முருகபூபதியின் நாடகங்களை எப்போதும் நான் தவறவிடுவதில்லை. பெங்களூரில் எங்கு நடப்பினும் சென்று பார்க்கத்தவறுவதில்லை. அதையே இந்த இடாகினியின் முடிவில் நிகழ்த்துக் கலைஞர்கள் மூட்டை முடிச்சினைக் கட்டிக் கொண்டு இருக்கும்போது அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் கூறினேன்.
இந்த நாடகம் சற்றே வேறுபட்டது. இந்நாடகத்தில் தமிழில் வசனங்கள் மிகக் குறைவு இன்னபிற அவரின் நாடகங்களுடன் ஒப்பிடுகையில். உண்மையில் சொல்லப்போனால் இந்த இடாகினி சர்வதேசத்தரம் வாய்ந்தது. கிப்பரிஷ் ஆக ( இன்ன மொழி என்றில்லாத வெறும் சப்தக்கோவைகளை கலைஞர்கள் உச்சரிப்பது ) ஒலி எழுப்புதல் மூலம் பார்வையாளர்களுக்குத் தாம் சொல்ல வந்ததைக் கடத்துதல் என்பதான செய்கை. நாடகம் பின்னர் அதன் வழி வந்த இன்றைய சினிமா இவற்றிற்கெல்லாம் மொழி என்ற ஒன்று அவசியமேயில்லை என்பதே என் கருத்து. அவையாவும் காட்சி ஊடகங்கள். சில செய்கைகளைச் செய்து காட்டுவதன் மூலமும், திரையில், நாடக மேடையில் வைக்கப் பட்டிருக்கும், அல்லது கலைஞர்கள் ஏந்தி வரும் பொருட்கள் மூலமும் அக்காட்சி என்ன சொல்ல வருகிறது என்பதைப் பார்வையாளன் புரிந்து கொள்வதே அவற்றின் அடிப்படை. ஆயிரம் பக்கங்கள் வசனம் பேசுவதைக்காட்டிலும் ஒரு காட்சியில் காட்டப்படும் இடங்களைக் கொண்டு, அல்லது ஏந்தி வரும் பொருட்களைக் கொண்டு , சிறு திரைச்சீலைகளை அசைப்பதைக்கொண்டு உணர்த்தி விட முடியும். பல வண்ண விளக்குகளைக்கொண்டும் அதைக் கலைஞர்கள் மீது ஒளிரச்செய்கையில் பலவிதமான உணர்ச்சிகளைப் பார்ப்பவனை உணரச் செய்து விடலாம். அதற்குப் பொருத்தமான உணர்ச்சிகளைக் கலைஞர்கள் செய்து காண்பிக்கும்போது அது பார்ப்பவனையும் தொற்றிக் கொள்ளும்.
Set Properties இந்த குறிப்பிட்ட இடாகினியில் அபரிமிதமாகக் காட்சியளித்தது. பொதுவாகவே முருகபூபதியின் நாடகங்களில் Set Properties கள் கிழிந்த துணி, நீளமான கம்புகள், காகித அட்டைக்கூழ் கொண்டு செய்யப்பட்ட மனிதத் தலைகள், சில கண்டாமணிகள், மேலும் சிறுகுழந்தைகள் விளையாடும் இலகுவில் கடையில் கிடைக்கும் அத்தனை விலை பெறாத பொம்மைகள், மேலும் கலைஞர்களின் உடுப்புகள் என எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் ஆண்கள் சட்டையின்றியே காணப்படுவர், கால் சராய் பெரும்பாலும் அனைவருக்கும் ஒரே நிறத்தில் தான் காணப்படும் இந்த நாடகத்திலும் அது விதி விலக்கின்றி அதே தொடர்ந்தது. ஒரு பெரு வேறுபாடு இந்த நாடகத்தில் திரைச்சீலைகளின் பங்கு அளப்பரியது. அவை வெறுமனே Set Properties ஆக உயிரற்று நிற்பதையும், காற்றில் அசைவதையும் விட்டு இன்னொரு கலைஞனாகப் பரிணமித்திருந்தன. ஷியாமிக் தவார் என்ற வடநாட்டின் நடனக்கலைஞர் திரைச்சீலைகளை நடனத்தின் ஒரு அங்கமாகவே வைத்திருப்பார்.
நாடகம் தொடங்கும் முன்னர் மாரா’வின் நிகழ்ச்சித் தொகுப்பாளர், மேடையில் அறிவித்தது , நாடகம் துண்டு துண்டான நிகழ்வுகளைக்கொண்டது அவற்றைப் பார்ப்போர் ஒன்றுபடுத்தி ஒரு உருவமாகக்கொண்டு வந்து உணர்ந்து கொள்ளல் அவசியமென.
நான் இது வரை பார்த்த முருகபூபதியின் நாடகங்களில் முதன்முறையாக இந்த நாடகத்தில் தான் குழந்தைகளை நான் பார்க்கிறேன், மேலும் முருகபூபதி பேசிக் கொண்டிருக்கையில் இதுவரை ஐம்பத்தைந்து நாடகங்கள் குழந்தைகளை / சிறார்களை வைத்து மட்டுமே நடத்தியிருக்கிறேன், முதன் முறையாகச் சிறார் மற்றும் வளர்ந்தோரை வைத்து வடிவமைத்திருக்கிறேன் என்று, இருப்பினும் குழந்தைகள் அனைவரும் குழந்தைகளாக எனக்குத் தோன்றவில்லை. வசன உச்சரிப்பாகட்டும், உடல்மொழி, நடை மேலும் மேடையில் இன்னபிற கலைஞர்களுடன் கூட வந்து போதல், சிறு பிசிறு போலுமில்லாது, தயக்கமின்றி அவைக்கூச்சமின்றி அவர்களுடன் சரிக்குச் சமமாக நின்று பேசி ஆடி நடித்து ஒரு வித்தியாசமுமின்றி அபிநயித்தனர்.
நாடக முடிவில் அந்தக்குழந்தைகளுடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எப்படி பயிற்சி எடுத்தனர், எங்கனம் வசன உச்சரிப்பும் காட்சிகளுக்கிடையே வந்து போதல், எவற்றையும் மறக்காது செய்தல் ( ஏனெனில் நாடகத்தின் மொத்த நீளம் ஒன்றரை மணிக்கூறு ) என்று. மேடையில் பிற கலைஞர்களுடன் வந்து போகும் போது இல்லாத கூச்சம், வசனங்களை மனப்பாடமாக ,அதற்குத்தேவையான உணர்ச்சிகளுடன் அத்தனை பார்வையாளர்கள் முன்பில் சொல்ல இல்லாத அவைக்கூச்சம் எனது கேள்வி அவர்களை நோக்கிக் கேட்கும்போது நான் கண்டேன். ஹ்ம்.. அவர்கள் இன்னமும் குழந்தைகள் தான். நாடகம் நிகழ்த்தும் போது கலைஞர்கள், கீழிறங்கினால் எல்லாரும் குழந்தைகள் என்பது பதிவானது. அதில் சற்றுப்பெரிய குழந்தை (ஒரு பத்து வயதிருக்கும் ) இவளை (அவளினும் சிறிய ஆறு வயதுக்குழந்தையைக் காட்டி ) உறக்கத்தில் எழுப்பி வசனம் சொல்லு எனக்கேட்பேன், விடாமல் சொல்லித் தீர்வாள் என்று கூறிச்சிரிக்கிறது.
அவரின் அம்மா இவர் நாடகங்களில் நடிக்க வேண்டுமென கோவில்பட்டியில் ஆறுமாதம் தங்கியிருந்து முருகபூபதியின் நடிப்புப் பட்டறைக்கு அனுப்பியிருக்கிறார். இன்ன பிற கலைஞர்களோடு கூடிப்பேசி அபிநயிக்க. பள்ளியை நிறுத்திவிட்டேன், அவளுக்கு இது போன்ற கலைகளில் தான் ஆர்வம், ஆறு/ஏழு வகுப்பு வரை பள்ளி சென்றவளுக்கு அதில் அதிக நாட்டமில்லை, சரி இதுவே தொடரட்டுமென. அவர் பறையிசையினைப் பயிற்றுவிப்பவர் ஷர்மிளா. இங்கு ஓசூரில் ஒவ்வொரு சனி/ஞாயிற்றுக்கிழமைகளில் பறையிசைப்பள்ளி நடத்துகிறார். மூன்று நான்குவார இறுதிப் பயிற்சிக்குப் பின்னர் மேடையேறி வாசிக்குமளவிற்கு பயிற்றுவிப்போம் என உறுதி கூறுகிறார். பெங்களூரில் பறையிசைப்பள்ளி நடத்த இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன், இருந்தால் சொல்லுங்கள் என என்னிடமும் வினவினார். ஏற்கனவே நடத்திக்கொண்டிருந்த இடங்களில் இருபது பேர் தொடர்ந்து பறையிசைக்கும் போது ஏற்படும் ஒலியளவு தாங்க முடியவில்லை என, மேலும் வகுப்புகள் தொடர விடாது நிறுத்தி விடுகின்றனர் என ஆதங்கப்பட்டார்.
நாடகத்தைப்பற்றிப் பேச வேண்டுமெனில் காட்சிகள் துண்டு துண்டாக வந்து விழுந்த போதும் ஆழமான அடிச்சரடு ஒன்று இணைப்பதைக் கூர்ந்து கவனித்தேன். அது குழந்தைகளின் உலகம் சீரழிக்கப்படுவது, போர், மற்றும் அடிமைத்தனம் ,அகதி வாழ்க்கை என்ற எல்லா நாடுகளுக்கும், மனித இனத்திற்கும் பொதுவான ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதைக் குறித்து காட்சிகளைத் துண்டு துண்டாக அமைத்து அபிநயித்து பார்ப்போர் கோர்த்துக்கொள்ளட்டும் என் விட்டுவிட்டதாக என் புரிதல்.
முதற்துண்டில் திரைச்சீலை இரண்டு பிரிவுகளாகத் தகுந்த இடைவெளி விட்டு அரங்கின் இருபுறமும் பக்கவாட்டு வாக்கில் கட்டப்பட்டிருந்தது. அதன் பின்னில் நல்ல தூரத்தில் ஒரு நூறு வாட்ஸ் குமிழ்பல்பு ஒன்று எரியவிடப்பட்டிருந்தது. இந்த இடைப்பட்ட இரண்டு திரைச்சீலைகளினூடே கலைஞர்கள் நடந்து சென்றும் ஒலி எழுப்பிக்கொண்டும் சென்றதைக்காண நேர்ந்தது. கம்புகளைக் கொண்டு ஏகே47 ரகத் துப்பாக்கிகளை வடிவமைத்துப் போர் நடப்பதாகக் காட்டிவிட்டு பின்னர் அதே கட்டைகளைத் தம் கால்களில் கட்டிக்கொண்டு தவழ்ந்தும், நொண்டிக்கொண்டும் சென்றனர். போரும் அதன் விளைவும், இடையில் சிக்கிக்கொண்ட குழந்தைகள் தம் பொம்மைகளை இழந்து தவிக்கின்றனர். தாய் தம் குழந்தைகளை இழந்ததையும் உருவகப்படுத்திக் கொள்ளலாம். எல்லாப்போர்களும் பெண்களின் மற்றும் குழந்தைகளின் அவர்கள் வாழ்க்கையினை தட்டிப்பறிக்கத்தான் செய்கின்றன. குழந்தைகள் தம் பொம்மைகளை இழக்கின்றனர். பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம்,அந்த பொம்மையைத் தட்டிப்பறித்துச் சென்றுவிட்டால் என்ன நடக்கும், ஒரு பெரிய போரே வெடிக்கும், யாராலும் அந்தப்போரினை முடித்து வைக்க முடியாது எத்தனை பெரிய அசகாய சூரனெனினும். அதுவே இந்த ஒன்றரை மணிக்கூறு இடாகினி நாடகத்தின் மையச்சரடு. உங்களின் மண்ணாசைக்கென போரை உருவாக்கி குழந்தைகளின் பொம்மைகளைப் பறித்துச்சென்றால் அவை உருவாக்கும் இன்னொரு போரினை முடித்து வைக்க அதி உன்னத மனிதனால் கூட இயலாது.
பின்னரும் தொடரும் காட்சிகள் மையச்சரடினை ஒட்டியே நிகழ்ந்தன. சயாம் ரெயில் பாதை அமைக்க அடிமைகளெனக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் இறந்தது குறித்தான காட்சிகள் மேடையினை நிறைத்தன. இருபுறமும் நீளமாகத் துணியினை தண்டவாளமென வைத்து , காகிதக்கூழ் கொண்டு செய்யப்பட்ட தலைகளைக்கொண்ட உருவங்களை தம் உடலில் போர்த்திக் கொண்டு கலைஞர்கள் ஸ்லீப்பர் கட்டைகளெனப் படுத்தனர். ரயில் ஓடியது. அடிமைகளின் குடும்பம், குழந்தைகள் தந்தை வருவானெனக் காத்துக்கிடந்து அழுதது மிச்சம். அவர்களின் வாழ்க்கை பறிபோனது. பொம்மைகள் களவாடப் பட்டன. இல்லையேல் வாங்கி வைத்துக்கொண்டு சேர்க்கவியலாது தந்தைகள் இறந்து பட்டனர். வண்ணவண்ண பலூன்களைக் கைகளில் பிடித்துக்கொண்டு மேடையின் இருபுறமும் குழந்தைகள் ஓடுகின்றன. இறந்து விட்ட ஜீவன்கள் அவற்றின் பின்னால் ஓடிப் பிடிக்க முயல்கின்றன. எனது மூச்சுக்காற்றில் ஊதிவைத்த பலூன்களை இப்போது காணவில்லையே என குழந்தைகள் வினவுகின்றன. மேலும் என் பொம்மைகள் போன இடம் தெரியவில்லையே என அனத்துகின்றன.
பதில் சொல்வதறியாது அரற்றுகிறான் தந்தை. இறந்து விட்ட உயிர்கள் ஆவிகளென உருக்கொண்டு ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் அலைகின்றன. ரயில் ஓடும்போது அவை ஜன்னல் வழி தம் தலைகளை நீட்டி பயணிப்போரில் தம் குழந்தைகளும் குடும்பமும் இருக்கின்றனவா என அலை பாய்கின்றன. ஆரத்தழுவுகின்றனர் குடும்பத்தினர் ஆவிகளை, அவை Illusions களாக காட்டப்படாது உண்மை உருவங்களாக ஆரத்தழுவப்படுகின்றன. அவற்றுக்கு தாம் இறந்ததே இன்னமும் அறியாது அலைந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் முகத்தில் அறையும் உண்மையென உணர்த்துவதற்கு நிகழ்உருவில் வந்து தம் குடும்பத்தாருடன் ஆரத்தழுவ முற்படுகின்றன, They are very much Real. அவையாவும் அந்த மாயத்திரைச் சீலைகளூடே பல வித வண்ணங்கள் காட்டப்படாது வெண்மையுருவிலேயே. அத்தனையும் கலங்க வைக்கும் காட்சிகள்.
இன்னொரு துண்டுக்காட்சி, படகில் அமர்ந்து செல்லும் அகதிகள். படகு வடிவில் மேடையில் அமர்ந்து கொண்டனர் கலைஞர்கள். படகின் பின் மூலையில் ஒரு குழந்தை சிறு பாய்மரத்தைப் பிடித்திருக்க அனைவரும் கடலலையின் ஏற்றத் தாழ்வுக்கேற்ப அசைந்து கொடுக்கின்றனர்.படகு சென்றுகொண்டேயிருக்கிறது. ஒரு சப்தமில்லை. எத்தனை இசை கொடுப்பினும் நிசப்தத்தின் ஒலியற்ற ஒலி ஆளைக்கொன்றே விடும். அமைதி தான் பயமுறுத்தும், கூச்சல்களை எங்கனமேனும் சமாளித்துவிடமுடியும். வலுவில் வருத்தி அமைக்கப்பட்ட மயான அமைதி. அரங்கமே நிச்சலமாகிவிட்டது. படகு சென்று கொண்டிருக்கிறது. பாய்மரம் காற்றுக்கேற்பத் தானாக அசைகிறது. அந்த அசைவுக்கேற்ப கலைஞர்கள் இருந்த இடத்திலிருந்தே கடலலையின் அலைக்கழிப்பிற்கு அசைந்தாடுகின்றனர். தொடரும் பயணம் மயான அமைதி, நேரம் செல்லச்செல்ல ஒவ்வொருவராய் செத்து மடிகின்றனர். இத்தனை நாளும் படகில் தனிப்பயணம், உண்ண உணவோ குடிக்க நீரோ இன்றி. கரை தெரியாத பயணம். கடல் முழுக்க ,கண்கள் எட்டியவரை கடல் தெரிந்து கொண்டிருந்த போதும் குடிக்க ஒரு வாய் நீரின்றி மடிகின்றனர் ஒவ்வொருவராய். அந்தக் காட்சியில் அவர்கள் அணிந்திருந்த உடை / அல்லது அவர்கள் மேல் பாய்ச்சப்பட்ட மேடை விளக்குகளின் ஒளி பச்சை. எனில் அது மனதை அறுக்கும் பச்சை. இதயத்தின் அறைகளினின்று அவற்றை அறுத்து ரத்தம் கசியவிடும் பச்சை. அத்தனை பேரும் செத்துமடிகின்றனர்.
இக்காட்சியின் முன்னதாக இரு சிறு விளக்குகளை ஏந்தி வந்த குழந்தைகள் ( அவை அரிக்கேன் விளக்குகள் அல்ல, அக்காலத்தில் ஆங்கிலப்படங்களில் பார்க்கும் மெழுகுவர்த்தி ஏற்றிவைக்கப்பட்ட முழுதும் கண்ணாடியால் அடைக்கப்பட்டு உள்ளிருக்கும் மெழுகுவர்த்தி அணைந்துவிடாது தொடர்ந்தும் எரிய வைக்கும் விளக்கு ) அவற்றை மேடையின் இரு மூலையிலும் வைத்துவிட்டு அதனடியில் அந்தச் சிறு பொம்மைகளை விளக்கை நோக்கி கவிழ்த்து வைத்துவிட்டுச்சென்றன, சிரிய நாட்டு அகதியான குழந்தை கடற்கரை மணலில் முகம் கவிழ்ந்து இறந்து கிடந்த காட்சி இணையத்தை உலகத்தை அலற வைத்த காட்சி அது. படகில் வந்த அனைவரும் செத்து மடிய அவர்கள் குழந்தைகளென அந்தப்பொம்மைகளும் மடிந்து போகின்றன.
காட்சிகளுக்கிடையே தொடர்பில்லாமல் இல்லை. எந்தவொரு காட்சியும், உலகில் நிகழும் எந்தவொரு நிகழ்வும் இன்னொன்றின் தொடர்ச்சியே. கயாஸ் தியரி அதையே உரைக்கிறது. உறுதியாகச்சொல்லலாம் இந்த இடாகினி உலகத்தரம் வாய்ந்த நாடகம், மையச்சரடான போரும் அதன் பின்னரான வாழ்வும் , அகதிகளை, அவர்தம் குழந்தைகளை, அவர்களின் உலகான பொம்மைகள் பறிக்கப்படுவதைப் பற்றிப்பேசும் இது உலக அரங்கங்களில் மேடையேற்றப்பட வேண்டியது என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.