Wednesday, Aug 10, 2022
Homeபடைப்புகள்சிறுகதைகள்வாழ்வெனும்  பெருந்துயர்

வாழ்வெனும்  பெருந்துயர்


வளின்  அவிழ்ந்து  கிடந்த  கூந்தல்  இருளின்  கருமையைப்  பூசிக்  கொண்டிருந்தது. அது  இடைக்குக்  கீழாகத் தாழ்ந்து  தரையில் பரவியிருந்தது. மலையிலிருந்து  வழியும்  அருவியெனத் தலையிலிருந்து  நீண்டு  தொங்கிய  கூந்தலை  அள்ளி  முடியத்  திராணியின்றி அவள் அமர்ந்திருந்தாள்.

சூரியப்  பொன்கதிர்கள்  பட்டு  மயிரிழைகள்  பட்டு  நூலையொத்தத் தன்மையில்  மிளிர்ந்தன. அவள்  தூணை அரவணைத்து  தலையை  அதில்  சாய்த்தபடி  அமர்ந்திருந்தாள். கண்கள் இறுக  மூடிக்  கிடந்தன. உதடுகள்  உலர்ந்து  போயிருந்தன.

தொண்டைக்குழிக்குள்  விழுங்கப்பட்ட  அழுகையின்  எச்சம்  விம்மல்களாக வெடித்துத் தெறித்தது. இளம்மேனியின்  கனத்த  முலைகள் அடிக்கடி மேலெழுந்து  தணிந்தன. வெண் பாதங்களில்  அவனிட்ட  முத்தத்தின்  சூடு உறைந்து  கிடந்தது.

அது  ஜுவாலையென  உயர்ந்தெழுந்து  உச்சிவரை  படர்ந்ததில்  உடல்  நெருப்புத்  துண்டம்  போலக் கனன்றது. வென்று  வருவேன்  என்ற  அவனின்  இறுதிச்சொல்  இப்போதும்  காதுகளில்  ஒலிக்க, அவள்  துவண்டு  தரையில்  படர்ந்தாள்.

” என்  படை  நிச்சயம்  வெல்லும். தர்ம  சீலர்களான  பஞ்சபாண்டவர்கள்  நியாயத்தின்  பக்கம்  நின்று  போர்  புரிபவர்கள். அவர்கள்  பக்கம்  நானிருந்து  போர்  புரிகிறேன். என்னைப்  போன்ற  ஆயிரக்கணக்கான  போர்வீரர்கள்  வலிமை  பொருந்திய  தோள்களுடனும், துடிப்பு  மிகுந்த  இருதயங்களுடனும்  போரை  எதிர்பார்த்து  ஆவலுடன்  காத்திருக்கிறோம்.”

அவன்  பின்னிரவின்  நிலவொளியில்  அவளுடன்  கூடிக்  கலந்த  பொழுதில் உற்சாகமாகப் பிதற்றிக்  கொண்டிருந்தான். அவள்  பேசாதிருந்தாள். நிலவின்  பொழிவில்  பூமி  குளிர்ந்திருந்தது. நிலவை  ஒற்றை  மேகம்  மறைத்து  விலகியது.

இரவின்  அந்தகாரம் பூரணத்துவம்  பெற்றிருந்த  வேளையில்  புதுமணத்  தம்பதிகளான  அவர்கள்  விழித்துக்  கிடந்தனர். அவள்  கூந்தலில்  சூடியிருந்த  பூக்களின்  மிகுதியான  மணத்தில் கிறங்கிப்  போன  அவன்  மீண்டும்  அவளைத்  தன்  வசப்படுத்திக்  கொண்டான். அவளோ  தன்நிலை  மறந்திருந்தாள். வரப்போகும்  போரை  எண்ணி  மனம்  நடுக்கம்  கொண்டிருந்தது.

‘போர்  இருபக்கமும்  அழிவுகளைக்  கொண்டது. உயிர்  நழுவல்  எளிதில்  நிகழக்கூடியது. போரில்  மடிந்தவர்களை  வீரமரணம் அடைந்தவர்கள்  எனப்  பெருமையாகக்  குறிப்பிடுவர். அதை  அப்படியே  உள்ளத்திலும்  ஏற்க  முடியுமா……….? இழப்பின்  துயர்  நெஞ்சடைக்கச் செய்து  விடாதா. ஆயுதங்களைக்  கையிலேந்தி  போரிடும்  வீரர்கள்  தங்கள்  உயிரை  இன்னொரு  கையிலல்லவா  ஒப்புவித்துக்  கொடுத்து விடுகிறார்கள்.’

அவள்  கலங்கினாள். விரைந்து  அவனைத்  தழுவிக்கொண்டாள். படர்ந்த  அவன்  மார்பில்  புதைந்து  மனதை  சமாதானப்படுத்த  முனைந்தாள். 

பத்து  தினங்களுக்கு  முன் சடங்கு  சம்பிரதாயங்கள்  முடிந்து  அவன்  கையால்  மங்கலநாண்  சூட்டிக்கொண்டபோது  ஆற்றில்  துள்ளும்  மீன்  போல்  மனம்  துள்ளிற்று. படர்ந்த  மார்பும், முற்றிப்  பருத்த  மூங்கிலைப்  போன்ற  கைகளும், அகன்ற  தோள்களும்,  தடுக்கு  வயிறும், காதலும்,  காமமும்  கலந்து  சிவந்திருந்த  விழிகளும், தடித்த  உதடுகளும்  கொண்ட  அவனை, அவள்  தழுவிக்கொள்ளத் துடித்தாள்.

அவனும்  ஆட்கொள்ளத் தயாராயிருப்பவன்  போலத் துடிப்புடன்  நின்றிருந்தான்.  பொருத்தமான  ஜோடி  என்று  சுற்றிலும்  முணுமுணுப்பு  எழுந்து  அடங்கியது. தோழிகள்  கேலி  பேசினர்.

” உன்னவர்  இரவில்  நிலவைக்  கண்டதில்லையாம். சரியான  தூக்கப்  பிராணியாக  இருப்பாரென்று  எண்ணுகிறேன். நீ  அவரைத்  தூங்க விடாதே. நிலவை  அவருக்குக்  காட்டு……”

ஒரு  தோழி  காதில்  கிசுகிசுத்தாள்.  ” பெரிய  படை வீரராம். துவந்த  யுத்தம்  புரிவாராம்  இன்றைய  யுத்தத்தில்  உன்னை  வெல்லத்  துடிப்புடன்  இருப்பதாகத்  தெரிகிறது. கவனமாக  இரு….”

இன்னொருத்தி  யாரும்  கவனிக்காத  சமயத்தில்  சொல்லிவிட்டுச்  சிரித்தாள். அவளுக்கு  வெட்கத்தால்  உடல்  நடுங்கிற்று. இளங்குருத்து  உடலை  அவனுடைய  சொரசொரத்த  கைகள்  அள்ளிக்கொண்ட போதும்  அப்படித்தான்  நடுங்கிற்று.

அவள்  விழிகளில்  சுரந்த  நீர்  நிற்கவேயில்லை. இரு  நீர்  வழித்தடங்கள்  கன்னங்களில்  உருவாகியிருந்தன. அவசரத்  திருமணம்  வேண்டாமென  அவளுடைய  தாய்  எவ்வளவோ  அடித்துக்  கொண்டாள். தந்தை  கேட்கவில்லை.

கண்  நிறைந்த  மணவாளனைத்  தன்  பெண்ணுக்காகத்  தேர்ந்தெடுத்துவிட்டதில்  அவர்  மிதப்புடன்  திரிந்தார். போரைப்   பற்றிய  அச்சம்  தாய்க்குள்  உறைந்து  கிடந்தது. குருதி  பெருகியோடும்  போர்க்களமும், ஊசலாடும்  உயிர்களும்  கண்முன்னே  தோன்றி  இம்சித்தன.

போருக்குப்  பின்  திருமணத்தை  நடத்தலாமென்று  கூறிப்  பார்த்தாள். அவள்  சொல்  மதிப்பிழந்து  போனது.

” நம்  பெண்ணுக்கு  சுபவேளை  கூடி  வந்துவிட்டது. உன்னால்  அது  கெட்டழிந்து  போகவேண்டாம் ” என்று  தந்தை  ஒரு  போடு  போட்டு  அவள்  வாயை  அடைத்துவிட்டார். தாய்  ஒடுங்கிப்  போக, மகளோ  கண்களில்   கனவு  சுமந்து  நின்றிருந்தாள்.

திருமணம்  பெண்ணுக்குக்  கனவுகளைத்  தரக்கூடியது. புதுவிதமான  கனவு. சுழலும்  ரங்கராட்டினம்  போல  நாள்  முழுக்க  மனமானது  கண்ட  கனவைச்  சுற்றிச்  சுழன்று  கொண்டிருக்கும். வெளிப்புற  நிகழ்வுகளில்  கவனம்  கொள்ளாது  அது  அந்தர்முகமாகத் திரும்பி  தன்  பிரத்தியேக  நினைவுகளில்  மூழ்கியிருக்கும்.

பசியில்  ருசியும், நினைவுகளில்  கவனமும்  இருக்காது. உடல்  தக்கையாகி  அண்டவெளியில்  மிதப்பது  போலத் தோன்றும். ஆட்கொள்ளப்போகிறவனை  எண்ணி  அடிவயிறு  சிலீரிடும். அவளுக்கும்  அம்மாதிரி  உணர்வுகள்  தோன்றின.

அவள்  ஒரு  மாய  உலகில்  தன்னைச்  சிக்க  வைத்துக்கொண்டு  அதில்  சுகித்துக்  கிடந்து  வெளியேற  விருப்பமில்லாது  தன்னிலை  மறந்திருந்தாள். தாயின்  கவலை  அவளை  அணுவளவும்  பாதிக்கவில்லை. எதிர்வரப்போகும்  இன்ப  நொடிகளை  எண்ணி  அவள்  மகிழ்ந்திருந்தாள்.

வலுவான  கரங்களால்  மாலை  சூட்டிக்கொள்ள  பொன்  கழுத்து  வளைவுகளும், தோள்களும், இள  முலைகளும்  துடியாய்த்  துடித்தன. அவனுடைய  ஒரு  நுனி  விரல்  தீண்டலில்  உயிர்த்துவிட  அவள்   பெண்மை  தயாராயிருந்தது.

தன்  மேல்   படர்ந்த  மல்லிகைக்  கொடியும்  அதில்  மொட்டவிழ்ந்த  மலர்களும், அதிலுள்ள  தேன்  பருக  ரீங்காரமிட்டு  வரும்  வண்டும்  வெறும்  மாயையா, அல்லது  நனவா  என்று  அவள்  திகைத்தாள். கண்களைத்  திறந்தபடியே  கனவு  காண்பது  அவளுக்குச்  சாத்தியமாயிற்று. அன்றாட  வேலைகளில்  கவனம்  செல்லவில்லை. படுக்கையில்  விழித்தபடி  கிடந்து  நினைவுகளை   அவனிடம்  பறிகொடுக்கவே  விருப்பமாயிருந்தது.

காலை  புலர்ந்து, மதியம்  கடந்து, மாலை  மலர்ந்தபோதும்  அவள்  தன்  நினைவு  கொள்ளாது  அவன்  நினைவுகளையே  கொண்டிருந்தாள். அவள்  உடல்  எரிதழல்களைத்  தின்றது  போல  தகித்தது. குளிர்தென்றல்  மேனியில்  பட்டபோது  அவள்  நடுங்கினாள்.

தன்னவன்  அணைத்துக்கொண்டாலன்றித்  தன்  தாபம்  தணியாது என்று அவளுக்குத்  தோன்றியது. குறுகிய   இடையில்  அவன்  விரல்கள்  ஊர்வது  போன்ற  நினைவில்  அவள் துடித்தாள்.

தாய்க்கு  அவளின்  இன்பவேதனை  புரியாமலில்லை. அவளும்  பருவத்தைக்  கடந்து  வந்தவள்தானே…… இருந்தும்  மகளின்  நிலை  கண்டு  சந்தோஷிக்க  முடியாது  மனம்  கலக்கமுற்றிருந்தது. அதே  கலக்கத்துடன்  சந்தனம்  அரைத்து  மகளை, தன்  மேனியில்  பூசிக்கொள்ளச் சொன்னாள். சந்தனம்  வெம்மையைத்  தணிக்கும் என்றாள்.

மகளுக்கோ அதில்  துளியும்  விருப்பமில்லை. பழுத்த  நெருப்புப்  பழமாக  இருக்கவே  அவளுக்கு  விருப்பமாயிருந்தது. தகதகவென்று  தங்கப்பாளமாக  அவள்  ஜொலித்து  நின்றிருந்ததைப்  பார்த்த  தாய்க்கே  கண்கள்  கூசிற்று. அரைத்த  சந்தனத்தை  உருட்டி  வாழையிலையில்  வைத்து  அவளிடம்  நீட்டினாள்.

” தடவிக்கொள். உஷ்ணம்  குறையும்….”

அரை  மனதோடு  பெற்றுக்கொண்டவள், இதற்கான  அவசியமில்லை  என்று  மனதுக்குள்  முனகினாள். வீரனது  கைபட்டாலே  வெப்பம்  தரித்த  தன்னுடல்  குளிர்ந்த  நீரின்  தன்மையை  அடைந்துவிடும்  என்று  அவளுக்குத்  தெரியும். இருந்தும்  தாயின்  கோபத்துக்கு  ஆளாகாது  வயிற்றிலும், முலைகளிலும்  சந்தனத்தைப்  பூசிக்கொண்டாள்.

பூசிய  மறுகணமே  சந்தனம்  காய்ந்து  பொருக்குகளாகிப்போனது. சற்றுநேரத்தில்  உதிர்ந்தும்  போனது. கொதித்துக்கிடந்த  உடலில்  குளிர்ந்த  சந்தனத்தால்  தாக்குப்பிடிக்க  முடியவில்லை. ஆனால்   அவனின்  தொடுகையில், அந்த  ஒரு  நொடியில்  சுட்டுத்  தகித்த  உடல்  சட்டெனக் குளிர்ந்து  போனது. அவனது   அதரங்கள்  பட்ட  இடங்களிலெல்லாம்  குளிர்  ஊசி  போல்  குத்திற்று. இரவு, பகல்  வேறுபாடின்றி  அவர்கள்  கலந்து  கிடந்தனர். போர்க்களத்தில்   நின்று  போர்புரியும்  ஆவேசம்  அவனுள்.

அவள், அவனின்  முரட்டுப்பிடிக்குள்  சிக்குண்டு  திணறிப்போனாள். இருந்தும்  அது, அவளுக்குப்  பிடித்திருந்தது. வாழ்க்கை  என்ற  சொல்லுக்கு  இன்பம்  என்ற  மாற்றுச்  சொல்லை  இட்டு  நிரப்பிக்கொள்ள  அவள்  நினைத்தாள். அவள்  கண்களுக்குக்  கீழே  கருவளையமிட்டிருந்ததைக்  கண்டு  தோழிகள்  கேலி  பேசினர்.

இரு  பவுர்ணமிகள்   கடந்த  பின்னும்  அவளின்  தூக்கத்தைத்  திருடும்  கள்வன்  அவன்   என்று  சாட்டு  சாட்டினர்.  திரண்டு  நிற்கும்  மேகங்கள்  நீரைப்  பொழிந்து  மண்ணை  நனைத்து  சூட்டைத்  தணிப்பதுபோல்  அவன், அவளின்  வெப்பத்தைத்  தணித்துவிட்டான். இருந்தும்  நேரம்  காலமின்றி  இம்சிப்பதால்  அவள்  மெலிந்து  விட்டாள்  என்று  புகார்  பத்திரம்  வாசித்தனர்.

உண்மையில்  அவள்  இளைத்துதான்  போயிருந்தாள்.  விரல்கள்  மெலிந்திருந்தன. சின்ன  இடை  மேலும்  சிறுத்திருந்தது. கன்னங்கள்  ஒடுங்கியிருந்தன. ஆனால்  கண்களில்  ஒளி  கூடியிருந்தது. அவள்  முன்னைவிட  இப்போது  கூடுதல்  அழகோடு  ஜொலித்தாள்.

மெலிவு  அவளை  சோகையாக்கியிருக்கவில்லை. அமிர்தத்தை  உண்டவள்போல்  புத்துணர்ச்சியோடு  வலம்  வரச்  செய்திருந்தது. இரு  பெரும்  தாமரை  மொட்டுகள்  அவள்  மேனியில்  மலர்ந்து  அவளை  மேலும்  அழகுள்ளவளாக்கியிருந்தது.

அவள்  அருகில்  வந்தாலே  பூக்களின்  கலவையான  மணம்  அவள்மேல்  வீசிற்று. அவன்  கண்களில்  தாபம்  குறையவேயில்லை. பசித்த  வயிறு  உண்டவுடன்  அடங்கிவிடும். ஆனால்  அவனின்  காமம், நிகழ்ந்தபின்னும்  அடங்கவில்லை.

அது  அடர்ந்து  கிளைத்துக்  கொண்டேயிருந்தது. ஆற்றுப்பெருவெள்ளம்  போலப் பொங்கிப்  பிரவாகமெடுத்தது. ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றுமுறை  என்று  ஆட்டம்  தொடர்ந்து  கொண்டேயிருந்தது. ஒவ்வொரு  நிகழ்வும்  புதுப் புது  விதமானவை. வெவ்வேறு  ருசி  கொண்டவை.

பசித்துப்  புசிப்பது  சுவையானது. அலாதி  சுவையின்  மிச்சம்  மறுபடி  பசியைத்  தூண்டக்கூடியது. அவனது  பசிக்கு  அளவில்லாது  போயிற்று. அவன்  பசியில்  உழன்றான்.  பாலைவன  வெறுமையை  உணர்ந்தான். புசிப்பதைத்  தவிர  பிறிதொரு  வேலையில்லை  என்ற  முடிவுக்கு  வந்தான்.

அனுதினமும்  அவர்களது  கேளிக்கைக்கு  காமன்  துணை  புரிந்தான். அவர்களது  வீட்டின்  கதவு  உட்புறமாகத் தாழிடப்பட்டே  கிடந்தது. அவள்  அரிதாக  வெளியே  வந்தாள். நிலவின்  பொலிவை  முகத்தில்  தேக்கி  குறுநகை  செய்தாள். கடிபட்டு  சிவந்த  உதடுகளை  யாரும்  கவனித்து  விடுவார்களோ  என்று  அச்சம்  கொண்டு  அவசரமாக  வீட்டுக்குள்  நுழைந்து  தாளிட்டுக்  கொண்டாள்.

வீரன்  அவளோடு  துவந்த  யுத்தம்  புரிந்தான். போர்  வேறாயிருப்பினும்  நோக்கம்  ஒன்றே. அது  எதிரியை  வீழ்த்த  வேண்டும்  என்பதே. அவள், அவனின்  ஒரு   பார்வையில்  வீழ்ந்தாள். வாழ்க்கை  முழுவதும்  அவனுக்குத்  தன்னை  விட்டுத்தரத் தயாராயிருப்பவள்  வேறென்ன  செய்வாள்.

முகத்தை  மூடி  கண்கள்  சொருக  நின்றிருப்பவளை  அவன்  கைகளில்  ஏந்துவான். கன்னங்களில்  செல்லமாய்த்  தாளமிடுவான். முன்  நெற்றியில்  புரளும்  முடிக்கற்றைகளை  ஒரு  விரல்  கொண்டு  ஒதுக்குவான். முதுகில்  மெல்ல  கோலமிடுவான். கழுத்தில்  கூசுவான்.

இடையில்  அழுத்தமாய்க்  கிள்ளுவான். உதட்டு  வரிகளை  விரல்விட்டு  எண்ணுவான். அவள்  மெல்ல, மெல்ல  மயங்கிச்  சரிவாள். காதுமடல்கள்  சிலிர்க்கும்  வண்ணம்  பிடித்திழுப்பான்.

அவள்  முற்றிலுமாகத்  தன்னிலை  இழக்கும்போது  பதுங்கிய  புலி  பாய்வது  போல  ஆக்ரோஷமாகப்  பாய்வான். முற்றத்தின் வழியே  பார்த்துக்கொண்டிருக்கும்  நிலவு  வெட்கப்பட்டுத்  தென்னை  ஓலைகளுக்கிடையே  மறைந்து கொள்ளும்.

சுவர்க்கோழிகள்  மட்டுமே  ரீங்கரிக்கும்  இரவுகளில்  தாய்  துர்சொப்பனம்  கண்டு  அலறினாள். சிவந்த  நிற  சொப்பனங்கள்  அவளை  மேற்கொண்டு  தூங்கவிடாது  இம்சித்தன. மகளின்  வாழ்வு  நிலை  குறித்த  அச்சம்  அவளைச்  சித்தம்  கலங்க  செய்திருந்தது.

மகளின்  இரவுகள்  அலங்கரிக்கப்பட்டவையாகவும், இவளது  அச்சுறுத்தக்  கூடியவையாகவும்  இருந்தன. குருதி  பீறிடும்  களங்களை  அவள்  நித்தம்  கனவில்  கண்டாள். இதயம்  நடுநடுங்கியது. பய  உணர்வில்  உடல்   வெடவெடத்தது.

‘ பீஷ்மர், துரோணர், கர்ணன்  போன்ற  பலம்  பொருந்தியவர்களின்  படையில்  உள்ள  வீரர்கள்  எத்தனை  ஆற்றல்  மிக்கவர்களாயிருப்பார்கள். அவர்களை  எதிர்த்து   நின்று  போரிடும்  வீரர்களது  உயிருக்கு உத்திரவாதமுள்ளதா…..எவ்வளவு  சிறப்பாகப் பயிற்சி  பெற்றிருந்தாலும்  அவர்களை  வெல்லமுடியுமா…….’

சிந்தனை  தறிகெட்டு  ஓடியது. கடவுளிடம்  அவள்  ஆயிரம்  வேண்டுதல்கள்  வைத்திருந்தாள். போர்  முடிந்ததும்  வேண்டுதல்களை  நிறைவேற்றுவதாக  உறுதியளித்தாள். இருந்தும்  மனம்  சமாதானமடையாது  குழம்பித்  தவித்தது.

நாட்கள்  நெருங்க, நெருங்க  மகளுக்கும்  கலக்கம்  உண்டாகத் தொடங்கிற்று.  ஆற்றுவெள்ளம்  போல்  கரைபுரண்டோடிய  காதல்  உணர்வு  மெல்ல  வடியத் தொடங்கியது. வீரனது  காதலுணர்வோ  பஞ்சமின்றிப்  பெருகிக் கொண்டேயிருந்தது. அவன் இன்ப  வெள்ளத்தில்  நீந்தித்  திளைக்கவே  பெரிதும் விரும்பினான்.

கட்டுக்கடங்கா  இளமையின்  வேகம்  அவனைச்  செயல்  வீரனாக்கியிருந்தது. அணைபோட்டு  தடுக்க  முடியாது  பொங்கிப்  பிரவாகமெடுத்த  உணர்வு  அவனைப்  பித்தனாக்கியிருந்தது. மோகப்  பித்தில்  அவன்  தேன்  குடித்த  வண்டாகத் தலை  கிறுகிறுத்துக்  கிடந்தான்.

அவள்  கவலை  அவனைப்  பாதிக்கவேயில்லை. அவளின்  மதர்த்த  மேனியில்  கண்டடையாத  ரகசியத்தைக்  கண்டுவிடத்   துடித்து  அவன்  முன்னேறிக்  கொண்டிருந்தான். அவள்  கண்களில்  நீர்  திரையிட்டிருந்ததை  அவன்  கவனிக்கவில்லை. அவளது  பெருமூச்சு  அவன்  மார்பில்  உஷ்ணத்தைக்  கிளப்பிய  போதும்  அதைப்  பெரிதாக  எடுத்துக்கொள்ளவில்லை.

அவள்  அலங்கோலமாகக்  கிடந்தாள்.  தாய்  ஒருபுறம், மகள்  ஒருபுறம்  சுயநினைவின்றிக்  கிடந்தனர். தந்தை  நடைபிணமாகியிருந்தார். பதினைந்தாம்  நாள்  போரில்  மாவீரன்  மடிந்த  செய்தி  வந்தது. அதற்குள்  பெருந்தலைகள்  பல  சரிந்திருந்தன.

ஒவ்வொரு  நாளின்  முடிவிலும்  இன்னார்  மடிந்தார்  என்ற  செய்தி   கேட்டு  இதயம்  எகிறிக்  குதித்தது. பீஷ்மர், துரோணர், அபிமன்யு, கடோத்கஜன்  என்று  ஒவ்வொருவராக  மடிந்த  செய்தி  கேட்டபோது  வீரனின்  மனைவியான  அவள்  தைரியமாக  இருக்க படாதபாடுபட்டாள். போருக்கான  காரணத்தை  எண்ணி  மனம்  குமைந்தது.

‘உண்மையில்  வீரர்களுக்குள்  எந்தப் பகைமை  உணர்ச்சியுமில்லை. அவர்கள்  தங்களது  தலைவனின்  பகைக்காக  யுத்தம்  புரிகிறார்கள். எதிரெதிர்  நின்று  போர்புரியும்  வீரர்கள்  தங்கள்  எதிராளியின்  முகத்தை  மனதில் பதிய வைத்துக்கொள்ளும்  முன்பே  ஒருவர்  கையால்  இன்னொருவர்  மாய்ந்து  போகின்றனர்.

இருவருக்கும்  மனதில்  எந்த  வஞ்சமுமில்லை, பழைய  பகையில்லை, அவர்கள்  பங்காளியுமில்லை. எனினும்  போர்க்களத்தில்  அவர்களின்  வாள்  குருதி  பார்க்கத்  துடிக்கிறது. இது  எந்த  விதத்தில்  நியாயம்…….’

அவள் அழுது  புலம்புகிறாள்.

உன்  கணவன்  புறமுதுகிட்டு  ஓடவில்லை. நெஞ்சில்  குத்தப்பட்டுச்  சரிந்தான்  என்று  கூறப்பட்டபோது  அதில்  பெருமை  கொள்ள  அவள்  தயாராயில்லை. தலையை  விரித்துப்போட்டு  அவள்  பெரு  ஓலமிட்டு  அழுதாள். பெருஞ்சுமையாய்  கிடந்த  முலைகளில்  அறைந்து  கொண்டாள்.

வயிறு  தீப்பந்தம்  போல  எரிந்தது. கால்கள்  துவண்டன. பேச்சு, மூச்சின்றிச்  சரிந்தவளைக்  கண்டு  தாய்  அலறினாள். மரண  ஓலம்  அனைத்து  வீடுகளிலும்  கேட்டது. யாரும், யாருக்கும்  ஆறுதல்  சொல்லக்கூடிய  நிலையிலில்லை.

குடும்பத்தின்  தலைவனென்று  சொல்லிக்கொள்ள  அவ்வூரில்  சொற்ப  ஆண்களே  இருந்தனர். அவர்கள்  வயோதிகர்களாகவும்  முடவர்களாகவுமிருந்தனர். வீதிதோறும்  அழுகை  பெருத்த  இரைச்சலாகக்  கேட்டது.

வயிற்றில்  கரு  சுமந்த  கர்ப்பிணிகள்   மூர்ச்சையடைந்து  கிடந்தனர். பிள்ளைகளை  இழந்த  தாய்மார்கள்  ஒப்பாரி  வைத்து  அழுதனர். பெண்பிள்ளைகள்  எதிர்காலம்  குறித்த   அச்சத்தில்  உறைந்து  போயிருந்தனர்.

தாய்க்கும், மகளுக்கும்  அழுது  மாளவில்லை. விளக்கேற்றும்   நேரம்  கூட  மறந்து  போனது. கொட்டில்  பசுக்கள்  பசியில்  வாடின. காரணம்  புரியாது  கத்தித்  தீர்த்தன. தாய்  குமுறி  வெடித்தாள்.

” எதற்காக   இந்தப்  போர்……. யார்  கேட்டது. பசித்த  வயிறுக்கு  உணவு, மானம்  காக்க  உடுப்பு, ஒதுங்கிக்கொள்ளக் கூரை……. இதை  விடுத்து  எதை  விரும்பினோம். எவ்வித  ஆரவாரமுமின்றி  அமைதியாக  வாழ்ந்து  கொண்டிருந்த  எங்களுக்கு  இத்தகைய  அநீதி  ஏன்  இழைக்கப்படவேண்டும்? ”

மகளுக்கும்  இதே  எண்ணம்தான். அழுதழுது  இளைத்துக்  கிடந்தவளுக்கு  திரவுபதியிடம்  கேட்க  ஆயிரம்  கேள்விகள்  இருந்தன. இந்த  அழிவுகளுக்கெல்லாம்  யார்  காரணமென்று  தெரியுமா  என்று  அவளுக்கெதிரே  நின்று  கேட்கவேண்டும்.

‘ இத்தனை  உயிர்கள்  மாண்டதில்   தங்களின்  பெரும்பங்கு  உள்ளது  என்று  அழுத்திச்  சொல்லவேண்டும். அவள்  மேற்கொண்ட  சபதத்தினாலன்றோ  இவ்வளவு  உயிர்கள்  மரித்தன. அவள்  தன்  அவிழ்ந்த  கூந்தலை  அள்ளி  முடிய  ஒரு  போர்  தேவைப்பட்டது  போல்  என்  கூந்தல்  முடிய  நான்  என்ன  செய்யவேண்டும்.?

கூந்தலில்  சூடும்  பூக்கள்  கொடியில்  வாடி  உதிர்கின்றனவே.  அவைகள்  தம்  பிறவிப்பயனை  அடைய  தடையாயிருந்து  நான்  பெரும்பாவம்  செய்கிறேனே…….  எனக்கு  என்ன  கதி  மோட்சம். என்  அன்புக்  கணவனின்  உயிரைப்  பறித்த  இப்போரில்  அவன்  செய்த  தவறு  என்ன?

குடும்ப  உறவுகளுக்குள்  மூண்ட  பகைக்கு  அவன்  எவ்விதத்திலாவது  காரணமாயிருந்தானா….பகைமை  உணர்வு  துளியுமின்றி  எதிரெதிர்  அணியில்  நின்று  போர்  புரியும்  வீரர்களது  மனதில்  தோன்றும்  குரோதம்  நியாயமானதா.?

அந்தக்  குரோதத்தினால் அவர்கள் மாண்டு போவது  பெரும் பாவமல்லவா? கைம்பெண்  கோலம்  பூண்டு  என்னைப்  போன்று  கண்ணீரில்  தத்தளிக்கும்  பெண்களுக்குத்  தாங்கள் கூறப்போகும்  ஆறுதல்தான்  என்ன….?

எதிர் நின்று சாதாரண குடிமகளான நான் அரசியின் கண்கள்  பார்த்துக் கேட்க  வேண்டும்.

அவள்  புறப்பட்டுவிட்டாள். தாயும், தந்தையும் எத்தனை  தடுத்தும் கேட்கவில்லை. கேள்விகள்  மனதில்  பொங்கி  வழிந்தன. தலை கிறுகிறுத்தது. கால்கள்  தடுமாறின. இருந்தும்  உள்ளத்தில்  எழுந்த  தீர்மானத்தில்  அவள்  விறுவிறுவென நடந்து, திரவுபதியின் முன் போய் நின்றாள். எவரும்  அவளைத்  தடுக்கவில்லை. தடுக்க  வேண்டாமென்பது  திரவுபதியின் ஆணையாயிருந்திருக்கவேண்டும்.

போர் முடிந்து வெற்றி  கிட்டியிருந்தபோதும்  திரவுபதி  முகத்தில்  மலர்ச்சியில்லை. துக்கம்  உறைந்த  கண்களால்  அவள்  வீரனின்  மனைவியை  ஏறிட்டாள். அவள்  இதயத்தைக்  குத்திக்  கிழிக்கும்  அம்பெனப் புறப்பட்டு  வந்த  வீரனின்  மனைவி  ஸ்தம்பித்து  நின்றாள்.

திரவுபதியின்  ஒளி  பொருந்திய  விழிகளில்  நிழலெனப் படிந்திருந்த  சோகம்  தீயில்  உதித்தவளுடைய  திடமற்ற  மனதின்  பெருவெளியைப்  படம்பிடித்துக்  காட்டியது. அந்த  மனதில்  எழுந்த  மரணஓலம், புகைந்து  கருகிய  தம்  புதல்வர்கள்  மீதான  எண்ணற்ற  கனவுகள், அவர்தம்  வாழ்வில்  தான்  கொண்டிருந்த  பெரும்  நம்பிக்கையில்  விளைந்த  சேதம்  அனைத்தும்  சேர்ந்து  பெருந்துயரின்  உருவகமாகத் திரவுபதியை  நிற்கச் செய்திருந்ததை  அவள்  கண்ணாரக்  கண்டாள்.

ஐவரைப்  பெற்றும்  எஞ்சியவர்  எவருமிலாது அவள் அடிவயிற்றில்  கனலும்  சோகத்தைத்  தாங்க  திராணியற்றவளாய்  நின்றிருந்தது  வீரனின் மனைவியை  வாயடைக்கச் செய்தது.

விழுந்த  அடி  தன்  கருவறைத்  துளிர்களை அடியோடு  நாசம்  செய்து  விட்டதில் நிர்மூலமாகிப் போனவளாய்  திரவுபதி  துடித்துத்  தவித்துக் கொண்டிருந்ததில் கேட்க நினைத்த கேள்விகள் மனதின் அந்தரத்தில் ஆடின.

எதிரில்  ஆயுதமற்று  நின்றிருப்பவனுடன்  போர்  புரிவது  அதர்மச்  செயலென்று  வீரனின்  மனைவிக்குத்  தெரியும். அவள்  கரங்கள்  கூம்பின. தத்தம்  வேதனையில்  உழன்று  தவித்த  இரு  பெண்களும்  தாங்கவியலாது  கண்ணீர்  உகுத்தனர்.


  • ஐ.கிருத்திகா
பகிர்:
Latest comments
  • என்ன ஒரு சொல்லாடல்.. அருமையான புனைவு. வாழ்த்துகள் சகோதரி.

    • மிக்க நன்றி

  • கதை மனதை வாதை செய்கிறது.
    மொழி வாசிக்க சுகம் சேர்க்கிறது.
    வாழ்த்துகள் தோழி.

  • நன்றி

leave a comment

error: Content is protected !!