பெரும்பாலான காடுறை மனிதர்களுக்கு பாப் பேக்கருடன் நேரடிப் பழக்கமோ அறிமுகமோ இல்லாதிருந்தபோதும் அவனைப் பற்றி நன்றாகவே அறிந்திருப்பார்கள். சில வருடங்களுக்கு முன் நியூ சௌத் வேல்ஸின் மேக்வாரி நதிக்கரையோரம் ஒரு மேய்ச்சல் நிலத்தின் உரிமையாளராக இருந்தான். வளமான காலங்களில் கிடைத்த ஏராளமானப் பணத்தை குதிரைப் பந்தயங்களிலும் பந்தயக் குதிரை வளர்ப்பிலும் செலவழித்தான். சிட்னிக்கு நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டு மதுபான விடுதிகளில் காசைக் கரைத்தான். கடுமையான வறட்சிக்காலத்தில் அவனுடைய பண்ணையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் மடிந்தபோது வங்கிக்குப் பணத்தைத் திருப்ப முடியாமல் தலைமறைவானான். வங்கி அவனுடைய பண்ணையைக் கையகப்படுத்திக்கொண்டு புதியதொரு மேலாளரை பொறுப்பாளராய் நியமித்தது.
பாப் பேக்கரின் உதாரகுணமும் கொண்டாட்ட மனப்பான்மையும் பிரசித்தி பெற்றவை. குடும்பத்தைப் பற்றிய சிந்தனையற்ற சுயநலவாதி என்று அவனைச் சொல்லலாம். ஏனெனில் அவனுடைய இந்த நடவடிக்கைகளால் இறுதியில் பாதிக்கப்படுவது அவனுடைய மனைவியும் பிள்ளைகளும்தானே. அவனுடைய அந்த வள்ளன்மையின் காரணம், பிறப்பால் எழுந்த மமதையோ அல்லது எதார்த்தத்தை எதிர்கொள்ளத் திராணியற்ற கோழைத்தனமோ அல்லது இரண்டும் கலந்ததாகவோ இருக்கலாம். உடனுறைபவர்கள் சூழ்ந்துநின்று, “இவனொரு அருமையான அற்புதமான கூட்டாளி” என்று பாடக்கேட்கும்போது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கு கூட்டத்துடன் ஒருமுறையும் தனித்தனியாக ஒருமுறையும் என இருமுறை செலவு செய்யவேண்டியதாயிருக்கும்.
ஒருமுறை ஒரு இடத்தில் பணிக்காலம் முடிந்து நான் புறப்பட்டபோது நண்பர்கள் வழியனுப்புவிழாவில் பாடினார்கள், “இவனொரு அருமையான அற்புதமான கூட்டாளி” கேட்கும்போது சிலிர்ப்பூட்டுவதாகவும் கண்களைக் கசியவைப்பதாகவும் இருந்தது. ஆனால் அதே சமயம், அவர்களுக்கு கடனாகவும் அவர்கள் பொருட்டு செலவழித்தும் இழந்த என் பாதி வருமானத்தை சேமித்திருந்திருக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு அருமையான அற்புதமான கூட்டாளியாக இருப்பதற்காக நான் வீணடித்த நேரங்களை உபயோகமாகக் கழித்திருந்திருக்கவேண்டுமென்றும் தோன்றியது.
பாப் பேக்கர் எனக்கு வடமேற்கு மந்தைவழித்தடத்தின் தலைமை மந்தையோட்டியாக அறிமுகமானான். அவனுடைய குடும்பம் சிட்னிக்கு பக்கத்தில் இருந்த ஸோலாங் பண்ணைவட்டாரக் குடியிருப்பில் இருந்தது. அவன் ஆஸ்திரேலியாவின் வடக்கிலிருக்கும் கார்பென்டேரியா வளைகுடா வழியாக அண்டை நாட்டுக்கு ஒரு பெரிய மாட்டுமந்தையை ஓட்டிக்கொண்டு இரண்டு வருடப் பயணமாக செல்வதாக இருந்தான். அவனுடன் நானும் என் நண்பன் ஆண்டி மேக்குலோச்சும் செல்வதாக ஏற்பாடு. புதிய நாட்டைப் பார்க்க எங்களுக்கும் ஆர்வமாக இருந்தது.
எங்கள் தலைவன் பாப் பேக்கர், சாலையோர மதுக்கடைகளுக்கும் நகர மதுவிடுதிகளுக்கும் போவதில் பெரும் நாட்டமுடையவன் என்பது குவீன்ஸ்லாந்து எல்லையைத் தாண்டியவுடனேயே எனக்குத் தெரிந்துவிட்டது. ஆண்டிக்கு ஏற்கனவே ஒருமுறை அவனுடன் பயணித்த அனுபவமிருக்கிறது. பாபின் நடவடிக்கை சமீபத்தில்தான் இப்படி மாறியிருக்கிறது என்றான். ஆண்டிக்கு திருமதி பேக்கரைப் பற்றி நன்றாகத் தெரியும். “அவள் மிகவும் நல்ல பெண்” என்றான். “நான் கற்றுக்குட்டியாயிருந்தபோது சிலநாட்கள் அவர்களுடைய பண்ணையில் வேலைபார்த்ததனால் எனக்குத் தெரியும். அவள் தன் கணவனைப் பார்த்துப் பார்த்து கவனித்துக்கொள்வாள். ஆனால் அவள் அவன்மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தாள். இந்த முறை நான் சென்றிருந்தபோது என்னிடம் சொன்னாள், “இங்கே பார், ஆண்டி, பாப் மறுபடியும் குடிக்க ஆரம்பித்துவிட்டாரோ என்று பயப்படுகிறேன். உன்னை வேண்டிக்கொள்கிறேன், எனக்காக முடிந்தவரை அவரைக் கவனித்துக்கொள். மற்றவர்களை விடவும் உனக்கு அவரிடத்தில் செல்வாக்கு உண்டென்று தெரிகிறது. நீ ஒருபோதும் அவருடன் சேர்ந்து மதுவருந்தமாட்டாயென்று எனக்கு சத்தியம் செய்துகொடு.”
“நானும் சத்தியம் செய்தேன். என் வார்த்தையைக் காப்பாற்றிக் கொண்டுமிருக்கிறேன்.” என்றான் ஆண்டி. ஆண்டி சொன்னால் சொன்ன வாக்கைக் காப்பாற்றக்கூடியவன். பாப் எவ்வளவு கட்டாயப்படுத்தினாலும், பரிகாசம் செய்தாலும், வைதாலும் ஆண்டி அவனோடு மதுவருந்துவதே இல்லை. ஆனாலும் பாபின் நிலைமை மோசமாகிக்கொண்டே போனது. அவன் தன் குதிரையோடு எங்களை முந்திச் சென்று ஏதாவது மதுக்கடையில் குடித்தான். சில சமயங்களில் குடித்துவிட்டு அங்கேயே மட்டையாகிக் கிடந்து எங்களை விடவும் நாட்கணக்கில் பின்தங்கியிருந்தான். எங்களோடு இணைந்துவரும் நாட்களில் அவனுடைய கோபம் எங்களால் தாங்கவியலாததாக இருந்தது. கடைசியாக, எல்லைக்கு நூற்றைம்பது மைல்கள் வடக்கில் இருந்த முல்கா டவுனில் அவன் மிதமிஞ்சிய கேளிக்கைகளில் ஈடுபட்டான். எல்லாவற்றிலும் மோசமான விஷயம் என்னவெனில், அவனுக்கு அங்கிருந்த ஒரு மதுக்கடையின் பணிப்பெண்ணுடன் சகவாசம் ஏற்பட்டுவிட்டது. அந்தப்பகுதியிலிருந்த மதுவிடுதி உரிமையாளர்கள், பணமுள்ளவர்களுக்குத் தூண்டில் போடுவதற்கென்றே சில பெண்களை பணிப்பெண்களாக நியமித்திருந்தார்கள். அவன் அப்பெண்ணின் மேல் பைத்தியமாய்த் திரிந்தான். மந்தை உரிமையாளரின் இடைத்தரகனிடம் பேசி ஓரளவு பணத்தை முன்பணமாகப் பெற்று செலவுசெய்தான். வேறெங்கிருந்தோ கொஞ்சம் பணத்தை எப்படியோ திரட்டி அதையும் அப்பெண்ணுக்காக செலவழித்தான்.
நாங்கள் எங்களால் செய்யமுடிந்த எல்லாவற்றையும் செய்தோம். ஆண்டி இருமுறை அவனை மதுக்கடையிலிருந்து மீட்டு எங்கள் மந்தையோடு கொண்டுவந்து சேர்த்தான். அவன் ஒழுங்காக இருக்கிறானென்று நாங்கள் நினைத்திருந்த ஒரு இரவில் யாருமறியாமல் நழுவி மறுபடியும் அங்கே போய்விட்டான். எங்களுடன் இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள் என்றாலும் மந்தையை ஓட்டிச்செல்வது பெரும்பாடாய் இருந்தது. எல்லோரும் இணைந்து செய்யவேண்டிய வேலை அது. வழியில் பல பெரிய பண்ணைகள் இருந்தன. அதனால் எங்கள் காளைகளை மிகவும் சரியான வழித்தடத்தில் கொண்டுபோவதில் சிக்கலிருந்தது. ஒழுங்காக கவனித்து ஓட்டவில்லையென்றால் பிற பண்ணைநிலங்களில் அத்துமீறி நுழைந்து பிரச்சனை வரும். இடைத்தரகனோ, எங்கள் குழுத்தலைவன் சுயநிலைக்கு வரும்வரை மேய்ச்சல் களத்துக்கான செலவை ஏற்கமறுத்துவிட்டான். முகாமிலும், போகும் வழியிலும் புற்கள் மிகக்குறைவாகவே காணப்பட்டன. அதனால் மாடுகள் தொடர்ந்து மேய்வதற்காக நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடரவேண்டியதாயிற்று.
நிலநடுக்கமே வந்தாலும் சரி, வங்கிகள் திவாலானாலும் சரி, மந்தை எங்கும் நில்லாது சென்றுகொண்டே இருக்கவேண்டும். அதுதான் மந்தைவழித்தடத்தின் நியதி. நாங்கள் எங்கள் தலைவனுக்காக ஆங்காங்கே காத்திருக்க நேரிடுவதை அறிந்த இடைத்தரகன் எங்கள் மந்தையின் உரிமையாளரிடம் தந்தி வழி பேசி அனுமதி வாங்கி, தலைமை மந்தையோட்டியான பாப் பேக்கரை நீக்கிவிட்டு வேறு ஆளை நியமித்துவிட்டான்.
மந்தையை வெற்றிகரமாக ஓட்டிச்சென்று சேர்த்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்த ஒரு மந்தையோட்டி இப்போது எங்கள் புதிய தலைவனாகியிருந்தான். அவனுடன் அவனுடைய இரு சகோதரர்கள் இருந்தமையால் அவனுக்கு நானும் ஆண்டியும் தேவைப்படவில்லை. ஆனாலும் ஆரம்பம் முதலே நாங்கள் எங்கள் பணியைச் செய்தமையாலும் எங்களுக்கு வரவேண்டிய தொகையை இன்னும் பெறவில்லை என்பதாலும் இடைத்தரகனும் புதிய தலைவனும் கலந்துபேசி எங்களைத் தங்கள் குழுவில் தொடர அனுமதித்தனர். எங்கள் தலைவன் எங்களுக்குச் சேரவேண்டியதிலிருந்தும் கணிசமான தொகையைப் பெற்று செலவழித்திருந்தான்.
நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்திருக்கவேண்டும். ஆனால் பாருங்கள், நல்லவனோ, கெட்டவனோ, போதையிலிருப்பவனோ, நிதானத்திலிருப்பவனோ, பைத்தியமோ, முட்டாளோ… எந்த நிலையிலும் உடன் வந்த நண்பனைப் பாதியிலேயே கைவிட்டுச் செல்வது காடுறை மனிதர்களுக்குரிய குணமல்லவே. மேலும் பாப் பேக்கர் எங்கள் நண்பனும் கூட. அதனால் நாங்கள் அவனுடனேயே தங்கிவிட்டோம். நாங்கள் ஊருக்கு வெளியே ஒரு ஓடைக்கரையில் கூடாரம் அமைத்துத் தங்கி, கூடுமானவரை பாபை எங்களுடனேயே தக்கவைத்துக்கொண்டிருந்தோம். எங்களால் அதுதான் முடிந்தது.
“வீட்டுக்குத் திரும்பிப் போனால் அவன் மனைவியையோ அல்லது அவனுடைய பழைய நண்பர்களையோ எப்படி எதிர்கொள்வேன் நான்?” ஆண்டி கேட்டான். பாப் எந்தப் பெண்ணுக்காக அனைத்தையும் இழந்தானோ, அந்த மதுபானவிடுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டான். அவன் மற்ற மதுபானவிடுதிகளைச் சுற்ற ஆரம்பித்தான். எப்படியாகிலும் மதுவருந்திவிட்டு கைகலப்புகளில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்டான். அவன் பலநாட்களாகவே குளிக்கவோ சவரம் செய்யவோ இல்லை. உடல் மெலிந்து வெறித்த கண்களுடன் பார்க்கவே அச்சந்தரும் வகையிலிருந்தான்.
ஆண்டி, பக்கத்திலிருந்த காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் ஒருவரிடம் சொல்லி பாபை ஒரு இரவு முழுவதும் நிலையத்தின் காவலில் வைத்திருக்கச் செய்தான். அப்படியாவது திருந்தமாட்டானா என்னும் நப்பாசைதான். ஆனால் நிலைமை மேலும் மோசமானது. மறுநாள் காலையில் அவனை எங்கள் கூடாரத்துக்கு அழைத்துச்சென்றோம். நாங்கள் அசந்த நிமிடம் பார்த்து புதர்வெளியினுள் நழுவிச் சென்றுவிட்டான். தன் உடைகளைக் களைந்து அவற்றை நீளமாகக் கட்டி பக்கத்திலிருந்த தாழ்ந்த மரக்கிளையில் தூக்குமாட்டிக்கொள்ள இருந்தவனை சரியான நேரத்தில் கண்டுபிடித்துக் காப்பாற்றினோம்.
பாபின் தம்பி நெட் எல்லைக்கருகில் சிறிய அளவில் ஒரு ஆட்டுப்பண்ணை வைத்து நடத்திக்கொண்டு வறட்சியோடும், முயல்தொல்லையோடும், வங்கியோடும் போராடிக்கொண்டிருந்தான். எதையாவது செய்து பாபை மீட்கவேண்டும் என்று ஆண்டி எண்ணினான். எனவே நெட்டுக்கு தந்தி அடித்து நிலைமையைத் தெரிவித்தான். நெட் வந்துசேர்ந்தபோது பேக்கர் அவனை, தன்னைப் பீடிக்கவந்த சாத்தான் என்றான். சிலநேரங்களில் பேக்கரை நிலைக்குக் கொண்டுவர மூன்றுபேரும் தேவைப்பட்டோம்.
அவன் தன் இறுதிநாட்களை நெருங்கிக்கொண்டிருப்பது புரிந்தது. சில நேரங்களில் தன் மனைவியைப் பற்றியும் குழந்தையைப் பற்றியும் கனிவுடன் பேசுவான். பிறகு உடனே அவர்களைக் கரித்துக்கொட்டி சாபமிடுவான். நான், ஆண்டி, நெட் அனைவரும் சாத்தான்கள் என்று கூறி திட்டுவான். அவன் எல்லோரையும் எல்லாவற்றையும் தூற்றினான். அனைவரும் சேர்ந்து அவனை நரகக்குழிக்குள் தள்ளுவதாக ஓலமிட்டான். பைத்தியம் முற்றிப்போய் ஒருநாள் இறந்துபோனான். காடுறை வாழ்க்கையில் இப்படி குடியினால் உண்டான மோசமான சாவைப்போல ஒன்றை அதுவரை நான் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை.
ஈமச்சடங்குக்கு நெட் ஏற்பாடு செய்தான். எங்கும் கோடை வெப்பம் தகித்துக்கொண்டிருந்தது. இதுபோன்ற கோடைக்காலத்தில், இறந்தவர்களை உடனே புதைத்துவிடவேண்டும். முக்கியமாக, எங்கள் தலைவனைப் போல் குடித்து குடல் அழுகி மோசமான நிலையில் இறந்திருப்பவர்களை.
நெட், பாப் பேக்கரைச் சுற்றிக்கொண்டிருந்த பணிப்பெண் வேலைபார்த்த மதுவிடுதிக்குச் சென்று அந்த விடுதியின் உரிமையாளரை வெளியே அழைத்தான். வாக்குவாதம் நடைபெற்றது. அந்த உரிமையாளர் பெரிய ஆளாகவும் வம்புக்காரராகவும் இருந்தார். நெட் அமைதியான சுபாவத்தினன்தான். ஆனால் ஏதேனும் பிரச்சனை கண்டு வீறுகொண்டு எழுந்துவிட்டால் சாவைக் கண்டு அஞ்சத் துணியாத வகையினன். நெட் அந்த உரிமையாளரைப் போதும் போதும் என்னும் அளவுக்கு நையப்புடைத்தான். இரு காவலர்கள் வந்து ஒருவர் நெட்டையும் மற்றவர் அந்த மதுவிடுதியின் உரிமையாளரையும் பிடித்துக் கொண்டனர். நகரத்துக் காவலர்களின் செய்கை போலவே இல்லை?
அடுத்தநாள் காலை நாங்கள் மூவரும் தெற்கு நோக்கிப் புறப்பட்டோம். நெட் பேக்கரின் பண்ணையில் இரண்டு தினங்கள் தங்கிவிட்டு, வீடு நோக்கிய எங்கள் முந்நூறு மைல் பயணத்தைத் தொடரலாம் என்று முடிவுசெய்தோம். பகலில் வெயில் தகித்துக்கொண்டிருந்தது. அதனால் இரவில் பயணம் செய்ய முடிவெடுத்து நெட்டின் பண்ணையிலிருந்து மாலைநேரத்தில் புறப்பட்டோம். அவனுடைய பண்ணையின் சுற்றுவேலியின் மரக்கதவருகே நின்று எங்களை வழியனுப்பிவைத்தான். அவன் திருமதி பேக்கரிடம் தரச்சொல்லி கித்தான் துணிப்பையொன்றை ஆண்டியிடம் கொடுத்தான். அதில் பாபின் கையேட்டுப் புத்தகமும், கடிதங்களும் சில தாள்களும் இருப்பதாக ஆண்டி என்னிடம் தெரிவித்தான். நாங்கள் புழுதிபடர்ந்த பாதையில் வெகுதூரம் வந்தபின் திரும்பிப்பார்த்தபோது நெட் இன்னும் வேலிக் கதவருகிலேயே ஒற்றைச் சிற்பமாய் நின்று கொண்டிருந்தான். நெட்டுக்கு இன்னும் மணமாகவில்லை. “நெட் பாவம்” என்று ஆண்டி என்னிடம் சொன்னான்.
“திருமதி பேக்கருக்கு பாப் பேக்கருடன் திருமணமாவதற்கு முன் இவன் அவளைக் காதலித்தான். ஆனால் அவள், பொருத்தமில்லாதவனைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள், பெண்கள் பெரும்பாலும் செய்வதுதான். மேக்வாரி பண்ணையை பாபும் நெட்டும் சேர்ந்துதான் நடத்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் அண்ணனுக்குத் திருமணமானதும் நெட் அவனை விட்டு விலகி, கடவுளும் மறந்துவிட்ட இந்த பாழாய்ப்போன புதர்வெளியில் வாழத்தொடங்கிவிட்டான். சரி, இப்போது உன்னிடம் ஒரு செய்தியை சொல்லவேண்டும். ஜேக், கவனி. திருமதி பேக்கருக்கு நெட் ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். அதில் பாப் காய்ச்சல் வந்து இறந்துவிட்டதாகவும், அவனைக் காப்பாற்ற எல்லாவித முயற்சிகளும் எடுக்கப்பட்டன என்றும் அவன் அமைதியான முறையில் இறந்தான் என்றும் எழுதியுள்ளான். மேலும் அவளுக்குக் கொஞ்சம் பணமும் அனுப்பிவைத்திருக்கிறான். அது பாப் செய்த வேலைக்கான சம்பளம் என்று அவள் நினைப்பதற்காக. இப்போது நாம் ஊருக்குச் சென்றவுடன் அவளைப் போய்ப் பார்த்தாகவேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது. நான் அவளை சந்தித்தே ஆகவேண்டும். அப்போது நீ எனக்குத் துணையாக வரவேண்டும்.”
“நான் வந்தால் எல்லாம் கெட்டுவிடும்.” நான் சொன்னேன்.
“ஆனால் நீ வந்துதான் ஆகவேண்டும். நீ என் கூடவே இரு. உன் நண்பனை இப்படிப்பட்ட சிக்கலில் விட்டுவிட்டு நீ மட்டும் நழுவ விரும்பமாட்டாய் அல்லவா? நான் ஒரு நண்பனின் மரணத்தைக் குறித்த மோசமானதொரு பொய்யைச் சொல்லப்போகிறேன். இதுவரை நான் எந்தப்பெண்ணிடமும் புளுகியதே இல்லை. நீ எனக்கு ஆதரவாக நின்று என் பொய்களைப் பலப்படுத்தவேண்டும்.”
ஆண்டி இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்ததில்லை.
“திருமதி பேக்கர் நம்பும்படியாக ஒரு கதையைத் தயாரிக்க நமக்கு நிறைய நேரமிருக்கிறது.” ஆண்டி சொன்னான். அதன்பிறகு திருமதி பேக்கரைப் பற்றி நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் தலைவனின் பெயரை மட்டும் யதார்த்தமாக பேச்சுக்கிடையில் அவ்வப்போது குறிப்பிட்டோம். ஸோலாங் செல்ல ஒருநாள்தான் இருந்தது. பாபின் மரணம் குறித்து தான் தயாரித்த கட்டுக்கதையை ஆண்டி என்னிடம் சொல்ல ஆரம்பித்தான்.
“ஜேக், நான் சொல்லப்போவதை நீ கவனமாக கவனித்து ஒவ்வொரு வார்த்தையையும் நினைவில் வைத்துக்கொள். நான் சொல்லிமுடித்தபிறகு உனக்கு இதைவிடவும் நல்லதாய் வேறு கதை தோன்றினால் என்னிடம் சொல். இப்போது சொல்கிறேன், கேள். எல்லையைத் தாண்டியதுமே நம் தலைவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. தலைவலியும் முதுகுவலியும் கூடவே புறங்கழுத்தில் கடுகடுக்கும் வலியும் இருப்பதாக சொன்னான். பேதியும் ஆரம்பித்துவிட்டது. இது ஒரு பொருட்டில்லை… ஏனெனில் நான் இந்த அளவுக்கு விவரமாக எல்லா அறிகுறிகளையும் அவளிடம் சொல்லப்போவதில்லை. பாப் தன் தலைமைப் பொறுப்பில் மிகவும் சிரத்தையுடன் இருந்தான். நாங்கள் அவனுடைய சிரமத்தைக் குறைக்க மந்தைகளை வழிநடத்தும் பொறுப்பை எடுத்துக்கொண்டோம். அவன் குதிரையை ஓட்டிக்கொண்டு ஒவ்வொரு முகாமிலும் தங்கி ஓய்வெடுத்து தொடர்ந்துகொண்டிருந்தான்.
ஒருநாள் நான்…. அல்லது நீ… இருவரில் யாரோ ஒருவர் என்று வைத்துக்கொள்வோம். மந்தைவழித்தடத்தை விட்டு விலகி ஊருக்குள் சென்று மருந்து வாங்கிவந்தோம். அதனால் கொஞ்சம் குணம் தெரிந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின்னர் முல்காடவுன் பகுதிக்குமேல் அவனால் தொடரமுடியவில்லை. அங்கிருந்த ஒரு மேய்ச்சல் நில உரிமையாளர் தன்னுடைய குதிரைவண்டியில் அவனை அழைத்துக்கொண்டு நகரத்துக்குச் சென்று அங்கு ஒரு நல்ல தரமான விடுதியில் தங்கவைத்தார். அந்த விடுதியின் உரிமையாளர் பாபை நன்றாக அறிந்திருந்தார். அவர் அவனுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். அவனை நல்ல வசதியான அறையில் தங்கவைத்தார். மருத்துவருக்கு தந்தித்தகவல் கொடுத்து வரவழைத்தார். பாபின் நிலைமை மோசமாக இருப்பதைப் பார்த்து நாங்கள் நெட்டுக்குத் தகவல் கொடுத்தோம். நெட் உடனே புறப்பட்டு இரவும் பகலும் பயணித்து பாப் இறப்பதற்கு மூன்றுநாட்கள் முன்னதாக அங்கு வந்து சேர்ந்தான்.
பாபுக்கு தலைவலியும் சிலசமயங்களில் காய்ச்சலும் இருந்தாலும் அவன் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருந்தான். முடிவில் அமைதியாகவே இறந்தான். அவன் சாகுந்தருவாயில் மனைவியைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் நிறையப் பேசினான். அவளிடம் துணிவை இழந்துவிடாமல் உற்சாகத்துடன் குழந்தைகளுக்காக வாழவேண்டுமென்று சொல்லச்சொன்னான். இது எப்படியிருக்கிறது?”
அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தபோதே என் மனத்தில் ஒரு யோசனை உதயமானது. ஆண்டியிடம் கேட்டேன், “ஏன் அவளிடம் நாம் உண்மையை சொல்லிவிடக்கூடாது? இப்போதில்லாவிட்டாலும் எப்போதாவது உண்மை தெரியவரும். அவள் கணவன் ஒரு சுயநலவாதி, குடியால் அழிந்தான் என்று தெரிந்தால் ஒருவேளை.. அவள் விரைவாகவே தன்னைத் தேற்றிக்கொள்ளக்கூடும்.”
“ஜேக், உனக்குப் பெண்களைப் பற்றித் தெரியாது. அவள் அறிவுக்கூர்மையுள்ள பெண்ணாகவே இருந்தாலும்… உயிரோடிருக்கும் ஒரு பெண்ணுக்கு அளிக்கும் மரியாதையை இறந்துபோன ஒரு நண்பனுக்கும் நாம் அளிக்கவேண்டும்.”
“ஆனால் அவள் என்றாவது ஒருநாள் உண்மையைத் தெரிந்துகொள்வாள். ஏனெனில் நம் தலைவனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்.”
“அதனால்தான் உண்மையை அவளிடமிருந்து காப்பாற்ற நினைக்கிறேன். முதலில் வடக்கிலிருந்து வருபவர்களின் வாயை அடைக்கவேண்டும். ஸோலாங்கின் மதுபானவிடுதியின் உரிமையாளரை எனக்கு நன்றாகத் தெரியும். மேக்ராத் மிகவும் நல்ல மனிதர். அவர் வடக்கிலிருந்து வருபவர்களிடம் முன்கூட்டியே எச்சரித்துவிடுவார். திருமதி பேக்கருடன் அவளுடைய தங்கையொருத்தி தங்கியிருக்கிறாள். அவளிடம் ஒரு குறிப்பு கொடுத்தால் போதும், வம்புபேசும் பெண்கள் திருமதி பேக்கரை நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்வாள். மேலும் திருமதி பேக்கரின் உறவினர்கள் அனைவரும் சிட்னியில் இருப்பதால் அவளும் அங்கு சென்று வாழவே விரும்புவாள். அவளும் சிட்னியைச் சார்ந்தவள்தான். அவள் அங்கு சென்றபின் யாரும் அவளைச் சந்தித்து உண்மையை சொல்லப்போவதில்லை. அவள் சிட்னிக்குக் குடியேறுவதுதான் பாபின் கடைசி ஆசை என்று அவளிடம் சொல்லப்போகிறேன்.”
நாங்கள் புகைபிடித்தபடி யோசித்தோம். இறுதியில் ஆண்டியினுடைய யோசனைதான் நல்ல யோசனை என்ற முடிவுக்கு வந்தோம். ஆண்டி எழுந்து சென்று குதிரையின் சேணப்பையினின்று, நெட் கொடுத்திருந்த கித்தான் துணிப்பையை எடுத்துவந்தான். அது சிப்பநூலால் தைக்கப்பட்டிருந்தது. ஆண்டி தன் குறுங்கத்தியால் அதைக் கத்தரித்துப் பிரித்தான்.
“ஆண்டி, என்ன செய்கிறாய்?” நான் கேட்டேன்.
“நெட் கள்ளங்கபடமில்லாத அப்பாவி. நம் தலைவன் வைத்திருந்த தாள்களையும் கடிதங்களையும் அவன் பார்த்திருக்கமாட்டான் என்று நினைக்கிறேன். நம்மைப் பொய்யர்களெனக் காட்டிவிடக்கூடிய எதுவும் அவற்றுள் இருக்கிறதா என்று பார்க்கிறேன்.”
நெருப்பு வெளிச்சத்தில் அவன் ஒவ்வொரு தாளாக எடுத்துப் பார்த்தான். சில கடிதங்கள் திருமதி பேக்கரிடமிருந்து அவள் கணவனுக்கு வந்தவை, கூடவே அவளது புகைப்படமும் குழந்தையினுடையதும் இருந்தன. அவற்றை ஆண்டி ஒருபக்கம் வைத்தான். இன்னும் சில கடிதங்கள் பிற பெண்களிடமிருந்தும் மதுபானவிடுதியின் பணிப்பெண்களிடமிருந்தும் வந்தவை. அப்பெண்கள் திருமதி பேக்கர் வசிக்கும் தெருவில் கூட வசிக்கத் தகுதியற்றவர்கள். அவர்களுடைய புகைப்படங்கள் சிலவும் இருந்தன. வேறு யாரோ இருவருடைய மனைவிகளிடமிருந்தும் பாபுக்கு கடிதங்கள் வந்திருந்தன.
“அதிலொருவன், அவனுடைய பழைய நண்பன்!” ஆண்டி அருவருக்கும் தொணியில் சொன்னான்.
அவன் பெரும்பாலானவற்றைத் தீயில் எறிந்தான். பாபின் கையேட்டுப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களைப் பிய்த்தெடுத்தான். அவற்றில் சில குறிப்புகளும் விலாசங்களும் இருந்தன. அவற்றையும் தீயிலிட்டான். வேண்டியவற்றை மட்டும் உள்ளே வைத்து மறுபடியும் அந்த கித்தான் பையைத் தைத்தான்.
“இதுதான் வாழ்க்கை!” ஆண்டியின் பெருமூச்சு பாதியிலேயே கொட்டாவியாய் வெளிப்பட்டது.
நாங்கள் ஸோலாங்குக்கு விடியற்காலையிலேயே சென்றுவிட்டோம். குதிரைகளை மேயவிட்டுவிட்டு மேக்ராத்தின் மதுபானவிடுதிக்குப் போனோம். அடுத்து என்ன வேலை தேடுவது எங்கே போவது என்பதைப் பற்றி யோசிக்க எங்களுக்கு கொஞ்ச அவகாசம் தேவைப்பட்டது. ரோமக்கத்தரிப்புக்காலம் வரும் வரையிலும் அங்கேயே காத்திருந்து புறநகர்களில் உள்ள ரோமக்கத்தரிப்பு நிலையங்களுக்குச் செல்லலாம் என்று முடிவுசெய்தோம்.
திருமதி பேக்கரைப் போய் சந்தித்துப் பேச நாங்கள் அவசரப்படவில்லை. “நாம் மதிய உணவுக்குப் பின் போகலாம்” என்று ஆண்டி முதலில் சொன்னான். உணவுக்குப் பின் கொஞ்சம் மதுவருந்தினோம். கண்கள் சொக்க ஆரம்பித்தன. மதிய உணவாக வறுத்த மாட்டிறைச்சியும் காய்கறிகளும் மாக்களியும் உண்டிருந்தோம். எங்களுக்கு இதுபோல் பெரிய அளவில் விருந்துண்டு பழக்கமில்லையென்பதாலும் அன்றைய தினம் வானிலை மந்தமாக இருந்ததாலும் தூங்கியெழுந்து போகலாம் என்று முடிவுசெய்து தூங்கினோம். விழித்தபோது மாலைநேரமாகிவிட்டது. தேநீர் குடித்துவிட்டுப் போகலாம் என்று முடிவெடுத்தோம். “ஆனால் தேநீர் நேரத்தில் ஒருவரது வீட்டுக்குப் போவது முறையல்ல” என்றான் ஆண்டி. “எதையாவது கொறிப்பதற்காகத்தான் நாம் அங்கு வந்திருப்பதாக அவர்கள் எண்ணிவிடக்கூடும்.”
ஆனால் நாங்கள் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு சின்னப்பெண் திருமதி பேக்கரிடமிருந்து ஒரு கடிதம் கொண்டுவந்திருப்பதாக சொன்னாள். அதில் அவள் எங்களைக் காண விரும்புவதாகவும், உடனே புறப்பட்டுவந்தால் நன்றியுடையவளாக இருப்பாளென்றும் குறிப்பிட்டிருந்தாள். அது போன்ற சிறிய ஊர்களில் எந்த விஷயமும் அரைமணிநேரத்துக்குள் பரவிவிடும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
“நாம் இப்போது சூழ்நிலையை சந்தித்தே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை.” ஆண்டி சொன்னான். என்னை விடவும் அவனே அதிகம் தயங்குவதாகத் தெரிந்தது. திருமதி பேக்கர் வசித்த தெருவின் எதிர்ப்புறத்தில் மற்றொரு மதுபானவிடுதி இருந்தது. தெருவுக்குள் நுழைந்ததும் நான் சொன்னேன், “நாம் இன்னும் கொஞ்சம் மதுவருந்திவிட்டுப் போகலாமா, ஆண்டி? இன்னும் ஒன்றிரண்டு மணி நேரத்தை அங்கே கழிக்கலாம்.”
“நீ இதற்குமேல் குடிக்க முடியாது. நீயும் நம் தலைவன் போன வழியிலேயே போகப்போகிறாயா?” சட்டென்று சொன்னான்.
ஆனால் மதுபானவிடுதியின் பக்கம் சென்றதும் ஆண்டி சொன்னான், “சரி. நீ மிகவும் ஆசைப்படுகிறாய், வா, கொஞ்சமாக குடிப்போம்.”
நாங்கள் குடித்துவிட்டு, சட்டைப்பொத்தான்களை சரிசெய்துவிட்டு தெருவைக் கடந்தோம். பாதியில் ஆண்டி என் கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னான், “ஜேக், இப்போது நீ எப்படி உணர்கிறாய்?”
“ஓ.. நான் நன்றாக இருக்கிறேன்.”
“உனக்குப் புண்ணியமாகப் போகட்டும். தேவையில்லாமல் மூக்கை நுழைத்து எதையும் சொதப்பிவிடாதே.”
“நீ செய்யாமலிருந்தால்… நானும் செய்யமாட்டேன்.”
திருமதி பேக்கரின் வீடு, தோட்டத்தின் பின்புறத்தில் அட்டைப்பலகைகளால் கட்டப்பட்டிருந்தது. கதவு வழியாக உள்ளே நுழைகையில் ஆண்டி மீண்டும் என் கைகளைப் பற்றியிழுத்து காதில் கிசுகிசுத்தான், “உனக்குப் புண்ணியமாகப் போகட்டும், என் கூடவே இரு.”
“நான் உன் கூடவேதான் இருக்கிறேன். நீ அதிகமாய் குடித்துவிட்டாயென்று நினைக்கிறேன், ஆண்டி.”
நான் இதற்குமுன் திருமதி பேக்கரை எங்கள் பயணத்துக்குமுன் ஒருமுறைதான் பார்த்திருக்கிறேன் என்றாலும் நன்றாக நினைவிலிருக்கிறது, அவள் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்டவளாக இருந்தாள். தலைவனின் பயணத்துக்கென உடைகளையும் பிறபொருட்களையும் பார்த்துப் பார்த்து எடுத்துவைத்தாள். தன்னைப் பற்றிய சிந்தனையே இல்லாது எப்போதும் கணவன், குழந்தை, வீடு, குடும்பம் இவற்றைப் பற்றி சிந்திக்கும் பெண். ஆனால் இப்போது ஒரு உயிரற்ற சடலம் போல கணப்படுப்பைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவள்தான் என்பதை என்னால் முதலில் அடையாளங்கண்டுகொள்ள இயலவில்லை. ஒரு பெண்ணிடத்தில் இவ்வளவு பெரிய மாற்றத்தை நான் பார்த்ததே இல்லை. அது எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
அவளுடைய தங்கை எங்களை உள்ளே அழைத்தாள். திருமதி பேக்கரைப் பார்த்தபின் இவளைப் பார்த்தேன். அதன்பின் வேறெதிலும் பார்வை செல்லவில்லை. அவள் சிட்னியைச் சார்ந்தவள். வயது இருபத்திநான்கு அல்லது இருபத்தைந்து இருக்கலாம். நாங்கள் வழக்கமாகப் பார்க்கும், வெயிலால் கறுத்த காடுறை பெண்களைப் போலல்லாது நல்ல நிறமாக இருந்தாள். பளிச்சிடும் கண்களுடன் அழகாகவும், புத்திசாலியாகவும், பரிவு மிகுந்தவளாகவும் இருந்தாள். அவள் படித்தவளென்றும் பல சிட்னி பத்திரிகைகளில் கதைகள் எழுதியிருப்பதாகவும் ஆண்டி சொல்லியிருந்தான். அவளுடைய சிகையலங்காரமும் நகர்ப்புறத்து நாகரிக உடையும் கண்டு நாங்கள் சற்று கூச்சத்துடன் தயங்கினோம்.
“நீங்கள் இருவரும் இங்கு வந்தது மிகவும் நல்லது. நீங்கள் ஊருக்குள் வந்துவிட்டீர்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன்.” எங்களைப் பார்த்ததும் திருமதி பேக்கர் மிகவும் தொய்ந்து பலவீனமான குரலில் சொன்னாள்.
“உங்கள் செய்தி கிடைத்தபோது, நாங்கள் இங்கு வருவதற்காகதான் கிளம்பியிருந்தோம். முதலிலேயே வந்திருப்போம், ஆனால் எங்கள் குதிரைகளைக் கொஞ்சம் கவனிக்கவேண்டியிருந்தது.
“உங்கள் அன்பை நான் அறிவேன். நிச்சயமாக.” திருமதி பேக்கர் சொன்னாள்.
அவள் எங்களைத் தேநீர் பருகுமாறு கேட்டுக்கொண்டாள். நாங்கள் சற்று முன்னர்தான் பருகினோம் என்று சொன்னோம். அடுத்து அவளுடைய தங்கை செல்வி ஸ்டான்டிஷ் எங்களிடம் தேநீரும் கேக்கும் எடுத்துக்கொள்ளச் சொன்னாள். எங்களால் அந்த சமயத்தில் கோப்பைகளையும் தட்டுகளையும் ஒழுங்காகக் கையாள இயலாது என்பதால் மறுத்தோம்.
பின்பக்க அறையிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு தங்கை எழுந்து உள்ளே சென்றாள். திருமதி பேக்கர் அமைதியாய் அழுதுகொண்டிருந்தாள்.
“என்னைப் பொருட்படுத்தவேண்டாம். நான் சீக்கிரமே சரியாகிவிடுவேன். நான் என் கணவரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். என் கணவரின் கடைசித் தருணத்தைப் பார்த்தவர்கள் நீங்கள். உங்களைப் பார்த்தவுடன் எனக்கு அந்த நினைவு வந்துவிட்டது.”
நானும் ஆண்டியும் சுவரையொட்டிப் போடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் நேராக விறைப்புடன் அமர்ந்திருந்தோம். கையில் தொப்பியை இறுகப் பிடித்தபடி எதிரிலிருந்த வெல்லிங்டன் – ப்ளூஷர் சந்திப்பைக் குறிக்கும் ஓவியத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். எதிரில் அது இருந்தது எங்களுடைய அதிர்ஷ்டம் என்றே நினைத்தேன்.
குழந்தை உள்ளேயிருந்து ‘அம்மா..’ என்றது. திருமதி பேக்கர் உள்ளே செல்லவும் அவள் தங்கை வெளியில் வந்தாள். “நடந்தவற்றை சீக்கிரமாகச் சொல்லிமுடியுங்கள்.” அவள் ஆண்டியிடம் கிசுகிசுப்பாய் சொன்னாள். “அவள் கணவன் இறக்கும்போது அருகிலிருந்த உங்கள் வாயால் நடந்தவற்றைக் கேட்கும் வரையில் வேறு யார் என்ன சொன்னாலும் அவள் திருப்தியடையமாட்டாள். உங்கள் தொப்பியை என்னிடம் கொடுத்துவிட்டு வசதியாக அமருங்கள்.”
அவள் எங்களுடைய தொப்பிகளை வாங்கி தையல் எந்திரத்தின் மீது வைத்தாள். தொப்பியை அவள் எங்களிடமே விட்டிருக்கலாம் என்று தோன்றியது. ஏனெனில் இப்போது கைகளில் எதுவுமில்லாமல் கைகளை என்ன செய்வது என்றும் தெரியாமல் ஈரமண்ணில் கால்வைத்த பூனைகளைப் போன்று தவித்தோம்.
திருமதி பேக்கர் திரும்பிவந்தபோது கைகளில் நான்கு வயது பாபி பேக்கருடன் வந்தாள். அவன் ஆண்டியைப் பார்க்கவிரும்பினானாம். ஆண்டியைப் பார்த்ததும் அவனிடம் ஓடிவந்தான். ஆண்டி அவனைத் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டான். அவன் துறுதுறுவென்று பார்க்க அழகாக இருந்தான். ஆனால் அவன் தந்தையை அதிகம் நினைவுபடுத்துபவனாக இருந்தான்.
“நீங்கள் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆண்டி” பாபி சொன்னான்.
“உண்மையாகவா பாபி?”
“ஆமாம். நான் உங்களிடம் என் அப்பாவைப் பற்றிக் கேட்கவேண்டுமென்று நினைத்தேன். அவர் மேலே போவதை நீங்கள் பார்த்தீர்களா?” வியப்பால் விழிகள் விரியக்கேட்டான்.
“ஆமாம்.”
“அவர் மேலே நட்சத்திரங்களிடம் போனாரா?”
“ஆமாம்.”
“இனிமேல் அவர் பாபியைப் பார்க்க வரவே மாட்டாரா?”
“மாட்டார். ஆனால் கடைசியில் பாபி அவரிடம் போவான்.”
திருமதி பேக்கர் தன் நாற்காலியில் பின்னால் சாய்ந்து, தலைக்கு கைகளை முட்டுக்கொடுத்து அமர்ந்தாள். அவளுடைய கண்களில் கண்ணீர் மின்னின. அவள் தேம்ப ஆரம்பிக்கவும் அவள் தங்கை அவளை அழைத்துக்கொண்டு அறையை விட்டுச் சென்றாள்.
ஆண்டி அசௌகரியமாய் காணப்பட்டான். “இந்த வேலையிலிருந்து என்னை நீக்கிவிடும்படி கடவுளை வேண்டுகிறேன்.” என்றான்.
“இந்தப்பெண்தான் கதைகள் எழுதுபவளா?” நான் கேட்டேன்.
“ஆமாம். கவிதைகளும் எழுதுவாள்.” ஆண்டி என்னை வெறித்தபடி சொன்னான்.
“பாபியும் நட்சத்திரங்களிடம் போகமுடியுமா?” பாபி கேட்டான்.
“நீ நல்லபிள்ளையாக இருந்தால் போகலாம்.” ஆண்டி சொன்னான்.
“சித்தி?”
“ம்..”
“அம்மா?”
“ம்”
“ஆண்டி?”
“ம்.. போவேன்.” அவன் சுரத்தில்லாமல் சொன்னான்.
“அப்பா மேலே போவதை நீங்கள் பார்த்தீர்களா, ஆண்டி?”
“ஆமாம்.. அவர் மேலே போவதை நான் பார்த்தேன்.”
“அவர் இனிமேல் கீழே வரவே மாட்டாரா?”
“மாட்டார்.”
“ஏன் வரமாட்டார்?”
“ஏனென்றால்… அவர் அங்கே உனக்காகவும் அம்மாவுக்காகவும் காத்துக்கொண்டிருப்பார் பாபி.”
அங்கே ஒரு நெடிய அமைதி நிலவியது. பின் பாபி கேட்டான்,
“எனக்கு ஒரு ஷில்லிங் தருவீர்களா, ஆண்டி?” குழந்தைத்தனமிக்க கண்கள் மின்னக் கேட்டான்.
இரண்டு ஷில்லிங் ஆறு பென்சுகள் மதிப்புடைய ‘அரைக்கிரீடம்’ எனப்படும் நாணயத்தை எடுத்து அவனிடம் கொடுத்தான். அவன் சித்தி வந்தாள். ஆண்டியை நாளைக் காலை மறுபடியும் பார்த்துப் பேசலாம் என்றும் இப்போது படுக்கைக்குப் போகவேண்டுமென்றும் சொன்னாள். பாபி எங்களிருவரையும் முத்தமிட்டு விடைபெற்றதும் அவனைத் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றாள். திருமதி பேக்கர் கொஞ்சம் ஆசுவாசமடைந்தவளாய் ஆண்டியின் கதையைக் கேட்கத் தயாராக இருந்தாள்.
“தைரியமாக இரு, ஜேக், எந்த சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இரு.” அவர்கள் உள்ளே வருவதற்கு முன் ஆண்டி என் காதில் கிசுகிசுத்திருந்தான்.
“பரிதாபத்துக்குரிய பாபின் தம்பி நெட் எனக்குக் கடிதம் எழுதியிருந்தான். ஆனால் அதில் அவ்வளவாக விபரங்களை தெரிவிக்கவில்லை. நெட் ஒரு நல்ல மனிதன். ஆனால் மிகவும் எளிமையானவன், எதற்கும் ஆசைப்படாதவன்.”
எல்லையைத் தாண்டியதுமே பாபின் உடல்நிலை மோசமானதென்று ஆண்டி சொன்னான்.
“எனக்குத் தெரியும், கிளம்பும்போதே அவருக்கு உடல்நிலை சரியாக இல்லை. நான் அவர் போவதை விரும்பவே இல்லை. முடிந்தவரை போகவேண்டாமென்று தடுத்துப்பார்த்தேன். அவரைப் போகவிடக்கூடாது என்று ஏனோ எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. அவருக்கு எப்போதும் என்னையும் குழந்தையையும் தவிர வேறு சிந்தனையே கிடையாது. இந்த ஒருதடவை மட்டும் மந்தையோட்டிப் போய்வந்தபின் இனிமேல் போகமாட்டேன் என்றும் வீட்டருகிலேயே ஏதாவது வேலை பார்த்துக்கொள்கிறேன் என்றும் சொல்லியிருந்தார்.
எல்லாப் பருவகாலங்களிலும் மந்தையோட்டிக்கொண்டு, மழையில் கூடாரம் அமைத்துத் தங்கிக்கொண்டு ஒரு நாயைப் போல வாழ்ந்தார். வாழ்க்கை அவருக்கு மிகப்பெரியது. அவரால் வீட்டில் அமைதியாக இருக்கமுடியாது. எல்லாமே எனக்காகவும் குழந்தைக்காகவும்தான். அவர் நிறைய சம்பாதித்து மீண்டும் ஒரு பண்ணை நிறுவ ஆசைப்பட்டார். நான் அவரைப் போகவிட்டிருக்கக்கூடாது. அவர் எங்களைப் பற்றிதான் யோசித்தார். ஓ.. என் அன்புக்குரியவரே!” அவள் தேம்பியழுதாள். அவள் தங்கை வந்து தேற்றினாள். நானும் ஆண்டியும் வாட்டர்லூ போர்க்களத்தில் நடைபெற்ற வெல்லிங்டன்-ப்ளூஷர் சந்திப்பை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தோம்.
ஓவியர் சற்று அதீதமாகவே பிணங்களைக் குவித்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றியது. சட்டென்று ஒரு நினைப்பு வந்தது, நான் இறந்தபின்னரும்கூட குதிரையால் மிதிபடக்கூடாதென்று விரும்பினேன்.
“கவலைப்படாதீர்கள், அவள் இப்போது சரியாகிவிடுவாள்.” தங்கை சொல்லிவிட்டு சிட்னி பத்திரிகை ஒன்றை எங்களிடம் தந்தாள். அது எங்களுக்குப் பெரிய நிம்மதியைத் தந்தது. இருவரும் மண்டைகளை முட்டிக்கொண்டு அதிலிருக்கும் படங்களைப் பார்த்தோம்.
ஆண்டியிடம் விட்ட இடத்திலிருந்து தொடருமாறு திருமதி பேக்கர் வேண்டிக்கொண்டாள். முல்காடவுனில் எங்கள் தலைவனின் நிலைமை மோசமானதைப் பற்றி ஆண்டி சொல்லிக்கொண்டிருந்தான். திருமதி பேக்கர் ஆண்டிக்கெதிரிலும் செல்வி ஸ்டான்டிஷ் எனக்கெதிரிலுமாக அமர்ந்திருந்தனர். இருவரின் பார்வையும் ஆண்டியின் மேலே இருந்தன. ஆண்டியின் தலைமயிர் வழக்கம்போல நெட்டுக்குத்தாக ஒரு புருசு போல் நின்றிருந்தது. அவன் பேசும்போது அவனுடைய அப்பாவித்தனமான சாம்பல்நிறக் கண்கள் திருமதி பேக்கரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தன. நான் செல்வி ஸ்டான்டிஷைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இதுவரை நான் பார்த்தப் பெண்களிலேயே மிகவும் அழகானவள் இவளாகத்தான் இருப்பாள் என்று நினைத்தேன். கண்டதும் காதல் என்று சொல்லலாம். ஆனால் அவளுடைய தரம் நான் எட்ட இயலாத அளவுக்கு உயரமாகவும் தொலைவாகவும் இருந்து நம்பிக்கையின்மையைத் தந்தது. மிகுந்த கழிவிரக்கத்தோடு நான் கடந்தகாலத்தைப் பற்றி நினைக்கத் தொடங்கினேன். ஆண்டி என் பக்கத்தில் ஏதோ உளறிக்கொண்டிருப்பது கேட்டது.
“எனவே நாங்கள் அவனை போர்வைகள், மேலங்கி மற்றும் இதரபொருட்களோடு வண்டியில் வசதியாகப் படுக்கவைத்தோம். நில உரிமையாளர் முல்காடவுனுக்கு வண்டியை ஓட்டினார். அது முப்பது மைல் தூரம் இருக்கும். இல்லையா, ஜேக்?” ஆண்டி சட்டென்று என் பக்கம் திரும்பி கேட்டான். யாரிடமாவது அவனை அறிமுகப்படுத்தும்போது வைத்துக்கொள்ளும் அதே அப்பாவிமுகத்துடன் கேட்டான். “முப்பத்தைந்து மைல்கள் இருக்கலாம்” சட்டென்று விழித்துக்கொண்டு சொன்னேன்.
செல்வி ஸ்டான்டிஷ் என்னைப்பார்த்தாள். நான் மீண்டும் வெல்லிங்டனையும் ப்ளூஷரையும் பார்த்தேன்.
“அவர்கள் அனைவருமே பாபிடம் மிகுந்த கனிவோடு நடந்துகொண்டார்கள். எல்லோருமே அவனை நேசித்தார்கள்.”
“எனக்குத் தெரியும். அவரைப் போல் உதவி செய்பவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். அன்புள்ளம் கொண்ட நல்ல மனிதர் அவர்.” திருமதி பேக்கர் சொன்னாள்.
“அந்த விடுதியின் உரிமையாளர், டேனர் அவர் சகோதரரிடம் கூட அவ்வளவு கருணை காட்டியிருக்கமாட்டார். உள்ளூர் மருத்துவரும் மிக நல்ல மனிதர். ஆனால் மிக இளம்வயதினன். டேனருக்கு அவர்மேல் அவ்வளவு நம்பிக்கை இல்லை. அதனால் மேக்கின்டைரிலிருந்து ஒரு முதிய மருத்துவருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தார். அந்த மருத்துவரின் வண்டியில் பூட்ட, தன்னிடமிருந்த புதிய குதிரைகளை அனுப்பிவைத்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எங்களால் செய்யமுடிந்த எல்லாவற்றையும் நாங்கள் தவறாமல் செய்தோம். நான் உறுதியாகச் சொல்கிறேன், திருமதி பேக்கர்.”
“நான் நம்புகிறேன். இப்போது உங்களிடம் பேசியதிலிருந்து எனக்கு எவ்வளவு நிம்மதி கிடைத்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. அந்த மதுபானவிடுதியின் உரிமையாளர் அவ்வளவையும் தன் சொந்த செலவிலா செய்தார்?”
“அவர் ஒரு பென்னி கூட வாங்கிக்கொள்ளவில்லை, திருமதி பேக்கர்.”
“நிச்சயமாக அவர் ஒரு நல்ல மனிதராகத்தான் இருக்கவேண்டும். நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.”
“ஓ… உங்கள் சார்பாக நெட் நன்றி சொல்லிவிட்டார்.” என்ன சொல்கிறோம் என்று யோசிக்குமுன்பே சொன்னான்.
“நெட் இதைப்பற்றியெல்லாம் யோசித்திருப்பாரென்று என்னால் கற்பனை செய்யவும் முடியவில்லை. என் கணவரின் மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் முதலில் நான் நினைத்தது, அவர் பழையபடி குடிக்க ஆரம்பித்திருப்பார் என்றுதான். அதுதான் எனக்கு மிகுந்த கவலையைத் தந்தது.”
“அவன் ஸோலாங்கை விட்டுப் புறப்பட்டது முதல் ஒரு துளி கூட மதுவருந்தவில்லை. என்னால் சத்தியம் செய்யமுடியும், திருமதி பேக்கர்.” ஆண்டி சட்டென்று சொன்னான்.
ஆண்டி பேசும்போது ஒன்றிரண்டு முறை செல்வி ஸ்டான்டிஷின் முகத்தில் வியப்பும் குழப்பமும் உண்டானதைக் கவனித்தேன். அவள் நாற்காலியின் முனைக்கு நகர்ந்து வியப்புடன் கவனித்தாள். பிறகு பின்னால் சாய்ந்து கைகளைத் தலைக்குப் பின்னால் கோர்த்து அரைக்கண்களை மூடியபடி அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தநிலையில் அவளைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. ஒன்றிரண்டு முறை என்னிடம் ஏதோ கேட்கவிரும்புவது போல் என்னைப் பார்த்தாள். அவள் என்னைப் பார்த்தநொடியே நான் சட்டென்று அவளிடமிருந்து பார்வையை விலக்கி வெல்லிங்டனையும் ப்ளூஷரையுமோ அல்லது எரியாத கணப்படுப்பையோ பார்க்க ஆரம்பித்தேன். அடுத்து அவள் ஆண்டியிடம் ஏதாவது கேள்வி கேட்டாள். அவன் உள்ளுக்குள் பயந்தாலும் அப்பாவித்தனத்துடனேயே பதிலளித்தான். கடைசியில் அவனுக்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை சட்டென்று பயன்படுத்தி, அவளைப் பார்த்து கண்சிமிட்டி சாடை செய்தான். அவள் ஒரு பெருமூச்சுடன் அதன்பின் வாயை மூடிக்கொண்டாள்.
படுக்கையறையிலிருந்த உடல்நலமில்லாத குழந்தை இருமல் வந்து மீண்டும் அழுதது. திருமதி பேக்கர் உள்ளே சென்றாள். நாங்கள் மூவரும் காதுகேளாத, வாய்பேசாதோருக்கான பள்ளியில் பயில்பவர்களைப் போல் அமைதியாக அமர்ந்திருந்தோம். ஆண்டி சுற்றுமுற்றும் பார்த்தான். செல்வி ஸ்டான்டிஷ் அனுமதி பெற்றுக்கொண்டு அறைக்குச் சென்றாள். போகும்போது ஆண்டியைப் பார்த்தாள். ஆனால் அவன் வேறெதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.
“தைரியமாக இரு, ஜேக், மிக மோசமானது இப்போதுதான் வரப்போகிறது.” ஆண்டி கிசுகிசுத்தான்.
அவர்கள் திரும்பிவந்தபோது ஆண்டி கதையைத் தொடர்ந்தான்.
“அவன்… அவன் அமைதியாய் இறந்தான்.” ஆண்டி தன் முழங்கைகளை முழங்காலில் ஊன்றி, முகத்தில் வெளிச்சம் படாதவண்ணம் சட்டென்று நகர்ந்து அமர்ந்துகொண்டான். செல்வி ஸ்டான்டிஷ் தன் கரங்களை அக்காவின் தோளைச் சுற்றி ஆறுதலாய் அணைத்துக்கொண்டாள். “அவன் சிரமமில்லாமல் இறந்தான். சில சமயங்களில் தலைவலி இருந்தது, ஆனால் காய்ச்சல் இருக்கும்போதுதான் அதுவும் வந்தது. மற்றபடி அவன் இறக்கும்போது பெரிய அளவில் துன்பப்படவில்லை. துன்பப்படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அவன் உங்களைப் பற்றியும் குழந்தையைப் பற்றியும் நிறைய பேசிக்கொண்டிருந்தான்.” ஆண்டி இன்னும் குரலைத் தழைத்துக்கொண்டு சொன்னான், “அவன் உங்களை தைரியமாக இருக்கச்சொன்னான், குழந்தைக்காக நீங்கள் உங்களைத் தேற்றிக்கொண்டு உற்சாகமாக வாழவேண்டுமென்று சொன்னான். அவனுடைய ஈமச்சடங்கு அந்தப் பகுதியில் இதுவரை நடந்திராத அளவுக்கு மிகவும் பெரிய அளவில் நடைபெற்றது.”
திருமதி பேக்கர் அமைதியாய் அழுதாள். ஆண்டி தன் மேற்சட்டைப் பையிலிருந்து அந்த கித்தான் பையை வெளியே எடுத்தான். ஆனால் பாதியிலேயே மீண்டும் உள்ளே வைத்துவிட்டான்.
“ஒருவிஷயம்தான் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. என் அன்புக்கணவர் இங்கிருந்து வெகு தொலைவில் ஆளரவமற்ற ஒரு புதர்வெளியில் புதைக்கப்பட்டிருக்கிறார். கொடுமையான விஷயம் அது!” அவள் விசும்பலுடன் சொன்னாள்.
“ஓ.. அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், திருமதி பேக்கர். நெட் பார்த்துக்கொள்வான். சிட்னியில் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு பாபை அங்கு கொண்டுசென்று புதைத்துவிடுவான்.” ஆண்டி சொன்னவற்றுள் இது மட்டும்தான் பொய்யில்லை. தன் பண்ணையின் ஆட்டுரோமங்களை விற்றவுடனேயே அந்தப் பணத்தைக்கொண்டு இதை செய்யப்போவதாக நெட் சொல்லியிருந்தான்.
“நெட்டுக்குதான் எவ்வளவு அன்பு! அவர் இவ்வளவு அன்புடனும் அக்கறையுடனும் இருப்பார் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. நான் இதுவரை அவரை தவறாகவே நினைத்திருக்கிறேன். என் கணவரைப் பற்றி நீங்கள் தெரிவிக்க வேண்டிய செய்திகள் அவ்வளவுதானா?”
“ஆமாம்” என்றான் ஆண்டி. அப்போதுதான் அவனுக்கு ஒருவிஷயம் விட்டுப்போனது நினைவுக்கு வந்தது. “ஒன்றை சொல்லத்தவறிவிட்டேன். அவன் நீங்கள் சிட்னிக்கு இடம் பெயரவேண்டுமென்று விரும்பினான். அங்குதான் உங்களுடைய நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள் என்றும் அது உங்களுக்கும் குழந்தைக்கும் உதவியாக இருக்குமென்றும் நினைத்தான். அவன் இந்த விஷயத்தை உங்களிடம் என்னை சொல்லச்சொன்னான்.”
“அவர் இறுதிவரைக்கும் எங்களைப் பற்றிதான் யோசித்திருக்கிறார். அவர் எப்போதுமே எங்களைப்பற்றிதான் கவலைப்படுவார். நாங்கள் அடுத்தவாரமே சிட்னிக்குப் போகிறோம்.”
ஆண்டி நிம்மதிப் பெருமூச்சுவிட்டான். நாங்கள் இன்னும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். செல்வி ஸ்டான்டிஷ் எங்களுக்காக காஃபி தயாரித்துத் தருவதாக சொன்னாள். ஆனால் நாங்கள் எங்கள் குதிரைகளை கவனிக்கவேண்டியிருப்பதை சொல்லிக் கிளம்பினோம். நாங்கள் இருவரும் எழும்போது தலையில் முட்டிக்கொண்டோம். பின் தொப்பிகளை மாற்றி எடுத்துக்கொண்டு இன்னொருநாள் வந்து திருமதி பேக்கரை சந்திப்பதாக உறுதியளித்துவிட்டுப் புறப்பட்டோம்.
“நீங்கள் இங்கு வந்ததற்கு நன்றி. இப்போது என் மனம் கொஞ்சம் சமாதானமடைந்திருக்கிறது. நீங்கள் எனக்கு எவ்வளவு பெரிய மனநிம்மதியை அளித்திருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. என்னைக் கடைசியாய் வந்து பார்ப்பதாக உறுதியளித்திருக்கிறீர்கள், மறந்துவிடாதீர்கள்.” எங்களிடம் கைகுலுக்கியவாறு திருமதி பேக்கர் சொன்னாள்.
ஆண்டி அவள் தங்கையைப் பார்த்தான். தலையை வாசல் பக்கம் சாய்த்துக்காட்டி, வெளியில் வருமாறு சாடையால் தெரிவித்தான்.
“போய்வருகிறோம், திருமதி பேக்கர். நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு குழந்தை இருக்கிறான். எல்லாம் நன்மைக்கே. மேலும் பாப் உங்களைத் தைரியமாக இருக்கச்சொல்லியிருக்கிறான்.” சொல்லிவிட்டு எனக்குப் பின்னால் தடதடவென்று வந்தான்.
செல்வி ஸ்டான்டிஷ் எங்களுடன் வெளிவாயில் கதவு வரை வந்தாள். ஆண்டி அவளிடம் கித்தான் பையைக் கொடுத்தான்.
“இதில் பாபின் கடிதங்களும் சில தாள்களும் உள்ளன. நான் இதை உங்கள் சகோதரியிடம் கொடுக்க நினைத்தேன். ஆனால் அவளிடம் கொடுக்க மனம் வரவில்லை.”
“சொல்லுங்கள் திரு. ஆண்டி மேக்குலோச். நீங்கள் எதையோ சொல்லாமல் மறைத்திருக்கிறீர்கள். நீங்கள் அவளிடம் உண்மையை சொல்லவில்லை. உண்மையை நான் அறிந்துகொள்வது நல்லதென்றும் அவசியமென்றும் நினைக்கிறேன். அது ஒரு விபத்தா…. அல்லது குடியா?”
“அது குடியினால்தான். நான் உங்களிடம் சொல்லத்தான் நினைத்தேன். உங்களிடம் சொல்வது நல்லதென்றும் நினைத்தேன். அதற்கு தயாராகவும் இருந்தேன். ஆனால்… நீங்கள் கேட்கவில்லையென்றால் என்னால் சொல்லியிருக்க முடியுமா என்று தெரியவில்லை.”
“எல்லாவற்றையும் சொல்லுங்கள். நான் தெரிந்துகொள்வது நல்லது.”
“வீட்டை விட்டு சற்று தள்ளிப் போகலாம்.” ஆண்டி சொன்னான். அவள் வேலியை விட்டு சற்று விலகி எங்களுடன் வந்தாள். ஆண்டி எல்லா உண்மைகளையும் அவளிடம் சொன்னான்.
“நான் அவள் சிட்னிக்கு இடமாறுவதை சற்று துரிதப்படுத்துகிறேன். அடுத்த வாரம் போவதற்கு பதில் இந்த வாரமே போய்விடுகிறோம்.”
சொல்லிவிட்டு முதுகில் கைகளைக் கட்டிக்கொண்டு ஒருநிமிடம் நின்றாள். அவள் கண்கள் நிலவொளியில் பிரகாசித்தன. அவள் மிக அற்புதமாய் இருந்தாள்.
“நான் அவள் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நீங்கள் நல்ல மனிதர்கள். எனக்கு காடுறை மனிதர்களைப் பிடிக்கும். அவர்கள் அற்புதமான மனிதர்கள். நேர்மையானவர்கள். நான் இனி என் வாழ்க்கையில் உங்களைப் பார்க்கும் வாய்ப்பே இல்லை. அதனால் இது ஒரு பொருட்டல்ல.” என்றபடி அவள் ஆண்டியின் தோளைத் தொட்டு அவனுடைய உதட்டில் முத்தமிட்டாள். “உங்களுக்கும்தான்.” என்னிடம் சொன்னாள். நான் அவளை விடவும் மிகவும் உயரமாக இருந்ததால் சற்றுக் குனியவேண்டியதாயிருந்தது. “போய்வருகிறேன்” சொல்லியபடி அவள் கதவருகில் சென்று எங்களைப் பார்த்து கையசைத்தாள். நாங்கள் எங்கள் தொப்பியைத் தூக்கி மரியாதை தெரிவித்துவிட்டு சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினோம்.
மூலக்கதை – Telling Mrs Baker
மூலக்கதை ஆசிரியர் – Henry Lawson (1867 – 1922)
ஆசிரியர் குறிப்பு:
ஹென்றி லாஸன்
ஹென்றி லாஸன் (1887 – 1922) ஆஸ்திரேலியாவின் ஆரம்பகால இலக்கிய வரலாற்றில் பெரிதும் குறிப்பிடத்தக்கவர். அவரது படைப்புகள் காலத்தின் ஆவணங்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன. தன் ஒன்பது வயதில் செவித்திறனை இழந்த அவர் தான் கண்ட, அறிந்துணர்ந்த, அனுபவித்த நிகழ்வுகளைக் கவிதைகளாகவும் சிறுகதைகளாகவும் படைத்தார். பூர்வகுடிகளுக்குரிய மண்ணில் தங்கள் கால்களை அழுந்தி ஊன்ற விழைந்த தருவாயில் ஆரம்பகால ஐரோப்பியக் குடியேறிகளுக்குண்டான வாழ்க்கைச் சிக்கல்களை மையக்கருவாய் வைத்துப் புனையப்பட்டவை அப்படைப்புகள். சொந்த வாழ்க்கையில் பெரும் சரிவுகளை சந்தித்து கடனாளியாகவும், குடிகாரனாகவும், சிறைக்கைதியாகவும் மாறிப்போன ஹென்றி லாஸனின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரியது.
சிட்னியின் தெருக்களில் ஒரு பிச்சைக்காரரைப்போல் திரிந்தவரை உடலளவிலும் மனத்தளவிலும் தூக்கி நிறுத்திய பெருமை அவருடைய சிநேகிதி திருமதி இஸபெல் பையர்ஸை சாரும். நாட்டின் மிக அற்புதமான வாழுங்கவிஞர் ஒருவர் தன் வாழ்க்கைச் சூழல் காரணமாக தன்னைத் தானே அழித்துக் கொண்டிருப்பதைக் காணச் சகியாதவராய் அவரை மீண்டும் எழுதவைப்பதற்கான முயற்சிகளில் இறங்கி அதில் வெற்றியும் கண்டார் திருமதி இஸபெல். அவரது ஆதரவோடு ஹென்றி லாஸனின் எழுத்துப்பயணம் தடையின்றித் தொடர்ந்தது.
1922 செப்டம்பர் மாதம் 2 ஆம் நாள், தனது 55 ஆவது வயதில் மூளையில் இரத்தக்கசிவு காரணமாக, ஹென்றி லாஸன் உயிர் துறந்தார். ஹென்றி லாஸனின் உடல் அரசுமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதுவரை ஆளுநர்களுக்கும், தலைமை நீதிபதிகளுக்கும் மட்டுமே கிடைத்துவந்த அரசுமுறை இறுதிமரியாதையை பெற்ற, அரசு சாராத முதல் மனிதர் இவரே. அவருடைய இறுதிச் சடங்கில் அன்றைய பிரதமர் திரு. பில்லி ஹக்ஸும், நியூ செளத் வேல்ஸ் மாநில முதல்வர் திரு. ஜேக் லாங்கும் கலந்துகொண்டனர்.
1949 ஆம் ஆண்டு ஹென்றியின் உருவப்படம் ஆஸ்திரேலிய அரசின் அஞ்சல் தலையில் பொறிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. 1966 இல் ஆஸ்திரேலியாவில் தசம எண்ணிக்கையிலான பணப்புழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, முதலில் அச்சடிக்கப்பட்ட பத்து டாலர் காகிதப் பணத்தில் அவரது உருவப்படம் பொறிக்கப்பட்டு மேலும் சிறப்பிக்கப்பட்டது. ஹென்றி லாசனின் படைப்புகள் பலவும் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. சில திரைப்படங்களாகவும் நாடகங்களாகவும் உருவாக்கம் பெற்றுள்ளன.
கீதா மதிவாணன்:
ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரத்தில் வசிக்கும் கீதா மதிவாணன் “என்றாவது ஒருநாள்” (ஹென்றி லாசன் எழுதிய ஆஸ்திரேலியக் காடுறை கதைகளின் மொழிபெயர்ப்பு) என்ற நூலை வெளியிட்டுள்ளார் கீதமஞ்சரி எனும் வலைத்தளத்தில் படைப்புகளை எழுதி வருகிறார்.