அவளுடைய காதலன்


னக்கு அறிமுகமான ஒருவர், ஒருமுறை என்னிடம் கூறிய கதை இது:

மாஸ்கோவில், நான் மாணவனாக இருந்தபோது, ஒரு பெண் வசித்துவந்த அறைக்கு அருகாமையில் வசிக்க நேர்ந்தது. அந்தப் பெண் அவப்பெயர் பெற்ற பெண்களில் ஒருத்தியாக இருந்தாள். அவள் போலந்தைச் சேர்ந்தவள், அவளைத் தெரசா என்று பெயர் சொல்லி அழைத்தார்கள். அவள் நல்ல உயரம்; அடர் மாநிறத்தில் கட்டுமஸ்தான உடல்: கருத்துச் செழித்த புருவங்கள்; உளியால் செதுக்கியது போன்ற முரட்டுத்தனமான பெரிய முகம் – அவளுடைய கருத்த விழிகளின் காந்த ஒளிக்கீற்று, அவளுடைய தடித்த தாழ்ந்த குரல், காரோட்டி போன்ற நடை, மீன் விற்பவளுக்குரிய திடகாத்திரமான தசை வலிமை – இதெல்லாம் எனக்குப் பயங்கரக் கவர்ச்சியாக இருந்தது. நான் முதல் மாடியில் தங்கியிருந்தேன். எனது அறைக்கு எதிரே அவளுடைய சிறிய அறை இருந்தது. அவள் வீட்டிலிருந்தாள் என்று எனக்குத் தெரிந்தால் நான் என்னுடைய அறைக்கதவை ஒருபோதும் திறந்து வைத்ததில்லை. ஆனால் இது அரிதாகவே நிகழ்ந்தது.  சிலநேரங்களில் அவளை நான் படிக்கட்டிலோ, முற்றத்திலோ சந்திக்க நேரிட்டது. அப்போதெல்லாம் அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள், அந்த முறுவலிப்பு வஞ்சகமாகவும் வெறுக்கக் கூடியதாகவும் இருந்ததாக எனக்குத் தெரிந்தது. அவ்வப்போது, அவள் குடித்துவிட்டு, கலங்கிய கண்களுடனும், கலைந்த கேசத்துடனும், குறிப்பான வெறுப்புமிழும் சிரிப்புடனும் வருவதைப் பார்த்தேன். அத்தகைய நேரங்களில் அவள் என்னிடம் பேசுவாள்.

“எப்படி இருக்கிறீங்க? மாணவரே?”  அவளுடைய மூடச் சிரிப்பு, அவள் மீது எனக்கிருந்த வெறுப்பை மேலும் தீவிரப்படுத்தும். அத்தகைய சந்திப்புக்களையும் முகமன்களையும் தவிர்ப்பதற்காகவே நான் என்னுடைய இருப்பிடத்தை மாற்றியிருக்க வேண்டும் என்று விரும்பியிருக்க வேண்டும்; ஆனால் என்னுடைய சிறிய அறை நேர்த்தியான ஒன்றாக இருந்தது, அந்த அறையிலிருந்த சன்னல் வழியே ஒரு விரிந்த காட்சியைக் காண முடிந்தது, கீழே வீதி எப்போதும் மிகவும் அமைதியாக இருந்தது, எனவே நான் பொறுத்துக்கொண்டேன்.

ஒருநாள் காலை, அன்றைக்கு வகுப்புக்குச் செல்லாமலிருக்க ஏதாவது சாக்குப்போக்கைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டே, நான் எனது படுக்கையில் புரண்டுகொண்டிருந்தேன். அப்போது கதவு திறந்தது, தெரசாவின் அந்தத் தாழ்ந்த அருவருப்பூட்டும் குரல் எனது வாசலில் எதிரொலித்தது.

“நல்லா இருக்கீங்களா, மாணவரே!”    

“உங்களுக்கு என்ன வேண்டும்?” நான் கேட்டேன். அவளுடைய முகம் குழப்பமாகவும் கெஞ்சுவதாகவும் இருந்தது … அது அவளுடைய முகம் வழக்கத்துக்கு மிகவும் மாறானதாக இருந்தது. 

“சார்! எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும், செய்வீர்களா?”

நான் எனக்குள்ளேயே யோசித்துக்கொண்டு அமைதியாக இருந்தேன்.

“கருணையுள்ள, தைரியமான பையன் நீங்கள்!”

“நான் வீட்டுக்குக் கடிதம் ஒன்று எழுத வேண்டும், அதுதான்!” என்றாள்; அவளுடைய குரல் கெஞ்சுவதாகவும், மென்மையாகவும், மிரட்சியானதாகவும் இருந்தது.

“பிசாசு உன்னை விழுங்கட்டும்!” என்று நினைத்துக் கொண்டேன்; ஆனால் நான் குதித்தெழுந்து, எனது மேசையில் அமர்ந்தேன், ஒரு தாளை எடுத்துக்கொண்டு, கூறினேன்:

“வாங்க, இங்கு வந்து உட்கார்ந்து சொல்லுங்க!”

அவள் வந்து ஒரு நாற்காலியில் மிகவும் எச்சரிக்கையாக அமர்ந்தாள்; என்னை ஒரு குற்ற உணர்வுடன் பார்த்தாள்.

“சரி, சொல்லுங்க, யாருக்கு எழுத வேண்டும்?”

“போல்ஸ்லாவ் கஷ்புத், வார்ஸா சாலை, ஸ்வியெப்ட்ஜியானா…”  

“சரி, மேலே சொல்லுங்க!”

அன்புள்ள போல்ஸ் – என் இனியவரே — என்னுடைய விசுவாசமான காதலரே .. உங்களை அன்னை மாதா பாதுகாக்கட்டும்! உங்களுக்குத் தங்கமான மனது, இவ்வளவு நாட்களாக, சிறு சிம்னியில் வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களுடைய இந்த துயர்மிகு சிறு புறா தெரசாவுக்கு எந்தக் கடிதமும் ஏன் எழுதவில்லை?’ 

நான் உண்மையில் கிட்டத்தட்ட வெடிச் சிரிப்பைக் கொட்டியிருப்பேன். “ஒரு துயர்மிகு சிறு புறா” ஐந்தடிக்கும் மேல் உயரம் கல் போன்ற முஷ்டிகள், சரியான கனம், வாழ்க்கை பூராவும் சிம்னிக் கரியிலேயே வாழ்ந்தது போன்ற கறுத்த முகம், எப்போதாவது கழுவியிருக்குமோ என்னவோ! 

எப்படியோ என்னைச் சுதாரித்துக்கொண்டு, கேட்டேன்:

“யார் இந்த போல்ஸ்?” 

“போல்ஸா, மாணவரே!”  அவள் கூறினாள்: “அவர், போல்ஸ் – என்னுடைய காதல் இளைஞர்” பெயரைத் தவறாகக் கூறிய என் மீது கோபித்துக் கொண்டது போல இருந்தது. 

“இளைஞரா!” 

“அதில் உங்களுக்கென்ன ஆச்சரியம், சார்? ஓர் இளம் பெண்ணுக்கு ஓர் இளைஞர் இருக்க முடியாதா?” 

அவள்? ஓர் இளம் பெண்? நல்லது!

“ஆஹா, ஏன் இருக்கக் கூடாது?” நான் கூறினேன். “எல்லாமே சாத்தியம் தான். உங்க இளைஞராக அவர் எத்தனை காலமாக இருந்துவருகிறார்? ”

“ஆறு ஆண்டுகளாக”

“ஓஹோ,” என்று நினைத்துக் கொண்டேன். “நல்லது, நாம் உங்கள் கடிதத்தை எழுதுவோம்” 

அந்தப் போல்ஸின் கடிதப் போக்குவரத்து இந்தத் தெரசாவுடன் அல்லாமல் அவளை விடக் குறைந்தவளுடனாக இருந்திருந்தால், நானாகவே விரும்பி அவனிடத்தைப் பிடித்துக்கொண்டிருப்பேன் என்பதை உங்களிடம் ஒளிவு மறைவின்றிக் கூறிவிடுகிறேன். 

“உங்கள் கருணை மிகுந்த உதவிக்காக என்னுடைய இதயம் கனிந்த நன்றி, சார்” நன்றியுடன் தெரசா என்னிடம் கூறினாள். “ஒருவேளை உங்களுக்கு என்னுடைய சேவையைக் காட்ட முடியலாம், இல்லையா?”

“இல்லை, அதேநேரத்தில் நானும் என்னுடைய நன்றியை மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”

“ஒருவேளை, உங்கள் சட்டைகள் அல்லது கால்சட்டைகள் பழுதுபார்க்க வேண்டியிருக்கலாம் அல்லவா?” 

உள்ளாடையணிந்த யானை போன்ற இது என்னை அவமானத்தில் முகம் சிவக்கச் செய்தது, நான் அவளுடைய சேவை எதுவும் எனக்குத் தேவையிருக்காது எனச் சொன்னேன்.  

அவள் சென்றுவிட்டாள்.

ஓரிரண்டு வாரங்கள் கழிந்தன. அது ஒரு மாலை நேரம். நான் எனது சன்னல் அருகே அமர்ந்து, விசிலடித்துக்கொண்டு, என்னிடமிருந்து என்னையே விலக்கிக்கொள்வதற்கு உகந்த வழியொன்றைக் கண்டுபிடிப்பது பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். எனக்குச் சலிப்பாக இருந்தது; காலநிலை மோசமாக இருந்தது.  நான் வெளியே செல்ல விரும்பவில்லை, மேலும் மனச்சோர்வு காரணமாக நான் என்னைப் பற்றிய ஆய்வையும் சிந்தனையையும் மேற்கொள்ளத் தொடங்கினேன். இதுவும் கூட ஒரு மந்தமான வேலையாகவே இருந்தது, ஆனால் வேறு எதையும் செய்வதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. பின்னர் கதவு திறந்தது. கடவுள் வாழ்க! யாரோ உள்ளே வந்தார்கள்.

“ஓ, மாணவரே! உங்களுக்கு ஒன்றும் முக்கியமான வேலை இல்லையே? 

ஐயோ!, இது தெரசா.

“இல்லை. என்ன விடயம்?”

“எனக்கு இன்னொரு கடிதம் எழுத வேண்டும் என்று கேட்க வந்தேன்.”

“நல்லது! போல்ஸுக்கா?”

“இல்லை, இந்த முறை இது அவனிடமிருந்து”

“என்ன?” 

“நான் முட்டாள்! அது எனக்கல்ல, மாணவரே, மன்னியுங்கள். அது என்னுடைய நண்பருக்கு, அதாவது, ஒரு நண்பருக்கு அல்ல, ஆனால் தெரிந்தவருக்கு – ஒரு ஆண் நண்பருக்கு. அவருக்கு என்னைப் போலவே ஒரு பிரியமானவர் இருக்கிறார். அது அப்படித்தான். இந்தத் தெரசாவுக்காக ஒரு கடிதம் எழுதித் தருவீர்களா சார்?”   

நான் அவளைப் பார்த்தேன் – அவளுடைய முகம் கலவரமாகியது, அவளுடைய விரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. முதலில் நான் குழம்பிப் போனேன், பின்னர் அது என்னவாக இருந்தது என்பதை ஊகித்தேன். 

“இங்க பாருங்க அம்மா” எந்தப் போல்ஸுகளும் இல்லை, தெரசாக்களும் இல்லை, நீங்கள் என்னிடம் பொய்யாகச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் கள்ளத்தனமாக என்னிடம் இனிமேலும் வரவேண்டாம். உங்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் எந்த விருப்பமும் எனக்கு இல்லை. புரிகிறதா?”

அவள் திடீரென்று பயந்துபோய் குழப்பமடைந்தவளாக ஆனாள்; இடம் மாறாமலே அவள் காலை மாற்றிக் காலை வைத்துக்கொண்டு நின்றாள், அவள் ஏதோ சொல்ல விரும்பியதாகவும் சொல்ல முடியவில்லை என்பது போலவும் வேடிக்கையாக உளறினாள். என்ன நடக்கப் போகிறது  என்று காத்திருந்தேன்.  என்னை நேர்மையான பாதையிலிருந்து விலகிச் செல்வதற்கு இழுக்க விரும்புகிறாள் என்று சந்தேகிப்பதில் ஒரு பெரிய தவறு செய்துவிட்டிருந்தேன் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அது உண்மையில் மிகவும் வேறுபட்ட ஒன்று என்பது நன்றாகத் தெரிந்தது. 

“மாணவரே!” அவள் தொடங்கினாள், திடீரென்று கையை ஆட்டிக்கொண்டு, கதவை நோக்கித் திரும்பி, வெளியேறிவிட்டாள். நான் மிகவும் மனம் வெறுத்த நிலையில் அப்படியே இருந்தேன். அவளுடைய கதவு படீரென்று சாத்தப்பட்டது, அந்த மோசமான விலைமகள் மிகவும் கோபமடைந்திருந்தாள்… நான் அதை நினைத்துப் பார்த்தேன்… அவள் விரும்பிய ஒவ்வொன்றையும் எழுதித் தருவதற்கு, அவளை இங்கு அழைத்துவர, அவளிடம் செல்லத் தீர்மானித்தேன். 

நான் அவளுடைய குடியிருப்புக்குச் சென்றேன். சுற்றிலும் பார்த்தேன். அவள் மேசையில் முழங்கைகள் மீது சாய்ந்து அமர்ந்திருந்தாள், அவளது தலை அவளது கரங்களில் தஞ்சம் அடைந்திருந்தது. 

“நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றேன்.

இப்போது, எனது கதையில் இந்த இடத்துக்கு வரும்போதெல்லாம், நான் எப்போதும் மிகவும் அருவருப்பாகவும் முட்டாள்தனமாகவும் உணர்கிறேன். சரி, சரி.

“நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றேன்.

அவள் இருக்கையிலிருந்து பாய்ந்து எழுந்து, எரிக்கும் கண்களுடன் என்னை நோக்கி வந்தாள், அவளுடைய கைகளை என்னுடைய தோள்களில் வைத்து, முணுமுணுக்கத் தொடங்கினாள், அல்லது அவளுக்கே உரிய தாழ்ந்த குரலில் முனகத் தொடங்கினாள்:

“இங்கே பாருங்க! இது இப்படித்தான். போல்ஸ் என்ற ஒருவர் இல்லவே இல்லை. தெரசாவும் கூட இல்லைதான். ஆனால் அதனால் உங்களுக்கென்ன? தாளில் பேனாவைக் கொண்டு எழுதுவது உங்களுக்கென்ன கடினமான வேலையா? கேட்கிறேன்?  நீங்களும் தான் ஒரு சிறிய அழகான முடிகொண்ட பையன்! யாருமே இல்லை, போல்ஸும் இல்லை, தெரசாவும் இல்லை. நான் மட்டும்தான் இருக்கிறேன். அதோ அங்கே இருக்கிறது, அது உங்களுக்குக் கூட மிகவும் நல்லது செய்யலாம்!”

“என்னை மன்னித்துவிடுங்கள்!” நான் கூறினேன், அத்தகைய வரவேற்பு என்னைத் திகைப்பில் செயலிழக்கச் செய்தது. “இதெல்லாம் என்ன? போல்ஸ் என்று ஒருவர் இல்லையென்று நீங்கள் கூறுகிறீர்கள்” 

“இல்லை. அது அப்படித்தான்.”

“அப்படியானால் தெரசாவும் இல்லையா?” 

“தெரசா இல்லையா? நான் தான் தெரசா.”

என்னால் ஒன்றுமே புரிந்துகொள்ள முடியவில்லை. அவளை உற்றுப் பார்த்தேன். யாருக்குப் புத்தி கெட்டுப்போய்விட்டது, எனக்கா, அவளுக்கா என்று கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். ஆனால் அவள் திரும்பவும் மேசைக்குச் சென்று, எதையோ தேடி, எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தாள், அவமதிக்கப்பட்ட தொனியில் கூறினாள்:

போல்ஸுக்கு எழுதியது உங்களுக்கு அவ்வளவு கடினமாக இருந்திருந்தால், இதோ நீங்க எழுதின கடிதம், எடுத்துக்கொள்ளுங்கள்! எனக்கு எழுதுவதற்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள்”

அவளது கையில் நான் போல்ஸுக்கு எழுதிய கடிதம் இருந்ததைப் பார்த்தேன். ச்சை!

“கேளுங்கள், தெரசா! இதற்கெல்லாம் என்ன பொருள்? நான் ஏற்கெனவே எழுதித்தந்துவிட்ட பிறகு, ஏன் அடுத்தவரிடம் கொடுத்து எழுதவேண்டும். நீங்க அதை அனுப்பவில்லையா?”

“எங்கே அனுப்புவது?”

“ஏன்? போல்ஸுக்குத்தான்” 

“அப்படி ஒரு ஆளே இல்லை.”

என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. தூ என்று துப்பிவிட்டு அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுவதைத் தவிர எனக்குச் செய்வதற்கு வேறொன்றும் இருக்கவில்லை.  பின்னர் அவள் விளக்கமாகக் கூறினாள்.

“அதென்ன?” அப்போதும் அவமதிக்கப்பட்டவளாக, “அப்படி ஓர் ஆள் இல்லையென்று நான் சொல்கிறேன்.” என்று கூறிவிட்டு ஏன் அப்படி ஓர் ஆள் இருக்கக்கூடாது என்று அவளுக்கே புரியாதவளைப் போல கைகளை விரித்துக் காட்டினாள். “ஆனால் அவன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்… அப்படியானால், மற்றவர்களைப் போல நான் ஒரு மனிதப்பிறவி இல்லையா? ஆமாம், ஆமாம், எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும், இருந்தாலும் என்னால் காண முடிகிற அவனுக்கு எழுதுவதால் யாருக்கும் எந்தத் துன்பமும் இழைக்கவில்லையே?”

“மன்னியுங்கள் – யாருக்கு?”

“போல்ஸுக்குத்தான்” 

“ஆனால், போல்ஸ் தான் இல்லையே?”  

“ஐயோ, ஐயோ, அவர் இல்லையென்றால்தான் என்ன? அவன் இல்லை தான், ஆனால் அவன் இருக்க வேண்டும்! அவனுக்கு நான் எழுதுகிறேன், அது அவன் இருக்கிறான் என்பது போலத் தெரிகிறது. பிறகு, தெரசா – அதாவது நான், அவன் எனக்குப் பதில் எழுதுகிறான், பின்னர் அவனுக்கு நான் மீண்டும் எழுதுகிறேன்…”

 

ஒருவழியாக எனக்குப் புரிந்தது. நான் மிகவும் சோர்ந்துபோனேன், மிகவும் பரிதாபகரமாக உணர்ந்தேன், மிகவும் அவமானமாகவும் உணர்ந்தேன். எனக்குப் பக்கத்திலேயே, மூன்று கெஜ தூரத்தில் ஒரு மனித ஜீவன் வசித்தது, அதனிடம் அன்பாகப் பேசவும், பாசமாகப் பழகவும், கனிவுடன் நடத்தவும் இந்த உலகில் யாருமே இல்லை, அந்த மனித ஜீவன் தனக்கென்று ஒரு நண்பனைக் கண்டுபிடித்துக்கொண்டது.    

“இங்க பாருங்க! போல்ஸுக்காக, எனக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுதினீர்கள், அதை படித்துக்காட்டச் சொல்லி இன்னொருவரிடம் கொடுத்தேன்; அவர்கள் அதைப் படித்தபோது, அதை நான் கவனித்தேன், போல்ஸ் அங்கே இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டேன். மீண்டும் போல்ஸிடமிருந்து தெரசாவுக்கு – அதாவது எனக்கு – ஒரு கடிதம் எழுதித்தரும்படி உங்களிடம் கேட்டேன்.  அப்படி ஒரு கடிதத்தை எனக்கு எழுதுகிறபோது, அதை எனக்குப் படித்துக்காட்டுகிறீர்கள். போல்ஸ் அங்கு இருப்பதாக உறுதியாக நினைத்துக்கொள்கிறேன். அதைத் தொடர்ந்து வாழ்க்கை எனக்கு எளிதாகச் செல்கிறது.”

இதைக் கேட்டுவிட்டு, “இந்தப் பிசாசு உன்னை முட்டாளென்று நினைத்துக்கொண்டது” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

அப்போதிருந்து, தொடர்ந்து வாரம் இருமுறை, நான் போல்ஸுக்கு ஒரு கடிதம் எழுதினேன், அதேபோல போல்ஸிடமிருந்து தெரசாவுக்கும் ஒரு பதில் எழுதினேன்.  அந்தப் பதில்களை நான் நன்றாக எழுதினேன் … அவள், அவற்றைக் கவனித்துக் கேட்டாள், பயங்கரமாக அழுதாள், அவளுடைய தாழ்ந்த குரலில் கர்ச்சித்தாள் என்று சொல்ல வேண்டும். கற்பனையான போல்ஸிடமிருந்து உண்மையான கடிதங்கள் மூலம் அவள் கண்ணீர் விடுமளவுக்கு உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியதற்காக, பதிலுக்கு அவள் எனது காலுறைகளில், சட்டைகளில், பிற துணிகளில் பொத்தல்களைத் தைத்துத்தரத் தொடங்கினாள். அதைத் தொடர்ந்து, இந்த வரலாறு தொடங்கி, சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் ஏதோ ஒரு விடயத்துக்காக அவளைச் சிறையில் அடைத்தார்கள். இந்நேரம் அவள் இறந்திருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. 

எனக்கு இந்தக் கதையைச் சொன்னவர் அவருடைய சிகரெட்டின் சாம்பலை உதிர்த்துவிட்டு, சிந்தனையில் ஆழ்ந்தவராய் வானத்தை நோக்கிப் பார்த்துக்கொண்டே, பின்வருமாறு முடித்தார்:

நல்லது, நல்லது, ஒரு மனித ஜீவன் எந்த அளவுக்குக் கசப்பான விடயங்களை அனுபவிக்கிறதோ, அதற்கும் மேலாக வாழ்க்கையின் இனிய விடயங்களுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஒழுக்க விழுமியங்கள் என்னும் கந்தைகளைச் சுற்றிக்கொண்டுள்ள நாம், நமது சுய தேவை நிறைவின் மூட்டத்தினூடாகப் பிறரைப் பற்றிக் கருதிக்கொண்டிருக்கும் நாம், உலகத்தின் பழிச்சொல்லுக்கு அஞ்சி, இணங்கிச் சென்றுகொண்டிருக்கும் நாம், இதைப் புரிந்துகொள்வதில்லை. 

ஒட்டுமொத்த விடயமும் ஓரளவுக்கு முட்டாள்தனமானதாக – மிகவும் குரூரமாக மாறுகிறது. இழிவுற்ற வர்க்கங்கள் என்று நாம் சொல்கிறோம், ஆனால் யாரெல்லாம் இழிவுற்ற வர்க்கங்கள், எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும்? அவர்கள், முதலாவதாக, நமக்கிருக்கும் அதே எலும்புகளும், சதையும், இரத்தமும், நரம்புகளும் கொண்ட மனிதர்கள். இது நமக்குப் பல காலங்களாக ஒவ்வொரு நாளும்  சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில், இதை நாம் கேட்கிறோம் – ஒட்டுமொத்த விடயங்களும் எந்த அளவுக்கு அருவருப்பானவை என்று பிசாசுக்குத்தான் தெரியும். அல்லது நாம் உரத்த மனிதநேயப் போதனைகளால் முற்றிலுமாகச் சீர்கெட்டுப் போய்விட்டோமா? உண்மைநிலையில், நாமும் கூட இழிவுற்ற மனிதர்கள் தாம், என்னைப் பொருத்தவரை,  நமது சுய-தேவை நிறைவு, நமது உயர்வான நிலை குறித்த திடநம்பிக்கை என்னும் படுபாதாளத்திற்குள் மிகவும் ஆழமாக வீழ்ந்துவிட்டுள்ளோம் என்றே காணமுடிகிறது.  ஆனால் இது போதும், இவையெல்லாம் மலைகளைப் போல பழமையானவை – அதைப் பற்றிப் பேசுவதே அவமானம் என்னும் அளவுக்குப் பழமையானவை. உண்மைதான், மிகவும் பழமையானவை, ஆம், அப்படித்தான் இது இருக்கிறது. 


மக்சீம் கார்க்கி

தமிழில்:  நிழல்வண்ணன்

 

குறிப்புகள்

[tds_info]

மக்சீம் கார்க்கி குறித்து  அறிய  இங்கே சொடுக்கவும்

மொழிபெயர்ப்பாளர் குறித்து:

நிழல்வண்ணன் – இயற்பெயர் இராதாகிருஷ்ணன் – முதுகலை ஆங்கிலமும் சட்டமும் பயின்றவர். வழக்கறிஞர், இலக்கிய ஆர்வலர், மொழிபெயர்ப்பாளர்,.

எண்பதுகளில் வெளிவந்த மனஓசை இதழில் ஒரு சில ஆண்டுகள் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். சாகித்ய அகாடமிக்காக பஞ்சாபி இலக்கிய வரலாறு நூலை எழுத்தாளர் திரு. ப.செயப்பிரகாசத்துடன் இணைந்து மொழிபெயர்த்துள்ளார். விடியல், அலைகள், என்சிபிஎச், அடையாளம், செஞ்சோலை பதிப்பகங்களுக்காக 50 க்கும் மேற்பட்ட அரசியல், வரலாறு, பொருளாதாரம், சமூகம் தொடர்பான நூல்களை மொழிபெயர்த்துள்ளார். பல்வேறு சிற்றிதழ்களில் இவருடைய கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சட்டம் சார்ந்த மொழிபெயர்ப்புக்களைச் செய்துவருகிறார்.             

 

 நிழல்வண்ணன் ஓவியம் : சுந்தரன்

[/tds_info]


 

1 COMMENT

  1. அருமையான மொழிபெயர்ப்பு
    வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.