இஸ்மாயில் கவிதைகள்

கிணத்துக்குள் ஆமை

கிணத்துக்குள் ஆமை கிடக்கிறது என்று கேட்டு

குழந்தைகள் எல்லாம், குரங்குக் கூட்டத்தைப் போல் ஓடினோம்

கிணத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, எங்கள் தலைகள்தான் தெரிந்தன

பின்னால் வானமும், நீலத் தொடுவானும்

கற்களும் குச்சிகளும் எடுத்து கிணத்தைக் கலக்கினோம்

ஆமை மேலே வரவில்லை

எங்கள் தலைகளும் மறைந்துவிட்டன

கிணத்து நீரின் விளிம்புகளை ஒளிர்வூட்டிக் கொண்டிருந்த வானின் கருத்த ஒளி

கிணத்தின் ஆழத்துக்கு இறங்கியது

இன்னமும் கிணற்றுக்குள் கவிந்தபடி கலங்கிய நீரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்

அதோ! என் கண்களுக்குப் பின்னால்

என் மண்டைக்குள் ஆழத்தில்

அசையாமல் உட்கார்ந்திருக்கிறது ஆமை.

 

ஒரு கவிதையின் கல்லறை

கவிஞன் கவிதையை ஆழமாகத் தோண்டிக் கொண்டிருக்கிறான்

எக்கச்சக்க மண்ணுக்கு கீழே

எக்கச்சக்க இதயத்துக்கு கீழே

மறைந்து கிடக்கிறது கவிதை

அதை இவ்வளவு ஆழமாய் புதைத்தவர் யாரென்று அறியோம்

பல நாட்கள் இரவும் பகலும் தோண்டினால்

சவப்பெட்டியை வெளியே எடுக்கலாம்

அப்போது மூச்சுக்காற்று பட்டு

அது உயிர்பெறலாம்

சவப்பெட்டி திறக்கும்போது

ஒவ்வொரு முறையும் உயிர்பெறும் பிணம்

கவிஞனேதான்.

 

பலுசுதிப்பாவில் கோதாவரி

முடிவற்றது நதி

முடிவற்றது வானம்

எது நதி?

எது வானம்?

தனியனான மீனவனின் துடுப்பு

வானத்தை நதியிலிருந்து பிரிக்கிறது

மிச்சமிருக்கிறது

ஒரு சூனியம், அண்டம் அளவு ஒரு சூனியம்

 

சூரியனைப் புதைத்த பிறகு

சூரியனைப் புதைத்துவிட்டு

கால்வாயில் ஒரு முழுக்கு போட்டுவிட்டு

வீட்டுக்கு கிளம்புகிறது காலை

அடுப்பை ஏற்றி

என் மனைவி சூரியனை எழுப்புகிறாள்.

இரவு முழுக்க என் வயிற்றில்

வெதுவெதுப்பாக உறங்கிவிட்டு

மறுநாள் சூரியன்

படாடோபமாய் கிழக்கில் எழுகிறது.

 

சுதந்திரத்தின் பாடல்

வானில் அலையும் பறவை

மண்ணிலிருக்கும் புழுவில் கட்டுண்டிருக்கிறது

ஓரிடத்தில் நில்லா சூரியன்

கடிகாரத்தின் முட்களில் சிக்கியிருக்கிறது

நிலவோ நண்டின் கொடுக்கில் சிக்கியிருக்கிறது

கடலை எழுப்பும் கரங்களை

கரகோஷமிடும் அலைகள் பிடித்திருக்கின்றன

தன்னைத் தானே சுற்றும் சக்கரம்

சாலையின் திருப்பங்களுக்குப் பணிகிறது

அருவியின் நாவு

கொதிக்கும் கோடையிடம் அடங்குகிறது

கசங்கின பழைய மாலை

சொற்களற்று வடியும் ஓடையில் கட்டுண்டிருக்கிறது

மண்ணுக்கடியில் மறைந்திருக்கும் வேர்கள்

கப்பலின் பாய்மரத்தைச் செலுத்தும்

காற்றின் அம்பைப் பிடித்திருக்கின்றன

மனிதன் கட்டுண்டிருக்கிறான்

கட்டையும் ஞானத்தையும் அவனே வைத்திருக்கிறான்

 

கால்வாய் கரையில் மாலை நடை

(என் நண்பன் பிட்ட மோக்‌ஷ லக்‌ஷ்மி நரசிம்ஹ சுவாமிக்கு)

நினைவிருக்கிறதா மோக்‌ஷம்

ஓரிரு வாரங்கள்

கால்வாய்க் கரையில் நாம் ஜாலியாக நடை போனது

நாட்களின் முடிவில்

பகலுக்கும் மாலைக்கும் இடையே ஒளியை எடைபோட்டபடி

மாலையின் இன்னொரு ஒளி

ஒன்று வானில், இன்னொன்று கால்வாயின் திருப்பத்தில்

வளையல்கள் குலுங்கும் இசையோடு

புதுவிதமான ஒளிர்வோடு

மாலையின் காற்று வீச

நடனமாடி சுழன்று சுழன்று

கால்வாய் மட்டும் மாலையின் கோட்டில்

நின்று, பேரம்பேசிக்கொண்டிருக்கும்.

இன்று நம் நட்பை

நான் மட்டும் சுமக்கிறேன்.

 

கிராமத்திலிருக்கும் எங்கள் பழைய வீடு

மனிதர்கள் மாறிவிட்டார்கள்

மண் மாறவில்லை

சுவர்கள் இடிந்தபின்

மரங்கள் முளைத்தெழுந்து அவற்றை தழுவிக்கொண்டன

ஒரு கொடி மாத்திரம் பிடித்திருக்கிறது

என் தாத்தனின் ஆன்மாவை

 

வயலட்


இஸ்மாயில் :

தெலுங்குக் கவிஞர் மற்றும் தத்துவப் பேராசிரியர். அவர் கவிதைகள் மட்டுமின்றி கட்டுரைகளும் எழுதியுள்ளார். இந்தக் கவிதைகள் என்னால் ஆங்கிலம் வழியாக தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டவை. https://en.wikipedia.org/wiki/Mohammad_Ismail

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.