டிஜிரிடூ


கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் இருக்கும். கிழவனின் அந்த சொர சொர காப்புக் காய்ச்சிப்போன விரல்கள் என்மீது பட்டு. நான் இந்த இடிந்த சுவற்றில் எப்போதோ அறைந்த ஆணியின் மீது தொங்கவிடப்பட்டு. கிழவனுக்கு சிறிது காலமாக உடம்பு சுகமில்லை. இரவு முழுவதும் அவன் மூச்சுக்காற்றுக்காக திணறுவதை நன்றாக கேட்க முடிகிறது. அவ்வப்போது இருமலும் சேர்ந்து விடும்போது, இரவெல்லாம் அவன் படும்பாட்டை பார்க்க முடியவில்லையென்றாலும், கேட்கும்போதே மனது என்னமோ செய்கிறது. மனதுக்குள் என்னென்னவோ செய்ய தோன்றினாலும், அவனுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுக்கவோ இல்லை தலைகோதவோ என்னிடம் கைகளும் இல்லை கால்களும் இல்லை. அமைதியாக தொங்கிக் கொண்டு மட்டும் இருக்கிறேன். கிழவன் அவ்வப்போது சொல்லுவான், “நம்மால் இயன்றவற்றை செய்தாலே போதுமானது. அதுவே இவ்வுலகிற்கு நாம் ஆற்றும் மிகப்பெரிய செயல்.” என்னதான் இருந்தாலும் நம் இயலாமைகளின் மீது சிறிது வெளிச்சம் படும்போது கோபமும் கூச்சமும் சிறிது குற்றவுணர்வும் எழத்தான் செய்கிறது.

சிறிது தூரத்தில் இருந்து பார்த்தால், ஏற்றமும் இறக்கமுமாக நூற்றுக்கணக்கான மணல் குன்றுகள் தெரியும். காற்றின் வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பறந்து திரியும் ஆயிரக்கணக்கான மண் துகள்களுக்கு மத்தியில் இந்த ஒரு வீடு மட்டும் வேரூன்றி நிலத்தை இறுகப் பற்றியிருப்பது போல நின்று கொண்டிருப்பதைப் பார்க்கும் போது மனதில் ஏற்படும் வெளிச்சத்தை யாராலும் தவிர்க்க இயலாது.

கிழவன் எப்படி இந்த வீட்டை கண்டடைந்தான் என தெரியவில்லை. எல்லோர் பார்வையிலிருந்தும் விலகி, எல்லாருடைய சொற்களில் இருந்தும் கடந்த ஒரு இருப்பிடம். இந்தப் பாலைவனத்தில் இருக்கும் சொற்ப மனிதர்களிடத்திலிருந்தும் தள்ளி இருக்க என்ன காரணமாக இருக்கும் என்று பலமுறை நான் யோசித்ததுண்டு. ஆனால் தனிமையை விரும்புவோருக்கு காரணங்கள் தேவையில்லை தானே.

ஒரு இடிந்து போன குடிசையை போலத்தான் காட்சியளிக்கும் அந்த வீடு. உண்மையும் அதுதான். எப்போதோ பின்னப்பட்ட ஓலைகள் சருகுகளாகி உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும். சருகுகளின் வெற்றிடத்தை நிரப்ப பழைய வேட்டித்துண்டுகளும் சிறு சாக்குப் பைகளும் கட்டப்பட்டிருக்கும். எப்போது வேண்டுமானாலும் காற்றின் கைகளில் தன் அங்கங்களை ஒப்படைக்கக் காத்திருக்கும் சுவர்கள். வீசும் காற்றுக்கு ஈடு கொடுத்து இந்தச் சுவர்கள் இன்னும் யாரைக் காப்பாற்ற நின்று கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை.

வீட்டின் நடுவே ஒரு கட்டில். இடதுமுனையின் ஓரத்தில் ஒரு தண்ணீர் பானையும் அதனருகே அழுக்குச் சட்டைகள் அடங்கிய ஒரு மரப்பெட்டியும் இருக்கும்‌. வலது முனையின் சுவர் தான் என் இருப்பிடம். வீட்டிற்கு விருந்தாளிகள் என யாரும் பெரிதாக வந்து நான் கண்டதில்லை. எப்போதாவது ஒரு பெண் சிறிது பலகாரங்கள் கொண்டு வருவாள். அவளுடன் அவள் மகனும். அவளும் வந்து ஓராண்டிற்கு மேலிருக்கும்.

வீட்டின் சுவர்களில் கீறல்களும் வெடிப்புகளும் உண்டு. வீட்டின் வாசலை விட அந்த கீறல்களும் வெடிப்புகளுமே அதிக வருகையினை கண்டிருக்கும். காற்றின் வீச்சினால் அவ்வெடிப்புகளில் படியும் மண் துகள்களை தன் வருகையினால் விடுவித்து செல்லும் பாம்புகளும் பூச்சிகளும். அந்த பாம்பு சிலநேரம் என் துளையினுள் ஊர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்லும். முதலில் எனக்கும் பயமாகத்தான் இருந்தது. பிறகு என்னமோ ஒரு பரிச்சயமான உணர்வு. சிலநேரங்களில் அதன் வருகையை நானும் என் நிழலை அதுவும் எதிர்பார்த்துக் காத்திருப்பதும் கூட நடக்கும். ஆளரவமற்ற இந்த பாலைவனத்தில் பார்க்கும் யாவும் நண்பர்கள், பேசும் யாவும் உறவினர்கள். இங்கு கள்ளிச்செடியும் பாரிஜாத மலரும் ஒன்றுதான் எல்லோருக்கும்.

பார்க்கிறவர்கள் கண்களுக்குப் புலப்படாத ஒரு பாதையில், மாலை நேரங்களில் அந்த மணல் மேடுகளின் நடுவே அவனுக்கென்று ஒரு பாதை யாரோ அமைந்திருப்பதைப் போல நடந்து கொண்டிருப்பான் கிழவன். அவன் வெகு சுலபமாக அதில் நடந்து செல்வதைப் பார்க்கையில், அவன் பாதங்கள் ஒவ்வொரு அடிக்கும் மணலுக்குள் மூழ்கி வருவதை அவன் அறிந்திருக்கிறானா என்று தான் தோன்றும். எப்படி அவனால் மட்டும் யாரும் அறிந்திராத பாதையில் தினமும் பயணிக்க முடிகிறது என்று கேட்க பலமுறை நான் நினைத்ததுண்டு. ஆனால் நடக்க தெரிந்த கால்களுக்கு எல்லா திசைகளிலும் பாதைகள் உருவாகிக் கொண்டுதானே இருக்கின்றது.

கிழவன் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்ற டிஜிரிடூ கலைஞன். ஆனால் அவன் ஒருபோதும் தன்னை ஒரு கலைஞனாக மனதில் எண்ணிக்கொண்டதில்லை. குழந்தைகள் அவனை பார்க்கும் போது டிஜிரிடூ தாத்தா என்று அழைக்க, அவன் நாளடைவில் எல்லோருக்கும் டிஜிரிடூ தாத்தாவாகவே மாறிப்போனான்.

என்னை உண்டாக்கிய கதையை கேட்டால் கிழவனுக்கு அவ்வளவு சந்தோஷம் வரும். அவன் மனது சட்டென சிறுகுழந்தையாக மாறி மீண்டும் அவன் தாத்தாவின் நினைவலைகளினுள் கொண்டு செல்லும். அவன் தாத்தாவும் ஒரு பெரிய டிஜிரிடூ கலைஞர் தான். அப்போது ஊரிலுள்ள எல்லோர் வீட்டிலும் அவர் தன் கைகளால் உண்டாக்கிய டிஜிரிடூவே இடம்பெற்றிருந்தது. இப்போதும் கூட. காலத்தினால் மங்காத கருவிகள் அவை. கிழவன், அவன் தாத்தா டிஜிரிடூ செய்வதே பெரிய கலை என்பான். இன்றும் கேட்டால், நான் உருவான கதையை சிறுவயதில் எப்படி கூறுவானோ அதேபோல் தன்மை மாறாமல் கூறுவான்.

“தாத்தா எல்லா மூங்கில்களையும் பயன்படுத்தமாட்டார். கருவிகள் செய்வதற்கென மூங்கில் மரம் நிறைந்த இடமொன்றைப் பார்த்து வைத்திருந்தார். அங்கிருந்து மட்டுமே மூங்கில் வாங்குவார். ரொம்ப தொலைவு தான். மூங்கில் எடுப்பதற்கென தனி பயணம் ஒன்று மேற்கொள்ளப்படும். ஆனாலும் தாத்தாவிற்கு அதுமட்டுமே நிறைவைத் தந்ததாக இருந்தது. பரந்து விரிந்து இந்த மண் நிலத்தில், ஒரேயொரு ஒட்டகம் மட்டும் வருடத்திற்கு ஒருமுறை ஆடி அசைந்து அந்த மூங்கில் கட்டைகளை தூக்கி வரும்‌ எங்கள் ஊருக்கு. ஒட்டகம் வெகு தொலைவில் இருக்கும்போதே ஜனம் அனைத்தும் ஒன்றுகூடி வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிடும். மற்ற இடங்களில் ஏதேதோ விழாக்கள் நடக்கும். எங்கள் ஊரில் அதுவே நாங்கள் கண்ட திருவிழா. கட்டை வந்து இறங்கியவுடன் மகிழ்வு தான் சுற்றி இருக்கும் முகமெல்லாம். எல்லோரும் அவரவர்களுக்கு வேண்டிய மூங்கில் கட்டையை எடுப்பதில் ஆவலுடன் இருந்தாலும், ஒருவர் கூட அதை சுமந்து வந்த ஒட்டகத்தை தடவிக்கொடுக்க தவறியதில்லை. சிலர் அப்போது அவர் வீட்டிலிருக்கும் திண்பண்டங்களை குழந்தைகளிடம் கொடுத்து அனுப்புவார்கள், ஒட்டகத்திற்கு கொடுக்கும்படி. ஒட்டகம் அவற்றை உண்டு ஆனந்தமாக அசைபோட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கையில் அதற்கும் ஏனோ அந்தச் சுமையை தூக்கி வந்ததில் சிறு நிம்மதி என்று தான் தோன்றும்.

அடுத்த நாள் தொடங்கும் கருவி உருவாக்கும் கலை. இரவெல்லாம் தாத்தனுக்குத் தூக்கமே இல்லாமல் சின்னக் குழந்தை போல அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பார். இத்தனை ஆண்டுகள் அதையே செய்திருந்தாலும், இந்த முறையும் சரியாகச் செய்துவிட வேண்டும் என்கிற ஒரு சிறு பதட்டம் தாத்தனின் மனதிற்குள் எப்போதும் இருக்கும். காலை குளித்துவிட்டு வெறும் வயிற்றுடன் தொடங்குவார் வேலையை. அம்மா தன் குழந்தையை காலில் சாய்த்து குளிப்பாட்டுதல் போன்றிருக்கும் தாத்தாவின் கையசைவுகள். மெல்ல மெல்ல சிறுகச் சிறுக இழைப்பார் மூங்கிலை. அவ்வப்போது ஏதோ பேசிக்கொண்டும் இருப்பார்‌ அந்த கட்டைகளுடன். அனேகமாக வலிக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன். இரண்டு நாட்களாகும் ஒரு டிஜிரிடூ உருவாக. செய்து முடித்து அதை உரியவர் கைகளில் ஒப்படைக்கும் போது ஏனோ தாத்தா தன்னில் ஒரு பகுதியை கொடுப்பது போன்றிருக்கும். கருவியுடன் கூடவே, “ரொம்ப காலத்துக்கு சத்தம் போடு சாமி. பத்திரமா பாத்துக்க” என்ற கருணை நிறைந்த வார்த்தைகளும் வரும் இணைப்பாக.

அப்படி பார்த்து பார்த்து செதுக்கிய ஒரு டிஜிரிடூவின் மீது, தாத்தா சில மணல் குன்றுகளையும் ஒரு பாலைவனச் சோலையையும் வரைந்தார் தன் கைகளினால். என்னை ஒரு மாலை நேரத்தில் அழைத்துச் சென்றார் அந்தச் சோலைக்கு. அருகில் செல்லவில்லை. தொலைவிலிருந்தே அதைப் பார்த்தவாறு அமர்ந்தோம். வானமும் மேகமும் மெல்ல மங்கத் தொடங்கியிருந்தது. சில ஒட்டகங்களும் சில மனிதர்களும் சோலையின் அருகே அமர்ந்து தண்ணீர் குடித்துவிட்டு உரையாடிக் கொண்டிருந்தனர்.”

அமைதியாகவே இருந்த தாத்தா அந்தக் காட்சியை நோக்கியவாறு கைகாட்டி, “இந்த காஞ்சு போன நிலத்தில அப்படி என்னயா இருக்கு. நடந்தா மூன்று நாள் தூரத்தில் ஒரு நல்ல இடம் இருக்கு. ஆனாலும் இவுங்கல்லா ஏன் இங்க இருக்கனும். ஏன் இப்படி கஷ்டப்படனும். இந்த கஷ்டத்திலயும் ஏதோவொரு சந்தோஷம் இருந்துட்டு தான இருக்கு. ஒரு நம்பிக்கை இருந்துட்டு தான இருக்கு. அந்தச் சோலைய மாதிரி. நம்ம செயலு அப்படித்தான் இருக்கனும். பாக்கிறவங்களுக்கு ஒரு நம்பிக்க தரனுன். கேக்கர மக்களுக்கும் கூட. இன்னொரு நாள் வாழனுங்கற ஆசைய உண்டாக்கனும் அடுத்தவனுக்குள்ள” என்று சொல்லியவாறு கிழவனின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட அந்த வண்ண ஓவியத்தால் நிரம்பிய டிஜிரிடூ தான் நான்.

கிழவனுக்குக் குடிப்பழக்கம் உண்டு. குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்ததால், இளம்வயதிலேயே தனியாக இருக்கும்படி கூறிவிட்டனர் அந்த ஊர் மக்கள். ஆனால் அவனுக்கு அது பிடித்திருந்தது. அந்நேரத்தில் கிழவனுக்கு அதுதான் தேவையாகவும் இருந்தது. சில நேரங்களில் அந்தத் தனிமையை எண்ணி வருந்தவும் செய்வான். டிஜிரிடூவை அவனை விட யாராலும் அவ்வளவு அழகாக இசைத்து விட முடியாது. காற்றில் அவ்வப்போது அந்த இசையுடன் கலந்து கிழவனும் சேர்ந்து மிதந்து வருவான். உண்மையில் கிழவனின் வாசிப்பிற்கு நானும் தவித்திருக்கிறேன். எங்களுக்குள் இருந்த யாரும் அறிந்திராத உரையாடல் அவை. சில கணங்களில் காதலர்களாக, சில கணங்களில் தோழர்களாக மாறிவிடுவோம் நானும் கிழவனும். அவன் உதடுகளில் சுருட்டு வாடை வீசுகிறதா இல்லையா என்று கவனித்தால் தெரிந்துவிடும். அவன் அன்று எவ்வாறு இருக்கிறான் என்று. அதை வைத்தே தெரிந்துவிடும் அவன் அன்று என்ன வாசிக்கப் போகிறான் என்று.

எப்போதாவது அந்த வழியாகக் கடக்கும் பயணிகளும், வெள்ளைக்காரர்களும் சிறிது நேரம் அமர்ந்து அவனது இசையில் லயித்திருப்பார்கள். சிலர் அவ்வப்போது காசு கொடுப்பார்கள். சுருட்டும், சாராயமும் வாங்க வேட்டியினுள் சுருட்டி வைத்துக்கொள்வான். பத்திரமாக. சில சமயங்களில் நள்ளிரவில், டிஜிரிடூவை தூக்கிக்கொண்டு ஏதாவதொரு மணல்குன்றில் அமர்ந்து வானத்தைப் பார்த்தவாறு வாசித்துக் கொண்டிருப்பான். ஊரில் சிலருக்கு எரிச்சலூட்டும். ஆனால், அந்த ஊரில் பல சிசுக்கள் உருவாவதற்கு அதுதான் காரணமாக இருந்திருக்கிறது.

ஒருமுறை கிழவனின் இசையைப் பற்றி அறிந்து அவனைக் காண ஒரு பெண் அவளது நண்பர்கள் சிலரை அழைத்து வந்திருந்தாள். கிழவனும் வெகுநாட்களுக்குப் பிறகு ஆட்களைக் கண்ட மகிழ்ச்சியில் வாசித்துக் காட்டினான் அவர்கள் கேட்டபோதெல்லாம். முடிவில் அந்த பெண், “என்கூட வந்தர்ரீங்களா? நான் கேட்டத மத்தவங்களும் கேக்கனும்னு ஆசையா இருக்கு. நான் உங்கள நல்லா பாத்துக்கிறேன். எனக்கு நிறைய பேர்த்த தெரியும், இந்த மியூசிக்கல் இண்டஸ்ட்ரீல. நா உங்கள‌ பெரிய மியூஸிசியன் ஆக்கி காட்றேன். இந்த உலகமே கொண்டாடற ஒரு ஆளா மாத்திக் காட்றேன். நம்ம பெரிய பெரிய கான்சேர்ட்ஸ், ஐ மீன், அந்த வார்த்த சரியா வரல.. ஆஆஆ! கச்சேரி. பெரிய கச்சேரிலாம் பண்ணலாம். என்கூட வந்துடுங்க” என கிழவனின் கைகளை பற்றிக் கொண்டாள்.

கிழவனும் சற்று யோசித்துப் பார்த்தான். அவனுக்கு மீண்டும் மீண்டும் அவனின் தாத்தாவின் குரலும் உருவமும் தான் கண்முன் தோன்றியது. அவனும் அப்பெண்ணின் கையைப் பற்றியவாறே, “இல்லமா. இவ்வளவு வெளுச்சம் நிரஞ்ச விடியல‌ தினம்தினம் இவ்வளவு பக்கத்துல இருந்து பாத்து பழகீட்டேன். வாழ்க்கையில. என்னால வேறெங்கயும் இத பாக்க முடியும்னு தோணல. இத பாக்காம அனுபவிக்காம வாழ முடியும்னு தோணல.” மன்னிப்பு கேட்டுக்கொண்டு மறுத்துவிட்டான்.

இப்போதெல்லாம் தாத்தா வாசிப்பது இல்லை. உடல்நிலை மோசமாகிக் கொண்டே இருந்தது. மூச்செடுப்பதே அவ்வப்போது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்த நேரங்களில் தனியாக இருப்பதும் அவரைக் கலங்கச்செய்தது மனதில். அந்த டிஜிரிடூ சுவற்றில் மாட்டியபடியே பல மாதங்களாக இருந்தது. ஊர்க்காரர்களும் எந்தச் சத்தமும் இல்லாததை நிம்மதி எனக் கருதி பெரிதும் பொருட்படுத்தவில்லை அவ்வமைதியை. ஆனால், நாளுக்கு நாள் தாத்தாவின் உடல்நிலை குன்றிக்கொண்டே இருந்தது. அவர் தன் வாழ்வை நினைத்துப் பார்க்கையில், அது அவர் காதலிகளைவிட, அம்மாவை விட, தன்னையும் விட பெரும்பாலும் அந்த டிஜிரிடூவால் மட்டும்தான் நிரம்பியிருந்தது. மூச்சுவிடுவது இப்போது மெல்ல மெல்லச் சிரமமாகிக் கொண்டேயிருந்தது. இறுதிக்கட்டத்தில், அவர் மனது ஆசைப்பட்டதும் துடித்தும் எல்லாம், தன் வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் உடனிருந்த அந்த டிஜிரிடூவில் எப்படியாவது ஒரேயொரு முறை அந்த நாதத்தை எழுப்பி, அதைக் கேட்டுவிட வேண்டும் என்றே. ஆனால், எழுந்து உட்காரக்கூட அவர் உடல்நிலை அவரை அனுமதிக்கவில்லை.

வானம் மெல்ல நிறம் மாற, திடீரென பெரும் காற்று ஒன்று வீசத் தொடங்கியது. மணலும், காற்றும் அந்த புயலுடன் சேர்ந்து வீச, தாத்தாவின் குடிசைச் சருகுகளும் கூரையில் கட்டப்பட்டிருந்த வேட்டித்துண்டுகளும் காற்றில் பறந்துப் போனது. அத்தனை ஆண்டு காலம் தாக்குப்பிடித்த சுவர்கள் மெல்லச் சரிந்து விடுதலைப்பெற்று, தன் நீண்ட கால பறத்தலின் ஆசையை நிறைவேற்றிக்கொண்டது. தடுப்பதற்கு ஏதுமின்றி தன்னையும் குடிசையையும் மண் துகள்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கடித்துக் கொண்டிருக்கும் போது, தாத்தாவின் காதுகளுக்கு அது கேட்கத் துவங்கியது. அந்த அளவில்லாத காற்று மாட்டப்பட்டிந்த டிஜிரிடூவில் நாதம் எழுப்பத் தொடங்கியிருந்தது. அத்தனை சத்தத்தோடு இதுவரை அவர் அதைக் கேட்டதேயில்லை. இத்தனை ஆண்டுக் காலம் தாத்தாவின் இசையைக் கேட்டு நானும் ஆசைகொண்டது போல வாசித்தது அந்த காற்று. அதை இசைக்கும்போது தாத்தா எவ்வளவு கர்வமும் பெருமிதமும் கொள்வாரோ, அதே கர்வத்துடன் அந்த டிஜிரிடூவை  இசைத்துக் கொண்டிருந்தது. தன்னை அறியாமல் கண்ணீர் சிந்தத் துடங்கினார். அதைத் தவிர வேறேதும் தெரியவில்லை அவருக்கு. அந்த நேரத்தில், வாழ்வின் அதிசயங்களில் நம்பிக்கை இல்லாதோரை எண்ணி சிறிது நகைந்து கொண்டார் மௌனமாக.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அதுவும் இவ்வளவு சத்தமாக ஏன் இந்த புயலில் தாத்தா வாசிக்கிறார் என்று அவரின் குடிசைக்கு சென்றவர்களுக்கு அங்கு தெரிந்தது, அந்த புயலின் மத்தியில், அந்த வெயிலில், கட்டிலில் படுத்திருந்த தாத்தாவும், சத்தம் எழுப்பும் டிஜிரிடூவை தாங்கி நின்ற ஒருபக்கக் குறுக்குச் சுவரும் மட்டும் தான். வேறெதுவுமே புலப்படவில்லை எவர் கண்ணிற்கும். பதற்றத்துடன் குடிசை அமைந்திருந்த இடத்திற்குச் சென்றனர் அனைவரும்.

காற்றின் பெரும் சப்தத்திற்கு இடையில் மெல்ல சலசலப்பு கேட்க, கண்களைத் திறந்து சுற்றி நின்ற எல்லோரையும் பார்த்து ஒரு முறை புன்னகைத்தார் தாத்தா. அமைதியாக மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். சில கணங்கள் கழிந்தன. அவரின் மூச்சு இப்போது நின்றுவிட்டதாகத் தெரிந்தது. புயல் ஓய்ந்து மெல்லிய காற்று மட்டும் வீசிக்கொண்டிருந்தது. மௌனம் நீண்டது. டிஜிரிடூவை ஆணியிலிருந்து விடுவித்து, கண்களை மூடி படுத்திருந்த தாத்தாவின் மீது வைத்துவிட்டு நகர தொடங்கினர்‌ அனைவரும்.

ஒரே ஒரு சிறுவன் மட்டும் தாத்தாவைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தான். அருகே சென்று அந்த மண் துகள்கள் நிரம்பிய முகத்திலிருந்த  கண்ணீர் தாரையைத் துடைத்துவிட்டு நகர்ந்தான். திடீரென தன் கையை தாத்தா ஒரு நொடி பற்றிக் கொண்டது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தபோது தாத்தாவின் உடலில் எந்த அசைவும் தென்படவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் யோசித்து, தாத்தாவின் மீதிருந்த அந்த வண்ண ஓவியம் நிறைந்த டிஜிரிடூவை கையில் எடுத்துக் கொண்டான் தன் கைகளினுள். மெல்ல, அந்த மணல் மறைத்த உதடுகளில் ஒரு புன்னகை விரிவது போல் இருந்தது…

[ads_hr hr_style=”hr-vertical-lines”]

  • ராகுல் நகுலன்

1 COMMENT

  1. அறிமுக எழுத்தாளர் ராகுல் நகுலன் சிறுகதை ‘டிஜிரிடூ’ துவக்க நிலையிலே அது என்ன என்ற எதிர்பார்ப்புடன் ஆரம்பித்து கதை அருமை.வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.