சந்திரா தங்கராஜ் கவிதைகள்

  • மலைக்குத் திரும்புதல்

வரையாடுகளும் முள்ளம்பன்றிகளும்
மலைமான்களும் கரடிகளும் தந்தம் பெருத்த யானைகளும்
குதித்தாடும் மந்திகளும் கன்னிமார்சாமியும்
செந்நிறஅந்தியும் பூக்கும் மலையில் பிறந்தேன்
சுனையின் குளிர்ந்தநீர் என்னை பருவமாக்கியது
இரண்டு குன்றுகளை ஈன்றெடுத்தேன்
என் பிள்ளைகள் ஆடுகளை வளர்த்தார்கள்
பாறைப் புடவுகளில் படுத்துறங்கிய ஆடுகள்
குளிர் இரவொன்றில் சமவெளிக்கு நகர்ந்தபோது
ஆடுகளைத்தேடி குன்றுகளும் தரை இறங்கின
நான் அவர்களைத் தேடினேன்
வெகு தூரம் வெகு நீண்ட காலம் நாங்கள் தேடிக்கொண்டே இருக்கிறோம்
எங்காவது குன்றுகள் கிழ ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தால் நிறுத்திவையுங்கள்
நாங்கள் திரும்பி நடக்க வேண்டும் எங்கள் மேற்கு மலைக்கு.

 

  • காடோடி

அப்பாவிற்கு நீளமான கால்கள்
கையில் விதைதெவசங்களுடன் எப்போதும் காடோடிக்கொண்டே இருந்தார்
கூடவே நாங்களும்

“சாவதற்கு ஒரு நிலம் வேண்டும் மகனே”
அப்பத்தாவின் ஓயாத வேண்டல்
அன்று மேற்கு வழிப் பயணம்
முகத்தில் பனிவெயிலை ஏந்தியபடி தடிசங்காட்டுக்குள் நடந்தோம்
அம்மாவின் தலைமேலிருந்த கூடையிலிந்த பருப்பலகை காட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தது.
அவள் இடுப்பிலிருந்து தங்கை நழுவிக்கொண்டே வந்தாள்.
மரப்பொந்துக்குள் குஞ்சு பொறிந்திருந்த இருவாச்சி இணைவரவுக்காய் குரலெழுப்பிக்கொண்டிருந்தது.
“மனுசங்க நடமாட்ட இல்லாத எடத்திலதான் இருவாச்சி குஞ்சு பொறிக்கும்” என்றார் அப்பா
அதற்குமேல் நடக்க முடியாத அப்பத்தா மூட்டையைக் கீழிறக்கினாள்
அண்ணன் தன் எருமைக்கன்றுக்கு புல்லறுக்கப் போய்விட்டான்
நான் அத்திப்பழங்களை மண்ணூதி தின்றுகொண்டிருந்தேன்
மூன்று கற்களை தேடியெடுத்து அடுப்புக்கூட்டினாள் அம்மா
அப்பா குடிசைபோட கம்புகளைவெட்ட
நடுவானில் சூரியன் அசையாது நின்றது.

 

  • வாழ்வெனும் தேநீர்

பொட்டல் காட்டில் கூட்ஸ் வண்டி கோளாறாகி நிற்பதைப்போல
நடைப்பயிற்சியில் இருந்த அந்த மனிதன் திடுக்கிட்டு நிற்கிறார். .
வெறிச்சோடிக்கிடந்த சாலையில் உதிர்ந்த பன்னீர்பூவை நுகர்ந்து கொண்டிருந்த நாய்
அவரைப் பார்த்துக் குறைத்தது.
அங்கிருந்து நைஸாக நழுவிச் சென்ற அவருக்கு தோன்றியது இதுதான்
வாழ்வு கொல்லக் கொல்ல எரியும் தீ
மந்தை மந்தையாய் சிதறியோடும் ஆடுகள்
பித்தமேறி பிதற்றும் ஞாபகங்கள்.

எழுபதில் பிறந்த அவருக்கு பாடு ஓய்ந்தபாடில்லை
ஒடிசலான பெண்ணின் இடுப்பைப் போன்று சுருங்கிவிட்ட வாழ்வை கொலை செய்ய முடியாமல் சர்க்கரை மாத்திரையை விழுங்கிக்கொண்டிருக்கிறார்
நல்ல வேளை காமம் தணிக்க கைபேசி எந்நேரமும் இருக்கிறது
தனியாக ஒரு அறையும் கிடைத்துவிட்டால் அவளை நினைத்து எந்தப் பெண்ணையும் புணரலாம்
அவளை புணரும்போது எந்த பெண்ணையோ நினைத்து புணர்ந்ததைப்போல.

காலம் சிதறிவிட்டது
தனக்குள் இருந்த நாடோடியைத் தொலைத்துவிட்டவரிடம்
மிச்சம் இருப்பது பழைய பாடல்கள்தான்
மாம்பூவே சிறு மைனாவே பாடலை பாடியபடி அவருக்கு ஒரு யோசனை வருகிறது
தன் படுக்கை விரிப்பில் அமராத அவள் தலையை ஒரே அடியில் பிளந்துவிடலாம்
என்ன மதிய உணவை கொஞ்சம் ருசியாக சமைத்துக் கொடுக்கிறாள்
முடிவை மாற்றிக்கொண்டு தெருவில் இறங்கிச் சென்றவர் நினைத்துக் கொள்கிறார்
வாழ்வு ஒரு சுதந்திரமான தேநீர்
அது எப்போதும் தெரு முக்கில்தான் கிடைக்கிறது.


-சந்திரா தங்கராஜ்.

6 COMMENTS

  1. ‘நாங்கள் திரும்பி நடக்க வேண்டும் எங்கள் மேற்கு மலைக்கு’
    ‘சாவதற்கு ஒரு நிலம் வேண்டும் மகனே’
    ‘ஒடிசலான பெண்ணின் இடுப்பைப் போன்று சுருங்கி விட்ட வாழ்வை கொலை செய்ய முடியாமல் சர்க்கரை மாத்திரையை விழுங்கிக்கொண்டிருக்கிறார்’
    வாழ்வின் மீதமிருக்கும் தீர்க்கமான தருணங்களையும் அதன் ரகசியங்களையும் தேடியெடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்.

  2. கவிதைகள் அருமை👌👌👌

    வாழ்வெனும் தேநீர் கவிதை👌👌👌

  3. மீண்டும் கவிதைக்கும் திரும்பியிருப்பது, பால்யம் குதித்து அலைந்த மலைச்சரிவுகளுக்குத் விரும்பியதாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்வின் ஈரத் தடங்களில் புதிய சொற்கள் ஊற்றெடுக்கின்றன. “வாழ்வு ஒரு சுதந்திரமான தேநீர். ” கவிதைகள் தொடரட்டும்.

  4. எளிமையான மிக இயல்பான வரிகள்…
    கைபிடித்து உடன் பயணிக்கும் பழகிய சொற்கள்…
    பயமுறுத்தாத மொழி….
    வாஞ்சையுடன் பல முறை படித்து மகிழ்ந்தேன்..
    தொடருங்கள்..தங்கள்
    கவிதைப் பயணம் மேலும் சிறக்கட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.