இனிப்பு மாயாவி

னப்பூர் நாட்டைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாடு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். உச்சி மலையின் மீது நின்று முழு நாட்டையும் பார்த்துவிடலாம். அந்த அளவுக்கு சிறிய நாடு என்றால் பாருங்களேன்! இதனை நாடு என்று சொல்வதை விட குட்டி தீவு என்று சொல்லலாம். ஆம், வனப்பூர் நான்கு பகுதிகளிலும் கடல்களால் சூழப்பட்ட அழகிய குட்டித் தீவு. இதனால் மற்ற நாடுகளுக்கும் வனப்பூருக்கும் இடையே பெரிய தொடர்பே இருக்காது.

கப்பல் போக்குவரத்து குறைவு என்பதால் வனப்பூர் மக்கள் வேறு நாடுகளுக்குச் செல்வதும் இல்லை, மற்றவர்களும் இங்கு வருவதும் இல்லை. சிறிய தீவாக இருந்தாலும் வனப்பூரில் இல்லாத வளங்களே கிடையாது. தங்களுக்குத் தேவையான உணவு உட்பட அனைத்து பொருட்களையும் அங்குள்ள மக்களே தயார் செய்து கொள்கிறார்கள்.
பரப்பளவில் மட்டுமல்ல மக்கள் தொகையிலும், வனப்பூர் சிறிய நாடுதான். அங்கு மொத்தமே ஐநூறுக்கு குறைவான மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். அங்குள்ள மக்களுக்கு இப்போது ஒரு தலைவலி காத்திருந்தது.

இவ்வளவு நாட்கள் தூக்கத்தில் இருந்த மாயாவி இப்பொழுதுதான் தூக்கம் கலைந்து எழுந்திருந்தான். பல ஆண்டுகள் தூங்கிக்கொண்டிருந்ததால் உணவு உட்கொள்ளாத அந்த மாயாவிக்கு இப்போது பெரும்பசி எடுத்தது. கண்ணில் தென்பட்ட பல உணவுப்பொருட்களை எல்லாம் எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான். குழந்தைகள் கையிலும், வீடுகளிலும் இருந்த உணவுப் பொருட்களையும் விட்டு வைக்கவில்லை.

மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மாயாவியை எதிர்த்தால் ஏதேனும் செய்துவிடுவானோ என அஞ்சினர். இதனால் அந்த மாயாவியை யாரும் எதிர்ப்பதுமில்லை, கேள்வி கேட்பதும் இல்லை. மக்கள் தங்களிடமுள்ள உணவுப் பொருட்களை மாயாவிக்கு கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தனர்.

அங்கிருந்த பெரிய ஆலமரத்தடியில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்த மாயாவி முன் சாப்பாடு, குழம்பு, ரசம், காய்கறிகள், பழங்கள், கிழங்குகள் என்று எல்லாம் பெரிய பெரிய பாத்திரத்தில் வரிசையில் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த சிறுமியின் கையில் இருந்த தேன்மிட்டாய்களைப் பார்த்த மாயாவி, தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே தனது வலது கையை நீளமாக நீட்டி பிடுங்கி, தனது அகண்ட வாயின் கூர்மையான பற்கள் எல்லாம் தெரியும் படி சிரித்துக்கொண்டே, அத்தனை தேன்மிட்டாய்களையும் வாயினுள் போட்டு சுவைத்தான்.

தேன்மிட்டாயின் சுவை மாயாவிக்கு வெகுவாக பிடித்துவிட்டது. தனக்கு முன்னிருந்த மற்ற உணவுப்பொருட்களை எல்லாம் நிராகரித்து விட்டு, தனக்கு இப்படி இனிப்பான உணவுதான் வேண்டும் என்று கட்டளையிட்டான். அங்கிருந்த மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தங்கள் வீடுகளில் இருந்த சர்க்கரை உள்ளிட்ட மற்ற இனிப்புகளைக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

மக்கள் கொண்டு வந்து கொடுக்கக் கொடுக்க அத்தனையும் தின்று தீர்த்துவிட்டான். “இன்னும் வேண்டும். சீக்கிரம் கொண்டுவாருங்கள்” என கேட்டுக்கொண்டே இருந்தான். தங்கள் வீடுகளில் இருந்த கொஞ்ச நஞ்ச சர்க்கரையையும் கொண்டுவந்து அவன் முன் வைத்துவிட்டனர்.

“என்ன நிற்கிறீர்கள், ஓடிப்போய் இன்னும் கொண்டு வாருங்கள்” என்றான் மாயாவி.
“இன்னுமா! சர்க்கரை அவ்வளவுதான், நாட்டில் யார் வீட்டிலும் இனி சர்க்கரை கிடையாது ” என்றான் ஒருவன்.
” என்னது சர்க்கரை இல்லையா? அப்படியென்றால் மீண்டும் சர்க்கரை எப்போது கிடைக்கும்?” என்றான் மாயாவி.

“மீண்டுமா! கரும்பு இன்னும் அறுவடை செய்யவில்லை. கரும்பு வெட்டிய பின்புதான் அதிலிருந்து சர்க்கரை தயாரிக்க முடியும். எப்படியோ இன்னும் சில வாரங்கள் ஆகும், அதுவரை சர்க்கரையோ, அதிலிருந்து இனிப்போ கிடையாது” என்றான் மற்றொருவன்.
“என்னது! இன்னும் சில வாரங்கள் ஆகுமா? என்னால் இனிப்பு சாப்பிடாமல் இருக்க முடியாது, எனக்கு இப்பொழுதே வேண்டும்” என்று சொல்லியவாறு தன் முன்னிருந்த உணவுப் பொருட்களை உதைத்துத் தள்ளி விட்டு கரும்புக்காட்டை நோக்கி வேகமாக நடந்தான். அதைப் பார்த்த மக்களுக்கு கரும்புக்காட்டை நோக்கி ஒரு யானை கூட்டமே போவது போல் இருந்தது, கரும்புக்காட்டின் கதி இனி அவ்வளவுதான் என நினைத்தனர்.

கரும்புக் காட்டுக்குச் சென்ற மாயாவி அங்கிருந்த கரும்புகளை எல்லாம் தின்ன ஆரம்பித்தான். “ஆஹா இனிக்கிறது, சுவை பிரமாதமாக உள்ளது ” என்றபடி வனப்பூர் நாட்டில் உள்ள கரும்புக் காட்டை எல்லாம் ஓரிரு நாட்களிலேயே தின்று தீர்த்துவிட்டான்.
கரும்புக்காட்டையே தின்ற பிறகும் இன்னும் அவனுக்கு இனிப்பு பைத்தியம் விடவில்லை. “எனக்கு இன்னும் இனிப்பான பொருட்கள் வேண்டும், உடனடியாக கொண்டு வாருங்கள்” என்றான் மாயாவி. மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, வீட்டிலும் இனிப்பான பொருட்கள் இல்லை, காட்டிலும் கரும்பு இல்லை இனி இனிப்பான பொருளுக்கு எங்கு போவார்கள்.
“சீக்கிரம் கொண்டுவாருங்கள், எனக்குப் பசிக்கிறது” என்றான் மாயாவி.
என்ன செய்வதென்று யோசித்த மக்கள், தங்கள் தோட்டத்திலிருந்து தேன்வாழை, செவ்வாழை, சப்போட்டா உள்ளிட்ட இனிப்பான பழ வகைகளையும், சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற கிழங்குகளையும் அவன் முன் கொண்டு வந்து வைத்தனர். தன் முன் வைத்த பொருட்களையெல்லாம் சிரித்துக்கொண்டே தலையை ஆட்டி ஆட்டி தின்னத் தொடங்கினான்.
கொண்டுவந்து வைத்த பழங்களும், கிழங்குகளும் இரண்டே நாட்களில் தீர்ந்து போக, மீண்டும் இனிப்பானப் பொருட்களை கொண்டுவருமாறு மக்களுக்கு கட்டளையிட்டான் மாயாவி.
மக்களுக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. வனப்பூர் நாட்டில் இனி மருந்துக்குக் கூட துளி இனிப்பு கிடையாது. இருந்த எல்லாவற்றையும் தின்றே தீர்த்து அந்த மாயாவி. இப்படியே போனால் ஆறு சுவைகளில் இனிப்பு இல்லாமலே போய்விடுமோ என மக்கள் வருந்தினர்.

மாயாவி விடுவதாக இல்லை, உடனே தனக்கு இனிப்பான உணவுப்பொருட்கள் வேண்டுமென்று மீண்டும் சொல்ல, “நாங்கள் நாடு முழுவதும் தேடிவிட்டோம். ஒரு துளி இனிப்பு கூட இனி இல்லை” என்றார்கள்.

“அப்படியென்றால் இனிப்புக்கு நான் எங்கே போவேன்?” என்று கேட்டான் மாயாவி.
இதுதான் நல்ல சமயம் என்று யோசித்த ஒருவன், “அந்த பெரிய கடலைத் தாண்டிச் சென்றால் உனக்கு நிறைய இனிப்பான பொருட்கள் கிடைக்கும்” என்றான்.
“அப்படியா! இதோ அங்கு செல்கிறேன்” என்றபடி கடலை நோக்கி புறப்பட்டான் மாயாவி.
“ஒருவழியாக மாயாவி சென்றுவிட்டான் என மக்கள் பெருமூச்சு விட்டனர், ஆனால் இனி நாம் இனிப்பு சுவைக்கு என்ன செய்ய?” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு சிறுமி மாயாவி அமர்ந்திருந்த இடத்தில் பாதி நசுங்கிய நிலையில் கிடந்த தேன் மிட்டாயை எடுத்துக் கொண்டு வேகமாக சோலையை நோக்கி ஓடினாள். இதைப் பார்த்த மக்கள் சிறுமியை பின்தொடர்ந்து சென்றனர். சோலைக்குச் சென்ற சிறுமி தேன்மிட்டாயில் இருந்த தேன்துளிகளை அங்கிருந்த பூக்களில் விட்டாள்.

“இனிப்பு சுவையை இந்த பூக்களில் பாதுகாத்து வைத்துள்ளேன்” என்றாள் சிறுமி. அதைப்பார்த்த மக்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி.
இப்படித்தான் பூக்களுக்குள் தேன் வந்தன. மாயாவியிடம் இருந்து இனிப்பைப் பாதுகாத்த நிம்மதியில் மக்கள் பெருமூச்சு விட்டனர்.
என்ன குழந்தைகளே! இனி இனிப்பு சாப்பிடும்போது இந்த மாயாவியை நினைத்துக்கொள்வீர்கள் தானே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.