சிதலை செரிக்கும் பெருவாழ்வு – நரேன் [சீர்ஷேந்து முகோபாத்யாயவின் ‘கறையான்’ நாவலை முன்வைத்து]          

ரடங்குகளின் இரண்டாம் நிலை பாதிப்புகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் துவங்கியிருக்கிறது. முக்கியமாக மென்பொருள் துறையின் அலுவல் முறைமைகளில் ஒரு இறுகிய தன்மையை உணரத் தொடங்கியிருக்கின்றனர். வீட்டிலிருந்து பணிபுரியும் நாட்களில் பணி நேரம் முடிவின்றி விரிந்து கிடந்தது. வீட்டை விட்டு வெளியேற முடியாத ஒருவனுக்கு வேலை நேரம் எனத் தனியாக ஒன்றிருக்க வேண்டிய அவசியம் என்ன என்ற எண்ணம் மேலாளர்களின் மனதில் பதிந்தது.  உறங்கும் நேரம் தவிர கணினி அணைத்து வைக்கப்படாமல் இருப்பது இயல்பாகிப் போனது. முதலாளித்துவ ரேகைகள் புதிய வேர்களைப் போல மீண்டும் படரத் தொடங்கின. அலுவலகங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இந்நாட்களில், ஊரடங்கிற்கு முன்னதான உறவைத் தொடர முடியாமல் மேலாளர்கள் தொழிலாளர்களும் தவிக்கின்றனர். ஓய்வு விடுப்பு வேண்டுமெனக் கேட்க நினைக்கும் ஒருவன் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறான். மூன்று வருடங்களாகக் காய்ச்சல், கொரோனா தவிர வேறெதற்கும் விடுப்பு கோராத ஒருவனுக்கு இப்போது இது புதிய சங்கடமாக இருக்கிறது. முதலாளிக்கு இப்படி விடுப்பு கேட்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

ஒவ்வொரு படிநிலையிலும் ஊழியர்களுக்குள் இது பிணக்குகளை உருவாக்கத் துவங்கியிருக்கிறது. கடந்த வருடம் முழுவதும், ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் 44% ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்குத் தாவிக் கொண்டிருந்தார்கள். கொரோனாவிலிருந்து மீண்டுகொண்டிருக்கும் உலக பொருளாதாரத்தில், புதிய வேலை வாய்ப்புகள் எதுவும் வந்திராத நேரத்தில் இந்தளவிற்குப் பணி தாவல் சாத்தியமானது எப்படி என்று புரியாமல் தவித்தார்கள் மனித வளத் துறையினர். அதற்கு நேர்மாறாகக் கடந்த ஆறு மாதங்களாக அத்தனை பெரிய நிறுவனங்களிலும் வேலையிழப்பு காட்சிகள் மேடையேறிக் கொண்டிருக்கின்றன. நிறுவனங்கள் மீண்டும் பழையபடி நிலைகொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இத்தள்ளாட்டத்திற்குத் தனி மனிதனின் வாழ்விற்கும் அவனின் பணி நேரத்திற்குமான இடைவெளி குறைந்ததே காரணம் என மனிதவள மேம்பாட்டு ஆர்வலர்கள் அவதானிக்கின்றனர். இது பன்னெடுங்காலமாக இருந்து வரும் சிடுக்குகள்தான் என்றாலும் நீண்ட கால வீடடங்கிற்குப் பிறகு, அலுவலகம், பணி நேரம், சுய விருப்ப நேரங்கள் என மீண்டும் பிரித்து இயங்க முடியாமல் சிக்கிக்கொண்டிருப்பதே காரணம். ஒருவனின் இருப்பை முழுமையாக அவனுடைய பணி, அலுவலகப் பதவி மட்டுமே நிர்மாணிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ‘ஒரு குடும்பத்தினர்’ என்று உரக்க அழைக்கின்றனர். இதிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பும் இல்லை வெளியேறினால் வாழ்வும் இல்லை என்ற நம்பிக்கையை விதைக்கின்றனர். முதல் மாதம் ஊதியம் வாங்கும் ஒருவன் கையோடு எதிர்கால ஓய்வூதியக் கணக்கைத் துவங்குவானெனில் அறுபது வயது வரையிலான தன் வாழ்விற்கு வேலியிடுகிறான் என்றுதானே அர்த்தம்!

ஆனால் இது புதிய பிரச்சினை அல்லவே. தொழிற்புரட்சி காலந்தொட்டுத் தனி மனிதன் என்பவன் யார்? அவனுடைய பணி மட்டுமா? எது வரையில் தன்னுடைய சுயத்தை வாங்கும் சம்பளத்திற்குச் சமமாக வைக்கத் தலைப்படுவான்? நவீன யுகத்தில் ஒருவன் புரியும் பணி மட்டுமே அவனின் அடையாளமாகிவிடுமா? எதிர்காலத்தை நோக்கிய அச்சம் மட்டுமே ஒருவனை முழு நேர சேவகனாகக் கட்டி வைத்திருக்க முடியுமா? என்ற கேள்விகள் சமூகவியலிலும் இலக்கியத்திலும் எந்நேரமும் சுழன்று வருவன. நவீன மனிதனின் ஆகப் பெரும் சிக்கல் இது எல்லை என்றாலும் ஒருவனுக்குத் தன்னுடைய பணிச் சூழலிலிருந்தே அவனுடைய அத்தனை சிக்கல்கள் மீதான கேள்விகளும் மீண்டும் எழத் தொடங்குகிறது. சீர்ஷேந்து முகோபாத்யாயவின் “கறையான்” நாவல், சியாம் தன் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதிலிருந்து துவங்குவதும் எதேச்சையானது அல்ல.

 ஒரு மனிதன் தன்னிடம் மீண்டும் எளிமையாகத் திரும்பி வருவதற்கு அவன் தன்மீது படிந்திருக்கும் எவற்றையெல்லாம் உதிர்க்க வேண்டியிருக்கிறது என்பதை ‘கறையான்’ நாவல் விசாரணை செய்கிறது. தன் மேலதிகாரியின் வசவுச் சொல் சியாமை ஒருநாள் சட்டெனத் தொந்தரவு செய்யத் துவங்குகிறது. இதே சொல்லை தனக்குக் கீழே பணிபுரிபவர்கள் மீது பிரயோகித்தவன்தான் சியாம் என்றாலும், தன் வாழ்விலிருந்தே தான் விலகியிருக்கும் எதார்த்தம் அவனை வந்து அறைகிறது. இந்தத் திறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து, புறச்சூழல் அவன் மீது சுமத்தியிருக்கும் அத்தனை தளைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு அகவயமான ஒரு சாகசப் பயணத்தை மேற்கொள்கிறான்.

ஒற்றைக் கதாபாத்திரத்தின் மனவோட்டங்களின் ஊடாக, அவன் பால்ய காலமும், அவன் சந்திக்கும் மனிதர்களின் முரணான குணங்களும், தன்னைத்தானே கேள்விகளால் துளைக்கும் அலைக்கழிப்பும், குற்றத்தின் விளிம்பில் நிற்கும் சாகச ஆட்டங்களுமென விரியும் இச்சிறு நாவல் மனிதனின் மகத்துவமும் மகிழ்வும் இருப்பின் அர்த்தமும் எதில் அடங்கியிருக்கிறது என்ற தேடலை நிகழ்த்துகிறது. தஸ்தயேவ்ஸ்கியின் பல பாத்திரங்களை நினைவுபடுத்துகிறது சியாமின் பாத்திர வார்ப்பு. சீர்ஷேந்து ஒரு பேட்டியில் தன்னை மிகவும் பாதித்த உலக நாவலாசிரியர்களில் முதன்மையானவராக தஸ்தயேவ்ஸ்கியை குறிப்பிடுகிறார். சியாமின் அகப் போராட்டம் மட்டுமல்லாமல் இந்நாவலில் மனிதர்கள் சந்திக்கும் சிக்கல்களும் அவற்றுக்கான விடுதலையும் தஸ்தயேவ்ஸ்கியின் தரிசனத்தை மிகவும் ஒத்திருக்கிறது.

ஒரு மனிதனின் அகச் சுழலில் சிக்கி ஆழ ஆழ சென்றுகொண்டேயிருப்பதால் மிகச் சிறிய அடர்த்தியான இந்நாவல் பெரும் கேள்விப்பரப்பை விரித்துவிடுகிறது. இந்நாவல் முதன்மையாக மனிதன் விரும்பி சுமக்கும் அடையாளங்களின் மீதான ஒரு எள்ளலை முன்வைக்கிறது. இரண்டாவதாக ஒரு மனிதன் முழுமையையும் களங்கமற்ற மகத்துவத்தையும் எய்துவதற்கு அவன் எதை நோக்கித் திரும்பவேண்டியிருக்கிறது என்பதைப் பரிசீலிக்கிறது.

பணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட சியாம் சமூகம் வரையறுத்திருக்கும் அத்தனையிலிருந்தும் விடுதலை பெற்றவனாகத் தன்னைப் பாவித்துக்கொள்கிறான். நவீன மனதின் ஆகப் பெரும் சிக்கலே அவனுக்கு அளிக்கப்பெறும் அடையாளங்கள்தான். நவீன சமூகம் ஒருவனைக் கையாள்வதற்கு அதுவே சிறந்த வழி என்றும் எண்ணுகிறது. தனக்களிக்கப்பெறும் பதாகைகளைக் கேள்வி கேட்டுக் கிழித்து வெளியேறுபவனைப் பித்தனாக்கி ஒதுக்கி வைக்கிறது. சியாமின் நீண்ட தாடியும் மேலே போர்த்தியிருக்கும் சால்வையும் கூட அவனைப் பொதுஇடத்தில் மதிப்பு குறைந்தவனாகக் காட்டுகிறது. அத்தனை ஆசைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு ‘ஒன்றும்’ செய்யாதவனாக இருக்கவே விழைகிறான். பணம் தீர்ந்துகொண்டே வந்தாலும் கவலையற்றவனாகக் கல்கத்தா நகரில் சஞ்சரிக்கிறான். எந்த உறவுக்குள்ளும், எந்த செயலுக்குள்ளும், எந்த வெற்றிக்குள்ளுமே கூட ஆழச் செல்ல விழையாதவனாக மாறுகிறான். சீராகத் தலை கோதி, விரைப்பாக உடையணிந்து, ஊர் கண்களை வெல்லும் ஆவலுடன் திரிந்த சியாமைத் தன் மனக்கண்ணால் வேறொருவனாக வியந்து பார்க்கிறான் இன்றைய சியாம். கத்தியால் தன் கையை மெல்லக் கீறி இரத்தம் வெளிப்படும் தருணத்தில் நிறுத்தி விடுகிறான்.

மரணம் நோக்கிய பயணம் என்றாலும் அவனால் செல்லக்கூடிய தூரம் இந்தச் சிறிய கோடுதான். தன் காதலி இதூ வை போனில் அழைத்து தன்னைத் திருமணம் செய்யும் ஆசை அவளிடம் இப்போது இருக்கிறதா என்று தெரிந்துகொள்கிறான். அவளின் ஆர்வம் தெரியும் கணத்தில் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறான். தன் அறையில் இதூ அவனை நெருங்கி வருகையில் அவன் நிகழ்த்தும் ஆட்டம் மிக அபாயகரமானது. ஆனால் ஆண்-பெண் உறவில் ஊமையாக என்றென்றும் நிகழும் சூதாட்டம் அது. அச்சிறிய அறைக்குள் அவளை அலைக்கழிக்கிறான். அபாயகரமான தீயைக் கிளர்த்தி ஒன்றும் அறியாதவனாக அதை அணைத்தும் வைக்கிறான். அவன் வாழ்விலிருந்து இதூவை அங்கே அனுப்பி வைப்பதிலிருந்து தன் கடந்த வாழ்வின் காமக் கசடுகளைத் தீயால் கழுவிய இனிமையை அவன் அடைந்திருக்கக் கூடும்.

இல்லை இல்லையென்று ஒவ்வொன்றாகத் துறந்து செல்லும் ஒருவனிடம் இனிய பழைய கனவுகள் உயிர் பெற்று வருவது எவ்வளவு பாரமானது! உறவும் பொறுப்பும் சமூக கணக்குகளுமென அடையாளம் தாங்கிய வட்டத்திற்குள் சியாமால் மீண்டும் செல்ல முடியாது. தனி மனிதன் மீது இச்சமூகம் சுமத்தும் அத்தனை எதிர்பார்ப்புகளும் நுகர்வு சார்ந்ததே. ஒருவன் படிப்படியாக எதையெல்லாம் கைக்கொள்கிறான் என்பதைப் பொறுத்தே அவன் வெற்றி எண்ணப்படுகிறது. குடும்பம், மனைவி, குழந்தைகள், வீடு, வாகனம் என ஒரு நெறியை உருவாக்கி மனிதனைத் துரத்தி ஓடச் செய்கிறது. அவன் ஓடும் தூரம் பொறுத்து அவனிடமிருந்து அவன் அந்நியமாகத் தொடங்குகிறான். அதேபோல, சமூகத்தை வெல்ல நினைக்கும் ஒருவனும் மிகத் தீவிரமாக நுகர்வைக் கையாள்கிறான். அநாதிக் காலம் முதல் ஒரு ஆணின் முதல் நுகர்வு வெறி பெண்களின் மீதே. சியாமும் சந்தித்திராத பெண்கள் இல்லை. உண்மையில் இந்நாவலில் வரும் இதர சில ஆண் கதாபாத்திரங்களும் மூர்க்கமாகப் பெண்களை வசியம் செய்வதும் கைவிடுவதும் தன்னியல்பாகக் கொண்டிருக்கிறார்கள். “எங்கிருந்து இத்தனை பெண்கள் வந்தார்கள்? எனக்கு இருபது வயதாக இருக்கிறபோது சாலையிலே, வீட்டு ஜன்னல்களிலே, மொட்டை மாடிகளிலே, பஸ், டிராம்களிலே, காலண்டர் படங்களிலே, சினிமா போஸ்டர்களிலே, இத்தனை பெண்கள் இல்லை, மிஸ்டர்” என்கிறான் மித்ரா.

ஒரு ஆணின் பார்வைக்குப் பெண்களின் முகங்களை எந்நேரமும் காட்டிக்கொண்டிருக்கிறது நவீன யுகம். சூசகமாக அவன் வெற்றி கொள்ள வேண்டியது எது என்பதை உந்திச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. நுகர்வு வெறி பிடித்த ஆணின் முதல் இலக்கு  விளம்பரங்களில், சினிமாக்களில் காணும் பெண்களைத் தனதாக்கிக்கொள்வதுதான் என்று திரியத் துவங்குகிறான். அல்லது அதை அடைய முடியாத ஏக்கத்தில் தன் வாழ்நாட்களைக் கட்டமைத்துக்கொள்கிறான். ஆண்களின் இப்பெருமூச்சு அனுதினமும் பெண் சமூகத்தைச் சிதைத்துக்கொண்டிருக்கிறது. தான் ஒரு காமுகன் என்ற அடையாளத்திலிருந்து சியாம் வெளியேற முயன்றுகொண்டேயிருக்கிறான். இறுதியாக லீலாவிடமிருந்து தூய அன்பைப் பெற வேண்டிக் காத்திருக்கிறான். தன் பெயருக்கேற்றார் போல அவனைத் தன் சிறிய விளையாட்டொன்றிற்கு அவனைப் பந்தயமாக்குகிறாள் லீலா.

நூறு வருட உறக்கத்திலிருந்து விழித்தவனாகத் தன்னை உணர்கிறான் சியாம். சுற்றியிருக்கும் எதையும் அவனால் அடையாளம் காண முடியவில்லை. இப்பூமி சூனியமாகிப் போக வேண்டும் என்று விழைகிறான். சூனியத்திலிருந்து மீண்டும் புதிய உலகம் பிறக்கும், அவ்வுலகம் அவ்வளவு அழகாக இருக்கும் என்று கற்பனை செய்கிறான். சிறிது சிறிதாக அவனைச் சுற்றிலும் உலகம் மறையத் துவங்குகிறது. கிட்டத்தட்ட ‘கரமசோவின்…’ இவான் நிலைக்குச் செல்கிறான் சியாம். தான் கொலை செய்துவிட்டிருக்கக்கூடும் என்ற குற்றவுணர்ச்சியில் சித்தம் பிறழும் விளிம்பிற்குச் செல்கிறான். அவனின் தீராத கேள்விகள், இவானைப் போலவே சியாமின் கண் முன்னாலும் ஒரு உருவத்தை நிறுத்தி உரையாட வைக்கிறது.

எதிர்பார்ப்புகளின் கொந்தளிப்பை அநேக சந்தர்ப்பங்களில் பகடியாகவே கையாள்கிறார் ஆசிரியர். கிரிக்கெட்டில் தொன்னூற்றி எட்டு ரன்களைக் குவித்திருக்கும் நிலையில் அன்றைய ஆட்டம் முடிந்துவிடுகிறது. மீண்டும் ஆட்டம் அடுத்த நாள் தொடங்கும். அவன் அன்றிரவு எவ்வகையான மனநிலையில் இருப்பான் என்று கற்பனை செய்கிறான் சியாம். அவனுக்குப் பதிலாக இன்றிரவே அந்த இரண்டு ரன்களைத் தானே ஓடி வாங்கிக் கொடுத்துவிட முடியாதா என்று தவிக்கிறான். நாளை விடியலுக்குப் பின்னர் அந்த ரன்களை அவன் எடுத்துவிடுவான் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இப்படியொரு இரவு அவனுக்குத் தேவைதானா? எத்தனை ஆயிரம் எதிர்பார்ப்புகள் அவன் மீது இரவின் இருளையும் மீறிய அடர்த்தியுடன் கூடியிருக்கும்? அந்த விளையாட்டு வீரனுக்கு நேர்மாறாக சியாம் சந்திக்கும் ஒருவன் தான் தினமும் உணவருந்தும் ஹோட்டலின் மேனேஜர். ஒரு சிறிய மேஜையின் முன்னால் பணிவு நிறைந்த பாவத்துடன் உட்கார்ந்திருப்பது மட்டும்தான் அவனின் நிரந்தர தோற்றம். நாளுக்கு நாள் அவனின் இந்த அமைதியும் அசைவின்மையும் வளர்ந்துகொண்டே போகிறது. இறந்து போன அப்பாவின் படத்தின் அருகில் அமர்ந்திருக்கிறான். கூடிய விரைவில் தன் மகனை தன்னிடத்தில் அமர்த்திவிட்டு அவனும் ஒரு படமாக ஆகிவிடுவான் என்று எண்ணுகிறான் சியாம். வாழ்விலிருந்து ஒரு படமாக ஆகிவிடும் தொலைவு அவ்வளவு சிறியதுதான். ஆனால் இரண்டு ரன்களுக்காக இரவைக் கிழித்துவெளிப்பட நினைக்கும் ஒரு ஆட்டக்காரனுக்கு அவ்விரவின் நீளம் ஒரு வாழ்வின் தூரம்.

அத்தனையும் நன்மைக்கே, நன்மை மட்டுமே நடக்கும் என்று சதா தன்னைத் தேற்றிக்கொண்டிருக்கும் ஒருவனின் மனதில் அதே அளவிற்கு இருண்மையும் குடியிருக்கும் என்கிறார்கள் நவீன மனோதத்துவ நிபுணர்கள். அதீத நேர்மறை எண்ணம் கொண்டவன், தன் எதிர்மறை பயங்களை வலிந்து மறைத்துக்கொள்பவனே. காலை விழித்ததும் இந்த நாள் நன்றாக இருக்கும் என்று தோன்றுவதுகூட ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொள்வதுதான். இந்த எதிர்காலத்தைப் பற்றிய கவலைதான் தனி மனிதனின் சுதந்திர உணர்விற்கு இடையூறு என்று சியாம் கருதுகிறான். கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகளும் ஒரு மனிதன் கைவிடவேண்டியதே. சியாமின் பாத்திரமும் அவன் தன் வாழ்வைக் கையாள நினைக்கும் முறைகளினாலும் இந்நாவல் முழுதும் எடையற்ற சோகம் ஒன்றைத் தாங்கியிருக்கிறது. அத்தனை நம்பிக்கைகளையும் கைவிடுவதே தன் மீதான அடையாளங்களையும் துறப்பது என்ற முடிவிற்கு சியாம் வருவது இருண்மையான தீர்வை நோக்கிச் செல்வது போல் தோன்றினாலும் மனித இனம் தன் பூரணத்துவத்திற்கு திரும்புவது எவ்வளவு எளிமையான ஒன்று என்பதைத் தன் தரிசனமாக வைக்கிறார் சீர்ஷேந்து.

“கறையான்” சியாமின் மனவோட்டத்தின் மேல் விரியும் நாவல் என்றாலும் அவன் கடந்து வரும் பாத்திரங்கள் அவனுக்கு வாழ்வின் பல்வேறு திசைநோக்குகளைத் திறந்து காண்பித்தவண்ணம் இருக்கின்றன. அவன் அன்றாடம் சந்தித்துப் பேசும் மித்ரா, தன்னைக் கைவிட்டுப் போன காதலியிடம் தான் வேறு யாரையும் திருமணம் செய்துகொள்வதில்லை என்று செய்த சத்தியத்திற்கு இன்றும் கட்டுப்பட்டுத் தனித்து வாழ்பவர். இது முட்டாள்தனம் என்று அவர் அறியாமல் இல்லை. ஆனால் முட்டாள்தனத்தில் இருக்கும் நிம்மதியை தன் பால்ய கால நம்பிக்கை ஒன்றை உதாரணமாகச் சொல்கிறார். மிக அசாதாரணமாகப் பல்வேறு பார்வைகளைத் திறந்து வைக்கும் பகுதி அது. சியாமின் அவநம்பிக்கை குவியல்களுக்கு நேர் எதிராகப் பெரும் பலத்துடன் நிற்கும் உதாரணம் அது. பால்ய வயதில் மித்ராவின் கண்களுக்குத் தாகூர் கடவுளாகத் தெரிகிறார். கடவுள்களை விடுத்து தாகூரிடம் தினமும் பிரார்த்தனை செய்கிறான். தேவை எழும்போதெல்லாம் தாகூர் தன் முன்னே வந்து நிற்பாரென நினைக்கிறான். அந்த நம்பிக்கை இருந்த வரையில் அவன் தன் வாழ்வை முழுமையாக வாழ்ந்ததாக நினைக்கிறான். உண்மையில் தாகூரை அடைந்தவன் அவன்தான். அவன் வாழ்விலிருந்து தாகூர் விலகியதிலிருந்து அவனின் குழந்தைப் பருவமும் விலகியது, அவனுடைய பரிசுத்தமும் விலகியது.

“கரமசோவ் சகோதரர்கள்” நாவலில் மனித மனங்களை இருளிலிருந்து விடுவிக்கும் தூய இருப்பாக அல்யூஷா வருகிறான். ஆனால் அவனைக் காட்டிலும் தூய மனம் கொண்டவர்களாகக் குழந்தைகளை முன்னிறுத்துகிறார் தஸ்தயேவ்ஸ்கி. குழந்தைகள் மட்டுமே மனிதனுக்கு அவனுடைய மகத்துவத்தை நினைவுறுத்த முடியும். இவான், அல்யூஷாவிடம் நிகழ்த்தும் நீண்ட விவாதத்தில், இவ்வுலகம் குழந்தைகள் மீது ஏவும் வன்முறைகளை மட்டுமே அடுக்கி மனிதம் எவ்வாறு திரும்பி வர இயலா குழியை நோக்கி வீழ்ந்துகொண்டிருக்கிறது என்கிறான். ‘இல்யூஷா’வின் மரணம் மூலமாக அல்யூஷாவின் தலைமையில் அத்தனை சிறுவர்களும் ஒன்றுகூடி பின் தன் வாழ்வை நோக்கிப் பிரிகின்றனர். ஆனால் பிரியும் முன் ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறார்கள். நாம் ஒவ்வொரு வருடமும் இல்யூஷாவின் நினைவால் ஒன்று கூட வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் இல்யூஷாவை நினைவில் கொள்ள வேண்டும். இல்யூஷாவின் நினைவு மட்டுமே அவர்கள் பெரியவர்களாகி சமூகத்தில் ஆளுக்கொரு அடையாளங்களை ஏற்றுக்கொண்டு, உலகியல் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தொலைந்துபோனாலும், மனிதத்தின் சிறு அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள உதவும். இல்யூஷாவின் தூய மனம் அவர்கள் அனைவரின் மனதில் சிறு துண்டாகவாவது எஞ்சியிருக்கும். தஸ்தயேவ்ஸ்கி முன் வைக்கும், மனித இனம் உய்த்திருப்பதற்கான ஒரு வழி, குழந்தைமையிடம் தன்னை மீண்டும் ஒப்புக்கொடுப்பதுதான்.

சீர்ஷேந்துவின் முதல் நாவல் ‘கறையான்’ (குண்போகா – 1967). தனிமைப்படுத்தப்பட்ட உணர்வைச் சுமக்கும் மனிதனை தன் முதல் நாவலில் அணுகியிருக்கிறார். பின்னாட்களில் குழந்தைகளுக்கான கதைகளை எழுதிப் புகழ்பெற்றார். அவர் தன் கவனத்தைக் குழந்தைகளின் மீது திருப்பியது இயல்பானதென்றே தோன்றுகிறது. தாராஷங்கர், பிபூதிபூஷன் பந்தோபாத்யாய ஆகியோருக்குப் பிறகான பருவத்தின் வங்காள படைப்பாளிகளில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார் சீர்ஷேந்து. சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மொழியாக்கம் ஒரு சாதனை என்றே கொள்ளவேண்டும். வேறெந்த மொழிகளிலும் வாசிக்கக் கிடைக்காத வங்காள நாவல்களைத் தமிழுக்கு அளித்திருக்கும் அருஞ்செயல்காரர். நவீன வாழ்வின் நெருக்கடிகளையும் அதில் சிக்கிச் சிதைவுறும் மனிதர்களையும் மிக நவீனமான மொழியிலேயே கையாண்டிருக்கிறார். அவரின் மொழிபெயர்ப்பு ஆக்கங்களில் இந்நாவல் தனித்திருப்பதற்கு இதுவொரு முக்கிய காரணம்.

நவீன உலகம் யதார்த்த மனிதர்கள் மீது குவிக்கும் அழுத்தமும் அதற்கேற்றார் போல வளைந்து கொடுத்தும், தாளாமல் உடைந்தும் போகும் மனிதர்களையும் படைத்திருக்கிறார் சீர்ஷேந்து. அவர்களினூடாக சியாம், எதையும் வெல்லும் எண்ணம் இன்றி எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிக்கும் நிலையிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்கிறான். சூனியத்திலிருந்து இந்தப் பூமியை மீண்டும் உயிர்ப்பிப்பதன் கனவில் இருக்கிறான். புதுவுலகின் பரிசுத்தமும் எழிலும் நிறைந்த புதுவுலகின் கனவுகளில் திளைத்திருக்கிறான். அவனின் முடிவும்கூட எங்கோ ஒரு கனவைப் போல நிகழ்கிறது. ஒரு கனவிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மற்றொரு கனவில் நுழைவதைப் போல மண் மீது முகத்தைப் பதிக்கிறான். தன்னையூற்றி தன்னில் நிறைந்தவனாகிறான் சியாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.