பாம்பு  நான்  நரகம்      

பாம்புக்குப் பயந்து நகர வீதிகளில், திரையரங்குகளில், மதுக்கூடங்களில், கைவிடப்பட்ட பூங்காக்களில் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறேன். கடந்த மூன்று நாட்களாகத் தூங்காததால் சோர்வு, தூங்க ஏங்கும் நரம்புகளை இயல்பற்று சீண்டி இம்சிக்கிறது.. தூங்க அழைக்கும் இரவின் ஒளி, நகரின் ஓசை, நீண்ட களைப்பு எல்லாமே எங்காவது சாலையோரம், அல்லது இருண்ட நடமாட்டம் குறைந்த மூத்திர சந்துகளில் விழுந்துவிடுவேனோ என அச்சப்படவைக்கிறது.

தூக்கம் தழுவ நூறும் மறந்துபோகும். இந்த உலகத்திலே எங்கு தூங்கினாலும் ஒரே சிக்கல் அந்தப் பாம்பு வந்து தொலைக்கத்தான் போகிறது, அறைக்குப் போய் படுக்கையில் விழுந்த அடுத்த நொடியில் வரும் பாம்பு என் வயிற்றின் மீதேறி சுருண்டுகொள்ளும். என்னை பரிதாபத்திற்குரிய ஒன்றை போலப் பார்க்கும், அதன் பட்ட பளபளப்பான நாக்கு சாட்டையைப்போல சுழற்றும் போது உடல் கூச்சம் உயிர் போகிறது. கோபத்தில் சீறி முகத்தில் துப்பும். அந்த அழகிய பயங்கரத்தை நான் எப்படி? ஆனால் ஒரே நிம்மதி ஒப்பந்தத்தை மீறி விசம் தேங்கிய பல் இருப்பதற்காகவே பொழுதுபோக்காக அது ஒரு போதும் என்னைக் கடித்ததேயில்லை. முகத்துக்கு நேராக வாய் பிளந்துகொண்டு நாக்கிலே மின்னலைப் போன்ற பளபளப்பு உண்டாக்கும்போது திகிலும், கடிபடும் வரை அஞ்சி நடுங்குகிற துயரமும், அதைப்பற்றிய சிந்தனைகளும் படுக்கைக்குப் போகாத இப்போதும் குலை நடுக்கத்தைத் தருகிறது.

அந்தப் பாம்பு எப்படி என் வாழ்விலே நுழைந்தது. பனிக்கால, தூக்கமற்ற அந்த இரவில் நண்பர்களுடன் பரமபதம் விளையாடிக்கொண்டிருந்தோம் அந்த பெரிய பாம்பு தொடர்ந்து மூன்று முறை கடித்து கடைசிக் கட்டத்துக்கு என் சிறு அடையாளக் கல்லை கொண்டுபோய் வைக்க.

என் நண்பர்கள் சின்ன ஏணி பெரிய ஏணியென ஏறி சொர்கத்துக்குள் நுழைந்துகொண்டிருந்தார்கள்.
“மூன்று முறை தொடர்ந்து பாம்பு கடித்து நீ பின் தங்கி  நாங்கள் சொர்க்கம் நுழைந்துவிட்டால் அந்தப் பாம்பு உன்னுடனே தான் இருக்கும் உன்னை விட்டுப் போகவே போகாது.”

முதலில் சொர்க்கம் புகுந்த நண்பன் கத்திக்கொண்டு போனான். நானோ எல்லாவற்றையும் நம்புகிறவன். அதுவும் என் தொண்டை வற்றி உலருமளவு அச்சம் தருகிற  பெரிய படம் விரித்த பாம்பு பரமபத வரைபடத்திலிருக்கும் அதே பாம்பு. என் மீது ஊர்ந்து எனது கழுத்தில் சுற்றிக்கொண்டு நெளிவது போல உணர……ஒரு யோசனை தோன்றியது, கொஞ்ச காலமாக மனநலத்துக்காக நான் மருத்துவரிடம் போய்க்கொண்டிருந்ததால் மனப்பதட்டம் குறைய அவர் தரும் மாத்திரைகளை விழுங்கும் எண்ணம் தோன்ற அதன் தொடர்ச்சியாக மருத்துவர் சொன்னது நினைவுக்கு வந்தது….எதைப் பற்றிய அச்சம் இருந்தாலும் அதனின்று விலகுவதை விட அதை எதிர் கொள்ளப் பழகு என்பது. பாம்பென்றால் படையே நடுங்கும் பிறகு நானென்ன என்று சமாதானம் சொன்ன கணத்தில்..அது சரி பாம்பிருந்தால் நடுங்கலாம் இல்லாத பாம்புக்கு நண்பன் சொன்னதற்காக நடுங்கலாமா?

கோயில் புற்றுகளில் உடைத்து ஊற்றப்படும் முட்டை, பாலை குடிக்கும் பாம்புகள் உள்ள ஊரில் பிறந்தவன் தானே நான், கண்காட்சியில் பேசும் பாம்புகளைப் பார்க்க ரசீதுகளை வாங்கி உள்ளே போய் ஏமாந்தாலும், வரைந்த நீண்ட பாம்பின் தலைக்குப் பதில் கண்சிமிட்டி நாக்கை வெளியே நீட்டும் அந்த பெண்ணின் முகம் …பாம்பு, பாம்பு திடீரெனத் தோன்றிய இந்தச் சிக்கலால் மனம் அமைதியற்றுத் தவிக்க..
மருத்துவரின் ஆலோசனைப்படி பாம்பு பண்ணைக்கு மக்களோடு மக்களாய் நின்று பாம்புகளை வேடிக்கை பார்க்கப் பாம்பு பயம் போய்விடும் தானே.

டீக்கடையில் டீ வருவதற்குள்  உயரத்தில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியில் …விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. “இருவது அடியில்  இருக்கும் போதே காப்பாத்தற அறிவில்ல…. நூறடிக்கு போனபிறகு அப்பிடியே புடிங்கிடுவானுங்க ….நவீன கயிறுகள், கொஞ்சம் பிரார்த்தனை…” “ கைய மேல நீட்டிக்குனு கொழந்தை பதில் குடுத்துக்குனு இருந்துச்சிப்பா அப்பல்லா உட்டானுங்க …ச் பொணமா வெளிய எடுக்கப் போறானுங்க” ஒருவர் கோபத்தில் கத்தினார்.

“ ஆமா இம்மா நேரம் அது உயிரோட இருக்குதா சும்மா ஜோக் காட்றானுங்க நாங்களும் கயிற உட்டோம் கொம்ப உட்டோம்ன்னு மிசின வச்சி ஓட்டு திருடுற பசங்க சனங்கள ஏமாத்துறானுங்க …” கோபமாகப் புலம்பிக்கொண்டே அந்தாள் போய்விட்டான்.

இன்று விடுமுறை நாளென்பதால் அறைக்குப் போகாமல் எங்காவது பொழுது போக்காகப் போக யோசித்த போது பாம்புப் பண்ணை நினைவுக்கு வந்தது.. நம்மீது ஏறாத வரை பாம்புகள் ஆர்வமூட்டக்கூடிய ஒன்று தானே ..நான் போய்ச் சேர்ந்த போது பாம்பின் விசத்தைப் பண்ணையாள் கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொண்டிருந்தார்  பாம்பின் வாய்க்கு அருகாமையில் அவரின் விரல்கள் இருக்கிறது பாவம் பாம்பு அவரது பிடியிலிருந்து தப்பி ஓடத் துடிக்கிறது … அந்த பள்ளம் நிறைய வித விதமான பாம்புகள் படமெடுத்து  அங்குள்ள தவளை, எலிகளைக் கவ்வி விழுங்கிய படியும் பல பத்துக்கணக்கில்….ஒவ்வொரு பாம்பின் பண்புகளைப் பற்றி அவர் விளக்கமாகப் பேசிக்கொண்டிருந்தார். அதிலே ஒரு பாம்பு மட்டும் வித்தியாசமாக இருந்ததை யாருமே பார்க்கவில்லை போல அது என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. கண்காட்சியில் பார்த்த முகமா, பரமபத காகிதத்தில் உள்ள முகமா நினைவில் தேடிக்கொண்டிருந்தேன்…அந்த கணத்தில் கண்சிமிட்டி  என்னை அதன் பக்கம் வரும்படி அழைத்தது அதன் அழகில் நான் மயக்கம் கொண்டிருந்தேன்.

“பாம்புகள் எல்லாமே விசமுள்ளது கிடையாது , பாம்பென்றாலே படமெடுக்கக்கூடியதும் கிடையாது விசமுள்ள பாம்பை எப்படி கண்டுகொள்வது……..” பண்ணையாள் விளக்கிக்கொண்டிருந்தார். அந்த நேரம் என்னையுமறியாமல் என்னையழைக்கும் பாம்பை நெருங்கியிருந்தேன், அதுவும் பார்த்தது , நானும் பார்த்தேன்.
“நீ வாசலில் எனக்காகக் காத்திரு உன்னிடம் பேச வேண்டும்”
என்ன பாம்பு பேசுகிறது எனக்குச் சட்டென என் மனநல மருத்துவர் நினைவுக்கு வந்தார் ஆனால் மருந்தை அவர் நிறுத்தச் சொல்லிப் பல மாதங்களாகிறது . நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கருந்துளையொன்றில் அந்தப் பாம்பு நுழைந்துவிட்டது.

அது பேசும் பாம்புதானா, பரமபதத்திலிருந்து என்னைத் துரத்தி வந்த பாம்பு தானா  அந்த கறுவாய் நண்பன் சொன்னால் அப்படியே பலிக்குமே…சரி போய் தான் பார்ப்போமே  வாசலை நோக்கி ஓடினேன்  அங்கே  இங்க ஒரு பாம்பு நழுவிப் போகிறது என  ஒரு பெண் கத்திக்கொண்டிருந்தாள்.
“யாரும் பயப்பட வேண்டாம் பாம்புகளைக் கையாள்வதில் நிபுணர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். பயப்பட ஒன்றுமில்லை “ அறிவிப்பு கேட்கிறது. நான் கூட்டத்தை விலக்கி அந்த பரமபத பெரிய பாம்பின் முகம் கொண்ட அழகிய பாம்பைத் தேடிக்கொண்டிருந்தேன் “இங்கே பார்” குரல் கேட்க வேப்ப மரக் கிளையொன்றில் அது தொங்கிக் கொண்டிருந்தது.

“நீ வீட்டுக்கு போ நான் உன்னை பின் தொடர்கிறேன்.”

“நீ எதுக்கு என் வீட்டுக்கு வரணும்”
நான் அஞ்சியபடி கேட்க,

“விதி” என்று சொல்லிவிட்டு அது சிரிக்கிறது.

“ உன்னிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்  நான் கேட்பேன் …உனக்குப் பதில் தெரியாவிட்டால் நான் கடிப்பேன் ஆனால் உனக்குச் சாவு வராது…… பதில் சொல்லிவிட்டால் நீ என்னைக் கடிக்கலாம்.”

“இதென்னடா கொடூரமான விளையாட்டா இருக்குது, இந்த ஆட்டத்தை நீயே முடிவு பண்ணா, எப்படி நான் ஒத்துக்க மாட்டேன்”.

“முடிவு செய்த பிறகு தடுக்க நீ யார்?”

குரல் உறுதியாக வந்தது. இப்போது தான் அது ஒரு பெண்ணின் குரல்…அந்த குரலில் எனக்கு மயக்கம் ஏற்படுகிறது.

“அய்யோ யார் முடிவு செய்தது.”

“விதி”  அதைச் சொன்ன நொடியில் பாம்பு காணாமல் போனது. திகிலடைந்து நடுங்கும் என் கைகளைச் சரி செய்ய என்னிடம் எப்போதும் இருக்கும் மனப்பதட்டத்தைக் குறைக்கும் மாத்திரைகளை வாயில் போட்டுக்கொண்டேன்.
அன்றிலிருந்து இந்த ஆட்டம் நடக்கிறது.

நடப்பது நடக்கட்டுமென…..அறைக்குப் போய் களைப்பில் படுக்கையில் விழுந்த கணம் கண்ணை மூட, அது என் மீது ஊர்ந்துகொண்டிருப்பதை உணர்கிறேன். தூக்கப் பள்ளங்களில் சரிந்து கொண்டிருந்தவனை, வயிற்றின் மீது நெளியும் எதோ ஒன்றின் கூச்சம், அச்சத்தில் விழிக்க பாம்பு என் வயிற்றின் மீது சுருண்டு படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது. இது வரை நான் மட்டுமே கடி பட்டுக்கொண்டிருக்கிறேன்.

அது கேட்ட எந்த கேள்விக்கும் எனக்குப் பதில் தெரியவில்லை.
முதல் கேள்வியே காந்தியை யார் கொன்னது ….அட இது ஒரு கேள்வின்னு..அலட்சியமாக வேகமாகப் பதில் சொல்ல உதட்டை அசைத்த கணத்தில்  அது சீற்றத்துடன் என் முகத்தில் துப்பியது….

“எதற்காகக் கொன்றார்கள்….”
நான் பதிலற்று விழித்துக்கொண்டிருந்தேன். ஓங்கி ஒன்று போட்டது…

அதன் நஞ்சால் உயிர் போனால் பரவாயில்லை. விசமேறிய நான் நரகத்தின் காட்சிகளைக் காணவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறேன். அந்தக் காட்சிகள் பாம்பை விடப் பாம்பின் விசத்தை விடக் கொடூரமானவை. எத்தனையோ கொடூரங்களைப் பார்த்துவிட்டதால் இப்போதெல்லாம் எனக்கு பாம்பைப் பற்றிய பயம் போய்விட்டது. அதைவிட அந்த முகத்தைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை……சில இரவுகளில் கேள்விகள் தீர்ந்தது போல என் வயிற்றின் மீது சுருண்டு படுத்தபடி அதன் காதலனுக்காகக் காத்திருக்கும் அதனுடைய காதலன் வரும் போது அது என்னருகே வருவதில்லை….. பிறகு இரண்டும் ஒரு வெட்கமும் இல்லாமல் நான் தீண்டும் தொலைவில் பின்னிப் பிணைந்து  காதல் நடனமாடும் அப்படியே நகர்ந்து என்னை படுக்கையைப் போலாக்கி நடனத்தை நிகழ்த்தும். கலவி முடிந்ததும் பாம்பின் காதலன் நான் படுக்கையாக இருந்ததற்கு நன்றியாக  என் பாதங்களில் முத்தமிட்டுச் செல்லும். அதன்பிறகும் பரமபத பாம்பு கலவியின் களைப்பு தீர என்மீதே உறங்கி, விழித்து, கிளம்பும் போது விடிந்திருக்கும்..  கடைசியாக நரகத்தில் நான் கண்ட காட்சியை  காண்பதைவிட நான் விசமேறி சாவதை விரும்பினேன்……அதற்குப் பயந்து அறைக்குள் போகாமலே நகரத்தில் சுற்றியலைந்து கொண்டிருக்கிறேன். அறைக்குப் போய் இன்றுடன் மூன்று நாட்களாகிறது. இதற்கு மேலும் என்னால் முடியாது. தூக்கமற்று எத்தனை காலம் தான் இப்படியே  திரிந்துகொண்டிருப்பது. துணிந்து அறைக்குப் போக வேண்டியது தான்.

அந்த வீடே 30 அடி உயரத்திற்கு படமெடுத்த ஒருபாம்பென என்னை வரவேற்கிறது.

படுக்கையில் விழுந்த கணத்தில் உறக்கம் மரணம் போல் என்னைத் தழுவிக்கொள்ளத் துடிக்கிறது. ஆனால் நாசமாய் போன பாம்பு வழக்கம் போல என் வயிற்றின் மீது சுருள்வது தெரிகிறது. உடல் நடுங்கப் பார்க்கிறேன். படத்தை விரித்துக்கொண்டு ஆடியபடி சிரிக்கிறது. மின்னித்தெறிக்கும் மினுமினுப்புடன் பாம்பு வளைந்து நெளிகிறது. கண்ணைச் சிமிட்டி நாக்கால் உதட்டை நக்குகிறது. வன்மத்தை மறைத்து கவர்ச்சியாகச் சிரிக்கிறது. அழகான பாம்பு அதனுடலெங்கும் ஒளி நழுவியோடுகிறது. இத்தனை அழகான பாம்பில் எத்தனை கொடூரமான, கொல்லாமல் நரகத்துக்கு அனுப்பும் தந்திரமான விசம். ஆனாலும் அழகான பாம்பை ரசிக்க மனம் பழகிவிட்டது. ” உஷ்..உஷ் ..அதன் எச்சில் என் மீது தெரிக்கிறது. பாம்பு சீறுகிறது. பதிலற்ற கேள்விகளாகவே கேட்கத் தயாராகிவிட்டது.

“நுங்கம்பாக்கம் ரயில் நிலைய படுகொலையின் உண்மையான குற்றவாளிகள் யார்?” … நீதியரசர்களால் எனக்குத் தரப்பட்ட பதில்களைச் சொல்கிறேன் ….ம் இல்லையாம், அது கடிக்க தயாராகிறது.. எல்லோருக்கும் சொல்லப்பட்ட பதிலையே நானும் சொல்கிறேன். பாம்புக்குக் காதுகள் கிடையாது ஆனாலும் உண்மைகள் புரிந்த பாம்பு வழக்கத்தை மீறி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவரைப்போல மயக்கும் விதமாகச் சிரித்தது. “ஆம்பளன்னு மீசைய வளக்கறது, வேலைக்கு போறது, அப்பறம் புள்ளைய பெத்துக்கறது, மண்டைய போடறது இதுதான் வாழ்க்கை  இது தான் வாழ்க்கைன்னு வாழ்ந்து மண்டைய போடறது தூ….

உன் தலையில் மண்ணை போடறவனுக்கு வாழ்க கோசம் போட 500 ரூபாய் வாங்கிட்டு வயித்தை கழுவறவன் தானே???”

இதையெல்லாம் மறுக்கவும் பயமா இருக்கு வாயைத் திறந்த கணத்திலே காறித் துப்பும் …..எதற்கு என்னைத் திட்டுகிறது என்பது எனக்குப் புரியும் முன்பே ஆவேசத்துடன் கடிக்க சில அங்குலம் பின் நகர்கிறது.

நரகத்தின் எந்த கொடிய பகுதிக்குப் போகப் போகிறேனோ யாருக்குத் தெரியும், இதோ….என் சவத்தின் ஊர்வலத்தை நானே பார்ப்பேன்.
அங்கே தெரிகிற நரகம் ஒரு “சவக்கிடங்கு” போலிருக்கும். சவக்கிடங்கின் அதிபர்களால் ஆன ஆட்சி அங்கு நடக்கும். அந்த உலகத்துக்குள் நுழைகிற ஒவ்வொரு முறையும் அது மரணத்தை விட மோசமானதாயிருக்கிறது. பல முறை பார்த்த துயரக் காட்சிகளைத் திரும்பப் பார்க்கும் கொடுமை…..இருக்கிறதே

ஒரு பூவைப் பறிக்கும் புன்னகையுடன் அவர்கள் ஒரு மனிதனின் உயிரைப் பறித்துக்கொண்டிருப்பார்கள்.

செங்கனியொன்றை சுவைத்தபின் அதன் விதையைப் பொழுதுபோக்காகக் குதிகாலால் தரையோடு அழுத்தித் தேய்ப்பது போல் புணர்ந்த குறிகளில் துவக்கின் பின் புறத்தால் நசுக்கி குருதியைத் தெறிக்கவிடுவார்கள். பல வேலைகளில் நான்கு மூலைகளிலும் துப்பாக்கி சனியன்கள் குமட்டியெடுக்கின்ற பதைபதைப்பான ஓசைகளுடன், மனிதர்களின் உயிர் பிரியும் முன்பான சின்ன முணுமுணுப்புகள் முனங்கல்களாகக் கேட்டுக்கொண்டிருக்கும்

 எனது உடலற்ற உயிர் பறந்து திரியும் மலைகளுக்கிடையிலான பள்ளத்தாக்கொன்றில் சின்னஞ்சிறுமியின் அலறல் கேட்கும்.

வழியில் காணாமல் போனதாகத் தேடப்படும் ஒரு சின்னஞ்சிறுமியை கடத்தி வந்து கடவுளின் வீட்டில் வைத்து அப்பனும் ,மகனும் வேறு சில ஊரின் அதிகாரம் மிக்க கயவர்களும் முறை வைத்துக்கொண்டு புணர்ந்துகொண்டிருக்கிறார்கள். அய்யோ பாவம் அதோ தூரத்தில் சிறுமியின் தகப்பன் தன் காணாமல் போன மகளைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறான்.

அவனுக்கு யார் போய் சொல்லுவது உன் சின்னஞ்சிறு மகளைக் கழுதைப்புலியை விடத் தந்திரமான இழிந்த கிழட்டு மிருகங்கள்  நக்கி சுவைத்துக்கொண்டிருக்கின்றனவென்று.

இதோ….சிங்கத்தின் அநீதியான பலத்துடன் அடித்துச் சேகரித்த பணத்தில் மலைகளின் மேல் அரண்மனை கட்டி பிழைத்தாலும் சீனி நோயால் பாதிக்கப்பட்ட பகட்டான ராணி ஒருத்திக்கு  அவளது உறவற்ற உறவினர்கள் குளிர்ச்சியூட்டப்பட்ட உயர்ந்த இனிப்புகளை அவள் குமட்டியெடுக்குமளவு கொஞ்சிக்கொஞ்சி அன்பாக  ஊட்டிக்கொண்டிருக்கிறார்கள். நஞ்சு அவள் உடலெங்கும் பச்சை நிறத்தில் பரவி அவளது கால்களில் வந்து நிற்பதை பார்க்கிறேன். அதிகாரம் மிக்க ராசாவற்ற அந்த ராணி நிலமை புரியாமல் மேலாடை சரிந்த பெரிய மார்பதிர சிரித்துக்கொண்டிருக்கிறாள். இன்னும் நூறு விதமான காட்சிகள் துன்பமான நாடக அரங்கின் மேல் ஒற்றையாகச் சபிக்கப்பட்ட ஒருவனாய் கொடிய காட்சிகளின் மேல் எப்போதும் பறந்து திரியவிடுகிற பாம்பு… ஏதோ முக்கியமான கேள்விக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
மொத்த விசத்தையும் என்னுள் பாய்ச்சத் துடிக்கும் அழகான பாம்பு வழக்கத்தை மீறி என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டிருக்கிறது. காதலின் தழுவலைப்போல  அதன் அழகான தலையை என்முகத்துக்கு நேராக வைத்துக்கொண்டு மின்னல் நாவால் முத்தமிடுகிறது. அதன் பிளவுன்ட நாக்கு சாட்டையின் நுனிபோல தீண்டிச் செல்கிறது . நானும் நெளிகிறேன் உணர்ச்சி பீறிட அதை ஆசையோடு கட்டித்தழுவ விரும்புகிறேன். ஆனால் என் கைகள் செயலிழந்துகிடக்கிறது.

பாம்பு என் நெற்றியில் முத்தமிடுகிறது. அதன் வால் நீண்டு கிடக்கும் என் கால்களுக்கிடையில் மூன்றாவது காலாக நெளிந்து அதன் நுனி பாதங்களில் உரசி கிச்சு கிச்சு மூட்டுகிறது.……சரிவான பாறையில் சறுக்கிக் கொண்டுபோகிறேன்.

பாதங்களுக்கிடையே மணல் துகள் நழுவ உடல் கூசுகிறது. அதலபாதாளங்களை நோக்கி விழுகிறவனைப்போல் உள்ளம் அலறுகிறது. நானும் என் அழகிய பாம்பும் தழுவிக்கிடக்கிறோம்.

பாம்பு உங்களைச் சுற்றி வளைக்கும் போது  கை கால்கள் அசைவற்றுப் போய்விடும். அதன் முகம் என் கண்களுக்கு நேராகச் சீற்றத்துடன் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருக்கிறது. உடல் நடுங்குவதையே மறந்துபோக, தானாகவே கழிவுகள் வெளியேறுகிறது. மொத்த குருதியும் முகத்தில் வந்து முகம் வீங்கும்… மரணத்துக்கு முன்பான அத்தனையும். இப்போது பாம்பு சீற்றத்துடன் கத்துகிறது.  அதன் பிளவுன்ட நாக்கால் என் முகமெங்கும் துழாவியபடியே “ கடற்கரை பட்டினி போராட்டம் பற்றி என்ன சொல்கிறாய் ” எனக்கு எரிச்சலாக வந்தது ஏய் நச்சுப் பாம்பே ஒன்னு கட்டித் தழுவு இல்ல கடிச்சி சாவையாவது தா  என்று கத்த நினைத்து பதிலென்று தெரிந்ததை உளறினேன்.

“பாதியிலே முடிந்து போகும் போராட்டமெல்லாம் வெறும் பாசாங்கு, அதிலும் போர் முடிவுக்கு வந்தது போய் மகிழ்ச்சியாக உணவருந்துங்கள் என்று, கலைந்து போனது ஒரு துன்பில் நாடகம்” தப்பான பதிலென்று முடிவான நொடியில் அறிவற்ற பாம்பின் நச்சுப் பற்கள் எனது இடது கண்ணின் கருவிழியில் பாய்ந்திருந்தது .

அடுத்த நொடியில் நான் நரகத்துக்குள் உலாவுகிறேன். காட்சிகள் தெளிவாகத் தெரிகிறது. ஆடை களையப்பெற்று கைகள் கட்டப்பட்ட ஆண், பெண் வரிசையொன்று ராணுவத்தினரால் அழைத்துச்செல்லப்படுகிறது. நிர்வாணப்படுத்தப்பட்ட கைதிகள்  அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும் தூரத்தில், மரத்தடியில் நடப்பதைப், பார்க்கத் தவிர்க்கிறார்கள். அங்கே பெண்கள் மீது ராணுவத்தினர் வெட்டவெளியில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பயன்படுத்தப்பட்ட உடல்கள் அவர்கள் காலடியில் உயிர் தொலைத்து கந்தலைப் போல் குவிந்து கிடக்கிறது. ரத்த வாடையுடன் மரண ஓலங்களாலான துன்பக்காற்றில் நசிந்த மனித மாமிசத்தின் வாடை வீசித் துன்புறுத்துகிறது. ஆண், பெண் வரிசை மரங்களுக்குப் பின்னே அழைத்துச்செல்லப்படுகிறது.

முன்பே அழைத்து வரப்பட்ட ஆண் கைதிகள் படர்ந்த அரச மரக்கிளைகளில்  தலை கீழாக் கட்டித் தொங்கவிடப்பட்டு தடிகளால் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள், கொல்லப்பட்ட விலங்கின் தோலை உரிப்பது போல் அவர்கள் உயிரைப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மரண ஓலம் கழுத்தறுபடும் விலங்கின் கடைசி குரல் போலக் கேட்கிறது. கன்றிய தசைகள் மீது மோதும் கல் மூங்கில் கழிகள் வெறிகொண்டு மோதுகிறது, மனிதர்களின் உடல்கள் உயிரின் விடுதலைக்காகத் துடிக்கின்றன. அதன் பரிதாபமான கதறல் மிக அடக்கமாகக் கேட்கிறது. அவர்களின் உடைத்து நொறுக்கப்பட்ட வாயினின்று  தெறித்து விழுந்த பற்கள் கீழே நசுங்கிய புல்தரையில் ரத்தப்பிசுக்குடன் சிதறிக்கிடக்கிறது….முடிந்துபோன அசைவற்ற உடல்கள் இறக்கப்படுகிறது. நைந்த கந்தலைப்போல அவை தரையில் கிடக்கிறது. மரித்துத் துவண்ட உடலை ராணுவ உடுப்பணிந்த மனநோயாளி கடமையுணர்ச்சியுடன் அடித்துக்கொண்டிருந்தான். இறந்த உடலின் மேல் கருணைகொண்ட இன்னொருவன் அவனை அமைதிப்படுத்தி தாக்க புதிய மனிதனைக் கருணையோடு அவனிடம் ஒப்படைத்தான். இறைச்சி கூடங்களில் தொங்கவிடப்படும் விலங்குகளைப்போல வரிசையாகத் துவண்ட உடல்கள் இறக்கப்பட்டு. புதிய மனிதர்கள் மரக் கிளைகளில் குருதி தோய்ந்த கயிறுகளில் தொங்கவிடப்படுகிறார்கள்.

தூரத்தில் துப்பாக்கி இயங்கும் ஓசை… முதல் அடியிலேயே தலை கீழாகத் தொங்கும் புதிய மனிதனின் பற்கள் தரையில் துண்டிக்கப்பட்ட நாக்குடன் தெறிக்கிறது…

இரக்கத்தின் கழுத்தை அறுத்து துடிப்படங்கும் முன்னே புதைத்துவிட்டு வந்த கயவர்கள் சூடான புதிய குருதியின் கொப்பளிப்பை விரும்பியவர்களாகப் பழைய காயங்களில் புதிய காயங்களை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள்……….அலறல்…புதிய சூடான ரத்தம் சுவைக்கத் துடிக்கும் ஈக்களைத் தவிர்த்து வேடிக்கைபார்க்க ஒரு பறவையும் அங்கில்லை,

புணர்ந்தபின் சாவளிக்கப்பட்டு இன்னும் விரைப்படையாத  பெண்ணுடல்களின் சிதைந்த பகுதியில் உதைத்துக் களிக்கிறார்கள் ராணுவத்தினர். அதை ஒருவன் நிழற்படமெடுக்கிறான். இன்னொருவன் சலனப்படமாக அவர்களுக்குப் பொழுதுபோக்கு தேவையாக இருக்கிறது.

அதோ சில பத்தடி தூரத்தில் அந்த கட்டிடம் தெரிகிறது. முன்னொரு நாளில் அது பாடசாலையாக இருந்திருக்க வேண்டும் அதன் சுவர்களில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த அடையாளங்களுடன் ரத்தத் தெறிப்புகள் காய்ந்து….. உயிர்களை விழுங்கியபின் வாயில் வழியும் ரத்தத்தால் வரைந்த பிசாசின் ஓவியம் போல நிற்கிறது. பெருந்துன்பத்திலிருந்து விடுதலை பெற்ற நான்கு பிணங்களிலிருந்து வழியும் ரத்தம் அறை மூலையில் குட்டையாகத் தேங்கி நிற்கிறது. இப்போது கட்டிடத்தினுள்ளே சாவின் குரல்கள் கேட்கிறது. அய்யோ…பாவம் வாசலில் செத்ததெனக் கருதியதொரு பிணக்குவியலில் இன்னமும் மரிக்காத பெண்ணுடல் அசைகிறது. அதைப் பார்த்துவிட்ட ராணுவத்தினன்  “எம பலிப்போதா சுசுமலாயி” என்று பேய் போலக் கத்துகிறான் பக்கத்திலிருந்தவன் தன் கையிலிருந்த கொலைக் கருவியால் அசையும் உடலில் ஓங்கியடிக்கிறான். முடிந்தது கதை.

நரகத்தின் காட்சிகள் நகர்ந்தபடியே புதிதாக புல்லகற்றப்பட்ட தரையில் ஒன்று, இரண்டு, மூன்று, மொத்தமாகப் பதிமூன்று உடல்கள் மண்ணில் சிதறிக்கிடக்கின்றன, அதனடியில் முன்பே புதைந்து கிடக்கிறது கொல்லப்பட்ட உடல்கள்.

”மனிதர்களை வெட்டும் கத்திகளைச் செய்பவர்கள், அமைதி குறித்தும், தேசபக்தி குறித்தும் கவிதை எழுதும் காலம் வந்துவிட்டது. கத்திகளை ஏந்தி அவர்கள் அணிவகுப்பு செல்வது உங்கள் கழுத்தையும், உங்கள் கர்ப்பிணிகளின் வயிற்றிலிருக்கும் சிசுக்களையும் குறி வைத்துத்தான், அவர்களை எதிர்கொள்ளத் தயாராய் இருங்கள்” என்று யாரோ அடையாளமற்ற ஒருவன் நகரின் நாற்றமெடுத்த நதிக்கரையோரமாய் கூவிச் சென்றது என் நினைவுக்கு வருகிறது.

நகர்ந்து போகிறேன். எங்கும் புகை மண்டலம் என்னைச் சுற்றி துப்பாக்கி ஓநாய்களின் டொட்…டொட் ஓசைகள். எனக்கு மேலே கடந்து சீறிப்போகும் நெருப்புப் பிசாசுகள் எங்கோ மோதி நெருப்பையும், புகை மண்டலத்தையும் எழுப்புகிறது. என் கண்ணெதிரே ஒரு பனை தோப்பொன்று பிய்த்தெறியப்படுகிறது. என் காலடியில் மனித உடல்கள், பிய்த்தெறியப்பட்ட ஒருத்தியின் கொங்கையில் ரத்தமருந்திக்கொண்டிருக்கிறது சிசு.

என் தலைக்கு மேலே போப்பாண்டவரின் ஊரில் பிறந்த அவரின் ஆசி பெற்றவர்கள் நாசக்கார அண்டங்காக்கைகளில் சவாரி செய்தபடி, கொலை செய்யும் உரிமையுடன் காவுகொள்ள உயிர்களைத் தேடியலைகிறார்கள். மண்ணில் பள்ளிக் குழந்தைகள் அண்டங்காக்கைகள் வரும் போது உயிர் தப்ப பதுங்கு குழிகளை நோக்கி ஓடுகின்றன. அவர்களின் கால்கள் பின்ன இடறி விழ ஆசிரியர்கள் அவர்களைக் குழிகளுக்குக் கொண்டு சேர்க்க வழி நடத்துகிறார்கள். பாவம் அவர்கள் அறிந்திருக்கவில்லை அது பதுங்கு குழியல்ல மரணக் குழியென்று… பயங்கர அண்டங்காக்கைகள் வெப்பம் தெறிக்கும் படுபயங்கர கழிவுகளை வீசிச் செல்கிறது.

தப்பியோடுவதற்கான எந்த வாய்ப்புமற்று சுற்றி வளைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகளைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் ஏது? வேடிக்கை பார்த்துச் செல்வதைத் தவிர செய்ய ஒன்றுமில்லை

மஞ்சள்,வெள்ளை,சிவப்பு என எல்லா நிற தூதர்களும் துரோக உடையணிந்து அங்கே உலவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாய் இருக்குமிடத்தில் கண்கள் இருக்கிறது…. பரிநிர்வாணமாக்கப்பட்ட கைதிகளின் துயரமான முகங்களைக்காண புத்தனுக்கே வலு போதாது., அவர்கள் எதையோ எதிர் பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவநம்பிக்கையின் முகங்களில் நம்பிக்கையோடு புதிய ரத்தம் உலகைக் காண வழிந்துகொண்டிருக்கிறது… தூரத்தில் நான்கு வினாடி இடைவெளியில் துப்பாக்கி இயங்கும் ஓசை கேட்கிறது.

மரணத்திற்குக் காத்திருக்கும் மனிதன் அந்த ஓசையை எண்ணுகிறான். ஒன்று, இரண்டு,….பதினான்கு, சில நிமிட இடவெளி, மீண்டும்  ஒன்று…இரண்டு…இருபத்தொன்று, வானத்தில் கொலை கருவிகளுடன் மேய்ந்து திரியும் அண்டங்காக்கைகள் தூரத்தில் மேகங்களைக் கிழித்துக்கொண்டு கரைந்தபடி போவதைக் கண்டபடியே  தூரத்தில் குண்டு வெளியேறும் ஓசையை எண்ணியவன் குருதி காய்ந்த இமைகள் வழியே பார்க்கிறான்..
பால் பற்கள் உதிராத பொடியனாய் உலவிய காலம் நினைவுக்கு வருகிறது. பயணிகள் விமானமொன்று தலைக்கு மேலே பறக்க அப்பா அதைக்காட்டி

“மெத்தப் படித்தபின் சீமைக்குப் பறந்துபோக அதிலே ஏறித்தான் பயணம் போகணும்”
…….ஏக்கத்தோடு வேலியில் கண்கள் நிலைத்தவனை இழுத்து போய் விழுதுகளில் தொங்கும் கயிறுகளில் தொங்க விடுகிறார்கள். முதல் அடியே போதுமானது……

அது விசாரணைக்கான அடியல்ல கொல்வதற்கான அடி..கால்களுக்கிடையே விதைகளில் தடி மோதி நசுக்க அடுத்த அடி தாடையில் வாயை அசைக்கமுடியவில்லை நசுங்கித் தெறித்த விதைகள் பிய்ந்து குருதி பீச்சும் முன் தலை துவண்டு தொங்குகிறது.  அப்போதும் அவனது காதுகளில் கரகரப்பான அந்த குரல்..

“ஆமாம் போர் முடிந்துவிட்டது. இனி அபாயமில்லை எல்லோரும் வாருங்கள் உண்பதற்கு முன்பாக கைகளைக் கழுவுவோம்”

சமாதிகளாலான அந்த அழகிய கடற்கரையிலிருந்து கேட்கிறது. அந்த குரல். அதனாலென்ன போகிற போக்கில் சிங்கத்துக்குப் பிறந்த கயவன் துப்பாக்கி பயனட்டால் குற்றுயிராய் இருப்பவன் மார்பில் குத்துகிறான். கைதியின் காயத்திலிருந்து குருதியும், நீரும் கொலைகாரனின் கண்களின் மீது தெறிக்கிறது. அந்த குருடன் ஒரு போதும் பார்வை பெறப்போவதில்லை.

“ஆமாம் போர் முடிந்துவிட்டது. இனி அபாயமில்லை எல்லோரும் வாருங்கள் உண்பதற்கு முன்பாக கைகளைக் கழுவுவோம்”

அந்த குரலைத் துளைத்துக்கொண்டு குண்டுகள் சீறிப்பாய்கிறது. குழிகளில் பதுங்கிய சீருடையாலான குழந்தைகள் சிதறடிக்கப்படுகிறார்கள். தப்பியோட முடியாத மனிதர்களுடன் வீடுகள் பற்றியெரிகின்றன.

அய்யோ பாவம் இன்னமும் குருடாகாத என் கண்களைச் சபிக்க விரும்புகிறேன். அந்த நரகத்தின் காட்சிகளிலிருந்து என்னால் தப்பியோட முடியவில்லை.

ஏற்கனவே விரல்கள் சிதைக்கப்பட்டுக் கட்டப்பட்ட ஒருவனின் ஆள்காட்டி விரல்கள் வெட்டியெடுக்கப்படுகிறது.

அதோ அந்த சுவரோரத்தில் உட்கார்ந்திருக்கிற இளைஞர்கள் விசாரணை முடிந்து சாவுக்காகக் காத்திருக்கிறார்கள், அவர்களின் கண்கள் பிடுங்கப்பட்ட விழிப்பள்ளங்களிலிருந்து ரத்தமும், நீரும் வழிந்துகொண்டிருக்கிறது. அவர்கள் உடலில் இன்னமும் கொஞ்சம் ரத்தம் இருப்பதாக நரகத்தின் காவலர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொள்கிறார்கள்.

தங்கள் குறிகளை மறைக்க அவசியமற்ற கைதிகள் இருட்டான இவ்வுலகில் மரணம் வரும் திசைக்குச் செவிகளை ஒப்புக் கொடுக்கிறார்கள்.

எல்லா திசைகளிலும் அந்த ஒலி கேட்கிறது. தங்கள் மூளையைத் துளைக்கப் போகும் இரண்டு குண்டுகளைத் தவிர்த்து அவர்கள் இவ்வுலகில் விரும்ப வேரென்ன இருக்கிறது.?
ரத்தம் தேங்கிய தரையில் என் பாதங்கள் மூழ்கியெழுகிறது. உயிரே கூசுகிற நரகத்திலிருந்து தப்பி ஓடுகிறேன்.

மொத்தமும் நரகமாயிருக்க எங்கு? ஓடுவது… கரும்புகை படலங்கள் அடங்கி விழித்த தருணம்  இன்னமும் விடிந்திருக்கவில்லை …..

நரகத்திலிருந்து மீண்ட போது பாம்பு என் மீதமர்ந்து படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது. இப்போது கேள்வி கேட்பது என் முறை ஏனோ எனக்கு இப்போது அச்சமேயில்லை, பாம்பின் நஞ்சேறிய போதையில் வரும் அந்தக் காட்சிகளின் முன் பாம்பு ஒன்றுமில்லை. பரமபத முகமுள்ள  பாம்பு என்னை ஆரத்தழுவி அணைத்துக்கொள்ளப் பதிலுக்கு முத்தமிட ஆசையாயிருக்கிறது. பாம்பு அவ்வளவு மோசமானதல்ல இப்போது நான் பாம்பை விரும்புகிறேன். அதன் சுமை இன்பமாயிருக்கிறது. அதனிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன், நரகத்திலிருந்து மீண்டு வந்த நடுக்கத்தில் அழகான பாம்பை நான் காதலிக்கிறேன்.

காதல் காய்ச்சலால் என் உடல் நடுங்குகிறது. அழகான அதன் உதட்டை நாவால் ஈரப்படுத்தி என்னை முத்தமிடுவது போல் பார்க்கிறது. பயங்கரமான மனிதர்களைவிடப் பாம்புகள் பயங்கரமானவையல்ல…அந்த பாம்பை நான் காதலிக்கிறேன். என்னைப்போலவே அதுவும் என்னைக் காதலித்தால் எவ்வளவு சுகமாக இருக்கும் ஆயிரம் கற்பனைகள் மண்டைக்குள்ளே, என் கேள்விக்காக அது காத்திருக்கிறது.
“அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா”

எனது கேள்விக்குப் பதில் தெரியவில்லையோ என்னவோ கேள்வி கேட்ட நொடியில் பாம்பு மறைந்துவிட்டது.

என் நாக்கு இரண்டாகப் பிளந்துகொண்டு உதட்டுக்கு வெளியே நீண்டு துடிக்கிறது. என்னுடலே பாம்பாக மாறிக்கொண்டிருக்கிறது, பளபளவென மின்னி நெளிகிறேன். அச்சமூட்டிய பாம்பைத் தேடுகிறேன், அதன் மீதான காதலில் நெஞ்சு அலைகிறது. அந்தப் பாம்பு இல்லாமல் எனக்கு வாழ்வே கிடையாது .அதன் மினுமினுப்பில் என்னுள்ளம் மயங்கித் துடிக்கிறது..அது இல்லாத உலகம் எப்படியிருக்குமோ? என் உள்ளம் கவர்ந்த பாம்பே வா விரைந்து வா வந்து என் கேள்விக்கான பதிலைச் சொல் பதில் தெரியாமல் போனால் எனக்கு உன்னைக் கடிக்கும் வாய்ப்பையாவது தா என் விடமேறிய போதையில் நீயும் அந்த நரகத்தின் வாழ்வை அனுபவித்துவிட்டு வா, என் கதறல் அதற்குக் கேட்டிருக்குமோ என்னவோ அதோ வந்துவிட்டது. அட எவ்வளவு அழகான உயிர் என்ன மினுமினுப்பு, படத்தை விரித்துக்கொண்டு சீற்றத்தோடு அசைந்தாடுகிறது.

“அவர் இருக்கிறார்” அந்த பதில் உண்மையா பொய்யா யாருக்கும் தெரியாததுபோல் எனக்கும் தெரியாது  கடித்துக்கொள்ள யாருக்கு உரிமை இருக்கிறது என்றும் எனக்குத் தெரியவில்லை.  அதைச் சேர்த்தணைத்துக்கொள்ள ஆசையாய் கை நீட்டுகிறேன்.

நான் எதிர்பாராத நேரத்தில் என் இரண்டு கன்னங்களிலும் முத்தமிடுகிறது. என்னுடலைச் சுற்றி வளைக்கிறது,  நானும் பாம்பைத் தழுவுகிறேன், “எல்லாம் அழிந்துவிட்டது இனி என்னதான் நடக்கும்” என்கிற என் கேள்விக்கு என்னைத் தீவிரமாக அணைத்தபடி “சிதைந்த பூமியும் நசுக்கப்பட்ட சில மனிதர்களேனும் இருக்கிறார்கள் தானே அவர்கள் சும்மாயிருக்கமாட்டார்கள் அறுபடாத விலங்கென்று எதுவுமேயில்லை இறுதிப்போர் இன்னும் துவங்கவில்லை”

நாங்கள் இருவருமே மாறி மாறி பிளவுண்ட நாக்குகளால்…..


-கரன் கார்க்கி

1 COMMENT

  1. கருப்பர்நகரத்தைவிட, இந்த இரவு என்னை தூங்கவிடாமல் செய்து விட்டது உங்களின் “பாம்பு நான் நரகம் ” கதை .. sorry இதை கதையாக பார்க்க முடியவில்லை அத்தனையும் நிஜம்… நீங்கள் சொல்ல வந்த விசயத்தை அற்புதமாக சொல்லிவிட்டீர்கள் .. இதையெனது fb இல் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்… உங்கள் அனுமதியுடன். நன்றி கார்க்கி & கனலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.