ஞானப் பழம்

“என்ன ஆனாலுஞ் செரி, மத்த மரத்துலருந்து ஒத்தப் பழத்தயாது பறிச்சித் திங்காம வுட மாட்டம்புல. சின்னப் பண்ணையாருன்னா எனக்கென்ன மயிரு? அவனுவோ பெரிய மத்தவனுவோன்னா  அவனுவளுக்க வெளைக்குள்ள வச்சிக்கணும். பாரு, நடத்துகனா இல்லையான்னு,” சூளுரைத்து நின்ற போதும் அவனையறியாமல் கால்கள் நடுங்கித்தான் நின்றன. மடித்துக் கட்டிய கட்டம் போட்ட லுங்கி, சோப்புக் கம்பெனி விளம்பர பனியன், எதற்கோ நேர்ந்து போட்டுக்கொண்ட தாயத்து, விடைத்து நிற்கும் திடமான உடல், அப்பனைப் போலவே கரடிக்குப் பிறந்த பயல் என்று பெயர் வாங்கக் காரணமான உடலெங்கும் படர்ந்து செழித்த கருத்த முடி. மாசானம் பார்க்க சுடலை மாதிரிதான்.

“மக்ளே, சும்மா பேச்சுக்குச் சொன்னா போய்ச் சாடிருவ போலருக்கு. கொட்டயக் கலக்கி விட்டுருவானுவோ பாத்துக்க. வெளையாட்டுக்குச் சொல்லல கேட்டியா? போன வாரம் வெளைக்குள்ள போன பன்னியளப் புடிச்சி உயிரோட எரிச்சிருக்கானுவோ தெரியுமா?” மாசானத்தின் தோளில் கைபோட்டபடி அக்கறையாக, சிறிது பதறிச் சொன்னான் சுயம்பு.

“பன்னிய எரிக்கட்டும், இல்லன்னா அவனுவோ சு…. எரிக்கட்டும். எனக்கு ஒரு மயிரும் இல்லல. எல்லாவனும் இவனுவள இப்பிடிச் சொல்லி சொல்லிதான் ஊருல பெரிய ஆளுவளா ஆக்கிட்டிய. பெரிய பண்ணையாருன்னா சொல்லு, எவ்ளோ நல்ல மனியன். எங்கப்பாவுக்கே நெறைய தடவ பைசா குடுத்துருக்காராம் பாத்துக்கோ. இவனுவோ ரெண்டு வேரும் குடுக்காட்டா கூட பரவால்ல, நம்ம கைல இருக்கதையும் உருவிட்டு விட்டுருவானுவோ பாத்துக்க. வெளங்காத்தப் பயக்களாக்கும்.”

“கைல பச இருந்தா எல்லாம் நடக்கும் மக்ளே. வுடு,” என்றவன் சற்று யோசித்து, “இப்ப என்ன டே, ஒனக்கு அவனுவ வெளைலருந்து மாம்பழம் வேணும், அவ்ளோதானடே, எனட்ட வுடு, எதாம் செய்வோம், என்ன?” என்று சிரித்தான் சுயம்பு.

“தாயிலிக்க மாம்பழம்… பெரிய மயிருல்லா.. நீ என்னல எனக்குச் சப்பச் சொல்லித் தாரது? ஒனக்க கண்ணு முன்னாலயே பறிச்சித் திங்கம் பாருல. தெம்பிருந்தா கூட வா பாப்பம். இல்ல, தொட நடுக்கம்னா சொல்லு, நம்ம செவப்பி வீட்டுக்கு அனுப்பி விடுகேன், எப்படி?” என்றதும் சுயம்புவின் முகம் சட்டென இருண்டு விட்டது. ஒன்றும் பேசாமல் நின்றவனின் அருகே வந்து, “செரிடே, கோவப்படாத, நமக்குள்ள என்னடே.. நம்ம போறோம், அவனுக்க பழத்த நசுக்கிக் கொட்டயத் துப்புகோம். என்ன?” என்றான் மாசானம்.

கோவில் கொடையின் கடைசி நாள் நள்ளிரவு பூசையின்போது சின்னப் பண்ணையார்களின் விளைக்குள் புகுந்து காவல் நாய்களைச் சமாளித்து அந்தப் பெருஞ்சிறப்பு வாய்ந்த மாமரத்தின் பழங்களைப் பறித்துத் தின்றுவிட்டு கொட்டைகளைச் சின்னவர்களின் வீட்டுக் கூரையிலேயே எறிந்து விட்டுத் தப்பி வருவதாகத் திட்டம். ஏதும் தவறாகும் பட்சத்தில் கையில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க முகமூடித் துண்டுகளும், உடலில் வழுக்கிக் கொண்டு செல்லும்படியாக எண்ணெய்யும், போதாதென்று உடலில் பூசிக்கொள்ளக் கருப்புப் பெயிண்டு கூட  தயார்.

“ஆமா, ஒரு வேள மத்தவனுவோ சரக்கடிச்சிட்டு அங்கயே இருந்தானுவன்னா என்ன செய்ய மக்ளே? தப்பிச்சி ஓடிரலாம்னு நெனைக்காத பாத்துக்கோ. சுத்தி இருக்கது எல்லாம் அவனுக்க வெளைல வேல பாக்கப்பட்ட ஆளுவதான். புடிச்சிட்டானுவன்னா நமக்கு அடியந்திரம் தான் மக்ளே. அதுக்கு மொதல்ல பொணம் கெடைக்கணும்லா? வெட்டி அந்த மாமரத்துக்கே போட்ருவானுகோ.. என்னத்தச் சொன்னாலும் அடங்க மாட்டுக்கியே. செரி, சாவதுன்னா ஒன்னாச் சாவோம் மாப்ள. சின்னப் பண்ணையாருவளும் எனக்க  மத்ததும்.” மாம்பட்டை வீச்சத்தில் வீரனாக நிமிர்ந்து நின்றான் சுயம்பு.

“அப்பிடிச் சொல்லுல கொப்பம் மவன. என்னதான் செவப்பிக்க……… குடிச்சாலும்….” என்று ஓரக்கண்ணால் சுயம்புவைப் பார்த்து, கண்ணடித்துச் சிரித்தான் மாசானம்.

“ஒன்னு வெளங்குவில்ல மாப்ள. ரெண்டு வேருல யாராக்கும் மூத்தவன்? எனக்கு எப்பவும் கொழப்பந்தான் கேட்டியா?”

“கத கொள்ளாம். அடி வாங்கும்போ ‘எம்மோ, எம்மோன்னு’ கத்துனேன்னு வையி, அப்போ, அடிச்சவன் மூத்தவன். ‘எப்போ, எப்போன்னு’ கத்துனேன்னா, அடிச்சவன் எளையவன், செரியா…” சொல்லிவிட்டு அடுத்த பாட்டிலை எடுத்துக் கடித்துத் திறந்தான்.

“நீ வாங்கும்போ நா வந்து முன்ன நிப்பேன்லா மாப்ள? எதுக்குப் பயறுக நீ?”

“நா எதுக்குல பயப்படப் போறேன்? பழத்துக்கு ஆச ஒனக்கு, நீ தான பயறனும்?”

“அது செரி மக்ளே, கொட்ட கொஞ்சம் பெருசாம் பாத்துக்க, நீ புடிச்சா தான் சேந்து பறிக்கக் கழியும்…”

“ஆமா, ஆமா.. நா புடிக்கேன், நீ கடி.. வெளங்கும்..”

“செரி, சொல்லுடே, யாராக்கும் மூத்தவன்?”

“நெத்தில பட்ட போட்டுட்டுத் திரிவாம்லா? அவனாக்கும் மூத்தவன். ரெண்டாமத்தவன் கொஞ்சம் நம்மள மாதி கேட்டியா? பயங்கரப் பொறுப்பு..”

“ஓ, அப்போ செரி. அவனுக்க செயினும், புல்லட்டும். இதுல குங்குமப் பொட்டு வேற தாயிலிக்கு. அன்னிக்குதான் பாத்தேன் மாப்ள, கள்ளவாலிப் பய, புல்லட்டுல மாம்பழம் படம் வரஞ்சு வச்சிருக்கான். என்னாத் திமிரு பாரு. எவனாம் தொட்டுப் பாருங்கலன்னு சவால் விடுகானாம் ராஸ்கல்..”

“அப்பிடியா மாப்ள. அப்போ அவனுக்க புல்லட்டுலயும் கோடு போட்ருவோம் என்ன?”

ஊரின் பெரும்பாலான தென்னந்தோப்புகளும் மாந்தோப்புகளும் சின்னப் பண்ணையார்களின் சொத்துகள் தான். ஊரில் பாதி வீடுகள் அவர்கள் காலடியில் தான் என்று பேச்சும் உண்டு. வயல் வேலைக்குச் சென்ற பெண்களும் மற்ற வேலைகளுக்குத் திறமற்ற ஆண்களுமென, ஊரின் பெரும்பாலான கூலிகள் அவர்களது தோப்புகளில்தான் பிழைப்பு. பிடித்துப் பிடித்துக் கொடுக்கும் சம்பளம். அது போகச் சின்னப் பண்ணையின் வேலையாள் என்கிற அந்தஸ்தும் பாதுகாப்பும். ஆனால், தோப்பிலிருந்து ஒற்றை மாங்காயோ, தேங்காயோ, ஏன் கறிக்கான முருங்கைக் கீரையோ கூட வெளியே கொண்டு வர முடியாது. தோப்பிற்கு இரண்டென சாதி நாய்கள். மாதந்தோறும் கடி வாங்கிப் படுத்தவர்கள் குறித்த வதந்தி வந்து கொண்டேயிருக்கும்.

இருவரில் மூத்தவர் குறித்து ஓரளவு நல்ல செய்திகள் தான். கோயில் கோயிலாகச் சுற்றி குடும்பத்திற்குப் புண்ணியம் தேடுபவர். உதவிக்குக் கேட்டுப் பார்க்கலாம் என்கிற இடம் கொடுப்பவர், பேசுவதில் கூட மென்மையானவர், இதெல்லாம் இருந்தாலும் மற்ற பல விசயங்களில் ஒரு மாதிரிதான். திருமணம் ஆகாததாலோ என்னமோ, வதந்திகள் பல. இளையவரின் முரட்டுக் குணம் ஊரறிந்தது. நடுத் தெருவில் வைத்து அடித்து உடைத்து விரட்டிய வன்மங்கள் பல. வாயிலிருந்து வரும் முதல் வார்த்தையே போதும். எதிரில் ஒருவனும் மானத்தோடு நிற்க முடியாது. அண்ணனுக்குத் திருமணம் ஆன பிறகுதான் தனக்கு எனும் விரதத்தில் நீண்ட நாள் இருப்பவர். ஆனால், சொத்து என்று வந்து விட்டால், இருவரும் ஒருவர்தான். பத்து ரூபாய் இருந்தாலும் புது பங்களாவிற்கு ஒற்றைச் செங்கல் ஆகுமே என்கிற இனம்.

அந்தப் புகழ் பெற்ற மாமரத்தின் பழத்திற்காக ஏங்காத ஆட்களே இல்லை என்பது நீண்ட நாள் கதையாக இருந்தாலும் அதை நினைத்த மாத்திரத்தில் நடுங்காத ஆட்களும் இல்லை. பின், பழத்திற்கு ஆசைப்பட்டு… சரி… இது போக அம்மரத்தின் பழங்கள் மீது மக்கள் ஏற்றி வைத்திருந்த கதைகள் ஏராளம். மூத்தவன் எப்போதும் இளவட்டமாகத் தெரிவது அதனால்தான், இளையவன் அப்பழச் சாற்றைக் கொடுத்து மயக்கிய பெண்கள் அவன் கை சொடுக்கினால் மாந்தோப்பிற்குள் சென்று மயங்கி விழுவார்கள், அந்தக் குடும்பத்துக் காவல் தெய்வம்தான் அம்மரம், அதன் பழம் எல்லா நோய்நொடிக்கும் மருந்து.. இப்படிப் பல.

“ஆனா மாப்ள, ரெண்டு மூணு வேற மத்தவனுவோ கொன்னு பொதச்சதா கத உண்டுமாமே?”

“அது சும்மா கத வுடுகானுவோ மக்ளே. இப்பிடி நாலு வேரு சொன்னாத்தான பந்தா காட்டிட்டு அலைய முடியும். பின்ன, நீ சொன்ன மாதி பச இருந்தா எல்லாம் நடக்கும்..”

“செரி, சத்தம் காட்டாத மாப்ள. எவனோ வாராம் பாரு. இந்த நேரத்துக்கு எவனாக்கும்?”

சுற்றிலும் பனம்பாளை வேலி. அவற்றின் மீதாகச் சுற்றிக் கட்டிய இரும்பு முள்வேலி. மொத்த மாந்தோப்பைச் சுற்றிலும் ஒற்றையடிப் பாதை. ஒரு வளையத்திற்குள் சுருண்டு கிடக்கும் கருநாகம். அதன் மினுங்கும் கண் அம்மாமரம். நிழலாக வந்த அவ்வுருவம் வேலியோரம் ஒதுங்கி குத்தவைத்து உட்கார்ந்தது.

மெல்லிய குரலில், “மாப்ள, இது காவலுக்கு உள்ளவனாக்கும். நம்ம கீழத்தெரு கடைசி வீட்ல உள்ளவன். அவன் பொண்டாட்டியத்தான் ரெண்டு வருசமா காணலன்னு…. நீ பாத்திருக்கியா அவள? மாம்பழமாக்கும்…” என்று சிரித்தான் சுயம்பு.

“ஒனக்கு அப்பிடித்தான் தெரியும்புல. வாயில வந்திராம பாத்துக்க. இரி, மத்தவன் போவட்டும்.. நம்ம பின்னாடிக்கூடி சுத்தி ஒரு பார்வ பாக்கணும் கேட்டியா. பின்னாடி ஏறிக் குதிச்சாதான் முடியும். அந்த எழவுக்க நாய் வேற எங்க இருக்கோ தெரியல்ல…”

“என்ன மாப்ள, நடுங்குவோ? நா வேன்னா செவப்பிக்க வீட்டு லேவ சொல்லவா டே?”

“எனக்கென்ன ல? இந்தாப் பாரு..” என்றபடி தன் லுங்கி மடிப்பிலிருந்து ஒரு குறுங்கத்தியை உருவிக் காட்டினான் மாசானம்.

“எனக்க அம்மோ! என்ன மக்ளே… லேய், பெரிய எடுப்பா எடுக்காத மக்ளே. ஏதும் வெனையாப் போயிரப் போவு…” என்று பதறினான் சுயம்பு.

“வெறும் மாம்பழத்துக்குன்னு நெனச்சியோ மக்ளே! பொறு, பொறு.. நம்ம யாருன்னு காட்டுவோம்.. பொறு..” என்று உறுமினான் மாசானம்.

அவனருகே நெருங்கி நின்று, “லேய், என்ன சொல்லுக நீ? என்ன மக்கா செய்யப் போற? எனக்கு வயித்தக் கலக்குவு. சொல்லு, மொதல்ல, நாம் போறேன்..” என்று திரும்பினான் சுயம்பு.

“அட தப்பழப்பயல! இதுக்கே நடுங்குக? மத்தவனுவோ ஆட்டம் கூடிட்டுல்லா? கொஞ்சம் பாடம் காட்டுனா செரி ஆவும்.. நீ ஒன்னும் சலம்பாம வா..” என்று தோப்பின் பின்புறப் பாதையில் நடந்தான் மாசானம். செய்வதறியாது நடப்பதறிந்தும் அறியாமலும் தொடர்ந்தான் சுயம்பு.

“மக்ளே, ஒத்தைக்கு ஒத்தைன்னா கூட ஒரு கை பாத்துரலாம்ல.. அவனுக்க கூலிக்காரனுவோ எல்லாவனும் மல மாடு மாதியாக்கும். தெனம் செலம்பும் நாட்டடியும் அடிக்கவனுவோ மாப்ள. ஒன்னு நாஞ் சொல்லதக் கேளு மக்கா.”

“நம்ம மட்டும் என்ன கொறவா மாப்ள? ஒங்கப்பன் அடிச்ச அடிக்கு இன்னிக்கு வர எவனாது எதுத்து வர முடிஞ்சா? நீ என்னல இப்பிடிப் பீச்சுக?”

“அதெல்லாம் செரிதாம்டே. புடிச்சுக் கெட்டிவச்சு போலீஸ் கிட்ட மாட்டி விட்டா என்ன பண்ண? ஒங்கம்மையும் தங்கச்சியும் நடுத்தெருவுல நிக்கதுக்கா? எனக்குதான் கேக்கதுக்கு ஆளில்ல!”

மாசானம் சட்டென நின்றான். குறுங்கத்தியை எடுத்து கண்களின் நேராக வைத்துக் கூர்ந்து பார்த்தான். “என் தங்கச்சி…. தாயிலிக்க… கழுத்த…” என்று பல்லைக் கடித்தபடி முனகினான். சுயம்பு ஏதோ புரிந்ததைப் போல மாசானத்தின் குறுக்காக வந்து நின்றான். கைகளை அவனை மறிப்பதைப் போல விரித்து, “மாப்ள, நீ பழச மனசுல வச்சு… மக்ளே, வேண்டாம் மக்ளே.. விசயம் பொறவு வெளிய வந்து நாறிரும் மக்ளே. யாரு என்னன்னு தெரியாமலே இருக்கட்டும். அதாம்லா நமக்கும் நல்லது.. வேண்டாம்ல.. சொன்னாக் கேளுல..” என்று கெஞ்சினான்.

“சை.. தள்ளிப்போல அங்கண.. வாரேன்னா கூட வா. இல்லன்னாக்கி இப்பிடியே ஓடிரு.. நடுங்கித் தாயிலி…”

மாசானம் பெருவிரல்களில் ஓட ஆரம்பித்தான். சில கணங்கள் அசைவின்றி நின்ற சுயம்பு திடீரென விழித்தவனைப் போல அப்பாதையில் ஓடினான்.

வேலியின் அருகே குத்தவைத்து உட்கார்ந்து மடியிலிருந்த ஒரு பொட்டலத்தைப் பிரித்தான் மாசானம். சுட்ட சாளைக் கருவாடுகள். சுட்ட தேங்காய்த் துண்டுகள். அருகே கிடந்த ஒரு நீண்ட ஒடமரக் குச்சியை எடுத்து அதன் முனையில் ஒரு ஒட முள்ளைச் சொருகினான். அதன் கூர்முனையில் ஒரு கருவாட்டுத் துண்டையும் ஒரு சிறு தேங்காய்த் துண்டையும் குத்தினான். இன்னொரு பொட்டலத்திலிருந்த பசை போன்ற ஒரு களிம்பை எடுத்து அதன் மேல் தடவினான். வேலியின் நடுவே ஒரு சிறு துளையைக் குத்தி, அதன் வழியாக அந்தக் குச்சியைச் சொருகித் தள்ளினான்.

“மாப்ள…மாப்ள..”

“சும்மா இரில.. சத்தங்காட்டாத…”

மொத்தத் தோப்பும் ஆழ்ந்த மௌனத்தில் உறைந்திருந்தது. மெல்லிய குளிர் காற்றினூடே வடிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான் சுயம்பு. எந்த நொடியும் எதுவும் நடக்கக் கூடும். மூத்தவன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை ஒரு முறை பார்த்தபோதே நடுங்கி விட்டான். மண்டை ஓட்டையே துளைத்துச் சென்று விடுமாம் அந்த குண்டு. அந்தக் கருப்பு நாய்களின் தலை இரண்டு மனிதத்தலைகள் அளவிற்கு இருக்குமாம். நாக்கு மட்டுமே ஓரடி நீளத்திற்கு வெளியே நீளுமாம். அவற்றின் பற்களில் தடவிய விசம் பட்டால் பத்தே நிமிடத்தில் போக்கு தானாம். இது போகத் தோப்பு நெடுக அரிப்பெடுக்கும் விசச் செடிகளை நட்டு வைத்திருக்கிறார்களாம். இங்கிருந்து எப்படி உள்ளே சென்று எப்படி வருவது? முதலில் மீண்டு வருவோமோ என்னவோ! சரி, என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று மாசானத்தின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்தான்.

உதட்டைக் குவித்து ஒருவிதமாக ஊளையிட்டான் மாசானம். திடுக்கிட்ட சுயம்பு பயமும் குறுகுறுப்புமாக நின்றான். சில ஊளைகளுக்குப் பிறகு தோப்பின் நடுப்பகுதியிலிருந்து அதே போன்ற ஊளைச்சத்தம் வந்தது.

“மாப்ள.. மத்த நாய்ச்சத்தம்ல!”

“இரி, இப்ப வரும் பாரு. மொதல்ல அதுக்குத்தான் . மனுசக் கறில்லா கேக்குவாம். என்னன்னு பாத்துருவோம். பொறவு மத்தவனுக்கு..”

இன்னும் சில ஊளைகளில் இவர்கள் இருந்த வேலியின் உட்புறம் தோப்பின் உள்ளிருந்து பதுங்கி வந்த ஒரு கருப்பு நாய் மோப்பம் பிடித்தபடி நின்றது. நிஜமாகவே அப்படியொரு தலைதான். அதன் பற்கள் தங்கம் போல மினுமினுத்தன. கண்களில் தெரிந்த மூர்க்கம் மெல்ல மெல்ல வடிந்து மோப்பம் பிடித்த வாசனையில் கிறங்கி நின்றது அந்த நாய். மாசானம் அந்தக் குச்சியை இன்னும் தள்ள, நாயின் முனகல் சத்தம் கொஞ்சலாய் மாறியது.

“மாப்ள, ஒரே தவ்வு தாவிட்டுன்னா முடிஞ்சு பாத்துக்க, எல்லாவனும் ஓடி வந்திருவாம்ல. கடிச்சிட்டுன்னா வலிப்பு வந்து சாவ வேண்டியதாம்ல.. வந்துரு மக்கா.”

கருவாட்டு வாசனையில் கிறங்கிய நாய் குச்சியின் முனையைக் கடித்தது. சில நிமிடங்களில் மயங்கிச் சரிந்தது.

“ஒன்னு அவுட்டு… இன்னொன்னு தோப்புல இல்ல கேட்டியா. வா, இப்ப போவம்.. மத்தவனுக்க மாம்பழத்துக்கு…”

வேலி மீது ஏறிக் குதித்து விழுந்தவர்கள் அப்படியே சில நொடிகள் கிடந்தார்கள்.

“மாப்ள, அரிப்பெடுத்துராம ல! பொறவு ஓங்கல்யாணத்துக்கு சொறஞ்சிக்கிட்டே தான் நிக்கப் போற!”

“நம்ம எண்ணெய்க்கு ஒன்னும் செய்யாது மக்ளே. நீ வேன்னா இங்கன கொஞ்ச நேரம் உருண்டு பாரு.” 

மாசானம் மெல்ல எழுந்து முன்னகர்ந்தான். ரகசியக் குரலில், “மக்ளே, நாம் போறேன், நீ கொஞ்சம் சொல்லி வா, என்ன? நா பத்து மரம் தாண்டிப் போன பொறவு என்ன?” என்றான்.

சுயம்பு கீழே கிடந்தபடி தலையாட்டினான். அவன் கை கழுத்தில் கிடந்த டாலரைப் பிடித்திருந்தது. அதைப் பார்த்து நக்கலாகச் சிரித்து, “செவப்பிக்க…” என்று காரித் துப்பிவிட்டுச் சென்றான் மாசானம்.

மாசானம் பல மரங்களைக் கடந்து பதுங்கி பதுங்கி சென்றான். தோப்பின் மையத்திலிருந்த பண்ணை வீட்டின் முன்புற விளக்கு ஒற்றைப் புள்ளியாய்த் தெரிந்தது. நொடிக்கொரு பூச்சிச் சத்தம். ஊடே, மாம்பழ வாசம்.  

“பாவிப்பய.. என்னத்துக்கு இப்பிடி வீம்பு புடிச்சிச் சுத்துகான். எனக்க அம்மோ!” சுயம்பு ஊர்ந்தபடி முன்னகர்ந்தான்.

சற்று நேரத்தில் தோப்பின் மையத்திலிருந்து அதே ஊளைச் சத்தம் கேட்டது. பதறிய சுயம்பு சட்டென எழுந்து சத்தம் வந்த திசையில் ஓட ஆரம்பித்தான். “சொன்னேன், கேட்டானா? ரெண்டாமத்த நாய்கிட்ட மாட்டிக்கிட்டான் போல! என்ன செய்ய தெரிலயே…”

இன்னும் பத்திருபது மரங்கள் தான். நின்று நோட்டம் பார்த்தான் சுயம்பு. மாசானத்தின் உருவம் இருட்டோடு இருட்டாக எங்கோ மறைந்திருந்தது. அப்போது கேட்ட புல்லட் சத்தத்தில் சுயம்பு அலறியே விட்டான். “மாப்ள, ஓடிரு, ஓடிரு.. மத்தவனுகோ வந்துட்டானுவோ.. மாப்ள, மாசானம், லேய்…”

பதிலுக்கு அதே ஊளைச் சத்தம். புல்லட் சத்தம் நெருங்கி வந்து சுயம்புவைச் சுற்றி சுற்றிச் கேட்ட மாதிரி இருந்தது. நிஜமாகவே புல்லட் வந்திருக்கிறதா என்று சில மரங்கள் கடந்து வந்து பார்த்தான். பண்ணை வீட்டு முகப்பில் புல்லட்டை நிறுத்திவிட்டுத் தள்ளாடி இறங்கி நின்றார்கள் சின்னப் பண்ணையார்மார். புல்லட்டின்  மாம்பழப் படம் அந்த இருளிலும் மினுங்கியது.

“தொலஞ்சி.. மாப்ள, வந்திருல..” தொண்டையிலிருந்து குரல் வெளிவராமல் திணறினான்.

புல்லட்டிலிருந்து ஓடிப் பிடிக்கும் தொலைவில் எதுவும் நடக்காத மாதிரி அப்புகழ் பெற்ற மாமரத்தின் அடிமரத்தைப் பிடித்து ஏறிக் கொண்டிருந்தான் மாசானம். ஒரு சிறு கல்லை எடுத்து அவனை நோக்கி எறிந்தான் சுயம்பு. மாசானம் மரத்தோடு மரமாகக் கலந்துவிட்டிருந்தான்.

சுயம்பு புலம்பியபடி மெல்ல அவனை நோக்கிப் பதுங்கிச் சென்றான். மூத்தவன் கயிற்றுக் கட்டிலில் மல்லாந்து கிடக்க, இளையவன் அவனருகே தரையில் கிடந்த தட்டியில் உட்கார்ந்தான். ஒரு பையிலிருந்த பொட்டலங்களை எடுத்து முகர்ந்து பார்த்தபடி வைத்தான். ஏதோ பாடியபடி ஒவ்வொரு பொட்டலமாகப் பிரித்தான்.

“காஜா பாய்க் கட புரோட்டா.. நாட்டுக்கோழி பொரிப்பு.. பாவிப்பயக்க.. நல்லா கோயில் கொட நடத்துனியோ…” சப்புக் கொட்டியபடி மரத்தடியில் வந்து நின்றான் சுயம்பு. பரோட்டாவிலும் போதையிலும் மூழ்கிய பண்ணைகள் கவனிக்க வாய்ப்பில்லை என்று யோசித்தவனாய், “மாப்ள, எங்கல ஏறியிருக்க?” என்று மெல்லிய குரலில் கேட்டான். அப்போது அவன் மூக்கு நுனியில் ஒரு சொட்டு வந்து விழுந்தது. சுயம்புவின் முகமெங்கும் மா வெளிச்சம். மா வாசம். “பாவிப்பய!”

“லேய்.. ஒத்தைல திங்காதல.. மாப்ள எனக்கு?”

கேட்டதும் அவன் தலையில் வந்து விழுந்தது ஒரு கனிந்த மாம்பழம். அதன் நறுமணத்தில் அவன் கிறங்கிப் போன கணத்தில்…

“எவம்புல அங்கண?” என்று கத்தினான் இளைய பண்ணை.

“மாப்ள.. ஓடு, ஓடு..” என்று மேலிருந்து கத்தினான் மாசானம். சுயம்பு கீழே கிடந்த மாம்பழத்தை எடுத்துக் கடித்தபடி ஓட ஆரம்பித்தான். மேலிருந்து கத்திச் சிரித்தான் மாசானம்.

இளைய பண்ணை எழுந்து புல்லட்டிலிருந்து ஒரு நீண்ட கத்தியை உருவினான். மூத்தவன் எழுந்து தள்ளாடி நின்றான். “லேய், ஒத்தத் தகப்பனுக்குப் பொறந்த பயன்னா வந்து நில்லுல பாப்பம்..” என்று கத்தினான் இளைய பண்ணை.

பதிலுக்குச் சிரிப்பொலியும் நாய் ஊளைச் சத்தமும்.

“ஓஹோ, அவ்ளோ ஆயிட்டா? இன்னிக்கு நீ எப்பிடிப் போறன்னு பாப்பம்ல லேய்,” என்றபடி மாமரத்தை நோக்கித் தயங்கித் தயங்கி வந்தான். வேலியோரத்திலிருந்து நாய் குரைக்கும் சத்தம் தேய்ந்து கேட்டது.

“டைகர், ஓடி வா மக்ளே. நல்ல பீஃப் கெடச்சிருக்கு, ஓடியா ஓடியா,” என்று சீழ்க்கையடித்தான் இளைய பண்ணை.

எழுந்து நின்ற மூத்தவன், “தம்பி, எவனா இருந்தாலும் வெட்டுல.. இன்னா வாரம்புல..” என்றான்.

இளையவன் மரத்தின் அடியில் வந்து நின்று மேல் பார்க்கவும் மாசானம் கால் வழுக்கி அவன் மேல் விழவும், மூத்தவன், “லேய், கொல்லுல அவன, விடாதல கொல்லுல,” என்று கத்தியபடி வீட்டிற்குள் ஓடினான். “இன்னா வாரேன், நம்ம துப்பாக்கி வேட்டையாடி வருசம் ஆச்சுல்லா!”

மாசானமும் இளைய பண்ணையும் சில பல சுற்றுகள் உருண்டு நிலைக்கு வர சில நிமிடங்கள் பிடித்தன.  குறுங்கத்தி தெறித்து விழுந்தது. பெருங்கத்தியும் தெறித்து விழுந்தது. கொடும் கெட்டவார்த்தைகள் பொழிந்தன. நான்கு கைகளும் முறுக்கிக் கொண்டன. பற்கள் அடித்துக் கொண்டன. கால்கள் நல்ல பாம்புகளாகப் பிணைந்தன. திடீரென, வீட்டிற்குள் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும் இருவரும் அசைவின்றி ஒரு கணம் கிடக்க, எதேச்சையாய் இளைய பண்ணையின் கையைக் கவனித்தான் மாசானம். அழகான ஒரு பெண்ணின் முகம். சட்டென அவனது பிடி தளர்ந்தது. இளைய பண்ணையும் தன் கையைப் பார்த்து பின் மாசானத்தின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். கருப்புப் பெயிண்டுக்குள் இருந்த முகத்தின் நிஜ அடையாளம். அந்தக் கண்கள். ஒரு கணம் யோசித்த இருவரும் மீண்டும் பிடியை இறுக்கினர். மாசானம் இளைய பண்ணையின் மீது சட்டென ஏறி உட்கார்ந்தான். இருபுறமும் அவனது கைகளைத் தரையோடு அழுத்திப் பிடித்தான். சுற்றிலும் தன் குறுங்கத்தியைத் தேடினான். அது கிடைக்காமல் எரிச்சலில் உறுமியவனாய் தன் தலையால் ஓங்கி இளைய பண்ணையின் முகத்தில் முட்டப் போனவன் திடுக்கிட்டு நின்றான். இளைய பண்ணையின் மார்பில் குத்தப்பட்டிருந்த பச்சை ‘பாக்கியம்’ என்றது. நம்ப முடியாமல் அதை மீண்டும் வாய்விட்டு வாசித்தான். சட்டெனக் கண்கலங்கித் தளர்ந்தான். மாசானத்தின் முக மாற்றங்களைக் கண்ட இளைய பண்ணை தனக்குத்தானே ஏதோ முனகியபடி வெட்கத்தில் புன்னகைத்தான். மாசானம் சட்டென அவனை விடுத்து எழுந்து நின்றான்.

அதே நேரத்தில் வீட்டு முற்றத்தில் வந்து நின்ற மூத்தவன் மாசானத்தை நோக்கிச் சுட்டான். அப்புகழ் பெற்ற மாமரத்தின் அடிமரத்தில் பட்டுத் தெறித்தது குண்டு.

“விடாதல, புடில அவன, கொல்லுல…”

“ஓடிரு மக்ளே,” என்று மாசானத்தைப் பார்த்துச் சொல்லியபடி எழுந்தான் இளைய பண்ணை. மாசானம் தெறித்து ஓடிக் கொண்டிருக்க மார்பிலிருந்த பச்சையை தன் கையால் வருடிக் கொடுத்தான் இளைய பண்ணை. அவன் முகத்தில் அதே வெட்கப் புன்னகை.

Previous articleபுதைமணல்
Next articleஅய்லீன்
Avatar
நாகர்கோவிலைச் சார்ந்தவர். கிராமப்புற மாணவர்களின் கல்விப் பணியில் இருக்கிறார். இவரது சிறுகதைகள் கனலி, யாவரும், பதாகை, சொல்வனம் இதழ்களில் வெளிவந்துள்ளன. ' தெருக்களே பள்ளிக்கூடம் ' எனும் மொழி பெயர்ப்பு நூலும் வெளி வந்துள்ளது. தற்போது கோவையில் வசிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.