- புன்னகைகள்தாம்
புன்னகைகள்தாம் மலர்கள் என்பதையும்
யாருடைய புன்னகைகள் இவை என்பதையும்
யாருடையதுமான காதற் பேருலகையும்…
கண்டுகொண்ட மனிதனுக்குத் தேவைப்படுவாரோ
கடவுள்களும் தத்துவ ஆசிரியர்களும்?
- இங்கிருந்துதான்
இங்கிருந்துதான் நாம்
எதையும் ஏற்றுக்கொண்டும்
எதையும் மறுத்துக்கொண்டும்
இருக்கலாம்.
இங்கிருந்துதான் அது
நம்மை தேர்ந்துகொண்டு
நிகழவேண்டியதையெல்லாம்
நிகழ்த்துவதைப் பார்க்கலாம்.
- என்ன செய்ய வேண்டும்
என்ன செய்ய வேண்டும்
எனத் தெரிந்தவன்
எதையும் செய்யாமல்
அதைத்தான் செய்துகொண்டிருப்பான்.
என்ன செய்யவேண்டும் என்பது
முன் தீர்மானிக்க முடியாததால்
அதை யாரும் சொல்லிக்கொடுக்க முடியாது.
ஒருவேளை அவன் அதனை
சுட்டிக் காட்டக் கூடலாம்
அன்பு வழிகாட்டக் கூடும்
அதற்கு
அன்பை அறிந்துகொள்ளும்
ஆற்றல் நமக்கு இருந்தாக வேண்டும்
அதற்கு
நம் ஆற்றல்களை
மூடி முறியடித்திருக்கும்
களைகளையெல்லாம்
நீக்க தெரிந்திருக்க வேண்டும்
அதற்கு
காலத்தையும் இடத்தையும் கடந்த
தூய்மையை நாம்
கண்டடைந்திருக்க வேண்டும்.
- விசாரணை
ஒளியைப் பற்றி
இருளிடமோ
இருளைப் பற்றி
ஒளியிடமோ
எழுத்துக்களைப் பற்றி
பேனாவிடமோ
பேனாவைப் பற்றி
எழுத்துக்களிடமோ
கேட்காதீர்கள்.
எதைப் பற்றியும்
அதன் அதனிடமே
விசாரியுங்கள்
அல்லது அவ்வவற்றின்
பேரின்மைப்
புலத்திடமிருந்து…
- முதலில்
முதலில் நாம் நம்முள்ளே
ஊற்றெடுக்கும் எண்ணங்களாலான
இச்சைகளையெல்லாம்
துறந்திருக்க வேண்டும்.
அப்புறம்
முற்றாகவே எண்ணங்களையெல்லாம்
துறந்திருக்க வேண்டும்.
அந்த மாதிரியான ஒரு நிலைமையில்தான்
ஒரு பட்டுப்பூச்சியின் முன் குந்திவிட்டேன்
ஒரு பெண்ணைப் பார்த்தேன்
இயற்கையின் பேரழகையெல்லாம் கண்டேன்
தன்யனாய்
ஞானியாய்
கவிஞனாய்
காதலேயாய்
கடவுளின் ராஜ்ஜியத்தைச் சுட்டும்
மனிதனேயாய் ஆனேன் அன்பா!
- சூரியகாந்தியும் அவர் தலையில் வந்தமர்ந்த பூக்களும்
இடுப்பிலும் தலையிலும்
கூடை சுமந்துகொண்டு
பூ விற்கச் சென்றுகொண்டிருந்தார்
சூரியகாந்தி.
வாங்குவாரில்லாத சில பூக்கள்தாம் அவரை
அவர் தலையில் வந்தமர்ந்துகொண்டு
வேறு ஒரு தொழிலைச் செய்யச் சொல்லின
நான்கு சக்கரத் தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு
காய்கறிகள் விற்கச் சொல்லின
மக்களைக் கூவி அழைத்து அவர்முன் கூட்டின.
ஏழை என்றும் பணக்காரர் என்று பார்க்காமல்
எல்லா வீதிகளிலும் அவலைந்தார் சூரியகாந்தி.
கொள்ளை மலிவு கொள்ளை மலிவு என
வாங்கிச் சென்ற மக்களே நாளடைவில்
சூரியகாந்தியின் முகத்தைப் பார்த்து
கொள்ளை அன்பு கொள்ளை அன்பு என்றே
ஆரத் தழுவத் தொடங்கினர் அவரை.
பிரிய மனமில்லாத அன்பினாலே
அவர் அந்தியிலும் ஒரு சாப்பாட்டுக் கடையை விரித்தார்
ஏழைத் தெருமூலை ஒன்றில்
ஒரு தீர்க்கதரிசியைப் போலே,
கொள்ளை அன்பு கொள்ளை அன்பு எனும்
பேரிசையே எப்போதும் ஒலிக்க.
- பெருஞ்சுடர்வடிவம்
தேவதைகளின்
பின்னழகாய்
விரிந்த கருங்கூந்தல்
சென்றுகொண்டிருந்தது
அவன் முன்-னழகாய்!
அறியாமையின்
ஒளியும் இருளுமான
பெருஞ்சுடர்வடிவம்!
- நீ
வனப் பூங்காவின்
பயிற்சி நடைபாதையில்
பின்தொடரும் ஆசையைத் தூண்டியபடி
வாழ்வைத் தூண்டியபடியும்தான்
அழகும் முற்றுறுதியும்
ஒலிக்கும் நடையுடன்தான்
சென்றுகொண்டிருந்தார் அவர்.
நீ இல்லையா அது?
என்றால் கஷ்டம்தான் அன்பா!
- பற்றத் துடிக்கும்
பற்றத் துடிக்கும்
கட்டுடல் இடை அசைய
வனப் பூங்காவின்
நடைப்பயிற்சியில் ஒரு பெண்.
அவர் கட்டுடல் அழகையே
தேவதையாய் வடிக்கச்
செதுக்கிக் கொண்டிருந்தது
பற்றற்றான் பற்றிய வெளியில்
பரந்து திரிந்துகொண்டிருந்த காற்றும்
மொத்த உயிர்களையும் அன்பால்
பொத்தி அணைத்துக்கொண்டிருக்கும்
பொன்குளிர் வெளியும் ஒளியும் நிழலும்…
- ஒரு பாலுயிரினமாய்…
ஒரு பாலுயிரினமாய்
விளையாடிக் கொண்டிருந்த
இடத்திலிருந்து
இருபாலுயிரிகளாய்
ஒதுங்கச் சென்றார்கள்
சேட்டை பண்ண.
அப்போதியிருந்துதானே, அன்பா
தொடங்கிற்று இந்த
துயர்மலி உலகின் பெருவலி?