இலைகளற்றக் கிளைகளில்
விளையாட யாருமற்ற
கிரணங்கள்,
நிறங்களைத் துறந்து
தியானித்து
உக்கிர வெண்மையை
ஓலமிடுகின்றன
நிறங்களின் வெறுமையில்
நிறையும் வெண்மையில்
திசையெங்கும் பிரதிபலித்து
மீண்டு வந்து சேரும்
மேலும் சிறிதளவு
வெண்மை.
தனிமையின் விடமேறி
நீலம்பாரித்து நிற்கும் வானம்
மேகங்கள் அற்று
மேலும் வெறுமை கூட
நீலம் அடர்கிறது..
பனி பூத்து பனி கொழிக்கும்
வனமெங்கும்
தானே எதிரொளித்து
சோம்பிக் கிடக்கும்
தூய வெண்மையின்
பொருளின்மையில்,
எப்படியாவது
ஒரு துளி அர்த்தத்தை
சேர்த்துவிட
முயல்வது போல,
பசியின் களைப்பில்
வளை நீங்கி
வெளிவந்து நிற்கும்
மெலிந்த அணிலின்
மரத்தின் வேரோரம்,
ஏரியின் பரப்பில்
புகையெனப் படர்ந்து எழும்பும்
குளிர்ந்து உறையும்
நீரின் ஆவி.
புராதான ஓவியம் ஒன்று
உயிர் கொண்டு
அசையும்,
மெல்ல.