் குட்டித் தேள்களைப் பிற பூச்சிகளும் மற்ற எதிரிகளும் கொன்று தின்றுவிடும். இதனால் இதன் இனப் பெருக்கம் வரையறைக்குள் உள்ளது எனலாம்.

ல்லா தேள்களும் விசம் கொண்டவைதான். ஆனால்  சில தேள்களின் விசம்  மட்டுமே உயிரிழப்புகளுக்குக் காரணமாகின்றன. இதன் விசம் நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் மட்டுமே உயிரிழப்பு ஏற்படுகிறது. இவை தேள்களுக்குண்டான பொதுவான குணங்கள்.

கருந்தேள் உருவத்தில் பெரியதும் கருநிறமும் மங்கிய நீல நிறமும் கொண்டு காணப்படும். கருந்தேள் கொட்டினால் மிகுந்த வலி ஏற்படும், சிலர் இறக்கவும் நேரிடும். மிகச் சிறிய குழந்தைகள் இறந்துவிடுவர்.

செந்தேள் உருவத்தில் கருந்தேளை விட சிறியதும், கொட்டினால் வலி சற்று கருந் தேளைக் காட்டிலும் குறைவாக இருக்கும். செம்மையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் காணப்படும். செந்தேள் கொட்டினால் பாதிக்கப்பட்ட இடம் முழுவதும் உடனே நீல நிறமாக மாறிவிடும்…பொறுக்கமுடியாத கடுப்பு, வலியை உண்டாக்கும்.

தேள் கடி சில நேரங்களில் மனிதனின் உயிரையும் போக்கவல்லது. வலியால் மயக்கமடைவதற்கு முன்னரே முதலுதவி (மருத்துவ) தரப்படவேண்டும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி, தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதய செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பு தடுக்கப்படுகின்றது என்கிறது.

தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகள்:

தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கிக் கட்டவேண்டும். இதனால் தேளின் விசம் உடலில் பரவுவதை ஓரளவு தடுக்க முடியும்.

பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதனால் வலி ஓரளவு குறையும். கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கித் தூக்கவோ கூடாது. கீழ்நோக்கித் தொங்கவிடலாம்.

முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்குக்

கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.

உடனடியாக மருத்துவரை அனுக முடியாதவர்களும் கிராமத்தில் வாழ்பவர்களும் முதலுதவியாகக் கடைப்பிடிக்க வேண்டியவை

தேள் கடிபட்டவர்களுக்குக் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியைக் கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும்.

எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேள் கடி விசம் இறங்கும்.

நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பைச் சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரைத் தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விசம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.

ஒரு கல்லில் சில துளி நீர் தெளித்து அதில் புளியங்கொட்டையை தேய்த்து அதன் சூட்டுடன் தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் அதன் விசம் இறங்கியதும் புளியங்கொட்டை கீழே விழுந்துவிடும்.

நாட்டு வெல்லத்துடன், கொஞ்சம் சுண்ணாம்பு மற்றும் சிறிதளவு புகையிலை சேர்த்து நன்றாகக் கலந்து பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் விசம் குறையும். 

தற்போது தேள்கள் அழிந்து வருவதற்கான காரணங்கள் யாதெனில் அவை தங்கி மறைந்து வாழும் சூழல் இல்லாததும். மண் தரைகள் நாளுக்கு நாள் இல்லாமல் போவதும் தார்ச்சாலைகள், சிமெண்ட்டு தரைகளாக ஏற்படுத்தப்படுவதும், வயல்கள், தோட்டங்கள் போன்ற வேளாண்மை புரியும் நிலங்களில் களைக் கொல்லி மற்றும் பயிர்களின் மேல் வீரியமுள்ள பூச்சிக் கொல்லிகளைத் தொடர்ந்து தெளித்து வருவதும் இதனால் பெரும்பாலான பூச்சிகள் இறந்து விடுவதால், தேள்களுக்குண்டான இரை குறைந்து போனது போன்ற காரணங்களால் தேள்கள் நாளுக்குநாள் எண்ணக்கையில் குறைந்து அழிந்து வருகின்றன. இதன் இனம் அதிகரிக்க வாய்ப்பில்லை என உறுதிபடக் கூறலாம். இவை மிகைப்படுத்திக் கூறப்பட்டதல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.