பேரருவியில் கரைந்த ஆவுடை அக்காள்-கண்டராதித்தன்

பாடுதற்கு முன்னிடத்தில் பழுது குறை வாராமல்

நிறைவேற்றி வை தாயே எந்தன் மனோன்மணியே

அபத்தமதிருந்தால் அறிந்த மஹாத்மாக்கள்

பிழை இன்னதென்று சொல்லி பொறுத்தருள வேண்டுமம்மா

வேதாந்த அம்மானை –

ஆவுடையக்காள் பாடல் திரட்டு.

கிழக்கு கர்நாடகத்தின் நந்திதுர்கா மலைப்பிரதேசத்திலிருந்து தொடங்கும் தென்பெண்ணை நதி நானறிந்த வரையில் தமிழகத்தின் திருக்கோவிலூருக்கு அருகில்  அகன்ற நதியாகப்  பாய்கிறது. இருகரையிலும் வடதமிழக மக்களின் குலதெய்வ கோயில்களும், வீரட்டானேஸ்வரர், அதுல்யநாதேஸ்வரர், ஆதித் திருவரங்கம், உலகளந்தப் பெருமாள், எனப் புகழ்மிக்க சைவ, வைணவத்திருத்தலங்களும், மடங்களும், மடாதிபதிகளும், ஜீவசமாதிகளும், சமணக்குகைகளும், சமணக்கோயில்களும், நடுகற்களும், பழங்கற்கால மனிதர்களின் கல்வெட்டுகளும், சிதைந்த வழிபாட்டுத்தலங்களுமாக வளம்மிக்க விவசாய நிலங்களோடும், நதிக்கரை நாகரிகத்தோடும் பாய்கிறது பெண்ணை.

நதிக்குச்  சற்றுத் தள்ளி ஆறில்லாத ஊரில் வசிக்கும் எனக்கு பெண்ணையின் மேல் தீராத ஆவல் உண்டு, நதியில் வெள்ளம் திரள்வதாக அறியும் போதெல்லாம் அதன் கரையிலுள்ள திருத்தலங்களைச் சென்று தரிசிப்பது வழக்கம். இந்தமுறை திருக்கோவிலூருக்கு அருகில்  ஜம்பை என்ற கிராமத்தில் உள்ள கி.பி 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்புலிங்கேஸ்வரர் கோவிலுக்குச் சென்றேன். ஜம்பையில் கற்கால மனிதர்களின் கல்வெட்டு ஒன்றும் உண்டு.

ஜம்பைக்கு போகும் வழியில், ஞானானந்தரின் தபோவனத்தைக் கடக்க வேண்டும். மிகவும் அமைதியான பகுதியாக விளங்கும் தபோவனத்தைக் கடக்கும்போது செங்கோட்டை ஆவுடையக்காளின் நினைவு வந்தது. ஞானானந்த நிகேதன் சார்பில் செங்கோட்டை ஆவுடையக்காளின் பாடல்திரட்டு குறித்து முன்பு நாஞ்சில் நாடன் அவர்களின் சொல்வனம் கட்டுரை வாசித்ததும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆவுடையக்காள் குறித்து  கவிஞர் சூர்யாவுடனும் உரையாட நேர்ந்தது.

பிராமணர்களின் புண்ணியஷேத்திரத் தலங்களாக விளங்கும் ஞானானந்த தபோவனம், ரகோத்தம சுவாமிகளின் மூல பிருந்தாவனம், ஸ்ரீஅண்ணா என்றழைக்கப்படும் பரனூர் கிருஷ்ண பிரேமி சுவாமி மடம் மற்றும் வேதபாடசாலைகள் உள்ளன. இங்குள்ள ஞானானந்த தபோவனத்தில் வசிக்கும் நித்யானந்த கிரி அவர்கள் தொகுத்த செங்கோட்டை ஆவுடை அக்காளின் பாடல் திரட்டு 2002ம் ஆண்டு வெளியானது.

திருநெல்வேலி ஜில்லா செங்கோட்டை என்னும் ஊரில்  பிறந்த ஆவுடையக்காள் பால்ய விவாகத்தினால் பூப்படைவதற்கு முன்பாகவே விதவையானவர். ஆவுடையக்காளின் பாடல்கள் பெரும்பாலும் வாய்மொழிப் பாடல்களாக அந்த காலத்து பிராமண விதவைப் பெண்களிடம் இருந்துவந்தன. விழாக்காலங்களில் பாராயணமாகவும் பாடியபடி தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்து வந்தது.

1910 ஆம் ஆண்டுவாக்கில் ஆவுடையக்காளின் பாடல்கள் அடங்கிய சிறு தொகுப்பை ஆயக்குடி வெங்கடராம சாஸ்திரி என்பவர் தொகுப்பாக்கி வெளியிட்டிருந்தார். இதன்மூலம் ஆவுடையக்காளின் பாடல்கள் நெல்லை ஜில்லாவைத்தாண்டி வெளியுலகிற்கும் தெரியத் தொடங்கியது.

ஆவுடையக்காள் 350 ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. ஆவுடையக்காளின் சிறிய பாடல் தொகுப்பை வெளியிட்ட வெங்கடராம சாஸ்திரிகள் 1910 ஆம் ஆண்டு வெளியிட்ட பிரதியில் உத்தேசமாக 100 ஆண்டுகளுக்கு முற்பட்டவர் எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.தோராயமாக 250 ஆண்டுகளுக்கு முற்பட்டவராக இருக்கலாம்.

பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் அக்காள் மகள் கோமதி ராஜாங்கம் என்பவர் ஆன்மீக எழுத்தாளர். ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இவர் காசியில் உள்ள சிருங்கேரி மடத்தில் வாழ்ந்தவர். ஆவுடையக்காள் பாடல்களின் மேல் ஈர்ப்புகொண்ட இவர் ஆவுடையக்காளின் பாடல்களின் மேல் தனது சித்தப்பா பாரதியாருக்கும் அளவுகடந்த ஈடுபாடிருந்ததாகத் தெரிவிக்கிறார். திருநெல்வேலி ஜில்லாவிற்குட்பட்ட பிராமணகுலப் பெண்கள் வசமிருந்த ஆவுடையக்காள் பாடல்கள் பாரதிக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது வியப்புடையதல்ல.

250  ஆண்டுகளுக்கு முன்பு  கைம்பெண்களின் இருப்பும், வாழ்வும் எவ்வளவு போராட்டமளிக்கும் என்பது ஆவுடையக்காளின் வாழ்வையும் அவரது போராட்ட குணத்துடனானத் தேடலையும் அறியும்போது தெரிகிறது. அதன் பின்னரும் அவரது பாடல்கள் திண்ணைகள் தோறும் பெண்களால் பாடப்பட்டு இன்று புத்தக வடிவில் கிடைப்பதும் ஆச்சர்யம் தருவதாக உள்ளது. வளர்ந்த சமூகத்தின் கட்டுப்பாடுகளும், அதன் புராதான பழக்க வழக்கங்களையும் மாற்றுவதென்பது எளிதல்ல அல்லது அதிலிருந்து விடுபட்டெழுவதும் சாதாரணமானதல்ல

பால்ய விவாகத்தினால் கணவனை இழந்த ஆவுடையக்காளின் தாய் அக்காளின் துணிவிற்கு மறைமுகமான காரணமாக இருந்திருக்கிறார். ஆவுடையின் கணவன் இறந்ததாகக் கிடைத்த தகவலினால் அக்காளின் தாய், மகளின் எதிர்காலம் கருதி அழுது அரற்றும்போது, இன்னொரு வீட்டுப்பிள்ளை இறந்ததற்கு ஏன் நம் வீட்டில் அழுகிறீர்கள் என்ற இளம் ஆவுடையக்காளின் கேள்வி அவரது தாயை நிதானத்திற்கு அழைத்து வந்தது.

ஒருநாள் ஆவுடையக்காளும் அவரது தாயும் வீட்டிலிருக்கையில் திருவிசைநல்லூர் அய்யாவாள் என்னும் ஸ்ரீதர வெங்கடேசர் என்ற புகழ்பெற்ற ஞானி ஸ்ரீகோவிந்த பஜனைப் பாடல்களைப் பாடியபடி அவ்வூருக்கு வருகிறார். அவரது வருகையினால் ஊரே பரபரப்பாகவும், விழாக்கோலம் பூண்டும்  இருந்தது. ஆவுடையக்காள் தனது தெருவிற்கு வந்து நின்ற வெங்கேடசரின் பஜனையின் பால் ஈர்த்து, வெளியில் வந்து அவரை தரிசித்து குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டினார்.

பின்னாளில் சமூகத்தின் பல்வேறு எதிர்ப்புகளுக்கும், ஏளனங்களுக்கு இடையிலும் ஸ்ரீதர வெங்கடேசர் ஆவுடையக்காளுக்கு ஞான தீட்சையளித்தார். அதனைத்தொடர்ந்து ஆவுடையக்காள் தீர்த்த யாத்திரையாக பல்வேறு இடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். இதனால் அவரது ஞானமும், புகழும் பரவத்தொடங்கின.

புதிது புதியதாக சிஷ்யைகளும் உருவாகினர். ஒருமுறை மாயவரத்தின் காவேரிக்கரையில் நீராடும்போது ஆற்றில் மிதந்துவந்த எச்சில் மாவிலையை எடுத்துப் பல்விளக்கியதால் அங்கிருந்த பலரும் ஆவுடையக்காளை நிந்தனை செய்தனர், அதனைப்பொருட்படுத்தாத ஆவுடையக்காள் கரையேறியபோது தோன்றிய ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் தர்ப்பையினால் ஆவுடையின் நாவில் எழுதி நீ முக்தி நிலை எட்டியதால் சொந்த ஊருக்கே சென்று இரு என்றதாக ஐதீகம்.

பின்னர் சொந்த ஊர் சென்றபோது ஆவுடையக்காளை ஜனங்கள்  ஞானியருக்குரிய மரியாதையுடன் வரவேற்றனர். ஒரு ஆடி அமாவாசை நாளில் குற்றாலத்தில் குளித்துவிட்டு மலையேறி தியானம் செய்துவிட்டு வருதாகத் தனது சிஷ்யைகளிடம் கூறிவிட்டுச் சென்ற ஆவுடையக்காள் அதன்பிறகு திரும்பவில்லை. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக்கொண்ட இவரது பாடல்கள் திருநெல்வேலி ஜில்லாவில் வசித்த பெண்களுக்கு மனச்சாந்தியூட்டுவதாகவும், புத்துயிர்ப்பளிப்பதாகவும் இருந்துள்ளது.

குறிப்பாக சுந்தரபாண்டியபுரம், சாம்பூர், வடகரை, நாகர்கோவில், வடுவீஸ்வரம், முன்னீர்பள்ளம் உள்ளிட்ட பல கிராமங்களில் மத்தியானத்தில்  கணவனை இழந்த இளம்பெண்கள் திண்ணையில் அமர்ந்து அக்காளின் பாடல்களைப் பாடும் வழக்கமிருந்ததாக கோமதி ராஜாங்கம் கூறுகிறார். அக்காளின் விடுபட்ட பாடல்களைத் தேடிப் போனபோது மேற்கண்ட அனுபவத்தைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார்.

ஆவுடையக்காள் பாடல்கள் பெரும்பாலும் வாய்மொழிப் பாடல்களிலிருந்து பதிப்பிக்கப்பட்டவை, அவையும் அக்காலத்திய பிராமண குலத்தவர்களிடையே புழங்கியிருக்கக் கூடிய சமஸ்கிருதம் கலந்த தமிழ் நடையாகவே உள்ளது. அல்லது இவற்றைக் கேட்டுப் பதிப்பித்தவர்களுக்கு இப்பாடல்களின் மொழிவடிவத்திலும் பங்கிருக்கலாம். பக்தி, யோக, வேதாந்த, ஞான, சமரசப் பாடல்கள் என்றாலும் ஓரிரு நூற்றாண்டுகளைக் கடந்த ஆவுடையக்காளின் பாடல்களை, அவற்றின் அக்காலத்திய புதுப்பொருள் கொண்ட வரிகளுக்காகவும், துணிச்சலுக்காகவும் வாசித்துப்பார்க்கலாம். அதற்கான வரிகள்  அக்காளின்  ஞானத்திரட்சியாக தட்டுப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

 பண்டிதன் கவி – ஆவுடையக்காள் பாடல் திரட்டு

”அகண்டரஸ மென்னுமிந்த அன்னத்தில் அபேக்ஷையுண்டாகும்

நித்தியஸூகமென்னும் நித்தரையுமுண்டாச்சு

ஜன்ம வியாதியெல்லாம் சிகித்ஸை பண்ணி போக்கிவைத்தவர்க்கு

என்ன கொடுப்போமென்றெண்ணி மனஸிலுள்ளே

வையகத்திலுண்டான பொருட்களெல்லாம் வஸ்துவெல்லாம் கொண்டுவந்து கூட்டிக் குமித்து கொடுத்தாலு மீடாகாது

கோடிதிரவியத்தை கொடுக்கிறோ மென்றாலும் அவர்

பண்ணும் கிருபைக்கு பிரதியாக மாட்டாது”

பிரதக்ஷிணமாகவந்து பாதத்தின் கீழே பணிந்து அனேக

நெடுநாளாய் அகழில் கிடந்த என்னை விடுவித்து விடுதலை

                                             கண்டாப்போல்

தீப்பட்டமாளிகையில் அகப்பட்டபேர்களை கையைபிடித்து

வெளியேற்றிவிட்டாப்போல்

ஆற்றிலே பெருகிவரும் ஜலத்தில் அமிழ்ந்து வரும் பேர்களை

கையை பிடித்து கரையேற்றி விட்டாப்போல்

சோகமெனுமிந்த வடவாமுகாக்கினியில் பற்றி தீப்படுகிற

                                         வேளையிலே

கிருபையினால் உத்தாரணம் பண்ணி வைத்தீர்கள், ஈதொன்றே போதாதா?

பகவனின் கிருபைக்கு நன்றி கூறவும், பணிந்து போகவுமான குரல் ஆவுடையக்காளுடையது. பிறர் பாடும்போது அது அவர்களது வேண்டுதலாக, பிரார்த்தனைகளாக மாறிவிடுகிறது. இத்தன்மையே ஆவுடையக்காள் பாடல்கள் கைவிடப்பட்டவர்களின் அருமருந்தாக இருந்துள்ளது.

அத்வைத மெய்ஞான ஆண்டி போன்ற பாடல்களைப் பிற்காலத்தில் அக்காளின் நீட்சியாக பாரதியிடம் காண்கிறோம்.

தேவதத்தன்போலே தாண்டி ஜீவனே ஈச னென்றாண்டி

நானாபுஷ்பரஸம் தாண்டி றாட்டில் சேர்ந்தாப்போலேதாண்டி

ஜீவன் ப்ரம்மத்திலே தாண்டி சேர்ந்தால் திருபாய் என்றாண்டி

இன்ன புஷ்ப ரஸமென்று தாண்டி என்றுமெடுக்கவே

                                      கூடாதென்றாண்டி

ஜாதிபேதத்தைத் தாண்டி ஸமரசமாக்கிவிட்டாண்டி

என்றும் அத்வைத மெய்ஞான ஆண்டிப்பாடல்கள் நீள்கிறது.

வேதாந்த அம்மானைப் பாடல்கள் அற்புதமான மொழிநடையுடன் பாடப்பட்டிருக்கின்றன.

”பருத்தகொடியும் பவழ வடமுடனே

பாரிஸ்தனத்தில் பதக்கம் துவண்டசைய

குலதேவதைக்கும் குலஜனங்கள் யாவருக்கும்

கைங்கர்யம் பண்ணுமிந்த கட்டழகி கைத்தலத்தில்

அடுக்குவளை நல்பவழம் அஸ்தகடகம் விளங்க

யிருக்கியிட்ட பொன்னாழி எத்திசையும் ஜோதியிட

ஜகத்திலுண்டாண சப்தவகைக ளெல்லாம்

அல்லவென்று பேசி கலகலவென் றம்மானை

போடுபோடம்மானை பொன்வளைக் கையால் பறிக்க

மாணிக்க வாழ்முகத்தாள் மனதிலொன்று எண்ணுவளாம்”

என்ற பாடல் 7ம் திருமுறைப்பாடல்களை நினைவுபடுத்தியது

”வார்கொண்ட வனமுளையாள் உமைபங்கன் கழலே

மறவாது கல்லெறிந்த  சாக்கியற்கும் அடியேன்

சீர்கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன்

……………………………………………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………………………………

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்

ஆருரன் ஆரூரில் அம்மானுக்காளே”

 

அக்காளின் வேதாந்த அம்மானைப்  பாடல்களும், 7ம் திருமுறைப்பாடல்களும் பாடப்பெற்ற காலங்கள் வெவ்வேறாக இருப்பினும் ஒருவிதமான ஓசையும், சந்த நடையும் ஒன்றை வசிக்கும்போது ஒன்றை நினைவிற்குக் கொண்டுவருகிறது.

இதே போன்று கம்பன் ராமாயணத்தைத் தொடங்கும்போது

”உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகிலா விளையாட்டு உடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”      என்கிறார்

ஒரு விழாவை,சுபச்சடங்கை,நிகழ்ச்சியைத் தொடங்கும்போதும் முடிக்கும் போதும் மங்களகரமாக தொடங்க வேண்டும் என்பது மரபு அதைப்போலவே கம்பன் இறைவனைப்பாடி இராமாயணத்தை பாடத்துவங்குகிறார்.

ஆவுடையக்காள் பாடல்களும் தொடங்கும்போதும் முடிக்கும் போதும் இறைவனைத் தொழுது தொடங்கி முடிகிறது.

அகிலமும் படைத்துக் காத்தழிக்கு முத்தொழில்களே

யலகிலா விளையாட்டதான கரிய

முகிலனைய மேனியுள்ள முதல்வருக்கும் பேரின்ப

முக்திக்கு வித்தான மூலருக்கும்

ஜயமங்களம் நித்திய சுபமங்களம் என முடிக்கிறார் அக்காள்.

கம்பனையொற்றி அக்காள் பாடியிருக்கிறார் என்பதான பொருளல்ல இது. மொழியின் சரடு பற்பல நூற்றாண்டு கடந்தும் தொடர்கிறது என்பதே.

ஜயபேரியடித்தேனே -3 என்ற பாடலில்

”முக்திபெண்ணை யடைந்து மோகலஹரிசென்று

சித்துகண்ணை திறந்து ஜீவேசுவராள் பேதம்வென்று

ஸத்யஸவரூப ஸல்லாபம் தன்னை அடைந்து

வெற்றி சங்கம் முழங்கி வீற்றிருந்த பெரும்

வேடிக்கை என்னால் விதிக்கப்போமோ

விதித்தாலும் விதியால் அறியப்போமோ” -ஸ்ரீஅக்காள்

அக்காளின் பெரும்பாலான பாடல்களில் ஒற்றெழுத்தைத் தவிர்த்துத் தொகுத்திருப்பது சந்த நயத்திற்கா அல்லது பாடலின்ப அனுபவத்திற்கா எனத் தெரியவில்லை, அதேபோன்று ஆவுடையக்காளின் சிலபாடல்களை ஒற்றுச் சேர்த்தும், சிறிய அளவில்  சமஸ்கிருத விலக்கத்தோடு தமிழ்ப்படுத்திப் பாடும்போது பாரதியின் பாடல்களை வாசிக்கும் உணர்வு  ஏற்படுகிறது.

மேற்கண்ட ”முக்திபெண்ணை யடைந்து தொடங்கும் பாடலையும்

தேடிச்சொறு நிதந்தின்று-பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்

வாடித்துன்பமிக உழன்று – பிறர்

வாடப்பல செயல்கள் செய்து-நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -பல

வேடிக்கை மனிதரைப் போல-நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ-

என்ற பாரதியாரின் உணர்ச்சி மிகுந்த பாடலைப்போல ஆவுடையக்காளின் பல பாடல்கள் வெளிவரக்கூடும். 

 இலக்கணமும், பண்டிதத்தன்மையும் கலந்த பாட்டுடைய காலத்திடையே வாய்மொழியாகத் தன்னனுபவங்களுடன் ஆவுடையின் பாடல்கள் உருவாகி பெண்களிடையே பரவியிருக்கிறது.

1.வெகுவான போகத்தை தாண்டி புசிக்கவே என்றிருந்தேண்டி

பார்வையொன்றிலே தாண்டி போகத்தை மாற்றியே

                                        வைத்தாண்டி

2.பொய்யை மெய்யென்றெண்ணி போகம் புசித்த்ததும் போச்சே

மெய்யை மெய்யென்றெண்ணி மெய்யாயிருக்கவுமாச்சே

3.அண்டாத ஆத்மசுகம் அனுபவித் தேசுகிக்க

யாரிந்த ஆதிக்கத்தைத் தந்தார்சொல் லன்னே

பண்டாலின் கீழிருந்து பார்த்தபார்வை யும்மொழியும்

பாக்கியத்தைப் பெயர்த்தெடுத்து தந்தது பின்னே

ஞான-பாக்கியத்தை பெயர்தெடுத்து தந்தது பின்னே

4. அனுஷ்டான கர்த்திரு கர்ம காரியாதிகள் பொய்யடா

அகம் பிரத்தியகாத்மா உற்ற பார்த்தனுபவித்தால் மெய்யடா

போன்ற வரிகள் தனது யாத்திரையின் மூலமும் அனுபவத்தின் மூலமும் ஆவுடையக்காள் கண்டடைந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

             மனம், புத்தி, சம்வாதம் பகுதியில் உள்ள அன்னே, பின்னே, மொய், பொய் விளக்கம், சூடாலைக்கும்மி, வேதாந்தக் கும்மி எனப் பல பாடல்களை அக்காளிற்குப் பிறகு பாரதியின் வழியாக அறிகிறோம்.

பாரதியின் கவிப் புலமை குறித்து இங்கு விளக்குவது நோக்கமல்ல, பாரதியின் மொழிநடைக்கு ஆவுடையக்காளின் தாக்கம் உள்ளது என்பதை இருவரது பாடல்களையும் ஒப்பிட்டு அறியலாம். ஆவுடையக்காளின் விடுதலையும், சுப்ரமணிய பாரதியின் விடுதலையும் மானிட நோக்கு கொண்டது என்பதில் பாடபேதமிருக்காது என்றே நினைக்கிறேன். நாம் எப்போதெல்லாம் பாரதியை வாசிக்கிறோமோ அப்போதெல்லாம் ஆவுடையக்காளின் பாடல்களையும் மறைமுகமாக வாசிக்கிறோம். பாரதியின் கவிதைகளால் எப்போதெல்லாம் சாந்தமடைகிறோமோ, உணர்ச்சிப் பெருக்கடைகிறோமோ, காதல்கொள்கிறோமோ, மகிழ்ச்சியடைகிறோமோ, பெருமைகொள்கிறோமோ அப்போதெல்லாம் ஆவுடையக்காளின் ஆன்மாவும், அக்காளின் பாடல் வரிகளும் அசையக்கூடும் அது நமக்குத்தெரிவதில்லை.                               

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.