தஸ்தாயெவ்ஸ்கியின் திகிலூட்டக்கூடிய டெமான்ஸ்-ஓரான் பாமுக்

னது பார்வையில் டெமான்ஸ் (Demons) நாவல் எக்காலத்திற்குமான மிகச் சிறப்பான நாவல். முதன் முதலாக எனது 20வது வயதில் அந்த நாவலை வாசித்தேன். அது என்னில் ஏற்படுத்திய தாக்கத்தை இவ்வாறுதான் கூறவேண்டும் – “நான் ஸ்தம்பித்துவிட்டேன், அதிர்ச்சிக்குள்ளானேன், வேறெந்த நாவலும் என்னை இந்தளவிற்கு ஆழமாகப் பாதித்ததில்லை. மனித ஆத்மாவைப் பற்றி வேறெந்த கதையும் இந்தளவிற்கு விவரமான அறிவுடன் சொல்லப்படவில்லை.“அதிகாரத்தின் மீது மனிதனுக்குள்ள ஆசை, அவனுடைய மன்னிக்கும் குணம், தன்னைத் தானேயும் மற்றவர்களையும் ஏமாற்றும் திறமை, வெறுப்பவர்களிடம் அவன் காட்டும் அன்பு மற்றும் அவசியமான நம்பிக்கை, அவனுடைய பிடிவாதம் என அனைத்தும் எனக்கு நம்பிக்கை நம்பிக்கையின்மை என இரண்டையும் காட்டுவதாக இருந்தது. அரசியல், ஏமாற்றும் எண்ணம், மரணம் ஆகியவற்றில் இந்த குணங்கள் அனைத்தும் பிண்ணிப்பினைந்திருப்பதை தஸ்தாயெவ்ஸ்கி கவனித்திருப்பதுதான் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாவலின் வேகமான நடைக்கு இவைபோன்ற அனைத்து ஞானத்தையும் உள்ளடக்கி வெளிப்படுத்திய தன்மையை வியக்கிறேன். இவை இலக்கியத்தின் சிறந்த நற்பண்பாக இருக்கலாம், கதை நாயகர்கள் நாவலின் உச்சகட்டத்தை நோக்கி அவர்களே செலுத்திக்கொள்வது போல் மகத்தான நாவல்கள் அதன் கூர்த்தன்மைக்காக நம்மையும் ஈர்க்கிறது. நாம் கதைநாயகர்களை எவ்வளவு அதிகமாக நம்புகிறோமோ அந்தளவிற்கு அதிகமாக அவர்களுடைய சொற்களையும் நம்புகிறோம். தஸ்தாயெவ்ஸ்கியின் கதைநாயகர்கள் மீதும் அவர்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளுவதிலும் நான் எவ்வளவு அதிகமாக நம்பிக்கை வைத்துள்ளேனோ அந்தளவிற்கு அவரின் தீர்க்கதரிசனமான குரலின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன்.

எனது இதயத்தைத் தாக்குமளவிற்கான பயத்தை இந்த புத்தகம் ஏன் உண்டாக்கியது என்பதை விளக்குவது உண்மையிலேயே கடினமானது. குறிப்பாக சித்திரவதை மிக்க கொடூரமான தற்கொலைக் காட்சியின் சித்தரிப்பில் எ.கா. அணையக்கூடிய தருவாயிலிருக்கும் மெழுகுவர்த்தியும் இருட்டான அதன் மற்றொரு பகுதியும், பக்கத்து அறையிலிருந்து நிகழ்வுகளை கவனிப்பது போன்றதொரு காட்சி மற்றும் பயங்கரவாதத்தால் ஏற்படும் இரக்கமற்ற கொலை போன்ற வன்முறைச் செயல்களின் சித்தரிப்பாலும் நான் மிகவும் பாதிப்படைந்தேன். நாவலின் கதைநாயகர்கள் தங்களின் பிரம்மாண்ட் சிந்தனைகளுக்கும் குறுகிய நாட்டுப்புறத்தனமான வாழ்க்கைக்குமிடையே முன்னும் பின்னும் அலைந்து வாழும் காட்சி உண்மையிலேயே என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நாவல் வழியே தஸ்தாயெவ்ஸ்கி தன்னிடம் இருக்கும் மன தைரியத்தை மட்டுமல்லாமல் ஒரு சாகச துணிச்சலையும் உணர்ந்துள்ளார். இந்த நாவலை வாசிக்கையில் அன்றாட வாழ்க்கையின் சிறிய விவரங்கள் கூட கதைநாயகர்களின் பிரம்மாண்ட எண்ணங்களுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இத்தொடர்பை வாசிக்கையில் கிட்டத்திட்ட சித்தப்பிரமையின் பயங்கரமூட்டக்கூடிய உலகிற்குள் நுழைவது போன்ற அனுபவத்தைப் பெறுகிறோம். அங்கே அனைத்து சிந்தனைகளும் எண்ணங்களும் உயர் லட்சியங்களும் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

ரகசிய குழுக்கள், ஒன்றுடன் ஒன்று பினைக்கப்பட்ட அறைகள், புரட்சியாளர்கள், தகவல்களை சொல்பவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்தத் திகிலூட்டக்கூடிய உலகில் அனைவரும் அனைவருடனும் இணைந்திருந்து, அனைத்து எண்ணங்களுக்குப் பின்பும் ஒளிந்திருக்கும் மகத்தான உண்மைக்கு ஒருவித மூகமூடியாகவும் அதை அடைய வழிவகையையும் காட்டுகிறது. அது இந்த உலகத்திற்கப்பால் இருக்கும் வேறொன்று. அந்த உலகில் மனிதனின் சுதந்திரத்தையும் இறைவனின் இருப்பையும் கேள்விக்குட்படுத்தலாம். டெமான்ஸ் நாவலில் தய்தாயெவ்ஸ்கி இவ்விரண்டு மகத்தான சிந்தனைகளான – மனிதனின் சுதந்திரமும் கடவுளின் இருப்பையும் உறுதிசெய்ய தற்கொலை செய்துகொள்ளும் ஒரு கதைநாயகனை வாசகனுக்கு உருவாக்குகிறார். அதுவும் எந்த வாசகராலும் அந்த கதாபாத்திரத்தை மறக்க முடியாதளவிற்கு கச்சித நேர்த்தியுடன் உருவாக்கியுள்ளார். நம்பிக்கைகள், துல்லியமான எண்ணவோட்டங்கள், தத்துவ முரண்கள் ஆகியவற்றை தஸ்தாயெவ்ஸ்கி போன்று மிகச் சில எழுத்தாளர்களால் மட்டுமே உருவகப்படுத்தவோ காட்சிப்படுத்தவோ முடியும்.

தஸ்தாயெவ்ஸ்கி 1869ம் ஆண்டு தனது 48வது வயதில்தான் டெமான்ஸ் நாவலை எழுதத் தெடங்கினார். அப்பொழுதுதான் அசடன் நாவலை வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு நிரந்தரக் கணவன் என்ற குறுநாவலை எழுதி முடித்து கைப்பிரதியாக வைத்திருந்தார். கடன் கொடுத்தவர்களின் தொல்லையிலிருந்து தப்பித்து அமைதியான மனதுடன் எழுத இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஐரோப்பியாவிற்கு (ஃப்ளோரன்ஸ் மற்றும் ட்ரெஸ்டன்) சென்றுவிட்டார். நாத்திகவாதம், பெரும் பாவத்தை செய்தவனின் வாழ்க்கை போன்ற நம்பிக்கை நம்பிக்கையின்மை ஆகிய கருப்பொருளில் ஒரு நாவலை உருவாக்கும் எண்ணத்தை அப்போதே அவர் கொண்டிருந்தார். பாதி தாராளவாதி பாதி அராஜகவாதி என நாம் வரையறுக்கும் மறுப்புவாதிகளை (Nihilists) முழுமையாக வெறுத்தார். ரஷ்ய பாராம்பரியத்தை வெறுக்கும் அவர்களின் விரோத போக்கு மற்றும் மேற்குலக கலாச்சாராத்தை ஆதாரிக்கும் போக்கு ஆகியவற்றைக் கேலி செய்யும் வகையில் ஒரு அரசியல் நாவலை அவர் அப்போது எழுதிக்கொண்டிருந்தார். இவ்வாறான நாவல் ஒன்றை சில காலம் எழுதிக்கொண்டிருக்கும்போது திடீரென்று அதில் ஆர்வமிழந்து, ரஷ்ய செய்திதாள்களில் தான் வாசித்தும் தனது மனைவியின் நண்பரிடம் கேட்டும் அறிந்த ஒரு அரசியல் கொலை மீது மிகுந்த ஆர்வத்தைக் காட்டினார். இந்தச் செய்தி அவரை வலுக்கட்டாயமாக அந்த நாவலின் மீது அவரை ஆர்வமிழக்க செய்திருக்க வேண்டும். அந்த செய்தி என்னவெனில் அந்த ஆண்டு காவலாளிக்கு உளவுத் தகவல்களைத் தெரிவிப்பர் என நம்பப்படும் இவானோவ் எனும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை நான்கு நண்பர் சேர்ந்து கொலை செய்திருந்தனர் என்பதுதான்.

இளைஞர்கள் ஒருவரையொருவர் கொன்றுகொண்டிருந்த இந்தப் புரட்சிகர பாசறைக்குப் புத்திசாலித்தனமும், வஞ்சகமும், அரக்கத்தனமும் கொண்டிருந்த நெச்சாயேவ் தலைமைதாங்கினான். நாவலில் இவன் ஸ்டெஃபனோவிச் வெர்ஹோவென்ஸ்கி என்ற பெயரில் தோன்றுகிறான். உண்மையில் நடந்தது போன்றே நாவலில் அவனும் அவனது நண்பர்கள் (டோல்சென்கோ, விர்கின்ஸ்கி, ஷிகலேவ், லேம்ஷின்) ஆகியோர் தகவல் கொடுப்பவன் என நம்பப்படும் ஷதோவ் என்பவனை ஒரு பூங்காவில் கொன்று அவனது உடலை ஏரியில் வீசுகிறார்கள்.

இந்தக் கொலை ரஷ்ய மறுப்புவாதிகளும் மேற்கத்தியனரும் புரட்சிகர கற்பனாவாத கனவுகளைக் காணவும், நமது திருமணங்கள், நமது நண்பர்கள், நமது சுற்றுப்புறங்கள், நமது மொத்த உலகத்தின் மீதும் அதிகாரம் செலுத்துவதற்கு அவர்களுக்கிருக்கும் அதிகாரத்தின் மீதான வலுவான ஆசையைக் கண்டறியவும் தஸ்தாயெவ்ஸ்கிக்கு இந்தக் கொலை உதவியுள்ளது. அதனால்தான் ஒரு தொடக்கநிலை இடதுசாரியாக இந்தப் டெமான்ஸ் நாவலை வாசிக்கையில் இந்தக் கதை ரஷ்யாவினுடையதாக இல்லாமல் வன்முறையில் ஆழ வேரூன்றிய தீவிர அரசியலுக்கு அடிபணிந்த 100 ஆண்டுகளுக்கு முந்தைய  துருக்கியின் கதையை வாசிப்பது போன்று இருந்தது.

ஆன்மாவின் ரகசிய மொழியை தஸ்தாயெவ்ஸ்கி எனது காதிற்குள் ரகசியமாக சொல்வது போன்றும், உலகை மாற்ற வேண்டும் என்ற தீரா கனவிலும் அதை நிறைவேற்ற ரகசிய குழுவிற்குள்ளாக தங்களை ஒடுக்கிக்கொண்டு புரட்சியின் பெயரால் பிற மொழிகளைப் பேசுபவர்களையும் தங்களின் கனவை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் இழிவுப்படுத்தும் அச்சுறுத்தும் புரட்சியாளர்களின் சமூகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நாவலில் இருக்கும் அறியப்படாத உண்மை அல்லது தெய்வீக அமானுஷ்ய வெளிப்பாடு பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை என்று என்னை நானே கேட்டுக்கொண்டதை நினைவுறுகிறேன்.  நமது காலத்தைப் பற்றி சொல்வதற்கு இதில் நிறைய உள்ளன. இருந்தும் இந்த நாவல் இடதுசாரி வட்டத்தில் புறக்கணிக்கப்படுகிறது. அதனால்தான் இந்த புத்தகத்தை நான் வாசிக்கும்போது யாரும் அறியாத ஒரு ரகசியத்தை எனக்கு மட்டுமே இந்தப் புத்தகம் கூறியதுபோன்று இருக்கிறது.

நெச்சாயேவ் கொல்லப்பட்டு, டெமான்ஸ் நாவல் வெளிவந்து நூறாண்டுகளுக்குப் பிறகு இதே போன்றதொரு கொலை துருக்கியிலிருக்கும் ராபர்ட் கல்லூரியில் நடைபெற்றது. இது போன்ற தனிப்பட்ட காரணங்களும் என்னுடைய ஆச்சரியத்திற்குக் காரணம் எனலாம். புரட்சிக் குழுவிலிருக்கும் எனது வகுப்புத் தோழர்கள் சிலர் (மிகப் புத்திசாலியும் தீய எண்ணமும் கொண்ட கதாநாயகனின் தூண்டுதலில் (அதன்பிறகு அவன் மூடுபணி போல் மறைந்துவிட்டான்) அந்தக் குழுவில் ஒருவனைத் துரோகி என்று குற்றஞ்சாட்டி நம்பவைக்கப்பட்டனர். துரோகி என்று குற்றஞ்சாட்டப்பட்டவனின் மண்டையில் ஒரு மரக்கட்டையால் அடித்துக் கொன்று ஒரு இரும்புப் பெட்டியில் அவனது உடலை போட்டு படகில் பாஸ்பரஸைக் கடந்து சென்ற போது அவர்கள் பிடிக்கப்பட்டனர். “உனக்கு அருகிலிருப்பவனே மிகவும் ஆபத்தான எதிரி, அவ்வாறெனில் அவன் உன்னைவிட்டு ஒரு நாள் அகலப்போகிறான்“ என்ற இந்த சிந்தனைதான் அவர்களை அவர்களின் நண்பனையே கொல்லத் தூண்டியது. இந்த வரிகளை டெமான்ஸ் நாவலில் முதலில் வாசித்தப்போது அதை மிகவும் அணுக்கமாக உணர்ந்ததற்குக் காரணம் இந்த நிகழ்ச்சிதான். சில வருடங்களுக்குப் பிறகு அந்தப் புரட்சிக்குழுவிலிருந்த எனது நண்பன் ஒருவனிடம் அறிந்தோ அறியாமலோ இந்தப் டெமான்ஸ் நாவலில் இருப்பதைப் போன்றே உண்மையில் நீங்கள் செய்த ஒரு நிகழ்வை இந்த நாவல் சித்தரித்துள்ளது. அதை வாசிக்கிறாயா? எனக் கேட்டேன். ஆனால் அவன் நாவலை வாசிக்க பெரிதாக எந்த ஈடுபாட்டையும் காட்டவில்லை.

தஸ்தாயெவ்ஸ்கியின் டெமான்ஸ் நாவல் அச்சத்தையும் வன்முறையையும் அதிகமாகக் கொண்டிருந்தாலும், மிகவும் வேடிக்கையான மிகவும் நகைச்சுவையான நாவலாகும்.  தஸ்தாயெவ்ஸ்கி ஒரு முழுமையான நையாண்டிமிக்கவர். கரமசோவ் சகோதரர்கள் நாவலில் துர்கனேவின் கேலிச்சித்தரத்தை உருவாக்கியுள்ளார். தஸ்தாயெவ்ஸ்கிக்கு துர்கனேவ் என்பவர் நட்பும் வெறுப்பும் என இரண்டு முகமாக இருப்பவர். தஸ்தாயெவ்ஸ்கியின் பார்வையில் துர்கனேவ் மறுப்புவாதிகளையும் மேற்குலகினரையும் ஆதரிப்பவர். ரஷ்ய கலாசாரத்தை ஒரு படி கீழாக எண்ணுபவர். மேலும் அவரின் செல்வ நிலவுடைமை தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்வில் தொடர்ந்து ஒரு அழைகழிப்பையும் சங்கடத்தையும் மனதில் ஏற்படுத்தியது. ஒருவாறு தந்தையரும் தனயரும் நாவலுடன் விவாதிக்கும் வகையில் டெமான்ஸ் நாவலை தஸ்தாயெவ்ஸ்கி எழுதியுள்ளார் எனலாம்.

தஸ்தாயெவ்ஸ்கி இடதுசாரி தாராளவாதிகள் மற்றும் மேற்கத்தியவாதிகள் வட்டத்திற்குள்ளாக இருந்துள்ளதாலும், அவர்களைப் பற்றி நன்றாக தெரிந்ததாலும் அவ்வப்போது அவர்களைப் பற்றி மென்மையாக விவாதிக்க முடியாமல் போகிறது. இந்த நாவலில் ஸ்டீபன் ட்ரோஃபிமோவிச்சியின் முடிவைப் பற்றி எழுதியுள்ளார். இது ஒரு ரஷ்ய விவசாயி எதிர்பார்க்கும் முடிவும், அவர் எப்போதும் கனவு காணும் முடிவும் ஆகும். இதயத்திலிருந்து அணுக்கமாக வரும் இப்படியொரு நடையை வாசிக்கும் வாசகன் நாவல் முழுவதும் விரவியிருக்கும் பாசாங்குதனத்தைக் கண்டு மெய்மறந்துவிடுவான். இது ஏதோ ஒரு வகையில் முழுமையாகவோ முழுமையில்லாமலோ மேற்கத்தியமாக்கப்பட்ட புரட்சிகர அறிவுஜீவிகளுக்கு தஸ்தாயெவ்ஸ்கி விடைதருகின்ற வழியாக கருதுகிறார். இதன்மூலம் அவனது உணர்வுகளை, தவறுகளை பாசாங்குதனத்தை அமைதியான முறையில் வெளிப்படுத்த அவனைத் தூண்டுகிறார்.

மையத்திலிருந்து வெகு தூரமாக ஐரோப்பாவின் விளிம்பின் மேற்கத்திய கனவுடனான போராட்டத்திலும் இறைவன் மீதான சந்தேகங்களிலும் ஆட்பட்டு நம்மிடமிருந்து ஒளிந்திருக்கும் அறிவுஜீவிகளின் வேட்கக்கேடான ரகசியங்களை வெளிக்கொணரும் புத்தகமாகத்தான் டெமான்ஸ் நாவலை நான் எப்போதும் பார்க்கிறேன்.

 

குறிப்பு – தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய டெமான்ஸ் நாவல் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதால் நாவலின் பெயரை மொழியாக்காமல் புரிதலுக்காக ஒலிபெயர்ப்பு மட்டும் செய்துள்ளேன்.

ஆங்கில வழி தமிழாக்கம் -ரா.பாலசுந்தர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.