சில்லுகளில் அலைக்கழியும் பிம்பங்கள்

தவைத் திறந்த கலாவிடம், ‘வீட்ல யாரும் இல்லைல’ என்றபடி உள்நுழைய முனைந்தவனைத் தடுத்தவள் ‘என்ன வேணும், இப்ப வந்திருக்கீங்க’ என்றாள். ‘பேசணும், போன்ல சொன்னேனே’.

‘இருங்க, கல்பனா வீட்ல இல்லையா’

‘உள்ள வந்து சொல்றேன், வழி விடு’

வீட்டினுள் நுழைந்தவன் வழக்கம் போல் படுக்கையறை வரை சென்றவன் திரும்பி முன்னறையில் நாற்காலியில் அமர்ந்தான். இன்று வந்தது அதற்கல்ல.

‘ரவி ஆபிஸ்லயா’ என்றான்.

‘மணி பதினொண்ணு. நீங்க வேலைக்குப் போகலையா’

‘..’

‘கல்பனா எங்க?’

‘அவ சிஸ்டருக்கு வழக்கமான மைக்ரைன், இவ போய் சமைச்சு குடுத்து, ஈவ்னிங் தான் வருவா’

‘என்ன விஷயம், யாராவது வரப்போறாங்க’

‘இப்ப யார் வருவாங்க?’

‘போரடிச்சுது சும்மா வந்தேன்னு, மீனாட்சி அப்பப்ப அபார்ட்மெண்ட் பத்தி வம்படிச்சிட்டு போவாங்க. ஹேமா வருவா, ரெண்டு மூணு நாள் முன்னாடி கல்பனா கூட வந்து பேசிட்டிருந்தா. அதனாலத்தான் சொல்றேன் நீங்க கிளம்புங்க.’

‘நீ கதவ திறக்காத, பெல் அடிச்சுப் பாத்துட்டு போயிடப் போறாங்க. புது டிவியா, எத்தன இன்ச்’

பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரே அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்தாலும், கடந்த ஒரு வருடமாகத்தான் இந்த வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறான். இருவர் வீட்டிலும் யாரும் இல்லாத போது, அதுவும் மதிய நேரத்தில் மட்டும். ஆனால் இன்று தான் ஹாலில் முதல் முறையாக அமர்கிறான், அங்கு சுவரில் மாட்டப்பட்டுள்ள தொலைக்காட்சியை இப்போது தான் கவனிக்கிறான். அதற்குள் மேல் கலா, ரவி, அவர்கள் மகன் சிரித்தபடி நிற்கும் புகைப்படம். பார்வையை விலக்கிக் கொண்டான்.

‘வாங்கி ஏழெட்டு மாசமாச்சு. என்ன விஷயம் சொல்லுங்க, எதுக்கு இப்ப வந்திருக்கீங்க?’

‘..’

‘எதுவும் பேசாம மொபைலையே நோண்டிட்டிருக்கீங்க’

‘ஒரு நிமிஷம்’ என்றவன் தொடர்ந்து அலைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

‘டென்ஷனா இருக்கீங்க, வேர்த்திருக்கு. உள்ள ஏசி இருக்..’ என்றவள் நிறுத்தினாள்.

நிமிர்ந்தவன் ‘வேணாம், ஏதோ யோசனை’ என்றான்.

‘நீங்க போன்ல பேசினது சரியா புரியலை, கல்பனா என்ன சொன்னா’

‘..’

‘ஆபீஸ் லீவ் போட்டீங்களா’

தலையசைத்தான்.

‘நேத்து நைட்..’

‘..’

‘தூங்க போயிட்டேன். கல்பனா பேசணும்னு சொன்னா… கொஞ்ச நாளா.. ‘அவ… யாரையோ மீட் பண்ணிருக்காளாம்’

‘யாரு’

‘நான் எதுவும் கேட்கலை, அப்படியான்னு தூங்கிட்டேன்‘

‘.. ஷாக்கிங்காத் தான் இருக்கும்’ என்றாள்.

‘அப்டிலாம் இல்ல, நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லிருக்கேனே, பத்தொன்பது வருஷமா குப்பை கொட்டியாச்சு இனி சாகற வரைக்கும் அதுலயே புரள வேண்டியது தான்னு. அதனால தான் அவளோட நான் இருக்கேன்’

‘இருந்தாலும்..’

‘அவ எவன் கூட வேணாலும் போகட்டும்…’

‘..’

‘..அவன் யாருன்னு தெரிஞ்சா போதும். எதுக்கு சிரிக்கற’

‘இல்லையே, என் மூஞ்சியே அப்படி. நீங்க அப்பவே அவ கிட்ட கேட்டிருக்கணும், ஆனா தூங்கினேன்னு வேற என் கிட்ட சொல்றீங்க’

‘நிஜமாத்தான், கண்ண சொக்கிச்சு. ப்ளஸ் எனக்கு அவ சொன்னதுல இன்ட்ரஸ்ட் எதுவும் இல்ல…. யாருன்னு..’

‘அப்ப மார்னிங் அவ கிட்டேயே கேட்க வேண்டியது தானே’

‘காலைல, அவ எப்பவும் போல சாப்பாடு ரெடி பண்ணிட்டிருந்தா. வினய் எட்டு மணிக்கு காலேஜுக்கு போயிட்டான். அப்பறம் ரம்யா, அவ தங்கச்சி கிட்டேந்து போன். இவளும் கிளம்பிட்டா’

‘சாப்டீங்களா’

‘..’

‘காபி போடறேன்’

அவள் சமையலறையிலிருந்து வந்த போதும் அலைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.  

‘இந்தாங்க’ இங்கு எப்போது வந்தாலும், நேரமாகி விட்டது, யாராவது  வருவார்கள் என்ற பதட்டம் எப்போதுமிருந்தாலும், காபி குடித்துவிட்டுத்தான் கிளம்புவான். ‘எக்ஸ்ட்ரா பத்து நிமிஷத்துல என்ன ஆகப் போகுது’ என்பாள் கலா.

அவன் குடித்து முடிக்க ‘வீட்ல போய் ரெஸ்ட் எடுத்து ரிலாக்ஸ் பண்ணுங்க’ என்றாள்.

‘டென்ஷன்லாம் ஒண்ணுமில்லை. செகண்ட் வேவ் டைம்லேந்தே அவள பார்த்தாலே எனக்கு குமட்டிகிட்டு வருது. அதிகப்படுத்தி சொல்லலை, அவ கிட்ட வந்தாலே, எரிச்சலா இருக்கு. பேசியே ஆகணும்னுனா தான் இப்பல்லாம் அவகிட்ட பேசறேன். அவ மண்டைய உடைக்கணும்னு கூட திடீர்னு தோணும்’

‘..’

‘ஸோ, எனக்கு அவ சொன்னது அதிர்சியாலாம் இல்ல’

‘சரி, அப்ப ஏன் ரெஸ்ட்லஸ்ஸா இருக்கீங்க, இல்லைன்னு சொல்லாதீங்க’

‘… அவன் யாருன்னு தெரிஞ்சா போதும். அதுவும் ஜஸ்ட் ஒரு க்யுரியாஸிட்டி தான்..’

‘..’

‘.. யாரா இருக்கும்னு நீ நினைக்கற’

‘என்னை கேட்டா? உங்களுக்கு என்ன தோணுது’

‘அப்படி யாரும் தோணலை, அதான் உன்கிட்ட’

‘… ஸ்ரீனிவாசன்?’

‘அவரா, அவருக்கு அம்பது, அம்பத்தஞ்சு வயசு இருக்குமே’

‘நமக்கும்தான் பார்டி பைவ் ஆயிடுச்சு. ஸ்ரீனிவாசன் நல்ல, ஹாண்ட்ஸமாத் தான் இருக்காரு. சிரிப்பா பேசுவாரு. அபார்ட்மெண்ட் வேலைலாம் இழுத்துப் போட்டு செய்வாரு’

‘மொக்கை ஜோக்ஸ்’ என்றபடி மறுப்பாகத் தலையசைத்தான்.

‘ஆனந்த்?’

‘அவன் வேஸ்ட். அபார்ட்மென்ட் மீட்டிங், கெட்டுகெதர்ல எப்பப்பாரு மொக்கை போடறான்னு கல்பனா சொல்லியிருக்கா’

‘ரவி?’

‘உளறாத’

‘இதுல என்ன உளறல் இருக்கு. அவரும் பார்க்க நல்லாருக்கார், நல்லா தன்மையா பழகுவார்’

‘அதெப்படி.. நீயும் நானும், அதே மாதிரி ரவியும்.. கதைல தான் இப்படியெல்லாம் நடக்கும், நிஜத்துல வாய்ப்பில்லை’

‘..’

‘சரி அப்படியே ரவி நல்லவர், ஹாண்ட்ஸம்னா நீ எதுக்கு என் கூட..’

‘நானா உங்க பின்னாடி அலைஞ்சேன். குட் மார்னிங், குட் நைட் மெசேஜை, சூப்பர் ஸ்டேடஸ்னு அனுப்பி இத ஆரம்பிச்சது யாரு? கிளம்புங்க’

‘ஸாரி, ஸாரி. நான் அப்படி சொல்ல வரலை.’

‘வேண்டாம் இங்கிருந்து போங்க, உங்களுக்கும் உங்க வைப்புக்கும் உள்ள பிரச்சினைல என்னை அசிங்கப்படுத்தாதீங்க’

‘ஸாரின்னு சொல்றேனே. குழப்பத்துல இருக்கேன் அதான்’, அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் முன் மண்டியிட்டு அவள் முட்டி மீது கை வைக்க, அவள் விலக்கினாள்.

‘என்ன செய்யறீங்க.. ப்ளீஸ் கொஞ்சம் நார்மலா பிஹேவ் பண்ணுங்க’

எழுந்து நாற்காலியில் அமர்ந்தான். அவன் குடித்த டம்ளரை உள்ளே வைத்து விட்டு அவள் வர 

‘வேற யாரா இருக்கும்…. எங்க ரெண்டு சைட் ரிலேஷன்ல அப்படி யாரும் இல்ல.’

‘..’

‘நீ என்ன நினைக்கற’

‘நான் ஏதாவது சொன்னா என் மேல பாயறீங்க, அப்பறம் ஏன் கேட்கறீங்க’

‘பேஸ்புக்ல தெரிஞ்சவனா இருக்குமா?’

தோள்களைக் குலுக்கினாள்.

‘இப்பலாம் பேஸ்புக்கால தான் இது மாதிரி நெறைய விஷயம் நடக்குது’ என்று அவனே மீண்டும் கூறினான்.

‘நாம என்ன பேஸ்புக்லயா..’

‘அது வேற’

‘சரி பேஸ்புக்காகவே இருக்கட்டும். என்ன பண்ணப் போறீங்க’

‘..’

‘இதுக்குள்ள கல்பனா ப்ரோபைல் செக் பண்ணிருப்பீங்களே. இப்ப வந்தபோது கூட அதானே பண்ணிட்டிருந்தீங்க?’

‘அப்படியில்ல..சும்மாத் தான்.. அவளுக்கு 424 ப்ரெண்ட்ஸ் இருக்காங்க’

‘..’

‘ஆம்பளைங்க 118 பேர்’

‘லேடீஸ் பேர்ல இருக்கறவங்களாம் பொம்பளைங்களா என்ன, அதையும் செக் பண்ணிடுங்க’

‘கிண்டல் பண்றியா’

‘இல்லை, இது மாதிரி நிறைய பேக் ப்ரோபைல் க்ரியேட் பண்றாங்க’

‘அவ தினமும்லாம் போஸ்ட் பண்றதில்லை, மோஸ்ட்லி மத்தவங்க போஸ்ட்டை ஷேர் பண்றா, அவளோ தான்’

‘..’

‘பெர்சனல் போட்டோஸ்லாம் போடறதில்லை’

‘ஆனா அவ பொம்பளைன்னு தெரியும்ல’

‘என்ன சொல்ல வர, அவ பேஸ்புக்ல தான் எவன் கூடயோ போயிட்டான்னா’

‘நீங்க தான ஆரம்பிச்சீங்க, இப்ப திருப்பி என் கிட்ட கோவப்படறீங்க, அதான் அப்பவே சொன்னேன், இது உங்க விஷயம். என்ன விடுங்க’

‘ஸாரி. அவன் யாருன்னு தெரிஞ்சா போதும். வேறெதுவும் வேண்டாம். அவ எவன் கூட வேணா போகட்டும், எனக்கென்ன’

‘..’

‘உன் கிட்ட பேசினா ஏதாவது க்ளாரிட்டி கிடைக்கும்னு தான் வந்தேன்’

‘..’

‘நீ என்ன நினைக்கற’

‘எனக்கு எதுக்கு இந்த வம்பு, நான் ஏதாவது சொல்லி, அப்புறம்..’

‘இல்லல்ல, நான் உன்ன எதுவும் சொல்ல மாட்டேன்’

‘…சும்மா சொல்றாளோ என்னமோ’

‘என்னது’

‘உங்களை பயமுறுத்த அப்படி பேசினாளோ?’

‘ம்ம்… இருக்கலாம். அவ இன்னொருத்தனோட போற மாதிரியானவ கிடையாது தான்’

‘அப்ப நான் அப்படிப்பட்டவ இல்லையா? இந்த அபார்ட்மெண்ட்ல இருக்கற எல்லா ஆம்பளைங்களோடவும் நான் படுத்திருக்கேன், ஆனா கல்பனா கண்ணகி பரம்பரை, அதானே. அவ மேல அவ்வளவு பாசம், ஆனா பிடிக்காத மாதிரி பேசுவீங்க’

‘ஐயோ, நான் சாதாரணமா சொன்னேன். எனக்குத் தான் அவளோட ஒரே ரூம்ல இருக்கறது கூட அருவருப்பா இருக்குனு சொல்லியிருக்கேனே, வண்டில அவ பின்னாடி ஒக்காந்து வரும் போது எங்கேயாவது மோதிடலாம்னு வெறியேறும்’

‘அங்கேயே உக்காந்தே இருங்க, திரும்பி என் கிட்ட வந்து மண்டி போடாதீங்க’

‘..நீ சொல்ற மாதிரி கூட இருக்கலாம்.. ஆனா எதுக்கு அவ இது மாதிரி பண்ணனும். நீ என்ன நினைக்கற’

‘..’

‘ப்ளீஸ் சொல்லு’

‘நம்மள பத்தி தெரிஞ்சதனால இப்படி ரியாக்ட் பண்ணலாம்’

‘அப்படியிருக்குமா, எப்படி?, கேர்புல்லா தானே..’

‘தூக்கத்துல ஏதாவது உளறிட்டீங்களோ’

‘கிண்டல் பண்ணாத’

‘..’

‘நீ சொல்ற மாதிரி இருக்கவும் சான்ஸ் இருக்குல?’

‘..’

‘ப்ளீஸ், சொல்லு.’

‘இதுவும் தான் கதைல வர பழிவாங்கும் படலம் மாதிரி இருக்கு. அவளுக்கு விஷயம் தெரிஞ்சுதுன்னா, நம்ம கிட்ட சண்டை போடணும், இல்ல ரவி கிட்ட விஷயத்தை சொல்லணும், ஏன் இது மாதிரி பொய் சொல்லப்போறா. இல்லைனா மேபி நான் முன்னாடி சொன்ன மாதிரி ரவி கூட..’

‘நோ நோ, அதெல்லாம் இருக்காது’

‘ஏன், அவளுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சு ரவி கிட்ட சொல்லி, அப்பறம் அவங்களுக்குள்ள, ..’

‘ப்ளீஸ், நிறுத்து. அப்படிலாம் எதுவும் இருக்காது. எனக்கு அவளைப் பத்தி நல்லா தெரியும்’

‘ரவியும் என்னபத்தி இப்படித் தான் நினைப்பார்’

‘அது வேற’

‘என்னது வேற’

‘இப்ப நாம பேசறது கல்பனா பத்தி தான், இதுல ரவி எதுக்கு’

‘என்னை என்ன சொல்ல சொல்றீங்க? கல்பனா சொன்னது பொய். அவ பத்தினி. இன்னொருத்தனை மனசால கூட நினைச்சு பார்க்க மாட்டா. நான் தான் தேவிடியா. போதுமா? கிளம்புங்க’

‘ஏன் கோபப்படற, நான் உன்னை ஒண்ணுமே சொல்லலையே. எனக்கு யாருன்னு தெரிஞ்சா போதும், அவ்ளோ தான்’

‘சும்மா இதையே சொல்லிட்டிருக்காதீங்க. கல்பனாவே அவனை உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்தினாலும் நீங்க அதை ஒத்துக்க மாட்டீங்க, அதுக்கு வேறேதாவது காரணம் கண்டுபிடிப்பீங்க’

‘அப்ப நான் எங்க ரிலேஷன்ஷிப் பத்தி சொன்னதை நீ நம்பலையா’

‘..’

‘அவ யார்கிட்டயாவது சாதாரணமா சிரிச்சு பேசும் போது இல்ல ஏதாவது பாட்டு முணுமுணுத்துகிட்டே இருக்கும் போது அப்படியே கொலை பண்ணிடலாமானு தோணும். உண்மை. அவ குரல், மூஞ்சி எல்லாமே எனக்கு குமட்டலாத் தான் இருக்கு. நம்பு’

‘..’

‘நாங்க ஒண்ணா இருந்தே கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகுது’

‘மேபி அதனாலத் தான்..’

‘சான்சே இல்ல.. ஆம்பளைங்க தான் அப்படி போவாங்க, லேடீஸ்லாம் வெறும் செக்ஸுக்கு அலையறவங்க கிடையாது.’

‘ஆம்பளைங்க அப்படி நினைக்கறீங்க அவ்ளோ தான்’

‘அப்டினா, ரவி கூட உனக்கு.. அதனால தான்’ என்றிவன் பேசிக்கொண்டிருக்கும் போதே நாற்காலியிலிருந்து எழுந்தவள் ‘வெளில போடா’ என்றாள்.

‘என்ன..’

‘ரவி பத்தி பேசாத, நீயா கற்பனை பண்ணி கம்பேர் பண்ணாதேனு  நாம பழக ஆரம்பிச்ச போதே உன்கிட்ட சொல்லியிருக்கேன், அப்பறமும் பலமுறை வார்ன் பண்ணிருக்கேன். எப்பப்பாரு கம்பாரிசன். கிளம்பு போ’. என்றபடி அவன் கையைப் பற்றி எழுப்பினாள்.

‘நான் ரவியை தப்பா..’

‘எதுவும் பேசாத, கிளம்பு. மணி பன்னண்டாகப் போகுது, லீவ் தான, வீட்டுக்கு போய் சாப்ட்டு தூங்கு. கல்பனா வந்தா அவ கிட்ட என்ன வேணுமோ கேட்டுத் தெரிஞ்சுக்கோ. என்ன ஆள விடு’

வாசற்படியில் திரும்பி ‘அவன் யாருன்னு மட்டும் தெரிஞ்சா..’ என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கதவை மூடினாள்.

படிகளில் ஏறி அடுத்த தளத்தில் இருக்கும் தன வீட்டை அடைந்தான். படுக்கையறையில் ஆடைகளுக்கான ஷெல்பை திறந்து அவள் உடைகளைக் கலைத்துப் போட்டுப் பார்த்தபின் மீண்டும் அடுக்கினான். முன்பிருந்ததைப் போல்தான் உள்ளது, அவளுக்குத் தெரிந்து விடாது. கைப்பையை விட்டுச் சென்றிருந்தாள், அதைத் திறந்து பார்த்தான். சில ரசீதுகள், பொட்டு பாக்கெட், இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள். அவளுடைய அலைபேசியைப் பார்த்தால் தான் உண்மை தெரிய வரும். வேவுபார்க்கும் செயலி எதையாவது அவள் அலைபேசியில் நிறுவ வேண்டும். படுக்கையில் சாய்ந்தான்.

நேற்று அவள் நிஜமாகவே அப்படிச் சொன்னாளா? அவள் வேறேதோ சொல்லி தூக்கக் கலக்கத்தில் தவறாகப் புரிந்து கொண்டேனா? முழிப்பு தட்டும் போது அழைப்பு மணி ஒலித்துக் கொண்டிருந்தது, விரைந்து சென்று கதவைத் திறந்தான். ‘சீக்கிரம் வந்துட்ட, அம்மா இல்லையா’ என்றான் உள்ளே வந்த வினய். மணியைப் பார்த்தான். ஐந்து இருபது. ‘சித்தி வீட்டுக்கு போயிருக்கா, வர நேரம் தான்’. ‘அங்க போனா அஞ்சுக்குள்ள வந்துடுவாளே’ என்றபடி வினய் தன்னறைக்கு செல்ல அவன் மீண்டும் படுக்கையறைக்குள் சென்றான். எப்ப வருவ? வேர் ஆர் யு? இரண்டு முறை தட்டச்சு செய்து அழித்தான். அழைக்கலாமா? வேண்டாம், வருவாள். வருவாளா? துணி எதையும் எடுத்துச் செல்லவில்லை. வருவாள். காத்திருக்கத் தொடங்கினான்.

அழைப்புமணி ஒலிக்க ‘நான் போறேன்’ என்று கூறிக்கொண்டே வேகமாகச் சென்று கதவைத் திறந்தான். கல்பனா. எதுவும் பேசாமல் உள்ளே வந்தவள், உடை மாற்றி முகம் கழுவிய பின், ‘சீக்கிரம் வந்துட்டீங்களா’ என்று கேட்டாள். தலையசைத்தான். ‘காத்தால சாம்பார் இருக்கு, அப்பளம் பொறிக்கறேன்’ என்றதற்கும் தலையசைப்பு தான். எப்படி இயல்பாக இருக்கிறாள்? நேற்றிரவு  கனவு தான் கண்டேனா? அதற்காகவா கலாவிடம் பேசி அவளிடமும் பிரச்சினையை உருவாக்கினேன். அலைபேசியை எடுத்தான். அவன் அனுப்பியிருந்த ஏழு குறுஞ் செய்திகளையும் அவள் பார்த்திருந்ததற்கு அடையாளமாக நீல கோடுகள்.எதற்கும் பதிலில்லை. இன்னொரு முறை ஸாரியை அனுப்பினான்.

வினய்யுடன் கல்பனா பேசிக்கொண்டிருந்தாள். எப்போதும் போல் எரிச்சல், அவள் தலையை சுவரில் முட்டி பற்களை உடைக்க வேண்டும். அறையிலிருந்து வெளியே வந்தவன், ‘ரம்யா எப்படியிருக்கா’ என்று கேட்டான். ‘பரவாயில்லை’ என்று விட்டு மீண்டும் வினய்யுடன் பேச்சு. கன்னம் சதை போட ஆரம்பித்து விட்டது, இடுப்பும், பிருஷ்டங்களும் பெரிதாகிக் கொண்டிருக்கின்றன, சில வருடங்களில் அவள் அம்மாவைப் போல் ஆகிவிடுவாள். இவளை எவன்…? அன்றைய நாளிதழை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குத் திரும்பினான். கலாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ‘ஐ திங்க் இட் வாஸ் எ ட்ரீம்’ என்று அவளுக்கு குறுஞ்செய்தி தட்டச்சு செய்து அனுப்பாமல் அழித்தான்.

இரவுணவின் போதும் கல்பனா எப்போதும் போல்தான் இருந்தாள். வழக்கத்தை விடக் குறைவாக உண்டவன், அவள் அலைபேசியில் ரம்யா இப்போது எப்படியிருக்கிறாள் என்று விசாரிப்பதைப் பார்த்தபடி அறைக்குள் வந்தான். எட்டேகால். அவள் உள்ளே வர ஒன்பதாகி விடும். இன்று வந்து என்ன சொல்லப் போகிறாள். நேற்று நடந்தது கனவு தானா? ஒரு வேளை, நிஜத்தில் நடந்ததாக நான் நம்பும் பிரமையா? கனவை விட அது மோசம். இன்றிரவு  என்ன நடக்கப் போகிறது. அவள் ஏதாவது சொல்கிறாளா என்று பார்க்க முழித்திருக்கலாமா அல்லது தூங்கி விடலாமா? உறங்கி கனவு வந்தால்? முழித்திருந்து அவள் நிஜமாகவே பேசினால்? அல்லது அவள் பேசுவது போல் தோன்ற ஆரம்பித்தால்?

கண்களை இறுக்க மூடி படுத்தான். வலது செவியில் மெல்லிய குரல். ‘நான் ஒருத்தர.’, மற்றொரு காதில் ‘நான் ஸ்ரீனிவாசனோட’. நாசித்துவார சுவசிப்பில் ‘உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்’. முகத்தில் படர்ந்த மூச்சுக்காற்று மெல்ல மெல்ல உஷ்ணமடைந்து உடலெங்கும் பரவியது. ‘நான்..’, ‘ரவி..’, ‘ஆனந்த்..’, ‘விநாயகம்..’. அறை முழுதும் கல்பனாக்களின் மூச்சொலிகள். கண்ணைத் திறந்தால் சுற்றி அவள் தான் இருப்பாள், ரவியுடன், ஆனந்துடன். கொதிக்க ஆரம்பித்த படுக்கையில் அவனுடைய உடல் துள்ளத் துவங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.